“தாய்ப்பால் கொடுத்தால் பெண்களின் அழகு கெட்டு விடும்! தாய்ப்பாலை விட டின்களில் அடைக்கப்பட்டு கடைகளில் விற்கப்படும் புட்டிப்பால், பவுடர் பால் உள்ளிட்ட குழந்தை உணவுகள் உயர்வானவை” என்ற தவறான எண்ணம், மக்களிடையே நிலவி வருகிறது.

ஆனால், தாய்ப்பால், குழந்தைகளுக்கும், தாயமார்களுக்கும் மிகவும் நன்மை அளிக்கக் கூடியது. இதற்கு நேர்மாறாக, புட்டிப்பால் வகைகள் குழந்தைகளுக்கு மிகவும் தீமையளிக்கக்கூடியவை. தாய்ப்பால் கொடுக்காததால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 13 லட்சம் பச்சிளம் குழந்தைகள் மரணமடைகின்றன. கடந்து 50 ஆண்டுகள் வரை தாய்ப்பால் தவிர வேறு புட்டிப்பால் , பவுடர்பால் எதையும் குழந்தைகளுக்கு கொடுக்கும் பழக்கம் கிடையாது. ஆனால், சமீப காலங்களில் பன்னாட்டு நிறுவனங்களின் குழந்தை உணவு தயாரிப்பு , விற்பனையும் அதிகமாகி எங்கும் பரவிவிட்டது.

Mother Feeding

தமிழ் நாட்டின் பெருநகரங்களில் 60 முதல் 70 விழுக்காடும், கிராமப்புறங்களில் 36 முதல் 40 விழுக்காடும் குழந்தைகளுக்குப் பவுடர்பால் கொடுக்கும் பழக்கம் உள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தாய்ப்பால், குழந்தைக்கென்றே இயற்கையால் பிரத்யேகமாக படைக்கப்பட்டது. தாய்ப்பாலுக்கும் மனித வளர்ச்சிக்கும் உள்ள தொடர்பு முதன்மையானது. எத்தனை கோடிகள் செலவு செய்தாலும், தாய்ப்பாலுக்கு இணையான குழந்தை உணவை ஒரு போதும் உருவாக்கவே முடியாது என அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தி குழந்தையைப் பலவிதமான தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. (உ.ம்) குழந்தைகளை அதிகம் பாதிக்கும் , 'டயரியா' எனப்படும் வயிற்றுப் போக்கு நோயானது தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளை விட, புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகளையே அதிகம் பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தாய்ப்பால், குழந்தையின் உயிரைக் காப்பாற்றுகிறது. ஒரு குழந்தைக்கு வேறு எந்த உணவுப் பொருளும் ஆறு மாதங்கள் வரை தேவைப்படாத அளவுக்கு, அனைத்துச் சத்துகளையும் தாய்ப்பால் அளிக்கிறது. தாய்ப்பாலில் கொழுப்பு, புரதம், வைட்ட மீன்கள் ஏ, டி, இ மற்றும் கால்சியம், மக்னீசியம், இரும்பு, சோடியம், பொட்டாசியம் போன்ற கனிம உப்புகளும் உள்ளன.

 தாய்ப்பால் சுத்தமானது, பாதுகாப்பானது, கொடுப்பதற்கு வசதியானது. புட்டிப்பால் உணவை குழந்தைக்கு தயாரிக்கும் போது அதிக தண்ணீரைக் கலந்தால் போதுமான சத்து கிடைக்காமல் போய்விடும். தண்ணீரைக் குறைவாகக் கலந்தால் கெட்டியான புட்டிப்பால் குழந்தையின் மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும். புட்டிப்பால் குழந்தைக்கு 'டயரியா' நோயை ஏற்படுத்தும்.

தாய்ப்பால் எளிதில சீரணமாகிவிடும். புட்டிப்பால் குழந்தைக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். குழந்தை, தாய்ப்பால் குடிக்கும் போது தாயின் மார்பகத்தை சூப்புவதால் மூட்டுவாய் உறுதியானதாகிறது. தாய்ப்பால் குழந்தைக்கு இலவசமாகக் கிடைக்கிறது.

