வடக்கேயிருந்து கேடான இந்துத்துவ வாடைக் காற்று தமிழகத்தில் வேகமாக வீசுகிறது என்பதன் அறிகுறிதான் - பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொரு பாகன்’ எனும் நூல் குறித்து எழுந்துள்ள சிக்கல்.

இது இலக்கியம் சார்ந்த, கருத்துச் சுதந்திரம் பற்றிய பிரச்சனை மட்டுமல்ல; இதன் பின்னணியில் சாதி -மத உணர்ச்சிகளை உசுப்பிவிட்டு அரசியல் ஆதாயம் தேடும் சங்பரிவாரங்களின் சதித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அடுத்த ஆண்டு -2016 ஏப்ரல்-மே மாதங்களில் தமிழ்நாடு சட்டப்  பேரவைக்குத் தேர்தல் நடக்கவுள்ளது. தமிழ்நாட்டில் 48 ஆண்டுகளாகத் திராவிடக் கட்சிகள் எனப்படும் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி மாறித் தொடர்ந்து ஆட்சியில் இருந்து வந்துள்ளன.

எதிரி வலிமையற்ற சூழ்நிலையில் இருக்கும் போது திடீரெனத் தாக்குதல் கொரில்லாப் போர் முறை எனப்படுகிறது. அதுபோல் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் அரசியல் களத்தில் ஆயுதங்களை இழந்து நிற்கின்றன. தி.மு.க. தில்லியில் ஆட்சியில் நீண்டகாலம் பங்கு பெற்றதன் தொடர்பாக எழுந்துள்ள பல ஊழல் குற்றச் சாட்டுகளாலும், குடும்ப அரசியல் கோளாறுகளாலும் திணறிக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும், அதன் வானளாவிய அதிகாரம் படைத் தத் தலைவி செயலலிதா ஊழல் குற்றச்சாட்டின் பேரில் தண்டிக்கப்பட்டுப் பிணையில் முடங்கிக் கிடக்கிறார். எனவே தமிழகத்தில் வலிமையாகக் காலூன்றி வளர்வதற்கான ஏற்ற அரசியல் -சமூகச் சூழலைப் பயன்படுத்திக் கொள்ளும் சங்பரிவாரத் திட்டத்தின் ஒரு பகுதியே பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ நூலுக்கான எதிர்ப்பும் போராட்டமும் ஆகும்.

பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’ நூல் 2010 திசம்பரில் வெளிவந்தது. இலக்கிய வட்டத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனால் நான்கு பதிப்புகள் வெளிவந்துள்ளன. இந்நுல் ‘டீநே ஞயசவ றுடிஅயn’ எனும் பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க் கப்பட்டு, பெங்குவின் பதிப்பகத்தால் 2014 இறுதியில் வெளியிடப்பட்டது. இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அனிருத்தன் வாசுதேவனுக்குக் கனடா நாட்டின் இலக்கியத் தோட்டம் என்ற அமைப்பு சிறந்த மொழி பெயர்ப்புக்கான விருதை வழங்கியுள்ளது. ஆனால் மாதொருபாகன் ஆங்கிலத்தில் வெளிவந்த பிறகுதான் அதற்கான எதிர்ப்பும் எழுந்தது. தில்லியில் ஆங்கிலத் தில் இந்நூலைப் படித்த சங்பரிவாரத்தின் ஆள்கள் தமிழகத்தில் இந்நூலை எதிர்ப்பதற்கான திட்டத்தைத் தீட்டிக் கொடுத்தனர்.

பெருமாள் முருகன் திருச்செங்கோட்டை அடுத்துள்ள கூட்டப்பள்ளி என்னும் சிற்றூரில் எளிய வேளாண் குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய தந்தை ஒரு திரையரங்கின் முன் ‘சோடா’ கடை நடத்தி வந்தார். பெருமாள் முருகன் உயர்நிலைப்பள்ளி வரையில் திருச்செங்கோட்டில் படித்தார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் இருபது ஆண்டுகளாகத் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். கொங்கு மண்டலத்தின் வெள்ளாள கவுண்டர் சாதியில் பிறந்த பெருமாள் முருகன், வேலூர் மாவட்டத்தில் டாக்டர் மு. வரதராசன் பிறந்த ஊரான வேலத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பினரான எழிலரசியை மணந்தார், எழிலரசியும் அரசுக் கல்லூரியில் துணைப் பேராசிரியர்.

