நாம் மாறுதலுக்குக் கட்டுப்பட்டவர்களும், ஆசைப்பட்டவர்களும் ஆவோம். ஆதலால், அந்த மாறுதலேதான் - அதுவும் அறிவு, ஆராய்ச்சி ஆகிய காரணங்களைக் கொண்டு இந்தத் திருமண முறையில் காணப்படுகிற மாறுதல்கள் ஏற்பட்டவைகளாகும்.

பகுத்தறிவு என்று சொல்வதும் மாறி மாறி வருவதாகும். இன்று நாம் எவை எவைகளை அறிவுக்குப் பொருத்தமானவை என்று எண்ணுகிறோமோ அவை நாளைக்கு மூடப் பழக்க வழக்கங்கள் எனத் தள்ளப்படலாம். நாம்கூட பல பொருள்களை, ஏன் - மகான்கள் என்று புகழப்படுபவர்கள் சொன்னவற்றையே ஒதுக்கிவிடுவோம். அது போலத்தான், நமது பின்னோர்கள் என்னைக் குறித்துக்கூட, ஒரு காலத்தில், ‘இராமசாமி என்ற மூடக் கொள்கைக்காரன் இருந்தான்’ என்று கூறலாம். அது இயற்கை; மாற்றத்தின் அறிகுறி; காலத்தின் சின்னம். பழைய காலத்தைச் சேர்ந்தவை என்பதற்காக நாம் குறை கூறவில்லை. அவர்கள் காலத்திற்கு அவர்கள் செய்தது சரி என்பதானாலும், அப்பொழுது அவ்வளவுதான் முடிந்தது என்பதானாலும் இன்று மாறித்தான் ஆகவேண்டும். சிக்கிமுக்கிக் கல்லால் முதலில் நெருப்பை உண்டாக்கியவன் அந்தக் காலத்து ‘எடிசன்’. அப்புறம் படிப்படியாக முன்னேற்றமாகி இப்பொழுது மின்சாரத்தில் நெருப்பைக் காண்கிறோம்! எனவே, மாற்றம் இயற்கையானது. அதைத் தடுக்க யாராலும் முடியாது. எத்தகைய வைதிகமும் மாற்றத்திற்குள்ளாகித்தான் தீரவேண்டும். இப்பொழுது நாம் எவ்வளவு மாறி இருக்கிறோம்? 50 வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட கடவுளைப்பற்றிய எண்ணம் - வீடு, வாசல், உடை, உணவு, தெருக்கள், வண்டி, குடுமி வைத்தல் ஆகிய எண்ணங்களில், பொருள்களில் பெரிய மாற்றத்தைக் காண்கிறோம். பெண்களின் புடவை, இரவிக்கை, நகைகள், புருஷன் - பெண்சாதி முறை ஆகியவற்றில் ஏற்பட்ட மாறுதல்களைப் பாருங்கள்! அடுத்தபடியாக பொருள் செலவும் அதிகமில்லை; நேரமும் பாழாவதில்லை!

மனிதனுடைய அறிவுப் பெருக்கமும் அனுபவ முயற்சியும் இந்த அதிசயங்களுக்குக் காரணம் என்றும், அதனாலேயே அக்கால மனிதர்களைவிட இக்கால மனிதர்கள் அறிவு, அனுபவம் பெற்றவர்கள் என்றும் சொல்ல வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் உள்ள இந்தக் காலத்தில் நாம் மற்ற காரியங்களில் ஏற்பட்ட அறிவுத் திறனையும், அதிசய சக்திகளையும் அனுபவித்துக் கொண்டு, இந்தக் கேடுகெட்ட - மானம் கெட்ட இழிநிலைக்குக் காரணமான அர்த்தமற்ற, சூழ்ச்சிகரமான, காட்டுமிராண்டிக் காலத்தில் ஏற்பட்ட மதம், கடவுள்கள், சாத்திரம், சடங்கு, சாதி, மதக்குறி, உயர்வு - தாழ்வு பேதம், அறிவுக்குப் பொருந்தாத அர்த்தமற்ற கொள்கைகள் ஆகியவற்றைக் கடைப்பிடித்துக் கொண்டு ஈன வாழ்வு வாழ்வது, எப்படி அறிவுடையவர் ஒப்புக் கொள்ளக்கூடிய காரியமாகும்?

