கண்டி நாயக்கர் என்ற நாம் தமிழர் கட்சியின் ஆவணப்படத்தில் தமிழீழ வரலாற்றைத் தவறாகக் காட்டியிருந்தனர். அவற்றைக் கடந்த காட்டாறு ஜூன் இதழில் விளக்கினோம். அந்த ஆவணப்படத்தில் தமிழ்நாட்டு வரலாறு பற்றியும் மிகவும் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றைப் பார்ப்போம்.
“தமிழ்நாட்டின் வளமான பகுதிகளை எல்லாம் பாளையம், பாளையமாகக் கூறுபோட்டு, தமிழனின் வளங்களையும், அவனது உழைப்பையும் சுரண்டியதே பிராமணிய வருணாசிரமத்தைக் கடைபிடித்த தெலுங்கர்கள் தான்....பாளையப்பட்டு ஆட்சிமுறையில் தமிழர்களின் நிலங்களை வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக் கொண்டனர் தெலுங்கர்கள். இன்று தமிழகத்தில் நிலமில்லா ஏழைகளான பள்ளர் - பறையர்களின் ஏழ்மை நிலைக்குக் காரணம், வடுகர்களின் பாளையப்பட்டு ஆட்சிமுறைதான்.”
தாழ்த்தப்பட்ட மக்கள் மீது மிகவும் அக்கறை கொண்டவர்கள் போலக் காட்டிக்கொள்ளவும், தமிழ்நாட்டு தாழ்த்தப்பட்ட மக்களை பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பிலிருந்து திசை திருப்புவதற்காகவும் இக்கருத்து உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழர் நிலங்களைப் பறிமுதல் செய்த பார்ப்பன ‘ஊர்ச்சபை’
நாயக்கர்களால் தமிழர்களின் நிலம் பறிமுதல் செய்யப்பட்டதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. ‘பாளையம்’ என்ற வரிவசூல்முறை நாயக்க மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டது என்பது மட்டுமே உண்மை. அதுவும் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் காலத்தில் இருந்ததைப் போன்ற வரிவசூல் முறைதான்.
குறிப்பாக, இராஜராஜ சோழன் ‘ஊர்ச்சபை’ என்ற ஒரு முறை வழியாக, நிலவரி வசூலைச் செய்து வந்தான். அந்த ஊர்ச்சபை என்பது, ‘குடவேலைமுறை’ மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அப்படித் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் கட்டாயம் ‘வேதம் படித்த பார்ப்பனர்களாகவே இருக்க வேண்டும்’ என்று உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இராஜராஜ சோழன் காலத்திலிருந்து பார்ப்பனர்கள்தான் தமிழர்களிடம் நிலவரி வசூலிக்கும் அதிகாரத்தைப் பெற்று இருந்தனர். நாயக்கர்கள் காலத்தில் அது மாறியது.
சோழர்கள் கால நிலவரி வசூல் முறையாக இருந்தாலும் சரி, நாயக்கர் கால நிலவரி வசூல் முறையாக இருந்தாலும் சரி அவை தமிழர்களுக்கு எதிராகவும் - பார்ப்பனர்களுக்கு ஆதரவாகவும் இயங்கியன என்பது உண்மை. பாளையப்பட்டு முறையைவிட அதிகமான கொடுமைகளைச் செய்தது பார்ப்பனர்களின் ‘ஊர்ச்சபை’ முறை.
தமிழர்களின் நிலங்களைப் பார்ப்பனர்களுக்குப் பறித்துக்கொடுத்த சோழர்கள்
இராஜராஜசோழன் காலத்தில் பள்ளர் - பறையர் போன்ற அடித்தட்டு மக்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பார்ப்பனர்களுக்கு பிரம்மதேயங்களாகத் தாரை வார்க்கப்பட்டுள்ளன. இதுபற்றி, 1960ஆம் ஆண்டு ஏப்ரல் மாத ‘தாமரை’ இதழில் (மலர்:2, இதழ்:5) வெளிவந்துள்ள தகவலைப் பார்ப்போம்.
“சிறு நிலச் சொந்தக்காரர்களின் உடைமையைப் பறித்து கோயில் தேவதானமாகவும் இறையிலி நிலமாகவும் மாற்றினார்கள். உழவர்கள் தங்கள் உரிமைகளை இழந்தார்கள். உழுதுண்போரின் நிலங்களில் பலவற்றைப் பிரமதேயமாக்கினார்கள். ஆகவே நிலவுடைமை கோயிலுக்கோ, கோயில் நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்திய மேல் வர்க்கங்களுக்கோ மாற்றப்பட்டது. இதனால் உழுதுண்போர் நிலை தாழ்ந்தது. இது மட்டுமல்ல; போர்களுக்கும் கோயில் செலவுகளுக்கும் அரசனது அரண்மனை ஆடம்பரச் செலவுகளுக்கும் சாதாரண மக்கள் மீது வரிகள் விதிக்கப்பட்டன.
இவ்வரிகளை வசூலிக்கும் உரிமை மேல் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களை அங்கத்தினர்களாகக் கொண்ட ஊர்ச்சபைகளிடமே விடப்பட்டிருந்தன. அவர்கள் தங்கள் உடைமைகளுக்கும் நலன்களுக்கும் பாதகம் ஏற்படாத வகையில் வரியையும் கடமைகளையும் இறைகளையும் வசூலித்தார்கள். வரி கொடுக்க முடியாத ஏழைகளைக் கொடுமைப்படுத்தினார்கள்.
வரி கோயிலுக்கென வசூலிக்கப்பட்டதால் வரி கொடாதவர்களுக்குச் ‘சிவத் துரோகி' என்ற பட்டம் சூட்டி நிலங்களைப் பறிமுதல் செய்தார்கள் அல்லது நிலத்தில் ஒரு பகுதியை விற்று ‘தண்டம்' என்ற பெயரால் கோயிலுக்கு அளித்தார்கள். இத்தகைய ஒரு சுரண்டல் முறையை படைகளின் பாதுகாப்போடும் மதக் கொள்கைகளின் அனுசரணையோடும் சோழ மன்னர்கள் பாதுகாத்தனர்.” ( 17)
இராஜராஜன் காலத்தில், வடஆற்காடு மாவட்டம் உக்கல் என்ற ஊரில் உள்ள ஒரு கல்வெட்டு கூறும் செய்தி ஒன்றின் வழியாக நாம் அறிந்த செய்தி முக்கியமானது. அதாவது,
இரண்டு ஆண்டுகள் நிலவரி செலுத்தாத விவசாயிகளின் நிலங்கள் ஊர்ச்சபைப் பார்ப்பனர்களால் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட நிலங்கள்,‘பெருவிலை’ என்ற பெயரில் ஏலத்துக்கு விடப்பட்டன. அதில் கிடைத்த தொகையைக் கொண்டு நிலவரியை எடுத்துக்கொண்டனர். இதில் கொடுமை என்னவென்றால், இந்த ஏலத்தில் பங்குபெற்று, நிலத்தைப் பெறுபவர்கள் அந்த நிலத்துக்குரிய வரியைக் கட்டிவிட்டு, நிலத்தை ‘தேவதானங்கள்’ என்ற பெயரில் கோவில்களுக்கு இலவசமாகத்தான் வழங்க முடியும். சொந்தமாக வைத்துக்கொள்ள முடியாது. இந்த தேவதானங்களின் உரிமையும், நிர்வாகமும் பார்ப்பன ஆதிக்கத்தில்தான் இருந்தன. இந்தக் கொடூரமான நிலப்பறிப்பு முறையை, அரசு உத்தரவாகவே கல்வெட்டில் அறிவித்துள்ளான் இராஜராஜன். ( 18 )
நாகை மாவட்டம் திருமணஞ்சேரி கல்வெட்டு, தஞ்சை மாவட்டம் களப்பால் கல்வெட்டு மற்றும் திருவொற்றியூர் கல்வெட்டு ஆகியவை சோழர்கள் காலத்தில் தொடர்ச்சியாக இதுபோன்ற தமிழர் நிலப்பறிப்புகள் நடந்ததைப் பதிவு செய்துள்ளன.
