சோழர்கள் வரலாற்றுப் பின்னணியில், கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய பொன்னியின் செல்வன் விரைவில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் திரைப்படமாக வர இருக்கிறது. அதற்காக பெரும் விளம்பரங்கள் கட்டமைக்கப்படுகின்றன. சோழர் வரலாற்றின் இளவரசராக பட்டம் சூட்டப்பட்ட ஆதித்திய கரிகாலன் படுகொலை செய்யப்பட்டான். இந்தப் படுகொலைப் பற்றிய வரலாற்று செய்திகளை ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு செப்டம்பர் 13 இல் வெளியிட்டுள்ளது. அதன் சுருக்கம்,
சுந்தர சோழன் என்ற மன்னனின் மூத்த மகன் ஆதித்திய கரிகாலன், இரண்டாவது மகள் குந்தவை, மூன்றாவது மகன் இராஜ இராஜ சோழன்.
இளவரசன் பட்டம் சூட்டப்பட்ட ஆதித்திய கரிகாலன் கொலை செய்யப்பட்டான், எங்கே, எப்போது, ஏன் கொலை செய்யப்பட்டான் என்பதற்கு நிரூபிக்கப்படக் கூடிய ஆவணச் சான்றுகள் ஏதும் இல்லை. ஆனால், அவனை கொலை செய்தது பார்ப்பனர்கள் என்பது கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊடையார் குடி கோவில் கற்பகிரகத்தின், மேற்குப் பகுதியில் கல்வெட்டாக பதியப்பட்டு இருக்கிறது. கொலை செய்யப்பட்ட மூன்று பார்ப்பனர்களின் பெயர்களும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சோமன், ரவிதாசன் எனும் பஞ்சவன் பிரம்மாதிராஜன், பரமேஸ்வரன் எனும் இருமுடிச் சோழ பிரம்மாதிராஜன். பிரம்மாதிராஜன் என்பது அ ந்தக் காலத்தில் சோழ-பாண்டிய மன்னர்கள் பார்ப்பன அதிகாரிகளுக்கு வழங்கும் பட்டப் பெயர். எனவே கொலை செய்தது பார்ப்பன அதிகாரிகள் என்பது உறுதியாகிறது. ஆதித்த கரிகாலன் தனது தந்தைக்காக பாண்டியர் மீது படையெடுத்து சிலரது தலையைத் துண்டித்ததற்கு பழிவாங்கும் நோக்கத்தோடு பார்ப்பன அதிகாரிகளைப் பயன்படுத்தி கொலை செய்யப்பட்டான்.
இராஜ இராஜ சோழன் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு இந்த மூன்று பார்ப்பனர் களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் தானமாக வழங்கிய நிலங்களை பறிமுதல் செய்த செய்தியும் அதில் இடம் பெற்றுள்ளது. வரலாற்று ஆய்வாளர்கள் நீலகண்ட சாஸ்திரி, சீனிவாச அய்யங்கார் போன்றவர்கள் கல்வெட்டு ஆதாரங்களை ஏற்காமல் பார்ப்பனர்களை காப்பாற்ற தங்களது கற்பனைகளை வரலாறாக எழுதியுள்ளனர்.
கொலை செய்தவர் பிராமணர் என்பதை உறுதிப்படுத்தும் ஒரே ஆதாரமாக இது இருந்தும் அதை அவர்கள் ஏற்கவில்லை. பிராமணர்களை இதற்காக தூக்கில் போடுவது பாவம் என்று அப்போது சோழர்கள் கருதினார்கள். அப்படி தூக்கில் போட்டால் பிரம்மஹத்தி தோஷம் பிடித்துவிடும் என்று பயந்தார்கள். அதன் காரணமாக அவர்கள் தண்டிக்கப்படவில்லை. என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு கட்டுரை கூறுகிறது.
பொன்னியின் செல்வன் எழுதிய கல்கி கிருஷ்ணமூர்த்தி “பிராமணர்கள் கொலை செய்த ஆதாரங்களை புறந்தள்ளிவிட்டு இனப் பாசத்தோடு இளவரசனின் சித்தப்பாவாகிய உத்தமச்சோழன் கொலை செய்திருக்கலாம்” என்ற கற்பனைக் கதையை அவிழ்த்துவிட்டிருக்கிறார்.
பொன்னியின் செல்வன் திரைப்படம் உண்மை வரலாறுகளை பேசுமா?
- விடுதலை இராசேந்திரன்