ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒலிக்கும் குரல்களில் முக்கியமானது வழக்கறிஞர் புகழேந்தியினுடையது. முஸ்லிம்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்ற காவல்துறையின் பொய்ப் பிரச்சாரத்தை கிழிக்கும் விதமாக அவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை எல்லாம் தனது வாதத்தால் தகர்த்து, பல முஸ்லிம் கைதிகளின் விடுதலைக்கு வித்திட்ட தமிழ்த் தேசியவாதி இவர். தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் ஒருங்கிணைப்புச் செயலராகவும் செயல்பட்டு வருபவர். தலித் மக்கள், சிறுபான்மையினர், தமிழக மீனவர்கள், நீண்டநாள் அரசியல் கைதிகள் ஆகியோருக்காக தொடர்ந்து சமரசமின்றி வாதாடி வருகிறார். கீற்று இணையதளத்திற்காக ஓர் இரவு நேரத்தில் அவரை சந்தித்து உரையாடியதிலிருந்து...

நேர்காணல்: 'மக்கள் சட்டம்' சுந்தரராஜன் & கீற்று நந்தன்

1.

கீற்று: உங்களுடைய தொடக்கக் கால வாழ்க்கையைப் பற்றி சொல்லுங்கள்...

pugalenthi_340எனது சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டத்தில் உள்ள சேமனூர் என்னும் சிறிய கிராமம். அங்கு தான் ஐந்தாவது வகுப்பு வரை படித்தேன். பிறகு ஒன்பதாவது வரை எங்கள் ஊர் பக்கத்தில் உள்ள சத்திரக்குடியிலும், பத்தாவது வகுப்பை இராமநாதபுரத்தில் இராஜா மேல் நிலைப்பள்ளிக்கூடத்திலும் படித்தேன். பின்பு அழகப்பா தொழில்நுட்பக்கல்லூரியில் மின்னியலும் மின்னணுவியலும் படித்து விட்டு சென்னையில் ஓர் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அதன் பின் தமிழ் அமைப்புகளுடன் அறிமுகம் கிடைத்தது; அவர்கள் மூலமாகத் தமிழில் இளங்கலையும் முதுகலையும் படித்தேன், அதற்கு பிறகு அம்பேத்கார் சட்டக் கல்லூரியில் சட்டம் படித்தேன்.

கீற்று: உங்களுக்கு அரசியலில் ஆர்வம் வந்தது எப்படி?

தொடக்கக் காலங்களில் இருந்து எங்களுடைய குடும்பம் தி.மு.க குடும்பமாக இருந்தது. சென்னை வந்த பிறகு ஈழச் சிக்கல் தாக்கத்தில் குறிப்பாக இராஜீவ் கொலைக்குப் பின் ஒருவித ஒடுக்குமுறை தமிழ் மக்கள் மீது இருந்தது. அந்த நேரத்தில் திலீபன் மன்றத்தின் தொடர்பும் தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் தொடர்பும் கிடைத்த பின் தமிழ்த் தேசிய அரசியலுக்குள் வந்தேன்.

கீற்று: ஒடுக்கப்பட்டவர்களுக்காக வாதாட வேண்டும்; அவர்களுக்காகப் போராட வேண்டும் என்னும் எண்ணம் எப்படி ஏற்பட்டது?

            முதுகலை தமிழிலக்கியம் படித்து ஆசிரியராக வேலை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தான் முதலில் இருந்தது. த.ஓ.வி.இ.யின் பொறுப்பாளராக இருந்த அய்யா பெருஞ்சித்திரனாருடைய மகன் பொழிலன் 1997ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளிச் சிறையில் இருந்தார். அவரைப் பார்க்கப் போனபோது அவர் தான் சட்டம் படிக்கச் சொன்னார். பின் சட்டம் படித்தேன். 2001ல் சட்டம் முடித்தேன். தமிழ் உணர்வும் தமிழ்த் தேசிய உணர்வும் எனக்கு இருந்ததினால் அவை சார்ந்தவர்களுடைய வழக்குகளைப் பார்க்க வேண்டிய கட்டாயம் இருந்தது. குறிப்பாக மாறன் உள்ளிட்ட தமிழ்நாடு விடுதலைப் படையினர் மீதான வழக்குகள். அவர்களுடைய வழக்குகளைக் கையாளும்போது சிறையில் நடக்கக்கூடிய கொடுமைகள் பற்றியும் வழக்கு நடத்த இயலாமல் நிறைய கைதிகள் இருக்கிறார்கள் என்பது பற்றியும் தெரியவந்தது. அங்கு பெற்ற உந்துதலால் ஆதரவற்ற மக்களுக்காக வழக்காடத் தொடங்கினேன்.

 கீற்று: காவல்துறை ஏன் பெரும்பாலான வழக்குகளில் அப்பாவிகளைப் பிடித்து அவர்கள் மீது பொய் வழக்குகளைப் போடுகிறார்கள்?

சில வேளைகளில் குற்றவாளிகளைக் காவல்துறை கண்டுபிடித்திருக்காது. குற்றவாளிகள் பிடிபடாத வழக்குகள் எண்ணிக்கை அதிகமாகும்போது, மேலதிகாரிகளிடம் இந்தப் புள்ளி விவரங்களைப் காட்ட வேண்டியிருக்கும். அது அவர்களுக்குப் பிரச்சினை. அப்போது அப்பாவிகளைப் பிடித்து குற்றவாளிகளாக சித்தரிப்பார்கள். இல்லையென்றால், ஒரு கொள்ளை அல்லது திருட்டு நிகழ்வில் ஈடுபட்ட ஒருவரைப் பிடிக்கும்போது, அதே காவல் நிலையத்தில் இதே போன்று பதிவாகியிருக்கும் உண்மைக் குற்றவாளிகள் பிடிபடாத நிலையில் இருக்கும் வழக்குகளிலும் அவர் பெயரைச் சேர்த்து விடுவார்கள். அவரிடம் இருந்து பிடிபட்ட நகையில் இருந்து இரண்டு கிராமோ மூன்று கிராமோ எடுத்து ‘இந்த வழக்குகளில் தொடர்புடைய நகை இது’ என்று சொல்லி மற்ற வழக்குகளையும் முடித்துவிடுவார்கள்.

காவல்துறையினர் குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருப்பதும் பல வழக்குகளில் உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததும் தான் அப்பாவிகள்மீது பொய்வழக்கு போடப்படுவதற்குக் காரணம் ஆகும். சில வழக்குகளில் அதிகார மையம் அல்லது உயர் போலீஸ் அதிகாரிகள் சுட்டிக் காட்டும் ஆட்கள் மீதும் காவல் துறை பொய் வழக்குகளைப் போடுகிறார்கள்.

கீற்று: அரசியல் கைதிகள் மீது போடப்படும் பொய் வழக்குகள் பற்றிக் கூறமுடியுமா?

ஜெயலலிதா ஆட்சியில் தனக்கு வேண்டாதவர்களைக் கஞ்சா வழக்கில் சிறைப்படுத்தினார். ‘வாகனங்களை சோதனை செய்யும்போது அவர்கள் கையில் ஜெலட்டின் குச்சிகள் இருந்தன; அவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்தோம்’ என்று பொய்யாக வழக்குப்போட்டு தமிழ்த் தேசிய ஆதரவாளர்களையும், முஸ்லிம்களையும் கைது செய்து சிறையில் அடைப்பது தொடர்ச்சியான நிகழ்வாக இருந்தது. இல்லையெனில் ‘ஒரு வீட்டில் ஆய்வு செய்யும்போது ஜெலட்டின் குச்சி இருந்தது; அப்போது அந்த வீட்டிற்குள் இரண்டு பேர் இருந்தார்கள்’ என்றோ, ‘வீடு பூட்டியிருந்தது; உடைத்துப் பார்த்தால் ஜெலட்டின் இருந்தது’ என்பது போன்றோ பல பொய் வழக்குகள் தொடர்ச்சியாகப் போடப்பட்டன. ஜெயலலிதா தமிழ் உணர்வாளர்களை ”பொடா” சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைத்தார். கருணாநிதியும் ஈழத்தமிழர்கள் மீதும் தமிழகத் தமிழர்கள் மீதும் ”சட்டவிரோத செயல்கள் சட்டம்” என்ற கொடுஞ்சட்டத்தைப் பயன்படுத்தி 100க்கும் மேற்பட்டவர்களை சிறையில் அடைத்தார். இப்போதும் அவர்களில் பலர் சிறையில் உள்ளனர்.

