அரங்கக் கூட்டம்

நாள் - 5.10.2013 சனிக்கிழமை மாலை 4 மணி
இடம் - இக்சா அரங்கம், எழும்பூர், சென்னை.

நவம்பர் 7 - தருமபுரி சாதி ஆதிக்கவெறியின் கோரத் தாக்குதல் நிகழ்ந்து ஓராண்டாகிவிட்டது. இரண்டு உயிர்களையும், தலைமுறையாய் சேர்த்து வைத்த தாழ்த்தப்பட்ட மக்களின் உடைமைகளையும் பலி கொண்ட சாதிவெறி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்காய் வன்னியர் சாதி அணிதிரட்டல் என்கிற வடிவில் நீறுபூத்த நெருப்பாய்க் கனன்று கொண்டிருக்கிறது. சாதி ஆதிக்கச் சக்திகளின் தலித் எதிர்ப்பு என்ற “புதிய சமூக நீதி“ அரசியலின் அதிகாரப் பசிக்கு இன்னும் பல தருமபுரிகளை உருவாக்க இராமதாசுக் கூட்டணி வகையறாக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். எரிக்கப்பட்ட மூன்று கிராமத்து மக்களோ நீதிமன்றத்தின், அரச பீடத்தின் நெடுவாசல்களின் ஓரங்களில் நீதிக்காய் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

சாதி மோதலைத் தீவிரப்படுத்தும் சக்திகளைத் தண்டிக்க அரசும், நீதிமன்றமும் தயாராயில்லை. பா.ம.க.வின் சட்ட அமைப்பான சமூக நீதிப் பேரவையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலு, ரூபர்ட் பர்னபாஸ் இருவரது ஆட்கொணர்வு மனுவின் சூழ்ச்சியை அறிந்தே இருந்த நீதிபதி கே.என்.பாஷா தலைமையிலான அமர்வு அம்மனுவைத் தள்ளுபடி செய்யாமல் திவ்யா, இளவரசனைப் பிரித்ததுடன், இளவரசன் கொலைக்கும் முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. குடிசையை எரித்தவர்களும், இரண்டு கொலைகளுக்குக் காரணமானவர்களும் சுதந்திரமாக உலாவந்து கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றத்தின் துணையோடும் கட்டப் பஞ்சாயத்தின் அதிகாரத்தோடும் திவ்யாவையும், இளவரசனையும் கழுவில் ஏற்றி, சாதிப் பெருமையை நிலைநாட்டிக் கொண்ட சாதிவெறிக் கும்பல் இன்று சாதி மறுப்புத் திருமணம் செய்வோரைக் கணக்கெடுத்துத் தண்டிக்க, கிராமப் பஞ்சாயத்துகளின் வழியாக புதிய சாதிச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.

தமிழக அரசின் குறுகிய, தன்னலம் கொண்ட பா.ம.கவின் மீதான சட்ட நடவடிக்கைகள் தீவிரத் தோற்றத்தை ஏற்படுத்தினாலும் அது அரசியல் பகையைத் தீர்ப்பதாகவும், சாதிய சக்திகள் சொந்த சாதி மக்களை மேலும் தன்னோடு ஒருங்கிணைத்துக் கொள்ளவுமே உதவுகிறது. இதன்மூலம், தாழ்த்தப்பட்ட மக்களே மேலும் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களை சாதி வன்கொடுமைகளிலிருந்து பாதுகாக்கவும், அவர்களின் திருமண உரிமை மற்றும் சமூக உரிமையைப் பாதுகாக்கவும் எவ்வித சட்டங்களையும் பயன்படுத்த முயற்சிக்காத அரசு, போராடும் மக்கள் தங்களை அரசியல்ரீதியாக அணிதிரட்டிக் கொள்ளக்கூடாது என்பதில் மட்டும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. 144 போன்ற தடுப்புச் சட்டங்களைப் பயன்படுத்தி நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகச் சொல்வது பாதிக்கப்பட்ட மக்கள் நீதியைப் பெறாமல், சலுகைகளை அரசிடம் எதிர்பார்ப்பதற்கும் எதிர்மறையான அரசின் நடத்தைகளை தாழ்த்தப்பட்டோர் ஆதரவு எனச் சொல்லி வன்னிய மக்களை சாதிவெறிக் கும்பல் அணிதிரட்டவுமே பார்ப்பனிய ஜெயா அரசின் நடவடிக்கைகள் உதவியிருக்கின்றன. இதுபோன்று சட்டத்தின் மூலம் நீதி கிடைக்காதபோது தங்களுக்கான நீதியை மக்கள் மன்றத்தின் மூலமே பெற்ற வரலாற்றையும் தருமபுரி கொண்டிருக்கிறது.

இந்நிலையில்தான், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான பாதுகாப்பிற்கும் நீதிக்கும், அரசின் நடவடிக்கைக்கு வாலாக இருப்பது என்றில்லாமல் நாம் திட்டவட்டமான கோரிக்கைகளை முன்வைப்பதும் அதற்காக மக்களை அரசியல்ரீதியாகப் போராட்டத்திற்கு அணிதிரட்டுவதும் அவசியமானதாகும். இவ்வாறுதான் போராடும் மக்கள் தங்களுக்கான நீதியைப் பெற்றிருக்கிறார்கள்.

