பிப்ரவரி 12...முருகதாசன் நினைவு நாளில் ஐ.நாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், மும்பையில் இருக்கும் ஐநா அலுவலகம் முற்றுகையிடப்படும்

தமிழக அரசியல் கட்சி, தமிழ்த் தேசிய தலைவர்கள், உணர்வாளர்களுக்கு மும்பை விழித்தெழு இயக்கம் சார்பாக ஒரு வேண்டுகோள்
 
# பொதுவாக்கெடுப்பு, இனப்படுகொலைக்கான பன்னாட்டு விசாரணை, காமன்வெல்த் அமைப்புடனான அரசாங்க உறவைத் துண்டித்துக் கொள்வது, கச்சத்தீவு மீட்பு, தமிழக எல்லைப் பிரச்சனை தீர்வு, அணுஉலைகளை அகற்றுவது போன்றவைகளுக்கு உறுதி அளிக்கும் கட்சிகளுக்கு மட்டுமே 2014 பொதுத் தேர்தலில் ஆதரவு அளிப்போம் என்று தமிழக கட்சிகள் தி.மு.க, அ.தி.மு.க தங்களுடைய தேர்தல் அறிக்கையில் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட வேண்டும் .

# மீனவர்களுக்கு என தனித்தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்னெடுக்க வேண்டும். ஒட்டு வங்கி இல்லாததால் தான் மீனவர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு கிடைப்பதைப் பற்றிப் பேச எந்த அரசியல் கட்சிகளும் முன்வரவில்லை. மீனவர்களுக்கு என்று தனித்தொகுதிகள் இருந்தால் அவர்கள் சார்பாக பிரிதிநிதிகள் பேசுவார்கள்.

# பட்டியல் இன மக்களுக்கு என ஒதுக்கப்படும் சிறப்பு நிதியைக் (தமிழக அரசிடம் மட்டுமே 6000 கோடி இருக்கிறது, மத்திய அரசிடம் 50 ஆயிரம் கோடி இருக்கிறது. இந்தப் பணம் இலவசங்களுக்கும், வேறு திட்டங்களுக்கும் பயன்பட்டு வருகிறது) கொண்டு பட்டியல் இன மக்களுக்கு என தனி வங்கிகள் தொடங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை பட்டியல் இன மக்கள் நலன் மீது அக்கறையுள்ள கட்சிகள், இயக்கங்கள் குரல் எழுப்ப வேண்டும்.

# ஆம் ஆத்மி எனும் இந்திக் கட்சி வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்து உள்ளது. 39 தொகுதிகளிலும் இக்கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக அறிந்தோம். காங்கிரஸ், பா.ஜ.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இந்திய தேசியக் கட்சிகள் தமிழக மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யாத காரணத்தால் தமிழக கட்சிகளோடு கூட்டணி வைத்தே தேர்தலை சந்தித்து வருகிறன.  அந்த வரிசையில் ஆம் ஆத்மி கட்சியும் தேர்தலில் களமிறங்கியதோடு நில்லாமல் தனித்தே போட்டி என அறிவித்துள்ளது அவர்களின் துணிவைக் காட்டுகிறது. பாராட்ட வேண்டும்.

தமிழர் நலன் சார்ந்த தமிழக அரசியல் கட்சிகள் ஏன் தனித்து நிற்க பயப்படுகின்றன என்பது எங்களுக்கு வேதனையாக இருக்கிறது. சாதி மத வர்க்கமற்ற தமிழர் ஒற்றுமையை விரும்பும் தமிழக அரசியல் கட்சிகள் தமிழர் நல ஒற்றுமை கூட்டணி அமைத்து மாற்று அரசியலை உருவாக்க வேண்டும்.

- மும்பை விழித்தெழு இயக்கம்

Pin It