கொங்கு மண்டலம் என்பது கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங் கள் அடங்கிய பகுதியாகும். கொங்கு மண்டலப் பகுதியில் வழங்கும் வட்டாரச் சொற்களைத் தொகுத்து அகராதியாக 2000ஆம் ஆண்டில் வெளியிட்டார். சாதியின் அடிப்படையில் ஒதுக்கப்படுதல், இழிவுபடுத் தல் குறித்த தங்கள் சொந்த அனுபவங்களை மற்ற வர்களிடம் கேட்டுப் பெற்றுத் தொகுத்து “சாதியும் நானும் - அனுபவக் கட்டுரைகள்” என்னும் நூலாகக் காலச்சுவடு பதிப்பாக 2013இல் வெளியிட்டார். இந் நூலில் உள்ள 32 கட்டுரைகளில் 16 கட்டுரைகள் கல்லூரியில் பெருமாள் முருகனிடம் படித்த மாணவர் கள் எழுதியவை. நானும் சாதியும் நூலை “பலாத் காரத்தில் மனிதனை அடக்கச் சாதி இருக்கிறதே தவிர, இயற்கையில் எங்கே இருக்கிறது? என்று கேட்ட தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்களுக்கு” என்று எழுதிப் படையலாக்கியுள்ளார். கடைசியாக எழுதிய “பூக்குழி” நாவலை, தருமபுரி இளவரசன் நினைவாக என்று குறித்துள்ளார். இவர் ஒன்பது நாவல்களையும் நான்கு சிறுகதைத் தொகுப்புகளையும், நான்கு கவிதைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டிலேயே நாமக்கல், திருச்செங்கோடு பகுதியில்தான் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு இறுதித் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான கல்வி வணிகக் கொள்ளை பெருமளவில் நடைபெறுகிறது. நாமக்கல் பகுதி கோழி வளர்ப்புக்குப் பெயர் போனது போல, மாணவர்களைக் கொடுமைப்படுத்தி மதிப்பெண் எடுக்கும் இயந்திரங்களாக உருவாக்கும் கல்வி வணிகச் சுரண்டலை எதிர்த்துப் பல கட்டுரைகள் எழுதினார். மேலும் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சிக் காகக் களமாடினார். இக்காரணங்களால் பணக்கார -ஆதிக்க சாதி வெறியினர் பெருமாள் முருகனைப் பழி தீர்க்க ஏற்ற சமயத்திற்காகக் காத்திருந்தனர். தில்லியில் தலைமையிலிருந்து பெறப்பட்ட ஆணைக்கு ஏற்ப, திருச்செங்கோட்டில் உள்ள இந்து முன்னணி உள்ளிட்ட சங்பரிவாரங்கள் மாதொருபாகன் நூலைக் கண்டித்துப் போராட்டம் நடத்தினர். இந்துத்துவச் சக்திகளுடன் சாதிய ஆதிக்கச் சக்திகளும் என அப்பகுதியைச் சார்ந்த 44 அமைப்புகள் ஒன்றிணைந்து இதைப் பெரும் பிரச்சனையாக ஆக்கின.

192 பக்கங்கள் கொண்ட மாதொருபாகன் நூல் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீசுவரர் கோயிலின் தேர் திருவிழாக் காலத்தில், நூறு ஆண்டுகளுக்கு முன் வழக்கத்தில் இருந்ததாகக் கூறப்படும் விதிவிலக்கான பாலியல் உறவு என்பதை மய்யப்படுத்திப் புனையப் பட்ட கதையாகும். குழந்தைப்பேறு இல்லாத கணவன் மனைவி திருச்செங்கோடு வைகாசி விசாகத் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டால் மகப்பேறு உண்டாகும் என்ற நம்பிக்கை நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது. பெரியார் ஈ.வெ.ரா.வின் பெற்றோர் வெங்கடாசல நாயக்கரும் சின்னத்தாயம்மாளும் பிள்ளைப்பேறு வேண்டி திருச்செங்கோட்டிற்கு வந்தனர் என்று ஆய்வாளர் ஆ.இரா. வெங்கடாசலபதி 12.01.2015 அன்று ‘தி இந்து’ ஆங்கில ஏட்டில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். திருமணமாகி குழந்தை இல்லாத பெண்கள் அவர்கள் வீட்டுப் பெரியவர்களின் உதவியோடு அங்கு நடைபெறும் கோயில் தேர்த் திருவிழா வுக்கு வரும் இளைஞர்களோடு உறவு கொள்வார்கள் என்று பெருமாள் முருகன் எழுதியிருப்பதே இப்பிரச் சனைக்குக் காரணம்.

