புதிர் 11: மனித உடல் என்பது ஓர் உடல் அல்ல, அது மூன்று உடல்களால் ஆனது. அவை (1) ஸ்தூல சரீரம், (2) சூக்ஷ்ம சரீரம், (3) காரண சரீரம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஐம்பூதங்களின் சேர்க்கையால் உருவாக்கப்பட்டது ஸ்தூல சரீரம். ஸ்தூல சரீரத்தை தாண்டி, மனம் மற்றும் புத்தி ஆகியவற்றின் உறைவிடம் சூக்ஷ்ம சரீரமாகும். இந்த சூக்ஷ்ம சரீரம், ஸ்தூல சரீரத்தை சுற்றி ஒரு ஒளிவட்டத்தின் வடிவில் சக்தியாக பரிணமிக்கிறது. மனிதன் இறந்த பின், அவனுடைய ஆன்மா, சூக்ஷ்ம சரீரத்தின் மேலேறி சிறிது காலம் தன் உடலைச் சுற்றி அலைவதாகவும், அந்த சூக்ஷ்ம சரீரத்தை கரைத்து, காரண சரீரமாக மாற்றுவதற்கு தான் இறுதிச் சடங்குகள் செய்யப்படுவதாகவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

1939இல் மின் பொறியாளர் செம்யோன் கிர்லியன் வேலண்டினா தம்பதியினர் மின்கடத்தும் தட்டின் (Conducting Plate) மேல் ஒரு நிழற்படச் சுருளை வைத்துவிட்டு, இன்னொரு மின்கடத்தியின் மேல் ஒரு மனிதனின் கையை வைத்துவிட்டு, அந்த கடத்திகளின் மேல் மின்சாரத்தை செலுத்தினால், அந்த நிழற்படச்சுருளில் பதியப்படும் கை வடிவத்தைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் தோன்றியிருப்பதை கண்டுபிடித்தனர். குளிர் காய்ச்சலால் (Influenza) கிர்லியன் தாக்கப்பட்டபோது, உடலைச்சுற்றியுள்ள ஒளிவட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுவிடுகின்றன என்பதை கண்டுபிடித்தார். அப்படியானால், ஸ்தூல சூக்ஷ்ம காரண சரீரங்கள் இருப்பது உண்மையா? முன்னோர்கள் எப்படி கிர்லியன் நிழற்படம் இல்லாமலேயே இதனை கண்டுபிடித்தனர்?

விடை: ஸ்தூல சரீரம் அய்ம்பூதங்களால் ஆனது என்று கூறும் நூலாசிரியர், சூக்ஷ்ம சரீரம் (மனம் & புத்தி) அதற்கு அப்பாற்பட்டது என்கிறார். இது உண்மையா என்று அறிய, மனம் (mind) என்றால் என்னவென்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி, “மனம் என்பது ஒரு பொருளல்ல. உணர்வுகள், கற்பனை, உள்ளுணர்வு, யோசனை, தீர்ப்பு, மொழி, நினைவு ஆகிய அறிவாற்றல் திறன்களே மனமாகும். இது உருவாகும் இடம் மூளை” என்று தெளிவாக கூறுகிறது. மூளையில் பிராண வாயு (Oxygen), 73% நீர், கொழுப்பு, தனிமங்கள் மற்றும் பல சத்துப்பொருள்கள் உள்ளன. எனவே சூக்ஷ்ம சரீரம் (மனம் & புத்தி) அய்ம்பூதங்களுக்கு அப்பாற்பட்டது என்ற சாஸ்திர கருத்து தவறானது. அதோடு மட்டுமல்லாமல், அய்ம் பூதங்கள் என்ற பதமே தவறானது. “காற்று”, “ஆகாயம்” ஆகியற்றை தனித்தனி பூதங்களாக காட்டுவதே பெரும்பிழை.

