கணவனை இழந்து வாழும் ஒரு பெண் தனக்குள்ளே ஒரு கோடு போட்டுக் கொண்டு அதைத் தாண்டாமல் தன் பிள்ளைகளைக் காப்பாற்ற, அவர்களை வாழ்க்கையில் கரைசேர்க்க - காட்டிலும், மேட்டிலும் கஷ்டப்பட்டுத் தன் பிள்ளைகளைக் கூலிவேலை செய்தாவது காப்பாற்ற அடிமை வாழ்க்கை முறையை மேற்கொள்கிறாள்.

widows 350உற்றார், உறவினர் துணையின்றி அந்தப் பெண் தன் தந்தையை இழந்த குழந்தைகளை வைத்துக்கொண்டு வறுமை என்னும் வாட்டம் தெரியாமல் வளர்க்கிறாள். ஆனால், தனக்கு தன் இளம் வயதில் இருக்கும் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு தன் பிள்ளைகளே தனக்கு உலகம் என்று நினைக்கிறாள்.

விடிகாலையில் அந்தக் கிராமத்தில் உள்ள குடியானவர் வீட்டில் சின்னச் சின்ன வேலைகளைச் செய்து ஒரு வருமானத்தையும், அதற்குப் பின் தினமும் கூலி வேலை செய்து ஒரு வருமானத்தையும், பற்றாக்குறைக்குப் புதன்கிழமை கந்து வட்டிக்கு வாங்கியும் தன் பிள்ளைகளுக்கும் தனக்குமான குடும்பத் தேவையை பூர்த்தி செய்கிறாள்.

ஆண் - பெண் இருவரும் சம அளவு உடல் உழைப்பு செலுத்தினாலும், ஒரே வேலைக்குக் கூட கொடுக்கப்படும் கூலியில் பெண்களுக்கு சரி பாதிக்கும் குறைவாகவே கொடுக்கப்படுகிற நிலையே உள்ளது.

அந்தப் பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் கூட தன் பிள்ளைகள் பட்டினியாகி விடுவார்கள் என்று நினைத்துக்கொண்டு முடியாத நிலையில் கூட தோட்டத்து வேலைக்குச் சென்றால்,  நான்கு பேருடன் பேசிச் சிரித்தால் உடம்பில் உள்ள வலியே தெரியாது என்று அன்று வேலை செய்த காசை வைத்து சோறு வடித்து, தன் பிள்ளைகள் உண்ட பின், மீதிச் சோற்றைச் சாப்பிட்டு, அடுத்த நாள் வேலைக்கு எங்கு செல்வது என்று விசாரித்த பின் உறங்குவாள்.

மனதளவிலும் ஒடுக்கும் இந்து மதம்

ஆனால், அதே ஊரில் உள்ள ஆண்களிடம் இயல்பாக பேசினால், இந்தச் சமுதாயம் தவறான உறவாகத்தான் நினைத்துக்கொள்கிறது. அந்தப் பெண் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் சுதந்திரமாக பொதுத்தெருவில் நடந்தால் காலையிலேயே “முண்டச்சி” முகத்தில் முழித்தால் அன்றைய நாளே விளங்காது என்று சொல்கிறது. இந்த இந்து மதச் சமுதாயம்.

பண்டிகை, திருவிழா நாட்களில் கூட - அது மட்டும் அல்ல உற்றார், உறவினர் வீடுகளில் கூட முதல் நபராக இல்லாமல் “சடங்கு, சம்பிரதாயம்” நல்ல நேரம் முடிந்த கடைசி நபராக அந்தப் பெண் தள்ளப்படுகிறாள். .மனம் உடைந்து தன் உறவினர் வீடுகளுக்கு மகிழ்ச்சியுடன் தானும் தன் பிள்ளைகளை அழைத்துச் செல்வதை நிறுத்தி விடுகிறாள்.

தனியாக வாழ்ந்தால் தன் வயது வந்த பிள்ளைகளையும் தன்னையும் தவறாக பேசுகிறது.தன்னுடன் வயதான அம்மாவையும் வைத்துக்கொண்டு பிள்ளைகளையும் பராமரிக்கிறாள்.

