பாம்செஃப் நிறுவனர் - பி.எஸ்.பி. தோற்றுநர் கன்ஷிராம் 81ஆம் பிறந்த நாள் விழா! 

என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய தோழர் கன்ஷிராம் அவர்களின் 81ஆம் பிறந்தநாள் விழா, இலக்னோ நகரில், 15-3-2015 ஞாயிறு அன்று, மாயாவதி தரப் பினராலும்; பி.எஸ்.பி. கட்சி அமைச்சரவையில் ஏற்கெனவே அமைச்சராக இருந்த டட்டு பிரசாத் (Daddu Prasad) என்பவராலும் தனித் தனியே கொண்டா டப்பட்டன.

11-3-2015 இரவு முதல், 15-3-2015 முற்பகல் வரை இலக்னோவில், பரப்புரைப் பணிக்காகச் சென்றி ருந்த நான், அவ்விழாக்களில் பார்வையாளனாகச் செல்லக்கூட வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

இலக்னோவிலிருந்து 203 கிலோ மீட்டர் தொலை விலுள்ள பஸ்தி என்கிற மாவட்டத் தலைநகரில், நான், டாக்டர் தாவூஜி குப்தா ஆகியோர், 15 - பிற்பகல் 5 மணிக்கு ஒரு கூட்டத்தில் பங்கேற்றிட, பகல் 12 மணிக்கே புறப்பட நேர்ந்தது.

தோழர் கன்ஷிராம் பஞ்சாப் மாநில சீக்கியர். அவர் ஒரு பகுத்தறிவாளர்; இந்தியப் படைத்துறையில் அறிவிய லாளராகப் (Scientist) பணியாற்றியவர்.

கன்ஷிராம், டி.கே. காபர்டே, மும்பை கோப்ரஹ டே, எப்.டபள்யு. மூன் என்கிற நான்கு அரசுப் பணியாளர்கள் ஒன்று சேர்ந்து, அம்பேத்கரின் அரசியல் குறிக்கோளை வென்றெடுக்க விரும்பி பாம்செஃப் - BAMCEF அமைப்பை நிறுவினர்.

BA = BACKWARD, இது Backward, Scheduled, Scheduled Tribeஆகிய மூன்று வகுப்பினரையும் குறிப்பது.

M = Minorities- என்கிற இஸ்லாமியர், சீக்கியர், கிறித்துவர், பௌத்தரைக் குறிப்பது.

C = Communities - வகுப்புகளைச் சார்ந்த

E = Employees - அரசு மற்றும் தனியார் துறை அலுவலர்களைக் குறிப்பது.

F = FEDERATION - பேரவையைக் குறிப்பது.

அதுவே, பாம்செஃப் - BAMCEF.

அம்பேத்கரின் அரசியல் இலக்குப் பற்றி, அவரே, 1948இல், பட்டியல் வகுப்பினர் மாநாட்டில் தெளிவுபட விளக்கினார்.

“பெரிய சிறுபான்மையினரான பிற்படுத்தப் பட்டோர், (bigger minority) சிறுபான்மையின ரான பட்டியல் வகுப்பினர், மிகச் சிறுபான்மையினரான பழங்குடிகள், சிறுபான்மையினரான பிற மதச் சிறுபான்மையினர் ஆகிய 85 விழுக்காடு உள்ள வெகுமக்கள் ஒன்றிணைந்து, உண்மை யான அதிகாரம் தேங்கிக் கிடக்கிற இந்திய ஆட்சி யைக் கைப்பற்ற வேண்டும்” என்பதே அவர்தந்த அரசியல் குறிக்கோள்.

அக்குறிக்கோளை வென்றெடுக்கவே பாம்செஃப் தோற்றுவிக்கப்பட்டது.

13-11-1979 இரவு 9 மணிக்கு, புதுதில்லியில் 18 - இராசேந்திரபிரசாத் சாலையில், இராம் அவதேஷ் சிங் இல்லத்தில், என்னை முதன்முதலாகச் சந்தித்தார், தோழர் கன்ஷிராம்.

பெரியார், சிறீ நாராயணகுரு, திராவிடர் இயக்கம் பற்றி 3 மணி நேரம் இருவரும் அளவளாவினோம்.

பாம்செஃப் அமைப்பின் முதலாவது தேசிய மாநாட்டை, 2-12-1979-இல் நாகபுரியில் நடத்திய அவர், அம்மாநாட்டைத் தொடங்கிவைத்திட என்னை விரும்பி அழைத்தார். இந்தியா முழுவதிலுமிருந்து 3000 அலுவலர்கள் அவ்விழாவுக்கு வந்திருந்தனர்.

அடுத்து 1980-இல் தில்லியில் நடைபெற்ற பாம்செஃப் மாநாட்டில், நிறைவுரையாற்ற என்னை அழைத்தார்.

1981இல் சண்டிகரில், தோழர் டில்லி முன்னின்று நடத்திய பாம்செஃப் மாநாட்டில், ஆங்கில நாளிதழை வெளியிட என்னை அழைத்தார்.

அம்மாநாட்டில் பார்வையாளர் பகுதியில் அமர்ந் திருந்த தம் தாயையும் தந்தையையும் எனக்கு அடை யாளம் காட்டினார்.

1982இல், அவர் பூனாவில் நடத்திய காந்தி-அம்பேத்கர் ஒப்பந்தக் கண்டன மாநாட்டுக்கு என்னையும், ராம்விலாஸ் பஸ்வானையும் அழைத்தார்.