 ஈழத்தமிழர்கள் பலரை சட்ட விரோதமாக செங்கல்பட்டு, பூந்தமல்லி முகாம்களில் அடைத்து வைத்துள்ளார்கள். சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி பொய் வழக்குகள் போடுகிறார்கள். கருணாநிதி வந்தாலும் ஜெயலலிதா வந்தாலும் காவல் துறையினர் ஒன்று போலத் தான் நடந்து கொள்கிறார்கள்.

கீற்று: இல்லாத ஒரு ‘புகார்தாரரை’ (குற்றம் சுமத்துபவரை)க் காவல்துறையே திட்டமிட்டு உருவாக்குகிறது என்னும் ஒரு குற்றச்சாட்டு அண்மைக்காலமாக முன்வைக்கப்படுகிறது. அதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன?

            இது அண்மைக்காலமாகச் செய்யப்படுவது இல்லை. எனக்குத் தெரிய இருபது ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட ஒரு வழக்கில் கூட இப்படிச் செய்யப்பட்டுள்ளது. ‘சவுக்கு’ வலைப்பூவில் எழுதி வரும் சங்கர் என்பவர் மீதும் இதே போலத் தான் மதுரவாயில் காவல்நிலையத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள். காவல்நிலையத்திற்கு வருமாறு எட்டு மணிக்கு அவரிடம் சொல்கிறார்கள்; எட்டே முக்காலுக்கு அவர் காவல்நிலையம் செல்கிறார். குற்ற நிகழ்ச்சி ஒன்பது மணிக்கு நடந்ததாகச் சொல்கிறார்கள். இது போலப் பல வழக்குகளைக் காவல்துறை தொடர்கிறது.

கீற்று: வழக்கறிஞர்களாக இருந்தவர்கள் தாமே நீதியரசர்கள் ஆகிறார்கள்; அப்படியானால் அவர்களுக்கு முதல் விசாரணையிலோ இரண்டாவது விசாரணையிலோ போடப்பட்டிருப்பது பொய் வழக்கு என்று தெரியவரும் இல்லையா, அப்படிப் பொய் வழக்கு என்று மெய்ப்பிக்கப்படும்போது காவல் துறை மீது பெரிய கண்டனமோ பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடோ நீதிமன்றங்கள் வழங்குவதில்லையே ஏன்?

பெரும்பாலான நீதித் துறை நடுவர்கள், நீதியரசர்கள் கூட பொய் வழக்கு என்று தெரிந்தும் கண்டும் காணாதது போல் இருக்கிறார்கள். ஒரு நீதித் துறை நடுவர் பத்து, இருபது காவல் நிலையங்கள் கொண்ட ஒரு பகுதிக்கு நீதியரசராக இருப்பார்; அந்தப் பகுதி வழக்குகள் இந்த நடுவர் நீதிமன்றங்களுக்கு வரும். அப்பகுதிக் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் நீதியரசர் எது சொன்னாலும் செய்து கொடுப்பவர்களாகவும், நீதியரசரின் வீட்டு வேலைகளைக் கூட செய்து கொடுப்பவர்களாகவும் இருக்கிறார்கள். அதனால் பல நீதியரசர்கள் காவல்துறைக்கு சாதகமான போக்கைக் கடைபிடிக்கிறார்கள். இவர்கள் போல் இல்லாமல் நேர்மையாக நடக்கக்கூடிய நீதியரசர்களும் இருக்கிறார்கள்; ஆனால் இவர்கள் மிக மிகக் குறைவு. நமது நீதித்துறையை மறு உருவாக்கம் செய்ய வேண்டியிருக்கிறது.

கீற்று: ஒருவர் நீதிமன்றத்தில் பொய் சாட்சியம் அளித்தால் அது குற்றமாகக் கருதப்படுகிறது; அதற்குத் தண்டனையும் தரப்படுகிறது. ஆனால் பொய்யாக வழக்குகளைத் தொடுக்கும் காவல்துறையும் நீதிமன்றத்தில் தவறாகப் பொய்யான சான்றுகளைத் தருகிறார்கள். இவர்களுக்குத் தண்டனை கிடையாதா?

            பொய் சட்சியத்திற்குத் தண்டனை உண்டு. ஆனால் நீதித்துறை பல நேரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவானதாக இருந்ததில்லை. அரசின் சார்பாக காவல்துறை வழக்கு போடுவதால் அது அரசு போட்ட வழக்காகி விடும். அது பொய் வழக்கு என்று உறுதியாகி அந்தப் பொய் வழக்கால் உங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் உரிமையியல் வழக்கு தொடர்ந்து தான் உங்களுக்கான பாதிப்புத் தொகையை பெற முடியும். அப்படி நீங்கள் ஒரு உரிமையியல் வழக்கு தொடர்ந்தால் இதே காவல்துறை உங்கள் மீது மீண்டும் இன்னொரு பொய்வழக்கு போடுவதற்கு வாய்ப்பிருக்கிறது. இதனால் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கக் கேட்பதற்குக் கூடப் பலரும் அஞ்சும் நிலை இருக்கிறது.

இரண்டாவது, அதற்காக நீதிமன்றம் அலைய வேண்டியது என்பது கொஞ்ச நஞ்சம் இல்லை. ஐந்து ஆண்டுகளோ பத்து ஆண்டுகளோ நீதிமன்றத்திற்கு அலைய வேண்டி வரும். வழக்கறிஞருக்கும் பணம் கொடுக்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு தான் பொய் வழக்குகளிலிருந்து விடுவிக்கப்படுபவர்கள் கூட இதிலிருந்து நாம் தப்பித்தால் போதும் என்று விட்டுவிடுகிறார்கள்; அவர்கள் மனநிலையும் காவல்துறையை எதிர்ப்பதற்கு ஆயத்தமாக இல்லை.

கீற்று: அரசியல் பின்னணியோ பொருள் வலுவோ கொண்டவர்கள் கூடக் காவல்துறையை எதிர்த்து வழக்குத் தொடர அஞ்சுகிறார்களா?

            அவர்கள் வழக்குத் தொடரலாம்; ஆனால் அவர்களுக்கு அரசியல் பின்னணி இருப்பதால் ஓர் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அரசுடன் சரிசெய்துகொண்டு போய்விடுகிறார்கள். பொருள்வலு மிகுந்தவர்கள் காவல்துறையுடன் சரிசெய்துகொண்டு போய்விடுகிறார்கள். எனவே அவர்கள் வழக்குத் தொடர்வதில்லை.

கீற்று: ஒரு வழக்கில் சாட்சிகளாகச் சேர்க்கப்படுவோரின் அன்றாடப் பிழைப்பு அவ்வழக்கிற்கு வந்து போவதால் கெட்டுப் போகிறது என்னும் நிலையில் அவர்களுக்கு நீதிமன்றம் உதவும் வழிகள் ஏதாவது இருக்கின்றனவா?

            இல்லை, அப்படி இழப்பீடு தரும் முறைகள் எவையும் இல்லை. ஒருவர் ஒரு வழக்கில் சாட்சியாகச் சேர்க்கப்பட்டால் அவர் நீதிமன்றத்திற்கு வந்து சாட்சி சொல்ல வேண்டும் என்பதை மட்டும் தான் சட்டம் சொல்கிறது. சாட்சிக்கான பயணப்படி மட்டும் வழங்கப்படுகிறது.

கீற்று: விசாரணையின்போது காவல்துறையினர் தாக்குவது சரியா? அதைத் தடுக்க வழியுண்டா?

            ஒருவரைத் தேடிச் செல்லும் காவல்துறை, வீட்டில் அவர் இல்லை என்றால் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் யாரையாவது பிடித்து, காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்று விடுகின்றது. இப்படிச் செய்வதற்குச் சட்ட அடிப்படையில் ஒப்புதல் இல்லை. அதே போல யாரையும் தாக்குவதற்கோ துன்புறுத்துவதற்கோ காவல்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை. இதை நீதித்துறை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது தான் வருந்தத்தக்கது. நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் ஒருவரிடம் ‘எத்தனை மணிக்கு காவல்துறை அழைத்துச் சென்றது, காயங்கள் இருக்கின்றனவா’ என்பன போன்ற கேள்விகளை நீதியரசர்கள் கேட்டு குறிப்பு எழுதவேண்டும். அப்படிக் கேட்கும்போது காவல்துறையினர் உடன் இருந்தால் அவர்களை வெளியே அனுப்பிவிட்டு இக்கேள்விகளைக் கேட்டு விசாரிக்க வேண்டும். ஆனால் ‘உன் பெயர் என்ன’ என்னும் கேள்வியுடன் நீதியரசர்கள் நிறுத்திவிடுகிறார்கள். வேறு எதையும் கேட்பதில்லை.