கணவனை இழந்த பெண்ணுக்கு தாலி அறுக்கும் போதும், அலங்காரம் செய்து பூவை அறுத்துப் பொட்டு அழித்து வளையல்களை உடைத்து இந்தச் சடங்குகளைச் செய்வதற்கும் மற்றொரு பெண் விதவையாகவே இருக்க வேண்டுமாம். அந்தப் பெண்ணை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்பப்படுத்துகின்றனர்.இதுதான் இந்து மதச் சடங்கு என்று மனு சாஸ்திரம் கூறுகிறது.

ஆனால், அதே ஆண் எத்தனை பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டாலும் எத்தனை திருமணம் செய்து கொண்டலும் தவறு இல்லையாம்.தான் பெற்ற பிள்ளைகளை நினைக்காமல் மறுமணம் செய்து கொள்கின்றனர். “பெண் கணவனை இழந்தால் இந்த சமுதாயம் “விதவை” என்கிறது. ஆனால் ஆண் மனைவியை இழந்தால் “விதவன்” என்று சொல்லுவதில்லையே... இந்த இந்து மதச் சமுதாயத்தில் இதுவரை இல்லையே?

திரைப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்களில் விதவைப் பெண்களை தனியாகவும் அவமானப் படுத்தும் விதமாகவே அமைக்கின்றனர். இன்றைய ஊடகங்கள் ‘பண்பாடு’ என்ற பெயரில் பெண்களை இழிவுபடுத்தி  நவீன மனுசாஸ்திரத்தை பிரதிபலிக்கின்றன.

இந்த ஆணாதிக்கச் சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான குறிப்பாக (கைம்பெண்) பெண்களுக்கான உரிமைகளை மீட்டு சாதி - மதச் சடங்குகளை உடைத்து விடுதலைப் பெண்ணாக மாற்றுவோம்.

ஆடைக் கட்டுப்பாடா? மனக்கட்டுப்பாடா?

நிர்மலா, மதுரை

உலகத்தில் தோன்றிய பாலினம் இரண்டே. அதில் ஒரு பாலினத்திற்கு ஆடைச் சுதந்திரம், அடுத்த பாலினத்திற்கு ஆடைக் கட்டுப்பாடு. சுதந்திரத்தை ஆடையிலும் கூட அனுபவிக்க முடியாத இழிவான நிலையில் பெண் என்ற பாலினம் உள்ளது. இதற்குக் காரணம் ‘கட்டுப்பாடு’ என்ற வார்த்தையிலேயே மற்றொருவர் பிறர் மீது விதித்த தடை அல்லது திணிக்கப்பட்ட தன்மையாகும்.

 ஆடைக்கட்டுப்பாடு என்பதன் அளவு என்ன? கட்டுப்பாடான பெண்ணுக்கேற்ற ஆடை எது என்பதை இந்து மதம் வரையறுத்துள்ளதா? சேலை, தாவணி கட்டிய பெண்ணை ஆடைக் கட்டுப்பாடான பெண் என்று கூறலாமா?  சேலை, தாவணி அணியாத மற்ற நாட்டுப் பெண்கள் எல்லாம் எப்படி உள்ளனர். அவர்கள் ஒழுக்கமாக இல்லையா? சேலை, தாவணி கட்டிய பெண்கள் பயணிக்கும் போது கைகளைத் தூக்கும்போது தவறான பார்வைக்கு உள்ளாக்கப்படுகிறாள்.  இதுவே ஒரு பேண்ட் சர்ட் அணிந்த பெண் அந்தத் தவறான பார்வைக்கு ஆளாகப் போவதில்லை.

பெண்களின் உயிரைப் பறிக்கும் சேலை, தாவணிகள்

1997ல் தஞ்சை குடமுழுக்கில் யாகம் வளர்த்த போது பந்தல் தீ பற்றி எறிந்து தீயில் சிக்கி 41 பேர் பரிதாபமாக இறந்தனர்.  இதில் 41 பேரில் 31 பேர் பெண்கள்.  இதற்கு காரணம் என்ன? என்று சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்ததில் பெண்கள் உடுத்திய புடவையால்தான் அவர்களால் விரைந்து ஓடி தப்பிக்க முடியவில்லை என்று அந்த மையம் கூறியுள்ளது.

கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் பெண்கள் அதிகமாக எந்திரங்களில் சிக்கிக் கொள்வதற்கு அவர் அணியும் புடவைதான் காரணம்.  இரு சக்கர வாகனங்களில் சேலை துப்பட்டா சிக்கி விபத்துக் குள்ளாவதை நாள்தோறும் பார்க்கிறோம். 