அடுத்ததாக, சரீரத்தைச் சுற்றி ஒளிவட்டம் உருவாகுவதைப்பற்றி பார்ப்போம். ஒரு மனிதனைச் சுற்றி இயற்கையாக ஒளிவட்டம் உருவானால், அதை படம்பிடித்து, சூக்ஷம சரீரத்தை பார்த்தீர்களா! என்று ஆன்மீகவாதிகள் கூறலாம். ஆனால், நூலாசிரியர் கூறியது என்ன? கிர்லியன் புகைப்படத்தில் ஒளிவட்டம் தெரிவதாகக் கூறியுள்ளார். கிர்லியன் புகைப்படம் இயற்கையானதா? இல்லை என்பதே பதிலாகும். உயர் மின்னழுத்தத்தை ஒரு புகைப்பட தட்டின் மீது செலுத்தும்போது, தட்டின் மீது வைக்கப்படும் கையைச் சுற்றி உருவாகும் செயற்கையான ஒளி தான் கிர்லியன் புகைப் படமாக பதிவாகிறது. உயர் மின்னழுத்தத்தை நீக்கினால், ஒளிவட்டம் மறைந்துவிடும். அப்படி யென்றால், ஒளிவட்டத்துக்கு காரணம் மனிதனா? உயர்மின்னழுத்தமா? உயர்மின்னழுத்தமே காரணம். அதோடு மட்டுமல்லாமல், அந்த புகைப்படத் தட்டின் மீது, கைக்கு பதிலாக ஒரு துடைப்பகட்டையை எடுத்து வைத்தாலும், கிர்லியன் புகைப்படத்தில் செயற்கை ஒளிவட்டம் தெரியும். இதை வைத்துக்கொண்டு துடைப்பக் கட்டைக்கு சூக்ஷ்ம சரீரம் உள்ளது என்றும், ஆன்மா உள்ளதென்றும் கூறமுடியுமா?

இந்த ஒளிவட்டம் (Corona) உருவாக மின்னிறக்கமே (Electrical Discharge) காரணமாகும். உயர் மின்னழுத்தத்தின் போது, பாய்மம் (காற்று அல்லது நீர்) அயனியாக்கப்படுகிறது (Ionisation). அதாவது பாய்மம், நேரயனி (+Cation), எதிரயனி (-Anion) என்று பிரிகிறது. இதனால் ஏற்படும் மின்புலமே செயற்கை ஒளிவட்டத்துக்கு காரணம். மற்றவையெல்லாம் நூலாசிரியரின் கற்பனைகள்.

புதிர் 12: பஞ்ச பூதங்களுக்கான சிவத்தலங்கள் (காளஹஸ்தி, காஞ்சி ஏகாம்பரேஸ்வர், சிதம்பரம், திருவண்ணாமலை, திருவானைக்காவல்) இந்திய வரைபடத்தில் கிட்டதட்ட ஒரே நேர்க்கோட்டில் உள்ளன. அதே போல, கேதர்நாத்தில் இருந்து ராமேஸ்வரம் வரை உள்ள சிவத்தலங்கள் ஒரே நேர்கோட்டில் உள்ளன. இந்த அதிசயம் நிகழ்ந்தது எப்படி?

விடை: உலகம் தட்டையாக இருந்தால் தான், வரைபடத்தில் ஒரே நேர்கோட்டில் கோயில்கள் இருப்பதாக கருத முடியும். நம் வசதிக்காக, காகிததில் உலக வரைபடத்தை தட்டையாக வரைந்துவிட்டு, கோயில்கள் ஒரே நேர்கோட்டில் இருப்பதாகக் கோர முடியாது. உலகம் உருண்டையாக இருப்பதால், பஞ்சபூத சிவத்தலங்கள் ஒரே நேர்கோட்டில் இருக்க வைப்பில்லை. தட்டையான உலக வரைபடத்தில் கூட, நூலாசிரியர் சொல்வதைப்போல, கேதர்நாத் கோயிலும், ராமேஸ்வரம் கோயிலும் ஒரே நேர்கோட்டில் இல்லை. இது வெறும் செவிவழிச் செய்தியேயன்றி, உண்மையில்லை. தொலைதூர தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் வளர்ந்திருக்கும் இந்த காலகட்டத்தில், இவ் விரண்டு கோயில்களும் நேர்கோட்டில் இல்லை என்பதை அறிய Google Maps செயலி போதும்.

