சிபிஐ(எம்) தலைவர்களுக்கல்ல… ஊழியர்களுக்கே

(சிபிஐ(எம்) கட்சியிலிருந்து விலகிய தோழர் கு.பால்ராஜ் அவர்களின் திறந்த மடல்)

கடந்த 10 வருடங்களாகக் கட்சியின் திருவில்லிப்புத்தூர் நகர்க் குழு உறுப்பினராகவும் தமுஎகசவின் மாவட்டக் குழு உறுப்பினராகவும் கடந்த மூன்று ஆண்டுகளாக அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினராகவும் இருந்து எனக்கிருந்த எல்லா வாய்ப்புகளையும் கட்சியின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திய நான் தற்பொழுது வேறு வழியின்றி உள்கட்சிப் போராட்டத்தை நடத்த இயலாது கட்சியின் உறுப்பினர் பொறுப்பிலிருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன். என்னுடைய இந்த விலகல் முடிவைக் கட்சி என்னை நீக்கி விட்டதாகப் பரப்புரை செய்வதை நான் மறுக்கிறேன். என்னைக் கட்சியிலிருந்து நீக்கியதாகத் தோழர்களிடம் தவறான செய்தி கொண்டு செல்லப்படுவதால், சமூக மாற்றத்தை விரும்பி தம் சொந்த நலன்களை மறுத்து, உழைப்பாளி மக்களுக்காய்க் கட்சிக்குள் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களிடம் அரசியல் ரிதியாக உரையாட இக்கடிதம் ஒரு பொதுவெளியை உருவாக்கும் என்னும் நம்பிக்கையில் இதை நான் எழுதுகிறேன்.

paulraj_300மேலும் என்னுடைய சொந்தக் காரணங்களுக்காக அல்லாமல், அரசியல் ரிதியான காரணங்களுக்காகவே கட்சியிலிருந்து வெளியேறுகிறேன் என்றும், தொடர்ந்து அநீதி, சுரண்டல், ஒடுக்குமுறை ஆகியவற்றை எதிர்க்கவும், உழைப்பாளி மக்களின் அரசியல் அதிகாரத்தை உருவாக்கவும் பாடுபடுவேன் என்றும. எனவே நான் கட்சியிலிருந்து விலகியது என்னுடைய சொந்தக் காரணங்களுக்காக அல்ல என்றும் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசியல் காரணங்கள்

      ஈழ விடுதலையை எதிர்ப்பதும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுயாட்சி உரிமையுடைய மாநிலமாகத் தமிழர்கள் பகுதியை இலங்கை அரசு அங்கீகரிப்பதும் என்ற கட்சியின் நிலைப்பாடு அரசியல் அடிப்படையற்றது.

      ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களுக்கு மாநில சுயாட்சி அந்தஸ்து வழங்க வேண்டும் என்னும் தீர்வை கட்சி முன்வைப்பதன் மூலம் இன்றைய இலங்கைக்குள் தமிழர்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறது என்பதைக் கட்சி ஒத்துக் கொள்கிறது. மேலும் கட்சி சொல்கின்ற தீர்வை எடுக்கும் நிலையில் உள்ள இலங்கை அரசு மாநில சுயாட்சி கொடுப்பதற்காவது ஒத்துக் கொள்ளுமா? புலிகள் இயக்கம்தான் பிரச்சனை என்றால் மே17 இனப்படுகொலை மற்றும் புலிகள் இயக்கத்தின் தற்போதைய பின்னடைவுக்குப் பின் கட்சி சொல்கிற அரசியல் தீர்வை உருவாக்க இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்த யாருமில்லை. இதுகாறும் நாம் சொல்லி வந்த அரசியல் தீர்வு என்ன ஆயிற்று? ஈழப் படு கொலைக்குப் பின் முள்வேலி முகாமுக்குள் அடைபட்டுக் கிடக்கின்ற ஈழத் தமிழர்களுக்கு அறிக்கைகள் மட்டும் போதுமா?