16 முழத்தில் புடவைகளை உடல் முழுவதும் சுற்றிச் சுற்றி கட்டுவது என்பது பெண்களுக்கு வசதிக் குறைவு. ஒரு அவசர நேரத்தில் தப்பிப் பிழைக்க, வேகமாக வெளியேறிட இது தடையாக இருக்கிறது. பெண்கள் ஆண்களைப் போல உடை உடுத்த வேண்டும். ஆண் பெண் வித்தியாசம் காட்டத் தேவையில்லை என்று பெண்கள் உடை சம்பந்தமாக தந்தை பெரியார் 70 ஆண்டுகளுக்கு முன்பே கூறிய கருத்து எவ்வளது ஆக்கப் பூர்வமானது என்று சிந்திக்க வேண்டும்.

உன் காம விழிகளுக்கு நீ பூட்டுப்போடு

பெண்களுக்கு கோயில்களில் ஆடைக்கட்டுப்பாடு விதிக்கும் அறிவிலிகள் சல்லடையான வேட்டி கட்டி ஆபாசமாய்த் திரியும் பூணுால் பூசாரிகளுக்கு தடை விதிப்பதில்லை ஏன்? “பக்திமயமான இடத்தில் பெண்களின் ஆடைக்கென்னடா கட்டுப்பாடு. உன் காம விழிகளுக்கு நீ பூட்டுப்போடு.” 

ஆடைக் கட்டுப்பாட்டுக்குக் காரணம் பாலினக் கோளாறு இல்லை.  பார்வைக்கோளாறு ஆகும். இன்றைய சூழலில் இயல்பான ஒரு ஆண் அரை நிர்வாணமாக வெளியே சென்றாலும் இயல்பான பார்வையாக இரு பாலினத்திலும் பார்க்கிறோம். ஆனால் மனநிலை சரியில்லாத ஒரு பெண் சற்று விலகிய ஆடை அணிந்தாலும் கூட அதை ஆண்கள் ஓர் காமப் பார்வையில் பார்க்கிறார்கள்.

ஓர் ஆண் மற்றவர்கள் மத்தியில் தனது ஆடைகளை கழற்றி மாற்றுவதை இயல்பாக பார்க்கிறார்கள். அங்கே அவனுக்கு ஆடை நாகரிகம் கற்றுக் கொடுக்கப்படவில்லை.  அதே வேளை பெண் குழந்தையாக இருந்தால்கூட அவள் ஆடை மாற்றுவதைப் பார்க்கும் போது அதன் எதார்த்தத்தை உணராமல் அதை இழிவாகவோ அல்லது காமமாகவோ பார்க்கும் தன்மை இயல்பாகவே திணிக்கப் படுகிறது.

வீட்டில் உள்ள பெண்கள் உள்ளாடைகளைத் துவைத்து உலர்த்தும்போது கூட மறைவாகவோ, ஓரமாகவோ போடும் நிலை உள்ளது.  ஆனால், ஆண் தனது உள்ளாடையை தனது சட்டையுடன் சேர்த்து ஆணியில் மாட்டுவது பெருமையாக உள்ளது.  இதை நாம் கண்டித்து வளர்ப்பதில்லை.

வெளியிடங்களுக்குச் செல்லும்போது ஆண் தன் மனைவியிடம் குளிக்கச் செல்லும்போது சத்தமாக “ஜட்டி பனியன் எடுத்துத் தா” என்று கட்டளை இடுகிறான்.  ஒரு பெண், தன் கணவனிடமோ, தந்தையிடமோ, சகோதரனிடமோ அப்படி சத்தமாகக் கேட்டுவிடமுடியுமா? பெண் உள்ளாடை களுக்கான பிரத்தியேகமான கடைக்குச் சென்றாலும் கூட தனக்கு ‘பிரா, பேண்ட்டி’ வேண்டும் என்பதை இயல்பாகக் கூட சொல்லமுடியவில்லை என்னடா சமூகம் இது?

