சமச்சீர்க்கல்வி முறைச் சட்ட மசோதா கடந்த 11.01.2010 அன்று தமிழக சட்டப் பேரவையில் நிறைவேறியது. விமர்சனங்கள், சந்தேகங்கள், மசோதாவில் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்னும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் ஆகியவற்றிற்கு மத்தியில் மசோதா நிறைவேறியிருக்கிறது.

இதுவரை இருந்துவந்த மாநிலக் கல்வி வாரியம், மெட்ரிகுலேசன் கல்வி வாரியம், ஆங்கிலோ இந்தியன் கல்வி வாரியம், ஓரியண்டல் கல்வி வாரியம் ஆகியவற்றை ஒருங் கிணைத்து, பொதுக்கல்வி வாரியம் ஒன்றினைத் தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. எதிர் வரும் கல்வியாண்டிற்கான பொதுப்பாடத்திட்டமும் இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு முதலமைச்சரிடம் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, மாணவர்களைக் கவரும் வகையில் பல வண்ணங்களில் பாடப்புத்தகங்களை அச்சிட்டு வழங்குமாறு முதலமைச்சர் ஆணையிட்டிருக்கிறார்.

சமூக நீதியின் முக்கிய அங்கமான கல்வியில், சமத்துவத்தைக் கொண்டுவருகின்ற அரசின் முயற்சிகளை அனைவரும் பாராட்டினாலும், சில விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. எதிர்க்கட்சிகள், தமிழ் அறிஞர்கள், கல்வியாளர்கள், தனியார் பள்ளி அதிபர்கள் ஆகிய தரப்பினரிடம் இருந்து விமர்சனங்கள் வெளிவருகின்றன.

இதில் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் பெரும்பான்மை அரசியல் சார்ந்ததாக உள்ளன. தமிழ் அறிஞர்களின் குறிப்பிடத் தக்க விமர்சனம், பயிற்றுமொழி குறித்த அரசின் மேலோட்டமான அறிக்கை பற்றியதாக இருக்கிறது. பயிற்று மொழியாகத் தாய்மொழி தமிழே இருக்கவேண்டும் என்பது தமிழறிஞர்களின் கோரிக்கை மட்டுமல்ல தமிழராகப் பிறந்த ஒவ்வொருவரின் விருப்பமும் அதுதான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எனவே சமச்சீர்க் கல்வி முறையில் தமிழ் பயிற்று மொழியாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை அரசிடம் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். அப்போது கண்டிப்பாக அரசு அந்தக் கோரிக்கைக்குச் செவி சாய்த்தே தீரும்.

பொதுப்பள்ளி மற்றும் அருகாமைப் பள்ளித் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு மாநில அளவிலான பொதுவாரியத்தை அமைக்க வேண்டும். தமிழ் மொழிதான் பயிற்று மொழியாக இருக்க வேண்டும ் என்பவை கல்வியாளர்களின் ஆலோசனைகளாகவும், வேண்டுகோள்களாகவும் அரசிடம் முன்வைக்கப்படுகின்றன. நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருப்பதைப் போல அருகாமைப் பள்ளிகளுடன் கூடிய பொதுப்பள்ளி முறை தான் சமூக நீதி விரும்பும் அனைவரின் இலக்கும், நோக்கமும். அதற்கான முதல் படியாகவே தமிழக அரசு இப்போது கொண்டுவந்துள்ள சமச்சீர்க் கல்வி முறையை நாம் பார்க்க வேண்டும். இது முழுமையான சமச்சீர்க் கல்வி முறை இல்லைதான், என்றாலும் முழுமையை நோக்கி அரசைச் செயல்பட வைக்க வேண்டுமேயோழிய எடுத்த எடுப்பிலேயே குறைகளை மட்டுமே சொல்லி, நல்ல தொரு முயற்சியை முடக்கிப் போட்டுவிடக் கூடாது.

