பிப்ரவரி 18, 2023 அன்று கோவை மாநகரக் கழகம் நடத்திய “1929 செங்கல்பட்டு முதல் சுயமரியாதை இயக்க மாநாடும், தமிழ் நாட்டு அரசியலும் கருத்தரங்க”த்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. (சென்ற இதழ்த் தொடர்ச்சி)
திருப்பூரில் 1922ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநாடு நடைபெறுகிறது, பெரியார் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருகிறார். “எல்லோருக்கும் கோயில் நுழைவு உரிமை வேண்டும் நாடார் உள்ளிட்ட அனைவருக்கும்” என்கிறார். அப்போது நாடாரும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்த காலம், பெரியார் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தின் போது அருப்புக்கோட்டையில் நாடார் வாலிபர் சங்கம் வரவேற்பு கொடுக்கிறது. அய்யா எங்களையெல்லாம் கோவிலுக்குள் விடமாட்டேன் என்கிறார்கள், நீங்கள் தான் எதையாவது செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள். பெரியார் சொல்கிறார் நியாயமான கோரிக்கை ஆனால் நீங்கள் பணம் சம்பாதிப்பதில் மட்டும் குறியாக இருந்து கொண்டு உரிமை வந்துவிட வேண்டும் என்பதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது. நீயும் வா எல்லோரும் சேர்ந்து போராடலாம் நான் இப்பொழுதே ஆரம்பிக்கிறேன் என்கிறார்.
அடுத்த ஒரு வாரம் கழித்து தான் திருப்பூர் காங்கிரஸ் மாநாடு. அந்த மாநாட்டில் கோயில் நுழைவுக்காக தீர்மானம் கொண்டு வருகிறார், ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். ஏற்றுக் கொள்ள மறுத்துவர் யாரென்றால் மதுரை வைத்தியநாத அய்யர். அவர்தான் முதன்முதலில் கோயில் நுழைவுப் போராட்டத்தை நடத்தியவராம், அவர்தான் திருப்பூரில் எதிர்த்துப் பேசுகிறார். உனக்கு மனு சாஸ்திரம் என்ன சொல்கிறதென்று தெரியுமா? புராணம் தெரியுமா? இராமா யணம் தெரியுமா? சம்பூகனுக்கு தண்டனைக் கொடுத்தது தெரியுமா? என்றெல்லாம் பேசுகிறார்.
பெரியார் சொல்கிறார் எனக்கு அதெல்லாம் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அது அப்படித்தான் சொல்கிறது என்றால் மனு சாஸ்திரத்தையும் இராமாயணத்தையும் எரிக்க வேண்டும். அதை ஏன் வைத்துக் கொண்டிருக்கிறாய், நீ உரிமையை கொடு. மனு சாஸ்திரம், இராமாயணம் பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை என்று பேசுகிறார். இதை 1922ஆம் ஆண்டு சொல்கிறார். அப்பொழுது அவர் சுயமரியாதை இயக்கத்தை எல்லாம் ஆரம்பிக்கவில்லை. காங்கிரஸ்காரராக இருந்து கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து கொண்டு பேசியவர் பெரியார்.