      மேலும் இலங்கையில் சிங்களர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே ஏதோ “சாதிச் சண்டை” நடப்பதைப் போலவும், சிங்கள, தமிழர்களிடையே பிரிவினைவாதக் குழுக்கள் இயங்குவதைப் போலவும் இலங்கை அரசு நடுநிலையாக இருப்பது போலவும் பாசாங்கு செய்வதும், அதையே அணிகளுக்குச் சொல்வதும் சகிக்க முடியாதவை. அங்கு நடப்பது அரச பயங்கரவாதம். ஓர் இனப் படுகொலையை அரசே தலைமையேற்று நடத்தும் போது தனது சொந்த நாட்டுக் குடிமக்களுக்கு எதிராகத் தனது இராணு வத்தைப் பீரங்கிகளைப் பயன்படுத்தும் போது இன ரிதியாக ஒடுக்கப்பட்ட அம்மக்களை ஒடுக்கும் அரசிடம் பிச்சை கேட்கச் சொல்வது எவ்வகையான அரசியல்?

      சிங்களப் பகுதிக்குள் இயங்கும் அனைத்துக் கட்சிகளும் இனவாத அரசியலை முன்னெடுக்கும் போது அரசியல் ரிதியான தீர்வுக்கு ஏதாவது வழியுண்டா?

      மேலும் இலங்கை என்ற நாட்டின் இறையாண்மைக்குள் தலையிடுவது சரியல்ல என்ற வாதம் அரசியல் ரிதியானதல்ல. மற்ற நாடுகளின் இறையாண்மைக்குள் தலையிடுவது இல்லை என்ற முடிவை கட்சி வாதமாக வைத்தால் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்ற வாதத்தை ஏன் கட்சி முன் வைக்கிறது? இந்திய அரசு தெற்காசிய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு கட்சிக்கு இருக்கிறது. ஒரு விடுதலைப் போராட்டத்தை நசுக்க இந்திய அமைதிப் படையை அனுப்புவதும், தற்பொழுது நடந்த இனப் படுகொலைக்கு இந்தியா இராணுவ ரிதியாக உதவி செய்வதும் மற்ற நாடுகளின் இறையாண்மைக்குள் தலையிடுவது ஆகாதா? இந்தியாவின் உதவி, சோனியாவின் தந்திரம், இந்திய உளவுப் படையின் சதி ஆகியவற்றைக் கட்சியால் மறுக்க முடியுமா?

      ஆயுதப் போராட்டம் என்றால் கட்சிக்கு ஏன் இந்த அலர்ஜி? நம்மால் முடியாததை வேறு யாரும் செய்யக் கூடாதா? உலகப் புரட்சிகள் எங்காவது ஆயுதமின்றி நிறைவு பெற்றுள்ளனவா? புரட்சியைக் கைவிடுவதானால் ஆயுதத் கைவிடலாம்.

      மேலும் போரில் எந்த ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை எதிரியே தீர்மானிக்கிறான் என்ற வாதம் தவறானதா? மேலும் ஈழ விடுதலைப் போராட்டம் நேரடியாக ஆயுதப் போராட்டத்தில் துவங்க வில்லை. அமைதி வழியில் நடந்த எல்லாப் போராட்டங்களும் சிங்கள பௌத்தப் போpனவாத அரசால் அங்கீகரிக்கப் படவில்லை. ஒடுக்குபவன் ஒடுக்குவதற்கு வன்முறையைப் பயன்படுத்தும் போது ஒடுக்கப்படுபவன் எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ள வேண்டுமா? மனிதனாலோ, எந்த உயிரினத்தாலோ வன்முறையை எதிhப்பின்றித் தாங்க முடியுமா? வன்முறையை எதிர்ப்பது வன்முறையாகுமா? கோழி தன் குஞ்சைக் காப்பாற்றப் பருந்தோடு நடத்தும் போராட்டம் பருந்தின் வன்முறையோடு ஒப்பிடக் கூடியதா?

