"தமிழ் இந்து" என்று பேசிவரும் திரு.பெ.மணியரசன் அண்மையில் ஒரு நேர்காணலில், "பெரியாரும் பெரியாருடையத் தொண்டர்களும் இந்து மதத்தில் தான் இருக்கிறார்கள், மதத்தை ஒழிக்க முடியாது என்று பெரியாரே ஒப்புக்கொண்டு விட்டார், இந்து மதத்தை எதிர்க்கிறோம் என்று பொய்யாகச் சொல்லிவிட்டு பெரியாரியலாளர்கள் இந்து மதத்திலேயே இருக்கும்போது நாங்கள் நேர்மையாக தமிழ் இந்து என்று அடையாளப்படுத்துவதில் என்ன தவறு?" என்று நம்மை நோக்கிக் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதைப் பற்றிய உங்களுடையக் கருத்து.
வாலாசா வல்லவன்: தோழர் பெ. மணியரசன் அவர்களுடையக் காணொளியை நானும் பார்த்தேன். பெரியார் அவர்களின் 95ஆவது பிறந்தநாள் அறிக்கையின் ஒரு பகுதியை மட்டும் எடுத்துவைத்துக் கொண்டு பெரியார் இந்து மதத்தை அழிக்க முடியாது என்று கூறிவிட்டார் ஆகவே நாம் இந்து என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார். பெரியார் சொன்னதை எல்லாம் இவர் ஏற்றுக் கொண்டதைப் போல. பெரியார் சொன்னதற்குத் தவறான விளக்கமும் அளித்துள்ளார்.
நமது இலட்சியம் என்ற தலைப்பில் 17.9.1973 அன்று விடுதலையில் பெரியாரின் பேச்சு இடம் பெற்றுள்ளது. ஆனைமுத்து அய்யா தொகுத்த ‘‘பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகளிலும்’’ அந்த அறிக்கை இடம் பெற்றுள்ளது. மணியரசன் அவர்களின் காணொளியில் இடம் பெற்றச் செய்தி இதுதான். ‘‘இந்தியாவில் நாம் இருக்கும் வரை இந்துவாகத்தானே இருந்து ஆக வேண்டும். இந்து என்றாலே முஸ்லிம், கிறிஸ்தவம் தவிர மற்ற யாவருமே சூத்திரர், தாசிமக்கள் தான் என்று இருப்பதால் ஏதாவது முயற்சி செய்துதான் ஆக வேண்டும். நம் மக்கள் எளிதில் மதம் மாறமாட்டார்கள். மதம் மாறுவதை இழிவாய்க் கருதுபவர்களாவார்கள்.’’
அதன் முன்னும் பின்னும் உள்ள செய்திகளை அவர் மறைத்து விட்டார்.
‘‘இந்திய அரசியல் சட்டத்தில் சமுதாய (மத) சம்பந்தமானக் காரியங்களைப்பற்றி பழைய மனுதர்ம நிலையை மிகமிகப் பலப்படுத்திக்கொண்டபடி இருக்கிறது. உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால், கர்ப்பக் கிரகத்திற்குள் சூத்திரன், அதாவது பண்டாரச் சன்னதி உட்பட இந்து என்ற தலைப்பில் வரும் எவருமே, பார்ப்பான் தவிர்த்து எவருமே செல்ல முடியாதென்று உச்ச நீதி (சுப்ரீம்) மன்றத் தீர்ப்பு இருப்பதினாலும், இன்னும் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கென்று போகும் யாருமே தீண்டத்தகாதவர்கள் போல் வாயில்படிக்கு வெளியில்தான் எட்டி நிற்க வேண்டும் என்றால், மற்றபடி எதில் நாம் மாறுதலைக் காண முடியும்?
இன்று அமுலில் இருக்கும் “இந்து லா’’ என்னும் சட்டத்திலும், பல உயர் நீதி மன்றங்களின் தீர்ப்பிலும், பார்ப்பனரல்லாத இந்து மக்கள் என்பவர்களை மிக மிக இழிவாகக்கூறி நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது.
இந்து என்னும் சொல்லுக்கு சட்டத்தில் கொடுத்திருக்கும் விளக்கம் என்னவென்றால், 'கிறிஸ்தவர்கள்-முஸ்லிம்கள் தவிர்த்த இந்தியாவில் உள்ள மக்கள் அனைவருமே இந்துக்கள் ஆவார்கள்'. இதன்படி நாத்திகன், பகுத்தறிவுவாதி, பரதேசி முதலிய சகலரும் இந்துக்கள் ஆகி சூத்திரர், பார்ப்பானின் தாசி மகன் என்று ஆகிவிடுகிறார்கள்.
நான் முதலில், நான் இந்து அல்ல என்று சொல்லிவிட்டால் இழிவு நீங்கிவிடும் என்றுதான் கருதினேன். பிறகு சட்டங்களைப் பார்க்க ஆரம்பித்த பிறகு கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் தவிர்த்த, இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் இந்துக்கள் - இந்துக்கள் என்றால் சூத்திரர்கள், வேசி மக்கள் என்று பல இடங்களில் காணப்படுகின்றன. ஆதலாலேயே தீவிர முயற்சி எடுக்கவேண்டும் என்று தோன்றுகிறது.
எனவே, நாம் சட்டத்தைப் பற்றிப் பயப்படாமலும், பதவி கிடைக்காதே என்று கவலைப்படாமலும் சுதந்திரத் தமிழ்நாடு பெற ஒவ்வொருவரும் முடிவு செய்து கொண்டு முன் வர வேண்டியது ஒவ்வொரு தமிழனுக்கும் அவசியமான காரியம் என்பதைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.’’ (பிறந்த நாள் விழா மலர் 95-17-9-1973)
சென்னையில், பெரியார் திடலில் 1973 டிசம்பர் 8, 9 தேதிகளில் நடைபெற்ற, ‘தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு'களைப் பெரியார் நடத்தினார். இது அவர் தம் வாழ்நாளில் கடைசி மாநாட்டு நிகழ்ச்சியாக அமைந்துவிட்டது.
ஆக இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என்றால் தனித் தமிழ்நாடு பெற்றே ஆக வேண்டும் என்பதுதான் பெரியார் அவர்களின் இறுதித் தீர்வாகும்.
நேர்கண்டவர்: மா.உதயகுமார்