எழுபதுகளின் நடுவில் கணையாழி, தீபம், அஃக், கசடதபற போன்ற இலக்கியப் பத்திரிகைகளை வாசித்த போது, என்னைச் சிறுபத்திரிகைக்காரனாக நினைத்துக் கொண்டது, இப்பவும் எனக்கு நினைவில் உள்ளது. அன்றைய காலகட்டத்தில் வெகுஜனப் பத்திரிகைகளில் பிரசுரமான படைப்புகளை வணிக எழுத்து எனப் புறக்கணிக்கும் போக்கு, நிலவியது. ஜெயகாந்தன், லா.ச.ரா., தி.ஜானகிராமன் போன்ற இலக்கிய ஆளுமை களின் எழுத்துகள், ஆனந்த விகடன், குமுதம் போன்ற வணிகப் பத்திரிகைகளில் வெளியானது, முரணாகத் தோன்றியது. எந்தவொரு அச்சு ஊடகத்திலும் பிரசுர மானாலும் அந்தப் படைப்பின் இலக்கியத் தரம்தான் முக்கியம் என்பது பின்னர் புலப்பட்டது. ஏற்கனவே பிரபலமானவர்களின் படைப்புகளைப் பிரசுரிப்பது, பத்திரிகைகள் பின்பற்றும் ஒருவகையான வணிகத் தந்திரம். என்றாலும் எவை பயன்பாட்டிற்குரியன
எனக் கண்டறிந்து சந்தைப்படுத்துவதில் உன்னதமான படைப்புகள் இடம்பெறும்போது, மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஒரு படைப்பு எதில் பிரசுரமாகியுள்ளது என்பதைப் பொருட்படுத்தாமல், தரத்தின் அடிப்படையில் மதிப்பிட வேண்டியது அவசியம். இந்நிலையில் வெகுஜன ஊடகங் களில் பிரபலமாகியுள்ள நண்பர் வெ. இறையன்புவின் சிறுகதைகளை எந்தவகையில் அணுகுவது என்ற கேள்வி தோன்றுகிறது.
இறையன்பு பொதுவாகத் தனது விரலிடுக்குகளில் சிக்கியுள்ள அனுபவங்களை ஒப்பனை எதுவுமின்றிப் புனைகதைகளாக்கியுள்ளார். நடுத்தர வர்க்கத்துப் பின்புலத்தில் சொல்லப்பட்டுள்ள பெரும் பாலான கதைகள், வாழ்வின் அர்த்தங்களைத் தேடு கின்றன. இறையன்பு அவ்வப்போது எழுதிய சிறுகதைகள் அரிதாரம் (2005), அழகோ அழகு (2009), நரிப்பல் (2009), பூனாத்தி (2012), நின்னினும் நல்லன் (2014) என ஐந்து தொகுப்புகளாக வெளியாகியுள்ளன. அவை மனிதர்கள், எத்தகைய நெருக்கடிகள், சிக்கல்களை எதிர்கொண்டாலும், எங்கும் கசப்பும் துயரமும் பொங்கி வழிந்தாலும், மேன்மையான அம்சத்திற்கு முக்கியத்துவம் தருவதைச் சித்திரித்துள்ளன.
இறையன்பு, முன்னேறத் துடிக்கும் இளைய தலை முறையினரின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகிறார். படிப்பது சுகமே எனச் சொல்கிற இறையன்புவிற்குத் தமிழ்ச் சமூகத்திடம் பகிர்ந்துகொள்வதற்கு நிரம்ப விஷயங்கள் உள்ளன. இலக்கியத்தில் மேலாண்மை, போர்த் தொழில் பழகு, பத்தாயிரம் மைல் பயணம், வையத் தலைமை கொள் போன்ற புத்தகங்களின் வாயிலாக முடிவற்ற பேச்சுகளை உருவாக்குகிற இறையன்பு, பன்முக ஆளுமையாளர்; சுய சிந்தனை யாளர்; ஆட்சியாளர். அவருடைய எழுத்துகள், எங்கோ ஒரு மூலையில் இருக்கிற இளைஞரிடமும் அழுத்தமான நம்பிக்கையையும், செல்ல வேண்டிய திசைவழியையும் புலப்படுத்துகின்றன. ஆழமான வாசிப்பும், அறிவாற்றலும் மிக்க சொல்லாடல்களின் வழியாகப் பேசுகிற இறையன்பு கவிதை, சிறுகதை, நாவல் எனப் படைப்புரீதியில் எழுதி யுள்ளவை குறிப்பிடத்தக்கன.
