நமது தாயகத்தின் மீதும், நமது தாயகத்துக்காக களமாடிய வீரர்கள் மீதும், தவமாய் தவமிருந்து பெற்ற தன்னலம் ஏதும் இல்லா தலைவன் மீதும் நமக்குள்ள பற்றுறுதியினை புதுப்பிக்கும் நேரம் மீண்டும் ஒரு தடவை நம் முன் வருகிறது.

எந்த மாவீரனும் தான் இருந்து தமிழீழத்தில் இன்பமாக வாழ்வேன் என்று கனவு கண்டதில்லை. ஒவ்வொரு மாவீரனும் பின்னால் வருபவர்கள் இலக்கை அடைவார்கள், அவர்களுக்கு படிக்கல்லாக எனது உடலும் உயிரும் இருக்கும் என்ற நம்பிக்கையில் தம்மை கொடுத்தவர்கள்.

அண்ணன் இருக்கிறார். அவர் எனது குடும்பத்தை பார்த்துக்கொள்ளுவார் என்ற அசைக்க முடியா உறுதியுடன் கண் மூடிவிட்ட வீர மறவர்கள். இன்று இந்த மாவீரர் குடும்பங்களின் வாழ்வு நிலை என்ன?

அன்றாட வாழ்வுக்கு அல்லல்படும் நிலை ஒரு புறம். தன்மானத்தையே ஆடையாக கொண்டிருந்த இவர்களின் துன்பங்கள் வாய் விடு சொல்ல முடியாதவை.  பயத்தினாலோ சுய நலத்தினாலோ மற்றைய தாயக உறவுகளால் தீண்டத்தகாதவர் போன்ற ஒரு இழி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது ஒரு புறம். இனவெறி மிருகங்களால் வேட்டையாடப்படுவது மறு புறம்.

இன்று யாருமற்ற ஏதிலிகளாக வாழ்ந்துவரும் இவர்களின் சொல்லணா துன்பங்கள் உலகில் எவருக்கும் வரக்கூடாதவை.

இந்த மாவீரர் நாளில் நம்மை நாமே சில கேள்விகளுக்கு உட்படுத்தி கொள்வது அவசியமாகிறது.

இவர்கள் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் சொல்லொனா துன்பத்தை துடைக்க வேண்டியது யார் பொறுப்பு? இவர்களுக்கு என்ன சொல்லி நாம் ஆற்ற முடியும்? என்ன சொல்லி நாம் தேற்ற முடியும்?

இந்த மாவீரர் நாளில் தலைவர் மாவீரர் உரையாற்றினால் நம்மிடம் எவற்றை எல்லாம் கேட்பார்? கண்டிப்பாக போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களின் இன்னலை துடையுங்கள் என்பது முதல் இடத்தில இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இவர்கள் நம் செல்வங்கள். இவர்களை தவிக்க விடுவோமேயானால் நமக்கும் நம் சந்ததிக்கும் இது மீளாப்பழி தவிர்க்க முடியாதது. இப்பழியை தவிர்க்க நாம் என்ன செய்யப் போகின்றோம்?

எத்தனை குடும்பங்களுக்கு நமது உதவி தேவை என்று கணக்கிட்டால், சில போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களுக்கு புலம் பெயர் உறவுகள் இருக்கும். பல போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களில் எவருமே மிஞ்சாமல் அழிக்கப்படுவிட்டனர். மீதம் தாமாக இயங்க முடியாது தவிக்கும் போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களின் எண்ணிக்கை 25,000 விட குறைவாகவே இருக்கும். ஒன்று அல்லது இரண்டு புலம் பெயர் குடும்பங்கள் இணைந்து ஒரு போராளி குடும்பத்தை தாங்கினால் அதிகபட்சம் நமக்கு தேவை 50,000 குடும்பங்களே.

அவர்கள் அன்று போட்ட பிச்சை தானே இன்று நம்மை இங்கு வசதியுடன் வாழ வைத்துள்ளது?

உறவுகள், பொருள், நம்பிக்கை என அனைத்தையும் இழந்து நிற்பவர்கள் இவர்கள். இவர்களுக்கு உதவ கிடைத்தது நமக்கு கிடைத்த பேறாக கருதுபவர்கள் வேண்டும் நமக்கு.

இவர்களை நமது குடும்பத்தின் ஓர் அங்கமாக தாங்க கூடியவர்கள் வேண்டும் நமக்கு.

இந்த உறவுகளை அழைக்கும் பொழுது நம் தலைவன் எனக்கு தேடித்தந்த உறவு நீ என்று சொல்லக்கூடியவர்கள் வேண்டும் நமக்கு.

என் குடும்பத்தின் போராளி அல்லது மாவீரர் தேடித்தந்த சொத்தாக அவர்கள் எண்ணும் அளவுக்கு இருக்கக்கூடியவர்கள் வேண்டும் நமக்கு.

வருவீர்களா? கை தருவீர்களா?

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர் போராளிகள் குடும்ப நலன் பேணும் அமைச்சினால் தளிர் திட்டம் நவம்பர் மாதம் 24 ஆம் நாள் 2012 ஆரம்பிக்கப்படுகிறது.

அனைத்து எம் உறவுகளை அன்புடன் அழைக்கின்றோம்.

காலம்: நவம்பர் மாதம் 24 ஆம் நாள் 2012

நேரம்: 10:00AM - 14:00.PM

இடம் : சன் சிட்டி கடை தொகுதி ( SUNCITY PLAZA )
2761 MARKHAM ROAD Unit B7
Toronto, ON M1X OA4

தொடர்புகளுக்கு:

டொரன்டோ : ஜோ அன்ரனி : 416-854-4143, சுரேன் மகேந்திரன் : 647-808-1864.
ஜெயபாலன் அழகரத்தினம். : 647-269-9473. வின் மகாலிங்கம் : 647-209-4100.
மொன்றியல்: நந்தன்: 514-446-3489
வன்கூவர் : மாக் மோகனசிங்கம் 604-321-0152.

- ஜோ.அன்ரனி, பிரதிநிதி அமைச்சர், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Pin It