      சிங்கள இலங்கை அரசின் வன்முறையைக் காட்டிலும் விடுதலைப்புலிகளின் போராட்டமே வன்முறை மிகுந்தது என கட்சி அணிகளுக்குப் பயிற்சி கொடுத்திருப்பது எந்த வகையில் மார்க்சிய அணுகுமுறை ஆகும்?

      வர்க்கப் போராட்டத்தைத் தவிர கட்சி வேறு போராட்டங்களை நடத்தாமல் இருக்கிறதா? இன்றைய கட்சித் திட்டம் மக்கள் ஜனநாயக புரட்சியைத் தான் முன் மொழிகிறது. ஜனநாயகம், சோஷலிசம் என்பது தானே போராட்டப் படிநிலை? ஜனநாயகம் மறுத்த சிங்கள பௌத்தப் போpனவாத அரசிடம் முதலில் ஜனநாயகத்தை மீட்டெடுக்கப் போராடுவது தவறாகுமா? யூதர்களை ஜெர்மனியில் ஹிட்லர் ஒழித்த போது அதை எதிர்க்க முதலாளித்துவ நாடுகளுடன் சோவியத் கூட்டு வைத்த வரலாற்றை மறுக்க முடியுமா?

இக்கவிதையின் பொருள் புரிந்த யாருக்கும் அதன் அறம் விளங்கும்.

கரிகாலனின் கவிதை

பூக்களைத் தூவுவதைப் போல்

பள்ளி செல்லும் உங்கள் குழந்தைகள் மீது

சொந்த ராணுவம் குண்டுகளை வீசினால்

 

உங்கள் சுவாசக் காற்றை உறிஞ்சும்

ரசாயனக் குண்டுகளை

அரசாங்கம் வீதியெங்கும் தௌpத்தால்

 

ராணுவச் சிப்பாய்களால்

குழுபலாத்காரம் செய்யப்பட்டு

பூப்புச் சடங்கு முடியு முன்னரே

உங்கள் மகள் பைத்தியமானால்

 

உங்கள் சகோதரியின் பிடுங்கிய விழிகள்

பூட்சு கால்களால் நசுக்கப்பட்டால்

ஒரே ஆண்மகனின் பிறப்புறுப்பை நசுக்கி

உங்கள் வம்சம் அழிக்கப்பட்டால்

 

உங்கள் நிலத்தை, இல்லத்தை

உறவை, மொழியை அபகரித்து

உங்கள் தேசம் உங்களை அகதியாக்கினால்

 

நண்பர்களே நீங்களென்ன செய்வீர்கள்

உங்கள் ராணுவம்

உங்கள் அரசாங்கம்

உங்கள் தேசம்

அதன் இறையாண்மை

எல்லாம் வெடித்துச் சிதறும்படி

ஒரு மனித வெடிகுண்டாக மாறுவீர்கள்தானே

 

அப்போது அரசாங்கம்

உங்களை பயங்கரவாதிஎனச் சுட்டக்கூடும்

கவிஞன் யானோ மாவீரனென்பேன்.