அறிவுதான் கடவுள் என்பான் பண்டிதன். ஆனால், அவன் கற்பிக்கிற - வணங்குகிற கடவுள், உலகில் உள்ள எல்லா அயோக்கியத்தனங்களும் கொண்டதாக இருக்கும். அழகுதான் கடவுள் என்பான். ஆனால், அவலட்சணமான தோற்றங்கள் எல்லாம் அவன் கற்பித்துள்ள கடவுள்களில் பிரதிபலிக்கும். உயர்ந்த மக்கட்கு வழிகாட்டும் நல்ல நடத்தைகளும் உபதேசங்களும் நிறைந்தனவே புராணங்கள், சாத்திரங்கள் என்று கூறுவான். ஆனால், அவைகளில் கூடா ஒழுக்கங்களும் இழி தன்மைகளும் ஏராளமாக இருக்கும். அவைகளுக்குக் காரணம், அவைகள் ஏற்பட்ட காலத்தைச் சிந்திக்காமல் - ஏற்படுத்தியவர்களின் தன்மைகளை அறியாமல், தங்களின் பெருமைகளைக் காட்டிக் கொள்ளவும், தங்கள் பிழைப்புக்கு வழி தேடவும் அவைகளைப் பயன்படுத்த வேண்டியதாகி விட்டதால் அவர்களின் நிலைமை பரிதவிக்கத் தக்கதாகி விட்டது.

பகுத்தறிவுக்குத் தடைகள்

பகுத்தறிவு என்பது மனிதனுக்கு ஜீவநாடி உயிர்நாடி ஆகும். ஜீவராசிகளில் மனிதனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. இதில் மனிதன் எவ்வளவுக் கெவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு காட்டுமிராண்டி என்பது பொருள்.

பகுத்தறிவு பெறும்படியான சாதனம் நமக்கு நீண்டநாட்களாகவே தடைப் படுத்தப்பட்டு வந்துள்ளது. நம்மை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய பார்ப்பனர்கள் நாம் பகுத்தறிவு அடைய முடியாமல் தடை செய்துகொண்டு வந்தார்கள். மக்களிடையே பகுத்தறிவைத் தடைப்படுத்த கடவுள், மதம், சாஸ்திரம் முதலியவைகளைப் புகுத்தி, அவைகளை மக்கள் நம்பும்படி செய்து விட்டார்கள். கடவுள் என்றால் ஒத்துக் கொள்ள வேண்டும். எங்கே? ஏன்? எப்படி? என்று கேட்கக்கூடாது என்று கூறிவிட்டார்கள். இதைப்போலவே மதத்திற்கும் - என்ன? எப்படி? என்று சிந்திக்கக் கூடாது என்று கூறி விட்டார்கள். இதைப் போலத்தான் சாஸ்திரமும்.

இதில் நாம் பகுத்தறிவு என்றால் என்ன என்பதற்கு விளக்கம் காண்கிறோம். பகுத்தறிவு என்பது ஆதாரத்தைக் கொண்டு தெளிவடைவது; மூடநம்பிக்கை என்பது ஆராயாமல் ஏற்றுக்கொள்வது என்பது பொருள். நமது இழிநிலை, நமது முட்டாள்தனம் மாற வேண்டுமானால் நாம் ஒன்றும் பெரிய கஷ்டப்பட்டு முயற்சி செய்ய வேண்டியதில்லை. பகுத்தறிவு கொண்டு தாராளமாகச் சிந்தித்தால் போதும்.

