மராட்டிய மண்ணில் இருந்து அடித்து விரட்டப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர நச்சுத் தொழிற்சாலை,தூத்துக்குடி நகரில் காலூன்றத் தொடங்கிய காலத்தில் இருந்தே பல எதிர்ப்புகளை சந்தித்தது.,ஒட்டு மொத்த தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட மக்களின் எதிர்ப்பையும் மீறி,அனைத்து அரசியல் கட்சிகளின் நேர்முக,மறைமுக ஆதரவினால் உறுதியாக காலூன்றியது.1994 ஆம் ஆண்டில் இருந்து, 1996 ஆம் ஆண்டு வரை, தொடக்கக் காலங்களில்,தூத்துக்குடி மக்கள் சாதி,மதம்,தொழில்போன்ற அனைத்து வேறுபாடுகளையும் களைந்து,தூத்துக்குடி நகரமே ஸ்தம்பிக்கும் அளவிற்கு தமிழராக நிமிர்ந்து நின்று, ஒற்றுமையாக இந்த நாசகார ஆலையை விரட்டிட களம் இறங்கி வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தினர்.போராட்டக்களத்தில் தூத்துக்குடி மாவட்ட பெண்கள் அமைப்புகளின் பங்கு மிகவும் மகத்தானது.பெண்கள் வீர மகளீராய் போர்க்கோலம் பூண்டனர். மீனவர்கள், வியாபாரிகள், விவசாயிகள், மாணவர்கள், உப்பளத் தொழிலாளர்கள், என அனைத்து சமுதாய மக்களும் ஒன்றிணைந்து வலுவான போராட்டங்களை ஒருங்கிணைத்தனர்.

 ஒட்டுமொத்த மக்களின் எழுச்சியையும் கண்டு மிரண்ட ஸ்டெர்லைட் நிர்வாகம், வீதிக்கு வந்து போராடும் மக்களை பிரித்தாள சரியான நேரம் பார்த்து,1996ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில்.ஸ்டெர்லைட் ஆலையை முன்னிறுத்தி மக்கள் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க இருந்த போது, போராடும் மக்களை பிரித்தெடுக்க, சாதிக்கலவரத்தை திட்டமிட்டு தூண்டிவிட்டு, சாதி வன் முறையை தன்னுடைய பணபலத்தினாலும், அதிகாரப் பலத்தினாலும் அரங்கேற்றி,தமிழராய் பின்னிப் பிணைந்து இருந்த மக்களை,சாதியாய் பிரித்து, சாதிவெறியை பரப்பி உயிர் குடித்தது, மக்கள் மீண்டும் சேர்ந்து விடாமல் பார்த்துக் கொண்ட ஆலை நிர்வாகம், தன்னுடைய இருத்தலை தூத்துக்குடி மண்ணிலே கடைசியாக உறுதி செய்தது. 1996 ஆம் ஆண்டு நடந்த சாதிக் கலவரத்திற்கு பின், மக்களின் எழுச்சி குறைந்தது.மக்கள் ஒருவருக்கொருவர் முகம் கொடுத்து பார்க்க முடியாத வகையில் முற்றிலும் அவர்களைபிரித்தெடுத்து,நிரந்தர பகைவர்களாக்கி,அந்த முயற்சியில் வெற்றியும் கண்டது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பாக வழக்கறிஞர் திரு.பிரகாஷ் அவர்களால் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கின் மூலம், சூழலியியலாளர் திரு.நித்தியானத் ஜெய்ராமன், மற்றும் திரு.வைகோ போன்றவர்களால் தான் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இன்று வரை சட்டப் போராட்டம் மட்டுமே நடந்து வந்தது.