சான்றாக, 1991ல் ஆந்திராவில் சுண்டூர், கரம்சேடு ஆகிய கிராமங்கள் கம்மா ரெட்டி சாதியைச் சேர்ந்த ஆதிக்கச் சக்திகளால் தாழ்த்தப்பட்ட கிராமங்கள் அடித்து நொறுக்கப்பட்டு அதிகளவு மக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு எதிராக அம்மக்கள் மற்றும் பல்வேறு மார்க்சிய, லெனினிய இயக்கங்களும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் போராட்டத்தை முன்னெடுத்தன. 11 ஆண்டுகளாகத் தொடர்ந்த சட்டரீதியான வாய்ப்பு, பெரும் மக்கள் போராட்டம், தியாகத்தினால் 2004ல் தலித் மக்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் பாதிக்கப்பட்ட கிராமத்திலேயே சிறப்பு நீதிமன்றம் அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிறப்பு நீதிமன்றம் அமைப்பதற்கான அவசியம் என்பது, தாழ்த்தப்பட்ட மக்கள் சமூகத்தில் பாதுகாப்பற்று வாழ்ந்துவரும் சூழலில் குற்றவாளிகளை சட்டத்தின்முன் அடையாளம் காட்டுவதற்கு கடும் அச்சுறுத்தலையும் மிரட்டலையும் சந்திக்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் சுதந்திரமாகச் சாட்சி சொல்வதற்கும், நீதியைப் பெறுவதற்கும் உத்தரவாதமளிக்கும் வகையில் அக்கிராமத்திலேயே சிறப்பு நீதிமன்றம் அமைப்பது சாதி ஆதிக்கத்திற்குப் பதிலடியாக அமைவதன்மூலம், அம்மக்களுக்கான குறைந்தபட்சப் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும்.

ஆக, தருமபுரி வன்முறைக்கு சட்டத்தின் நியாயத்திற்கான போராட்டம் தொடர்ந்தாலும், பார்ப்பனிய, நிலவுடைமை, ஆளும் வர்க்கத்தின் ஆளுகைக்கு உட்பட்டதாகவே நீதிமன்றமும், அரசின் நடத்தையும் இருக்கின்ற சூழலில், ஒடுக்கப்பட்ட அம்மக்களுக்கான நீதியையும், சமூகத்தில் ஜனநாயகத்தையும் மக்கள் எழுச்சியின் ஊடாக மக்கள் மன்றத்தில் மட்டுமே நிறுவமுடியும். 80களில் சாதி நிலவுடைமை ஆதிக்கத்திற்குச் சம்மட்டி அடிகொடுத்த தருமபுரி உழைக்கும் மக்களின் வரலாற்றைக் கொண்டே அம்மக்களுக்கான நீதியை இறுதியாக நிலைநாட்டமுடியும்.

தமிழக அரசே,

_       தாக்கப்பட்ட கிராமங்களிலேயே வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறப்பு நீதிமன்றம் அமைத்து நாகராஜன், இளவரசன் மரணம் உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் இணைத்து விசாரணை செய்!

_       தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதிய வன்முறைகளைத் தூண்டிவரும் ஆதிக்க சாதி சங்கங்கள் மீது நடவடிக்கை எடு!

_       சாதி மறுப்புத் திருமணம் செய்த தம்பதிகளைப் பிரிக்கும் சதிவேலையைச் செய்யும் சாதிய கட்டப் பஞ்சாயத்துகள் மீது நடவடிக்கை எடு!

_       சாதி மறுப்புத் திருமணத் தம்பதிகளுக்குப் பாதுகாப்பு அளித்து கௌரவக் கொலைகளைத் தடுத்திட சிறப்புச் சட்டத்தை இயற்று. சாதியற்றவர்கள் என்கிற சான்றிதழை வழங்கு!

_       தாக்குதலுக்குள்ளான கிராம மக்களுக்கு நிவாரணப் பணிகளை உடனடியாகச் செய்து கொடு!

_       தென்மாவட்டத்தில் இமானுவேல், ஒண்டிவீரன் நினைவிடங்களுக்கு வரும் தலித் மக்களைத் தடுக்காதே, அவ்விடத்தில் கலவரமோ, மோதல்களோ நடக்காமல் தடுக்கும் வகையில் பாதுகாப்பை உறுதி செய்!

_       வன்முறைத் தாக்குதலுக்கு தலைமை தாங்கும் வட்டார, புதுப் பணக்கார, நிலவுடைமை சாதி ஆதிக்க சக்திகளின் உடைமைகளைப் பறிமுதல் செய்!

_       தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களின் கோரிக்கைகளுக்காக அணிதிரட்டிக் கொள்வதற்கான உரிமையைத் தடுத்திடும் தடுப்புச் சட்டங்களை அப்பகுதிகளில் பிரகடனப்படுத்து வதை நிறுத்து!
 
தலைமை: தோழர் ரமணி, கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மக்கள் விடுதலை

வரவேற்புரை: தோழர் ராஜாமணி, கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மக்கள் விடுதலை
 
உரையாற்றுவோர்:

தோழர்கள்
கல்யாண்ராவ், தலைவர், புரட்சிகர எழுத்தாளர் சங்கம், ஆந்திரம்
சங்கரசுப்பு, வழக்கறிஞர்
இரத்தினம், வழக்கறிஞர்
சிவலிங்கம், தலித் சுயமரியாதை சக்தி, பெங்களூரு
சித்தானந்தம், மக்கள் ஜனநாயக இளைஞர் அணி
கருணாகரன், கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மக்கள் விடுதலை
அரங்க.குணசேகரன், தமிழக மக்கள் புரட்சிக் கழகம்
பாலன், கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மக்கள் விடுதலை

நன்றியுரை: கார்க்கி, கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மக்கள் விடுதலை

- கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மக்கள் விடுதலை, சென்னை மாவட்டம், 9840327140, 9094415816

Pin It