கன்னியாகுமரியிலிருந்து கூடங்குளம் நோக்கி மீனவர்- மாணவர்- அணுஉலை எதிர்ப்பாளர்களின் முற்றுகைப் பயணம்

 கூடங்குளம் அணுவுலைக்கு எதிரான மக்கள் போராட்டம் 600 நாட்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.இடிந்தகரை மக்களின் உண்ணாவிரதப் போராட்டம், கடல்வழி முற்றுகைப் போராட்டம் சமகால உலக வரலாற்றில் எங்குமே நடந்திராத ஒரு மகத்தான அமைதிவழியிலான மக்கள் போராட்டம் நமக்கு மிக அருகிலேயே  தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேயிருக்கிறது.

“அணுக்கழிவுகளை என்ன செய்யப் போகிறீர்கள்?  நிலநடுக்கப் பகுதியான கூடங்குளத்தில் அணு உலை கட்டியிருப்பது மிகப் பெரும் ஆபத்தாகாதா?சூடான கழிவு நீர் கடலின் தட்பவெப்பநிலையை மாற்றி மீன் வளத்தைப்பாதித்து,மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காதா?” என்பது போன்ற அடிப்படை கேள்விகள் எதற்குமே அணுசக்தித் துறையும் இந்திய அரசாங்கமும் இன்றுவரை பதிலளிக்கவில்லை.அணுலையின் பாதுகாப்பு அம்சங்கள் பற்றிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போதே அணுலையில் எரிபொருகள் நிரப்பி சோதனை ஓட்டம் நடத்தி முடித்துவிட்டதாக அணுசக்தித் துறை சொல்கிறது.

“கரும்புகை வருகிறது, எங்கள் கண்களுக்கும் உடலுக்கும் எரிச்சல் தருகிறது. சோதனை ஓட்டத்தின் பேரிரைச்சல் எங்கள் கர்ப்பிணிப் பெண்களின் சிசுவை பாதிக்கும்அளவு இருக்கிறது.என்ன நடக்கிறது,சொல்லுங்கள் ஐயா”,என்று நம் மக்கள் பீதியுடனும், கண்ணீருடனும் கேட்டுக்கொண்டிருக்கும்போது.நம்மக்களை சிறு துரும்பாய்க் கூட மதிக்காமல், இந்த மாதத்திற்குள் அணுஉலை திறக்கப்படும் என்று அறிவிப்புக் கொடுக்கிறார் மத்திய அமைச்சர் நாராயணசாமி.நமது கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்னும் குறைந்தபட்ச பொறுப்புகூட இல்லாமல், நம்மைக் கேலிக்கூத்துக்கு ஆளாக்கும் வகையில் “இன்னும் 15 நாளில் அணுவுலை திறக்கப்படும்” என்னும் அறிவிப்புகளை கடந்த 10 மாதங்களாக தொடர்ந்து வெளியிடும் நாராயணசாமி போன்றவர்களின் பேட்டிகளை நாம் வாய்மூடி மவுனமாக இன்னும் கேட்டுக்கொண்டிருக்கப் போகிறோமா?

 50 வயது சேவியரம்மா மீதும் 70 வயது பால்ராஜ் தாத்தா மீதும் இன்னும் பல எளிய மக்கள் மீதும் தேசத்தின் மீதுபோர் தொடுத்தார்கள் என்று பொய் வழக்குகளைப் போட்டு திருச்சி, வேலூர் மத்திய சிறைகளில் அடைத்து வைத்தாலும் அதையும் நாம் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருப்பதா?.

 ஆனால்,தங்கள் வாழ்வாதாரத்திற்காகவும், வருங்காலத் தலைமுறைக மகிழ்ச்சியாக வாழும் உரிமைகளுக்காகவும் போராடும் மக்கள் மீது எத்தனை ஒடுக்குமுறைகளை ஆளும் அரசுகள் ஏவிவிட்டாலும்,அணுலையை இழுத்து மூடும் வரை மக்கள் போராட்டம் தொடரும்.

“இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழிவதில்லை

போராடாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்”

ஈழத்தின் இந்த முழக்கத்தை இடிந்தகரை பகுதியில் வாழும் ஒவ்வொரு குழந்தையும்கூட தம் மனதில் ஏந்தி களத்தில் நிற்கிறது. தினம் தினம் கடலுடன் போராடும் மீனவர்களிடம் இருந்து தொடங்கிய போராட்டம் இது என்பதை மறந்து போலீஸ் லத்திக் கம்புகளையும், துப்பாக்கிகளையும்,வழக்குகளையும் காட்டி பயமுறுத்தி விடலாம் என்று அரசு நினைக்குமானால் ஏமாற்றமே மிஞ்சும்.இடிந்தகரையைச் சுற்றியுள்ள கிராம மக்களின் போராட்டக் கரங்களுடன் மற்ற மாவட்ட மீனவர்களின் கரங்களும் ஒன்று சேர்ந்திருக்கின்றன. வாழ்க்கையே போராட்டமாக இருந்த மக்கள், போராட்டதையே தங்கள் வாழ்க்கையாக மாற்றிக் காட்டிக் கொண்டிருக்கும் மாற்றத்தை அணுலைக்கு எதிரான போராட்டம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

இடிந்தகரை மக்கள் போராட்டம்,

  • எளிய மக்களே வரலாற்று நாயகர்கள் என்று உணர்த்திக் கொண்டிருக்கும் போராட்டம்.
  •  சாதாரணப்பொதுமக்களுக்குஒன்றும்தெரியாது.அறிவியலாளர்களுக்கும்விஞ்ஞானிகளுக்கும் எல்லாம் தெரியும் என்னும் பொது மனப்பாங்கை தகர்த்திருக்கிறது.யாரும் யாரையும் கேள்வி கேட்கலாம்,அதற்கு அரசு சார்பில் தக்க பதில் தர வேண்டும் என்னும் விழிப்புணர்வை உண்டாக்கியிருக்கிறது.
  • சிலஊடகங்களின்தமிழர்விரோதப்போக்கை அப்பட்டமாக வெளிக்கொண்டுவந்திருக்கிறது.
  • ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும் மாறி மாறி அடித்துக் கொண்டாலும், அடிப்படையில் ‘முதலாளிகள் நலன்’ சார்ந்தே இயங்கும் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறது.
  • காவல்துறைஎன்பதுஅரசின்வெறும் ஏவல் துறை என்பதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.
  •  அதிகார வர்க்கமும், நீதித் துறையும் இந்த நாட்டில் எவ்வளவு தூரம் சோரம் போயுள்ளன என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.
  • இத்தனை ஒடுக்குமுறைகளையும் தாண்டி நிற்கும் மக்களின் ,நம் தமிழ்ச்சொந்தங்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க தார்மீகக் கடமையை இளம்தலைமுறையினரிடம் ஒப்படைத்திருக்கிறது.

தமிழகத்தில் ஒரு ஒப்பற்ற மக்கள் போராட்டதை பார்த்தும் கேட்டும் வளர்ந்திராத இளம் தலைமுறைக்கு கூடங்குளம் அணுலைக்கு எதிரான மக்கள் போராட்டம் என்றென்றும் நிலைத்து நிற்கப் போகும் ஓர் அரசியல் பாடம்.

அனைத்திற்கும் மேலாக,கல்பாக்கத்தைச் சுற்றியுள்ள மக்களிடம் தங்கள் போராட்டக் கனலின் மூலம் வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளது கூடங்குளம் அணுலைக்கு எதிரான போராட்டம். ஆம், அவர்களும் வீதிகளில் இறங்கி போராடத் துவங்கிவிட்டார்கள். கொட்டும் முரசைப் போல, தமிழகத்தின் தென் பகுதியிலும் வடபகுதியிலும் மக்களின் போராட்ட இடிகள் தாக்கத் துவங்கிவிட்டன. இனியும், செயற்கை மின்வெட்டால் மக்களை ஏமாற்றுவது,ஊரடங்கு உத்தரவு போடுவது என்று தமிழக அரசு தப்பித்துக் கொண்டிருக்க முடியாது. மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய தருணம் நெருங்கி விட்டது.

ஈழத்தில் போர் நடந்து,செய்ய வேண்டியதை நாம் செய்யத் தவறியதால் இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.இன்றும் அதையேதான் செய்யப் போகின்றோமா? உலகில் வேறு எங்கும் இல்லாத மிக அதிக அளவிலான 8000 மெகாவாட் அணுலைகளை கூடங்குளத்தில் நிறுவ முயற்சி செய்து கொண்டிருக்கிறது இந்திய அரசு.ஒரு நொடிப்பொழுதில் மொத்த தென் தமிழ்நாட்டையும் கேரளாவையும் அழித்து விடும் ஆபத்தான இந்த அணுலைத் திட்டத்தை எதிர்த்து நடக்கும் மக்கள் போராட்டம்.

Pin It