 தனக்கு எதிராக தானே ஒரு சாட்சியாக மாற யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது என்று சட்டம் சொல்கிறது. ஒருவரைக் கைது செய்யும்போது கடைப்பிடிக்கக்கூடிய 11 கட்டளைகளை உச்ச நீதிமன்றம் டி.கே.பாசு வழக்கிலே வழியுறுத்தியுள்ளது. ஆனால் பெரும்பாலும் அவை பின்பற்றப்படுவது இல்லை. விசாரணையின்போது யாரும் தாக்கப்பட்டால் உயர்நீதி மன்றத்தை அணுகி காவல்துறை தாக்குதலை பற்றிச் சொல்லி நட்ட ஈடு கேட்கலாம்; காவல் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கேட்கலாம். அத‌ற்கு ச‌ட்ட‌த்தில் வ‌ழியுள்ள‌து.

2

கீற்று: சில வழக்குகளில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிகளுக்கு அனுப்பப்பட வேண்டிய குற்றம் இழைத்த சிறுவர்கள் பொதுச்சிறைக்கு அனுப்பப்பட்ட நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. இந்நிகழ்வுகளில் ஒரு நீதியரசர் கடமை தவறிச் செயல்பட்டிருக்கிறார் என்று சொல்ல முடியுமா?

            சிறுவர்களைப் பதினெட்டு வயது நிரம்பியவர்கள் என்று காவல்துறை பொய்யாகக் காட்டும்போதோ பொய்யான சான்றிதழ்களை உருவாக்கி அதை மெய்ப்பிக்க முயலும்போதோ தான் இப்படி நடக்கின்றன. அதே போல் அரசு வழக்கறிஞர்கள் என்பவர்கள் நீதிமன்றங்களுக்கு உதவும் வழக்கறிஞர்கள் தாமே தவிர காவல்துறை வழக்கறிஞர்கள் இல்லை. ஆனால் நடைமுறையில் அவர்களில் பலரும் காவல்துறை வழக்கறிஞர்களாகத் தாம் செயலாற்றுகிறார்கள். இப்படி நடப்பதன் விளைவுதான் சிறுவர்கள் பாதிக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. ஊத்தங்கரையில் போடப்பட்ட பொடா வழக்கில் பிரபாகரன், பகத்சிங் என்னும் பெயர்களுடைய இரு சிறுவர்களைக் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தார்கள்.

விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறுவர்கள் என்னும் ஐயம் எழுந்தாலோ விசாரித்துத் தெரிந்துகொண்டாலோ சான்றிதழ் வழித் தெரிந்துகொண்டாலோ அவர்களைச் சீர்திருத்தப்பள்ளிக்கோ சிறுவர் இல்லத்திற்கோ அனுப்பிவைக்க நீதியரசர்கள் உத்தரவிட வேண்டும். பதினெட்டு வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் எக்குற்றத்தைச் செய்தாலும் அவர்களை விசாரிப்பதற்கு எனத் தனி நீதிமன்றங்கள் இருக்கின்றன; பொது நீதிமன்றங்களில் அவர்களை விசாரிக்க முடியாது. அதே போல அவர்களுக்கென தனிச் சட்டங்களும் இருக்கின்றன.

கீற்று: சிறைகள் ஒருவரைச் சீர்திருத்தும் இடங்களாகத் தாம் இருக்கின்றனவா?

            ஒருவருக்குத் தண்டனை கொடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதன் நோக்கமே அவர் செய்த குற்றத்தை உணர்ந்து திருந்தி மீண்டும் இந்தச் சமூகத்தில் நல்லபடியாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான். அதற்கேற்ற ஒரு சீர்திருத்தக்கூடமாகச் சிறைகள் இருக்க வேண்டும். சிறைகளில் போதிய கல்வி புகட்டப் பட வேண்டும், தொழிற் பயிற்ச்சி அளிக்கப்பட வேண்டும். ஏனெனில் இந்தக் குற்றங்களில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்டோராகவோ பிற்படுத்தப்பட்டவராகவோ மிகவும் பிற்படுத்தப்பட்டவராகவோ தாம் இருக்கிறார்கள். கல்வியறிவு இல்லாதவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்; எளிதில் உணர்ச்சி வயப்படக் கூடிய மக்களாக இருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையில் கல்வியளிக்கப் படவேண்டும். அப்படிப்பட்ட‌ கல்வியை ஓரளவுதான் கொடுக்கிறார்கள். கோயம்புத்தூர் போன்ற இடங்களில் முன்பு இருந்த தொழிற்கூடங்களை இப்போது மூடிவிட்டார்கள். வேலை எதுவும் இல்லாத சூழலில் அவர்களுடைய மனநிலை பாதிக்கப்படும். சில பல்கலைக்கழகங்கள் சிறைகைதிகள் கல்வி கற்க உதவுகின்றன ஆனாலும் அவை பொதுக் கல்வியாக இருக்கின்றனவே ஒழிய, சீர்திருத்தக் கல்வியாக வாழ்க்கை கல்வியாக இல்லை.

            சிறையில் இருப்பவர்களை அவர்களுடைய நண்பர்களும் உறவினர்களும் பார்த்துப் பேச கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது. அரைக்கால் சட்டையோடு கம்பிக்கூண்டுக்குள் சிறைவாசிகளை அடைத்து வைத்து உறவினர்களோடு உறையாடச் சொல்லுவது மனிதநேயமற்ற நடைமுறையாகும். சிறை அலுவலர்கள் கைதிகளைத் தங்களுடைய நண்பர்களைப் போல நடத்த வேண்டும். ஆனால் இவை எவையும் நடைமுறையில் இல்லை. ஏதோ சிறை அலுவலர்கள் உயர்ந்தவர்கள் போலவும் சிறையில் இருப்பவர்கள் அடிமைகள் போலவும் இருக்கும் நிலைதான் இங்கு இருக்கிறது.

கீற்று: பொதுவாக ஏன் இந்தியாவில் வழக்குகள் நடந்து முடிவதற்கு நீண்ட காலம் ஆகிறது?

முதலில் வழக்குகள் அதிகமாகிக் கொண்டிருப்பது தான் முதல் காரணமாகும். அதற்கு ஏற்றார்போல நீதிமன்றங்களோ நீதியரசர்களோ இல்லை. அடுத்ததாக நீதியரசர்களும் முழு அளவிலான திறமை படைத்தவர்களாக இல்லை. அதனால் பெரும்பாலான வழக்குகளைக் காலம் தள்ளித் தள்ளி வைத்துக்கொண்டு போகிறார்களே ஒழிய அதை உடனடியாக முடிக்க வேண்டும் என்ற முயல்வதில்லை. அவர்களைத் தேர்வு செய்கிற முறை பிழையான முறையாக இருக்கிறது என்பது தான் அதற்குக் காரணமாகும். உயர் நீதிமன்றத்தின் நீதியரசரை எப்படித் தேர்வு செய்கிறார்கள் என்றால் தலைமை நீதியரசர் அதற்கு அடுத்து இரண்டு நீதியரசர்கள் கொண்ட குழு இருக்கிறது; இந்தக் குழு கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் சரியாக வழக்கு நடத்திய வழக்கறிஞர்களைத் தேர்வு செய்து அவர்களை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்புவார்கள். உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதியரசர் முதலிய ஐவர் குழு அதை ஆராய்ந்து சட்டத்துறைக்கு அனுப்புவார்கள்; பிறகு சட்டத் துறையிலிருந்து குடியரசுத்தலைவருக்கு அனுப்புவார்கள். இவ்வளவு வழிமுறைகள் இருக்கின்றன. இவற்றில் அரசியல் கலந்திருக்கிறது.

முந்நாட்களில் நீதியரசர் தேர்வு நேர்மையாக நடந்து கொண்டிருந்தது. இப்போது கடந்த பத்து ஆண்டுகளாகப் பண வலு கொண்டவர்கள் தாம் நீதியரசர்களாக வரும் சூழல் இருக்கிறது. சாதிய அடிப்படையில் வழக்கறிஞர்கள் தம்முடைய சாதியைச் சேர்ந்தவரை நீதியரசராக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதே போலச் சில நீதியரசர்கள் மகனையோ சொந்த உறவுக்காரரையோ நீதியரசராக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அரசியல் கட்சிக்காரர்கள் தங்கள் கட்சிக்காரர்களை நீதியரசராக்க விரும்புகிறார்கள். இந்தப் போட்டியில் நீதியரசராக வரக் கூடியவர்களின் தகுதி குறைந்து போய்விட்டது. இந்த நீதியரசருடைய மகனாக இருந்தால் தான் நீதியரசராக முடியும்; இந்தச் சாதிக்காரராகவோ நீதியரசரின் சொந்தக்காரராகவோ இருந்தால் நீதியரசராக முடியும்; ஆளுங்கட்சிக்கு ஒத்து ஊதக்கூடிய வழக்கறிஞராக இருந்தால் நீதியரசராக முடியும் என்பன போன்ற சூழ்நிலைகள் நிலவுவதால் திறமையற்றவர்கள் கூட நீதியரசர்களாகி விடுகிறார்கள். அவர்களால் வழக்குகளில் முடிவெடுக்க முடியவில்லை என்பது தான் இன்றைக்கு உள்ள நிலை.