“குழந்தை பிறந்தவுடன் கிடைக்கும் மஞ்சள் நிறமான சீம்பாலினை குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது” -எனக்கருதி குழந்தைகளுக்குக் கொடுப்பது இல்லை. இது மிகவும் தவறான கருத்து ஆகும். ஓவ்வொரு துளி சீம்பாலிலும் குழந்தையை நோயிலிருந்து பாதுகாப்பதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உண்டு. எனவே, கட்டாயம் குழந்தைக்கு சீம்பாலினைக் கொடுக்க வேண்டும். குழந்தை பிறந்த அரை மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

புட்டிப்பாலில் அபாயகரமான நச்சு ரசாயனங்கள் கலந்துள்ளன. குறிப்பாக , அலுமினியம், காரீயம் போன்றவைகள் கலந்துள்ளன. இவை குழந்தையின் உடல் நலத்தைக் கடுமையாகப் பாதிக்கிறது. புட்டிப்பாலின் விலை அதிகம். இதனால், ஏழை, நடுத்தர தாய்மார்களின் வருமானத்தில் பெரும் பங்கு செலவாகிறது. புட்டிப்பால் தயாரிப்பு முறைகளில் ஏற்படும் தவறுகளால் சத்துக் குறைவு, சிறுநீரகம் பாதிக்கப்படுதல், மூளை பாதிப்பு முதலியவை ஏற்படும். புட்டிப்பால் தயாரிக்க மிகத் தூய்மையான தண்ணீர் அவசியம். ஆனாவ் தூய்மையான நீர் கிடைப்பது அரிது.

பன்னாட்டுக் கம்பெனிகளின் கவர்ச்சியான விளம்பரங்களினாலும், விற்பனை தந்திரங்களினாலும், குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவது ஏதோ நாகரீகமற்ற செயல் போலவும், புட்டிப்பால் கொடுப்பது நாகரீகமானது என்பது போலவும் மிக மோசமான சிந்தனை ஏற்படுத்தப்படுகிறது.

தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் ஜந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பில் 13 விழுக்காட்டினைத் தடுத்து நிறுத்திவிட முடியும் . அதாவது, ஒர் ஆண்டில் 13 லட்சம் குழந்தைகளின் மரணத்தைத் தாய்ப்பால் மூலம் தடுத்து நிறுத்திவிடலாம்.

உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டு நெறிகளின்படி, குழந்தை பிறந்து 6 மாதம் வரை தாய்ப்பாலை மட்டுமே குழந்தைக்கு உணவாக கொடுக்க வேண்டும். இக்காலத்தில் தாய்ப்பாலைத் தவிர்த்து , வேறு எந்த உணவையும் கொடுப்பது தேவையற்றது. அதனால், குழந்தைக்கு எந்தப் பயனும் கிடைக்காது. அதே சமயம் , குழந்தை நோய்வாய்ப்படும் வாய்ப்பும் உண்டு. இதைக்கூறி உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர்ப்பதால் பெண்களுக்கு மார்பகப்புற்று நோய் அதிகமாக ஏற்படுகிறது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

                “தாய்ப்பால் - தாய் தமது குழந்தைகளுக்கு ஊட்டி விடும் வெள்ளை இரத்தம். குழந்தைகளின் உடல் வளர்ச்சியில், மூளை விருத்தியில் , நோய் எதிர்ப்பில், உளநலத்தில் நிகரில்லாப் பங்களிப்புகளைச் செய்து வரும் ஒரு திரவ நிறையுணவு. நோயுள்ள குழந்தைகள், குறைமாதக் குழந்தைகள் உள்ளிட்ட ஒரு வயதுவரை உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் ஏற்ற உணவு தாய்ப்பால் தான்”-என குழந்தை மருத்துவத்துக்கான 'அமெரிக்க கல்வி மையம் ' அறிவித்துள்ளது.!

 குழந்தைகளைப் பலி வாங்கும் வயிற்றோட்டம், சுவாச நோய்கள் முதலியவற்றிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றுகிறது தாய்ப்பால். ' பாதுகாப்பாக இருக்கிறேன் ' என்ற உணர்வையும் தன்னம்பிக்கையையும் முளைவிடச் செய்யும் ஓர் உளவியல் ஊட்டம். தாயின் பாதுகாப்பு தனக்கு எப்போதுமே துணையாக வரும் எனக்கருதும் இத்தகைய குழந்தைகள் பிரச்சினைகளை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் தன்மையை வளர்த்துக் கொள்வதாக உளவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

