தனித் தமிழ்நாடு கோரிக்கையை அறிஞர் அண்ணா தலைமையில் இருந்த தி.மு.க கைவிட்ட போது, அதன் கரணியாக அண்ணா சொன்னது: "சீனாக்காரன் இந்துமாக்கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட வருகிறான். அதற்குத் தமிழ்நாட்டை தளமாக்கப் பார்க்கிறான். அப்படி ஆகிவிட்டால் தமிழர்களின் கதி அதோகதியாகிவிடும்; ஆகையால் அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று தி.மு.க தனித் தமிழ்நாட்டுக் கோரிக்கையை கைவிடுகிறது".
தனித்தமிழ் நாடாக்கினால் சீனா காரன் வந்துவிடுவானோ என்று பயந்து சீனாவினும் இந்தியாவே பரவாயில்லை என்று அந்த முடிவெடுத்ததாக நாம் கருதும்படியே தி.மு.கவின் அந்த அறிக்கை இருக்கிறது. அதேபோழ்து, வடக்கே சவகர்லால் நேரு தலைமையிலான பேராய அரசு பிரிவினைவாதம் நாட்டிற்குப் புறம்பு என்ற சட்டம் இயற்றிக் கொண்டிருந்தது. அதுமட்டுமல்ல, நேரு தலைமையில் 1962ல் சீனப்போரில் இந்தியா தோல்வியடைந்து நிலத்தினையும் இழந்திருந்தது. (பேராய காலத்தில்தான் இந்திய நிலம் இந்தியாவை விட்டுப் போனது)
வடக்கே, வடகிழக்கே இந்திய நிலத்தைப் பிடித்துத் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டிய சீனாவுக்கு இந்தியா பயந்து போரில் தோற்றுப் பின்வாங்கியது. இன்றும் அருணாச்சலப் பிரதேசம் எங்களுடையது என்று சீனா மருட்டிக் கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில், வடக்கே நேருவும் பேராயக் கட்சியும் சீனாகாரனுக்குப் பயந்தது போல, தெற்கே அண்ணாவும் தி.மு.கவும் சீனாகாரனுக்குப் பயந்தனர். அண்ணாவின் அறிக்கையும், கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி நூலும் நமக்குக் காட்டுவது இதுதான். இன்றைக்குச் சிங்களம், "தமிழர்களை அழிப்பதற்கு இந்தியாவின் உறவு எமக்குத் தேவை; ஆனால் எமது வாழ்நாள் உறவும் நட்பும் சீனாவோடுதான்" என்று மிக வெளிப்படையாக சொல்லிக் கொண்டிருக்கிறது. பெளத்த மதச் சார்பிலும் இந்திய எதிர்ப்பிலும் இரண்டும் ஒன்றுக்கொன்று இணைந்திருக்கின்றன.
1962/3களில் தி.மு.கவும் அண்ணாவும், பேராயமும் நேருவும் இந்துமாக்கடலில் சீனாவின் ஆதிக்கம் வந்துவிடக் கூடாது என்று இந்திய தேச நலனிற்காக செயல் பட்டனர்கள் என்று சொன்னால், இன்றைக்குச் சிங்களத்தைத் தளமாக வைத்து இந்துமாக்கடலில் ஆதிக்கம் செய்ய சீனா வந்துவிட்ட போது ஏன் தி.மு.கவும், அ.தி.மு.கவும், பேராயமும் தமிழினத்தை அழித்து சிங்களத்தைக் காக்க முனைகின்றனர்?
தமிழீழத்தில் இருக்கும் தமிழர் சிங்களத்தை எதிர்க்கிறார்கள். அப்படியென்றால் சிங்களத்தை ஆதரிக்கும் சீனமும் எதிர்க்கப் படுகிறது. ஆனால், தமிழ்நாட்டின் தி.மு.க கருணாநிதியும் அ.தி.மு.க செயலலிதாவும், பேராய சோனியாவும் சிங்களைத்தையும் அதன் ஆதரவான சீனாவையும் ஆதரிப்பது தேசக் கேடு அல்லவா? இவர்களோடு அணிவகுத்து அ.தி.மு.கவின் செயலலிதா சிங்கள இரத்தின இராம், சோ போன்றவர்களும் சீனாவையும் சிங்களத்தையும் ஆதரிப்பது ஏன்? இந்துமாக்கடலில் சிங்கள-சீனா வல்லாண்மை செய்ய நினைக்கையில் அதற்கு எதிர்ப்பான தமிழரை அழிக்க நினைப்பது ஏன்? நாளைக்குத் தமிழன் ஈழத்தில் அழிக்கப் பட்டுவிட்டால், சீனா பாக்கித்தான் ஆகியவற்றின் முழு ஆதரவில் சிங்களம் செயற்படுவேன் என்கிறது. மிக வெளிப்படையாகவே சிங்களத் தலைவர்கள் சொல்கிறார்கள். அப்படி சீனா பாக்கித்தான் கூடி இந்தியாவிற்கு இடர் செய்தால் அதனால் பாதிக்கப்படப்போவது உடனடியாக இலங்கைக்கு அண்டை நிலமான தமிழ்நாடுதானே?
அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டை ஒரு காசுமீர், ஆப்கான் போன்ற வாதைகளுக்கு உள்ளாக்குவதாகவே சோனியா, கருணாநிதி, செயலலிதா, சீன-சிங்கள இரத்தினங்களின் அரசியல் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. எந்த வெளிநாட்டுச் சக்திகளுக்கும் அடி பணியாமல் போராடும் தமிழர்களால் இந்தியாவுக்கு ஆபத்து வருமா...? அல்லது சிங்களம்-சீனம்-பாக் என்ற பல பகை நாடுகளின் தளமாகிய இலங்கையால் இந்தியாவுக்கு ஆபத்து வருமா...? இந்தக் கூட்டணியில் உள்ள சீனத்தாலும், பாக்கித்தானாலும் ஏற்கனவே பல இடர்கள் இந்திய நாட்டிற்கு இருக்கின்றன.
இது போதாதென்று சிங்களத்தாலும் இந்தியாவிற்குத் தீங்கை வாங்கிக் கொடுத்து அதனால் தமிழ்நாட்டிற்கு பேராபத்துகளை உருவாக்குதல் தேசக்கேடல்லவா? 1962ல் சீனனைக் கண்டு அஞ்சிய தி.மு.க 16 கல் தொலைவில் உள்ள இலங்கையில் சீனனைக் கால் ஊன்றுவது பற்றிக் கவலை கொள்ளாதது ஏன்? 1962ல் சீனனிடம் தோற்ற பேராயம் இன்று சீன ஆதரவு சிங்களத்தை வளர்ப்பது ஏன்? தமிழ்நாட்டு மக்கள் தமிழீழத்தைப் பற்றி சிந்திப்பதினும் தம்மைப் பற்றி சிந்தித்து பேராயம், தி.மு.க, அ.தி.மு.க ஆகியோரின் இந்திய தேசத்துரோக அரசியலைக் கண்டு அவர்களை தமிழக அரசியல் களத்தில் இருந்து முற்று முழுதாக அகற்ற வேண்டும்.
சோனியாவின் இரத்த வெறிக்கும் செயலலிதாவின் இனவெறிக்கும் கருணாநிதியின் தன்னல வெறிக்கும் இந்தியாவும் தமிழ்நாடும் பாதிக்கப் பட்டுவிடக்கூடாது.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
இந்திய தேசத்துக்கு எதிராக கருணாநிதி & சோனியா
- விவரங்கள்
- நாக.இளங்கோவன்
- பிரிவு: கட்டுரைகள்