ஈழத்தை ஆதரித்தால் தமிழகத்தில் இனவாதம் தலைதூக்கும் என்ற வாதம் ஏற்றுக் கொள்ள முடியாதது. ஒடுக்கப்படும் இனத்திற்காகக் குரல் கொடுப்பது இன விடுதலையை முன்வைத்தே என்பதை மறைத்து, அது பிற இனங்களை ஒடுக்கத்தான்என்பதும், மனிதனின் அகமனத் திலிருந்து மொழியை, பண்பாட்டை, பழக்கவழக்கங்களை, அடையாளங்களை அழிப்பதைத் தடுக்க எடுக்கும் முயற்சிகளை மேற்கட்டுமானம் என்ற ஒற்றைச் சொல்லிற்குள் புதைத்து விடுவதும் மார்க்சியத்தை வளரும் அறிவியலாக மாற்றவோ, மேலும் வளர்த்தெடுக்கவோ எவ்விதத்திலும் உதவாது. (19 ஆம் நூற்றாண்டின் மையத்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் காரணமாய் விளைந்த முதலாளித்துவத்தின் அசமத்துவ வளர்ச்சியினால் பெரும்பான்மை உழைக்கும் வர்க்கமான தொழிலாளர்கள் வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்த போது, முதலாளித்துவ வளர்ச்சியின் அடிப்படை விதியான சுரண்டலை, உபரி மதிப்பைத் தன் மூலதனம் என்ற நு}லில் வெளிப்படுத்தி, முதலாளித் துவத்தின் உயிர்த்தலத்தில் ஓங்கி உதைத்தார் மார்க்ஸ். உழைக்கும் வர்க்கத்திற்கு அமைப்பு வேண்டும் என்ற அடிப்படையில் கம்யூனிஸ்ட் கட்சியையும், கட்சிக்கு ஒரு திட்டத்தையும் முன்வைத்து பாட்டாளி வர்க்க அரசியலை வளர்த்தெடுத்தார். ஆனால், மார்க்ஸியத்தை அடிப்படையாகக் கொண்டு மார்க்ஸ் வரையறை செய்தது போலல்லாமல் முதலாளித்துவ முரண் முற்றாத கொடுங்கோல் ஜார்மன்னனின் ஆட்சியில் கடும் ஒடுக்குமுறையைச் சந்தித்த தொழிலாளிகள் விவசாயிகள் சார்பாக ருஷ்யப் புரட்சியை லெனின் நடத்தி முடித்தார்.)

கடந்த 30 வருடங்களாக மாறாத முடிவை ஈழபிரச்சனையில் கட்சி வைத்திருப்பதாகச் சொல்வது இயங்கியலாகுமா? இனம், மொழி, தேசிய சுயநிர்ணயம், ஜனநாயகம், உள்கட்சிப் போராட்டம், தேசம், தேசியம், சோஷலிசம், கம்யூனிசம், ரஷ்யா, சீனா, வியட்நாம், கியூபாப் புரட்சி என ஏதாவது கட்சி அணிகளுக்கு வகுப்பு உண்டா? இந்த வகையான வகுப்புகளை எடுத்தால் கட்சி ஊழியர்கள் புரட்சிகர அரசியலின் பகுதியாகத் தங்களை மாற்றிக் கொள்ள இயலும். ஊழியர்களுக்குக் கட்டுப்பட்டவர்களாக அல்லது பொறுப்புள்ளவர்களாகத் தலைவர்கள் இருப்பார்கள். அப்பொழுது ஊழியன் கேள்வி கேட்பான் எனத் தலைவர்கள் தங்கள் அறிவை விரிவு செய்யவும் முயற்சிப்பார்கள். அன்றாடப் பணி செய்யும் அரசியல் சடங்குகளை நிறைவேற்றும் இயந்திரகதியான ஒரே வகைமாதிரியான வேலைமுறைகளுக்கு ஊழியர்கள் பழக்கப்படுவதால் உள்கட்சியில் ஜனநாயகம் என்பதும், உள்கட்சியில் விவாதம் என்பதும் பெயரளவிற்குக் கூட இல்லை. இந்நிலையில்தான் ஈழம் குறித்த வரலாறு, கட்சியின் நிலைப்பாடு இரண்டையும் குறித்து 'சிறப்பு அறிவு மண்டலங்கள்' என கருதப்படும் மேல் கமிட்டிகளின் முடிவைக் கட்சி திணிக்கும்போது என் போன்ற ஊழியர்களுக்கும, சமூக மாற்றம் மற்றும் புரட்சியின் மீது நம்பிக்கையுடையோருக்கும் கட்சியின் மீது நம்பிக்கையில்லாமல் போகிறது.

