வானில் கண்ணுக்கு விருந்தளிக்கும் காட்சிகளில் ஒன்று வால் நட்சத்திரங்கள். பிரகாசிக்கும் ஒரு தலையுடன் துடைப்பம் போல ஒரு நீண்ட வாலுமாக வானில் வலம் வரும் இவை அரிதாக பூமிக்கு விஜயம் செய்கின்றன. சூரியனுக்கு அருகில் செல்லும்போதுதான் இவற்றிற்கு நீண்ட வால் உருவாகிறது. இது இவற்றை அடையாளம் காண உதவுகிறது. பொதுவாக இவை வால் நட்சத்திரங்கள் என அழைக்கப்பட இதுவே காரணம்.
வால் நட்சத்திரங்கள் என்றால் என்ன?
இலத்தீன் மொழியில் நீளமான முடி என்று பொருள்படும் காமட்டே என்ற சொல்லில் இருந்துதான் காமட் (comet) என்ற ஆங்கிலச் சொல் பிறந்தது. இவற்றின் தலையின் நீளம் 2 முதல் 20 கி மீ வரை இருக்கும். புளூட்டோ கோளிற்கு அப்பால் 8 இலட்சம் கிலோமீட்டர் பரப்பில் அமைந்திருக்கும் ஊர்ட் மேகத்திரள் பகுதியில் இருந்து இவை கிளம்பி வருகின்றன. இப்பகுதியில் கோடிக்கணக்கான கோளவடிவ வான் பொருட்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. இங்கு ஏதேனும் மோதல்கள் நிகழும்போது பாதை மாறி சூரிய மண்டலத்திற்குள் பனிக்கட்டைகளாக இவை நுழைகின்றன.
அமைப்பும் தோற்றமும்
கோள்கள், குட்டிக் கோள்களுடன் ஒப்பிடும்போது வால் நட்சத்திரங்கள் திடநிலையில் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. இவற்றின் அமைப்பில் 70% பனிக்கட்டி வடிவத்தில் அமைந்த பொருட்களே உள்லன. இரும்பு, நிக்கல் துகள்கள், திடவடிவ அம்மோனியா, மீத்தேன், பலதரப்பட்ட சிலிகேட்டுகள், ஹைடிரஜன், கார்பன், நைட்ரஜன், ஆக்சிஜன் போன்ற வாயுக்கள் இவற்றில் அதிகம் காணப்படுகின்றன.பயணத்தில் சூரியனுக்கு அருகில் வரும்போது பனிக்கட்டிகள் சூரிய ஒளி பட்டு ஆவியாகிறது. சூரிய ஈர்ப்புவிசையால் பின்புறம் நீண்டு சூரியனின் எதிர்திசையில் பல கோடி கிலோமீட்டர்கள் நீண்ட வால் உருவாகிறது. ஒரு பிரம்மாண்ட வால் நட்சத்திரத்திற்கு சூரியனிடம் இருந்து சுமார் 306 கோடி கிலோமீட்டர் தூரத்தில் வால் உருவாகத் தொடங்கும். தூரம் குறையும்போது வாலின் அளவும், நீளமும் அதிகரிக்கும்.
வால் நட்சத்திரங்களின் விஞ்ஞானம்
கெப்லர் என்ற விஞ்ஞானி சூரியனிடம் இருந்து வெளியிடப்படும் பரவலான அழுத்தத்தின் பலனாக இவற்றிற்கு வால் உண்டாகிறது என்று கண்டுபிடித்தார். சில வால் நட்சத்திரங்களின் வாலின் நீளம் சூரியனிற்கும், பூமிக்கும் இடையில் உள்ள தொலைவின் இரு மடங்கிற்கு சமமாக உள்ளது. 30 கோடி கிலோமீட்டர் நீளம் உள்ள வால் நட்சத்திரங்களையும் மனிதர்கள் கண்டுபிடித்துள்லனர்.