கீற்று: நீதியரசர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் கண்டறியப்பட வேண்டும் என்னும் கோரிக்கையும் நீதித்துறையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்னும் கோரிக்கையும் நீண்ட நாட்களாகப் பேசப்படுகிறது. அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

இன்றைக்கு இந்தியாவை மக்களாட்சி நாடு என்று சொன்னால் கூட நாட்டின் தலைவராக இருக்கக்கூடிய குடியரசுத்தலைவர் மக்களால் தேர்ந்தேடுக்கப்படுவதில்லை, அதே போல ஒரு மாநிலத்தின் ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. அதே போலத் தலைமையமைச்சர் கூட ஒட்டு மொத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் ஒரு தொகுதி மக்களால் தாம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் இவரைத் தாம் தலைமையமைச்சர் என்று வாக்களிக்கவில்லை. அதே போல முதல் அமைச்சருக்கும் ஒட்டு மொத்தத் தேர்தல் கிடையாது. இதே நடைமுறையில் கூட உச்ச நீதிமன்ற நீதியரசர்களும் சரி மற்ற நீதியரசர்களும் சரி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருந்தால் நல்லது தான்! அப்போது தான் திறம்பட்ட வழக்கறிஞர்கள் மக்கள் முன்னிலையில் நின்று தேர்வாகி வரலாம். அவர்கள் மக்களுக்கானவர்களாக இருப்பார்கள்.

ஆனால் இதில் பலதரப்பட்ட கருத்து மாறுபாடுகள் இருக்கின்றன. இவர்கள் மக்களுடைய பிரதிநிதிகளாக இருப்பார்களா என்று உறுதியாகவும் சொல்ல முடியாது. இன்றைக்கு மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்கள் நலன் கருதி எப்படிச் சட்டத்தை வளைக்கிறார்களோ அதே போல் நீதியரசர்களும் செய்யும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற நீதியரசர்கூட மக்களுக்காக இருப்பார் என்று சொல்ல முடியாது. இதில் நன்மையும் இருக்கிறது தீமையும் இருக்கிறது. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால் இப்போது இருப்பதைவிட சிறப்பான ஒரு நீதித்துறையாக செயல்படும்.

நீதித்துறையில் இட ஒதுக்கீடு கண்டிப்பாகக் கொடுக்கப்பட வேண்டும். நீதிமன்றத்தில் தொடக்கக் காலங்களில் உயர் சாதியினர் மட்டும் தான் நீதிபதியாக முடியும், வழக்கறிஞர்களாக இருக்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் அம்பேத்கர், பெரியார் போன்றவர்களின் போராட்டத்தால் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் படித்து இப்போது எங்களைப் போல முதல் தலைமுறைப் பட்டதாரிகளாகி உயர் நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களாக ஆக முடிந்தது. அதனால் நீதியரசர்களைத் தேர்வு செய்யும் போதும் இட ஒதுக்கீடு கடைபிடிக்க வேண்டும் என்பது தான் சரியானது ஆகும். இதுவரை அதைப் பின்பற்றவில்லை, இனியாவது அதைப் பின்பற்றக்கூடிய நிலையை உருவாக்க வேண்டும்.

கீற்று: ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் தாம் இப்போதும் தமிழ்நாட்டில் நீதியரசர்களாக இருக்கிறார்களா?

தமிழ்நாட்டில் பெரும்பான்மை நீதியரசர்கள் ஆதிக்கச் சாதியில் இருந்து வந்த நிலை முன்பு இருந்தது. ஆனால் இப்பொழுது நிலைமை அப்படியில்லை; தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் இட ஒதுக்கீடு நடைமுறையில் இல்லை என்றாலும், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நீதியரசர்களும் ஒரு குறிபிடத்தக்க அளவில் இருக்கிறார்கள். ஆனால் இட ஒதுக்கீடு சரியாகப் பின்பற்றப்பட்டால் சரியான பலனை உணர முடியும்.

கீற்று: நீதிமன்றங்களின் தீர்ப்புகளைப் பற்றி கருத்து கூறினாலே நீதிமன்ற அவமதிப்பு என்று சொல்லி விடுகிறார்களே! அது சரிதானா?

சில தீர்ப்புகள் தவறாகக் கொடுக்கப்படும் நிலையில் சரியான கருத்துகள் கூறப்படுவதை நீதித்துறையையே எதிர்த்து, கருத்துரைப்பதாகத் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது. எப்படியென்றால் காவல்துறை கண்காணிப்பாளர் பிரேம்குமார் வழக்கில், ஒரு இராணுவ வீரரைக் (புகார்தாரரை) கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றதற்காக அவருக்கு ஒரு மாத காலத் தண்டனையை விசாரணை நீதிமன்றம் வழங்கியது; அதையே சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் அந்தத் தண்டனையை நீக்கியது. ஆனால் கைவிலங்கிடக் கூடாது என்று இதே உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பல வழக்குகளில் உத்தரவிட்டுள்ளது. அதற்கு மாறுபட்டு அடிப்படை உரிமைக்கு எதிராக நீதியரசர்கள் தீர்ப்பளித்திருக்கிறார்கள். இது போன்ற செயலை எதிர்த்துக் கட்டாயம் கருத்துகள் வர வேண்டும். அப்படி வந்தால் தான் குடிமை சார்ந்த மக்களாட்சிக்கான அடிப்படை உரிமையை மீட்டெடுக்க முடியும்

கீற்று: நீதிமன்றங்கள் சுதந்திரமாக செயல்படுகின்றனவா?

இப்பொழுது நீதிமன்றங்கள் பெரும்பாலும் அரசைச் சார்ந்து தாம் இருக்கின்றன. நீதிமன்றங்கள் தனித்துவமாயில்லை என்பதுடன் அரசியல் சார்புடையதாக மாற்றம் பெற்று கொண்டிருக்கின்றன. அதனுடைய தேர்வு முறை இதற்கு ஒரு முதன்மைக் காரணமாகும். இரண்டாவதாக நீதியரசர்கள் பலர் தாங்கள் ஓய்வு பெற்றபின்னால் ஏதாவது அரசு ஆணையத்திலோ அல்லது வேறு பொறுப்புகளிலோ அமர்த்தப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அமர்வு நீதிமன்றங்களில் இருப்போர் பதவி உயர்வுக்காக காத்திருக்கிறார்கள். சில நீதியரசர்கள் அரசிடமிருந்து வீட்டுமனைகள் பெற்றிருப்பதாகக் கூட ஆவணங்கள் இருக்கின்றன. அதனால் அவர்கள் அரசைப் பகைத்துக்கொள்ள விரும்புவதில்லை. இதன் நீட்சி தான் வழக்கறிஞர்களும் நீதியரசர்களும் தாக்கப்பட்டபோதும்கூட அரசின் ஏவலுக்கு உட்பட்டுச் செயல்பட்ட காவல்துறை மீது அரசுக்கு எதிராக நடவடிக்கையெடுக்க நீதியரசர்கள் அஞ்சுகிறார்கள்.

கீற்று: விடுதலைக்கு முன் பெற்ற சட்டங்களையே நாம் வைத்துக் கொண்டிருக்கிறோம். இன்றைய சூழலுக்கு ஏற்பச் சட்டங்கள் மாற்றப்பட்டிருக்கின்றனவா?

ஒரு சில சட்டங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன; பெரும்பாலானவை இன்னும் மாற்றப்படவில்லை. இம்மாற்றங்கள் கூடக் காவல்துறைக்குத் தாம் கூடுதல் அதிகாரங்களைக் கொடுத்திருக்கின்றன.

கீற்று: காவல்துறையில் இருக்கும் தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப்பட்டவர்களும் கூட‌, அரசுக்கு ஆதரவாகவும் மக்களுக்கு எதிராகவும் மிகக் கொடூரமாகச் செயல்படுகிறார்கள். இதற்குக் காரணம் என்ன?