புதிர் 13: 1972ஆம் ஆண்டு ஜார்ஜ் ஓவென் என்ற கணித மரபியலாளர் ஆவிகளைப் பற்றி ஆய்வு மேற்கொள்ள எண்ணினார். அதற்காக ஒரு குழு உருவாக்கப்பட்டது. அக்குழுவில், ஜார்ஜ் ஓவென், அவருடைய துணைவி அய்ரிஸ் மற்றும் பலர் இடம் பெற்றிருந்தனர். குழுவின் செயல்பாடு களை மேற்பார்வையிடும் பொறுப்பை உளவியலாளர் ஜோயெல் விட்டொன் ஏற்றார். 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த பிலிப் என்ற நபரின் ஆவியை தொடர்பு கொள்ள முயன்றதால், இது “பிலிப் பரிசோதனை” என்று அழைக்கப்பட்டது. இந்த பரிசோதனையின்போது, திடீரென்று அறையின் விளக்குகள் மங்கலாகிப் போகும். குழு உறுப்பினர்கள் பிலிப்பின் ஆவியை கேட்டுக்கொண்டதும், விளக்குகள் பிரகாசமாக எரியும். ஒருநாள் திடீரென்று, குழு உறுப்பினர்கள் அமர்ந்திருந்த மேசையின் மீது ஒரு புகைப்படலம் உருவாகி, மேசை அறைக்கதவை நோக்கி நகரத் தொடங்கியது. பகுத்தறிவாளர் ஓவென் குழு அறிவியலைத் தாண்டி நடந்த நிகழ்வுகளால் ஆடிப்போனது.

விடை: அய்ரிஸ்சும், மார்கரெட் ஸ்பரொவும் இணைந்து ஓவென் குழுவினரின் ஆய்வு முடிவுகளை “Conjouring Up Philip (1976)” என்று நூலாக வெளியிட்டனர். அந்நூலில் குழுவினர் பேயோடு நடத்திய உரையாடல் என்று சில உரை யாடல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றை படித்த கனடா எழுத்தாளர் ஜான் ராபர்ட் கொலொம்போ, தனது “Ghost Stories of Ontario (1995)” நூலில், “பிலிப்பிடம் கேள்வி கேட்ட குழுவினர், என்னென்ன பதில்களை எதிர்பார்த்தார்களோ, அந்தந்த பதில்களை பிலிப் அளித்ததைப் போல செயற்கையாக உரையாடலை அமைத்துள்ளனர்” என்று மேற்கோள் காட்டியுள்ளார். மேலும் இந்த குழுவினர் செய்த ஆய்வுமுறை அறிவியலுக்கு எதிரான பித்தலாட்டமாக இருந்துள்ளது. குழுவினரின் ஆய்வை மேற்பார்வையிட்ட உளவியலாளரான ஜோயல் விட்டொன் மோசடி வழக்கில் 2017ஆம் ஆண்டு ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார். சில வழக்கு விசாரணைகளில், 6 நிகழ்வுகளில் தன்னுடைய கல்வித் தகுதி குறித்து தவறான தகவலை அளித்ததால், ஒன்டரியோ மருத்துவர்கள் & அறுவை சிகிச்சை நிபுணர்கள் கல்லூரி, அவருடைய மருத்துவ உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. விட்டொன் 1998இல் பொய் சாட்சியம் அளித்ததாக குற்றம் சாட்டப்பவர். இந்த தகவல்கள் The Globe and Mail என்ற கனடா நாட்டு பத்திரிக்கையில் பதிவாகி யுள்ளது. இத்தகைய ஒரு நேர்மை தவறிய ஒரு மனநல மருத்துவரின் மேற்பார்வையில் நடைபெற்ற ஓவென் குழுவினரின் ஆய்வை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

