ஒரு சமுதாயம் இன்றைய பணிகளை இன்றைய கருவி கொண்டு செய்ய வேண்டும். இன்றைய பணியை, நேற்றைய கருவி கொண்டு செய்யும் இனத்தின் நாளைய வாழ்வு நலியும். எனவே, நாம் பயன்படுத்தும் கருவிகளை, உலகில் எங்கேனும் நிகழ்ந்துள்ள புதிய வளர்ச்சியை உள்ளடக்கியதாக புதுப்பித்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

மேலும் அறிவியல் வளர்ச்சியால் பெற்ற கருவிகளைப் பயன்படுத்துவதும், இயற்கை வளங்களை, நுகர்வதும், உலகின் சூழலுக்கும் மனிதகுல வாழ்விற்கும் தீங்கு ஏற்படாமல் வளர்ச்சிக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறதா? எனக் கண்காணிப்பதற்கான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் அறிவியலைப் பரப்ப வேண்டிய தேவையுள்ளது.

இருபத்தோராம் நூற்றாண்டின் மனிதகுல முன்னேற்றங்கள், குறிப்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் இருந்ததைப் போல் அல்லாமல் தகவல் பரிமாற்றத்தை உடனுக்குடன் செய்து விடுகின்றன. வானொலி மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றுடன் இணையம், கைபேசி போன்றவைகள் இதுநாள்வரை தகவல் பரிமாற்றங்களைச் செய்து கொண்டிருந்த இதழ்கள் பணியைக்கூட வழக்கற்றுப் போகச் செய்து கொண்டிருக்கின்றன.

இத்தேவையை கல்வி நிறுவனங்களும் அரசு தன்னார்வல நிறுவனங்களும் இயக்கங்களும் செய்து கொண்டிருக்கின்றன.

மக்களிடையே அறிவியலைப் பற்றிய விழிப்புணர்வைக் கற்பித்தல், பரப்புதல் அறிமுக அறிவியல் என்பது சமூகத்தின் முக்கிய அம்சமாகும். இது புதுமை கண்டுபிடிப்பு மற்றும் மக்கள் முன்னேற்றத்தை உந்துகிறது. இது தவிர அறிந்த தகவலை முடிவெடுப்பதை உறுதி செய்வதற்கும், விமர்சன சிந்தனை கலாச்சாரத்தை வளர்ப்பதற்கும், மக்களிடையே அறிவியலைப் பற்றிய விழிப்புணர்வைக் கற்பிப்பதற்கும், பரப்புவதற்கும், குறிப்பிடத்தக்க தேவை உள்ளது. அறிவியல் கல்வியை ஊக்குவிப்பதன் மூலம் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தை நன்கு புரிந்து கொள்ளவும் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தீவிரமாகப் பங்கேற்கவும் தனி நபர்களுக்கு நாம் அதிகாரம் அளிக்க முடியும்.

அறிவியல் கல்வியின் முக்கியத்துவம் தனி நபர்களின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் தகவலறிந்த முடிவுகளை எடுப்பதற்குத் தேவையான அறிவு மற்றும் திறன்களைக் கொண்டிருப்பதில் அறிவியல் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. விமர்சன சிந்தனை மற்றும் சிக்கலைத் தீர்ப்பதை ஊக்குவிக்கிறது. மருத்துவக் கல்வி அறிவை ஊக்குவிக்கிறது.

வேகமாக வளரும், முன்னேறி வரும் உலக முன்னேற்றங்கள், நம் வாழ்வில் ஒவ்வொரு அம்சத்தையும் பாதிக்கும் இடத்தில் அறிவியல் கல்வி முன்பை விட முக்கியமானது.

இந்நோக்கங்கள் நிறைவேற மக்களிடம் அறிவியலை எடுத்துச் செல்வது எப்படி?

