அன்புள்ள அய்யா திரு.வே.ஆனைமுத்து அவர்களுக்கு,

வணக்கம். நலம். நலமே நாடுகிறேன். தில்லியிலிருந்து நீங்கள் அனுப்பிய கடிதம் கிடைக்கப் பெற்றேன். மிக்க நன்றி. இந்தியா உண்மையான கூட்டாசியாகத் திகழ வேண்டும் என்பதற்காக தொடர்ந்து தாங்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பாராட்டி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்பிரச்சினைக் குறித்து பிரதமர் மோடி அவர் களுக்குத் தாங்களும் நீதிநாயகம் அஜீத்சிங் பெயின்ஸ் அவர்களும் எழுதிய கடிதத்தைப் படித்தேன்.

அரசியல் சட்டம் வகுக்கப்பட்ட காலத்தில் மாநிலப் பட்டியலில் உள்ள கல்வி பொதுப் பட்டியலுக்கு மாற்றப்ப்டடதின் மூலம் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதோடு ஒவ்வொரு மாநிலத்திலும் மத்திய அரசின் கல்வித் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் மாநிலங்களுக்கு ஏற்பட்டதையும் அதன்விளைவாக மாநிலங்களின் மொழிகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டதையும் அழுத்தமாகக் கூறியதோடு கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே மாற்றும்படி வற்புறுத்தியிருப்பதற்கு எனது நன்றியறிதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதைப்போல இந்தியாவின் ஒரே ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே திணிக்கப்படுவது நாட்டின் ஒற்றுமையைச் சிதறடிக்கும் என்பதையும் சுட்டிக்காட்டி அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளையும் ஆட்சிமொழி களாக்கும்படி வற்புறுத்தியிருப்பதையும் பாராட்டுகிறேன்.

அரசு கல்வி நிலையங்களில் மதரீதியான வழிபாடு களுக்கும், மத போதனைக்கும் இடமளிக்கக்கூடாது. வேதபாடசாலைகளிலும், அரபிக் கல்வி நிலையங்களிலும் இவற்றை வைத்துக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டி ருப்பது சிறந்ததாகும்.

பாதுகாப்பு, நாணயம் அச்சிடுதல், செய்தித் தொடர்பு போன்றவை மட்டுமே மத்திய ஆட்சியின் பொறுப்பில் இருக்க வேண்டும். மற்ற அனைத்து அதிகாரங்களும் மாநிலங்களுக்கே அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் உண்மையான கூட்டாட்சி அமையும். அதற்கேற்ற வகை யில் அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என தாங்கள் கடிதத்தின் மூலம் பிரதமரை வலியுறுத்தியிருப்பது, மாநி லங்களின் உரிமைக்குரலை ஒலிப்பதாகும்.

மொத்தத்தில் சரியான வேளையில் புதிய அரசுக்கு இந்த உண்மைகளை எடுத்துக்காட்டியிருப்பதைப் பாராட்டி நன்றி தெரிவிக்கிறேன். மிக்க நன்றி.

 பழ.நெடுமாறன்

தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு

Pin It