குழந்தைப் பேறுக்கு வாய்ப்பில்லாத சூழலில், வேறொரு ஆணுடன் உறவு கொண்டு கருவுறுதலுக் கான பலவகையான பழக்கவழக்க முறைகள் தொன்மைக் காலந்தொட்டே இருந்து வந்துள்ளன. இதை அந்தந்தச் சமூகங்களும் அங்கீகரித்துள்ளன. ஒரு பெண் வேறு ஒரு ஆணுடன் உறவு கொண்டு குழந்தைப் பெறு வதற்கு இந்து தர்மம் அனுமதிக்கிறது. இது ‘நியோகா தர்மம்’ எனப்படுகிறது. ரிக் வேதத்திலேயே இதைப் பற்றிக் குறிக்கப்பட்டுள்ளது. மகாபாரதத்திலும் இராமாய ணத்திலும் மற்ற புராணங்களிலும் இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. வால்மீகி எழுதிய இராமாயணத்தை மொழிபெயர்த்த பண்டித மன்மத நாததத்தர் கோச லைக்கு எப்படி பிள்ளை உண்டாயிற்று என்று பின் வருமாறு எழுதியுள்ளார் : “கோசலை மூன்று வெட்டில் அந்தக் குதிரையை மிக உற்சாகத்தோடு கொன்றாள். அவள் கலங்கா நெஞ்சோடு ஒரு நாளிரவை அக்குதிரை யோடு கழித்தாள். ஹோதா, அத்வர்யு, உகதா முதலிய ரித்விக்குகள் இராசபார்யைகளைப் புணர்ந்தார்கள்.” இராமனும் அவன் தம்பிகளும் இப்படித்தான் பிறந் தார்கள்.

இக்கதையில் பொன்னன்-காளி என்கிற கணவன், மனைவி அன்பான இல்வாழ்க்கை நடத்துகின்றனர். ஆனால் அவர்களுக்குக் குழந்தை இல்லை. குழந்தை இல்லாததை உறவினர்கள் இழிவாகக் குத்திப் பேசு கின்றனர். இதனால் வீட்டு -சமயச் சடங்குகளில் இவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். எனவே பிள்ளைப் பேறு வேண்டி இருவரும் திருச்செங்கோடு திருவிழா வில் கலந்து கொள்கின்றனர் என்பதே கதைக் கள மாகும். இவர்கள் கவுண்டர் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதாகக் கதையில் வருகிறது.

கடந்த நான்காண்டுகளில் நான்கு பதிப்புகளைக் கண்டு விற்பனையில் நல்ல வரவேற்பைப் பெற்றி ருந்த மாதொருபாகன் நாவலுக்குத் திடீரென்று 2014 திசம்பர் மாதத்தில் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டதற்கு முன்னரே குறிப்பிட்டவாறு தில்லியிலிருந்து இந்துத்துவச் சக்திகள் இட்ட கட்டளையே காரணமாகும். 26.12.2014 அன்று திருச்செங்கோட்டில் சங்பரிவாரத்தினரும் சாதி வெறியர்களும், “மாதொருபாகன் நூல் நம் ஊரை, சாதியை, இந்து மதத்தை, பெண்களை இழிவுபடுத்து கிறது; எனவே இந்நூலைத் தடைசெய்ய வேண்டும்; நூலை எழுதிய பெருமாள் முருகனையும், நூலைப் பதிப்பித்தவரையும் கைது செய்ய வேண்டும்” என்று கோரி மாதொருபாகன் நூலின் படிகளையும் பெருமாள் முருகன் படத்தையும் எரித்தனர். இழிவுபடுத்துவதாக இவர்கள் கருதும் நூலின் இரண்டு பக்கங்களை மட்டும் ஆயிரக்கணக்கில் அச்சிட்டு வீடுதோறும் வழங் கிச் சாதித் தீயை மூட்டினர். அனுமதியில்லாமல் ஆங் காங்கே கூட்டங்கள் நடத்தி, பெருமாள் முருகனுக்கு எதிராக நச்சுக் கருத்துக்களைப் பரப்பினர். பெருமாள் முருகனைக் கடுமையாகக் கண்டித்து நகர் முழுவதும் சுவரொட்டி ஒட்டினர். மாவட்ட நிர்வாகமோ, காவல் துறையோ இதைத் தடுத்திட முயலவில்லை. இதனால் திருச்செங்கோட்டில் கொந்தளிப்பான சூழ்நிலை உரு வானது.

