periiyarr 450‘தமிழ்நாடு பெரியார் மண்’ என்ற குரல் ஒலிக்கும் போதெல்லாம் - ‘இல்லை; இது ஆழ்வார்கள், நாயன்மார்கள் பூமி’ என்று எதிர்க்குரல், இந்து முன்னணிகளிடமிருந்து கேட்கிறது. ஆழ்வார்களும் நாயன்மார்களும் மனிதகுல விடுதலைக்கு என்ன செய்தார்கள்? என்ற கேள்வியை எழுப்புகிறது, கட்டுரை.

தொலைக்காட்சி ஒன்றில் அனல் தெறிக்க அறிஞர்களின் விவாதம் அரங்கேறிக் கொண்டிருந்தது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைப் பற்றிப் பேசும்போது ஒருவர், ‘இது பெரியார் மண்; எனவே மதவாதக் கட்சிகளுக்கு இடமில்லை என்று  மக்கள் தீர்ப்பளித்துள்ளார்கள்’ என்றார். உடனே மதவாத கட்சியை ஆதரிக்கும் நண்பர் வெகுண்டெழுந்தார். ‘இது பெரியார் மண் அல்ல; இது ஆழ்வார்களும் நாயன்மார்களும் ஆண்டாளும் தோன்றிய மண்’ என்று உரக்கக் குரல் கொடுத்தார். இருவர் சொல்வதிலும் உண்மை இருக்கிறதே எனத் தோன்றுகிறது அல்லவா? எப்பொருள் எத்தன்மை உடையதாக இருந்தாலும், யார்யார்வாய்க் கேட்பினும், ஆய்ந்து முடிவெடுப்பதே சிறந்தது.

இது பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சமனியம் பேசிய  திருவள்ளுவர் தோன்றிய மண்; காதலையும் வீரத்தையும் கொண்டாடிய தமிழினத்தின் பண்பு நலன்களையும் நாகரீகத்தையும் பாட்டோவியங்களாக்கிக் கொடுத்த சங்கப் புலவர்கள் வாழ்ந்த மண்; பக்தி யுகத்தில்  தோன்றிய ஆழ்வார்களும் நாயன்மார்களும் பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டத் தமிழால் தத்தமது தெய்வங்களைப் பாடினார்கள்.

‘நாமார்க்கும் குடிஅல்லோம் நமனை அஞ்சோம்; நரகத்தில் இடர்ப்படோம்’ என்று பாடிய திருநாவுக்கரசரை மறக்கமுடியுமா? பிறவாதிருக்க வேண்டும்; அன்றிப் பிறந்தால் உன்னடி மறவாதிருக்க வேண்டும்; வீடுபேறு வேண்டும் என்றெல்லாம் கடவுளிடம் மனுப் போட்டவர்களைப் பார்க்க முடிகிறது. கடவுளுக்கு வான்முட்டும் கோபுரங்களுடன் கோயில்கள் கட்டிய மன்னர்களும் இதே மண்ணில் வாழ்ந்ததை அறியமுடிகிறது.

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கப்  பாடியவர்கள் வாழ்ந்த காலத்தில், தம் வருமானத்தில் ஆறில் ஒரு பங்கு  வரியாகச் செலுத்தி விட்டு, வறுமையின் பிடியில் வாடிய மக்களைப் பற்றி எவரேனும் பாடியதுண்டா? பல்லக்குத் தூக்கச் சிலர்; அதன்மேல் உட்கார்ந்து வருவதோ சாதி வேறுபாடுகள் பாராட்டும் மேட்டுக்குடி மக்கள். இந்தச்  சமூக அவலங்களைச் சாடி ஆழ்வார்கள் நாயன்மார்கள் எங்கேனும் பாடி இருக்கிறார்களா? சித்தர்களின் கலகக் குரல் எழும்வரை எவரும் எளிய மக்களின் துயரங்களைப் பற்றிக் கவலைப்படவில்லை.

பிற மதங்களின் வெறுப்பை உமிழும் பாடல்களைத்தான் காண முடிகிறது. சமண மதத்தையும் சாக்கிய மதத்தையும் அழித்துச் சைவத்தை வளர்க்க முயன்ற கதையைப் பெருமையாகப் பாடி வைத்தார்கள். சமணர்களும் சாக்கியர்களும் பாவங்களையே செய்வார்கள்; நெறியில்லாத சொற்களைக் கூறுவர்; அதை நீவிர் பொருட்ப டுத்தக்கூடாது என்கிறார் திருஞான சம்பந்தர் தன் பாடலில் இப்படி: “அறிவிலாத வன்சமணர்கள் சாக்கியர் தவம்புரிந்து அவம் செய்வார். நெறியிலாதன கூறுவர்; மற்று அவை தேறன்மின்”.