கடந்த பன்னீராண்டுகளுக்கும் கூடுதலாகத் தொடர்ந்து சிறுகதைகள் எழுதி, அவற்றை ஐந்து தொகுதிகளாக வெளியிட்டுள்ள இறையன்புவின் புனைகதைகள் எண்பதுக்கும் மேலிருக்கும். அவருடைய வாழ்க்கை அனுபவங்கள், தென்னை மரத்தின் வடுக்கள் எனப் புனைகதைகளின்மீது, ஆழமாகப் பதிந்துள்ளன. இறையன்புவின் புனைகதை வீச்சினை அறிந்துகொள்ள, அவருடைய கதைகள் முழுவதையும் வாசிக்க வேண்டியது அவசியம். நவீன உலகின் நெருக்கடியான சூழலில் அவருடைய கதைகள் அனைத்தையும் தேடி வாசிப்பது, சராசரி வாசகரால் இயலாத விஷயம். காட்சி ஊடகங்கள், ஸ்மார்ட் போன்கள், இணையக் காட்சிகள் காரணமாக, புத்தக வாசிப்புப் பழக்கம், இன்று
குறைந்து வருகிறது. இத்தகு சூழலில் இறையன்பு போன்ற சாதனையாளரின் படைப்புலகினை இளம் வாசகர்களிடம் அறிமுகப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அவ்வகையில் என் வாசிப்பு அனுபவ அடிப்படையில், தேர்ந்தெடுக்கப்பட்ட எனக்குப் பிடித்தமான இறையன்புவின் பதினான்கு சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இத்தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள புனைகதைகள் வகைமாதிரியாகத் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளன. சங்க இலக்கியம் தொடங்கி, விரிந்திடும் தமிழ் மரபிலக்கியம் என்பது, தொகுப்பு நூல்களின் வழிப்பட்டது என்ற நிலையில், இத்தொகுப்பு நூலும் மரபினுள் அடங்குகிறது. இன்றைய கணினி யுகத்தில் இறையன்புவின் சிறுகதைகள், தேர்ந்தெடுக்கப் பட்ட புதிய பேக்கேஜில் வெளியாகின்றன என்றும் சொல்லலாம்.
தமிழில் சிறுகதை வடிவமும், கதை சொல்லலும் காலந்தோறும் பெரும் மாற்றங்களை எதிர்கொண்டிருக்
கிறது. புனைவு மொழியின் அதிகபட்ச சாத்தியங்களுடன் எழுதப்பட்டுள்ள நவீனச் சிறுகதைகள், தனித்து விளங்கு கின்றன. வாழ்க்கை அனுபவத்தை அப்படியே பதிவாக்குதல் என்ற செயல்பாட்டினுக்கு அப்பால், வாழ்வின் விநோதங் களையும் மனதின் இடுக்குகளையும் புதிய மொழியில் சொல்லுதல்மூலம், இன்றைய புனைகதைகள் வேறு ஒன்றாக உருமாறியுள்ளன. இத்தகு சூழலில் மரபான சூழலில் கதைசொல்லலுக்கு முக்கியத்துவம் தருகிற இறையன்புவின் புனைகதைகள், ஜெயகாந்தனின் பாணி யிலானவை என்ற நாவலாசிரியர் எஸ்.ராமகிருஷ்ணனின் கூற்று, கவனத்திற்குரியது. நெகிழ்ச்சியான மொழியில் சம்பவங்களும் அவை ஏற்படுத்துகிற உணர்வுகளும்தான் முக்கியம் என்ற பின்புலத்தில் விரிகின்றன இறையன்புவின் புனைகதைகள்.
நினைவோ ஒரு பறவை என விரியும் நினை வோட்டத்தில் இறையன்புவின் பெரும்பாலான கதைகள், வாழ்வின் விழுமியங்களை முன்னிலைப்
படுத்தி, வெளியெங்கும் அலைகின்றன. ஆணவம், அதிகாரம், வன்முறை போன்றன கட்டமைக்கிற வாழ்தல் முறையைப் படைப்புகளின் வழியாகத் தகர்த்து, மனித இருப்பின் உயர்வு குறித்து அக்கறைகொள்வது என்பது இறையன்புவிடம் இயற்கையாகவே இருக்கிறது. பண்டையத் தமிழிலக்கியத்தின் தொடர்ச்சியாக அறச்சீற்றமும், சிறுமை கண்டு பொங்குகிற மனதின் ஆவேசமும் அவருடைய புனைகதைகளின் வழியாக வெளிப்படுகின்றன.