பார்ப்பன நிலங்களுக்குப் பக்கத்து நிலங்களும் பறிப்பு
இராஜராஜசோழன் காலத்தில் மேலும் ஒரு நிலப்பறிப்பு வகை அறிமுகமானது. அதாவது, தமிழ் மன்னர்கள், பார்ப்பனர்களுக்குப் பல நேரங்களில் ஒட்டுமொத்த ஊர்களையுமே பிரம்மதேயம் என்ற பெயரில் தானமாக வழங்கிவந்தனர். சில நேரங்களில் ஓர் ஊரிலுள்ள பாதி நிலங்களையோ, ஒரு குறிப்பிட்ட குறைவான அளவு நிலங்களையோ வழங்கி இருக்கிறார்கள். பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்டதைத் தவிர மற்ற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரின் நிலங்களும் அந்த ஊரில் இருக்கும்.
அப்படிப் பார்ப்பனர்களைத் தவிர மற்ற ஜாதியினருக்கும் நிலஉரிமை இருப்பது, ஊர் நிர்வாகத்தை, நிர்வகிப்பதில் சிக்ககலாக இருக்கிறது என்று பார்ப்பனர்கள் இராஜராஜனிடம் குற்றச் சாட்டுக்களைக் கூறினர். அதன் அடிப்படையில் இராஜராஜன் கி.பி.1002 ல் ஒரு அறிவிப்பு வெளியிடுகிறான். “பிரம்மதேய நிலங்களுக்குப் பக்கத்தில் நிலம் வைத்திருப்பவர்கள் யாராக இருந்தாலும், நிலங்களைப் பக்கத்திலுள்ள பார்ப்பனர்களுக்கு விற்றுவிட்டு ஊரைவிட்டு வெளியேற வேண்டும்” என்று உத்தரவிடுகிறான்.
இந்த முறைப்படி, ஏராளமான கிராமங்களில் உள்ள தமிழர்களின் நிலங்கள் பார்ப்பனர்களால் பறிமுதல் செய்யப்பட்டு, முழுமையான பார்ப்பன கிராமங்களாக மாற்றப்பட்டன. சான்றாக, தஞ்சையிலுள்ள இராஜகிரி, சென்னையிலுள்ள வேளச்சேரி ஆகியவை ஆகும். ( 19)
நிலவரி - நிலப்பறிப்புகளுக்கு எதிரான புரட்சி
சோழர்கள் காலத்தில் இடங்கை - வலங்கை என இரண்டு பிரிவுகளாக தமிழர்கள் பிரிந்து கிடந்தார்கள். இந்த இரண்டு பிரிவிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் இருந்தனர். இரு பிரிவிலும் பிற்படுத்தப்பட்ட மக்களும் இருந்தனர். ஆனால் இரு பிரிவிலும் பார்ப்பனர்களும், சைவ வேளாளர்களும் இடம்பெறவில்லை. வலங்கைப் பிரிவினர் பார்ப்பனர்களுக்குப் பெரும்பாலும் அடிமையாக இருந்தனர். இடங்கையினர் பார்ப்பன - வெள்ளாளர்களின் எதிர்ப்பாளர்களாக இருந்தனர்.
பார்ப்பனர்களின் நிலப்பறிப்பும், சோழர்களின் வரிச்சுமையும் அதிகமாக அதிகமாக ஒரு கட்டத்தில் அது பெரும் போராக வெடித்தது. கி.பி.1071 ல், பார்ப்பனர்களின் கிராமமான, ‘இராஜமகேந்திர சதுர்வேதி மங்கலம்’ என்ற கிராமமே தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. அங்கிருந்த கோவிலும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. அக்காலத்தில் கோவில்களின் சுவர்களில் தான் நிலவுரிமை பற்றிய குறிப்புகள் கல்வெட்டுக்களில் பதிவு செய்யப்பட்டிருந்தன. எனவே அந்த நிலஉரிமைப் பதிவுகளை உடைத்தெறியப்பட்டுள்ளன. இக்கிளர்ச்சி பற்றிய செய்தியை முதலாம் குலோத்துங்கன் ஆட்சியில் திருவரங்கக் கோயிலில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று விரிவாகத் தெரிவிக்கிறது.” (20)
மேற்கண்ட எழுச்சி, தாழ்த்தப்பட்ட மக்களின் விளைநிலங்கள் சோழர்களால் பறிமுதல் செய்யப்பட்டு பார்ப்பனர்களுக்கும், சைவ வேளாளர்களுக்கும் தாரை வார்க்கப்பட்டதற்கு எதிராக நடந்த புரட்சிக்குச் சான்றாக உள்ளது.
சோழர்களால் பிடுங்கப்பட்ட தாழ்த்தப்பட்டோரின் நிலங்கள்
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளரும், திருப்பதி, சென்னைப் பல்கலைக் கழகங்களில் பேராசிரியராகவும், பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் வரலாற்றுத் துறைத் தலைவராகவும் பணியாற்றிய பேராசிரியர் கே.இராஜய்யன் அவர்கள் தனது, ‘தமிழ்நாட்டு வரலாறு’ என்ற நூலில், சோழர்கள் நிலப்பறிமுதலில் ஈடுபட்டதைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
“அடிக்கடி வளமான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, பார்ப்பனர்களுக்குத் தானமாக வழங்கப்பட்டன. இதனால் அரச ஒடுக்குமுறையிலிருந்து குடியானவர்கள் பாதுகாக்கப்படாது போயினர். பெரும் நிலப்பரப்புக்கள் சேவை நிலங்களாயும், மானிய நிலங்களாயும் அளிக்கப்பட்டுவரி விலக்குத் தரப்பட்டன.”
சோழர்களால் அடிமைகளாக்கப்பட்ட பறையர்கள்
அதே நூலில், பறையர் இன மக்கள் கொத்தடிமைகளாகவும், விலைக்கு விற்கப்படும் அல்லது வாங்கப்படும் அடிமைகளாகவும் இருந்தனர் எனப் பதிவு செய்துள்ளார்.
“பறையர்கள் வேளாண் பாட்டாளியாய் இருந்தனர். விவசாய நடவடிக்கைகளில் பெரும்பாலானதைச் செய்த அவர்கள் மக்கள் நலனுக்கு உதவினர். எனினும், அவர்களுக்குத் தரப்பட்ட வெகுமதி, சேரிகள் எனப்பட்ட அருவருப்பான மூலைமுடுக்குகளில் வறுமையிலும், பட்டினியிலும் உழலுமாறு விடப்பட்டதுதான். பெரும்பாலான பண்ணைக்கூலிகள் அடிமை களாய் (அ) கொத்தடிமைகளாய் வாழ்ந்தனர். குரூரமாய் நடத்தப்பட்டனர். விற்கப்பட்டனர். மீளவும் விற்கப்பட்டனர் என்பது தெளிவாகிறது. இவ்வடிமைகளில் அதிகமானோரைக் கோவில்கள் வைத்திருந்தன.” (21)
பல்லவர் ஆட்சியில் பார்ப்பனர்களுக்கே நிலஉரிமை
சோழர்களுக்கு முன் பல்லவர்கள் ஆட்சிக்காலத்திலும், குறிப்பாக முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில், தாழ்த்தப்பட்டவர்களுக்கு நில உரிமை முற்றிலும் மறுக்கப்பட்டிருந்தது. பார்ப்பனர் களுக்கும், சில உயர் ஜாதிகளுக்கும் மட்டும் நில உரிமையும், நீர்ப்பாசன உரிமையும் இருந்தது. இவர்களின் நிலங்களில் உழைக்கும் உரிமை மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், தாழ்த்தப் பட்டவர்களுக்கும் இருந்தது. இதற்கான சான்றுகளையும் பேராசிரியர் கே.இராஜய்யன் பதிவு செய்துள்ளார்.