அதற்குப் பின்னாலும் பெரியார் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாநாடு அப்பொழுது அவர் பொதுச் செயலாளராக இருந்தார். அவர் தலைமையில் மாநாடு நடக்கிறது. அந்த மாநாடு காரைக்குடி பள்ளத்தூரில் நடைபெறுகிறது. அந்த மாநாட்டில், அவர் தீண்டாமையைப் பற்றி பேசுகிறார். நீங்கள் ஏன் அந்த மக்களை தள்ளி வைக்கிறீர்கள், அவர்கள் குளிப்பதில்லை என்று சொல் கிறீர்கள், அழுக்குத் துணி போட்டுருக்கிறான் என்று சொல்கிறீர்கள், நாடார்கள் ‘கள்ளு’ இறக்குகிறார்கள், அவன் குடிக்கிறான் சரி, அப்புறம் மாட்டுக் கறி தின்கிறான் என்று சொல் கிறார்கள். பிறகு பெரியார் சொல் கிறார், “உங்களி டம் கேட்பதற்கு சில கேள்விகள் உள்ளன. நீ குடிக்கவே நீர் எடுக்க குளத்தில் அனுமதி மறுக்கிற உனக்கு அவன் அழுக்காக இருக்கிறான் என்பதைச் சொல்வதற்கு யோக்கியதை இருக்கிறதா?” என்று கேட்கிறார். இது காங்கிரஸ் மாநாட்டில் பெரியார் பேசியது. நீ அனுமதி கொடு அதற்குப் பிறகு அழுக்குத் துணியோடு குளிக்காமல் இருந்தால் அதைப் பற்றி பேசலாம். கள்ளு இறக்குகிறான், கள்ளு குடிக்கிறான். கள்ளுக்கு மரம் விடுபவன் பெரிய ஜாதி, கள்ளுக்கடையை ஏலம் எடுக்கிறவன் பெரிய ஜாதி, கள்ளுக்கடையை நடத்துகிற அரசு பெரிய அரசாங்கம், இறக்குபவன் மட்டும் சின்ன ஜாதி, குடிக்கிறவன் சின்ன ஜாதியா என்று கேட்கிறார். அதே நேரத்தில் சீமைச் சாராயம் குடிப்பவனாக இருந்தாலும் கையைக் கட்டிக் கொண்டு துரை துரை என்று பின்னாலே சுற்றிக் கொண்டு நிற்கிறாய்.
அடுத்து மாட்டுக்கறி சாப்பிடுவதைப் பற்றி சொல்கிறார். நீ எதைச் சாப்பிடுகிறாய்? கோழி சாப்பிடுகிறேன். கோழி என்னென்ன சாப்பிடுகிறது? மலத்தை, அழுகியதை, புழுவை, புழுத்ததை சாப்பிடுகிற கோழியை சாப்பிடுகிற நீ பெரிய ஜாதி. தவிடு, புண்ணாக்கு, புல் இதைச் சாப்பிடுகிற மாட்டை சாப்பிடுபவன் சின்ன ஜாதியா? எங்கே இதெல்லாம் கற்றுக் கொண்டீர்கள் என்று கேட்கிறார். அந்தக் கூட்டத்தில் தான் மனு சாஸ்திரம் பற்றியும் பேசுகிறார். மனுசாஸ்திரத்தில் உங்களையெல்லாம் என்ன சொல்லி இருக்கிறது என்று தெரியுமா? ஸ்லோகங்களை எல்லாம் குறிப்பிட்டு உங்களை சூத்திரன் என்று சொல்லுகிறது, சூத்திரன் என்றால் விபச்சாரி என்றும் வைப்பாட்டி மகன் என்றும் பொருள். இந்தப் பட்டம் உங்களுக்கு பரவாயில்லையா என்று கேட்கிறார். எல்லோரும் சேர்ந்து வாருங்கள் ஒழிப்போம் என்று கேட்கிறார். இது காங்கிரஸ்காரராக இருந்த போது பேசியது என்பதை கவனிக்க வேண்டும். 1919ஆம் ஆண்டு முதலே வகுப்புவாரி உரிமைப் பற்றி பெரியார் பேசி வருகிறார்.
