கர்நாடக சங்கீதம் எனும் மரபு சார்ந்த இசை வடிவம் காலங்காலமாய் இருந்த கட்டுத் தளைகளிலிருந்து அறுபட்டு ஜனநாயகப் படுத்தும் முயற்சிகளுக்கு உட்படுகையில், அதை சாதி வடிவத்திற்குள் அடைக்கும் சமீபத்திய முயற்சி விபரீதமானது. இந்து இசைக் கலைஞர்கள் இந்து அல்லாத மற்ற மதங்களுக் குரிய தெய்வங்களைப் பற்றியோ,நம்பிக்கைகள் குறித்தோ பாடலாகாது என்று எச்சரிக்கை விடப்படுகிறது. எச்சரிக்கை விடுக்கும் ராமநாதன் எனும் அந்நபர் ராஷ்ட்ரீய சனாதன் சேவா சங் எனும் அமைப்பின் நிர்வாகி என்ற முறையில் பல்வேறு இசைக் கலைஞர்களை தொடர்பு கொண்டு அச்சுறுத்தியும் வருகிறார். பார்ப்பனர்களுக்கான பிரத்யேக அரசியல் அமைப்புதான் ராஷ்ட்ரீய சனாதன் சேவா சங் என்று அவரும், சென்னை செல்வகுமார் சாஸ்திரிகளும் கூறி வருவதால் இந்த எச்சரிக்கை பார்ப்பன இசைக் கலைஞர்களுக்கே விடப் பட்டதாக கூற முடியும். அதிலும் தூய தமிழ்ப் பெயரை அவ்வமைப்பு கொண்டுள்ளதால் இவ் வமைப்பு தமிழ்நாட்டைச் சார்ந்த பிராமணர்களை பாதுகாத்திடும் நோக்கத்தை கொண்டது என்பதை சொல்லாமலேயே அறியலாம்.

karnatic music legendsசெல்வகுமார் சாஸ்திரிகள் நேர்காணல் யு டியுப்பில் உள்ளது. பின்னணியில் காஞ்சிபுரம் சங்கராச்சாரி சந்திரசேகரரின் படங்கள் சற்று அதிகமாகவே அடுக்கி வைக்கப்பட்டுள்ளதை காண முடிகிறது. 1927ல்காந்தியடிகள் காங்கிரஸ் மாநாட்டையொட்டி சென்னைக்கு வந்தபோது ஆலய பிரவேசம், ஹரிஜன் எனும் வார்த்தைப் பிரயோகம் போன்றவற்றுக்கு எதிராக சனாதன தர்மம்,வேதம், சாஸ்திரம், சம்பிரதாயம் ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் இதே சந்திரசேகரர் அளித்த ஊக்கத்தின் பேரில் சனாதன சங்கமும், ஆர்ய தர்மம் எனும் பத்திரிக்கையும் சோமதேவ சர்மா என்பவரால் துவக்கப்பட்டது என்பதும், “காந்தியே நீர் போம்’’ என்று காஞ்சிபுரம் ஆசாமி எழுதிய கானாப்பாட்டு ஒன்றும் அத்தருணத்தில் பிறந்தது என்பதும் நினைவிற் கொள்ளத்தக்கது.

இசைக்கான புதிய இலக்கணத்தை உருவாக்க முயலும் ராமநாதன் கடந்த காலங்களில் இசையை மக்களிடம் கொண்டு செல்வதில், மாற்றங்களை உருவாக்குவதில், ஆய்வுகளை மேற்கொள்வதில், வாய்ப்பாட்டில், இசைக் கருவிகளை பயன்படுத்துவதில் அல்லது அவரே தன்னைப் பிரகடனம் செய்து கொள்வது போல் “கடையனுக்கும் கடைத்தேற்றம்” என்ற அடிப்படையில் சவுண்டிப் பார்ப்பனர் போன்ற அடித்தட்டு பார்ப்பனர்களின் உயர்வுக்கு ஏதாவது பங்கு பணியாற்றியுள்ளாரா என்ற கேள்வி இயல்பாகவே எழக்கூடும். அச்சுறுத்து வது, மாற்றர் மீது வன்மத்தைப் பொழிவது என்பது மட்டுமே இவரது செயல்பாடாக இருந்து வருவதை அறிய முடிகிறது. மத நல்லிணக்கத்திற்கு எதிராக மட்டுமல்ல சாதிக்குள்ளுளேயே ஒரு பகைமை உணர்வை உருவாக்கி அசுர விருட்சமாக்கும் இத்தகைய அயோக்கியத்தனமான முயற்சிகளை கலைஞர்கள் மட்டுமல்ல இசை ரசிகர்களும் ஜனநாயக சக்திகளும் எதிர்க்க வேண்டும். ராமநாதன் போன்ற ஹிட்லரின் பரம்பரையை வளரவிடுவது இசைக் கலைக்கும், பண்பாட்டி யலுக்கும் மட்டுமின்றி அனைத்துப் பிரிவின ருக்கும் பேராபத்தாகவே அமைந்துவிடும்.

மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பார்ப்பனர், செட்டியார், முதலியார், நாயுடு என்பதால் உருவானதல்ல. ஒட்டுமொத்த மக்கள் சமூகமும் எதிர்கொள்ளும் பிரச்னைகளைத்தான் அந்தந்த ஜாதி, மதம், மொழி சார்ந்த மக்கள்அனைவருமே எதிர் கொள்கிறார்கள். இதைக்கடந்து வெவ்வேறு பகுதிகளில் சாதி, மொழி, மதம்அடிப்படையில் அடக்கு முறைக்கும் அச்சுறுத்தல்களுக்கும் ஒரு பகுதியினர் ஆளாகி வருவதுஇன்றும் தொடர்ந்து வருகிறது. சிறுபான்மையினரின் அடக்கு முறைக்கு, பெரும்பான்மையினர் ஆளாவது நிகழ்ந்து வருவது என்பது வரலாற்று வக்கிரங்களில் ஒன்றாகும். மயானப் பாதை, ஊரின் பொதுப்பகுதிக்கு செல்லமுடியாத தனிச் சுவர், ஊருக்கு வெளியே தனித்த வாழ்விடம் இன்னும் நகரங்களில் வாடகை வீடு போன்ற சமூகப் பிரச்னைகளையும், பார்ப்பனர்கள் சாதாரணமாக எதிர்கொள்ளும் பிரச்னைகளை யும் ஒப்பிடமுடியாது. அவர்களின் அடை யாளங்கள் ஆபத்துக்குள்ளாவதில்லை. இன்னும் சொல்லப் போனால் பார்ப்பனர்களின் அடை யாளங்களை, இறை வழிபாடு உள்ளிட்ட பண் பாட்டியலை சுவீகரித்துக் கொள்ளும் விபரீத மானமான போக்கு நகரம் கிராமம் என்ற வேறு பாடின்றி மற்ற சாதியினரிடம் பரவி வருகிறது.

இப்பின்னணியில் ராஷ்ட்ரீய சனாதன் சேவாசங்கின் அச்சுறுத்தல் முளையிலேயே முறியடிக்கப்படவில்லையென்றால், அடுத்த கட்டத்தில் பார்ப்பனரல்லாத மற்ற இந்து இசைக் கலைஞர்கள், பிறமதங்களைச் சார்ந்த தெய்வங்களைப் பற்றிய பாடல்களை பாடலாகாது என்றும், மற்ற மதக் கடவுளர் பற்றி பாடல்களை எழுதலாகாது என்றும் கட்டளை பிறப்பிக்கப்படும். இது ஏதோ ராமநாதன் எனும் ஒரு சாதி வெறியனின் குரலாக கருதலாகாது. ஒற்றை பண்பாட்டியல் என்று பூனேயில் உருவான கோட்பாட்டை, டில்லியில் மதவாத சக்திகள் வேர்கொண்ட பின்னர் தேசமெங்கும் கொண்டு செல்ல நடைபெற்று வரும் பல்வேறு முயற்சிகளின் ஒன்றுதான் கோயம்பத்தூர் அச்சுறுத்தல்.

பிரபுத்துவ பண்பாட்டியலுக்கே உரிய அளவில் கர்நாடக இசை இருந்து வந்திருந்தா லும், ஜனநாயக சக்திகளின் தலையீட்டின் காரணமாய் திரைப்படங்களிலும், இசை நிகழ்வுகளிலும் ஓரளவு மதவெறியற்று, சாதிக்கு அப்பாற்பட்டுதான் வெளிப்பட்டு வந்திருக்கிறது. அதை மேலும் வெகு மக்களின் பண்பாட்டியல் கூறாக மாற்றும் முயற்சி சமீப காலங்களில் வேகம் பெற்று வருகிறது. இன்றைய தினம் கர்நாடக இசையையும் அது சார்ந்த இதர வடிவங்களையும் மக்களிடம் கொண்டு செல்வதில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாதியை, மதத்தை, மொழியை சார்ந்த மக்களுக் கும் பங்கு இருக்கிறது. சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் இதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு விட்டது.கீர்த்தன ரஞ்சிதம் வழங்கிய முகமது அப்துல்லா லெப்பை ஆலிம், தஞ்சை ஆபிரஹாம் பண்டிதர், மாயூரம் வே தநாயகம் பிள்ளை போன்ற இந்து அல்லாதவர் களும் முன்னோடிகளாக பங்களிப்பை கொண்டிருக்கின்றனர். பின்னாளில் இசை வேளாளர்களும், தேவதாசி பாரம்பரியத்தைச் சார்ந்தவர்களும், திருவிதாங்கூர் மன்னரும், இதர ஜமீன்தார்களும் கர்நாடக இசையையும் பின்னாளில் பரதம் என்று அழைக்கப்பட்ட சின்ன மேளத்தையும் ஊக்குவித்தார்கள்.