இச்சூழ்நிலையை உணர்ந்த பெருமாள் முருகன் 07.01.2015 அன்று ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் “குழந்தைப்பேறு இல்லாத பெண்கள் படும் துன்பங்களைப் பேசுவதே நாவலின் மய்யக் கருத் தாகும். எந்தப் பெண்ணையும் இழிவாகச் சித்தரிக்க வில்லை. பாத்திரங்கள் பேசும் உரையாடல்கள் அவர் களின் கோணத்திலானவை. அதை எழுத்தாளன் கருத்தாகவோ, பொதுக் கருத்தாகவோ எடுத்துக் கொள்ள இயலாது.

குழந்தைப் பேறுக்கான பல்வேறு வேண்டுதல்களைக் கொண்ட ஊர் திருச்செங்கோடு என்பதாகவே இக்கதை யில் காட்டப்பட்டுள்ளது. நாவலில் திருச்செங்கோடு என்னும் ஊர்ப் பெயரையும் அதன்வழி அடையாளங்களையும் பயன்படுத்தி எழுதியதைத் தங்கள் வாசிப் பின் வழி தவறு என உணரும் திருச்செங்கோடு பொதுமக்களிடம் அதற்காக மிகுந்த வருத்தம் தெரி வித்துக் கொள்கிறேன். அடுத்து வெளியாகும் பதிப்பில் ஊர்ப் பெயரையும் அடையாளத்தையும் நீக்கித் திருச் செங்கோடு என்பதற்கான எந்தக் குறிப்பும் இல்லாமல் பதிப்பிக்க உள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள் கிறேன்” என்று விளக்கமும் வருத்தமும் தெரிவித்தார்.

ஆனால் பெருமாள் முருகனின் இந்த விளக்கத்தை -வருத்தத்தைச் சங்பரிவாரங்களும் சாதி வெறியர் களும் ஏற்கவில்லை. 2002இல் முசுலீம்களைப் படு கொலை செய்து, இந்தியாவுக்கான ஆய்வுக்கூடமாகக் குசராத்தை ஆக்கியதைப் போல, தமிழ்நாட்டின் ஆய்வுக்கூடமாகத் திருச்செங்கோட்டைப் பயன்படுத்திட முடிவு செய்தனர். இந்து மதம், சாதிகள், கோயில்கள், திருவிழாக்கள், நம்பிக்கைகள், சடங்குகள், பழக்க வழக்க முறைமைகள் முதலானவற்றை விமர்சனம் செய்தோ, எதிர்த்தோ இனி எவரும் பேசவோ, எழுதவோ முன்வரக்கூடாது என்கிற பாசிச அச்சுறுத்தல் நோக் கத்துடன் 09.01.2015 அன்று திருச்செங்கோடு நகரில் முழுக் கடையடைப்பு நடத்தினர்.