ஒடுக்கப்பட்ட சமூகங்களில் இருந்து படித்து காவல்துறை உயர் அலுவலர்களாகவோ நீதியரசர்களாகவோ வரும்போது அவர்களில் பெரும்பாலானோர் தாங்கள் ஒடுக்கப்பட்ட நிலைகளை எல்லாம் மறந்து விடுகிறார்கள். உயர் பதவிகளுக்கு வந்தவுடன் அவர்களுக்கும் உயர்சாதி மனநிலை தொற்றிக்கொள்கிறது. உடன் பணிபுரியும் உயர் சாதியினர் தம்மை ஒடுக்கப்பட்ட மக்களுடன் சேர்த்துத் தாழ்வாகக் கருதி விடுவார்களோ என்னும் எண்ணமே இம்மனநிலைக்குக் காரணமாக அமைந்து விடுகிறது.

3.

கீற்று: தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரித்துப் பேசுவது சட்டத்திற்கு எதிரானதில்லை என்று உச்சநீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்பு கொடுத்திருக்கிறது. அத்தீர்ப்புக்கு எதிராகக் காவல்துறை பல இடங்களில் கூட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க மறுப்பதும் அதை எதிர்த்து வழக்குத் தொடரப்படுவதும் தொடர்நிகழ்வுகளாக இருக்கின்றன. அத்தகைய‌ வழக்கு தாக்கல் செய்யப்படும்போதே ‘இது ஏற்கெனவே உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பில் இருக்கிறது’ என்று வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதில்லையே ஏன்?

            விடுதலைப்புலிகள் அமைப்பை ஆதரித்துப் பேசியதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ‘பொடா’ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்; தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது குற்றம் இல்லை என்றும் அவ்வியக்கங்களுக்குப் பொருள் உதவியோ போர்க்கருவிகள் உதவியோ செய்வது தான் குற்றம் என்றும் அப்போது அவ்வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன் பின் பலர் மீது ‘பொடா’ சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் தொடரப்பட்ட வழக்குகளிலும் சட்ட எதிர் நடவடிக்கைகள் என்னும் நிலையிலும் நீதிமன்றங்கள் இதே தீர்ப்பைப் பலமுறை கொடுத்திருக்கின்றன. ஆனால் ஆட்சியாளர்களும் காவல்துறையும் தங்களுக்கு வேண்டாதவர்கள் மீது இச்சட்டங்களைத் தொடர்ந்து பயன்படுத்திவருகிறார்கள். நீதிமன்றங்கள் விடுதலை பெற்ற அமைப்புகளாக இல்லை என்பது தான் இவ்வழக்குகள் தள்ளுபடி ஆகாததற்கு முதன்மையான காரணமாகும். இன்னொன்று தமிழ் உணர்வாளர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளைத் தடுக்க வேண்டும் என்ற‌ எண்ணமும் பெரும் அளவில் அவற்றிடம் இல்லை. இப்படி சட்டத்தைச் செயல்படுத்துவதில் கூட நீதிமன்றங்கள் தயக்கம் காட்டத்தாம் செய்கின்றன. நாம் தமிழர் இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இப்போது இதே சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டபோது அரசுக்கு கொடுக்கும் அறிவிக்கைக் காலம் எட்டு வாரம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது; வழக்கை மந்தப்படுத்தும் உத்தியாகத் தான் இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

கீற்று: அரசியல் தலைவர்களுக்கே இந்நிலை என்றால் விளிம்புநிலை மக்களுக்கு நீதி எப்படிக் கிடைக்கும்?

            விளிம்பு நிலை மக்களுக்கு நீதி கிடைப்பதைப் பற்றிக் கேட்கிறீர்கள்; ஆனால் நீதிமன்றத்தை அணுகுவதற்கே அவர்களால் முடியாது என்பது தான் உண்மையான நிலையாகும். கைது செய்யப்பட்ட ஒருவரால் வழக்கறிஞரை அமர்த்த முடியவில்லை என்னும் சூழலில், அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நொடியில் இருந்து சட்டப்பாதுகாப்பு வழங்குவதற்காக இலவசமாக ஒரு வழக்கறிஞரை அரசு அமர்த்தவேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் அப்படிச் செய்யப்படுவதே இல்லை. சிறையில் இருக்கும் பலருக்கு எப்போது குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பதோ பிணை எப்போது எடுக்கலாம் என்பதோ கூடத் தெரியாது. அது பொய் வழக்கா, உண்மையான வழக்கா என்பதைக் கூட அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். சுருக்கமாகச் சொல்வதானால் விளிம்பு நிலை மக்களுக்குப் பரிந்து எந்த நீதிமன்றமும் செயல்படவில்லை; அவர்களுக்கு உரிய நீதி கிடைக்கும் வாய்ப்புகளும் மிக மிகக் குறைவுதான்!

பணம் படைத்தவர்களுக்கு வேண்டுமானால் நீதிமன்றங்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் திறந்திருக்கும்! நீதியரசர்களின் வீடுகளில் கூட விசாரணை நடக்கும்! விளிம்புநிலை மக்களாக இருந்தால் அவர்களுடைய வழக்குகள் வேலைநாட்களில் கூட ஒருவாரம், இரண்டு வாரம், ஆறு வாரம் என ஒத்தி வைக்கப்படும்.

கீற்று: நளினி வழக்கு முதலிய அரசியல் தொடர்பான வழக்குகளை நீதிமன்றங்கள் எப்படி அணுகுகின்றன?

                        நளினி வழக்கில் இருபத்தாறு பேர் மீது குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு பூவிருந்தவல்லி விரைவு நீதிமன்றத்தில் ‘தடா’ சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டது. பின்னர் அவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையிடப்பட்டது. உச்ச நீதிமன்றம் பத்தொன்பது பேரை விடுவித்தும் நால்வருக்கு மரணத் தண்டனையும் மூவருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனையும் எனத் தீர்ப்பளித்தது. காவல்துறை கண்காணிப்பாளர் முன் கொடுக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலம் செல்லும் என ‘தடா’ சட்டத்தின் பதினைந்தாவது பிரிவு சொல்கிறது. எனவே இப்பிரிவின்படி வேறு சான்றுகள் எவையும் தேவையில்லை; அவ்வொப்புதல் வாக்குமூலத்தைக் கொண்டே தண்டிக்க முடியும். இவ்வழக்கு கீழ் நீதிமன்றத்தில் ‘தடா’ சட்டத்தின் கீழ் விசாரணை நடந்தாலும் உச்சநீதிமன்றம் ‘தடா’ சட்டம் இவ்வழக்கிற்குப் பொருந்தாது எனத் தீர்ப்பு அளித்து அனைவரையும் விடுவித்தது; ஆனால் ‘தடா’ சட்டத்தின்படி வாங்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் செல்லும் என விடுவித்தபின் உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

pugalenthi_360எந்தவொரு காவல்துறை அலுவலரிடமும் கொடுக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலமும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் படிச் செல்லாது. ‘தடா’ சட்டம் பொருந்தாது எனக் கூறிவிட்டால் அவ்வழக்கில் குற்றவியல் நடைமுறைச்சட்டம் தான் பொருந்தும். ‘தடா’ சட்டத்தின் கீழ் இவ்வழக்குச் செல்லாது எனக் கூறிய உச்சநீதிமன்றம், காவல்துறை அதிகாரியிடம் கொடுத்ததாகக் கூறப்படும் ஒப்புதல் வாக்குமூலம் மட்டும் செல்லும் என விந்தையாகக் கூறியது. இந்த மாறுபட்ட நிலையை உச்சநீதிமன்றம் எடுக்கவில்லை என்றால் இவ்வழக்கில் அனைவருமே விடுவிக்கப்பட்டிருப்பார்கள். ‘தடா’ சட்டம் கிடையாது ஆனால் அதன் கீழ் உள்ள ஒப்புதல் வாக்குமூலம் செல்லும் என்று சொல்வது மிகப்பெரிய கொடுமையாகும்.