 இந்த தாமிர உருக்கு ஆலையை எதிர்க்கும் அனைவருக்கும், அரசியல் கட்சிகள், அமைப்புகள், பள்ளிகள், கல்லூரிகள், சுயஉதவி குழுக்கள், ஊராட்சி மற்றும் நகராட்சி மன்றத் தலைவர்கள், மதஅமைப்புகள், நிர்வாகங்கள் என அனைவருக்கும் சமுக பொறுப்புத் திட்டத்தின் (CSR) கீழ் நன்கொடை, இலஞ்சம் என்று இன்று வரை வழங்கப்பட்டு வருகிறது. இன்று கத்தோலிக்க மதத்தின் கீழ் இயங்கும் சில அறக்கட்டளைகள், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், தொழிற்கல்வி மையங்கள்,சமுகக்கல்வி மையங்கள், கணினி மையங்கள்,மாற்றுத்திறனாளி மையங்கள்,கல்வி மையங்கள்,சில கத்தோலிக்க பங்குத்தளங்கள், இளையோர் இயக்கங்கள்,தொலைக்காட்சி நிறுவனங்கள் என பல தரப்பட்ட அமைப்புகள் அனைத்தும் ஸ்டெர்லைட் மீனவர் வாழ்வாதாரத்திட்டத்தின் (COASTAL LIVELIHOOD PROJECT & SWEP PROJECT) கீழ் நிதி பெறுவது மிகுந்த வேதனை அளிக்கிறது, ந்த நச்சு ஆலையை  தொடர்ந்து இயக்க நாளிதழ்களில் விளம்பரம் கொடுப்பது என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது தன்மானத்தோடு, தற்சார்போடு வாழும் மீனவர் சமுகத்தை இழிவுபடுத்துவதாக உள்ளது.,இரத்தக்கறை படிந்த இந்தப் பணத்தைப் பெற்று சமூக சேவை செய்யும் இத்தகைய நிறுவனங்கள் தங்களின் சமுக விரோத செயல்களை இத்துடன் நிறுத்திக்  கொள்ள வேண்டுகிறோம்.

மீனவர்கள் போராடியதன் விளைவாக,ஆலையின் நச்சுக்கழிவு நீர் இராட்சச குழாய்கள் மூலம் கடலுக்குள் செலுத்தும் திட்டம் முறியடிக்கப்பட்டது. ஆனால், ஆலையின் பின்புறம் தொடங்கி, திரேசுபுரம் கடற்கரை வரை, தற்போது சீரமைக்கப்பட்டிருக்கும் தூத்துக்குடி நகரின் பக்கிள் ஓடை முழுக்க முழுக்க,ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் கழிவுகள், தங்குதடையின்றி, அரிய வகை உயிரினங்களைக் கொண்ட,உயிர்கோளப்பகுதியான மன்னார் வளைகுடாவிற்குள் நாள் தோறும் கொட்டப்பட்டு வருகிறது. இதை மத்திய, மாநில அரசுகள், அவற்றின் வனத்துறை,மீன் வளத்துறை,மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள், மீன்வளக்கல்லூரி, அரசு மற்றும் தனியார் கடல் ஆராய்ச்சி நிறுவனங்கள் என எல்லோரும் இந்த கொடுஞ்செயலை வேடிக்கை பார்க்கிறார்கள்.

ஸ்டெர்லைட் ஆலையின் இந்த படுபாதக குற்றத்திற்கு துணை போகிறார்கள். நற்சான்றும் அழித்துவருகிறார்கள்.இந்த ஆலைக்கு வரும் தாமிரத் தாதுகளை துறைமுகத்தில்,உச்சநீதிமன்றம் விதித்த விதிகளின்படி கையாளாமல், சட்டவிரோதமாக கையாண்டு,தூத்துக்குடி கடலையும், கடல் வளங்களையும், காற்றையும் நச்சாகி வருகிறார்கள்.வ.உ.சி.துறைமுக அதிகாரிகளும் இத்தகைய விதிமீறல் குற்றங்களுக்கு துணைபோகிறார்கள்.தாமிரக் கழிவுகளை ஆற்றுப்படுகைகளிலும், கிணறுகளிலும் கொட்டி, நிலத்தடி நீரையெல்லாம் ஆர்சனிக் கலந்த நீராக மாற்றி விட்டார்கள்.தூத்துக்குடி மக்களுக்கு இன்று காசநோய், புற்றுநோய் மற்றும் தோல்நோய்கள் தான் மிச்சம்.கழிவுகளை எல்லாம் திறந்த வெளியில் கொட்டி வருகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்ட மக்களின் தாய்பாலான தாமிரபரணி ஆற்றில், ஸ்டெர்லைட் ஆலை திருட்டுத்தனமாக,சட்டவிரோதமாகதண்ணீரைஉறிஞ்சி,விவசாயத்தைஅழித்து,விவசாயிகளின் வயிற்றில் அடித்து விட்டது.நிலத்தடிநீர் முழுவதையும் நச்சாக்கி விட்டது.தான் திருட்டுத்தனமாக உறிஞ்சிய தண்ணீருக்கு இன்னும் பணம் கட்டவில்லை. கோடிக்கணக்கான மதிப்பில் தண்ணீர் வரி பாக்கி வைத்துள்ளது.