தமிழறிஞர்களின், கல்வியாளர்களின், தமிழின உணர்வாளர்களின் விமர்சனங்கள், கருத்துகள், கோரிக்கைகள் ஆரோக்கியமானவைகள் என்று கொள்ளலாம். ஆனால், தனியார் பள்ளி அதிபர்களின் எதிர்ப்புகளும், மேற்பூச்சுகளும் முழுக்க முழுக்க அவர்களின் பொருளாதாரத்தையே மையமாகக் கொண்டுள்ளன. தனியார் பள்ளிகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் வராது என்று அரசு அறிவித்தபிறகும் கல்வி முதலாளிகளுக்குப் பயம் விடவில்லை போலும். அதனால்தான் சமச்சீர்க் கல்வி முறையில் இருந்து தப்பித்துக் கொள்ளும் விதமாக, மெட்ரிகுலேசன் பள்ளிகள் தங்கள் பாடத்திட்டத்தை சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு மாற்றிக் கொள்ளப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன . இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணக் கொள்ளைகளை வரை முறைப்படுத்த ஓய்வு பெற்ற நீதிபதி திரு.கோவிந்தராஜன் தலைமையில் ஒரு குழுவினை அரசு அமைத்துள்ளது. சமச்சீர்க் கல்விக்கான பொதுப்பாடத்திட்டம், அரசின் கல்விக் கட்டண ம ுறைப்படுத்தல் சட்டம் ஆகியவற்றால் மெட்ரிக் பள்ளிகளின் அதிபர்கள் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். அதன் விளைவே சிபிஎஸ்இ பாடத்திட்டத் திட்டத்திற்கு பல்டியடிக்கும் முயற்சி.

இதில் இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுப்பாடத்திட்ட முறை மாணவர்களின் எதிர்காலத்திற்கு உகந்தது இல்லை எனவே சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு உங்கள் பிள்ளைகளை மாற்றிக்கொள்ளுங்கள் என்று பெற்றோர்களிடம் கூறிவருகின்றன சில தனியார் பள்ளிகள். தமிழ்நாட்டிலுள்ள பிள்ளைகளுக்குத் தமிழ்நாடு அரசின் பாடத் திட்டம் உகந்தது இல்லை, மத்திய அரசின் பாடத்திட்டமே உகந்தது என்று கூறும் இவர்களின் மனப்போக்கினை நாம் புரிந்து கொள்ளவில்லை என்றால், நமக்கான சமூக நீதியை நாமே கைநழுவ விடுகிறோம் என்பது தான் உண்மை. மாணவர்களின் நலனில் இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. சமச்சீர்க்கல்வி நடைமுறைக்கு வந்துவிட்டால், அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி இலவசமாக கிடைத்துவிட்டால், தங்களுடைய பள்ளிகளைத் தனித்துக் காட்டி மக்களைக் கவர முடியாமல் போய்விடுமே என்ற கவலை மட்டும் தான் அவர்களுக்கு இருக்கிறது. அரசு இதற்கு வழிவிடாமல் கண்டிப்பாக நடந்து கொள்ள வேண்டும், இல்லையயனில் நீண்ட காலப் போராட்டத்திற்குப் பிறகு கொண்டு வரப்பட்டுள்ள பொதுக்கல்வி வாரியம், பொதுப்பாடத்திட்டம் போன்றவை பயனற்றுப் போய்விடும் என்பது கல்வியாளர்களின் அச்சம்.

கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கிழவனைத் தூக்கி மேடையில் வை என்று ஒரு சொல்வழக்கு உண்டு. அது நம்முடைய இராம.கோபாலனுக்கு நன்றாகவே பொருந்தும். சமச்சீர்க்கல்வியைப் பற்றி இவரும் சிலவற்றைக் கூறியிருக்கிறார். விமர்சனமாக அன்று குற்றச் சாட்டாகவே சொல்லியிருக்கிறார். இந்து மதத்திற்கு எதிரான கருத்துகளைத் திணிக்கவே சமச்சீர்க்கல்வி. இந்து மதத்திற்கு விரோதமான கருத்துக்கள் இந்த பொதுப்பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருக்கின்றன. எனவே அரசு இந்துமத விரோத பாடத்திட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று அறிக்கை விட்டிருக்கிறார் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ள இந்து மதத்திற்கு எதிரான கருத்துகளாகக் அவர் குறிப்பிட்டுள்ளவை இவைதான் :

ஈ.வெ.ரா வின் தாக்கம், மறுமலர்ச்சிப் பாடல்கள், விழிப்புணர்வுப் பாடல்கள், மூட நம்பிக்கை, கட்டுக் கதை, அன்னை தெரசா சேவை, ஆற்றுச் சமவெளி நாகரிகம், நிலமானிய முறை, இஸ்லாமியர் வருகை ...

ஒரு வேளை இவற்றிற்குப் பதிலாக இராமாயனம், மகாபாரதத்தை பாடத் திட்டமாக வைக்கலாம் என்கிறாரா இராம.கோபாலன்

நாடில்லாதவர்களுக்கு எந்த நாட்டின் வரலாறும் விரோதமாகத் தான் இருக்கும். இந்த உண்மையை அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்களோ இல்லையோ நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

- இரா.உமா

Pin It