அறிவுஜீவிகள் எனப் போற்றப்படும் விஞ்ஞானிகளும், அறிவியலாளர்களும் போலி-அறிவியலுக்கு ஆதரவாக இருக்கும் அவலநிலை நம் நாட்டில் எப்போதும் நிலவுகிறது. முட்டாள்தனமான போலி அறிவியல் கூற்றுகளைக் கல்வி வளாகங்களிலும், பொது மக்களிடை யேயும் பரப்புவதற்கும் - நவீன அறிவியல் ஆராய்ச்சி களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் புறந்தள்ளவும் இவர்களைத் தான் அரசாங்கம் பயன்படுத்திக் கொள்கிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் (ISRO) உள்ள விஞ்ஞானிகள் முக்கியமான சோதனை களைச் செய்யும் முன், விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட் போன்ற மாதிரிகளை, திருப்பதி மற்றும் பிற கோவில்களில் காணிக்கையாக வழங்குவதும், டி.ஆர்.டி.ஓ (DRDO) இயக்குனர் புனேயில் உள்ள ஆலந்தி கோயிலுக்கு ரூ .5 கோடி மதிப்பிலான வெள்ளி இரதத்தை வழங்கியதும் நாம் அறிந்ததே!

அறிவியல் ஆய்வுகளுக்கு நிதிக்குறைப்பு

2001 ஆம் ஆண்டில், ஜோதிடப் பட்டப்படிப்பை அறிமுகம் செய்யப் பல்கலைக்கழகங்களை பா.ஜ.க. அரசு ஊக்குவித்தது. வேத ஜோதிடத்தில் UG, PG மற்றும் PhD படிப்புக்காகத் தனித்துறைகளைப் பல பல்கலைக்கழகங்களில் அமைத்தனர். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பிளாஸ்டிக் சர்ஜரியில் இந்தியர்கள் வல்லுநர்களாக இருந்தனர் என விநாயகரை எடுத்துக்காட்டி பிரதமர் மோடி அவர்கள் பேசினார்.

2015-இல் இந்திய அறிவியல் காங்கிரஸ் ((Indian Science Congress) என்ற நிகழ்வில் பழங்காலத்திலேயே இந்தியர்கள் ரதங்களைக் கொண்டு விண்வெளியில் பறந்ததாகவும், அதுவே விமானத்தைக் கண்டுபிடிக்க அடிப்படையாக அமைந்தது என்றும் பல முட்டாள்தனமான கருத்துகளை முன் வைத்தனர். அதே வேளையில், அறிவியல்-தொழில்துறை ஆராய்ச்சிக் கழகத்தின் CSIR) நவீன அறிவியல் ஆய்வுகளுக்கு ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்பட்டது.

மாட்டின் சிறுநீர் ஆய்வுக்கு நிதிஅதிகரிப்பு

இந்த ஆண்டு ஜூலை மாதம், பஞ்சகவ்யத்தின் நலன்களை அறிவியல் ரீதியில் மதிப்பிட உதவும் திட்டங்களை மேற்கொள்ள 19 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. டெல்லி ஐ.ஐ.டி. யுடன் இணைந்து, அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை (Department of Science and Technology), அறிவியல் மற்றும் தொழிநுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய பயோடெக்னாலஜி துறை (Department of Bio Technology, India) மற்றும் அறிவியல் - தொழில்துறை ஆராய்ச்சிக் கழகம் (CSIR) ஆகியவை இணைந்து ஒரு தேசியத் திட்டத்தை பஞ்சகவ்ய ஆராய்ச்சிக்கென வகுத்தனர். மாட்டின் சிறுநீர் மற்றும் சாணியின் பயன்கள் என்ற பெயரில் பல வினோதமான கூற்றுகளை மத்திய அமைச்சர்கள் கூறி வருவதையும் கண்டிருக்கிறோம். இந்த ஆண்டு ஜூன் மாதம் குஜராத்திலுள்ள ஜுனகத் வேளாண்மை பல்கலைக்கழகம் (JAU), மாட்டின் சிறுநீரில் தங்கத் துகள்களைக் கண்டுபிடித்ததாகக் கூட கூறி வந்தனர்.

அறிவியல் ஆய்வு நிலையத்தில் ஜோதிடம்

இவற்றின் தொடர்ச்சியாக, இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கல்விக்கான முதன்மையான நிறுவனமாகக் கருதப்படும் பெங்களூரிலுள்ள IISC-இன் முன்னாள் மாணவர்கள் அமைப்பு அக்கல்வி வளாகத்தில் “ஒருவரின் முன்னேற்றத்திற்கான அறிவியல் சாதனமாக ஜோதிடம் (Astrology as a scientific tool for individual progress)” என்ற தலைப்பில்  ஜோதிடம் படிக்க இரண்டு நாள் பயிற்சி வகுப்பை ஏற்பாடு செய்தது. நவம்பர் 25, 26 இல், IISC-இன் முன்னாள் மாணவர் அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினரான ரமேஷய்யாவைப் பயிற்றுனராகக் கொண்டு இவ்வகுப்பு நடைபெற இருந்தது.