கடந்த 13.07.2010 அன்றுடன் நளினிக்குப் பத்தொன்பது ஆண்டுகள் தண்டனை முடிந்து விட்டது. 2000ஆவது ஆண்டில் அவருடைய தண்டனை வாழ்நாள் தண்டனையாக மாற்றப்பட்டது. 61 வாழ்நாள் சிறைத் தண்டனை பெற்றவர்களை 2001 ஆம் ஆண்டு அண்ணா பிறந்தநாளை (செப்டம்பர் 15) முன்னிட்டுத் தமிழக அரசு விடுவித்தபோது நளினி பத்தாண்டுத் தண்டனைக் காலத்தைக் கடந்திருந்தார். இதே போல் 2006 ஆம் ஆண்டு 472 பேரையும் 2007 ஆம் ஆண்டு அண்ணா பிறந்த நாளை ஒட்டியும் 190 பேரையும் முதலமைச்சர் கருணாநிதியின் சட்டமன்றப் பொன்விழா ஆண்டை ஒட்டி சிறைகளில் பதினான்கு ஆண்டுகள் கழித்த 27 பேரையும் விடுவித்தார்கள். 2008ஆம் ஆண்டில் ஏழாண்டுத் தண்டனை கழித்திருந்த 1405 பேரையும் விடுவித்தார்கள். நளினிக்குப் பின் தண்டனை கழித்த இதுவரை 2155 பேரை விடுதலை செய்துள்ளனர்.

 இவை அனைத்திலும் விடுவிக்கப்படக் கூடிய தகுதி நளினிக்கு இருந்தபோதிலும் அவருடைய வழக்கை நடுவண் புலனாய்வு நிறுவனம் விசாரித்தது என்பதால் அவரை விடுவிக்க முடியாது என்று தமிழக அரசு தெரிவித்தது. அரசின் இக்கருத்து சட்டப்படி ஏற்கத்தக்கதன்று.

கொலைக்குற்றவாளிகளான மற்றவர்களை எல்லாம் ஏழாண்டுகளிலும் பத்தாண்டுகளிலும் விடுவித்த தமிழக அரசு ஒரு பெண்ணை கிட்டத்தட்ட இருபதாண்டுகளாக விடுவிக்காமல் இருப்பது தவறான ஒன்றாகும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்னும் கோட்பாட்டை அரசின் இந்நிலைப்பாடு கேள்விக்குள்ளாக்குகிறது. நளினியை முன்விடுதலை செய்யாத இச்செயல்பாடு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும்.

கீற்று: இப்போது இலங்கையில் அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவின் மீது இங்கு கொலை, ஆட்கடத்தல் முதலிய குற்றச்சாட்டுகள் இருக்கின்றன; காவல்துறையின் முதல் தகவல் அறிக்கைகளும் இருக்கின்றன. அவர் கைது செய்யப்படவேண்டும் என்று வழக்கு தொடுத்தீர்கள். அந்த வழக்கு எந்தளவிற்கு உள்ளது?

            திருநாவுக்கரசு என்ற தலித் இளைஞரை சூளைமேட்டில் சுட்டுக் கொன்ற நிகழ்வில் டக்ளஸ் தேவானந்தா ஒரு கொலைக் குற்றவாளி ஆவார். சிறுவனைப் பத்து இலட்ச ரூபாய் கேட்டு மிரட்டி கடத்திய நிகழ்வு, இன்னொருவருக்குக் கொலை மிரட்டல் விடுத்த நிகழ்வு என மூன்று வழக்குகள் அவர் மீது சென்னையில் பதியப்பட்டுள்ளன. அவர் அறிவிக்கப்பட்ட குற்றவாளி, தேடப்படும் ஒரு குற்றவாளி என நீதிமன்றம் 1994ஆம் ஆண்டு அறிவித்தது. ஆனால் இவ்வழக்குகளை அரசும் காவல்துறையும் உளவுத்துறையும் சேர்ந்து யாருக்கும் தெரியாமல் அமுக்கி விட்டன. நாங்கள் கடந்த நான்கைந்து மாதங்களாக இவ்வழக்குகளைத் தேடி எடுத்து ஆவணங்களைப் பிடித்து தேவானந்தா தில்லி வந்திருக்கும்போது பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தோம்.

அறிவிக்கப்பட்ட ஒரு குற்றவாளியான தேவானந்தாவுடன் இந்தியாவின் தலைமையமைச்சர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், கூட்டணியின் தலைவர் சோனியா ஆகிய அனைவரும் விருந்து உண்கின்றனர். தலைமறைவுக் குற்றவாளி ஒருவர் அரச மதிப்புடன் நடத்தப்படுவதும் மிகப் பெரிய பொறுப்புகளில் இருப்பவர்களுடன் விருந்து உண்பதும் சட்டத்தின் முன் எல்லோரும் சமம் இல்லை என்பதையே காட்டுகிறது. இங்கிருந்து சென்ற தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் அக்கொலைக்குற்றவாளியுடன் உறவாடித் தான் வந்திருக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது தமிழர்களைக் கொன்றவர்களுடன் இந்திய ஆட்சியாளர்கள் கூட்டணி வைத்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. ஆகவே டக்ளஸ் தேவானந்தா சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் என்று நம்புவதற்கு வாய்ப்பில்லை. சட்டத்தை ஆட்சியாளர்கள் தங்களுடைய தன்னலத்திற்குப் பயன்படுத்துகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

கீற்று: மரண தண்டனைக்கு எதிராக உலகம் முழுவதும் எதிர்ப்புக்குரல்கள் உரக்க ஒலிக்கும் இன்றைய காலத்தில் போலி மோதல்கள் (‘என்கவுன்டர்’) என்னும் பெயரில் காவல்துறை சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்வதையும் கொலைகள் செய்வதையும் பார்க்கிறோம். இப்படி மோதல் கொலைகளைச் செய்யும் காவல் துறையினர் மீது நீதித்துறையும் அரசும் எடுக்கும் நடவடிக்கைகள் என்னென்ன?

            மரணதண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என நீண்ட நாட்களாகக் கோரி வருகிறோம். இராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் என மரணதண்டனை விதிக்கப்பட்ட மூவருக்கும் பிற வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கும் அப்சல் குரு உள்ளிட்டோரின் மரண தண்டனை நீக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம், போராடிக்கொண்டிருக்கிறோம்.

 விசாரணை நீதிமன்றம் ஒருவருக்கு மரண தண்டனை கொடுத்தால் இந்தியச் சட்டத்தின்படி அதை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டும். அப்படியே உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தினாலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையிட உரிமை இருக்கிறது. உச்சநீதிமன்றம் மரண தண்டனையை உறுதிப்படுத்திய பின்னும் கூட மாநில ஆளுநருக்குக் கருணை விண்ணப்பம் அனுப்ப அவருக்கு உரிமை இருக்கிறது; குடியரசுத் தலைவருக்குக் கருணை விண்ணப்பம் அனுப்பவும் உரிமை இருக்கிறது. குடியரசுத் தலைவர் அவ்விண்ணப்பத்தைத் தள்ளி விடும் நிலையில் மீண்டும் உயர்நீதிமன்றத்தையோ உச்சநீதிமன்றத்தையோ நாடித் தம்மை விடுவிக்க வேண்டும் என்று கேட்கும் உரிமை இருக்கிறது. முடியாது என்று குடியரசுத்தலைவர் சொல்லிய பின்னும் கூடப் பல வழக்குகளில் உச்சநீதிமன்றம் தலையிட்டுப் பலரை விடுவித்திருக்கிறது.

            கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் ஒருவருக்குக் கூடத் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படவில்லை; ஆனால் அதே பத்தாண்டுகளில் தொண்ணூறு பேரைப் போலி மோதல் (என்கெளன்டர்) என்னும் பெயரில் காவல்துறை சுட்டுக்கொன்றிருக்கிறது. இந்தத் தொண்ணூறு பேரில் பெரும்பாலானோரை முன்னரே காவல் நிலையத்தில் பிடித்துவைத்து எங்காவது கூட்டிச் சென்று சுட்டுக்கொன்றதாகத் தான் அறிகிறோம். கொல்லப்பட்டவர் காவல்துறையினரின் துப்பாக்கியைப் பறித்துச் சுட முயன்றதாகவும் அல்லது அரிவாள் முதலிய கருவிகளால் தாக்க முயன்றதாகவும் அந்தச் சமயத்தில் தற்காப்புக்காகக் காவல்துறை சுட்டுக்கொன்றதாகவும் தான் எல்லா வழக்குகளும் பதியப்பட்டிருக்கின்றன.

 கொலை வழக்குகளில் தற்காப்புக்காகத் தான் கொன்றதாக ஒருவர் சொல்வாரேயானால் அவர் மீது கொலை வழக்குப் பதியப்பட்டு விசாரணையில் நீதிமன்றம் அவருடைய கருத்தை உறுதிப்படுத்த வேண்டும். ஆனால் இந்தத் தொண்ணூறு பேர் போலி மோதல்களிலும் எந்தக் காவல்துறை அலுவலர் மீதும் கொலை வழக்குப் பதியப்படவே இல்லை.