1919ஆம் ஆண்டே திருச்சி மாநாட்டில் தீர்மானம் கொண்டு வருகிறார். “அந்தந்த மக்களுக்கு அந்த மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கல்வியில் உத்தியோகத்தில் சம உரிமை வழங்க வேண்டும்” என்று தீர்மானம் கொண்டு வருகிறார். அதைத் தாமதப்படுத்திக் கொண்டே வருகிறார்கள். 1925இல் பெரியார் காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டிலிருந்து வெளியே வருகிறார். 1925ஆம் ஆண்டு மிகவும் கோபத்துடன் இருக்கிறார். பெரியார் கொண்டு வந்த வகுப்புவாரி தீர்மானத்தை விவாதத்துக்கே எடுத்துக் கொள்ளவில்லை. அதுதான் சிக்கல். விவாதித்து வாக்கெடுப்பு நடத்தி தோற்கடித்து இருந்தால் அதற்கு அவர் வருத்தப்பட்டிருக்க மாட்டார். மொத்தம் 30 பேரிடம் கையெழுத்து வாங்கினால் தான் தீர்மானத்தை எடுத்துக் கொள்ள முடியும் என்றார்கள். அவர் அதிகமாகவே வாங்கிக் கொடுக்கிறார். ஆனாலும் அதை எடுத்துக் கொள்ளவில்லை. இது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் என்றார்கள். எது வகுப்புவாரி உரிமை கேட்பது. காந்தி சொன்னாரல்லவா இரட்டை வாக்குரிமை கொடுத்தால் இந்துக்கள் பிரிந்து விடுவார்கள் என்று, அதைப் போன்று இதையும் தள்ளுபடி செய்தார்கள். உடனே கோபத்துடன் வெளியே வருகிறார்.
பார்ப்பனர்களின் கூடாரம் ஆகிவிட்டது காங்கிரஸ் என்று சொல்லிவிட்டு வெளியே வருகிறார். வந்து அடுத்த ஆண்டு ஒரு மாநாடு நடத்துகிறார். பார்ப்பனரல்லாதார் மாநாடு என்று ஒரு மாநாட்டைக் கூட்டுகிறார். அதற்கு முன்பு பார்ப்பனரல்லாத மாநாட்டை நீதிக்கட்சிக்காரர்கள் நடத்திக் கொண் டிருந்தார்கள். பார்ப்பனரல்லாத இயக்கம். அரசியல் கட்சியாக நடந்து கொண்டிருந்தது. பெரியார் என்ன செய்கிறார்? காங்கிரஸ், நீதிக்கட்சிகளில் உள்ள பார்ப்பன ரல்லாதாரை இணைத்து அதை நடத்துகிறார்.
யார் பார்ப்பனரல்லாதார் என்பதற்கு பெரியார் சொல்கிறார். நமது எதிரிகளான காங்கிரஸ் தேசத்தின் பெயரையும், காங்கிரஸ் பெயரையும், சுயராஜ்யம், உரிமை என்பதை வைத்துக் கொண்டு பாமர ஜனங்களை ஏமாற்றி உத்தியோகம் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அந்த மாநாட்டில் என்ன செய்ய வேண்டும். மாநாடு நடைபெறுவதற்கு முன்பு பார்ப்பனரல்லாத தலைவர்களுக்கு ஒரு விண்ணப்பம் என்ற தலைப்பில் பெரியார் எழுதுகிறார். தீண்டாமை விஷயத்தில் வெளிப்படையாய் சொல்லிவிட வேண்டும். அதாவது மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை என்று ஒப்புக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு விஷயத்திலும் ஆட்சேபனை உள்ளவர்கள் சுதந்திரத்திற்கும் சுயமரியாதைக்கும் விரோதிகள் என்று சொல்லுவோம். பிறகு பார்ப்பனரல்லாதார் என்றால் என்ன அர்த்தம் என்பதை சொல்கிறார். பார்ப்பனரல்லாத மக்கள் என்றால் 100-க்கு 90 விழுக்காடு உள்ள பாமர ஏழை மக்களை குறிக்குமே அல்லாமல் நூற்றுக்கு ஐந்து பேர் கூட இல்லாத ராஜாக்களையும் வக்கீல்களையும் ஜமீன் களையும் மாத்திரம் குறிக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். பார்ப்பனரல்லாதார் முன்னேற்றம் என்பது நூற்றுக்கு 90 பேரின் முன்னேற்றத்தையும் சேர்த்து குறிக்குமே அல்லாமல் நூற்றுக்கு ஐந்து பேரின் முன்னேற்றத்தை மாத்திரம் குறிக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
காங்கிரஸை விட்டு வெளியே வந்து விட்டார். காங்கிரசில் இருப்பவர்களை அழைத்து மாநாடு நடத்துகிறார். தற்போது நிதி அமைச்சராக இருக்கக் கூடிய பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களுடைய தாத்தா என்.டி சுப்பிரமணியன் முதலியார் இந்த மாநாட்டில் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்து நடத்துகிறார். மதுரையில் நடக்கிறது அதில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருகிறார். “மக்கள் வாழ்வில் உயர்வு தாழ்வு இல்லை என்றும் சமூக வாழ்வில் எல்லோரையும் சமமாய் பார்க்க வேண்டும்” என்றும் இந்த மாநாடு தீர்மானிக்கிறது என்று ஒரு தீர்மானம்.