                டின்களில் அடைத்து விற்கப்படும் பால் பவுடர்குறித்து பன்னாட்டு நிறுவனங்கள் கவர்ச்சியான , போலியான விளம்பரங்களை வெளியிட்டு தாய்ப்பாலை விடச் சிறந்தது, புட்டிப் பால் என மூளைச் சலவை செய்கின்றன. இல்லாதவைகளைக் கூறி மக்களை திசை திருப்பும் விளம்பரங்களைத் தடை செய்யும் வகையில் 1981 ஆம் ஆண்டு ஜக்கிய நாடுகள் சபையின் ' குழந்தைகள் நிதியமும் ' . ' உலக சுகாதார நிறுவனமும் ' இணைந்து சர்வேதச சந்தைப்படுத்துதல் விதிமுறைகளை உருவாக்கியுள்ளன. ஆனால், குழந்தைப் பால் பவுடர் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், எவ்வித விதிமுறைகளையும் பின்பற்றுவதில்லை. மேலும், மகப்பேறு மருத்துவமனைகளுக்கே சென்று தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகின்றன.

                பொருளாதாரக் காரணங்களினால் நடுத்தர மற்றும் அடித்தட்டு சமூகத்தில் தாய்ப்பாலூட்டும் காலங்களிலும் வேலைக்குச் செல்ல பெண்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இத்தகைய பெண்களின் குழந்தைகளுக்குத் தாய்ப்பாலைத் தேவைக்கு ஏற்ப பருகும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

                கர்ப்ப காலத்தில் போதிய ஊட்டச் சத்து கிடைக்காததால் பிரசவத்தின் பின்னர் போதிய தாய்ப்பால் சுரக்க முடியாமல் திண்டாடும் தாய்மார்கள் அதிகம்.

                அய்க்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிதியம் வளர்முக நாடுகளில் அய்ந்து வயதுக்குட்பட்ட 15 மில்லியன் குழந்தைகள் தாய்ப்பாலின்றி -ஆண்டு தோறும் மரணம் அடைகின்றனர் என்ற அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது.

                தாய்ப்பால் கிடைக்காமல் திண்டாடும் குழந்தைகளுக்கு உதவுதற்கான 'மனிதத் தாய்ப்பால் வங்கிகள் ' மேற்கு நாடுகளில் உருவாகத் தொடங்கியுள்ளன. தங்களது குழந்தைக்குத் தேவையானதை விட மிகவும் அதிகமான பால்சுரப்பைக் கொண்டுள்ள தாய்மார்களிடமிருந்து பால் தானமாகப் பெறப்படுகிறது. பால் தானம் வழங்கும் பெண்கள், புகை பிடிக்காதவர்களாக இருப்பதோடு, எய்ட்ஸ், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் தாக்காமல் ஆரோக்கியமானவர்களாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனை.

                தாய்ப்பாலூட்டல் பற்றிய விழிப்புணர்வு பரப்புரையில் மேற்கத்திய நாடுகள் அதிக அக்கறை காட்டுகின்றன. இதற்கு ' பாப் ' இசைப்பாடகிகள் , முன்னணி திரை நட்சத்திரங்கள் மூலம் தாய்ப்பாலூட்டலின் இன்றியமையாமையைக் குறித்துச் சமூகத்துக்குச் செய்திகள் கூறப்படுகின்றன. இவர்களில் பலர், பொது அரங்குகளில் தங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டுகிறார்கள். இவர்கள் தாய்ப்பாலூட்டும் படங்கள் , ஊடகங்கள் மூலம் வெளியிடப்படுகின்றன. ஆனால், இந்தியாவில் , திரை உலக நட்சத்திரங்கள், பிரபல பெண்மணிகள் யாவரும் தாய்ப்பால் குறித்துப் பேச முன் வருவதில்லை. மாறாக, பெண்களின் அழகை மார்பகங்களுடன் இணைத்துக் காட்டும் திரைப்படங்களின் மூலம், 'தாய்ப் பாலூட்டுவது அழகுக்கு ஊறு செய்யும் ' என்னும் கற்பிதத்தைப் பொய்யாக சமூகத்தில் ஏற்படுத்துகிறார்கள்.

  தாய்ப்பால் அருந்தக் கேட்பது குழந்தையின் உரிமை!

 வேண்டிய மட்டும் பருகத் தருவது தாயின் கடமை !!

- பி.தயாளன்

Pin It