கர்நாடகத்தில் உள்ள காவிரி நீர்த்தேக்கங்களில் தமிழ்நாட்டிற்குத் திறந்து விட ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லை என சொல்லி வந்த கர்நாடக அரசு, திடீரென 40,000 கன அடி தண்ணீரைத் திறந்து விடும் நிலை எப்படி ஏற்பட்டது?

கர்நாடக அணைகளில் கூடுதலாக இருந்த நீர் இருப்பை மறைத்து தவறான விவரங்களை அம்மாநில ஆட்சியாளர்கள் கொடுத்து வந்தார்கள். தென்மேற்குப் பருவ மழை தொடர்ந்து பெரிய அளவில் பெய்து வருவதால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் தங்கள் அணைகள் உடைந்து விடாமல் பாதுகாத்துக் கொள்வதற்காகவும், தங்கள் மாநில கிராமங்கள் நீரில் மூழ்கி விடாமல் தடுப்பதற்காகவும், திடீரென 40,000 கன அடி தண்ணீர் கர்நாடகம் திறந்து விடுகிறது. அந்த உபரி வெள்ள நீர் வடிந்ததும் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் விடுவதை நிறுத்திக் கொள்கிறது.

இதிலிருந்து தெரியும் உண்மை, காவிரித் தீர்ப்பாயத்தின் முடிவுப் படியோ, அல்லது நீதிமன்றம் உள்ளிட்ட அமைப்புகள் வழங்கும் ஆணைகளின்படியோ, தன்னிடம் உள்ள காவிரி நீரில் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கு நீரைத் தர கர்நாடகம் மறுக்கிறது என்பது தான்.

தமிழகக் காவிரியை கர்நாடகத்தின் உபரி நீரை வெளியேற்றும் வடிகாலாக மட்டுமே, கர்நாடகம் பயன்படுத்த விரும்புகிறது. இத்தனை அத்துமீறல்களில் கர்நாடக அரசு இறங்கிய போதும், அதைத் தடுத்து நிறுத்தி சட்டப்படியான தமிழக உரிமையை நிறைவேற்றித் தர இந்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகின்றது. உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்த பிறகு, 19.02.2013 அன்று காவிரித் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது இந்திய அரசு.

காவிரித் தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் கூறியுள்ளபடி, இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்ட போதே, அதைச் செயல்படுத்தும் அமைப்பான ‘காவிரி மேலாண்மை வாரிய’த்தையும் அமைத்து அதனையும் அரசிதழில் வெளியிட்டிருக்க வேண்டும். அதைச் செய்ய மறுத்துவிட்டது இந்திய அரசு. இதனால், கடந்த ஆண்டைப் போலவே இவ்வாண்டும் குறுவைச் சாகுபடி செய்ய முடியாத அளவிற்கு நிலைமை மோசமாகிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை இந்திய அரசு அமைக்க வேண்டுமென வலியுறுத்தியும், தமிழக அரசு இந்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு அதன் முடிவுகளை பிரதமரிடம் நேரில் சொல்வதற்கு அனைத்துக் கட்சிக் குழுவை முதலமைச்சர் செயலிலதா அழைத்துக் கொண்டு தில்லி செல்ல வலியுறுத்தியும், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் வரும் 09.07.2013 செவ்வாய் காலை 10 மணிக்கு தஞ்சை தொடர்வண்டி நிலையம் அருகிலும், சிதம்பரத்திலும் திருச்சியிலும் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளன.

இதில் பல்வேறு அரசியல் கட்சிகளும், உழவர் அமைப்புகளும் பங்கேற்க உள்ளனர். டெல்டா மாவட்ட மக்கள் இவ்வார்ப்பாட்டத்தில் திரளாகக் கலந்து கொள்ளுமாறு காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

- பெ.மணியரசன், ஒருங்கிணைப்பாளர், காவிரி உரிமை மீட்புக் குழு

Pin It