தீண்டாமை எனும் கொடிய வழக்கமானது மனிதருக்கு மனிதர் பிரித்து வைப்பதையும், நிரந்தரமாய் ஒற்றுமை இல்லாமல் செய்யவும் மனிதனின் பிறப்புரிமையான சுயமரியாதையை கெடுப்பதுமாய் இருப்பதால் அதை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று இந்த மாநாடு வற்புறுத்துகிறது. சடங்கு என்று ஒரு தீர்மானம் பார்ப்பனரல்லாத இந்துக்களென்போர் தங்களது மத சம்பந்தமான சுப சடங்குகளுக்கு தங்களை விட பிறவியில் உயர்ந்தவர் என்ற எண்ணத்தில் வேறு வகுப்பாரை வைத்து செய்து கொள்வதில் நாமே நம்மை தாழ்ந்த வகுப்பாராக ஒப்புக் கொள்ளவதாக இருப்பதால் அவ்வித மனப்பான்மை நம்முடைய சுயமரியாதையை அழிப்பதற்கு ஆதாரமாய் இருப்பதாலும் இந்த வழக்கத்தை அடியோடு அழிக்க வேண்டும் என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது. இன்னொன்று முக்கியமான தீர்மானம் கோயில் நுழைவைப் பற்றியதாகும். வைக்கத்தில் நடத்திய போராட்டம் பற்றி சொன்னோம். இந்துக் கோயில்களில் இந்துக்கள் என்று சொல்லப்படுகிற எல்லா வகுப்பாருக்கும் பிரவேசத்திலும், பூஜையிலும், தொழுகையிலும் உரிமை உண்டு என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது. இதன் பொருள் என்னவென்றால் கோயில் நுழைவு உரிமை மட்டுமின்றி பூஜை செய்யும் உரிமையும் நமக்கு வேண்டும். அர்ச்சகராகும் உரிமை வேண்டும். இந்துக்கள் என்று சொல்லப்படுகிற எல்லோருக்கும் இந்த உரிமை வேண்டும், அதென்ன ஒரு பிரிவுக்கு மட்டும் உரிமை என்று கேட்டார். அங்கு தொடங்கியது தான் அர்ச்சகர் உரிமைக் குரல். கடைசி வரைக்கும் பெரியார் பேசிக் கொண்டே வந்தார்.