பள்ளர் - பறையர் - பிற்படுத்தப்பட்டோரில் சில ஜாதிகள் என அனைவரும் நிலஉரிமையற்றுப் போனதற்குக் காரணம் நாயக்கர்கள் அல்ல; சேர, சோழ, பாண்டிய, தமிழ்மன்னர்களே அடிப்படைக் காரணம்.
‘பாளையக்காரர்’ முறையை உருவாக்கியவர் தமிழ்நாட்டுச் சைவ வேளாளர்
ஆந்திராவில், விஜயநகரப் பேரரசு இருந்த காலத்தில், ‘நயன்கரா’ என்ற முறையை வைத்திருந்தனர். கிருஷ்ணதேவராயர் காலத்தில் அந்த ‘நயன்கரா’ என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதைப் பின்பற்றித் தான் தமிழ்நாட்டில் 72 பாளையங்களை உருவாக்கினார்கள். ஆந்திராவில் தெலுங்கு பேசும் ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கி நிலவரி வசூலை மேற்கொண்டனர். தெலுங்கு பேசும் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு தெலுங்கு பேசும் பார்ப்பனர்களுக்குத் தாரை வார்க்கப்பட்டது. தமிழ்நாட்டில் தமிழ்பேசும் மக்களை ஒடுக்கினர்.
தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் பார்ப்பனர்களுக்காகவும், உயர்ஜாதியினருக்காகவும் உருவாக்கப்பட்ட இந்த ‘நயன்கரா’ மற்றும் ‘பாளையப்பட்டு’ முறைகளை அறிமுகப்படுத்தியவர் தமிழ்நாட்டுத் தொண்டை மண்டலச் சைவ வேளாளராகிய அரியநாத முதலியார் ஆவார். கிருஷ்ண தேவராயர் ஆட்சியிலும், மதுரை நாயக்கர்களில் முதல் நான்கு தலைமுறை ஆட்சிகளிலும் பிரதம அமைச்சராகவும் படைத்தளபதியாகவும் திகழ்ந்தவர் இவர். அதனால் இவருக்கு ‘தளவாய்’ என்ற பட்டமும் உண்டு.
மதுரை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் பள்ளர் - பறையர் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், கடும் நிலவரிகள் இருந்ததற்கும் அடிப்படைக் காரணம் ‘தளவாய் அரியநாத முதலியார்’ என்ற தமிழரே ஆவார். (22)
பாளையக்காரர்களாக இருந்த தமிழர்கள்
இந்த 72 பாளையங்கள் தலைவர்களாக - பாளையக்காரர்களாக இருந்தவர்கள் முற்றிலும் நாயக்கர்கள் மட்டுமல்ல; இவற்றில் 24 பாளையங்கள் கள்ளர், மறவர், அகமுடையர், வன்னியர், வலையர், செட்டியார் போன்ற பல ஜாதியினரைக் பாளையக்காரர்களாகக் கொண்டவையாகும். குறிப்பாக இராமநாதபுரம், சிவகிரி, ஊத்துமலை, ஊர்க்காடு, சேத்தூர், சிங்கம்பட்டி, ஆவுடையாபுரம், கடம்பூர், அழகாபுரி, சுரண்டை, கொல்லங்கொண்டான், தலைவன்கோட்டை எனப் பலவற்றைக் கூறலாம். இந்த 24 பாளையங்களில் அடித்தட்டு மக்களைக் கொடுமைப்படுத்தியவர்கள் மேற்கண்ட ஜாதியைச் சேர்ந்த தமிழர்கள் தான். தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் அதாவது தற்போதைய திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம் பகுதியைச் சேர்ந்த எண்ணற்ற ஜமீன்களுக்குத் தலைவர்களாக இருந்தவர்கள் தமிழர்கள்தான்.
ஜெயமோகனின் வரலாற்றுப் புரட்டு
தோழர் பெரியாரின் கட்டளைகளைச் செயல்படுத்திய நீதிக்கட்சியானது, ஜமீன்தார்களின் நலன்களைப் பாதுகாக்க - ஜமீன்தார்களால் உருவாக்கப்பட்ட கட்சி என்ற குற்றச்சாட்டு நெடுங்காலமாகவே இருக்கிறது. பல கம்யூனிஸ்ட்டுகளும், ஆர்.எஸ்.எஸ் காரர்களும் பல காலமாக இந்தக் குற்றச்சாட்டைக் கூறிவருகிறார்கள்.
விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் ‘தடம்’ ஆகஸ்ட் 2016 இதழில், எழுத்தாளர் ஜெயமோகனின் நேர்காணல் வெளியாகி உள்ளது. சுகுணா திவாகர், வெய்யில் ஆகியோர் இந்த நேர்காணலை எடுத்துள்ளார்கள். அதில்,
“1910 க்குப் பிறகு வந்த நிலச்சீர்திருத்தச் சட்டங்களில், பெரிய அடி வாங்கியவர்கள் தெலுங்கர்கள். அதற்கு முன்பு தமிழகத்தில் நிலம் தனியுடைமை கிடையாது. ரயத்வாரிமுறை வந்தபோது ஒருவருக்கு நிலம் பட்டாப் போட்டுக்கொடுக்கும் உரிமை தாசில்தாருக்க வழங்கப்பட்டது... இந்தக் காலகட்டத்தில் தெலுங்கர்களின் கையிலிருந்த நிலம் பல்வேறு ஜாதிகளின் கைக்குப் போனதற்கும், தெலுங்கர்களின் பெரிய அளவிலான வீழ்ச்சிக்கும் பிராமணர்கள் காரணமாக இருந்தார்கள். இந்த வரலாற்றுப் பின்புலத்தில் பிராமணர்கள் மீது ஒரு வெறுப்பு திராவிட இயக்கத்திற்குள் பிராமணிய எதிர்ப்பு உளவியலாக உள்ளே வருகிறது. இயல்பிலேயே திராவிட இயக்கத்தவர்களுக்கு பிராமண வெறுப்பை அவர்களது குடும்பப் பின்னணி கொடுத்தது. அதை அவர்கள் அரசியலாக மாற்றிக் கொண்டார்கள்.
....உங்களுடைய நிலத்தைப் பறித்தவன் என்கிற கோபத்தை, வெறுப்பை முற்போக்கு என்ற பெயரில் முன்வைக்காதீர்கள் என்று சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
...பெரியார் உட்பட பலரிடமும் இந்த உளவியல் செயல்படுவதாக நான் கருதுகிறேன். இது ஒரு வரலாற்று உண்மை”
என்று கூறியுள்ளார் ஜெயமோகன். அதை அப்படியே வேறு சொற்களில் கண்டிநாயக்கர் ஆவணப்படத்திலும் கூறியுள்ளார்கள். அதாவது,
“பிராமணர் அல்லாதோருக்கு சமூகநீதி கிடைக்கத் தொடங்கப்பட்டதாகச் சொல்லப்படும் நீதிக்கட்சியானது, உண்மையிலேயே, செல்வாக்கு இழந்த தெலுங்கு ஜமீன்தார்கள் மீண்டும் மேலே வருவதற்காகத் தொடங்கப்பட்டதே ஆகும். சிறுபான்மை மக்களான தங்களால் மட்டும் ஆட்சி அதிகாரத்திலிருக்கும் பிராமணனைக் கீழே இறக்குவது கடினம் என்றுணர்ந்த தெலுங்கர்கள், சுயமரியாதை இயக்கம் என்ற பெயரிலும், திராவிட இயக்கம் என்ற பெயரிலும் தமிழர்களையும் தங்களோடு சேர்த்துக்கொண்டனர். இந்த வேலையைக் கச்சிதமாகச் செய்து முடித்தவர் ஈ.வெ.இராமசாமி நாயக்கர்.”