சாதி வேற்றுமைகளைப் பற்றி ஆழ்வார்களும் நாயன்மார்களும் ஏதேனும் கவலைப்பட்டிருந்தார்களா? சித்தர்களின் கலகக் குரல் கேட்கும் வரை பக்தி இலக்கியங்களில் பாமரனைப் பற்றிய குறிப்பே இல்லை. “சாதிபேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையே?” என்று கேள்வி கேட்கிறார் சிவவாக்கியர். “சாதிபேதமில்லை அகப்பேய்,  தானாகி நின்றவர்க்கே” எனக் கூறுகிறார் அகப்பேய்ச் சித்தர்.

மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்; வீடுதோறும் இரந்து வாழும் வெற்றரைக் கண்டு நொந்து அதற்கு வழிகாண வேண்டும்; எல்லாச் சமய ஆறுகளும் சென்று  இறைவன் என்ற ஒரே கடலில்தான் கலக்கின்றன. எனவே மத வேறுபாடுகள் வேண்டாம்; கருணையிலா ஆட்சி கடுகி ஒழியவேண்டும் என்று மானுடத்தைப் பற்றிச் சிந்திக்க ஒருவர் வந்தார். அவர்தான் வள்ளலார்.

அடுத்த காலகட்டத்தில் அயோத்திதாசர், அய்யாவைகுண்டர் போன்றோர் மக்களைப் பற்றிக் கவலைப்பட்டார்கள். சாதி என்னும் சதிவலையில் சிக்கிய சமூகத்தைச் சமன்படுத்த உழைத்தார்கள். சாதி ஆதிக்கத்தைச் சாடவந்த அயோத்திதாசர், “நூறுகுடிகளைக் கெடுத்துத் தங்கள் ஒருகுடி சுகமடையக் கோரும் சாதித் தலைவர்களின் கொடிய செயல்களை அடக்க அறக்கருணையாம் செங்கோல் உதவாது. மறக் கருணையாம் கொடுங்கோல் கிஞ்சித்து இருந்தே தீரல் வேண்டும்” என வெகுண்டு எழுகிறார். (நன்றி - இராஜ் கவுதமன் நூல்: க. அயோத்திதாசர் ஆய்வுகள்).

சாதி அழிந்தால் மதம் அழிந்துவிடும் என்று கவலைப்பட்டார்கள் இந்து மதவாதிகள். “சாதி அடையாளங்கள் வரையறைகள் மூலமே பரதகண்டத்தில் இந்துமதம் பேணிக் காக்கப்பட்டு வந்துள்ளது. சாதியே இதற்கு ஆதாரம். சாதியை விட்டால் இந்துமதம் அழிந்துவிடும்” என்கிறது ‘இந்து தர்ம தத்துவம்’ என்ற நூல். எனவே மனிதனை மனிதன் தாழ்த்தும் பழக்கம் மானுடத்துக்கே கேடு என்பதை உணர்ந்து அதை ஒழிக்க ஈரோட்டிலிருந்து புறப்பட்டது ஒரு சூரியன். அதன் பெயர்தான் பெரியார் .

செல்வவளம் மிக்க குடும்பத்தில் பிறந்தார்; தான் வகித்த கவுரவ நீதிபதி, திருக்கோயில் குழுத் தலைவர் முதலான 29 பதவிகளைத் துறந்து, சமனியத்தை இவ்வுலகில் சமைக்கவென்றே தன் வாழ்நாளில் போராடிப் போராடி மறைந்தவர் பெரியார். அவர் ஓர் இறை மறுப்பாளர் என்று மட்டுமே மதவாதிகள் கருதுகின்றார்கள். அவருடைய பன்முக ஆளுமை நம்மை வியக்க வைக்கின்றது.

பெரியாரின் சிந்தனைகளை நாட்டளவில் கொண்டு  செல்ல வேண்டும். தேசியம் பற்றிப் பெரியார் பாலக்காட்டில் நிகழ்த்திய உரையில் அவருடைய தொலைநோக்குப் பார்வை புலப்படுகிறது.