இந்துத்துவ-சாதியவாதிகளின் அச்சுறுத்தலான, அடாவடித்தனமான எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தடுக்க அரசு முயலவில்லை என்பது மட்டுமின்றி, ஆதிக்கவாதிகளின் அகங்குளிரும் வகையில் அமைதிப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் 12.01.2015 அன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குப் பெருமாள் முருகனை அழைத்து அச்சுறுத்தியது அரசு நிர்வாகம். மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலை யில் நான்கு மணிநேரம் நடந்த பேச்சுவார்த்தையில் பெருமாள் முருகன் மட்டுமே கலந்து கொண்டார். எதிர்த்தரப்பில் ஏழு பேர் கலந்து கொண்டனர். ஆனால் நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்புலட்சுமி, பெருமாள் முருகனும் எதிர்த்தரப்பாரும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசவிடாமல் இடைத்தரகர் போல் செயல் பட்டார். முன்பே ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட பெருமாள் முருகனை மேலும் அச்சுறுத்தி நிபந்தனையற்ற மன்னிப்பு உடன்பாட்டில் கையெழுத்திடச் செய்தனர். அதன் பிறகே மாதொருபாகன் நூலுக்கு எதிரானப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவ தாக இந்துத்துவ சாதிய வாதிகள் கையொப்பம் இட்டனர். இவ்வாறாக, அரசமைப்புச் சட்ட விதி 19(1)(a)வில் உறுதி செய்யப்பட்டுள்ள கருத்துச் சுதந்தரத்தை இந்துத்துவ பாசிச சக்திகளுடன் தமிழ்நாட்டு அரசும் கூட்டுச் சேர்ந்து ஒடுக்கியமை சனநாயகப் படுகொலை யாகும்.

நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க நேரிட்ட மன உளைச்சலின் உணர்ச்சி மேலீட்டால், 48 அகவையினரான பெருமாள் முருகன் அன்று இரவே தன் முக நூலில் “எழுத்தாளன் பெருமாள் முருகன் செத்துவிட்டான். அவன் கடவுள் இல்லை. ஆகவே அவன் உயிர்த்தெழப் போவதில்லை. மறுபிறவியில் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை. இனி, அற்ப ஆசிரியனாகிய பெ. முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான்” என்று அறிக்கை வெளியிட்டார்.

இந்த அறிக்கை இலக்கிய உலகிலும் முற்போக்குச் சிந்தனையாளர்களிடையிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெருமாள் முருகன் புறமுதுகிட்டுப் பின்வாங்கியிருக்கக் கூடாது; நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டது அவரை ஆதரித்த எழுத்தாளர்களைச் செருப்பால் அடித்தது போன்றது என்பன போன்ற கருத்துக் களை எழுத்தாளர்களில் சிலர் கூறினர். பெருமாள் முருகனின் இம்முடிவு சரியா? தவறா? என்பது விவாதத் துக்குரியது. ஆனால் இதில் மிகவும் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியது தமிழ்நாட்டு அரசின் நிர் வாகம் இந்துத்துவச் சக்திகளின் வெறியாட்டத்துக்கு ஆதரவாக நின்று நடத்திய கட்டப்பஞ்சாயத்துதான்.

பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் நூலைக் கண்டித்து மதவாத-சாதியவாத பிற்போக்காளர்கள் எதிர்த்துக் கொண்டிருந்த சமயத்தில், 7-1-2015 அன்று பாரீசு நகரிலிருந்து வெளியிடப்படும், கேலிச் சித்திரங்களைப் பெருமளவில் தாங்கிவரும் சார்லி ஹெப்டோ (Charlie Hebdo) எனும் கிழமை ஏட்டின் அலுவலகத்துக்குள் இசுலாமிய பயங்கரவாதிகள் புகுந்து அதன் ஆசிரியர் உட்பட 12 பேரைச் சுட்டுக் கொன்றனர். முகமது நபியை இழிவுபடுத்தும் வகை யில் கேலிச்சித்திரங்களைத் தொடர்ந்து சார்லி ஹெப்டோ ஏடு வெளியிட்டு வருவதற்கான பழிவாங்கல் நடவடிக்கையே இது என்று பயங்கரவாதிகளின் அமைப்பு கூறியது. ஆனால் கருத்துச் சுதந்தரத்தின் மீதான கொலைவெறித் தாக்குதலைப் பிரான்சு உட்பட எல்லா நாட்டுத் தலைவர்களும் கடுமையாகக் கண்டித்தனர். இசுலாமிய மதப்பற்று உடையவர்கள் மனம் நோகும்படி அக்கேலிச்சித்திரங்கள் உள்ளன என்பதை ஒப்புக்கொண்டவர்கள் கூட வன்முறை மூலம் இதை ஒடுக்க முயன்ற பயங்கரவாதிகளைக் கண்டித்தனர். ஏனெனில் பிரான்சில் 1789இல் ஏற்பட்ட பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாகக் கருத்துச் சுதந்தர மும், மனித உரிமைகளும் எந்த நிலையிலும் ஒரு குழுவாலோ, சமூகத்தாலோ, அரசாலோ ஒடுக்கப்படக் கூடாது என்கிற கோட்பாட்டைப் பின்பற்றி வருகிறார் கள். வால்டேர், ரூசோவின் சுதந்தரக் கருத்துரிமை என்பது அய்ரோப்பாவில் பல நூற்றாண்டுகளாக வலிமையாகக் காலூன்றியுள்ளது.