20 ஆம் நூற்றாண்டு ஆரம்ப கட்டம் குடும்பக் கட்டுப்பாடு, எய்ட்ஸ், காலரா போன்றவற்றிற்கான பயன்பாட்டை பார்த்துள்ளோம். அவை,

1) கலைநிகழ்ச்சிகள்

மக்கள் மனதில் ஆழம்பதிந்து மக்களைத் திரட்டுவது, தேசிய விடுதலை இயக்கம், திராவிட இயக்கம், (1950-60) முதலியவை தங்கள் கொள்கைகளை நாடகம், தெருக்கூத்துகளின் மூலம் பொதுமக்களிடம் எடுத்துச் சென்றார்கள். இது போல அறிவியலையும் பரப்பலாம். எ.கா. ஜாதகத்திற்குப் பதில் இரத்த சோதனை Rh+Rh(-) ஆகியவைகளைத் திருமணப் பொருத்தம் பார்க்குமுன் சோதனை செய்து பிறகு திருமணம் செய்தால் குழந்தைக்கு வரும் கேடுகள் தடுக்கப்படும்.

2) கலைப்பயணங்கள்

பிற அறிவியல் இயக்கங்களுடன் இணைந்து எடுத்து செல்வது. இதைக் கோள சாஸ்திரீய சாகித்ய பரிஷத் போன்ற அறிவியல் இயக்கங்கள் தங்கள் கருத்துகளை வீதி நாடகங்களாக சாலை கூடுமிடங்களில் ஆடிப் பாடி கருத்துக்களைச் சொல்கின்றனர்.

போபால் விஷவாயு நாடகம் நடிக்கப்பட்ட காலத்தில் இதனால் கேரளாவில் சில கிராமங்களில் எவரெஸ்ட் பாட்டரிகள் விற்கவில்லை.இது போன்ற கருத்துக்களை தக்க அறிஞர்களோடு வடிவமைக்க வேண்டும். இதுபோல் சுற்றுச்சூழல், உயிரினங்களை நேசித்தல், பெண் சமத்துவம், உரிமை பெற்ற சமூகம், அனைவருக்கும் கல்வி ஆகியவைகளைப் பாடல், நாடகங்கள் மூலம் உருவாக்க வேண்டும்.

3) மந்திரமில்லை மாயமில்லை- மாஜிக் ஷோ

மக்களை தவறான நம்பிக்கையிலிருந்து மீட்பது. சாதாரண மக்களும் அற்புதங்களைச் செய்ய இயலும் என்ற தன்மையை ஏற்படுத்துவது. இதனை ஆயிரக்கணக்கானோர் கண்டு களித்து உண்மையை அறிய முடியும்.

அறிவியல் பயிற்சி முகாம்கள் - உணர்வுப்பூர்வமான செயல்பாடுகள். உறைவிட முகாம்களில் தவறான நம்பிக்கை, உடல்நலம் ஆகியவைகளை அறிஞர் பெருமக்கள் உரைபட விளக்கங்களுடன் விளக்கலாம்.

அறிவியல் விளையாட்டுப் பகுதி - இதில் பரிசோதனை விளையாட்டுகளைக் குறைந்த செலவில் நடத்தி அறிவியலை எளிதாக எடுத்துச் செல்ல முடியும்.

கற்பனையும் கைத்திறனும் பகுதி - கழிவுப் பொருளை அலங்காரப் பொருளாக்குவது 2)கவிதை உருவாக்கம் முதலியவைகள் மூலம் படைப்பாக்கம் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்குவது.

கணிதமும் வடிவியலும் - கணிதம் இனிக்கும் என்ற வகையில் கணிதத்தை விளையாட்டாக கற்பிப்பது.

தேசிய, மாநில விஞ்ஞான மாநாடு, விழாக்களை நடத்துவது - இதில் பல அறிவியல் தலைவர்களை பேச வைப்பது - நாடகம், பாட்டு ஆகியவைகளையும் இடம்பெறச் செய்யலாம்.