மதுரை சண்முகவடிவு, வீணை தனம்மாள், மதராஸ் லலிதாங்கி, எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.எல்.வசந்தகுமாரி, என்.சி.வசந்தகோகிலம், பிருந்தா, முக்தா, பாலசரஸ்வதி, சொர்ணமுகி, அலர்மேல் வள்ளி, மதுரை சோமு, சௌடய்யா, சீர்காழி கோவிந்தராஜன், சிதம்பரம் ஜெயராமன், டி.வி.கோபாலகிருஷ்ணன், த்வரம் வெங்கடசாமி நாயுடு, சிட்டிபாபு, காஞ்சிபுரம் நைனாப் பிள்ளை, சித்தூர் சுப்ரமண்யப் பிள்ளை, திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, காருகுறிச்சி அருணாசலம், மதுரை சேதுராமன் சகோதரர்கள், ஏ.கே.சி நடராஜன், பழனி சுப்ரமண்ய பிள்ளை, மாவேலிக்கரா வேலுக் குட்டி நாயர், நூக்ல சின்ன சத்ய நாராயணா போன்ற பார்ப்பனரல்லாதோரும் ஏசுதாஸ், ஷேக் சின்ன மௌலானா சாஹிப், ஷேக் மகபூப் சுபானி தம்பதியினர் போன்ற இந்துக்கள் அல்லாதவரும் ஏன் ஜான் ஹிக்கின்ஸ் பாகவதர் போன்ற அந்நியரும்கூட கர்நாடக இசையை மேம்படுத்தியதில் மக்களிடத்தில் கொண்டு செல்வதில் மகத்தான பங்காற்றியவர்கள் என்பதை தமிழ் மக்கள் நன்கறிவர்.

இசை நிகழ்ச்சிகளில் பிற மதக் கடவுளர் பற்றிய பாடல்களை பாடுவது ஒரு ஆரோக்கியமான துவக்கமாகவே அமையும். டி.எம்.கிருஷ்ணா போன்றோரின் இத்தகைய முயற்சி வரவேற்கப்பட வேண்டும். இசையை அனைத்து தரப்பினரிடமும் கொண்டு செல்லும் நடவடிக்கையாகவே இதைக் கொள்ள வேண்டும். அதே தருணத்தில் சமரச உணர்வை, நல்லிணக்கத்தை, மக்கள் ஒற்றுமையை வலி யுறுத்தி கர்நாடக இசை வடிவங்களில் ஏராள மான திரைப்பாடல்களும் தனிப்பாடல்களும் இன்றும் தமிழகத்தில் எங்கும் ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது. இவை மக்களிடையே நம்பிக்கையை, அன்பை விதைத்து வந்திருக்கிறது என்றும் சொல்ல முடியும்.

நூறு வகை பறவை வரும்

கோடி வகை பூ மலரும்......

ஆடையின்றி பிறந்தோம்

ஆசையின்றி பிறந்தோமா......

கடலுக்கு பிரிவுமில்லை

கடவுளில் பேதமில்லை.....

மண்ணிலே விண்ணைக் கண்டு....

எல்லோரும் கொண்டாடுவோம்

அல்லாவின் பேரைச் சொல்லி......

திரைப் பாடல்களை அறியாதோர் இதை ஏதோ ஒரு சித்தரோ, சூஃபி கவிஞரோ எழுதிய பாடலாகத்தான் சொல்லுவர். கண்ணதாசன் அவர்களால் எழுதப்பட்ட இப்பாடலுக்கு இசை வடிவம் கொடுத்ததும், காட்சிப்படுத்தியதும் இஸ்லாமியர் அல்லாதவர்களே. இதே போன்று வாலி அவர்கள் எழுதிய “நீ இல்லாத இடமே இல்லை நீ தானே உலகின் எல்லை” என்ற பாடல் இஸ்லாமியர்களல் மட்டுமல்ல, இசை வடிவில் நாட்டம் கொண்ட மற்றவராலும் விரும்பக் கூடியது.