புதிர் 14: 1932 ஆம் ஆண்டு, மருத்துவர் மன்றோவின் மருத்துவமனைக்கு 32 வயது மதிக்கத்தக்க மேரி நைட் வந்தார். 9 மாத கருவை தன் வயிற்றில் சுமந்து கொண்டிருப்பதாகவும், குழந்தை உதைப்பதை தன்னால் உணர முடிகிறது என்றும், பிரசவத்துக்கான நேரம் நெருங்கி விட்டதாகவும் கூறினார். மேரி நைட்டின் பால் சுரப்பிகள் உட்பட உடலின் எல்லா பாகங்களிலும் கருத்தரித்து இருப்பதற்கான அடையாளங்கள் காணப்பட்டன. ஆனால், ஸ்டெதெஸ்கோப்பை வைத்து சோதித்து பார்த்ததில், குழந்தையின் இதயத் துடிப்பை உணர முடியவில்லை. வயிற்றுக்குள் இன்னொரு உயிர் இருப்பதற்கான அறிகுறியே இல்லை. எனவே, கர்ப்பம் வெறும் கற்பனையில் உருவானதை மன்றோ அறிந்து கொண்டார். விஞ்ஞானிகளை குழப்பும் இன்னொரு விஷயம் என்னவென்றால், சில சமயங்களில் ஆண்களுக்கும், ஏன் விலங்குகளுக்கும் கற்பனைக் கரு தோன்றுவது எப்படி என்பதேயாகும்.

விடை: போலியாக கருவுறுவது பெரும்பாலும் ஒரு உளவியல் சிக்கலாகவே உள்ளது. இது அகச்சுரப்பி தொகுதியில் ஏற்படும் மாற்றங்களால் நிகழ்கின்றது. இதனால் சுரக்கும் இயக்குநீர் (harmone), பிரசவத்தின்போது ஏற்படும் உடல் மாற்றங்களை, பிரசவம் ஏற்படாதபோதே உருவாக்குகிறது. ஒரு பெண் உண்மையாகவே கருவுற்று இருக்கும்போது, கணவனுக்கும் இத்தகைய போலி கருவுருதல் உணர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. இது Couvade Syndrome என்று அழைக்கப்படுகிறது. இதுவும் தவறான இயக்குனர் சுரப்பிகள் சுரப்பதால் ஏற்படும் விளைவாகும். பிரசவ காலத்தில், துணைவி படும் துயரத்தை எண்ணி கூட, சில ஆண்களுக்கு இவ்வாறாக நடக்கலாம் என்பதால், இது “பரிதாப கருவுறுதல்” என்றும் அழைக்கப்படுகிறது. அமெரிக்க அய்க்கிய நாடுகளில், 1940களில் 0.4% கருவுறுதல்கள் போலியானதாக இருந்துள்ளன. ஆனால், மருத்துவ அறிவியலின் வளர்ச்சியால், 2013இல் இந்த எண்ணிக்கை 0.0045ரூ என்ற அளவில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிர் 15: 1995ஆம் ஆண்டு, செப்டம்பர் 21ஆம் நாள், தெற்கு புது டெல்லியில் உள்ள ஒரு கோயிலில் விநாயகர் சிலை, தும்பிக்கையின் மூலம் பாலை உறிஞ்சிவிட்டதாக ஒரு செய்தி காட்டுத்தீ போல பரவியது. நாடெங்கும் பல விநாயகர் கோயில்களிலும் இதே சம்பவம் நடந்ததாக மக்கள் பரவசத்தோடு கொண்டாடினர். அறிவிய லாளர்கள் அளித்த விளக்கம் என்னவென்றால், விநாயகர் சிலைகளில் உள்ள மிக நுண்ணிய துளைகளின் மூலமாக, தந்துகி எழுகை முறையால் (Capillary Rise Method), பால் உறிஞ்சப்படுகிறது என்பதேயாகும். அன்று மாலைக்குள், இந்த விளக்கம் பிடிக்காததாலோ என்னவோ, விநாயகர் சிலைகள் பால் குடிப்பதை நிறுத்திவிட்டன.

