இங்கிலாந்துப் பள்ளிகளில் வேதியியல் கற்பிக்கும் முறைகள் பற்றி அறிந்து கொள்ளும் நோக்குடன், UK கல்வியியல் துறையின் ஒப்புதலோடு, இங்கேயிருக்கும் (இங்கிலாந்து) பள்ளியொன்றிற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. காலை 8:30 முதல் மாலை 3.10 வரை, ஐந்து பிரிவேளைகள் ஆறாம் நிலைகள் முதல் பள்ளி மேல்நிலையாகிய A Level வரை ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்களோடு இருந்து பாடங்களைக் கவனித்தேன். ஆறாம் நிலை மாணவர்களுடனான முதல் பிரிவேளையே வியப்பும் அதிர்ச்சியுமாகத் தொடங்கியது அந்தநாள் எனக்கு.

பாடத்தின் தலைப்பு "Puberty in Girls and Boys" அதாவது பெண்ணும் - ஆணும் பூப்பெய்துதல் பற்றிய பாடம். முதலில் ஒற்றைச் சொல்லில் அல்லது சரியா?தவறா? முறையில் விடையளிக்கக்கூடிய பொதுவான கேள்விகள், காட்டாக ஆண்கள் வயதுக்கு வரும்போது ஆண்களின் இடுப்பு அகலமாகுமா? கன்னித்தன்மை அடையும்போது மூளையிலிருந்து அதிகளவில் சுரக்கும் சுரப்பி யாது? முன்வைக்கப்பட்டு மாணவர்களிடம் இதுபற்றிய புரிதல் இருக்கிறதா என்று சோதிக்கப்படுகிறது.

ஆண்-பெண்ணுறுப்புகள் அடையும் மாற்றங்கள் பற்றி காணொளிகள் (Youtube உள்பட) காட்டப்பட்டு வகுப்பு கேள்வி-பதில்களோடு நகர்கிறது. ஆண்கள் வயதுக்கு வரும்போது, ஆணுறுப்புக்கு மேல் சிறுசிறு மயிர்த்துணுக்குகள் முளைப்பதும், ஆணுறுப்பு சற்று நீள்வதும், முகங்களில் பருக்கள் தோன்றுவதும் சமிக்ஞை என்று காணொளி மூலம் உணர்த்தப்பட்டபோது, ஆண்-பெண் குழந்தைகளென 25 பேர் இருந்த அந்த வகுப்பறையில் ஒருவரும் நாணிக் குறுகவோ, நக்கலாக நகைக்கவோ, அதைச் சொல்ல ஆசிரியர் கூச்சப்படவோ இல்லை.

menstrual cycleMenstruation என்றாலும் Period என்றாலும் ஒன்றுதான் என்றும், இது ஒரு இயற்கை நிகழ்வு தான் என்றும், Period இன் போது வெளியேறும் செந்நிற திரவத்தில் பாதிக்கும் குறைவாகவே இரத்தம் இருக்கிறது என்றும், குறிப்பாகப் பெண் குழந்தைகள் இதைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை என்றும் முழுவ‌தும் பேசி, விவரித்து, விவாதித்து முடிந்தவுடன், ஒரு படத்தை மாணவர்களுக்குக் கொடுத்து, படம் பார்த்துக் கதை சொல்லச் சொன்னார் ஆசிரியர். படத்தில் காட்டியிருந்த‌படி, பொதுவாக Period என்பது 28 நாட்களைக் கொண்ட உடலியல் சுற்று. இந்தச் சுற்றை நான்கு வாரங்களாகப் பிரித்து ஒவ்வொரு வாரத்திலும் பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களை மாணவர்களோடு நானும் தெரிந்து கொண்டதைத்தான் இங்கே பதிவாக எழுதுகிறேன்.

எல்லோரும் Period என்பதை மூன்று நாட்கள் மட்டும் நடக்கக்கூடிய நிகழ்வு என்று புரிந்து கொள்கின்றனர். அதோடு, Menstrutation என்று சொன்னவுடன் ஏதோ உடலுக்குள் மாற்றம் ஏற்பட்டு குறிப்பிட்ட நாட்களுக்குப் பின்னர் (Period முடிந்தபிறகு) இரத்தம் வெளியேறுமென்று நினைத்துக் கொள்பவர்களும் உண்டு. ஆனால் அப்படி நடப்பதில்லை. அதாவது, Period முடிந்தபிறகு பெண்ணுறுப்பிலிருந்து இரத்தம் வெளியேறுவதில்லை. Period இன் முதல் வாரத்திலேயே கருப்பையின் உள்சுவரில் படிந்திருந்த இரத்தப் படிமங்கள் பெண்ணுறுப்பு வழியாக வெளியேறுகின்றன.