இதற்காகக் கட்சியை விட்டு வெளியேறலாமா? கம்யூனிஸ்ட் கட்சிகளின் எல்லாத் தளங்களிலும் இயங்கும் குழுக்களின் வேலையை ஆய்வு செய்வதும் அதன் மீது முடிவெடுப்பதும் இல்லாத போது ஆய்வின்றி, விளக்கமின்றி, விவாதமின்றி எடுக்கப்படும் முடிவுகள் இதுபோன்றே முரட்டுத்தனமாக, தான்தோன்றித்தனமாக இருக்கும். எனவே தமிழின மக்கள் இவ்வளவு அடக்குமுறைகளையும் சந்தித்த பின்பும், அரச பயங்கரவாதத்தைச் சந்தித்த பின்பும் அமைதி வழியில் போராட வேண்டும் என்று சொல்பவர்களை கம்யூனிஸ்ட்கள் என்று சொல்ல முடியுமா? காரண காரியத் தொடர்புகள் அற்ற சிந்தனை முறை பகுத்தறிவுக்கு ஆகாது.

கட்சிக்கு வெளியிலிருப்பவர்கள் கட்சியைக் குறித்து கேள்வி எழுப்பினால் அது உள்கட்சி பிரச்சனை என சொல்வதும், அவர்கள் கேட்பதில் உள்ள உண்மைகளை ஆய்வு செய்யாமல் கட்சிக்கு எதிராக அவதூறு செய்கிறார்கள் எனச் சொல்வதும் கட்சிக்குப் பயன்படாது. கட்சி தன்னுடைய நிதிக்காக மக்களைத்தான் சார்ந்திருக்கிறது. கட்சி அவர்களிடம் கொள்கைகளை பரப்புரை செய்யும் போது பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும் அதற்கு உண்டு. கட்சியை விமர்சிக்க அனுமதிக்காத போது, மாற்றுக் கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ள மறுக்கும் போது அது ஒரு வகையான 'மதத்தன்மை' உடையதாக மாறிப் போகிறது. (கட்சி கடைபிடிப்பது ஜனநாயக மத்தியத்துவம் அல்ல, மத்தியத்துவ ஜனநாயகம).

ஜனநாயக மத்தியத்துவம் என்பது ஒவ்வொரு குழுவிலும் குழு உறுப்பினர்கள் விவாதித்து, பெரும்பான்மை முடிவுக்குச் சிறுபான்மை கட்டுப்படுவதாகும். மேலும் சிறுபான்மைக் கருத்துடையோர் தொடர்ந்து தங்கள் கருத்துக்களை வைத்துக் கொள்ளவும் அதைப் பரப்புரை செய்து பெரும்பான்மைக் கருத்தாக மாற்றவும் உரிமை உண்டு. ஆனால் கட்சிக்குள் நடப்பது மேல் கமிட்டி முடிவுகளை அமல்படுத்துவது மட்டுமே. தற்பொழுது கட்சிக்குள் இருப்பது உள்கட்சி ஜனநாயகம் ஆகாது. மத்தியப்படுத்தப்பட்ட ஜனநாயகமே அன்றி ஜனநாயக மத்தியத்துவம் ஆகாது.

கட்சித் திட்டத்திற்கு மாறாகச் செயல்படுபவர் அல்லது அதை ஏற்றுக் கொள்ளாதவர் கட்சியில் உறுப்பினராக நீடிக்க முடியாது. ஆனால் கட்சித் திட்டமே தெரியாத ஒருவர் மாவட்டக் குழு உறுப்பினர், செயற்குழு உறுப்பினராகக் கூட இருக்க முடியும். கட்சிக்குள் துணைக் குழுவாகச் சேர்க்கப்பட்ட ஒருவர், கட்சி உறுப்பினர் பொறுப்பை அடையும் போது கட்சித் திட்டம் குறித்த கல்வி நிறைவு செய்யப்படாமல் அன்றாட அரசியல் நிகழ்வுகளின் மீது தன்னுடைய அரசியல் கருத்தைத் திட்டத்திற்கு உட்பட்டு எவ்வாறு பரப்புரை செய்ய முடியும்?