பொதுவாகச் சோதனைரீதியான கதைசொல்லலில் இறையன்புவிற்கு ஆர்வமும் அக்கறையும் இல்லை. அன்றாட வாழ்க்கையில் சாதாரணமாகத் தென்படுகிற காட்சிகள், அவருக்குக் கதையின் களமாக அமைகின்றன. வெறுமனே சம்பவங்கள் அல்லது அதிர்ச்சியளிக்கிற அனுபவங்களைக் கதையாக்குவது மட்டும் அவருடைய நோக்கமல்ல. ஒரு புனைகதையின் மூலம், அவர் நடப்பு வாழ்க்கையில் கண்டறிந்த உண்மைகளைப் பதிவாக்குவது தான் முக்கியமானது.
அரசாங்கத்தில் உயர் ஆட்சியாளராகப் பணியாற்றுகிற இறையன்பு, அலுவலகத்தில் நடைபெறும் சம்பவங் களை ஆர்வத்துடன் கதையாக்கியுள்ளார். அலுவலகம் என்ற அதிகார மையத்தில் நாளும் நிகழ்ந்திடும் சம்பவங்கள், ஒரு புள்ளியில் மனித இருப்பினையே கேள்விக்குள்ளாக்குகின்றன. நரிப்பல் கதையில் மாவட்ட ஆட்சியரான கதை சொல்லிக்கும் நரிக்குறவர் சங்கத் தலைவரான பழநிக்குமிடையிலான தொடர்பு நுணுக்க மானது. அவமானத்திற்குப் பயந்து தற்கொலை செய்துகொள்ளும் பழநி, சாவதற்கு முன்னர் தனது அண்ணன் பையன் பாபுவிடம் நரிப்பல்லை மாவட்ட ஆட்சியரிடம் தருமாறு வேண்டியுள்ளான். எளிய மக்களான நரிக்குறவர்கள் பற்றிய கோட்டோவியம் போல விரிகிற கதையில், கலெக்டர் மீதான நேசம் ஈரத்துடன் ததும்புகிறது. அரசாங்க அலுவலகத்தில் நடைபெறும் சுவராசியமான சம்பவங்களைப் பகடியாகச் சொல்லியிருப்பது கதைக்குக் கூடுதல் பலம்.
வழி விடுங்கள் என்ற கதையின் தலைப்பு, கிராமத்தில் சாதிய மேலாதிக்கம் ஏற்படுத்துகிற தடைகள் அகன்றிட வேண்டுகிறது. நாகப்பட்டினம் நகரில் சார் ஆட்சியராகப் பணியேற்கிற அருண், சாதியப் பிரச்சினையைத் தீர்த்திட முயலுகிறார். நிலவுடைமையினர் ஒரு சாதியினராகவும், வயலில் இறங்கி உழைக்கிற தலித்துகள் இன்னொரு சாதியினராகவும் வசிக்கிற கிராமத்தில் தீராத முரண்கள். தலித்துகள் தங்களுக்கெனத் தனியாக ஒதுக்கப்பட்டுள்ள மயானத்திற்குப் பிணத்தைத் தூக்கிச் செல்லும் வழியில் நிலம் வைத்திருக்கும் ஆதிக்க சாதியினர், அந்த வழியில் செல்லக்கூடாது எனத் தடுக்கின்றனர். இரண்டு பக்க நியாயங்களைக் கேட்டுச் சரியான தீர்வு காண முயலுகிற அருணின் முயற்சி தடைபடுகிறது. தலித்துகள் அளவிற்கு படிப்பு, அரசுப் பணியில் முன்னேற்றமடையாத காரணத்தைச் சுட்டிக்காட்டிடும் ஆதிக்க சாதித் தலைவர் தங்களுடைய சாதியையும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதற்காகப் போராட வேண்டுமெனச் சாதி மாநாட்டில் பேசுகிறார். பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு கற்பித்து, தீண்டாமையை வலியுறுத்தும் வைதிக சமயத்தின் ஆதிக்கம் நிலவுகிற சூழலில் அருண் போன்ற நேர்மையான அதிகாரியினால் சிரிக்க மட்டுமே முடியும்.