இவ்வாறு இந்துமத அடிப்படைவாதிகளும், பொதுவுடைமைக்காரர்களும், தமிழ்த்தேசியம் பேசும் பலரும் சொற்களை மட்டும் மாற்றி, மாற்றி ஒரே குற்றச்சாட்டைக் கூறிவருகின்றனர்.
ஜெயமோகனை மறுக்கும் ஜெயமோகன்
ஜெயமோகன் சொல்வது போல 1910 க்குப் பிறகு வந்த நிலச்சீர்திருத்தச் சட்டங்கள் தெலுங்கர்களுக்கு எவ்விதப் பாதிப்பையும் உண்டாக்கவில்லை. நாயக்கர்கள் ஆட்சியில் ‘பாளையக் காரர்கள்’ என்ற பெயரில் வரிவசூலித்த தெலுங்கர்கள் - ஆங்கிலேயர் ஆட்சியில் ‘ஜமீன்தார்’ என்ற பெயரில் வரிவசூலித்தார்கள். பெயர் மட்டுமே மாறியது.
இதற்கு ஜெயமோகன் அவர்களே சான்றுகளைத் தந்துள்ளார். அவரது www.jeyamohan.in இணையதளத்தில் பாளையக்காரர்களின் வரலாற்றை விரிவாகக்கூறும் நூல்களைப் பற்றி எழுதியுள்ள விமர்சனங்களில் அவை உள்ளன.
“இந்நூலின் பெரும்பகுதி பாளையக்காரர்களுக்கும் பிரிட்டிஷ் ஆட்சியாளருக்கும் உள்ள உறவைப்பற்றியதாகும். பாளையக்காரர் முறையை முடிவுக்குக் கொண்டுவந்தவர்கள் பிரிட்டிஷார். உண்மையில் அவர்கள் அதை அப்படியே ஜமீந்தாரி முறையாக மாற்றிக் கொண்டனர். எட்டயபுரம், புதுக்கோட்டை, கடம்பூர், சேத்தூர், சிவகிரி, சொக்கம்பட்டி போல அவர்களுக்கு ஆதரவாக நின்ற பாளையக்காரர்களை ஜமீந்தார்களாக ஆக்கினார்கள். அவர்களை எதிர்த்த பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன், நெற்கட்டும் செவல் புலித்தேவன், சிவகங்கை மருதுபாண்டியர் போன்றவற்றை முற்றாக அழித்தனர். சிவகங்கையின் பெரும்பகுதி புதுக்கோட்டை ஜமீனுக்கு அளிக்கப்பட்டது. பாஞ்சாலங் குறிச்சியும் நெற்கட்டும் செவலும் பெரும்பாலும் எட்டையபுரத்துடன் சேர்க்கப்பட்டு அது ஒரு குட்டி சம்ஸ்தானம்போல விரிந்தது.” ( எட்டையபுரமும் தெலுங்கு நாயக்கர் ஜமீனாகும்)
- சில வரலாற்று நூல்கள் 4 – தமிழ்நாட்டு பாளையக்காரர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்: கே.ராஜையன். http://www.jeyamohan.in/17206#.V7ZmUU197IU
“நாயக்கர் வரலாற்றில் பல விஷயங்கள் விவாதத்துக்கு உரியவை. குறிப்பாக அவர்கள் உருவாக்கிய பாளையப்பட்டுமுறை பிற்காலத்தில் பொறுப்பில்லாத பாளையக்காரர்களை உருவாக்கி அராஜகத்துக்கு வழியமைத்தது. ஆனால் இதை கண்டிக்கும் நெல்சன் போன்றவர்கள் இதே பாளையப்பட்டுக்களை அப்படியே ஜமீந்தார்களாகத் தொடரவைத்து வெள்ளையர் ஆண்டதைப்பற்றி மெளனம் சாதிக்கிறார்கள்.”
- சில வரலாற்று நூல்கள் – 3 -மதுரை நாயக்கர் வரலாறு (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ) http://www.jeyamohan.in/15#.V7Zlb0197IU
எனவே, தங்களின் நிலங்கள் பறிபோகக் காரணமாக இருந்தார்கள் என்பதற்காக, பார்ப்பன எதிர்ப்பு என்ற முற்போக்கு பேசப்பட்டது என்ற கருத்து முற்றிலும் தவறானது. தமிழ்மன்னர்கள் ஆட்சியில் பிரம்மதேயங்களாக, தேவதானங்களாக தமிழர் நிலங்களைப் பறித்த பார்ப்பனர்கள் - ஆங்கிலேய ஆட்சியில் இனாம்களாக, மைனர் இனாம்களாக நிலவுடைமையைத் தொடர்ந்தனர். பாளையங்களிலும், ஜமீன்களிலும் அதிகார மய்யங்களாகத் திகழ்ந்தவர்களும் பார்ப்பனர்கள்தான். இராமப்பய்யன் என்ற பார்ப்பனர்தான் திருமலை நாயக்கரின் படைத் தளபதியாகவும், பிரதம அமைச்சராகவும் இருந்தார்.
நாயக்கர் ஆட்சியோ, ஜமீன்களோ எந்த நிலையிலும் பார்ப்பனர்களை எதிர்த்ததே இல்லை. அதற்கு எந்த வரலாற்றுச் சான்றும் கிடையாது. இவர்கள் பார்வையில், தெலுங்கர்கள் என அடையாளம் காட்டப்பட்டவர்கள் தான், தெலுங்கர்களின் நிலத்தைப் பறித்தார்கள் என்பதே உண்மை வரலாறு.
ஜமீன்தார் முறை உருவாக்கம்
பாளையப்பட்டு முறை என்பது நாயக்கர்களின் ஆட்சிக் காலத்திற்குப் பிறகு முடிவுக்கு வந்தது. ஆனால் பாளையங்கள் அப்படியே ஜமீன்கள் ஆக மாறின. 1799 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு பாளையங்களை அப்படியே ஜமீன்களாக்கியது. பல பாளையக்காரர்கள் ஜமீன்தார்களாக ஆட்சியைத் தொடர்ந்தனர். பல புதிய ஜமீன்களும் உருவாக்கப்பட்டன. அதில் தமிழ்நாட்டின் பல உயர்ஜாதியினரும் இடம்பெற்றனர்.
குன்னியூர் சாம்பசிவ அய்யர் என்ற பார்ப்பனர் 60,000 ஏக்கர் நிலங்களைக் கொண்ட ஜமீன்தாராக மாறினார். வடபாதி மங்கலம் ஜமீன் 8000 ஏக்கர்களைக் கொண்ட பிள்ளைமார் ஜமீன் ஆகியது. உக்கடை, பூண்டி போன்ற பல ஜமீன்கள் உருவாகின. பாளையங்களின் நிர்வாகத்தைவிட, ஜமீன்களின் நிர்வாகத்தில் தமிழ்நாட்டு ஜாதிகள் அதிகமாக இடம்பிடித்தன.
தெலுங்கு ஜமீன் எதிர்ப்பில் பெரியாரும் நீதிக்கட்சியும்
1933 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் இராசிபுரத்தில், சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் ‘ஜமீன்தாரல்லாதார் மாநாடு’ ஒன்று நடைபெற்றது. அதில் தோழர் பெரியார் பேசிய உரை 27.08.1933 ஆம் நாளிட்ட குடி அரசு ஏட்டில் முழுமையாக வெளியாகி உள்ளது. அதை முழுவதுமாகப் படித்தால் தான் தெலுங்கர் என்று அடையாளம் காட்டப்படும் தோழர் பெரியாரின் தெலுங்கர் எதிர்ப்பும், ஜமீன் எதிர்ப்பும் தெளிவாகப் புரியும்.