விளங்கச் சொல்கிறேன்...

அதாவது மாதம் முழுதும் கருப்பையில் படிந்த இரத்தமானது, Period இன் முதல் சில நாட்களிலேயே (முதல் வாரத்தில்) வெளியேறிக் கருப்பை தூய்மை ஆகி விடுகிறதாம். இவ்வாறு முழுவ‌தும் வெளியேறிய பிறகு (இரண்டாம் வாரத்தில்) Ovaries எனப்படும் சினைப்பைகளில் உருவாகும் சினைமுட்டை ஃபெலோப்பியன் குழாய்கள் மூலமாக கருப்பையை வந்தடைகிறது. அந்தச் சினைமுட்டையானது, கருப்பைக்கு வரப்போகும் விந்தணுவுடன் சேர்ந்து கருவாக மாறத் தேவையான (Egg Fertilization) எல்லாச் சூழலும் அங்கே இருக்கும்.

அதாவது, அங்கே வரும் சினைமுட்டையை கருவாக மாற்றத் தேவையான ஊட்டங்கள் (சோடியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுக்கள், சில நல்லவகை நுண்ணுயிரிகள் (பாக்டீரியாக்கள்), சளி போன்ற திசுக்கள் போன்றவை இரத்தத்தில் கலந்து கருப்பையின் உள்சுவரில் படிந்து (Lining) தயாராகும். இந்தச் சூழலில் (மூன்றாம் வாரத்தில்) விந்தணு கருப்பைக்குள் வரும்போது, கருவாக மாற அதிகமாக வாய்ப்பிருக்கிறது. அப்படி விந்தணுக்கள் இல்லாத சமயத்தில், சினைமுட்டையானது, கருப்பையினுள் இருக்கும் இரத்தப் படிமங்களில் கரைந்து உள்சுவரில் படிகின்றன. இவ்வாறு, சினைமுட்டையைக் காப்பதற்காக, புது உயிரை உருவாக்குவதற்காக கருப்பைக்குள் சேமித்து வைக்கும் இரத்தப் படிமத்தின் கெட்டித்தன்மை அதிகமாகும்போது இரத்தம் வெளியேறுதல் முற்றிலும் நின்றுபோவது நான்காம் வாரத்தில்தான்.

முழுவ‌தும் நிரம்பிய கருப்பையானது Period இன் முதல் வாரத்தில், அதுவரை உள்ளுக்குள் படிந்திருந்த படிமங்களை வெளியேற்றி தூ(ய்)மையாகிறது. வெளியேறும் இரத்தமும் நிர்மலச் சுத்தமானது என்கிறது மருத்துவ அறிவியல். அதாவது மீண்டும் சுற்று துவங்குகிறது. இதன்படி பார்த்தால் மாதம் முழுவ‌துமே பெண்ணுடலில் மாறுதல்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஆனால் அதைப் பற்றிய புரிதல்களின்றி, தாசியை வேசியாக்கியது போல தூய்மையைத் தூமையாக்கி இழிவுசெய்து போய்க் கொண்டிருக்கிறது நம் உலகம். பெண்ணுறுப்பைச் சுத்தம் செய்வதிலிருந்து, வயதுக்கு வரும் ஆணுக்கு ஏற்படும் உடலியல் மாற்றங்கள் வரை அறிந்துகொண்டு, அவற்றை வளரும் பிள்ளைகளுக்கு உணர்த்தி வளர்க்காத வரையில் பாலியல் குற்றங்கள் நடந்துகொண்டேதான் இருக்கும்.

- முனைவர் செ. அன்புச்செல்வன், காந்த ஒத்ததிர்வு படமாக்கி (MRI) வேதியியல் ஆராய்ச்சியாளர், ஹல் பல்கலைக்கழகம், இங்கிலாந்து. 

Pin It