கட்சியி[ன் திட்டப்படி மக்கள் ஜனநாயகப் புரட்சிக் கட்டத்தில் நம்முடைய எதிரி அணியில் பெருமுதலாளிகள் உள்ளனர். டாடா இந்தியாவின் பெருமுதலாளியாக மாட்டாரா?. இன்றைய கட்சித் திட்டம் தான் அவரை எதிரி என்கிறது. இந்தியா, மைய அரசு, பாராளுமன்ற ஜனநாயகம் இவற்றை ஒத்துக் கொண்டே கட்சி இந்த திட்டத்தை முன்வைக்கிறது. கட்சி ஆளும் மாநிலத்திலேயே எதிரி வர்க்கமான பெருமுதலாளி டாடாவுக்கு நமது வர்க்க அணியின் முன்னணிப் படையான விவசாயிகளிடம் நிலம் பறித்து எதிரிகளிடம் கையளிப்பது வர்க்க துரோகம்தான். கூடுதலாக (டாடா விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்த முயற்சிக்கவில்லை) அரசே நிலம் கையகப் படுத்தி சேவைச் செய்வது கட்சித திட்டப்படி சரியாகுமா?

சிங்கூர், நந்திக்கிராம், வால்கார் சம்பவங்களால் கட்சி உண்மையில் முதலாளித்துவக் கட்சிகளின் குணாம்ச நிலைக்குத் தாழ்ந்து விட்டது என்பதும், தோழர் டபிள்யூ. ஆர்., சோம்நாத் (எனக்குப் பெயர் தெரியாத உதாரணங்கள்) போன்ற தனிநபர் பலவீனங்களும், கேரளாவில் தோழர் அச்சுதானந்தன், பிரனாயி விஜயன் ஆகியோரிடையிலான உட்பூசல்களும் முதலாளித்துவச் சீரழிவு கலாச்சாரம் கட்சித் தோழர்களிடம் பரவி வருவதைத் தடுக்க முடியவில்லை என்பதைத தானே காட்டுகிறது?

ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்களை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தியது போல ஒரு பிரமை உருவாக்கப்பட்டிருப்பதும், அதை வைத்தே ஙவண்டி ஓட்டுவதும்ங எவ்வகையில் சரியாகும்? தற்பொழுது கடந்த 10 ஆண்டுகளாகச் சிறை சென்றோர் எத்தனைப் பேர்? கட்சியின் இன்றைய தலைவர்கள் படிப்பாளிகளே. ஆனால் அவர்கள் போராட்டத் தலைமையல்ல. தலைவர்களுக்கே சிறை அனுபவம் இல்லை என்பது கட்சி ஆளும் வர்க்கத்தோடு சமரசம் செய்கிறது என்பதைத்தானே காட்டுகிறது?

மூன்று மாநில வெற்றிகள் நாட்டில் முன்னுதாரணமாக இருக்கவில்லை. கலைஞர் சொல்வதைப் போல் ஒரு ரூபாய் அரிசி, இலவச மின்சாரம், இலவச TV., சத்துணவு, ஏழை மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்... இப்படி சொல்லக் கூடாது. உற்பத்தி, விநியோகம் இரண்டையும் ஆட்சிக் காலத்தில் அரசு தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதா? ஏகாதிபத்திய முதலாளித்துவச் சுரண்டலை எவ்வளவு தூரம் தவிர்த்துள்ளது? நிலஉடைமை உடைப்பு என்பதையே அளவு கோலாகக் கொள்ள வேண்டும்.