துணிக்கடையில் பொம்மைக்குக் கட்டிய ஆடை விலகினாலும் கூட அதை ஓர் பெண்ணாகப் பாவித்து காம உணர்ச்சிக்கு ஆண் உந்தப்படுகிறான். இப்படி ஆண் வர்க்கம் தம் பார்வையின் தன்மையை மாற்றிக்கொள்ள இயலாத - முடியாத - மாற்ற நினைக்காத தன்மைக்காக இவை அனைத்தையும் பெண் இனத்தின் மீது ஆடைக்கட்டுபாடாக விதிக்கிறது.

நாம் ஒரு விசயத்தைப் பற்றி யோசிப்போம். பெண்ணுக்கு ஆடைக்கட்டுப்பாடு ஏன் விதிக்க வேண்டும்?  யார் பார்வையிலிருந்து பெண்ணைக் காப்பாற்ற?  அரைகுறை ஆடையுடன் இருந்தால் அந்தப் பெண் பாலியல் தொல்லைக்கு ஆளாவாள் என்ற ஒரு வாதம் வேறு.  இதில் பெரிதும் பாதிக்கப்படுவது பெண் தான். 

அப்போ பெண்ணின் ஆடையைக் கட்டுப்படுத்த வேண்டுமா ஆணின் பார்வைத் தன்மையில் கட்டுப்பாடு வேண்டுமா?  கட்டுப்பாடான ஆடை அணிந்த எந்தப் பெண்ணிற்கும் பாலியல் தொல்லை இல்லவே இல்லை என்று நாம் உறுதி கூற முடியுமா? சமுதாயத்தில் இந்த நிலை மாற ஆண் - பெண் என்று இரண்டு பாலினத்தவருக்கும் ஒரே மாதிரியான கட்டுப்பாடுகள் ஒரே மாதிரியான வளர்ப்பு முறைகள் இருக்க வேண்டும். அதே போல் பாலினக்கல்வி, பாலின ஒழுக்க முறைகள் போன்றவற்றை இரண்டுபேருக்கும் சமமாக கற்பிக்க வேண்டும்.

ஓர் ஆண், ஒரு பெண்ணைப் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தும்போது, அதனால் ஓர் பெண்ணுக்கு பாதிப்பு என்ற நிலை கற்றுக் கொடுக்காமலேயே பரவியுள்ளது.  ஆனால் அந்த ஆணுக்குத்தான் அதனால் மிகுந்த இழிநிலை, மற்றவரால் இழிவாகப் பார்க்கப்படுதல் சமுதாயத்தில் மதிப்புக் குறையும் தன்னுடைய சுயம் பாதிக்கப்படும், தனது கற்புக்கும் அவமானம் என்று ஆணுக்கு பசுமரத்தாணி போல் பதியும்படி வளர்க்க வேண்டும் கற்பிக்க வேண்டும்.

பெண்களே நன்றாக ஓடியாடி விளையாடுங்கள் அதற்கேற்ற ஆடைகளை நீங்களே தேர்வு செய்யுங்கள். லெங்கின்ஸ்  அணிவதும் ஜீன்ஸ் அணிவதும் உங்கள் உரிமை உங்கள் வசதி. பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்கு மதப்பண்பாட்டையும் நாகரீகத்தையும் திணிக்காமல் பெண்கள் முன்னேற்றத் திற்கேற்ற நாகரீக உடையணியப் பழக்குங்கள். உடை விசயத்திற்கு பயந்தே பெற்றோர்கள் பெண்களை விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க விடுவதில்லை. இது தவறானது.

பெண் காவலர்களையும் இராணுவ வீராங்கனைகளையும் பாருங்கள். அவர்கள் உடன் பணியாற்றும் ஆண்களுக்கு இணையாக எவ்வாறு செயல்படுகிறார்கள். அதற்குக் காரணம் அவர்கள் உடை முறையே.  எந்தச் செயலையும் செய்ய ஆடை ஒரு தடையாக இருக்கக்கூடாது.

ஆகையால், இனி வரும் காலங்களில் ஆடைக்கட்டுப்பாடு என்ற ஒரு செயல் பெண்களுக்குத் தேவையில்லை. மாறாக அவர்கள் நல்ல கல்வியறிவும், சிறந்த பகுத்தறிவும், சமுதாயச் செயல்பாடுகளில் பங்கேற்கும் சுதந்திரமும், தற்காப்புக் கலையும் பெற்று ஆணுக்கு நிகரான மிக்க பாலினமாக மாற வேண்டும்.

Pin It