தூசுக்களால் உண்டான வால் வெண்மை அல்லது இளம் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. வால் தூரிகை போன்ற அமைப்பை உடைய மற்றும் அயனிகள் நிறைந்த வாயுக்களால் நிறைந்த பிளாஸ்மா வால் என இருவகைப்படும். நீலம் அல்லது நீலம் கலந்த பச்சை நிறத்தில் இது காணப்படுகிறது. சூரியனிடம் இருந்து தொலைவில் இருக்கும்போது இவற்றிற்கு வால் இருப்பதில்லை.
வால் நட்சத்திரங்களின் கண்டுபிடிப்பு
இவை சூரியனுக்கு அருகில் வரும்போது வால் உருவாகி அதன் மீது சூரிய ஒளி படும்போது பூமியில் இருந்து புலனாகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஐம்பதிற்கும் குறையாமல் வால் நட்சத்திரங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கின்றனர். இவற்றில் பலவும் பூமியில் இருந்து பார்க்க முடியாதவை. சாதாரணமாக சூரிய உதயத்திற்கு முன்னும், மறைவிற்குப் பிறகும் இவற்றைக் காணலாம். என்றாலும் அபூர்வமாக பகல் நேரத்திலும் நள்ளிரவிலும் தென்படக்கூடிய வால் நட்சத்திரங்களும் உண்டு.
ஒவ்வொரு வால் நட்சத்திரத்தின் சுற்றுவட்ட காலமும் வெவ்வேறானது. மூன்றேகால் ஆண்டு முதல் இலட்சக்கணக்கான ஆண்டுகள் வரை இது வேறுபடுகிறது. ஒரு முறை மட்டுமே தோன்றி என்றென்றைக்கும் மறையும் வால் நட்சத்திரங்களும் பிரபஞ்சத்தில் உள்ளன. சுற்றுவட்ட காலம் இருநூறு ஆண்டுகளுக்குக் குறைவாக உள்ளவை குருங்கால வால் நட்சத்திரங்கள் என்றும், இதற்கு மேல் உள்லவற்றை நீண்டகால வால் நட்சத்திரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
இவை சூரியக் குடும்பத்தில் உள்ல கோள்கள் போல சுற்றுவட்ட காலம் கொண்டவை அல்ல. சூரியனுக்கு அருகில் வரும்போது சில பல இலட்சக்கணக்கான கிலோமீட்டர்கள் வேகத்தில் பயணிக்கின்றன. இவை ஒவ்வொரு முறையும் சூரியனுக்கு அருகில் வரும்போது இவற்றின் தூசுப்படலங்களும், வாயுக்களும் நஷ்டமடைகின்றன. நூற்றிற்கு மேற்பட்ட முறை சூரியனை சுற்றும் வால் நட்சத்திரங்கள் குறைவாகவே உள்ளன.
காணாமல் போகும் வால் நட்சத்திரங்கள்
சில வால் நட்சத்திரங்கள் அவற்றின் பயணத்தின்போது கோள்களுக்கு அருகில் வருகின்றன. அப்போது கோள்களின் ஈர்ப்புவிசையால் அவற்றின் மீது மோதி சின்னாபின்னமாகின்றன. 1994 ஜூலையில் ஷூமேக்கர் லெவி9 என்ற வால் நட்சத்திரம் வியாழன் கோளிற்கு அருகில் சென்றபோது இருபதுக்கும் மேற்பட்ட துண்டுகளாக உடைந்து அவை ஒன்றன்பின் ஒன்றாக வியாழனில் விழுந்து பெரிய வெடிப்புகளுக்குக் காரணமானது.