தமிழ்த் திரைப்படங்களில் அவ்வப்போது இந்து அல்லாத பிற மதக் கடவுள்களைப் போற்றக்கூடிய பாடல்கள் வெளிவந்து கொண் டிருப்பதோடு அவை மக்களிடையே பெருத்த வரவேற்பினையும் பெற்றுள்ளது. இதற்கு ஏராளமான எடுத்துக் காட்டுகளை முன்வைக்க முடியும். எனை ஆளும் மேரி மாதா, சத்திய முத்திரை கட்டளை இட்டது, கருணை மழையே மேரி மாதா, அல்லாவின் கருணையாலே, தேவன் கோயில் மணியோசை, நீலக்கடலின் ஓரத்திலே இப்படி பல பாடல்கள் கர்நாடக இசை வடிவில் அதன் தாக்கத்தில் திரைப்படங்களில் வெளியாகி யுள்ளது. அந்த பாடலின் உருவாக்கம், இசை, காட்சிப்படுத்துவது போன்றவற்றில் அம்மதம் சாராதவர்களே பங்களிப்பை கொண்டிருந்தனர் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. இத்தகைய முயற்சிகள் திரைப்படம், தனிப் பாடல், இசை நிகழ்வுகள் போன்ற பல்வேறு களங்களிலும் தொடருகையில் மக்கள் உணர்வில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. மதவெறிக்கு எதிராக மனிதனை பக்குவப்படுத்துகிறது என்றும் கூற முடியும். எனவேதான் ஆர்.எஸ்.எஸ். பையிலிருந்து வெளிவந்த நரிக்குட்டியான ஆர்.எஸ்.எஸ்., இசைக் கலைஞர்ககளை மதத்துக்கு வெளியே செல்லாதீர்கள் என்று கட்டளையிடுகிறது.

“செல்லாத்தா செல்ல மாரியாத்தா, எங்கள் சிந்தையில் வந்து அருளோடு நில்லாத்தா” என்ற பாடலை தமிழ்நாட்டில் கேளாமல் ஒருவர் இருக்க முடியாது. இன்றைய தினம் தமிழக மெங்கிலும் ஆடி மாதம் என்றில்லாமல், பெண் தெய்வங்களைப் போற்றக்கூடிய வழி பாட்டு இடங்களிலெல்லாம் அன்றாடம் ஒலிக்கும் தமிழ்ப்பாடல் இது. “தென்னமரத் தோப்பினிலே தேங்காயைப் பறிச்சுக்கிட்டு” என்று பக்தி பூர்வமாக பாடுகையில் நமக்கே தென்னந் தோப் பிற்குள் சென்ற உணர்வை ஏற்படுத்தக்கூடிய ஒப்பற்ற குரல்வளம். இப் பாடலை பாடியவர் பாரம்பரிய ரோமன் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்த எல்.ஆர்.ஈஸ்வரி எனும் லூர்து மேரி ராஜேஸ்வரி ஆவார். இவரது அம்மன் பாடல் களை கேட்டு உத்வேகம் பெற்றவர்களின் பட்டி யலில் நாம் மட்டுமல்ல செல்லாத்தாவும், கற்பூர நாயகியும்கூட இருக்கக் கூடும். தமிழ்நாட்டில் மத நம்பிக்கையில் காழ்ப் புணர்ச்சிக்கு இடமே இல்லை என்பதன் வெளிப்பாடுதான் எல்.ஆர்.ஈஸ்வரியின் உருவமும் குரலும்.

ராமநாதன், செல்வகுமார் சாஸ்திரிகள் இன்னும் இத்யாதிகள் போன்ற ஹிட்லரின் சீடர்கள் பரம்பரையில் ஞானம் பெற்ற மூடர்கள் இந்துக் கடவுள்களைப் போற்றி, மாற்று மதத்தவர் பாடிய பாடல்களை என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. வெகுஜன நியதிகளுக்கு, கோட்பாடுகளுக்கு, மக்களின் கருத்தோட்டத்திற்கு எதிராக நின்றவர்கள் குப்பைத் தொட்டியில் வீசி எறியப் பட்டுள்ளதோடு, பதுங்கு குழிகளில் தற்கொலை செய்து கொண்டதுதான் வரலாறு. அதற்காக நாம் நகராமல் இருந்து விடலாகாது. எந்தவொரு ஜனநாயக பண்பாட்டியலையும் வெகு மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சிகளுக்கு நாம் ஆதரவளிப்பதோடு அச்சக்திகளுக்கு துணையாக நிற்பதை நமது ஜனநாயகக் கடமைகளில் ஒன்றாக கருதவேண்டும்.

Pin It