நேர்மை என்ற சொல்லுக்குப் பின்னால் பொதிந் துள்ள உண்மையைத் தெற்கு ரயில்வே டிவிஷன் அலுவலக நடைமுறைச் சம்பவத்தை முன்வைத்து இறையன்பு விவரித்துள்ள கதை, மனித மதிப்பீடு சார்ந்தது. சட்டப் பிரிவில் பணியாற்றும் கோபாலன் கறாராகச் சட்ட விதிகளை அமல்படுத்துவார். அதே அலுவலக அதிகாரியான சுப்ரமணியன், விதிகளைமீறிப் பிறருக்கு உதவிட முயலுவார். குப்பன் என்ற கீழ்மட்ட ஊழியரின் மரணத்திற்குப் பின்னர் கிடைக்கிற தொகையானது அவருடைய முதல் மனைவியான தங்கம் அல்லது தற்சமயம் அவருடன் வாழ்ந்த செண்பகம் ஆகிய இருவரில் யாருக்குத் தருவது என்ற கேள்வி தோன்றுகிறது. தங்கம் சட்டப்படி கையெழுத்திட்டு வாங்கிய தொகை முழுவதையும் அப்படியே செண்பகத்திற்குத் தருகிறாள். எப்பவோ பிரிந்துவிட்ட முன்னாள் கணவனின் பெயரால் கிடைக்கிற பணம் தனக்கு உரிமை இல்லை என்ற நேர்மையான மனதுடன் செயல்பட்ட தங்கத்தின் செயல், நேர்மையின் உச்சம். பொருளியல்ரீதியில் தங்கம் வளமாக இல்லையென்றாலும், அவளுக்குக் கிடைத்த பணத்தை வேண்டாம் என்பது அறம் சார்ந்தது. நேர்மை யானது மேல்தட்டினருக்கு மட்டுமல்ல, அன்றாடங் காய்ச்சிகளிடமும் இயல்பாக இருக்கிறது
நாய்ப்பிழைப்பு கதையின் தொடக்கத்தில், இது முழுக்கத் தனியார் நிறுவனம் ஒன்றில் நடந்த உண்மை நிகழ்வு என்ற குறிப்பு உள்ளது. மேலும் இந்நிகழ்வு ஏதேனும் அரசு அலுவலகத்தில் நடைபெற்றிருந்தால் அதற்கு இந்தக் கதையில் வரும் நாய்கள் பொறுப்பு அல்ல என்ற பகடியும் வேறு. அலுவலகத்தில் பணி யாற்றும் ஜோசப் திருவனந்தபுரம் சென்று வந்ததற்கான பணப்படி கேட்டு அனுப்பிய பட்டியலைக் கண்ட நிதி அலுவலர் கணேசன், அங்கே கம்பெனியின் அலுவலகம் இல்லையே பின் எப்படி அதை அனுமதிப்பது என ஜோசப்பை அழைத்து விசாரிக்கிறார். கம்பெனி எம்.டி.யின் மனைவி வளர்க்கிற பீகில் என்ற பெண் நாய்க்கு மேட்டிங் செய்வதற்காக ஜோசப் பட்ட பாடுகள் வேடிக்கையாகத் தோன்றினாலும் அலுவலகத்தில் எதுவும் நடப்பதற்கான சாத்தியம் கதையில் சொல்லப் பட்டுள்ளது. நாய்ப்பிழைப்பு என்பது நிச்சயம் நாய்க்கு அல்ல மனிதனுக்குத்தான் என்பது கேலியான தொனியில் கதையாகியுள்ளது.
நாய்களை முன்வைத்து உருவகமாகச் சொல்லியுள்ள அரிதாரம் கதை, வரலாற்றை மறுவாசிப்புச் செய் துள்ளது. கிராமத்திற்கு வந்த சீமை நாய், நாளடைவில் அங்கிருந்த நாய்களை அடிமைப்படுத்தி, சுகபோகமான வாழ்க்கை வாழ்கிறது. அதைக் காப்பதற்குக் காவல் நாய்களின் பட்டாளம் வேறு. சில நாய்கள் ஒன்று சேர்ந்து ஆலோசித்து, சீமை நாயைக் கிராமத்தைவிட்டு விரட்ட முடிவெடுத்தன. அவை காவல் நாய்களால் விரட்டியடிக்கப்பட்டன. கிராமத்து நாய்களுக்குள் பிளவை உண்டாக்கிட மடங்கிய காதுடைய நாய்கள் தாங்கள்தான் உசத்தி என்று சொன்னதாக வதந்தியைப் பரப்பி, நிமிர்ந்த காது நாய்களை ஆத்திரமடையச் செய்கின்றன.
