பாலிவுட்டும் கோலிவுட்டும்

மனதுக்கு நிறைவாக இருந்தது அந்த அறிவிப்பைப் பார்த்ததும். ஏற்கனவே பீ.கே, கீ அன்கா, பிங்க், தங்கல் இப்படியாகக் கலக்கி எடுத்துக் கொண்டிருக்கும் பாலிவுட்டிலிருந்து வந்த அந்த அறிவிப்பு இதுதான்….

கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் குறைந்த விலையில் தரமான சானிட்டரி பேட் உற்பத்தி செய்யும் இயந்திரத்தைக் கண்டுபிடித்த  ஓர் கண்டுபிடிப்பாளர். கிராமங்களில் உள்ள பெண்கள் மாதவிடாய்க் காலங்களில் கடைபிடிக்கும் சுகாதாரமற்ற தூய்மைக்குறைவான செயல்முறைகளைக் களைய அவரது கண்டுபிடிப்பு பெரிதும் உதவியுள்ளது.

இவரது சேவை நோக்கத்தைப் பாராட்டிய மத்தியஅரசு இவருக்கு பத்மஶ்ரீ விருது வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ‘டைம்’ வார இதழ், உலகில் அதிக செல்வாக்கு மிக்க மனிதர்கள் பட்டியலில் இவரை இணைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சாதனை படைத்த ஒரு தமிழனின் வாழ்வை மையமாக கொண்ட திரைப்படமாக 'பேட் மேன்'  உருவாக உள்ளது. இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அக்சய்குமார் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை பால்கி இயக்கவுள்ளார்.

இன்னும் வளர்ந்த நகரங்களிலே கூட கருப்பு நிற காகிதத்தில் மறைத்து கொண்டு போகுமளவுக்குத் தான் சானிட்ரி நாப்கின் பற்றிய அளவுக்குத்தான் விழிப்புணர்வு இங்குள்ளது. தன் கண்டுபிடிப்பு களுக்காய் ஆரம்பக் காலகட்டங்களில் அவரது சிரமங்கள் நிறைய. அவரது அம்மா, மனைவி உட்பட யாரும் புரிந்து கொள்ளாமல் குடும்பத்திலும் வெளியேயும் அவருக்கு ஏற்பட்ட சிரமங்கள் முழுக்க இச்சமுகத்தின் விழிப்புணர்வு அற்ற தன்மையையே காட்டும்..

அதுவும் தன் கண்டுபிடிப்புகளைப் பெரு நிறுவனங்களுக்கு விற்றுக் காசாக்காமல் எளிய மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவந்த சாதனைத் தமிழர் வாழ்வை மக்கள் மேலும் அறிய திரைப்படமாக உருவாக்க உள்ள அக்சய்குமார் , பால்கி குழுவினருக்கு ஒரு ராயல் சல்யூட்..

இச்செய்தியை பேசிக்கொண்டே தொலைக்காட்சியை பார்த்த போது மாமி சுஹாசினி ஒரு குழுவோடு முதல்வரை சந்தித்து இருக்கிறார். கோரிக்கை என்னவென்று பார்த்தால் தமிழ் சினிமாவுக்காக ஒரு மியூசியம் அமைக்க வேண்டுமாம்.…மாமியோட மாமா மாதிரி படங்களை இயக்கினால் தமிழ் சினிமாவை மியூசியத்தில் மட்டுமே பார்க்க முடியும்…..

தங்கப் பதக்கம்

தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கும் போதே வந்தான்  சுரேஸ். வாப்பா தலைவலி சுரேஸ், ஏய் என்னப்பா நான் தளபதி சுரேஸ் என்றான்.… அப்பறம் பொங்கலுக்கு என்ன திட்டம் என்றேன்.. தளபதி படம் வருது… இரசிகர் காட்சிக்குப் போக வேண்டியதுதான். இந்தப் பொங்கல் எங்களுக்குத் தளபதி பொங்கல் என்றான்.… சொல்லிக் கொண்டிருக்கும் போதே பட்டயைக் கிளப்பு, என ஆடிக் கொண்டிருந் தார் தளபதி.… கட்டுக் கட்டா சேர்த்த நோட்டுக் கட்டு, பூட்டுப் போட்டுக் கிடக்கு, பறவைக்கெல்லாம் ஒரு வங்கியுண்டா.. அது பட்டினியாக் கிடக்கு எனத் தத்துவம் பாடிக் கொண்டிருந்தார் தளபதி.

திரையில் உங்க தளபதி பறவைக்கெல்லம் வங்கியுண்டா அது பட்டினியா கிடக்கு என பாடிக் கொண்டிருக்கிறார்.. இங்க நிஜத்தில் அதிக விலைக்கு பைரவா பட டிக்கெட் விற்கறதாகப் பிரச்சனை நடந்து கொண்டிருக்கு.…சின்ன பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்ய விடாமல் எல்லா தியேட்டரையும் பிடித்துக் கொண்டு வெற்றி பெற்றதாக சொல்வது நியாமா? அதெல்லாம் எனக்குத் தெரியாது. தளபதிக்கு வெற்றி என்றான் அவன்.…

பாடல் முடிந்து  விளம்பரம்வந்தது அதில் ஓட்டப் பந்தயத்தில் இரண்டாவதாக வந்ததற்காக பையனுக்கு குலோப் ஜாமூன் செய்து கொடுத்திருப்பார் அம்மா.. அப்போது வந்த அப்பா இரண்டாவது இடமா வெரீகுட் எத்தனை பேர் ஒடுனாங்க என்பார். அதற்கு இரண்டு பேர் என்பான் பையன்.…அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே நான் சொன்னேன்..