இது தவிர வில்லுப்பாட்டு, பாவைக்கூத்து, நாட்டுப்புறக்கலை இவைகள் எல்லாம் ஒரு நேரத்தில் குடும்பக் கட்டுப்பாட்டிற்காக நடத்தப்பட்டது என்பது பலருக்கு நினைவிருக்கலாம்.

கருத்துப்படம் (Cartoon) சுவரொட்டி - இவைகளின் மூலம் சுற்றுப்புறச்சூழல், அசுத்த நீரின் விளைவுகள், புகை உனக்குப் பகை போன்ற கருத்துப் படங்களை வெளியிட்டு விளக்கலாம்.

இதழ்கள் -அறிவியலை பரவலாக்க எளிய முறையில் விஞ்ஞான உண்மைகளை, கருதுத்துக்களைப் பரப்ப பல்வேறு இதழ்கள் வேண்டும். அவை வரலாற்றிலிருந்து உடல் நலம் வரை பல தலைப்புகளில் தொடர்ச்சியாக வெளிவர வேண்டும். எதிர்பாராதவிதமாக தமிழ்நாட்டில் கொரனா தொற்றிற்குப் பிறகு பொது அறிவியல், மருத்துவ இதழ்கள் தங்கள் வெளியீடுகளை நிறுத்திவிட்டது. இவை மீண்டும் வெளிவர ஆவன செய்ய வேண்டும்.

நூல்கள்

சிறுவயதிலேயே ஆர்வத்தை ஏற்படுத்த அமெரிக்காவிலும், ரஷ்யாவிலும் பல புதிய முறையில் நூல்கள் வெளிவருகின்றன. அத்தகைய நூல்களை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பாரதி புத்தகாலயம் போன்ற இடதுசாரி பதிப்பகங்கள் ஆண்டுதோறும் வெளியிடுகின்றன. இவைளைப் போல விலையில்லா வேட்டி சட்டைகளை வழங்குதலை ஒத்து விலையில்லா நூல்களை அரசு வழங்கலாம்.

சோவியத் யூனியன் தகர்வுக்கு முன்புவரை நல்ல காகிதத்தில் குறைந்த விலையில் அறிவியல் நூல் வீதிகளில் கூட விற்கப்பட்டது. அதுபோல அறிவியல் நூல்கள் வரிசையில் தென்னிந்திய புக் டிரஸ்ட் துணையோடு ஒரு ரூபாய் விலையில் வெளிவந்து விற்கப்பட்டன. இது தவிர மனதில் விஞ்ஞான ஆர்வத்தைத் தூண்ட, அறிவியல் புனைக்கதைகள் எழுதப்படவேண்டும். (எ.கா.) டைம் மிஷின். இதுபோன்ற புதுமைக் கருத்துக்கள் வடிவில் தமிழில் வெளிவருவது மிகவும் குறைவாக உள்ளது வருத்தமளிக்கின்றது. அறிவியல் எழுத்தாளர்கள் இதை மனதில் கொள்ள வேண்டும்.

நூல்களை குழந்தை, விடலை, முதியோர்களுக்கு என பிரித்துக் கொள்ளலாம். இவை ஓரளவு படித்தவர்கள் கூட புரிந்து கொள்ளும் வகையில் கருத்துகள், கலைச்சொற்கள் மிகக் குறைவாக, கரடுமுரடான சொற்கள் இன்றி இருக்கவேண்டும். தெளிவு, எளிமை, நேர்நடையுடன் செய்திகளை பார்த்தவுடன் புரிந்து கொள்ளத் தக்கதாக இருக்க வேண்டும். இது வரலாற்றிலிருந்து உடல் கூறுவரை இருக்கலாம். சில பதிப்பகங்கள் மூலம் உடல்நலம் குறித்த சிறுநூல்கள் - இரைப்பை நோய், வயிற்றுப் போக்கு, பிராஸ்டேட் போன்றவைகள் வெளிவருகின்றன. இதுபோல் நூல்கள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மூலம் தொழிற்சாலைகளால் ஏற்படும் நோய், வைட்டமின், தண்ணீரினால் பரவும் நோய்கள் என்று கோடைக்கால பட்டறைகளை நிகழ்த்தி, அவைகள் டாக்டர் அ.கதிரேசன் வழி நடத்தல் மூலம் வெளிவந்து பெரும் பாராட்டைப் பெற்றது. நீ எப்படி தோன்றினாய்? கணினி அறிமுகம், கலிலியோ போன்ற நூல்களும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மூலம் வெளிவந்து நல்ல பாராட்டைப் பெற்றது.

