எதிர்வரும் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியத் துணைக்கண்ட அளவில் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சிகளிடையே கடும் போட்டி உருவாகவுள்ளது. ஆகவே இவற்றில் ஏதாவது ஒரு வண்டியில் ஏறிக் கொள்ளலாம் என அரசியல் கட்சிகளிடையே ஒரு கடும்போட்டி உருவாகி வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை கூட்டணி பேரங்கள் கமுக்கமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே ஊகங்களும், வதந்திகளும் ஊதிப் பெருகி வருகின்றன. இத்தகைய நெருக்கடியான சூழலில், உண்மையான சனநாயகம் மேலோங்க வேண்டும் எனக் கருதும் இயக்கங்களும், சமூக ஆற்றல்களும் வெறும் பார்வையாளர்களாக இருந்து விடமுடியாது. ஆக்க வழியிலான தீவிரமான குறுக்கீடு வரலாற்றுத் தேவையாக உள்ளது.

காங்கிரசுக்கு மாற்று பாரதீய ஜனதாவின் மோடியே என வரிந்துகட்டிக் கொண்டு ஒப்பனைகளும், ஒளிவட்டமும் திட்டமிட்டுக் கட்டமைக்கப் படுகின்றன. ஆனால் காங்கிரசும், பாரதீய ஜனதாவும் ஒரே குட்டையில் ஊறீய இரண்டு அழுகிய மட்டைகளே என்பதை நாம் நன்கு அறிவோம். ஊழல், கறுப்புப் பணம், பார்ப்பனீய-பனியா சார்பு, பதவிவெறி, பன்னாட்டு நிறுவன விசுவாசம் போன்றவற்றில் ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல, காங்கிரசும் பாரதீய ஜனதாவும்! எனவே இவ்விரண்டு நாசகார சக்திகளையும் மக்களிடம் அம்பலப்படுத்தி, நேர்மையான சனநாயக வெளியை உருவாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் மார்க்சிய - பெரியாரிய - அம்பேத்கரிய - தமிழ்த்தேசிய மற்றும் சனநாயகச் செயல்பாட்டாளர்களுக்கு உண்டு என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது.

காங்கிரசையும், பாரதீய ஜனதாவையும் தோலுரிப்பதோடு, மாற்று வழி பற்றியும் மக்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டிய கடமை நமக்குள்ளது. குறிப்பிட்ட ஒரு கட்சியை இதற்கு நாம் அடையாளப்படுத்த முடியாது. சாக்கடையில் உழன்று கொண்டிருக்கும் தேர்தல் அரசியல்வாதிகளுக்கு மாற்றாக, விழுமியம் சார்ந்த மாற்று வழியை நாம் ஆற்றுப்படுத்த முடியும். இதன் தேவை மற்றும் முக்கியத்துவம் குறித்து மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். எடுத்துக்காட்டாக கீழ்க்காணும் மாற்று வழிகள் குறித்து மக்கள் கருத்தைத் திரட்ட முடியும்.

1) வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்பொழுது சாதி, பணம் ஆகிய அளவுகோல்களை வைத்துத் தேர்வு செய்யக்கூடாது. வேட்பாளர்களுக்கென்று தகுதிகள் வரையறுக்கப்பட வேண்டும்.

2) மக்கள் விரோதப் போக்குடன் செயல்படும் வேட்பாளர்களைத் திரும்பப் பெறும் உரிமை மக்களுக்கு இருக்க வேண்டும்.

3) சாதி, மதம் போன்றவற்றை மூலதனமாக வைத்து அரசியல் வணிகம் செய்யும் கட்சிகளைத் தடை செய்ய வேண்டும்.

4) இந்தியத் துணைக்கண்டத்திலுள்ள அனைத்துத் தேசிய இனங்களின் இறையாண்மை ஏற்கப்பட வேண்டும்.

இவை போன்ற மாற்றுக்களைப் பரப்புரை செய்வதன் மூலம் மக்கள் கருத்தைத் திரட்ட முடியும். எனவே காங்கிரசு - பாரதீய ஜனதா ஆகிய இரண்டு மக்கள் விரோத சக்திகளையும் ஒருங்கே நிராகரிக்கும் அமைப்புக்களும், இயக்கங்களும் ஒன்றிணைய வேண்டும், மக்கள் சார்பான மாற்று அரசியலை முன்னெடுக்க வேண்டும் எனும் நோக்கத்தோடு கலந்தாய்வுக் கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அமைப்பிற்கும் தத்தமக்கான அரசியல் முடிவுகள் இருந்தாலும், ஒரு குறைந்தபட்சத் திட்டத்தின் அடிப்படையில் மாற்றுச் சிந்தனையாளர்கள் ஒன்றிணைவதில் தடை ஏதும் இருக்க முடியாது. எனவே, வாரு்ங்கள் கூடிச் சிந்திப்போம்! மக்களிடம் செல்வோம்!

கலந்தாய்வுக் கூட்டம்

அக்டோபர் 13 - 2013 ஞாயிறு காலை 10 மணி
இக்சா அரங்கம், எழும்பூர், சென்னை.

மக்கள் நலன் கருதி அழைப்பு விடுப்போர்

அரங்க குணசேகரன் (தமிழக மக்கள் புரட்சிக் கழகம்)

நிலவன் (தமிழ்த்தேச மக்கள் கட்சி)

கண.குறிஞ்சி (மக்கள் நல்வாழ்வு இயக்கம்)

வழக்குரைஞர் பானுமதி (மக்கள் உரிமைப் பேரவை, தமிழ்நாடு)

கி.வே.பொன்னையன் (தற்சார்பு விவசாயிகள் சங்கம்)

கோ.திருநாவுக்கரசு (தாளாண்மை உழவர் இயக்கம்)

சமர்பா குமரன் (கலைஞர்)

தமிழழகன் (தமிழ்தேசக்குடியரசு இயக்கம்)

பி.டி.சண்முகசுந்தரம் (எம்.எல்.சி.பி. (ஐ))

தமிழ்அரிமா (மக்கள் சுதேசிய இயக்கம்)

வழக்கறிஞர் தமயந்தி (புரட்சிகரப் பெண்கள் விடியல் மையம்)

மதிவண்ணன் (தமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்கம்)

பொடாரன் (இயற்கை வாழ்வுரிமை இயக்கம்)

இரமேஷ் (கீற்று இணையத்தளம்)

Pin It