சீமை நாயின் சதியினை அறியாத கிராமத்து நாய்கள் தங்களுக்குள் ஒன்றையன்று தாக்கிக்கொண்டன. சீமை நாயின் ஆட்சியதிகாரம் நீடித்தது. சில குட்டி நாய்களின் திட்டமிட்ட எழுச்சிக் குரலைக் கேட்ட சீமை நாய், இனிமேல் தாக்குப் பிடிக்க முடியாது என அறிந்து, கிராமத்தை உள்ளூர் நாய் களிடம் ஒப்படைத்துவிட்டுக் கிளம்பியது. என்றாலும் மடக்குக் காதுகளும் நிமிர்ந்த காதுகளும் மோதிக் கொண்டன. சீமை நாயின் புகழ் பாடுகிற கிழட்டு நாய்கள், எங்கே எல்லாம் எனக் கேட்கிற இள நாய்கள், இந்தக் கிராமம்தான் உலகில் சிறந்தது என்று சொல்லிச் சுரண்டிச் சுகபோகிகளாக வாழ்கிற நாய்கள் என விரிகிறது நாய்களின் இன்றைய நிலை. இந்தியாவின் நானூறு ஆண்டு ஆதிக்க வரலாறு நாய்களை முன் வைத்துச் சொல்லப்பட்டுள்ள கதையானது, மேம் போக்கில் கேலியாகத் தோன்றினாலும் கசப்பான உண்மை களைப் பதிவாக்கியுள்ளது. அரிதாரம் என்ற கதையின் தலைப்பு, ஒப்பனைக்குப் பின்னால் பொதிந்துள்ள தகிக்கும் அரசியல் சூழலைச் சித்திரித்துள்ளது.
வண்ணத்துப் பூச்சிகள் அங்குமிங்கும் பறந்து, பூமியை அழகுபடுத்துவதில் ஒப்பற்றவை. சிறகுகளின் ஓரத்தில் கறுப்பு வெள்ளைக்கோடுகள் படர்ந்திருக்கும் ஆரஞ்சு நிற வண்ணத்துப்பூச்சியை நேசிக்கிற பத்து வயதுச் சிறுவனின் மனவோட்டத்தில் மிதந்திடும் வரம் தர வேண்டும் கதையானது, வாசிப்பில் மயிலிறகினால் வருடுகிறது. சிறுவனின் பார்வையில் தொடங்கிடும் கதையானது, அந்தச் சிறுவன் வளர்ந்து இளைஞனாகி, வேளாண்மைக் கல்லூரியில் பயிலும்போது, பூச்சிகள் புழுக்களுடனான தொடர்பு என விரிகிறது. இயற்கையின் விநோதங்களும் புதிர்களும் நிரம்பிய உலகில், வண்ணத்துப் பூச்சியின் மீதான சிறுவனின் ப்ரியம் அபூர்வமானது. வெறுமனே பூச்சி பற்றிச் சொல்வது இறையன்புவிற்கு நோக்கம் அல்ல. இயற்கையின் அங்கமான மனிதனுக்கும் இயற்கைக்குமான உறவு குறித்த பேச்சுகளை உருவாக்கிட வரம் தர வேண்டும் என இறையன்பு கேட்பது யாருக்காக?
பூனாத்தி என்ற பூனையை முன்வைத்துச் சொல்லப் பட்டுள்ள கதை சுவராசியமான மொழியில் கதை சொல்லியின் மனவோட்டத்தைப் பதிவாக்கியுள்ளது. எங்கிருந்தோ வந்து, வீட்டு மாடியில் குட்டிகள் ஈன்ற பெண் பூனையுடன், திருமணமாகி நீண்ட நாட்கள் குழந்தை இல்லாத பெண்ணின் கர்ப்பமும் மகப்பேறும் எனக் கதை விரிந்துள்ளது. மனித உயிர் மீது மட்டும் அக்கறைப்படுகிற மனிதர்களுடைய பிற உயிரினங்கள் குறித்த பார்வையாகவும் விமர்சனமாகவும் கதையைக் கருதலாம்.