உழவர்களுக்கும் நல்ல மகசூல் தரும் சிறு நூற்கள் வெளிவரவேண்டும். அண்மைக் காலங்களில் வந்த பெரும் தொற்று, மலேரியா, டெங்கு, டைபாய்டு, ரேபிஸ், எபோலா வைரஸ் தொற்று, எலிக் காய்ச்சல் போன்றவற்றிற்கான நூல்கள் எளிய முறையில் வந்து கொண்டிருக்கின்றன.

அறிவியல் கண்டுபிடிப்பில் நோபல் பரிசு பெற்ற அறிஞர் சர் சி வி ராமன், டாக்டர் சந்திரசேகர் போன்ற விஞ்ஞானிகள் வரலாற்றையும் கண்டுபிடிப்புகளையும் மாணவர்களிடம் எடுத்துச் செல்லலாம்.

மக்கள் தொடர்புச் சாதனங்கள்

20 ஆம் நூற்றாண்டு ஆரம்பகால தொடர்பு சாதனங்கள்

வானொலி-வேளாண்துறையில் புதிய யுத்தியாக ஒரு நாளுக்கு ஒரு செய்தி என்ற விதத்தில் தென்கச்சி சாமிநாதன் உரையைப் போல வானொலியில் பல உரைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அறிவியல் அலைகள், வினாடி வினாக்கள், இது தவிர நல்ல தமிழ் வார்த்தையை அறிய வினாடி வினா, அறிஞர் நேர்காணல், பேட்டி போன்றவைகள் 3-30 நிமிடங்கள் நடைபெறுகின்றன. இதையே இன்னும் நேரத்தைக் கூட்டி பள்ளி, கல்லூரிகளிலும் கண்டிப்பாக கண்டுகளிக்குமாறு செய்யவேண்டும்.

திருச்சி வானொலி போன்றவை வேளாண்துறை, நலவாழ்வியல் முதலியவைகளில் சாதனை படைத்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை துகிலி சுப்பிரமணியம் என்பவர் மாலையில் வானொலியில் பேசுவார். “நேத்து என்ன பண்ணிங்க? இன்று நிலக்கடலைக்கு உரம் போட்டீங்களா?” என்று சொல்லிவிட்டு, இன்றைய காலத்தை ஒட்டி வேளாண் தொழில்நுட்பத்தை கூறுவார். இது போல் நாமும் முனையலாம். நாமே வானொலியை அமைக்க முடியும். இதன் மூலம் வேளாண்மையைப் போல மற்ற விஞ்ஞானங்களையும் எடுத்துச் செல்ல முடியும். இதை சில பல்கலைக் கழகங்கள் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

தொலைக்காட்சி தொல்லைக்காட்சியாகக் கூடாது

வானொலி, தொலைக்காட்சி வழியாகத் தடுப்பு முறை வழியாக காலரா, போலியோ, பெரியம்மை, ஒழிக்கப்பட்டது என்பது நினைவில் கொள்ள வேண்டும். இதே போல முதலில் இருவர் பிறகு ஒருவர் என்று கூறி குடும்பக் கட்டுப்பாடு பெரிய வெற்றியடைந்தது. அதே போல கக்குவான், தொண்டை அடைப்பான், டெட்டனல், போலியோ ஆகியவை இல்லை என்ற நிலைக்கு வந்துவிட்டோம். தொழுநோய் போன்ற நோய்களுக்குத் தடுப்பு முறையைக் கூறும்போது இது கர்மவினை, செய்த தவறுக்கு தண்டனை என்று எதிர்மறைக் கருத்துக்களைக் கூறக்கூடாது. அம்மைக்கு தடுப்பு மருந்து வந்துவிட்டது. அம்மைக்கு காரணம் வைரஸ் என்று கூறி கடவுள் குற்றம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தலாம்.