1984இல், தில்லியில், “D.S4”என்ற கிளர்ச்சிக் கான தனி அமைப்புத் தொடக்க நிகழ்ச்சியில் நான் பங்கேற்றேன்.

அவர், 1984 அக்டோபரில், சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற மார்க்சியப் பெரியாரியப் பொதுவு டைமைக் கட்சி மாநாட்டிலும், அடுத்து, தில்லியில் தல்கதோரா அரங்கத்தில் ஒடுக்கப்பட்டோர் பேரவை நடத்திய மாநாட்டிலும், 1991 அக்டோபரில் தில்லி வித்தல் பாய் பவன் - மவ்லங்கர் அரங்கத்தில் மா.பெ.பொ.க. - பேரவை இணைந்து 3 நாள்கள் நடத்திய மாநாட்டில், ஒருநாள் கன்ஷிராம் பங்கேற்று உரையாற்றினார்.

1980 தில்லி பாம்செஃப் மாநாட்டில், முதன் முதலாக மேடை ஏறிய செல்வி மாயாவதி, 1986 க்குள் அவருடைய நெஞ்சில் இடம்பெற்றார். 2000க்குள் பகுஜன் சமாஜ் கட்சியை மாயாவதி கைப்பற்றினார்.

பகு+ஜன்=“பகுஜன்” என்றால், “வெகுமக்கள்” என்று பொருள். “அந்த வெகுமக்கள் யார்” என்பதை மேதை அம்பேத்கர் 1948இல் துல்லிய மாக அடையாளம் காட்டினார்.

கி.பி.2000இல் மாயாவதியின் கைஓங்கிய பிறகு, பகு+ஜன் என்பதற்கு மாறாக - “சர்வ+ஜன்” - “எல்லா மக்களுக்கும்” ஆன கட்சி என்பதாக, உள்ள டக்கம் மாறியது.

பார்ப்பனர் + இரஜபுத்திரர் + வைசியர் + பூமிகார் + காயஸ்தர் என்கிற - வெறும் 15 விழுக்காடு உள்ள மேல்சாதிக்காரர்கள் பகுஜன் சமாஜ் கட்சியில் செல் வாக்குப் பெற்றார்கள். 2012க்குப் பிறகு, பகுஜன் சமாஜ் கட்சி, “பிராமணர் சம்மேளனம்” நடத்தி, மேல் சாதிக்காரர்கள் தலைமையில் இயங்கும் கட்சியாக மாறிவிட்டது.

பட்டியல் வகுப்பு மக்களை மதிக்காத முலா யம் சிங்கும், அதே பாதையில் திரும்பித் தீர வேண்டிய ஈன நிலை, உத்தரப்பிரதேசத்தில் தோன்றி விட்டதை, இப்போது நேரில் நான் பார்த்தேன்.

12-3-15 இரவு உ.பி. பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் அம்பிகா சவுத்ரியை நான் சந்தித்த போது இதை நேரில் கண்டேன். நிற்க.

இன்று, கன்ஷிராம் 81ஆம் பிறந்த நாளை, மாயாவதி இலக்னோவில் கொண்டாட வரவில்லை. அவர் தலைமையில் இயங்கும் பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கள்-எல்லா மாவட்டங்களிலிருந்தும் இலக் னோவுக்கு வந்து, 15-3-15இல், கன்ஷிராமின் புதை குழிக்கு அஞ்சலி செலுத்தினர்.

பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியில், ஓர் அமைச்சராக இருந்த டட்டு பிரசாத் என்பவர், 28-1-2015இல், கட்சி யிலிருந்து நீக்கப்பட்டார்.

அவர் கன்ஷிராமின் உடன்பிறந்த இளைய தம்பி - ஜலந்தரில் உள்ள தல்பரா சிங் (Dalbara Singh) என்பவரையும், கன்ஷிராமின் தங்கை ஸ்வரண் கௌர் (Swarn Kaur) மற்றும் கவிஞரும் எழுத்தாள ருமான ஏ.ஆர். அகேலா (A.R. Akela) மற்றும் பலரையும் இணைத்துக் கொண்டு, இலக்னோவில் நாட்டிய கலா கேந்திரத்தில் 15-3-2015இல் பெரிய அளவில் கன்ஷிராம் பிறந்த நாளைக் கொண்டாடி னார்.

அகேலா தொகுத்துப் பதிப்பித்த “கன்ஷிராமின் சொற்பொழிவுகள்”, கன்ஷிராம் வரலாறு, ஆகிய இரண்டு நூல்களை வெளியிட்டு அவர்கள் விழாவைக் கொண்டாடினர்.

மேதை அம்பேத்கரின் அரசியல் இலக்கு, இந்தியா முழுவதிலும் உள்ள வெகுமக்களான 85 விழுக்காட்டுப் பேர், இந்திய ஆட்சியைக் கைப்பற்ற மிக மிக ஏற்றது.

அதை நிறைவேற்ற என்றே இயக்கம் கண்ட கன்ஷிராம், மாயாவதியிடம் ஏமாந்தார் - மாயாவதி கன்ஷிராமின் குறிக்கோளைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டார் என்பதை நான் மட்டுமே எழுத முடியும்.

ஓ! ஓ! கன்ஷிராம்! வாழ்க உங்கள் புகழ்!

Pin It