கூடங்குளம் அணு உலை எதிர்ப்பில் 441 ஆவது நாள்!

தமிழக அரசே!

காவல் படை முற்றுகையை கைவிடு! 144 தடை உத்தரவை திரும்பபெறு!

மக்களின் உயிரோடு விளையாடாதே! கூடங்குளம் அணு உலை மூடு!

=====================================================================

கேளாத செவிகள் கேட்கட்டும்! பாராமுகங்கள் நம் பக்கம் திரும்பட்டும்!

’இது எங்கள் கடல்; எங்கள் நிலம்; பேச்சிப்பாறை ஆறு எங்கள் சொத்து. கூடங்குளத்தில் அணு உலையை அனுமதிக்கமாட்டோம்’ என்ற உரிமை குரலை மதிக்காத அவை; பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வாக்காளர் அட்டையைத் தூக்கி வீசியதைக் பொருட்படுத்தாத சபை; இன்று கூடங்குளம், வைராவிகிணறு, இடிந்தகரை மக்கள் மீது ஒரு உள்நாட்டுப் போரைத் தொடுத்திருக்கின்றது. இந்த சட்டசபை தான் ஜனநாயகத்தின் சின்னமா?

மார்ச் 19 ஆம் தேதியிலிருந்து இன்று வரை தொடரும் ஊரடங்கு உத்தரவு. செப் 9 ஆம் தேதி அணு உலை முற்றுகை போராட்டத்திற்கு மக்கள் களம் இறங்கிய தருணத்திலிருந்து நடந்தேறிவரும் காவல் படைகளின் வெறியாட்டம். கண்ணீர் புகை குண்டு வீச்சு; தடியடித் தாக்குதல்; மக்களை ஓட ஓட விரட்டிக் கொண்டே இடிந்தகரைக்குள் நுழைந்த காவல் படையின் வெறிச் செயல்கள், தேவாலயத்தில் சிறுநீர் கழிப்பது வரை போனது. கூடங்குளமும், வைராவிகிணறும், சுனாமி நகரும் கூட விட்டுவைக்கப் படவில்லை. பால், தண்ணீர், உணவுப் பொருட்களை உள்ளே அனுமதிப்பதில்லை. சிறுவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் மீது தேசத் துரோக வழக்கு. எல்லாவற்றுக்கும் உச்சமாக இது வரை செய்திருக்கும் இரண்டு கொலைகள்.

மணப்பாடு அந்தோணி ஜான் - அந்த வழியாக நடந்துப் போனவர். அவர் மீது துப்பாக்கிச் சூடு. அதுவும் கொலை வெறியோடு விலாவில் சுட்டக் கொடூரம்.

சிங்களக் கடற்படையால் நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்படும் மீனவனைக் காக்கப் போகாத கடற் படையும், விமானமும் கடலில் நின்று போராடும் மக்களை அச்சுறுத்தப் போனது. விமானத்தைத் தலைக்கருகே பறக்கவிட்டு பயங்காட்டியே இடிந்தகரை சகாயத்தைக் கொன்றுள்ளனர். இது தான் ஜனநாயகமா? இல்லை. இது அரச பயங்கரவாதமா?

காடுகளில் இருந்து பழங்குடிகளை விரட்டியடித்தது போல் இடிந்தகரை கூடங்குளம் மக்களை அப்பகுதியிலிருந்தே விரட்டியடித்து விட்டு பெரு முதலாளிகளுக்கு விருந்து வைக்கத் தயாராகி விட்டார்கள்;

ஆனால், இத்தனை தடைகளையும் தாண்டி 400 நாட்களுக்கு மேலாகப் போராட்டம் தொடர்கின்றது. இழப்புகளைச் சுமந்துக் கொண்டே வெல்லும் வரை போராட உறுதிக் கொண்டிருக்கின்றார்கள் மக்கள். கன்னியாகுமரி, தூத்துக்குடி மீனவர்களும் போராட்டக் களத்தில் இணைந்து விட்டார்கள்.

சென்னை தவிர்த்த பிற பகுதியில் நிலவும் பல மணி நேர மின்வெட்டால் வஞ்சிக்கப்படும் மக்களிடம் இருந்து பொங்கி வரும் கோபத்தை அணு உலைக்கெதிராய் போராடுபவர்கள் மீது திருப்பி விடும் காங்கிரசு ஒருபுறம். போராட்டத்திற்கு கிறுத்துவ முத்திரை குத்தி மதக் கலவரத்தை தூண்டத் துடிக்கும் இந்துத்துவ கும்பல் இன்னொருபுறம். வெளிநாட்டுப் பணம் வருகின்றது என்ற பொய்யைப் பரப்பி போராட்டத்தின் நியாயத்தைக் குலைக்கும் முயற்சி மற்றொருபுறம்.

இப்போது, போராட்டத்தையும் போராடும் மக்களையும் பாதுகாக்க வேண்டிய கடமை நம்மிடம் தான் இருக்கின்றது. போராடும் மக்களின் மூச்சைத் திணறடித்துக் கொண்டிருக்கும் காவல் படை முற்றுகையை உடைத்தாக வேண்டும். தமிழக அரசின் போலி மெளனத்தை கலைத்தாக வேண்டும். அதற்கான போராட்டம் தான் அக் 29 நடக்கவிருக்கும் சட்ட சபை முற்றுகை போராட்டம்.

மக்களை நேசிப்பவர்கள்..தேச வளங்களைக் காக்கத் துடிப்பவர்கள்.. அநீதி கண்டு கிளர்ந்தெழுபவர்கள்.. அடக்குமுறைக்கு அஞ்சாதவர்கள்.. எத்தனை பேர் என்ற கேள்வியை நம் ஒவ்வொருவரிடமும் கேட்டு நிற்கின்றது வரலாறு.

போராடும் மக்கள் தனித்து இல்லை என்று செயலில் காட்டுவோம்.

சென்னையை நோக்கிப் புறப்படுவோம்! கோட்டைக்கு முன்பு அணி திரள்வோம்! 

- கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு.   பேச - 9443184051

Pin It