வால் நட்சத்திரங்களால் பல நேரங்களில் எரிகல் பொழிவு (meteor shower) சம்பவிப்பதுண்டு. இவை சூரியனை வலம் வந்து கடந்து செல்லும்போது அவற்றின் சில பகுதிகள் கழன்று தனியாக இருக்கும். அவற்றின் சுற்றும் பாதையின் குறுக்கே பூமி கடந்து செல்லும்போது தூசுக்களும், பாறைத் துண்டுகளும் பூமியின் வாயு மண்டலத்தில் நுழைந்து உராய்வினால் ஏற்படும் வெப்பத்தினால் எரிந்து சாம்பலாகின்றன. இவை எரிகற்கள் என்று அழைக்கப்படுகின்றன.
சில வால் நட்சத்திரங்களைப் பொறுத்தமட்டும் இந்நிகழ்வு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒழுங்குடன் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. எடுத்துக்காட்டு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 9-13 தேதிகளுக்கு இடையில் நிகழும் பெர்சீட் எரிகல் பொழிவு. இதன் உறைவிடம் 2007 ஆகஸ்ட்டில் வந்து சென்ற சஃப்ட் டக்கிள் என்ற வால் நட்சத்திரம். இவை பூமியுடன் மோதுவதற்குரிய வாய்ப்பு மிகக் குறைவு. இதற்குக் காரணம் இவற்றின் சுற்றுவட்டப் பாதையின் தளம் பூமியில் இருந்து வேறுபட்டது.
ஒரு சில மட்டுமே பூமியின் பாதைக்குக் குறுக்கே செல்கின்றன. இவ்வாரு நிகழ்ந்தாலும் இவை பூமியில் வந்து விழுவதில்லை. இத்தகைய சம்பவங்களின் சில அடையாளங்கள் மட்டுமே பூமியில் உள்ளன. 1908 ஜூன் 30 அன்று சைபீரியாவில் துங்கிஷ்கா என்ற வனப்பகுதியில் ஒரு குட்டி வால் நட்சத்திரம் விழுந்ததன் அடையாளம் இன்றும் உள்ளது. 8 கி மீ உயரத்தில் இருந்து அது உடைந்து தெறித்து விழுந்து 10 மெகா டன் டி என் டி வெடிபொருள் வெடிப்பிற்கு சமமான வெப்ப ஆற்றலை வெளியிட்டது.
இது பல்லாயிரக்கணக்கான ஹிரோஷிமா அணுகுண்டுகளுக்கு சமமான ஆற்றல். இதன் அதிர்ச்சி அலைகள் பல கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள வனப்பகுதியை அழித்தது. வால் நட்சத்திரங்களின் அளவு ஒரு கிலோமீட்டருக்கும் கூடுதலாக இருந்தால் அவை பல இலட்சம் மெகா டன் வெப்ப ஆற்றலை வெளியிடும். இது உலகளவில் பேரழிவிற்கும் காரணமாகலாம்.
பூமியில் இருந்து உயரும் தூசுக்களும், எரிதல் மூலம் ஏர்படும் புகையும் நீண்டகாலம் சூரிய ஒளியை தடை செய்யும். இது புவியின் காலநிலையில் பெரும் அழிவை ஏற்படுத்தும் மாற்றங்களுக்குக் காரணமாகும். ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன் டைனசோர்களின் அழிவிற்குக் காரணமானது தென்னமெரிக்காவில் விழுந்த இத்தகைய ஒரு வால் நட்சத்திரமே என்று கருதப்படுகிறது. அரிதாக ஒரு சில இலட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறை இவ்வாறு நிகழ சாத்தியம் உண்டு. இதைத் தடுக்க உதவும் ஏவுகணைத் தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
வால் நட்சத்திரங்களில் சூப்பர் ஸ்டார்
பிரபல வால் நட்சத்திரங்களின் வரிசையில் முதலிடம் பெருவது ஹேலி வால் நட்சத்திரமே. இதுவே முதலில் கண்டறியப்பட்ட குறுகிய கால வால் நட்சத்திரம். பிரிட்டிஷ் வானியல் அரிஞர் எட்மண்ட் ஹேலி இது ஒரு சில ஆண்டுகள் இடைவேளையில் பூமிக்கு விஜயம் செய்யும் வால் நட்சத்திரம், இந்த இடைவேளை 75 ஆண்டுகள் என்று அவர் கண்டுபிடித்தார். இதன் வரலாறை ஆராய்ந்த அவர் கி மு 140, கி பி 1456, 1531, 1607, 1682 ஆகிய ஆண்டுகளில் தென்பட்ட இது ஒரே வால் நட்சத்திரமே என்று கண்டுபிடித்தார்.