இங்கே ஒரு பையன் ஒத்தை ஆளா ஓடிட்டு நான் தான் ஜெயித்தேன் என கூவிக்கொண்டிருக் கிறான்.. அவன் பெயர் பைரவா.

ஜல்லிகட்டும் மல்லுக்கட்டும்...

ஒரு வருசமா ஜல்லிக்கட்டுக்கு மல்லுக்கட்டி தொல்காப்பியத்திலிருந்து தொலைக்காட்சி விவாதம் வரை பிரித்து தொங்கப்போட்டு விட்டாச்சு.…வேண்டும், வேணாம் என இரண்டு தரப்புகள், வேண்டாம் என சொன்னது இரண்டு தரப்பு அதில் முற்போக்காளர்களின் கவலை மாட்டைப் பற்றியதில்லை மனிதர்களை பற்றியது.

ஜல்லிக்கட்டை உணர்வுப்பூர்வமாக மட்டுமே அனுகி வந்ததால் சில முற்போக்குச் சிந்தனை உடைய நண்பர்களிடம் கூட ஜல்லிக்கட்டு ஆதரவு நிலைப்பாடு தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம், தமிழ்ப் பண்பாடு என்ற அடிப்படையில் இருக்கிறது. இந்நிலையில் வந்து நின்றான் நண்பன் கொங்கு குல சிங்கம்..

மாட்டுக்கறி திங்கற நீங்க ஜல்லிக்கட்டு  என்ன சொல்றீங்க என்றான். அதுதான் ஒரு வருடமா சொல்லி வந்தாச்சே. அதேதான் என்றேன்.. நீங்க ஜல்லிக்கட்டு நடத்துங்க நடத்தாம போங்க. ஆனா மாணவர்கள் போராட்டத்துக்கு நடுவே இந்த சினிமாக் கார்ர்களை மட்டும் பிடித்து அவங்க ஏதோ அறிவு ஜீவிகள் மாதிரி கேள்வி கேட்பதை முதலில் நிறுத்துங்க... அன்னிக்கு அப்படித்தான் இந்த நடன இயக்குநர் கலா அவர்கள் ஏதோ ஒரு சேனலில் வந்து நான் பொள்ளாச்சி சூட்டிங் போறப்ப அடிக்கடி ஜல்லிக்கட்டை பார்த்திருக்கிறேன் என்கிறார்...

அது தப்பாச்சே… அதுக்கெல்லம் வைரமுத்து மாதிரி பாரம்பரியம் பண்பாடு எல்லாத்தையும் கரைத்து குடிச்ச ஆளை கூப்பிட்டு கேட்டிருக்கனும்.. என்றான் கொ.கு.சி..   

அட...போடா.. உங்களுக்கு ஏ 1 ஏ 2 பாலப் பற்றி விளக்கி கூடப் புரிய வைத்து விடலாம்.. ஆனால் உங்களுக்கு பால் பற்றி பல குழப்பங்கள் இருக்கு.. இதோ பாரு அண்ணாமலையில் அவர் எழுதிய பாடல்               

அண்ணல் காந்தி குடிச்சதெல்லாம், ஆயுள் வளர்க்கும் ஆட்டுப் பாலுங்க, அண்ணாமலை நான் குடுப்பதெல்லாம், அன்பு வளர்க்கும் மாட்டுப் பாலுங்க….

ஆட்டுப் பால் ஆயுள் வளர்க்கும் அப்படிங்கறார வைரமுத்து… கிழக்கு சீமையிலே பாடலில்….

ஆட்டுப்பால் குடிச்சா அறிவழிஞ்சி போகுமுன்னு, எருமப்பால் குடிச்சா ஏப்பம் வந்து சேருமுன்னு, காராம்பசு ஓட்டி வாராண்டி தாய் மாமன்..

ஆட்டுப் பால் அறிவை அழிக்கும் என்கிறார். பாலைப் பற்றிய தெளிவற்ற பார்வை தமிழ்ச் சமூகத்தில் ஏப்பவுமே இருக்குது.. இப்போரட்டத்தின் விளைவாக ஜல்லிக்கட்டு நடக்குதோ இல்லையோ வரும் காலத்தில் ஜல்லிக்கட்டு காளையால் சேர்ந்த நாட்டு மாட்டின் பால் இதுதான் உண்மையான ஏ2 பால் என வழக்கத்தில் உள்ளதை விட மூன்று மடங்கு விலைக்கு விற்பார்கள்.. எப்படி எனக் கேள்வியே கேட்காமல் வரிசையில் நின்னு வாங்கும் குடிப்பீங்க அது மட்டும் நிச்சயம்…

அது சரி அதென்ன ஜனவரி 17 தேதி அலகு மலையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஓடிய காளை மாட்டின் கொம்பில் ஈசுவரன் கட்சி கொடி மாதிரியே பெயிண்ட் அடிச்சு இருந்தீங்க என முடிக்கும் முன் வழக்கம் போல் ஓடிவிட்டான் கொ.கு.சி….

Pin It