“தோழர்களே! மொத்த விஸ்தீரணத்தில் மூன்றிலொரு பாக பரப்புக்கு மேல் ஜமீன் முறை இருக்கும் இந்த சேலம் ஜில்லாவில் முதல் முதலாக இன்று இங்கு ஜமீன்தாரல்லாதார் மகாநாடு ஒன்று கூட்டப்பட்ட தானது எனக்கு மிகுதியும் மகிழ்ச்சியைக் கொடுப்பதாகும்.
...நாம் உலக பொதுஜனங்களுக்குச் செய்யவேண்டிய வேலைகளின் முக்கியத்துவம் எல்லாம் இம்மாதிரியாக பல அல்லாதார்கள் மகாநாடுகள் கூட்டி அவர்களது ஆதிக்கங்களையும், தன்மைகளையும் ஒழிப்பதில் தான் பெரிதும் அடங்கியிருக்கின்றது. இன்னும் இதுபோலவே பல மகாநாடுகள் கூட்ட வேண்டியிருக்கிறது.
...உதாரணமாக லேவாதேவிக்கார்கள் அல்லாதார் மகாநாடு, முதலாளிகள் அல்லாதார் மாநாடு, தொழிற்சாலை சொந்தக்காரர்கள் அல்லாதார் மகா நாடு, வீடுகளின் சொந்தக் காரர்கள் அல்லாதார் மகாநாடு, நிலச்சுவான்தார் அல்லாதார் மகாநாடு, மேல்ஜாதிக்காரர்கள் அல்லாதார் மகாநாடு, பணக் காரர்கள் அல்லாதார் மகாநாடு என்பது போன்ற பல மகாநாடுகள் கூட்டி இவர்களின் அக்கிரமங்களையும், கொடுமைகளையும், மோசங்களையும் பொது ஜனங்களுக்கு விளக்கிக் காட்டி அவைகளை ஒழிக்கச்செய்ய வேண் டியது நமது கடமையாகும்.
...பார்ப்பனர்களைப் போலவே ஜமீன்தார்கள் பிறவியின் காரணமாகவே பரம்பரை உயர்வுள்ளவர்கள் என்று சொல்லிக்கொள்ளப்படுபவர்கள். பார்ப்பனர்களைப் போலவே ஜமீன்தார்கள் இன்றைய ஆட்சி முறைக்கு தூண்கள் போலவும் இருந்து வருகின்றவர் களாவார்கள். பார்ப்பனர்களைப் போலவே ஜமீன்தார்கள் என்பவர்கள் உலகத்துக்கு வேண்டாதவர்களும், உலக மக்கள் கஷ்டங்களுக் கெல்லாம் காரணமாயிருப்பவர்களுமாவார்கள்.
...இந்த ஜமீன்தார்கள் எப்படி ஏற்பட்டார்கள்? எப்படியிருந்து வருகின்றார்கள்? இவர்களது செல்வமும், மேன்மையும் எதற்குப் பயன்படுகின்றன? என்பவைகளை யோசித்துப்பார்த்தால் இவர்கள் உலகுக்கு வேண்டாதவர்கள் என்பதும், ஒழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதும் நன்றாய் விளங்கும்.
...ஒரு கஷ்டமும், ஒரு விபரமும் அறியாதவர்களும், ஒரு பொருப்பும் இல்லாதவர்களுமான ஜமீன்தார்கள் சர்க்காரில் லைசென்சு பெற்ற கொள்ளைக்கூட்டத்தார்கள் போல் இருந்து கொண்டு மக்கள் பதரப்பதர வயிறு வாய் எரிய எரிய கைப்பற்றி பாழாக்குவதென்றால் இப் படிப் பட்ட ஒரு கூட்டம் உலகில் இருக்கவேண்டுமா? என்றும் இவர் களின் தன்மையையும், ஆதிக்கத்தையும் இன்னம் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு ஜன சமூகம் சுயமரியாதையை உணர்ந்த-ஜனசமூகமாகுமா?
...மேல்ஜாதி, கீழ்ஜாதி முறை கூடாதென்றும், குருக்கள் முறை கூடாதென்றும் எப்படி நாம் பல துறைகளில் வேலை செய்கின்றோமோ அது போலவேதான் ஜமீன்தாரன்-குடிகள் என்கின்ற தன்மையும், முறையும் கூடாதென்று வேலைசெய்ய நாம் கட்டுப்பட்டவர்களாய் இருக்கின்றோம் என்ற இச்சிறு வார்த்தைகளோடு இந்தத்தீர்மானத்தை நான் பிரேரேபிக்கிறேன்.
தீர்மானம்: 1. உலக செல்வத்தை ஒரேபக்கம் சேர்க்கும் முறையை ஒழிப்பதற்கும், உலகப் பொருளதார, சமத்துவத்துக்கும் பாடுபடுகிற மக்கள் அதன் பயனை சரிவர அடையவேண்டும் என்பதற்கும், ஜமீன்தார் முறையானது பெருத்த கெடுதியாகவும், தடையாகவும் இருந்துவருவதால் ஜமீன்தார் தன்மையை அடியோடு ஒழிக்கப் பகுத்தறிவுக்கு ஏற்றவழியிலும், பொருளாதார சமத்துவ நியாய வழியிலும் சுயமரியாதை இயக்கம் பாடுபடவேண்டுமென்று இம் மகாநாடு தீர்மானிக்கிறது. (23)
இவ்வாறு ஜமீன்தார்களுக்கு எதிராக ஒரு மாபெரும் மாநாட்டைக் கூட்டி, அவர்களுக்கு எதிராக ஒரு எதிர்ப்புணர்ச்சியைக் கட்டி எழுப்பியவர் பெரியார்.
சமஸ்தான எதிர்ப்பில் பெரியார்
1933 ல் அகில இந்திய அளவில் பெரும்நிலவுடைமையாளர்களாகவும், ஜமீன்களை விட அதிகாரம் படைத்த மன்னர்கள் போல வாழ்ந்தவர்களுமான 562 சமஸ்தானங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வந்தது. அதை எதிர்ப்பதிலும் பெரியார் முன்னணியில் நின்றார்.
“இவ்வாரம் சிம்லாவில் நடந்த இந்திய சட்ட சபைக்கூட்டத்தில் இந்திய சுதேச சமஸ்தானங்களின் பாதுகாப்புக்காக என்று “இந்தியாவில் அரசர் பெரு மானின் சர்வாதிகாரத்துக்கு உள்பட்ட சமஸ்தானங்களின் பாதுகாப்புச் சட்டம்” என்பதாக ஒரு புதிய சட்டம் அரசாங்கத்தாராலேயே கொண்டுவரப் பட்டிக் கிறது.
...பிரிட்டிஷ் முதலாளித்தன்மை ஆட்சியும், அவர் களது ஏகாதிபத்திய ஆணவமும் ஒழிவதற்கு முன் இந்த இந்திய சமஸ்தான முதலாளித்தன்மை ஆட்சியும், அவர்களது பொருப்பற்ற கொடுங்கோன்மை கூடா ஒழுக்கஆட்சியும் அழிந்து மறைந்து ஒழிய வேண்டியது அவசரமும் அவசியமுமான காரியமாகும் என்பதே நமதபிப்பிராயம். அப்படி இருக்க இப்போது அவர்களையும் சமஸ்தானங்களையும் காப்பாற்ற புதிதாக ஒரு சட்டம் செய்வது மிகமிகக் கொடுமையான காரியம் என்றே சொல்லு வதுடன் இச்சட்டம் அச்சமஸ்தானாதிபதிகளை இன்னமும் என்ன வேண்டு மானாலும் செய்யுங்கள் என்று சொல்லி லைசென்சு அனுமதிச்சீட்டு கொடுத் தது போலவும் ஆகிறது என்பதே நமதபிப்பிராயம்.” (24)
ஜமீன்களை ஒடுக்கிய நீதிக்கட்சி ஜமீன்தார்
தோழர் பெரியார் சமுதாயத்தில் ஏற்படுத்திய எழுச்சி அரசியலிலும் எதிரொலித்தது. பெரியாரின் மிக நெருங்கிய நண்பரும், அப்போதைய சென்னை மாகாணத்தின் முதல்அமைச்சராகவும் விளங்கியவர் பொப்பிலி அரசர் என்று அழைக்கப்பட்ட இராமகிருஸ்ண ரெங்கா ராவ் ஆவார். அவர் அதே 1933 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜமீன்களுக்கு எதிரான ஒரு சட்டத்தைப் பிறப்பித்தார். அது Velliyakundam Impartible Estate Act, 1933 எனப்படும்.