திரைப்படம்

ஒரு படத்தில் அறிவியல் குறித்து என்.எஸ்.கே “விஞ்ஞானத்தை வளர்க்க போராண்டி வெளிநாட்டானை விருந்துக்கு அழைத்துக் காட்டப் போறேண்டி” எனப் பாடுவர். அதுபோல் சின்னக் கலைவாணர் விவேக் பல படங்களில் தனது பகுத்தறிவு கலந்த நகைச்சுவையைக் கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இத்தகவல் அணுகுமுறை ஒரு பணியாக இராது, சமுதாயத்தை அறிவார்ந்த பயணத்திற்கு வழிநடத்துவதாக இருக்க வேண்டும். குடும்ப நலத்திட்டம் வெற்றிகரமாக அமைந்தது ஒரு சமூகநல பரிமாற்றம் (Social marketing) என்று கூறலாம். இதுபோல வயிற்றுப் போக்குக்கு எப்படி ஓ.ஆர்.எஸ்.சை தயார் செய்வது என்பதைக் குறித்துச் சொல்லிக் கொடுக்கலாம்.

இருபதாம் நூற்றாண்டு ஆரம்ப காலத்திற்குப் பின் அண்மைக்காலத் தொடர்பு சாதனங்கள்

புலனம், வலைஒளி (youtube), இன்ஸ்டாகிராம், முகநூல் (facebook) ஆகிய செயலிகள் மூலம் 100க்கும் மேற்பட்ட பங்காளர்களுக்கு ஒரே நேரத்தில் செய்திகளை அனுப்பமுடியும். இது குறுங் காணொலியாக இருக்கலாம். இதன்மூலம் நலவாழ்வு, வேளாண்மை, அறிவுரை, வேதியியல் ஆய்வு, விழிப்புணர்வு அறிவியல் உரையாடல், பேட்டி போன்றவைகளை எடுத்துச் செல்லலாம்.

அறிவியல் திரைப்படம்

டிஸ்கவரி சானல், நேஷனல் ஜியோகிராபி, ஹிஸ்டரி போன்ற திரைப்பட அலைவரிசையைப் போல “நம்மை ஊரைப் போலாகுமா” என்று நம்ப ஊர் கனிவளம், புகழ்பெற்ற சுற்றுலாத்தளங்கள், சங்க காலம் முதல் இன்று வரையிலான தமிழர் வரலாறு ஆகியவைகளுடன் அறிவியல் புனைகதை நூல்களைப் போல் புனைகதையுடனான திரைப்படங்களும் அறிவியலைப் பரப்ப உதவும்.

இணைய மின் இதழ்கள் மூலம் உலகத் தமிழனை ஒன்றாக்கலாம், இதில் எத்தனை பக்கம் வேண்டுமானாலும் எழுதலாம், புலம் பெயர்ந்த தமிழனையும் இணைக்க இவ்விதழ்கள் பெரிதும் உதவும். இவ்விதழ்கள் மூலம் வரலாறு, விஞ்ஞானம் ஆகியவை பன்னாட்டளவில் எடுத்துச் செல்லலாம். ஏற்கனவே பல மின் இதழ் பல நாடுகளிலிருந்து வெளிவந்து வெற்றிகரமாக உலா வருவது கண்கூடு.