அவர் 1984-1986 இல் IISC-இல் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் எம்.டெக் பட்டம் பெற்றவர். டாக்டர் பி. வி. ராமனால் நிறுவப்பட்ட இந்தியன் கவுன்சில் ஆஃப் அஸ்ட்ராலஜிக்கல் சயின்ஸஸ் (ICAS: Indian Council of Astrological Sciences) என்ற அமைப்பின் உறுப்பினராவார். IISc முன்னாள் மாணவர்களுக்கும் அவர்களின் இணையர்களுக்கும் ரூ.1500-ம், மற்றவர்களுக்கு ரூ.2000-ம் பயிற்சிக் கட்டணம் என்று அச்சிடப்பட்ட பயிற்சி வகுப்பு அழைப்பிதழ்கள் IISc வளாகம் முழுவதும் காணப்பட்டன.

இந்த நிகழ்வு உண்மையிலேயே அறிவியல் மனப்பான்மையோடு இருக்கும் பல மாணவர்களையும், விஞ்ஞானிகளையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியது. ஏனெனில், IISc என்பது இந்தியாவின் நவீன ஆராய்ச்சி நிறுவனங்களில் எப்போதும் முதலிடம் வகிக்கும் ஆராய்ச்சி நிறுவனமாகும்.

எனவே பயிற்றுநரைத் தொடர்பு கொண்டு பலர் இந்நிகழ்வு IISc-இல் நடைபெறக் கூடாது என்று கூறியுள்ளனர். ஆனால் எந்தப் பயனும் இல்லை. ஆங்கில இந்து பத்திரிக்கையின் செய்தியாளர் அவரைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர்,

“இந்தியாவில் 36 பல்கலைக் கழகங்கள் ஜோதிடத்தில் பட்டப்படிப்பு வழங்குகின்றன. ஜோதிடத்திற்கென்று தனிப் பகுதி இல்லாத நாளிதழ்களோ, வார இதழ்களோ கிடையாது. ஜோதிடத்திற்கென்று பல இணைய தளங்களும், சேனல்களும் உள்ளன. அது போலவே இவ்வகுப்பும் நடத்தப்படுகிறது. பங்கேற்பவர்கள் தங்கள் வாழ்நாளில் மீதமுள்ள காலத்தில் எவ்வாறு முன்னேறலாம் என்று கற்றுக் கொடுப்பேன். அவர்கள் 24 மணி நேரத்திற்குள் ஒரு ஜோதிடராகவும் மாற முடியும். இந்த இரண்டு நாட்களில் அவர்கள் ஜோதிடத்தை பற்றி அனைத்தையும் கற்றுக் கொள்ளலாம்”

என்று அவர் ஆர்வத்துடன் பதில் கூறியிருக்கிறார்.

ஜோதிடம் போன்ற மூடநம்பிக்கைகளைப் பரப்புவதற்கு IISc போன்ற ஆராய்ச்சி நிறுவனம் துணை போகலாமா? என்ற கேள்விக்கு,

“யோகாவைப் போல் ஜோதிடத்தின் மூலமாகவும் பலர் பயனடைய முடியும். ஜோதிடத்தைப் பற்றிக் கேள்வி கேட்பவர்களுக்கு அதைப் பற்றி முழுமையாகத் தெரியாது. ஜோதிடம் அறிவியல் அல்ல என்று கூறுபவர்கள் இவ்வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு உண்மை விளங்கும். யாரேனும் ஜோதிடம் அறிவியலல்ல என்று கூறினால் நம்பாதீர்கள்!” என்று கூறியுள்ளார்.

Breakthrough Science Society

இந்நிலையில், இவ்வகுப்பினை நடத்தக் கூடாது என்று கூறி பலர் எதிர்த்தனர். அறிவியலை மக்களுக்கும் மாணவர்களுக்கும் கற்றுக் கொடுக்கும் ஒரு நிறுவனத்தில் “ஜோதிடத்தை அறிவியல் சாதனம்” என்று சொல்லிக் கொடுப்பது நியாயமல்ல! ஜோதிடத்தில் பயிற்றுநருக்குத் தனிப்பட்ட வகையில் நம்பிக்கை இருக்கலாம். ஆனால் அதற்கு IISc -இன் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்றெல்லாம் பல எதிர்ப்புகள் எழுந்தன.

முறையான வகையில் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வண்ணம், முன்னாள் மாணவர்களில் அந்நிகழ்விற்கு எதிராக இருந்த சிலர், IISc இயக்குனர் அனுராக் குமார் அவர்களுக்கு கடிதம் எழுதினர். அதில், “ஜோதிடம் அறிவியல் இல்லை. அது ஒரு நம்பிக்கை. ஜோதிடத்தின் பல்வேறு முறைகளைப் பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் அதைத் தான் கூறுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளனர்.

மத்திய அரசின் போலி அறிவியல் பரப்புரைகளுக்கு எதிராக நாடெங்கும் பல நகரங்களில் அணிவகுப்புகளை நடத்திய பிரேக் த்ரூ சயின்ஸ் சொஸைட்டி (Breakthrough Science Society) என்ற அமைப்பு இந்த கடிதத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் அவ்வகுப்பை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

நன்றி: THE HINDU, Times of India, Science Chronicle

Pin It