நேபாள மாவோயிஸ்ட்டுகளின் போராட்டம், புலிகளின் ஆயுதப் போராட்டம், பழங்குடி மக்களைத் திரட்டி இந்திய மாவோயிஸ்ட்டுகளின் போராட்டம் இவைகளை ஏன் கட்சி மறுக்கிறது? ஆயுதப் போராட்டம் என்பது கட்சித் திட்டத்தில் எப்போதும் இல்லை என்பதைக் கட்சி பகிரங்கமாக அறிவிக்குமா? முதலாளித்துவ அரசைத் தூக்கியெறிய அதன் ஒடுக்கும் கருவிகளின் ஆயுதமான இராணுவம், போலீஸ், துணை இராணுவப்படைகள் இவற்றை எப்படி எதிர் கொள்வது? கூலிப்படைகளான அவைகளின் குணாம்சம் காகிதப் புலி என்பதை உலகப் புரட்சிகர வரலாறு உணர்த்தி இருக்கிறது. இந்தப் பிரச்சனையில் இந்திய ஆளும் வர்க்கக் கருத்துக்களும், கம்யூனிஸ்ட்டுகளின் கருத்துக்களும் ஒன்றே போல் அமைந்திருப்பது வியப்பிலும் வியப்பு.

கட்சிக் கல்வி, சுய கல்வி இரண்டுமில்லை என்றால் ஒரு புரட்சிகர ஊழியனை உருவாக்குவது எப்படி? கட்சியின் பல தோழர்கள் பொருள் முதல்வாதம் என்பதைப் பொருளாதார முதல்வாதம் என்பதாகப் புரிந்து வைத்துள்ளனர் என்னும் செய்தி கட்சித் தலைமைக்குத் தெரியு[மா?

அளவு மாற்றம், குண மாற்றம் என்பதைச் சொல்லி மக்கள் தயாராக இல்லை எனச் சொல்வதை, குண மாற்றம் இல்லை, இதனால் அளவு மாற்றமும் இல்லை எனச் சொல்லிப் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன். புரட்சிகரமான அமைப்பைக் கடடியமைப்பதற்குரிய முக்கிய அடிப்படை என்ன? தோழர் ஸ்டாலின் கூறுகிறார், புரட்சிகரமான அமைப்பைக் கட்டியமைப்பதற்கான முக்கிய அடிப்படை புரட்சிகரமான ஊழியரே. புரட்சிகர ஊழியர் யார்? எவரொருவர் தனது சொந்த முன்முயற்சியில் சூழ்நிலைமையை ஆய்வு செய்து அதற்கேற்பக் கொள்ளைகளை நடைமுறைப்படுத்தக் கூடியவராக இருக்கின்றாரோ அவரே புரட்சிகரமான ஊழியராவார். அவர் யாருடைய உதவிக்காகவும் காத்திருப்பதில்லை. இந்த ஸ்டாலின் வரையறை பொருத்தமானதாய்ப் படுகிறது. கட்சியில் அப்படிச் செயல்படுபவர் தன்னிச்சையாகச் செயல்படுபவர், கூட்டு முடிவுக்கு உட்படாதவர் என்றும் முத்திரையிடப்படுகிறது. ஊழியர்களின் திறைமையைக் கண்டுணர்ந்து கட்சி அத்திறமையை வளர்த்தெடுப்பதற்குப் பதிலாக மட்டுப்படுத்தி சமரசவாதியாய் மாற்றி ஏனைய பிற அமைப்பில் செயல்படும் ஊழியர் நிலைக்கே மாற்றி விடுகிறது. பதவி, மேல் கீழ் பிரச்சனைகளும் மலிந்த கீழ்த்தரமான முதலாளித்துவக் குணக்கேடுகளும் நிறைந்த அமைப்பாகக் கட்சி மாறி இருக்கிறது.

கட்சி மாநாட்டு அறிக்கைகள, தீர்மானங்கள் மீது மீளாய்வு மறுபரிசீலனை, சுயவிமர்சனம் எதற்காவது வாய்ப்புண்டா? கட்சியில் பத்து வருடத்திற்கு முன்பு கமிட்டியில் எதை விவாதித்தோமோ அதைத்தான் இன்றும் விவாதிக்கிறோம். அரசியல் பயிற்சியின்மை, சூழலை உள்வாங்குவதில் திறனற்று இருப்பது போன்ற எதையும் களைவதற்கோ வளர்த்தெடுப்பதற்கோ முயற்சியேதும் இல்லை. விமர்சிப்பவன் கட்சி விரோதி, விவாதிப்பவன் தலைக்கனம் பிடித்தவன், திருத்த முடியாது, அதி தீவிரவாதி போன்ற பல முத்திரைகள்...