மதுரை மாவட்டத்திலுள்ள நாயக்கர்கள் தலைமையிலான வெள்ளியகுண்டம் ஜமீனுக்குரிய நிலங்களில் அந்த ஜமீன்தாருக்கு முழுஉரிமை இல்லை. நினைத்தவுடன் நிலங்களை விற்கவோ, உழுபவர்களை வெளியேற்றவோ முடியாது என்பதை அறிவிக்கும் ஆணை அது. இப்படி ஒரு தெலுங்கு ஜமீன்தாருக்கு எதிராக அவரது அதிகாரத்தைப் பறித்த முதலமைச்சரும் ஒரு தெலுங்கு ஜமீன்தார்தான்.
வெள்ளியகுண்டம் ஜமீனைத் தொடர்ந்து மேலும் பல ஜமீன்களுக்கு எதிராக ஆணைகளைப் பிறப்பித்து, அங்கு உழைத்துக் கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தது பொப்பிலி அரசரின் ஆட்சி. ஜமீன்களின் அதிகாரத்தில் கைவைத்த போது வந்த எதிர்ப்பைவிட இனாம்களின் அதிகாரத்தில் கைவைத்த போது வந்த எதிர்ப்புகள் கடுமையாக இருந்தன.
தெலுங்கு ஜமீன்களை அழித்த தெலுங்கர்
பாளையப்பட்டு ஆட்சிமுறையை சைவ வேளாளரான அரியநாத முதலியார், அறிமுகப்படுத்தி, செயல்படுத்தினார் என்பதைக் கண்டோம். தெலுங்கு பாளையக்காரர்களின் ஆட்சிமுறை ஆங்கிலேயர் அரசில் அப்படியே ஜமீன்களாக மாறியதையும் கண்டோம். தோழர் பெரியார் மற்றும் நீதிக்கட்சியின் அயராத போராட்டங்களால் ‘ஜமீன்தார் - இனாம்தார்’ ஆகிய இரண்டு கொடுமையான முறைகளும் 1948 ல் முடிவுக்கு வந்தன. அந்த இரண்டு ஆதிக்கங்களையும் ஒரு சேர அழித்தவர் தோழர் பெரியாரின் உற்ற நண்பரான, தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் ஆவர். அவர் ஒரு தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார்.
The Tamilnadu Estates ( Abolition and Conversion into Ryotwari) Act 1948 என்ற இச்சட்டத்தின்படி கோடிக்கணக்கான ஏக்கர் பரப்புள்ள ஜமீன்நிலங்களும், பார்ப்பன ஆதிக்கத்தில் இருந்த இனாம் நிலங்களும் அரசுக்குச் சொந்தமானதாக ஆக்கப்பட்டன. மேற்கண்ட நிலங்களில் சாகுபடி செய்தவர்களுக்கு ரயத்வாரிமுறையில், அதாவது அரசுக்கு நேரடியாக வரிசெலுத்தும் முறையில் பட்டா வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
ஜமீன்தார் - இனாம்தார்களின் கொட்டமடக்கிய சுயமரியாதை இயக்கம்
நமது தலைமுறையினர் ‘ஜமீன்தார்’ என்ற சொல்லைக் கேள்விப்பட்ட அளவுக்கு ‘இனாம்தார்’ என்ற சொல்லைக் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். தமிழ்நாட்டில் 1933 கால கட்டத்தில் ஒட்டு மொத்த நிலங்களில் மூன்றில் ஒரு பங்கு ஜமீன்தார்களிடம் இருந்தது. மற்றொருபங்கு இனாம்தார்களிடம் இருந்தது. இறுதிப் பங்கு அரசின் உரிமையில் நேரடி வரிவிதிப்பில் இருந்தது. ஜமீன்தாரி, இனாம்தாரி, ரயத்வாரி என்ற மூன்று வழிகளில் நிலங்கள் பிரிக்கப்பட்டு வரிவசூல் நடந்தது.
அதாவது சுமார் 2 கோடியே 60 இலட்சம் ஏக்கர் நிலங்கள் ஜமீன் நிலங்களாகவும், மற்றும் ஒரு பகுதி நிலங்கள் இனாம்தார் நிலங்களாகவும் இருந்தன. மீதமிருந்த நிலங்கள் ஆங்கிலேய அரசின் நேரடி வரிவிதிப்பில், அதாவது ‘ரயத்வாரி’ என்ற முறையில் இருந்தன. இந்த இனாம்தார்களில் 80 சதவீதம் பார்ப்பனர்கள் ஆவார்கள். பார்ப்பனர்களின் நிலங்களுக்கு நிலவரி கிடையாது.
இனாம்தார் நிலங்கள் தமிழ்நாட்டில் நதிக்கரையோரங்களில் இருந்த வளமான விளைநிலங்கள் ஆகும். அவை மன்னர்கள் காலம்முதல் தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்டுப் பார்ப்பனர்களுக்குத் தாரைவார்க்கப்பட்டவை ஆகும்.
இந்தப் பார்ப்பன இனாம்தார்களின் நிலங்களில் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துப் பாடுபடும் மக்களுக்கு ஏராளமான கொடுமைகள் நடந்தன. உழைப்புக்குக் கூலியும் கிடைக்காது. குத்தகை என்றாலும் பார்ப்பனர்கள் நினைத்தவுடன் வெளியேற்றுவதும், குத்தகையை ரத்து செய்வதும் நடந்தன. எதிர்த்துப் போராடிவும் இயலாது.
இந்த நேரத்தில் இனாம்தார்களின் நிலங்களில் உழைக்கும் குடிமக்களின் நலனைக் காக்க, பொப்பிலி அரசர் ஒரு சட்டம் கொண்டு வந்தார். அது ‘இனாம் குடிகள் மசோதா’ எனப்பட்டது. இதன்படி இனாம் நிலங்களில் உழைக்கும் மக்களுக்கு குறைந்தபட்சக்கூலி நிர்ணயம் செய்யப்பட்டது. இனாம்தார்களின் அதிகாரம் குறைக்கப்பட்டது. நிலத்தின் மீது இனாம்தார்களுக்கு இருந்த அதிகாரங்கள் ரத்து செய்யப்பட்டது.
உடனே அகில இந்தியாவில் உள்ள அனைத்து வகையான பார்ப்பனர்களும் ஒன்ற திரண்டனர். தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சி, அனைத்துப் பத்திரிக்கைப் பார்ப்பனர்களும் ஒன்று திரண்டனர். பொப்பிலி அரசருக்குக் கடும் நெருக்கடிகளைக் கொடுத்தனர்.