அதனால் 11.1.2015 அன்று பாரீசு நகரில் பல நாடுகளின் உலகத் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் கண்டனப் பேரணி நடத்தப்பட்டது. பிரான்சு நாட்டில் அன்று பல நகரங்களில் மொத்தம் இருபது இலட்சம் பேர் வீதியில் இறங்கி சார்லி ஹெப்டோ ஏட்டின் கருத் துரிமைக்கு ஆரவாகக் குரல் கொடுத்தனர். எனவே தான் இப்படுகொலைக்குப் பிறகும் சார்லி ஹெப்டோ இதழ் மீண்டும் அதிக எண்ணிக்கையில் வெளியிடப் பட்டது.

இந்தியாவிலோ தனிமனித கருத்துரிமை சாதி-மதம் என்ற சட்டகச் சிறைக்குள் பூட்டி வைக்கப்பட் டுள்ளது. அதனால் தனிமனித கருத்துரிமை எளிதில் ஒடுக்கப்படுகிறது. பெருமாள் முருகனுக்கு ஆதரவாகப் பெருமளவில் மக்களிடையே ஆதரவு எழவில்லை.

பெரியாரின் படத்தைப் போட்டுக் கொள்ளும் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் அரசியல் கட்சி என்ற நிலையில், சாதி வாக்குச் சரிந்துவிடுமோ எனக் கருதி இப்பிரச்சினையில் வாய் மூடிக்கிடந் தன. நாள்தோறும் தவறாமல் அறிக்கை விடும் எழுத்தாளர் கலைஞர் கருணா நிதியும் பெருமாள் முருகனின் கருத்துச் சுதந் தரக் குரல்வளை நெறிக்கப்பட்ட போதுகூட, காந்தி யாரின் மூன்று குரங்கு பொம்மைகளைப் போல இருந்தார்.

கலைஞர் கருணாநிதி முதலமைச் சரான பின்பு, படிப்படியாக ஆட்சியிலும் கட்சியிலும் பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகள் கைவிடப்பட்டன. கலைஞர் கருணாநிதி மட்டும் தன் கட்சிக்காரர்களின் வீட்டுத் திருமண நிகழ்ச்சிகளில் பேசும்போது, உணவில் ஊறுகாயைத் தொட்டுக் கொள்வது போல, பெரியாரின் சுயமரியாதைக் கொள்கை வழிவந்தவன் என்று சொல்லிக் கொள்வார். மற்றபடி, கட்சிக்கும் கட்சிக்காரர்க ளுக்கும் பெரியாரின் சுயமரியாதைக் கொள்கை களுக்கும் எத்தகையத் தொடர்பும் இல்லை. கடந்த முப்பது ஆண்டுகளில் இவர்களும் புதிய பார்ப்பனர் களாகிவிட்டனர். இவர்களுள் ‘திறமையானவர்கள்’ பெரும் பணக்காரர்களாகிவிட்டனர்.