நமது கொள்கை பகுத்தறிவு; பகுத்தறிவு என்றால் நாத்திகம் என்பது பொருள். அறிவுகொண்டு சிந்திப்பதுதான் நாத்திகம் ஆகும். கடவுள் மனதுக்கும், வாக்குக்கும் எட்டாதது என்று கூறப்பட்டாலும் அதுதான் உலகத்தை உண்டாக்கி நம்மை எல்லாம் நடத்துகின்றது; எல்லாவிதமான சர்வசக்திகளும் உடையது என்று கூறப்படுகிறது.

அப்படிப்பட்ட கடவுள் நம்மைத் தவிர்த்து மற்ற உலகுக்கு ஒன்றுதான். ஆனால் நமக்குத்தான் ஆயிரக்கணக்கில் கடவுள்கள்!

நம்மைத் தவிர்த்த மற்ற உலகிற்கு - கடவுளுக்கு உருவம் இல்லை; நமது கடவுள்களுக்கோ பல்லாயிரக்கணக்கான உருவங்கள். மற்ற நாட்டுக் கடவுள்களுக்கு ஒன்றும் வேண்டியதில்லை; நமது நாட்டுக் கடவுள்களுக்கோ மனிதனுக்கு வேண்டியது எல்லாமுமே வேண்டும். மற்ற நாட்டுக்காரர்கள் கடவுள் - யோக்கியம், நாணயம், ஒழுக்கம் உடையது என்று உண்டாக்கி இருக்கிறார்கள். நமது நாட்டுக் கடவுள்களுக்கோ இந்த ஒழுக்கம், நாணயம் எதுவும் கிடையாது. மனிதனில் கீழ்த்தரமானவனுக்கு என்னென்ன குணங்கள் இருக்குமோ அவைகள் அத்தனையும் கடவுளுக்கு ஏற்றிவிட்டிருக்கிறார்கள். இப்படி ஏராளமான பேதங்களையும் நடப்புக்கு ஒவ்வாத காரியங்களையும், காரியத்திற்குக் கேடான குணங்களையும் கடவுளுக்குக் கற்பித்திருக்கிறார்கள்.

இவைகளை எல்லாம் நம்புவதுதான் மூடநம்பிக்கை, நல்லவண்ணம் சிந்தித்து ஆராய்ந்து, ஏற்கவேண்டியதை ஏற்றுக்கொண்டு, மற்றதைத் தள்ளிவிடுவதுதான் பகுத்தறிவு. நாம் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்த்தால், பகுத்தறிவுக்கு ஏற்ற கடவுள் இருக்கிறதா என்று சிந்தித்துப் பார்த்தால், இல்லவே இல்லை; உண்மையில் ஒரு கடவுள் இருக்குமானால் நமக்குத் தெரியாமல் இருக்க வேண்டிய அவசியம் என்ன? அந்தக் கடவுள் தாம் இருப்பதாக நமக்காவது ஏன் தெரியப்படுத்தக்கூடாது?

ஆகவே, மக்கள் இவற்றை எல்லாம் அறிவுகொண்டு சிந்தித்தல் வேண்டும். அறிவு கொண்டு சிந்திப்பதுதான் பகுத்தறிவு. பகுத்தறிவுக்குத் தடையாக இருப்பதும், சிந்திக்க வொட்டாத நிலையை ஏற்படுத்தி வைப்பதும் கடவுள் பற்றிய மூடநம்பிக்கைதான் என்பதையும் இவற்றிற்கெல்லாம் முன்னோடிகளான பார்ப்பனர்களின் சதியையும் மக்கள் உணரவேண்டும்; சிந்திக்க வேண்டும்.

சிந்தனைதான் அறிவை வளர்க்கும்; அறிவுதான் மனித வாழ்வை உயர்த்தும்.

(‘விடுதலை’ தலையங்கம் 20-6-1973)

Pin It