அப்போது 1933 ஆம் ஆண்டிலிருந்து, பெரியார் தொடர்ச்சியாகப் போராடினார். ஜமீன் நிலங்களிலும், இனாம் நிலங்களிலும் பாடுபடும் நிலமற்ற விவசாயத் தொழலாளர்களுக்கான தொடர்ச்சியான போராட்டங்கள் - ஜமீன்தார் மற்றும் இனாம்தார்களுக்கு எதிரான போராட்டங்கள் குடி அரசில் பதிவாகி உள்ளன. பெரியாருக்கும், பொப்பிலி அரசருக்கும் அப்போதிருந்த எதிர்ப்பை நமக்கு உணர்த்த சில குறிப்புகளை மட்டும் தருகிறோம். விரிவாக அறிய www.periyarwritings.org என்ற இணைய தளத்தைப் பார்க்கவும்.
“பொப்பிலி ராஜா நிறைவேற்றி இருக்கும் இனாம் குடிகள் மசோதாவை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆசிரியர் ரெங்காவும், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் தோழர் சந்தானமும் மற்றும் காங்கிரஸ் சமதர்மிகளும் ஆதரிக் கிறார்கள். சத்தியமூர்த்தி போன்ற காங்கிரஸ் பார்ப்பனர்களும், வெங்கட்டராம சாஸ்திரியார் போன்ற மிதவாத பார்ப்பனர்களும் அந்த மசோதாவைக் கவிழ்க்க இப்பொழுதும் சூழ்ச்சி செய்து கொண்டே இருக்கின்றனர்.
அம்மட்டோ! தேசீயப் பத்திரிகைகள் என்று கூறிக் கொள்ளும் ஹிந்து, சுதேசமித்திரன் முதலிய பத்திரிகைகளும் அவர்களுக்கு பக்கபல மாகவே இருக்கின்றன. பழைய ஏற்பாட்டை மாற்றி புதிய ஏற்பாடு ஒன்றை அமலுக்குக் கொண்டு வரும்போது அதை அமலுக்குக் கொண்டு வருபவர்களிடம் ஒரு சாராருக்கு துவேஷம் ஏற்படுவது சகஜமே. ஆனால் அந்த துவேஷத்துக்கு அஞ்சி நியாயமாக செய்ய வேண்டியவைகளைச் செய்ய அஞ்சுகிறவர்கள் உண்மையான தேச நிர்வாகிகள் ஆகவே மாட்டார்கள்.
பொப்பிலி ராஜா காலத்து நிறைவேற்றப்பட்ட பல சட்டங்களை ஒரு சாரார் கட்டுப்பாடாக எதிர்த்து வந்தும், தேச நலத்தை முன்நிறுத்தி, தமது செயலால் தமக்கோ தமது கட்சிக்கோ ஏற்படக் கூடிய பலாபலன் களையும் மதியாமல் தம் கடமையைச் செய்து வரும் பொப்பிலி ராஜாவை நேர்மையும் யோக்கியப் பொறுப்பும் உடையவர்கள் போற்றுவார்கள் என்பது திண்ணம்.” (25)
“இனாம்தார் மசோதா இரண்டாம் முறையும் சென்னைச் சட்டசபையில் நிறைவேறிச் சட்டமாகிவிட்டது. வைஸ்ராய் அனுமதி பெறவேண்டியதுதான் பாக்கி. வைஸ்ராய் அனுமதியளித்து விட்டால் ஐம்பது இலட்சம் இனாம் குடிகளின் கஷ்டம் தீரும். நிர்ப்பயமாக உயிர்வாழ்வார்கள். ஆனால் இனாம்தார்கள் இனாம் குடிகளின் தலையில் கைவைக்க மேலும் என்ன வழியென்று பார்க்கப்போவதாகத் தெரிகிறது.
...இந்த இனாம் மசோதாவைக் கவிழ்க்கப் பார்ப்பனர்கள் எவ்வளவோ கிளர்ச்சி செய்தார்கள்; பலிக்கவில்லை. கடைசியில் சட்டமாகப்போவதும் உறுதி. இந்த மசோதா சட்டமானதற்குக் காரணஸ்தராயிருந்தவர்கள் ஜஸ்டிஸ் கட்சியாரே.” (26)
“சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட இனாம் சட்டத்தினால் இனாம் குடிகளும், இதர ஜமீன் குடிகளும் அநேகமாக சமநிலையை அடைந்திருக்கிறார்கள்.
இந்தச் சட்டத்தினால் மாகாணம் முழுதுமுள்ள சுமார் 50 லட்சம் இனாம் குடிகள் நன்மையடைந்திருக்கிறார்கள். ஜஸ்டிஸ் கட்சியார் எவ்வளவோ எதிர்ப்புகளுக்கிடையில் மிகவும் பாடுபட்டு இனாம் சட்டத்தை நிறைவேற்றி வைத்திருக்கிறார்கள்.” (27)
இனாம் ஒழிப்புச்சட்டம்
இவ்வாறு ஜமீன் - இனாம் குடிகளின் - விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக உழைத்த பெரியாரும் அவரது நீதிக்கட்சி மற்றும் தி-ராவிடர் கழகமும் அத்துடன் நின்று விடவில்லை. அதற்கு அடுத்த கட்டமாக இனாம்தார் என்ற முறையையே ஒழிக்கும் நோக்கில் மாநாடுகளையும், போராட்டங்களையும், அரசியல் நகர்வுகளையும் மேற்கொண்டனர்.
இதற்கிடையே 1947 ல் ஜமீன் ஒழிப்புச்சட்டம் ஒன்று அகில இந்திய அளவில் கொண்டு வரப்படுகிறது. அதில் இனாம் ஒழிப்புப் பற்றி எந்தக் குறிப்பும் கிடையாது. பார்ப்பனர்கள் அரசியல்சட்ட உருவாக்கக்குழுவில் தலையிட்டு, தமது நிலவுடைமைகளைப் பாதுகாத்துக்கொண்டனர்.
எனவே, 09.05.1948 ல் தூத்துக்குடியில் நடைபெற்ற திராவிடர் கழக 18-ஆவது மாகாண மாநாட்டில் பெரியார் ஒரு தீர்மானம் நிறைவேற்றுகிறார்.
“இனாம் ஒழிப்புச் சட்டத்தைச் சீக்கிரமாக நிறைவேற்றிச் சிறியதா யிருந்தாலும், பெரிய தாயிருந்தாலும், மத சம்பந்தமானதாயிருந்தாலும், மத சம்பந்தமற்றதாயிருந்தாலும், எல்லா இனாம்களையும் ஒரேயடியாக ஒழித்துக்கட்ட வேண்டுமென்று இம்மாநாடு சென்னை மாகாண அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறது.”
24. 10. 1948 ல் அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஈரோடு மாநாட்டில் இனாம் ஒழிப்பு என்பது மறைக்கப்பட்டது குறித்து கேள்வி கேட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
“ஏழை விவசாயிகளைக் காப்பாற்றவும், அவர்களின் வாழ்க்கையை உயர்த்தவும், ஜமீன், இனாம் ஆகியவைகளை ஒழிக்க நாம் முழுமையும் பிரச்சாரம் செய்தும், மக்களின் முழு ஆதரவும் ஜமீன், இனாம் ஒழிப்புக்குச் சாதகமாக இருந்தும், ஜமீன், இனாம் ஒழிப்பு மசோதாவிலிருந்து இனாம்களை நீக்கிவிட்டது கண்டு இம்மாநாடு சர்க்காரைக் கண்டிப்பதோடு இனாம் ஒழிப்புக்காக விரைவில் ஒரு மசோதா கொண்டு வர வேண்டுமாய்ச் சர்க்காரை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.”