அவர் காங்கிரஸை விட்டு வெளியே வந்த பிறகு போட்ட தீர்மானத்தைத்தான் இறுதிவரை அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று தொடர்ந்து பேசி வந்தார். அதற்கு முன்பே சென்னை சட்டசபையில் இரண்டு முறை நிறைவேறிய இந்துமத பரிபாலன மசோதாவை இந்த மாநாடு முழு மனதோடு ஆதரித்து வரவேற்பதோடு வைசிராய் பிரபு இந்த மசோதாவிற்கு சட்டப்படி சம்மதம் கொடுக்க வேண்டும் என்று வைசிராய் பிரபுக்கு தெரிவித்துக் கொள்கிறது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1920ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சிக்கு வருகிறது. 1923ஆம் ஆண்டு சட்டம் கொண்டு வருகிறார்கள். சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுகிறது ஆனால் ஒப்புதல் வழங்கவில்லை. அவர்களிடம் போய் பார்ப்பனர்கள் சொல்கிறார்கள் மூன்று வருடம் ஆகிவிட்டது அடுத்த முறையும் நீங்கள் தேர்ந்தெடுக்கப்படுவீர்களா என்று தெரியாது. இந்த கருத்துக்கு மக்களிடம் ஆதரவு இருப்பதாக தெரிந்தால் நாங்கள் செய்ய தயாராக இருக்கிறோம் என்று கூறுகிறார் வைசிராய். அடுத்த முறை ஒரு தேர்தல் வருகிறது. மீண்டும் ஒருமுறை தீர்மானத்தை நிறைவேற்றி சீக்கிரம் கையெழுத்துப் போட வேண்டும் என்று கூறி அனுப்புகிறார்கள். இது சுயமரியாதை இயக்க மாநாட்டில் அல்ல எல்லா கட்சிகளும் சேருகிற மாநாட்டில். இதன் தொடர்ச்சியாக தான் சுயமரியாதை இயக்க மாநாட்டை நான் பார்க்கிறேன்.
1925ஆம் ஆண்டு காங்கிரஸ் விட்டு வெளியே வந்த பிறகு சொன்னேன். அந்த மாநாட்டுக்கு முன்பாகவே தமிழர் மாநாடு என்று ஒன்றை நடத்த வேண்டும் என்று கூறுகிறார் பெரியார் பார்வையில் பார்ப்பனர்கள் தமிழரல்ல. தமிழ் பேசினாலும் அவர்கள் தமிழரல்ல. “தமிழ்நாட்டு பிராமணரல்லாதோர் கரிசனத்தில் அக்கறையுள்ள தமிழ்நாட்டு பார்ப்பனரல்லாதோர் எல்லோரும் இந்த மாநாட்டிற்கு வந்திருந்து தங்களது முன்னேற்றத்திற்கான ஒரு திட்டத்தைக் காணவும். அதை சரிவர அமலுக்குக் கொண்டுவர வேண்டுமாய் கேட்டுக் கொள் கிறேன்” என்று எழுதினார். இது விஷயத்தில் தங்களது ராஜ்ஜிய அபிப்பிராய காரணங்களால் சொந்த அசௌகரிய காரியங்களால் அலட்சியமாக இருந்து விடாமல் கண்டிப்பாய் வரவேண்டும் என்று மறுபடியும் வினயத்துடன் கேட்டுக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டு அடுத்து சொல்கிறார் “தீண்டாமையை ஒழிக்க வேண்டியது பிராமணரல்லாதாரின் முக்கியமான ஒரு கடனாகும். ஏனெனில் தீண்டாதாரின் முன்னேற்றம் தான் பிராமணரல்லாதாரின் முன்னேற்ற மாகும். தீண்டாதாரல்லாதரின் துன்பம் தான் பிராமணரல்லாதாரின் துன்பமாகும். தீண்டாமை ஒழிவதன் மூலமாகத்தான் பிராமணரல்லா தார் கடைத்தேற முடியும். தீண்டாமை ஒழிவதன் மூலமாகத்தான் நாடு சுயராஜ்யம் அடையும். ஆதலால் தீண்டாமை விலக்கில் கவலையுள்ள வர்களும், தீண்டாதார் எனப்படுபவர்களும் அவசியம் காஞ்சிபுரம் வந்து அதற்கென ஒரு மாநாட்டைக் கூட்டி காரியத்தில் பலன் தரத்தக்க திட்டத்தைக் காண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”. அதை ஒட்டி தான் இந்த சுயமரியாதை இயக்க மாநாடு அதன் தீர்மானங்களை நாம் பார்க்க வேண்டும் என்பதை முன்னுரையாக சொல்கிறேன்.
(தொடரும்)
- கொளத்தூர் மணி