மருத்துவரின் பங்கு - “மருத்துவ அறிவியல் ஒளித்து வைக்க வேண்டிய தனிப்பட்டோரின் குத்தகை இல்லை” என்றவாறு டேவிட் வார்னர் ‘டாக்டரில்லா ஊரில்’ எனும் நூல் பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளிவந்துள்ளன. இதுபோல சித்த மருத்துவம் சாமானியரிடம் சென்றடையவில்லை என்ற நிலையில் பாட்டி வைத்தியத்தையாவது நாம் எல்லோரிடமும் அதில் சிறந்தவைகளை எடுத்துச் செல்லவேண்டும். இதனால் குறைந்த செலவில் மருத்துவம் பெறமுடியும்.

நடமாடும் நூல் விற்பனை - நியூ செஞ்சுரி புத்தக நிலையம், தனது பேருந்தில் நூல்களை எடுத்துச் சென்று ஒவ்வொரு ஊராக நூல்களைச் சந்தைப் படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. பாரதி புத்தகாலயமும் - பின்னால் புத்தகாலயமும் இணைந்து புத்தகத் திருவிழாவை ஆண்டுதோறும் திருப்பூரில் நடத்துகிறது.

தேசிய மாணவர் படை

தேசிய மாணவர் படை (NCC) போல தேசிய விஞ்ஞான மாணவர் படையை அமைத்து ஒவ்வொரு கல்லூரியிலும் விஞ்ஞானத்தை எடுத்துச் செல்ல வேண்டும். அம்மாணவர் படை. பொதுமக்களுக்கான அறிவியல் நிகழ்ச்சிகள், விளக்க உரைகள், விவாத மேடைகள், போட்டிகள் மற்றும் கண்காட்சிகளை நடத்தலாம்.

விமர்சன சிந்தனை மற்றும் சிக்கலைத் தீர்ப்பதற்கும் ஊக்குவிக்கும். மேலும் புதுமை, கண்டுபிடிப்பு மற்றும் முன்னேற்றத்தையும் உந்திவிக்கும். தங்களைச் சுற்றியுள்ள உலகத்தை நன்கு புரிந்துகொள்ளவும் எதிர் காலத்தை வடிவமைப்பதில் தீவிரமாக பங்கேற்கவும், இயற்கை உலகின் அடிப்படைக் கொள்கைகளைப் புரிந்து கொள்ளவும் உதவும்.

நிறைவாக

இவைகளின் மூலம் சாதாரண மனிதனுக்கும் தன் வாழ்நிலையை மாற்ற முடியும் என்று நம்பிக்கையூட்ட முடியும் சாதாரண மனிதனும் தன் அறிவை விரிவாக்கி எழுச்சியுறுவர். வறுமையில் வாடும் தமிழர்களுக்கு பொருளாதாரக் கருவிக்கான கருவியாக அறிவியல் பயன்படும். உணர்வுகளைப் புண்படுத்தாது தவறான பழக்க வழக்கங்களையும் மூடநம்பிக்கைகளையும் சுட்டிக் காட்டுவதால் கைவிடுவர். போருக்கும் அழிவிற்கும் எதிராக அறிவியல் வளர்ச்சிக்கு அரசுக்கு நெருக்கடி கொடுப்பர். நலவாழ்வுத் திட்டங்களில் பங்கேற்று விரிவுப்படுத்துவர். மரபுவழி கைவினைக் கலைஞர்கள் தங்கள் தரத்தை மேம்படுத்துவர். மரபுவழிப் பெருமைகளை வரலாற்றை அறிந்து, சீரிய எதிர்காலத்தை, உருவாக்குவார்கள். மத, இன, மொழி வெறிக்கு எதிராக ஒற்றுமையாக இருப்பார்கள். அப்போது மறைந்துள்ள திறமைகள் வெளிவரும். இதனால் தமிழர்கள் தமிழ்நாட்டில் மிகச் சிறந்த சாதனையாளராக பகுத்தறிவாளர்களாக மாறுவார்கள்.

(ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை வெள்ளி விழா உரையின் சுருக்கம்.)

- டாக்டர் சு.நரேந்திரன், எழுத்தாளர், சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக சிறப்புநிலைப் பேராசிரியர்.