சென்னையில் அக்-12ம் நாள் மே-17 இயக்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஆய்வரங்கு, ஈழம் குறித்தும் புதுக்காலனிய காலகட்டத்தில் தேசிய ஒடுக்குமுறையில் ஏகாதிபத்தியத்தின் பங்கு குறித்தும் பல புதிய புரிதல்களை அளித்துள்ளது என்றால் அது மிகையல்ல.

thirumurugan may17
இதுகாறும் தமிழீழ தேசியச் சிக்கலை இந்திய, தமிழக நாடாளுமன்ற அரசியல் கட்சிகளின் சீரழிந்த பிழைப்புவாத வரையறுப்புக்குள் புரிந்து கொண்டிருந்த நமக்கு ஒரு புதிய கோணத்தை மே-17 இயக்கத் தோழர்கள் அறிமுகம் செய்துள்ளனர். கம்யுனிஸ்ட் புரட்சியாளர்கள் செய்யவேண்டிய இந்த மகத்தான பங்களிப்பை இந்தத் தோழர்கள் முன்னெடுத்து செய்துள்ளது தமிழ்த் தேசிய அரசியல் வட்டத்தில் புதிய நம்பிக்கையைத் தோற்றுவித்துள்ளது.

மார்க்சியத்தையும், தேசியத்தையும் இரட்டைத் தண்டவாளங்களாகக் கொண்டுதான் நாம் சமூகத் தொடர்வண்டியை ஓட்டவேண்டும் என்பதை இந்த ஆய்வரங்கில் பரிமாறப்பட்ட செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன‌.

இந்த ஆய்வரங்கு குறித்த கருத்துக்களை நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

1. இதுகாறும் தமிழீழச்சிக்கலை சிங்களப் பேரினவாதத்திற்கும், தமிழ்த் தேசிய இனத்திற்குமான முரண்பாடாக மட்டுமே பார்த்து வந்தது போதாது. இலங்கை இனச்சிக்கலில் இந்திய ஆளும் வர்க்கத்தின் அரசியல் புவிசார் நலனும் இங்கிலாந்து, அமெரிக்கா வல்லாதிக்கர்களின் அரசியல் புவிசார் நலனும் இணைந்து இயங்குவதை பார்க்க வேண்டும்.

இந்திய அரசியலின் பிதாமகர்களில் ஒருவராகவும், காந்திய சோசலிசவாதியாகவும் அறியப்பட்ட நேருவே இலங்கையை இந்தியாவின் விரிவாதிக்க நலனுக்குட்பட்ட பகுதியாக தன் புகழ்மிக்க ஆவணங்களில் பதிவு செய்துள்ளார். இந்த பிதாமகர் வகுத்த வழியில்தான் காங்கிரஸ், பா.ஜ.க அரசுகள் தம் வெளியுறவுக் கொள்கையை வகுத்து செயல்பட்டுவருவது தெளிவாகிறது.

இந்த இந்திய விரிவாதிக்க முகத்தை பாதுகாக்கவே தமிழக அரசியல் கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க. வரிந்துகட்டிக் கொண்டு செயல்பட்டு வ்ருகின்றன.

தமிழீழத்திற்காகப் பேசிய ம.தி.மு.க, பா.ம.க போன்ற கட்சிகளிடமும் இந்திய விரிவாதிக்க நலனுக்குட்பட்ட அணுகுமுறைகளே இருந்து வந்துள்ளன. தேர்தல் கூட்டணிக்காக இந்திய விரிவாதிக்கர்களோடு கூட்டு சேரவும் இவர்கள் தயங்கியதில்லை.

மா.லெ. குழுக்கள் இந்திய விரிவாதிக்கம் பற்றிப் பேசினாலும் இந்தியா ஒரு தரகு பார்ப்பனிய வல்லரசு என்ற முடிவிலிருந்து சிக்கலை அணுகத் தவறிவிட்டனர். இந்தியா பற்றியும் இங்கு நடைபெறும் தேசிய விடுதலைப் போராட்டமே வர்க்கப் போராட்டத்தின்
மையக் கண்ணி என்பதையும் த.நா.மா.லெ.கட்சி தெளிவுபடுத்தியுள்ளது.

2. அ. இரண்டாம் உலகப்போருக்குப் பிந்திய உலகச்சூழலில் புதுக்காலனியத்திற்கான செயலுத்திகளின் ஒரு கூறாக இன அழிப்பு முன்வைக்கப்பட்டுள்ளது என்ற ஆய்வரங்கச் செய்தி கவனங்கொள்ளத் தக்கது. அமெரிக்கா, பிரிட்டன் ஏகாதிபத்தியங்கள் எவ்வாறு தமது தொலைநோக்குத் திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கையின் சிங்கள-தமிழ் இன முரண்பாடுகளை பயன்படுத்தி திரிகோணமலையின் புவிசார் ஆதிக்கத்தைக் கைப்பற்றியுள்ளனர்; உண்மையில் தெற்காசிய வட்டகையின் ஆதிக்க அரசியலில் ஈழச்சிக்கல் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை புரிந்துகொள்ளமுடிகிறது.