1759ல் இது மீண்டும் பூமிக்கு வரும் என்று அவர் கூறினார். அதைக் காண அவர் உயிருடன் இல்லை என்றாலும் வால் நட்சத்திரம் தென்பட்டது. பொதுவாக இவை குறித்து அக்காலத்தில் உலக மக்களிடையில் நிலவி வந்த பீதியை, மூடநம்பிக்கைகளை மாற்ற இக்கண்டுபிடிப்பு பெரிதும் உதவியது. 1910, 1986 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் தோன்றிய ஹேலி வால் நட்சத்திரம் 2061-62 காலத்தில் மீண்டும் தோன்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெயர் சூடும் வால் நட்சத்திரங்கள்
வெறும் கண்களால் இந்த வால் நட்சத்திரத்தைப் பார்க்கலாம். ஒரு மனித ஆயுளில் மீண்டும் தோன்றும் வால் நட்சத்திரம் என்ற பெருமையும் ஹேலி வால் நட்சத்திரத்திற்கு உண்டு. முதலில் 16ம் நூற்றாண்டில் வானில் தோன்றும் இந்த தீக்குளிக்கும் அதிசயங்களுக்கு பெயர் வைக்கும் முறை தொடங்கியது. முதலில் இவை தோன்றும் ஆண்டு மற்றும் கண்டறியும் முறையைக் குறிப்பிடும் வகையில் ஆங்கில அரிச்சுவடியில் சிறிய எழுத்துக்களை சேர்த்து எழுதும் முறை ஏற்பட்டது.
பிறகு தோன்றும் ஆண்டுடன் சேர்த்து ரோமன் எழுத்துக்கள் எழுதும் முறை வந்தது. சர்வதேச வானியல் கழகம் 1995 முதல் பெயரிடும் முறையில் மாற்றம் ஏற்படுத்தியது. என்றாலும் பல வால் நட்சத்திரங்கள் அவற்றைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகளின் பெயராலேயே அழைக்கப்படுகின்றன. உதாரணம்-எங்கே, டொனாட்டி, இக்கயாசிக்கி. இந்திய விஞ்ஞானி ஒருவரின் பெயரால் அழைக்கப்படும் ஒரு வால் நட்சத்திரம் உள்ளது.
உலகப் புகழ் பெற்ற வானியல் அறிஞர் வைனு பாபுவின் பெயரில் அந்த வால் நட்சத்திரம் அழைக்கப்படுகிறது. ஹார்வோர்டு விண்வெளியியல் பள்ளியில் (School of astronomy) அவர் 22 வயது மாணவராக இருந்தபோது தன் ஆசிரியர் பாப் மற்றும் சக மாணவர் மியூக்கிர் ஆகியோருடன் சேர்ந்து ஒரு வால் நட்சத்திரத்தைக் கண்டுபிடித்தார். பாபு-பாப்-மியூக்கிர் வால்நட்சத்திரம் என்று அது அழைக்கப்படுகிறது.