கிராமத்தில் எளிய மனிதர்களின் வெள்ளந்தியான வாழ்க்கை, காலப்போக்கில் நசிவடைவதை விவரிக்கிறது கூச்சம் கதை. வைகுண்டபுரம் கிராமத்தில் வாழும் ஆறுமுகத்தைத் திருமணம் செய்துகொண்ட கதை சொல்லியின் அத்தைக்குத் தாராள மனம். அவருடைய மகனான மகாலிங்கம் நவீனமான விவசாயம் செய் வதுடன் எல்லோருக்கும் உதவுகிற இயல்புடையவன். தொடர்ந்து நான்காண்டுகள் மழை பொழியாமல் வறண்ட பூமியில், அத்தையின் வீட்டில் வறுமை. சக மனிதர்கள் மீதான நேசத்துடன் வாழ்கிற கிராமத்தினரின் மேன்மை, கதையில் பதிவாகியுள்ளது.
கல்லூரி மாணவனான கதைசொல்லியின் பார்வையில் மாணவப் பருவம், உறவு, வித்தியாசமான மனநிலை, காதல் எனப் பதிவாகியுள்ள கல்லூரிக் காதல் சுவராசியமானது. சாதாரணமான மாணவன் என்றாலும் அவனுக்குள் நுட்பமாகப் படிந்துள்ள புத்திசாலித்தனத்தினால், சராசரியாக இருக்க முடியாத நிலையில், அவனை விரும்புகிற மலர் மல்லிகையிடம் சொல்கிற பதில், நிறைவானது. வெறுமனே உடல்ரீதியில் ஏற்படுகிற வேட்கையையும், காதலையும் பிரித்து அறிகிற மனநிலை இளைய தலைமுறையினருக்கு வேண்டும் என்பது இறையன்பு சொல்கிற செய்தியா?
சந்திர குப்த மௌரிய மன்னன், மக்களின் நலனுக்காக அரச வாழ்க்கையிலிருந்து விலகித் துறவியாவது, துறந்தான்... மறந்தான் கதையாகியுள்ளது. எப்பொழுதும் அதிகாரத்தின் வெக்கையடிக்கிற சூழலில் வாழ நேர்ந்திட்ட சக்ரவர்த்தியின் மனமாற்றமும் அதன் விளைவுகளும் காவியம் போல சொல்லப்பட்டுள்ளது. வரலாற்றுப் பின்புலத்தில் விரிந்திடும் கதை, செவ்வியல் தன்மையுடன் விழுமியத்தை முன்னிறுத்துகிறது.
வரலாறு என்பது ஒற்றையானது அல்ல, பல வரலாறுகள் உள்ளன என்று பின்நவீனத்துவம் குறிப் பிடுவது, இறையன்புவின் விருது கதையில் நிரூபணமாகி யுள்ளது. கொள்ளையனான ராம்சிங்கைச் சுட்டுக்கொன்று விட்டதாக அரசிடம் விருது பெற்ற மகேஷ் சிங், தற்சமயம் ராம்சிங்கைக் கொன்ற டிக்காராம் என இரு வேறு உண்மைகள். இதில் எது சரி? உண்மைக்குப் பல முகங்கள் உள்ளன என்பதுதான் இறையன்பு விருது மூலம் சொல்ல விரும்புவதா?
உயிர்த்தெழுதல் என்ற சொல் பன்முகத்தன முடையது. கதிரின் மரணம் குறித்து நெருங்கிய உறவினர்களின் பேச்சுகள் ஒருபுறம், இறந்த கதிர் மீண்டும் உயிருடன் வரும்போது நிகழும் செயல்கள் இன்னொருபுறம் என இரு வேறு முனைகளில் வாழ்க் கையைக் கதையின்மூலம் இறையன்பு விசாரித்துள்ளார். ஒருத்தர் உயிருடன் இருக்கும்போது, அவரைத் துச்சமாகக் கருதுகிற உறவினர்கள், அவருடைய மரணத்திற்குப் பின்னர் புலம்பி என்ன பயன்? பூமியில் இருத்தலின்போது சக மனிதர்களை நேசிப்பது அவசியம் என்ற புரிதலைக் கதிர் உயிர்த்தெழுந்து வந்த பின்னர் நடைபெறுகிற சம்பவங்கள் எதிர்மறையாகச் சுட்டுகின்றன.