தொடர்ச்சியான போராட்டங்களின் விளைவாகவும், திராவிடர் கழகத்தின் முன்னணி அமைப்பான திராவிடர் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் செயல்பாடுகளின் விளைவாகவும் 1952 ல் ‘தஞ்சாவூர் பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம்’ கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து, 1955 ல் தமிழ்நாடு பயிரிடும் குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம், தமிழ்நாடு இனாம் ஒழிப்பு மற்றும் சாகுபடி மாற்றம் சட்டம் ஆகிய விவசாயத் தொழிலாளர் நலச்சட்டங்கள் உருவாயின. இதே நேரத்தில் பொதுவுடைமை இயக்கங்களும் மேற்கண்ட சட்டங்களுக்காகப் போராடின. ( The Tamil Nadu Estates Land (Reduction of Rent) Act 1947, The Tamil Nadu Estates (Abolition and Conversion into Ryotwari) Act, 1948, The Tanjore Pannaiyal Protection Act 1952, The Tamil Nadu Cultivating Tenants (Protection) Act 1955, The Tamil Nadu Inam Estates (Abolition and Conversion into Ryotwari) Act 1963)
தலித்களுக்குப் பஞ்சமி நிலம் வழங்கிய நீதிக்கட்சி
இந்தியாவில் இருந்த வேறு எந்த மாகாணத்திலும் இல்லாத அளவிற்கு நீதிக்கட்சி ஆட்சியில் ஆதி திராவிடர்களுக்குப் பஞ்சமி நிலத்தை வாரி வழங்கியது. நீதிக்கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை 1920-21 ஆதி திராவிடர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த பஞ்சமி நிலம் 19,251 ஏக்கர் மட்டுமே. ஆனால் நீதிக்கட்சி ஆட்சியில் 1931 வரை கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலம் 3, 42, 611 ஏக்கர் ஆகும். (ஆதாரம் T.G.Boag ICS என்ற சென்னை மாகாண அரசின் புள்ளிவிவர அதிகாரி எழுதிய Madras prsidency 1881 - 1931 என்ற நூல் பக்கம் 132.) மேலும் 1935 மார்ச் 31 வரை ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலத்தின் அளவு 4, 40, 000 ஏக்கராக உயர்ந்துள்ளதை ஜஸ்டிஸ் ஏடு 19.7.1935 இல் சுட்டிக் காட்டியுள்ளது. (28)
சுமார் மூன்று கோடி ஏக்கர் நிலங்களில், அதாவது ஜமீன்தார் - இனாம்தார் நிலங்களில் பாடுபட்ட சுமார் 50 இலட்சம் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் ஒரு புதிய வெளிச்சத்தைக் காட்டியவர் தோழர் பெரியார். அதுவரை அவர்களுக்கு இல்லாத உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தவர்; மேலும் பல உரிமைகளை வென்றெடுக்கப் பாதை அமைத்தவர் பெரியார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 4 இலட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் நிலங்களை வழங்கியது நீதிக்கட்சி.
மிகப்பெரும் ஆயுதப்போராட்டத்தால் நடந்திருக்க வேண்டிய மாபெரும் புரட்சியைத் தனது பேச்சால், எழுத்தால் நடத்திக்காட்டியவர் தோழர் பெரியார். தமிழ்நாட்டின் முக்கியமான நிலச் சீர்திருத்தச் சட்டங்களைச் செயல்படுத்திய, பொப்பிலி அரசர், ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், காமராசர், அறிஞர் அண்ணா ஆகிய அனைவருமே கட்சிகள் பலவாக இருந்தாலும் பெரியாரின் கட்டளைகளைச் செயல்படுத்திய நன்றிக்குரியவர்கள் ஆவர்.
இவர்களைத்தான், “செல்வாக்கு இழந்த தெலுங்கு ஜமீன்தார்கள் மீண்டும் மேலே வருவதற்காக சுயமரியாதை இயக்கத்தையும், நீதிக்கட்சியையும் தொடங்கினார்கள்” என்று நாம் தமிழர்கள் கூறுகிறார்கள். “பண்ணையார் களுக்கும், ஜமீன்களுக்கும் பெரியார் ஆதரவாகச் செயல்பட்டார்” எனச் சில கம்யூனிஸ்ட்டுகள் கூறிவருகிறார்கள். பெரியாரிடமிருந்து விலகிச்சென்ற கம்யூனிஸ்ட்டுகளும் கூறினார்கள். இன்னமும் கூறுவார்கள். காரணம், நாம் நமது செயல்பாடுகளை ஆவணப்படுத்தவில்லை.
“....உங்களுடைய நிலத்தைப் பறித்தவன் என்கிற கோபத்தை, வெறுப்பை முற்போக்கு என்ற பெயரில் முன்வைக்காதீர்கள் என்று சுட்டிக்காட்ட விரும்புகிறேன்....பெரியார் உட்பட பலரிடமும் இந்த உளவியல் செயல்படுவதாக நான் கருதுகிறேன். இது ஒரு வரலாற்று உண்மை”
என்று ஜெயமோகன் கூறுகிறார். தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் மாபெரும் புரட்சியை உண்டாக்கிய ஒரு தலைவரைப் பற்றியும், அந்தப் புரட்சிக்கு அடிப்படையான தத்துவத்தைப் பற்றியும் எவ்வித ஆதாரமுமின்றி, எவ்விதச் சமூகப்பொறுப்பும் இன்றி, சமூகவலைத் தளங்களில் செய்திகளைப் பகிர்வதைப் போல, ஒரு கருத்தை ஜெயமோகன் கூறியுள்ளார்.
தெலுங்கு ஜமீன்களை ஒழிக்க வேண்டுமென்றும், ஜமீன்களிலும், இனாம்களிலும் உழைத்த இலட்சக்கணக்கான விவசாயத்தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் நீண்ட நெடுங்காலமாகப் போராடியவர் பெரியார். பெரியார் மட்டுமல்ல, நீதிக்கட்சியின் தலைவர்களும், பெரியாரின் தெலுங்கு பேசும் நண்பர்களும், தமிழ் பேசும் நண்பர்களும் விவசாயிகளின் உரிமைகளுக்கு உழைத்திருக்கிறார்கள். தெலுங்கர்களின் நில உரிமைகளையும், ஆதிக்கங்களையும் அழித்தவர்களாக இருந்திருக்கிறார்கள். சான்றாக இன்னும் ஏராளமான வராலற்றுத்தகவல்களை நாம் வழங்க இயலும். இவர்களை, “தங்களின் நிலப்பறிப்புக்கு எதிராக முற்போக்கு பேசினர்” எனச் சித்தரிப்பது மிகவும் நயவஞ்சகமான வரலாற்றுப் புரட்டல் ஆகும்.
- தொடரும்
சான்றுகள்: -
17. நா.வானமாமலை எழுதிய ‘தமிழர் வரலாறும், பண்பாடும்’நூல்
18. தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் எழுதிய, ‘பிற்காலத் சோழர்சரித்திரம். பாகம் 2’
19. தோழர் அருணன் எழுதிய, ‘காலந்தோறும் பிராமணியம்’ பாகம் 1
20. தமிழ்இணையப் பல்கலைக்கழகப் பாடத்திட்டம் (www.tamilvu.org/courses/ degree/a031/a0312/html/a0312662.htm)
21. பேராசிரியர் கே.இராஜய்யன் அவர்கள், ‘தமிழ்நாட்டு வரலாறு’
22. ஆர்.சத்தியநாத அய்யர் எழுதிய, ‘மதுரை நாயக்கர்கள் வரலாறு’
23. குடி அரசு - சொற்பொழிவு - 27.08.1933
24. குடி அரசு - தலையங்கம் - 03.09.1933
25. குடி அரசு துணைத் தலையங்கம் 29.12.1935
26. குடி அரசு துணைத் தலையங்கம் 27.09.1936
27. குடி அரசு - அறிக்கை - 03.01.1937
28.வாலாசா வல்லவன் கட்டுரை, காட்டாறு ஏடு. http://kataru.in/indexnews.php?nid=228#.V7F-z1t94dU
- அதிஅசுரன்
(காட்டாறு ஆகஸ்ட் 2016 இதழில் வெளியான கட்டுரை)