“........ஒரு தேசத்தின் தேசியம் முக்கியமாக எதைப் பொறுத்திருக்க வேண்டுமென்று பார்ப்போமானால், குறைந்தபட்சம் ஒரு தேச மக்கள் தங்கள் மனத்தையும், மனச்சாட்சியையும் விற்காமலும் விட்டுக் கொடுக்காமலும் வயிறு வளர்க்கும்படியாவது இருக்கவேண்டும். ஈதன்றி, அதற்கு மேற்பட்ட தேசியங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அறிவு வளர்ச்சி வேண்டும். கல்வி வேண்டும். ஆராய்ச்சி வேண்டும். கண்ணியமான தொழில் வேண்டும். சமத்துவம் வேண்டும். ஒற்றுமை வேண்டும். தன் முயற்சி வேண்டும். உண்மை உயர்வு வேண்டும். ஒருவரை ஒருவர் ஏமாற்றிப் பிழைக்காமலிருக்க வேண்டும். சோம்பேறிகள் இருக்கக் கூடாது. அடிமைகள் இருக்கக் கூடாது. தீண்டாதவர்கள் நடக்க முடியாதவர்கள் இருக்கக் கூடாது. இனியும் இது போன்ற எவ்வளவோ காரியங்கள் செய்யப்பட வேண்டும்.” (நன்றி. விஜயன்..நூல்: பெரியாரும் சுயமரியாதை இயக்கமும் ).

‘நான் கூறும் கருத்துகளை அப்படியே ஏற்றுக் கொள்ளாதீர்கள். உங்கள் மனதுக்குச் சரியென்று பட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்று கூறுவார் பெரியார். தன் சொற்பொழிவின் போது முட்டை வீச்சுகளையும் கல்லெறிகளையும் செருப்பு வீச்சுகளையும் புன்னகையோடு எதிர்கொண்டவர் பெரியார். கருத்துரிமைக்குக் காவலனாகத் திகழ்ந்தவர் பெரியார். மாற்றுக் கருத்துடைய திரு.வி.க., இராஜாஜி போன்றோரின் நண்பர்களாகத் திகழ்ந்தவர். பெரும் இலக்கிய அறிஞர்கள் செய்திருக்க வேண்டிய எழுத்துச் சீர்திருத்தத்தைத் தமிழுக்குக் கொண்டுவந்த பேரறிஞர் அல்லவா பெரியார்! அவர் பங்கேற்ற சில மேடைகளில் கடவுள் வாழ்த்து இசைக்கப்பட்ட போது, மேடை நாகரிகம் கருதி எழுந்து நின்றவர் அவர். 94 ஆண்டுகள் வாழ்ந்தவர்; 10700 நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டவர். காந்தி மதுவிலக்குப் போராட்டத்தை அறிவித்தபோது, அடுத்த கணமே தன் தோப்பிலிருந்த 500 தென்னைகளை வெட்டியவர். உடல்நலம் குன்றியபோதும், தன் மூத்திரப் பையைச் சுமந்துகொண்டே இந்த மண்ணும் மக்களும் பயன்பெற வேண்டும் என்று சூறாவளிபோல் சுழன்று, மக்களுக்காகத் தன்னை ஒப்புக் கொடுத்த தலைவனை உலகில் வேறெங்கும் கண்டிருக்கிறோமா?

சொல்லிய வண்ணமே செயல்பாடு என்பதில் உறுதியாக இருந்தார் பெரியார். அவருடைய சுயமரியாதை இயக்கத்தின் குறிக்கோள்கள் உலகளாவிய கவனம் பெற்றவை. ஏற்றத் தாழ்வில்லாத சமுதாயம் அமையப் பாடுபடவேண்டும். எல்லாப் பொருளும் எல்லாருக்கும் சரிசமமாய்க் கிடைக்க வேண்டும். ஆண்பெண் சமத்துவம் வேண்டும்.சாதி, மதம், தேசம், வருணம், கடவுள்... ஒழித்து உலக மனித சமூக ஒற்றுமை ஏற்படவேண்டும். உழைப்பாளி யும் முதலாளியும் சமம். யாருக்கும் யாரும் அடிமையில்லை என்பன உள்ளிட்டவைகளாகும். 

மனச் சாட்சி உள்ளவர்களுக்கு மட்டும்தான் புரியும் இது பண்பட்ட மண்!

நன்றி : ‘தீக்கதிர்-வண்ணக் கதிர்’, ஜூன் 9, 2019

Pin It