தாயின் சிதைக்குத் தீ வைக்கிற மகனின் மன வோட்டமாக விரிகிற அழுக்கு கதை, உடலரசியலைப் பேசுகிறது. அவலட்சணமான தோற்றமுடைய இளைஞனுக்கும் அவனது தாய்க்கும் இடையில் நிலவுகிற அன்பு, பந்தத்திற்குப் பின்னர் பொதிந்துள்ள இருளான வாழ்க்கையானது, கசப்பில் ததும்புகிறது. நிர்வாணம் இயற்கையானது என்ற புரிதல் இல்லாத நிலையில், தாயின் வயிற்றில் குழந்தை கருவாவதற்கு ஆண்-பெண் புணர்ச்சி அடிப்படையானது என்ற உண்மையை அறிந்திடும் பதின்பருவச் சிறுவனின் மன வலியைப் பதிவாக்கியுள்ள கதை, பேசாப் பொருளைப் பேசியுள்ளது.
எளிய மனிதர்கள் என்றாலும் ஒரு சொல்லுக்குக் கட்டுப்பட்டு நேர்மையாக வாழ்கிறவர்கள்தான், சமூக வாழ்க்கையின் ஆதாரமானவர்கள். கல்லூரிப் பேராசிரி யரான முகம்மதுஷா, செங்கச்சாவடி கிராமத்தினரான பொன்னுச்சாமி இருவருக்குமிடையிலான விவகாரத்தை முன்வைத்து இறையன்பு சொல்லியிருப்பது வெறும் கதை மட்டுமல்ல. Ôபாரடா உனது மானிடப் பரப்பை’ எனப் பெருமிதத்துடன் பாடிய பாரதிதாசன் போல மனிதர்கள் இக்கட்டான நேரத்திலும் எப்படியெல்லாம் மேன்மையானவர்களாக இருக்கிறார்கள் என்பது நின்னினும் நல்லன் கதையில் வெளிப்பட்டுள்ளது. அற்பத்தனம், கருமித்தனம், வன்மம், மேனாமினுக்கித் தனம் போன்றவற்றை முதன்மைப்படுத்தி எழுதுவது பரவலாகியுள்ள சூழலில், மனித மையத்துடன், உன்னதமான விஷயத்திற்கு முன்னுரிமை தந்துள்ளது, இறையன்புவின் தனித்துவம்.
எல்லோரும் அன்றாடம் எதிர்கொள்கிற சாதாரண மாகத் தென்படுகிற காட்சிகள், இறையன்புவைப் பொறுத்த வரையில் கதைகளாக உருவெடுக்கின்றன. முடிவற்ற கதைகளின் உலகில் உலாவிடும் இறையன்புவிற்குச் சொல்வதற்கு இன்னும் நிரம்பக் கதைகள் உள்ளன. ஒருபோதும் முடிவற்ற கதைகளில் வெறுமனே சம்பவங் களை நகலெடுப்பது அவருக்கு நோக்கமல்ல. எதைத் தேர்ந்தெடுத்துக் கதை சொல்ல வேண்டும் என்ற கறாரான வரையறையுடன் செயல்படுகிற இறையன்பு விற்குப் புதிய இசங்கள், கோட்பாடுகள் குறித்து அக்கறை இல்லை. கதைகளின் வழியாக அவர் உணர்த்த விழையும் விழுமியங்கள்தான் முக்கியம்.
இறையன்பு, தனது புனைகதைகளின் வழியாகக் கண்டறிய முயன்றுள்ள பிரமாண்டமான வாழ்வின் பரப்பினை அடையாளப்படுத்தும் வகையில், என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தச் சிறுகதைகள் உங்களுக்கு வாசிப்பில் ஏற்படுத்தும் அனுபவங்கள் முக்கியமானவை. இத்தொகுப்பு முயற்சி என்பது, முழுக்க எனது தேர்வும் ரசனையும் சம்பந்தப்பட்டது. உலகமயமாக்கல் கால கட்டத்தில் நுகர்பொருள் பண்பாடு மேலோங்குகிற சூழலில், வாழ்க்கையின் மறுபக்கத்தைப் புரிந்திட இறையன்புவின் புனைகதைகள் அடங்கிய இத் தொகுப்பு நூல் உதவும் என்பது என் நம்பிக்கை.
தேர்ந்தெடுக்கப்பட்ட இறையன்பு சிறுகதைகள்
தேர்வும் தொகுப்பும் : ந.முருகேசபாண்டியன்
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை - 600 098
தொலைபேசி எண் : 044-26251968
விலை: ` 110/-