 அதற்கு மாறாக இம்மோதல்களில் கொல்லப்பட்டவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்படுகிறது. இந்நிலையைத் தடுத்து, போலி மோதலில் கொலை செய்யும் காவல் அலுவலர்கள் மீது கொலை வழக்குத் தொடரப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் அவ்வழக்கை விசாரித்து அவர் தற்காப்புக்காகத் தான் கொன்றார் என்று உறுதிப்படுத்தினால் தான் அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டு பொதுநல வழக்குத் தொடர்ந்திருக்கிறோம்.

            நீலாங்கரை வழக்கில் சண்முகசுந்தரம் என்பவரைக் காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்று அடித்து உதைத்து காவல்துறையினர் கொன்றுவிட்டனர். இம்மரணம் ஐயத்திற்குரிய மரணம் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 174ஆவது பிரிவின்படி முதல் தகவல் அறிக்கையைப் பதிந்து அவ்வழக்கை மூடப் பார்த்தார்கள். இது போல காவல்நிலையக் கொலைகளும் நடந்துகொண்டிருக்கின்றன. ஒரு வழக்கில் காவல்நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்ட ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டால், அவருடைய சாவுக்குக் காரணமாக இருந்த காவல்துறை மீது கட்டாயம் கொலை வழக்கு பதியப்பட வேண்டும் என்று கேட்டு இன்னொரு பொதுநலவழக்கைத் தொடர்ந்திருக்கிறோம். அவ்வழக்கு நிலுவையில் இருக்கிறது.

            காவல் நிலையத்திற்குள் நல்ல நிலையில் செல்லும் ஒருவர் வெளியே வரும்போது காயங்களுடன் வந்தால் அதற்குக் காரணம் அக்காவல்நிலையத்தில் அன்று பொறுப்பில் இருந்த காவல் அலுவலர்கள் தாம் என்றும் அவர்கள் மீது சூழ்நிலைச் சாட்சியங்களை அடிப்படையாக வைத்து தண்டனை சட்டத்தின் கீழ் கொலை வழக்குப் பதியப்பட வேண்டும் என்றும் ஒரு வழக்கைத் தொடர்ந்திருக்கிறோம். ஆனால் இதுவரை தொடரப்பட்ட எந்த வழக்கிலும் காவல்துறை தண்டிக்கப்படவில்லை. போலி மோதல்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நீதிமன்றத்தை அணுகினால் அதிக அளவாக ஓரிலக்கம், ஈரிலக்கம் என இழப்பீட்டுத் தொகை கொடுத்திட நீதிமன்றம் உத்தரவிடுகிறதே தவிர, அக்கொலைக்குக் காரணமான காவல் அலுவலர்கள் எவரையும் தண்டிக்க இதுவரை உத்தரவிட்டதில்லை என்பது வருத்தப்பட வேண்டிய செய்தியாகும். அதைவிட அதிர்ச்சியான செய்தி அப்படிக் கொலையில் ஈடுபடும் காவலர்களுக்கு அரசு விருதுகள் அளித்து சிறப்பிப்பது .

கீற்று: இவற்றை எல்லாம் மாற்றுவதற்கு என்ன வழி?

            நீதித்துறையை முழுவதுமாக மாற்ற வேண்டும். காவல்துறையின் ஒடுக்குமுறைகளுக்கு எதிரானதாகவும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வல்லதாகவும் சட்டத்தை மாற்ற வேண்டும். சட்டத்தை சரியான முறையில் அரசும் நீதிமன்றங்களும் பயன்படுத்த வேண்டும். போலிமோதல்களில் ஈடுபடும் காவல்துறையினர் மீது கொலைவழக்குப் பதியப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டால் போலிமோதல்கள் அறவே இல்லாது ஒழிந்துவிடும். கொடுக்கப்பட்ட விருதுகளும் பறிக்கப்படவேண்டும். நீதிமன்றங்களும் அக்காவல்துறையினர் மீது கொலை வழக்கை விசாரித்து தவறிழைப்போர்க்குச் சிறைத்தண்டனைகள் வழங்க வேண்டும். இவ்வாறு அரசும் நீதிமன்றங்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

கீற்று: தமிழக மீனவர்களைக் கொன்ற நிகழ்வுகளில் சிங்களக் கடற்படை தான் குற்றவாளி என தமிழகக் காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிந்திருப்பதாகக் கூறுகிறார்கள். இது தொடர்பாக நீங்களும் ஒரு வழக்குத் தொடர்ந்திருக்கிறீர்கள். இந்தச் சிக்கலில் ஒளிந்திருக்கும் அரசியல் என்ன? அரசின் கண்ணோட்டம் என்ன?

            இலங்கையில் தமிழர்கள் கொடூரமாக தாக்கப்பட்ட 1983ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாகத் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை தாக்கி வருகிறது. கச்சத்தீவை இந்திய அரசு இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததில் இருந்தே மீனவர்களுக்கு அங்கு சிக்கல் இருந்து வருகிறது. இதுவரை ஐந்நூற்றுக்கும் அதிகமானோர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்; ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்திருக்கிறார்கள்; பலகோடி ரூபாய் மதிப்புள்ள படகுகளும் மீன்பிடிக் கருவிகளும் மீன்களும் இலங்கைக் கடற்படையால் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிகழ்வுகள் எல்லாமே கச்சத்தீவின் எல்லையை ஒட்டி இந்தியக்கடல் எல்லைக்குள் நடந்தவையாகும். இவற்றை எல்லாம் தடுக்க இந்திய அரசோ தமிழக அரசோ எந்நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஆனால் தமிழகக் காவல்நிலையங்களில் கொல்லப்பட்ட மீனவர்களின் சார்பாகவும் படுகாயமடைந்த மீனவர்களின் சார்பாகவும் இலங்கைக் கடற்படை மீது கொலை வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. அவ்வழக்குகளில் தொடர்புடைய இலங்கைக் கடற்படையினரைப் பிடிக்க இந்திய அரசு ஒரு சிறு நடவடிக்கை கூட எடுக்கவில்லை.  

ஒரு நாட்டின் குடிமக்கள் மீது இன்னொரு நாட்டின் கடற்படை அத்துமீறி நுழைந்து தாக்குவதையும் சுட்டுக்கொல்வதையும் ஒருநாடு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது என்பது மிக மிக மோசமான நிலையாகும். இடர் உதவியைக் கூட இந்திய அரசு அம்மீனவர்களுக்கு வழங்கவில்லை. இப்படி நடக்கும்போதெல்லாம் தமிழக முதல்வர் இந்திய தலைமையமைச்சருக்குக் கடிதம் எழுதுகிறார்; தலைமையமைச்சர் இலங்கைக் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதுகிறார். இவைதாம் நடந்துகொண்டே இருக்கின்றன ஒழிய, மீனவர்கள் கொல்லப்படுவதும் தாக்கப்படுவதும் நிறுத்தப்படவில்லை. ஆகவே தான், இந்திய மீனவர்களைத் தாக்கும் இலங்கைக் கடற்படையினர் இந்திய நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட வேண்டும்; இதுவரை மாண்டுபோன தமிழக மீனவர்களுக்கு உரிய நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும்; தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு உரிய பாதுகாப்பைத் தமிழக அரசும் இந்திய அரசும் வழங்க வேண்டும் என்று கேட்டு உயர் நீதிமன்றத்தில் 2008 ஆம் ஆண்டு நாங்கள் பொதுநல வழக்கு தொடர்ந்தோம். இன்றுவரை அவ்வழக்கு நிலுவையில் தான் இருக்கிறது. ஆனால் அவ்வழக்கு நிலுவையில் இருக்கும்போது கூட மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்பது தான் வருத்தமளிக்கிறது.

            ‘இந்தியக் கடல் எல்லையைத் தாண்டிச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை சுட்டுக்கொல்கிறது; அப்படி இலங்கை கொன்றால் அதற்காக நாங்கள் இலங்கை மீது போர் தொடுக்கவா முடியும்?’ என்று நடுவண் அரசின் சார்பில் இவ்வழக்கில் வாதாடும் வழக்கறிஞர் கேட்கிறார். தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை சுடக்கூடாது என்றோ அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றோ இந்திய அரசுக்குக் கொஞ்சம் கூட அக்கறை இல்லை என்பது தான் இதில் இருந்து தெரியவருகிறது. தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றோ தாக்குதலில் ஈடுபட்ட இலங்கைக் கடற்படையினரைப் பிடிக்க வேண்டும் என்றோ தமிழக அரசுக்கும் எந்த எண்ணமும் இருப்பதாகத் தெரியவில்லை.