திருட்டுத்தனமாக எடுத்த மின்சாரத்திற்கு மின்கட்டணம் கோடிக்கணக்கில் செலுத்தவில்லை.தாமிரத் தொழிற்சாலையின் உபரிப்பொருளான (BY-PRODUCT) தங்கத்தை, தன்னுடைய உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக் கணக்கில் காட்டாமல் கலால் மற்றும் சுங்க வரி ஏய்ப்பு செய்து வருகிறது.ஆகவே,இத்தகைய விதிமீறல்களுக்கு துணை போன அனைத்து அதிகாரிகளையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி, கைது செய்து, சிறைத்தண்டனை வழங்கி, இயற்கை வளங்களை பாழாக்க துணைபோன குற்றத்திற்காக அவர்களிடம் இழப்பீட்டுத் தொகை வசூலிக்கப் படவேண்டும்.

 கடந்த மார்ச் திங்கள் 23ஆம் நாள் நடந்த விசவாயு கசிவினால் மக்கள் பலரும் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். அதன் பிறகு, நகரின் வணிகர்கள் ஒன்றிணைந்து இரண்டு முறை வெற்றிகரமாக நடத்திய கடை அடைப்புப் போராட்டங்கள்,மீனவர்களின் முற்றுகைப் போராட்டங்கள்,விவசாயிகள் மற்றும் உப்பளத் தொழிலாளர்களின் கண்டன ஆர்ப்பாட்டங்கள் காரணமாக இன்று மீண்டும் ஸ்டெர்லைட் ஆலைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்களின் இந்த எழுச்சியை உணர்ந்து மதித்து, மத்திய, மாநில அரசுகள், பஞ்ச பூதங்கள் அனைத்தையும் எல்லை கடந்த அளவிற்கு நச்சாக்கி விட்டிருக்கிற இந்த உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட உத்திரவிட வேண்டும். தற்போது  தற்காலிகமாக மூடி,விட்டு மீண்டும் திறக்கும் அளவிற்கு பேரம் பேசப்பட்டால், இந்தத் துரோகச் செயலை செய்யும் கட்சிகளை தூத்துக்குடி மாவட்ட மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள்.எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இத்தகைய கட்சிகளுக்கு தமிழ்மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

 மேலும் தூத்துக்குடி மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் 16,500 மெகாவாட் திறன் கொண்ட தனியார் அனல்மின் நிலையங்கள் கட்டப்பட்டு, அதில் உற்பத்தியாகும் மின்சாரம் எல்லாம் பக்கத்து மாநிலத்திற்கு விற்கப்படுகிறது, கழிவும் மாசுகளும், நோய் நொடிகள் மட்டுமே நமக்கு!கூடங்குளம் அணு உலைகள் போன்ற தமிழினத்தை மெல்லக் கருவறுக்கும் நாசகாரத் திட்டங்களினால் நமது இயற்கை வளங்கள் பாழாகின்றன, வாழ்வாதாரங்கள் அழிந்து போகின்றன. உடல் நோயும், நிலத்தடி நீரும் மேலும் நஞ்சாகிப் போகின்றன.

“கண்ணை விற்று சித்திரம் வரைவதா” என்பதை உணர்ந்து நாம் சாதி, மதம் கடந்து, தமிழராய்,நமது மண்ணையும்,நம் இனத்தையும்,நம் வாழ்வாதாரத்தையும், நம் தலைமுறையையும் காக்க தமிழ்ச் சாதியாய் ஓன்றுபடுவோம்!. ஸ்டெர்லைட் ஆலைக்கு மூடுவிழா எடுப்போம்! வளர்ச்சியின் தாக்கம் இன்று முதலில் மீனவர்களுக்கு, அடுத்து விவசாய வணிகப் பெருமக்களுக்கு! இதில் இருந்து யாரும் தப்பிக்கப் போவதில்லை என்பதை இன்றே உணருவோம்! தமிழராய் அணி திரள்வோம். ஸ்டெர்லைட் ஆலையினால் பாதிப்பு என்றால் நூறு கோடி,கூடங்குளம் அணு உலையை ஏற்றுக்கொள்வதற்கு ஐநூறு கோடி என்று தமிழர் உயிருக்கு விலை பேசுவதை இனியும் அனுமதிக்க மாட்டோம்.

ம.புஷ்பராயன்,                                                                                             ம.சான்சன்,

அமைப்பாளர்,                                                                                             தூத்துக்குடி  மாவட்டத் தலைவர்,

கடலோர மக்கள் கூட்டமைப்பு.                                                      கடலோர மக்கள் கூட்டமைப்பு.

 

Pin It