வெகுஜன, வர்க்க ஸ்தாபனப் பதிவுகளும் நடைமுறைகளும் அரசியலற்றும் பரிசீலனையின்றியும் நடக்கின்றன. கடந்த பத்து வருடங்களில் நடந்த உறுப்பினர் பதிவுகளுக்கும் கட்சிக்கு வந்தவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் அதே வேலையைச் செய்வோர் மத்திய கமிட்டியில் பேரெடுக்க வேண்டும். சேர்த்து விட்டுப் பயிற்சி அளிக்க எண்ணிக்கையில் சிக்கனம் தேவை. ஆனால் உறுப்பினர் பதிவு குறித்து நம் ஊழியர்களிடம் இருக்கும் நம்பிக்கை மூடநம்பிக்கையே. ஒரு வருடம் ஐந்து வருடம் பத்து வருடம் இருபது வருடங்களாகப் பயனற்ற வேலைமுறை. படிப்பதற்கு நேரமில்லாமல் ஒரேமாதிரியான வேலைகளைச் செய்ய நிர்பந்திக்கப்பட்டு சலிப்பும், விரக்தியும் அடைந்து களைத்துப்போன தோழர்கள் நம்மவர்கள்.

உலகமயத்தைக் கொள்கை ரிதியாக எதிர்த்துக் கொண்டே அதை நடைமுறையில் செயல்படுத்த புறவழிச்சாலை அமைத்துக் கொடுத்துள்ளது நமது கட்சி. உண்மையில் அயல் நேரடி முதலீடு (FDI) சம்பந்தமாக மாநாட்டில் விவாதிக்காமல் தனியாக மத்தியக் குழு விவாதித்து அங்கீகாரம் அளித்ததோடு கட்சி அணிகளுக்கு உண்மையை விளக்காமல் அந்நிய முதலீட்டுக்கான சமரசத் திட்டத்தை நிறைவேற்றி மத்தியக் குழு ஒரு ஏகாதிபத்திய சேவை செய்து முடித்துள்ளது. சீனாவைப்பார் என்கிறீர்கள். சீன கம்யூனிஸ்ட் கட்சியிடம் அரசியல் அதிகாரம் இருப்பதை மறந்து விட்டு நாம் காட்டும் வான வேடிக்கை போலியானது.

இந்திய ஆளும் வர்க்கச் சதியில் உருவாக்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் வரிச் சலுகைகளும் என்பதையே நாம் பின்பற்றும் போது, இந்திய ஆளும் வர்க்கக் கருத்தியலோடு சற்றே மாறுபட்டுக் காட்டிக் கொள்ளும் கருத்துகள் மிகுந்த குழப்பம் வாய்ந்தவை.

கடைசியாக

இந்த விமர்சனங்களைக் கட்சியின் மீது வைத்திருப்பவர் கட்சியில் 10 ஆண்டு காலக் களப்பணி ஆற்றிக் கொண்டே சுய விமர்சனம், சுய கல்வி என்பதைத் தொடர்ந்து செய்தவர் என்பதை மறந்து விடாதீர்கள். கட்சியின் மீதான அவதூறு என வகைப்படுத்தி இதையும் புறக்கணிப்பதால் கட்சிக்கோ, மக்களுக்கோ எவ்விதப் பயனும் இருக்காது. என் போன்ற பலருக்குக் கட்சித் தலைமையோடு இருக்கும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது கட்சிக்கு எவ்வகையிலும் பயனளிக்காது. இளைய தலைமுறை தொடர்ந்து தயங்காது, அஞ்சாது, எதிர்பார்ப்பில்லாது போராடும் எனச் சொல்லி நிறைவு செய்கிறேன்.

என்றும் தோழமையுடன,

கு. பால்ராஜ்