இக்கண்டுபிடிப்பிற்கு பசுபிக் விண்வெளியியல் கழகத்தின் டோம் ஹோ பதக்கம் வழங்கப்பட்டது. இவரின் பங்களிப்பிபை அங்கீகரிக்கும் வகையில் சர்வதேச விண்வெளியியல் கழகம் 2596 என்ற குட்டிக் கோளிற்கு வைனு பாபு என்று பெயரிட்டுள்லது. வால் நட்சத்திரங்களை ஆராயும் பிரிவு வால் நட்சத்திரவியல் (commetology) எனப்படுகிறது. 1985 முதல் விண்வெளி ஆய்வுக்கலன்களின் உதவியுடன் வால் நட்சத்திரங்கள் பற்றிய ஆய்வுகள் பெரும் வளர்ச்சி கண்டு வருகிறது.
இதற்காக முதலில் அனுப்பப்பட்ட ஆய்வுக்கலன் சர்வதேச சூரிய ஆய்வுக்கலன் (International Sun Explorer). சின்னர் என்ற வால் நட்சத்திரத்தின் வால் வழியாகக் கடந்து சென்ற இந்த கலன் வாலின் அமைப்பு, மற்ற சிறப்புகள் பற்றி பல தகவல்களைத் தந்தது. ஹேலி வால் நட்சத்திரத்தைக் குறித்து ஆராய அனுப்பப்பட்ட லியோட்டோ ஆய்வுக்கலன் 1986ல் அதன் அருகில் சென்று ஆயிரக்கணக்கான படங்களை பூமிக்கு அனுப்பியது. இதன் மூலம் ஹேலியின் நியூகிலியஸ் முன்பு கருதியிருந்ததைக் காட்டிலும் பெரியது என்று தெரிய வந்தது.
மேலும் நியூகிலியசின் வெளிப்புறத்தில் 10% மட்டுமே சூரியனுக்கு அருகில் செல்லும்போது செயல்திறனைப் பெருகிறது என்றும் அறியப்பட்டது. இதன் மூலம் முன்பு நினைத்துக் கொண்டிருந்ததில் இருந்து வித்தியாசமாக வால் நட்சத்திரங்களின் முக்கிய அகப்பொருள் பனிக்கட்டிகளே என்பதை அறிய முடிந்தது. 1990களில் நடந்த ஆய்வுகளில் இருந்து இவை எக்ஸ் கதிர்களை வெளியிடுகின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டது.
இவற்றிற்கும் சூரிய மண்டலத்தில் காணப்படும் வாயுக்களுக்கும் இடையில் நடைபெறும் வேதிவினைகளால் இவ்வாறு நிகழ்கிறது என்று கருதப்படுகிறது. லியோட்டோ ஆய்வுக்கலனின் கண்டுபிடிப்புகள் இந்த வானியல் அற்புதங்கள் பற்றி நன்கறிய மனிதகுலத்திற்கு உதவியது. நாசாவின் டீப் ஸ்பேஸ், ஸ்டார் டஸ்ட், டீப் இம்பேக்ட் போன்றவை இவை பற்றி ஆராயும் முக்கிய ஆய்வுக்கலன்கள். சூரியனை வலம் வரும் சோகோ கண்காணிப்பு நிலையம் இன்று அதிக அளவில் வால் நட்சத்திரங்களைக் கண்டுபிடிக்கிறது.
2005ம் ஆண்டிற்குள் சுமார் ஆயிரம் வால் நட்சத்திரங்களை இந்த நிலையம் கண்டுபிடித்தது. இவற்றில் பெரும்பாலானவை சூரியனுக்கு மிக அருகில் பயணம் செய்பவை. சாமான்ய மனிதர்களுக்கும் வானியலில் ஆர்வம் ஏற்பட வால் நட்சத்திரங்கள் பெரிதும் உதவியுள்ளன. இவற்றின் பன்முகத் தன்மை, ஆச்சரியம் தரும் அமைப்பு, புதிர் நிறைந்த இவற்றின் போக்குவரவு மனிதனில் என்றும் இயற்கை என்னும் மகத்தான சக்தியின் அற்புதங்களாக எஞ்சி நிற்கின்றன!
- சிதம்பரம் இரவிச்சந்திரன்