நீதித்துறையின் செயல்பாடுகள் நீதியை நிலைநிறுத்தும் செயல்பாடுகளாக இல்லை என்பதுதான் இதற்கான அடிப்படைக் காரணமாகும். எல்லோருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதற்கோ அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்கோ உரிய நீதிமன்றங்களோ அரசோ இல்லை என்பதன் விளைவாகத் தான் இவ்வழக்கு இவ்வளவு காலம் இழுத்தடிக்கப்படுகின்றது. மீனவர்கள் கொல்லப்படுவதை நிறுத்த வேண்டியது அரசின் கடமையாகும். அதை அரசு செய்யாதபோது தான் நாம் வழக்கு தொடர்கிறோம். அப்போதும் அரசு இசையவில்லை என்றால் இந்தியாவில் உள்ள தமிழக மீனவர்கள், தாங்கள் தமிழர்களாகப் பிறந்தார்கள் என்பதற்காகவே குடிமக்களாகக் கூட நடத்தப்படவில்லை என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.

கீற்று: சமூக நீதிக்குப் போராடும் வழக்கறிஞர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதோ வழக்கு நடத்துபவர்கள் மீதோ தாக்குதல் நடத்தும் வழக்கறிஞர்களும் இருக்கிறார்கள் என்றொரு குற்றச்சாட்டு - சுப்பிரமணியசாமி மீது முட்டை வீசப்பட்டது போன்ற சில நிகழ்வுகளில் எழுந்ததே! அதை எப்படி அணுகுகிறீர்கள்?

            சமூக நீதிக்குப் போராடுபவர்களாக வழக்கறிஞர்கள் எப்போதும் இருக்கிறார்கள். சுப்பிரமணிய சாமி மீது முட்டை வீசப்பட்ட நிகழ்வை, வழக்கு நடத்தவந்த ஒருவரை வழக்கறிஞர்கள் தாக்கினார்கள் என்று பார்ப்பது சரியானதில்லை. ஏனெனில் சிதம்பரம் கோவிலில் தமிழில் தேவாரம் பாடக்கூடாது என்பதற்காக வழக்கை மேல்முறையிட சுப்பிரமணிய சாமி வந்தார். பரந்துபட்டு ஓரின மக்கள் வாழும் இடத்தில் அவர்களுடைய மொழியைக் கோவிலில் வழிபடக்கூடாது என்று வாதிடுவதற்கு அவர் வந்தார். அப்படித் தமிழைப் பாடுவதையும் பேசுவதையும் கொச்சைப்படுத்தும் நோக்கம் அவர் வந்ததில் இருந்தது. அதனால் ஒடுக்கும் மனம் கொண்ட ஒருவர் நீதிமன்றத்தில் இருக்கும்போது ஒடுக்கப்பட்டவர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டினார்கள் என்றுதான் அவர் மீது முட்டை வீசப்பட்ட நிகழ்வைப் பார்க்க வேண்டும். அதை இங்குள்ள பார்ப்பன ஊடகங்களும் மார்க்சிய(சி.பி.எம்) ஊடகங்களும் தாம் பெரிதாக எழுதின. அந்நிகழ்வுக்குப் பின் காவல்துறை நீதிமன்றத்திற்குள் நுழைந்து நீதியரசர்களையும் வழக்கறிஞர்களையும் கண்மூடித்தனமாகத் தாக்கி மண்டையை உடைத்துக் காயப்படுத்தியதையெல்லாம் அதே ஊடகங்கள் கண்டுகொள்ளவே இல்லை. அது மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியின் ஊடகமாக இருந்தால் கூட அவர்களுடைய பார்ப்பன ஆதரவு நிலைதான் இதில் தெரியவருகிறது. சுப்பிரமணிய சாமி தாக்கப்பட்டார் என்பதைக் கூடப் பார்ப்பனியத்தைத் தூக்கிப் பிடிக்கும் ஒருவர் தாக்கப்பட்டார் என்று தான் அவர்கள் பார்க்கிறார்கள். இப்படியாக வழக்கறிஞர்களை வன்முறையாளர்களாகவும் காவல்துறையினரை நீதிமான்களாகவும் காட்டத்தான் அவ்வூடகங்கள் முயன்றன. அம்முயற்சியில் தான் அவர்களுடைய வர்க்கச் சிந்தனை வெளிப்பட்டது.

கீற்று: தமிழ்த்தேசியம் பேசுபவர்களும் விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்களும் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என்று ஒரு கருத்து இங்கு பரப்பப்படுகிறது. சிறையில் இருக்கும் முஸ்லிம்கள் பலருக்காக‌ வாதாடும் நீங்கள் இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 எந்த வகையில் ஒடுக்கப்படுகிறார்களோ அவ்வகைக்கு எதிராகத் தான் மக்கள் ஒன்றுகூடுவார்கள் என்பது இயல்பான ஒன்றாகும். இலங்கையில் தமிழர்கள், முஸ்லிம்கள் எனப் பிரிந்ததற்கு முதன்மையான காரணம் அதுதான்! சிங்களப் பேரினவாதம் முதலில் தமிழ் முஸ்லிம்களை ஒடுக்கியது; அவர்கள் முஸ்லிம்களாக ஒருங்கிணைந்தார்கள். அதில் பிற மதத் தமிழர்கள் இணையவில்லை; பின்னர் சிங்களப் பேரினவாதம் மற்ற தமிழர்களை ஒடுக்கியது; அவர்களும் ஒருங்கிணைந்தார்கள்; அதில் தமிழ் முஸ்லிம்களும் சேரவில்லை. இப்படிப் பிரித்தாளும் சூழ்ச்சியில் சிங்களர்கள் வெற்றிபெற்றார்கள்.

 இங்குள்ள நிலையைப் பார்த்தால் முஸ்லிம் என்றாலே தீவிரவாதி என்று ஒடுக்கப்படுகிறார்கள். அவ்வொடுக்கத்தைத் தடுத்து ‘இல்லை! முஸ்லிம்கள் நம்மவர்கள்!’ என்று கூறும் குரல் உரக்க ஒலிக்க வேண்டும். அப்படிப்பட்ட குரல் பொதுத் தளத்தில் இருந்து வராதவரை அவர்கள் முஸ்லிம்களாகத் தாம் ஒன்று கூடுவார்கள்; முஸ்லிம்கள், முஸ்லிம்கள் அல்லாதவர்கள் என்னும் பிளவு இருந்துகொண்டே தான் இருக்கும்.

 பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் இந்தியா முழுவதும் நடந்தன; தமிழ்நாட்டிலும் அவர்கள் தாக்கப்பட்டார்கள். அந்தக் கலவரங்களைத் திட்டமிட்டு நடத்திய இந்து வகுப்புவாத அமைப்புகளைப் பெரும்பாலானவர்கள் கண்டிக்கவில்லை. அதனுடைய விளைவாகத் தான் முஸ்லிம்கள் மத அடிப்படையிலான இயக்கங்களாக வளர்ந்தார்கள். கோயமுத்தூர் கலவரத்தில் கூட முஸ்லிம்கள், தாங்கள் முஸ்லிம்கள் என்னும் ஒரே காரணத்துக்காக ஒடுக்கப்பட்டபோது அவர்களுக்கு பிற முற்போக்கு இயக்கங்கள் கைகொடுத்து உதவியிருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறியதன் விளைவுதான் அவர்கள் மதமாக ஒருங்கிணைந்து செயல்பட வழிவகுத்திருக்கிறது.

 தமிழக சிறையில் 12 ஆண்டுகள் அடைத்து வைக்கப்பட்ட குணங்குடி அனிபா உள்ளிட்ட சிறையில் நான் சந்தித்த முஸ்லீம்கள் அனைவரும் நல்ல தமிழ் உணர்வாளர்கள். குணங்குடி அனிபாவின் பாட்டன் தான் புலவர் குணங்குடி மஸ்தான் சாகிபு. தமிழ் தேசிய உணர்வு கொண்ட முஸ்லீம்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள். முஸ்லீம்கள் இல்லாத தமிழ்த் தேசம் என்பது ஓர் கானல் நீர்.

            தமிழ் தேசியம் பேசுபவர்கள் யாரும் முஸ்லீம்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அப்படி யாரேனும் ஒருவர் இருப்பாரேயானால் அவர் தமிழ்தேசியத்தின் எதிரியாகவே இருப்பார். முஸ்லீம்கள் தமிழ்தேசத்தின் ஓர் அங்கம். ஒரு தேசிய இனம், மதத்தால் பிளவுபடுத்தப்படுவதை ஏற்க முடியாது.

நேர்காணல்: 'மக்கள் சட்டம்' சுந்தரராஜன் & கீற்று நந்தன்

தட்டச்சு: முத்துக்குட்டி & மோகன்