ஆ.தமிழீழச் சிக்கலைப் பயன்படுத்தி இந்தியா தனது விரிவாதிக்க நலனை லால் பகதூர் சாஸ்திரி காலம் முதல் மோடி காலம் வரை ஒரே நேர்கோட்டில் நகர்த்திச் சென்றுள்ளதைப் புரிந்து கொள்ளமுடிகிறது.

இ.இந்தியாவின் விரிவாதிக்க நலனை வெளிப்படையாகவே கூறி இந்திய தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க., சி.பி.எம், சி.பி.ஐ.கட்சிகள் செயல்பட்டு வந்துள்ளதையும் புரிந்துகொள்ள முடிகிறது. டெல்லியின் ஆதிக்க நலனுக்கு உட்பட்டு தனது அரசியல் எல்லையைத் தீர்மானித்துக் கொண்ட திராவிடக் கட்சிகளின் அணுகுமுறை தமது நலனைப் பாதிக்காத வாய்வீச்சுகளுக்கு மேல் எதுவும் இல்லை. அதிகாரத்திற்கு வந்தவர்கள் ஈழ ஆதரவு சக்திகளை ஒடுக்க கொடும் அடக்குமுறையைப் பயன்படுத்தினர். விடுதலைப் புலிகள் இயக்கம் இன்றளவும் தடை செய்யப்பட்டுள்ளது, இந்தியாவின் வல்லாதிக்க நலனை வெட்ட வெளிச்சமாக்குகின்றது

3. இன்றைய தமிழகச் சூழலில் ஏகாதிபத்திய உலகமயத்தின் ஒரு பகுதியாக நமது அரசியல் நகர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்படும் இயக்கங்கள் மிகக்குறைவு. முன் வரும் அரசியல் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு என்பது தான் தமிழக இயக்கங்கள் மேற்கொள்ளும் ஒரே அணுகுமுறை. நிகழ்வுகளைத் தீர்மானிக்கும் அரசியல் காரணிகளைக் கண்டறிந்து, அதை அம்பலப்படுத்தும் அரசியலை முன்னெடுக்க வேண்டிய தேவை மிக, மிக அடிப்படையானது. அந்த முயற்சியின் ஒரு கூறாக இந்த ஆய்வரங்கத்தை நான் பார்க்கின்றேன்.

தமிழகத்தில் தி.மு.க ஆதரவு, அ.தி.மு.க. ஆதரவு என்ற வளையத்திற்குள் நின்று கொண்டுதான் தங்கள் அரசியல் நடவடிக்கைகளை தமிழ் ஆதரவு அமைப்புகள் செய்துகொண்டு வருகின்றன. ஈழத்தை சிங்களர்களிடமிருந்து மீட்பதற்குமுன் இந்த நாடாளுமன்ற அரசியல்வாதிகளிடம் இருந்து மீட்க வேண்டும்.

இனி வரும் காலங்களில் கட்டமைக்கப்படும் இயங்கங்களுக்கு சரியான தமிழ்த் தேசிய அமைப்புகள் தலைமை ஏற்க வேண்டும்.

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தின் ஒரு பகுதி தேசிய விடுதலைப் போராட்டங்கள் என்பதை நாம் விரிவாகப் புரிந்துகொண்டு மற்றவர்களும் புரிந்துகொள்ள உதவ வேண்டும்.

குறிப்பு: ICG (International Crisis Group) என்ற ஓர் அரசு சாரா நிறுவனம் உலகளாவிய அரசியல் போக்குகளை தீர்மானிக்கும் அறிவுக்குழாமை இயக்கி வருவதும், தேவையான நேரங்களில் மக்களின் போராட்டங்க்களை ஏகாதிபத்திய நலனுக்கு உட்பட்டு கட்டமைப்பதும் ஆதாரங்களுடன் ஆய்வரங்கில் முன்வைக்கப்பட்டது.

2002 நார்வேயின் முன்னெடுப்பில் நடைபெற்ற இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்குமான அமைதி ஒப்பந்தம், இந்த ICG யின் வழிகாட்டலிலேயே நடைபெற்றது. இந்தக் காலமே 2006 போருக்கான ஒரு சதி என்பதும், பின்னர் 2009 முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்குப் பிந்திய சர்வதேச அரசியல் நிகழ்வுகளை தமிழீழ விடுதலைக்கு எதிராக கட்டமைப்பதில் ஐ.நா மூலமாக ICG செய்து வரும் அரசியல் செயல்பாடுகள் பற்றியும் இந்த ஆய்வரங்கு ஒரு புதிய புரிதலைத் தந்துள்ளது.

- கி.வே.பொன்னையன்

Pin It