தந்துகி எழுகை முறையில் இது நடக்கு மானால், ஏன் இதற்கு முன் அப்படி நடக்கவில்லை என்ற கேள்விக்கும், அன்று மாலைக்குப் பின், ஏன் அது தொடரவில்லை என்பதற்கும் விடை கண்டுபிடிக்க முடியவில்லை. பெண்கள் பால்குடம் எடுத்துக் கொண்டு ஊர்வலமாகப் போகும்போதும், கூழ் ஊற்றும் போதும், பலருக்கு ஆவேசம் வருவதையும், சாமியாடுவதையும் நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். இப்படி எந்த புறக் காரணிகளும் இல்லாமல், ஒரு கூட்டத்தினரின் கற்பனையில் உருவாகி, அதை அவர்கள் உண்மை என்று நம்புகிற அளவுக்கு உடலில் மாற்றங்கள் ஏற்படும் நிகழ்வுகளுக்கு அறிஞர்கள், குழு இசிவு நோய் (Mass Hysteria) என்று பெயரிட்டுள்ளனர். இந்நோயின் தாக்கம், ஒரு உடலில் இருந்து எப்படி பல உடல்களுக்கு பரவுகிறது என்பதற்கும், சிறிது நேரம் கழித்து உடல் தானாகவே எப்படி இதி லிருந்து விடுபடுகிறது என்பதற்கும், அறிவியலால் இன்று வரை விடை காண முடியவில்லை.

விடை: விநாயகர் சிலை பால் குடிப்பதற்கு தந்துகி எழுகை முறையை காரணமாக கூறினாலும், இந்த ஒன்று மட்டுமே காரனமல்ல. மேற்பரப்பு இறுக்கம், ஒரு செய்தியை உறுதி படுத்துவதில் இருக்கும் ஒருசார்ப்புத் தன்மை ஆகியவையும் பெரும் பங்காற்றியுள்ளன. மக்கள் தாங்கள் எது நடந்தது என்று நம்ப நினைக் கிறார்களோ, அதுவே நடந்ததாக சாதிக்கின்றனர். இதுவே ஒரு ஒட்டுமொத்த குழுவினரின் நம்பிக்கையாக இருக்கும்போது, அது அந்த குழுவையே நம்பிக்கை அடிப்படையில் உண்மைக்கு புறம்பான முடிவை எடுக்க வைக்கிறது.

சிலை பால் குடிக்கும் என்று குழுவாக நம்பி தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வது, கூட்டத்தை பார்த்தால் சாமியாடுவது, இத்தகைய குழு மனநோய்க்கான விளக்கத்தை 2002 ஆம் ஆண்டு வெளியான British Journal of Psychiatry ஆய்விதழில், பார்தலொமியூ, சைமன் உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள், “Protean Nature of mass sociogenic illness ” என்ற கட்டுரையில் கூறியுள்ளனர்.

“இத்தகைய “கூட்ட வெறி” என்பது ஒத்திசைவுள்ள குழுவினருக்குள் வேகமாக நோய் அறிகுறிகளை உருவாக்கும். இது உருவாகுவதற்கு நரம்பு மண்டலத்தில் ஏற்படும் உற்சாகம், இழப்பு, பயன்பாட்டின் மாற்றம் ஆகியவையே காரணங்களாகும். இதனால் உடல்ரீதியாக ஏற்படும் தற்காலிக மாற்றங்களுக்கு குறிப்பிட்ட எந்த காரணமும் இல்லை. இடம் பொருள் ஏவலுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு குழுவின் செயல்பாடுகளிலும் தற்காலிக மாற்றங்கள் தோன்றி மறையும்” என்று இக்கூர்மையான விளக்கத்தை, மனித மனங்களை ஆராய்ந்து கூறியுள்ளனர். எனவே மக்களின் இந்த மூடநம்பிக்கை செயல்கள் அறிவியல் விளக்கத்துக்கு அப்பாற்பட்டவையல்ல.

Pin It