அ.தி.மு.க.வின் தலைவி செயலலிதா 1991இல் முதலமைச்சரானது முதல், இடஒதுக்கீடு என்கிற ஒரு கொள்கையைத் தவிர மற்ற எல்லா வகையிலும் பெரியார் கொள்கைகளுக்கு எதிரான, பார்ப்பனியத் துக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்து வருகி றார். அயோத்தியில் பாபர் மசூதியை இடித்துவிட்டு, அங்கே இராமனுக்குக் கோயில் கட்ட வேண்டும் என்கிற சங்பரிவாரத்தின் கோரிக்கையை தில்லியில் நடந்த தேசிய வளர்ச்சி மன்றக் கூட்டத்திலேயே வெளிப்படையாக ஆதரித்தார். கரசேவைக்குக் கட்சிக் காரர்களை அயோத்திக்கு அனுப்பினார். பன்னிரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாகக் கதை யில் கூறப்படும் இராமன் கட்டிய பாலத்தைத் தகர்த்து சேதுக் கால்வாய் திட்டத்தைச் செயல்படுத்தக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துத் தடுத்து நிறுத்தியவர் -தமிழ்நாட்டின் அதிகாரபூர்வ மற்ற தன்மையில் ஆர்.எஸ்.எஸ். தலைவியாகச் செயல்படும் செயலலிதா! ஆட்சியில் இருந்த போது மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்து சங் பரிவாரத்தையும் விஞ்சி நின்றார்.

திராவிட அரசியல் கட்சிகளின் கொள்கைகள், செயல்பாடுகளின் சீரழிவால் ஏற்பட்ட இடைவெளியைக் கடந்த முப்பது ஆண்டுக்காலத்தில் வட தமிழகத்தில் வன்னியர், மேற்குப் பகுதியில் கொங்கு வேளாளக் கவுண்டர், தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் போன்ற பெரிய எண்ணிக்கையில் உள்ள சாதிகளில் உள்ள தன்னல ஆதிக்கச் சக்திகள், சாதிப் பெருமித அடையாளங்களை முன்னிறுத்தி அரசியலிலும், பிற தளங்களிலும் செல்வாக்குச் செலுத்தும் நிலை உரு வாகியுள்ளது. இப்போக்கு எல்லா சாதிகளுக்குள்ளும் ஊடுருவியுள்ளது. இதனால் சாதிய முரண்பாடுகளும், மோதல்களும் கூர்மையடைந்துள்ளன. கடந்த நூற் றாண்டில் பெரியார் உள்ளிட்ட எண்ணற்ற தலைவர் களால் தமிழர் என்ற அடையாளத்தை முன்னிறுத்தி ஒற்றுமையை உருவாக்க எடுக்கப்பட்ட முயற்சிகள், கடந்த முப்பது ஆண்டுகளில் பெரும் பின்னடைவைக் கண்டுள்ளன. சாதிகளாகப் பிரிந்து நின்று, சாதியப் பெருமிதங்களை, அடையாளங்களை வளர்த்தெடுப்பது, இந்துத்துவப் பாசிச சக்திகளுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும் நிலையை உருவாக்கியுள்ளது.

இந்தப் பின்னணியில்தான் பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் நூலுக்கு எழுந்துள்ள எதிர்ப் புக்கான காரணங்களை ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும்.

திருவள்ளுவர் முதல் பெரியார் காலம் வரையில் தமிழகத்தில் ஆரியப் பார்ப்பன ஆதிக்கம் முற்றிலுமாக வெற்றி கொள்ளவிடாமல் தடுக்கப்பட்டு, தமிழ் மொழியின் தனித்த உயர் செம்மையையும், தமிழ் இனத்தின் தனிப் பண்பாட்டுக் கூறுகளையும் பேணிக் காத்து வந்துள்ளோம். இப்போது 21ஆம் நூற்றாண்டில் சங்பரிவாரங்கள் இந்து மதமே-இந்தியாவின் தேசியக் கலாச்சாரம் என்ற போர்வையில் தமிழ்த் தேசியம் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள பிற தேசிய இனங் களையும், மொழிகளையும், பன்மையான பண் பாட்டுக் கூறுகளையும் அழித்தொழிக்கத் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

எனவே தமிழகத்தில் பெரியாரிய - அம்பேத்கரிய -மார்க்சிய கொள்கையாளர்கள் ஓரணியில் திரண்டு, மக்கள் எழுச்சிகள் மூலம் இந்துத்துவப் பாசிசத்தைக் காலூன்ற விடாமல் தடுத்து, விரட்டியடிக்க வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்தில் உள்ளோம். 

- க.முகிலன்

Pin It