படைப்பின் வழியாக உணர்வுகளைப் பொங்க வைத்து, மனதில் அலையடிக்கும் தருணங்களைக் கொண்டு வரும் மாயவித்தைக்காரன் கவிஞன். அந்த உணர்வுகள் வாசிப்பவன் கண்களுக்குள் காட்சிகளாக நிறையும் அதிசயத்தை நிகழ்த்துகிறது. அந்தப் படைப்புகள் வண்டுகள் பேசும் கவிதைகளை மனிதக் காதுக்குள் கொண்டு சேர்க்கின்றன; காற்றின் உணர்வுகளைச் சமூகத்திற்குக் கடத்துகின்றன; இலைகளின் ஆசைகளை எல்லோருக்கும் உணர்த்துகின்றன; ஏரியின் முயற்சியை - காடுகளின் ஏக்கத்தை - தீராக் காதலை - இப்படிப் பலவற்றையும் சொல்லி அங்கலாய்க்கின்றன. அதுபோல அன்பை இயற்கையில் குழைத்துத் தந்திருக்கும் கவிஞர் சித்தார்த்தன் பாரதியின் ‘முழுநிலவும் சில விண்மீன்களும்’ என்ற கவிதைத் தொகுப்பு தன்னை முழுமையாக வாசித்து முடிக்காமல் வாசகரைக் கடந்து செல்ல அனுமதிப்பதில்லை.

siddharthan bharathi bookகண்கள் மூடிய நிலையில் ஒப்புமை இல்லாத பேரழகு புத்தரின் உருவம் தாங்கிய அழகிய அட்டையே மிகப்பெரிய படைப்பாக மாறி எத்தனையோ அவிழ்க்க முடியாத ரகசியங்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறது. ஹைகூகளைப் போலப் பெரும்பாலும் தலைப்புகளற்ற கவிதைகளாகவும், ஓரிரண்டு கவிதைகள் தலைப்புகள் கொண்டும் வெளியாகி இருக்கின்றன. ஒரு சிறு குழந்தை தாயின் விரல் பிடித்துத் தன் உலகத்திற்கு அழைத்துச் செல்வது போலக் கவிதைகள் ஈர்க்கின்றன.

குழந்தைகள் அன்பின் தூதுவர்கள். இந்த உலகத்தின் கடைசித் துளி அன்பும் காய்ந்து போகும் ஒருநாளில் குழந்தைகள் பூமிக்கு வருவது நின்றுவிடும். இவ்வளவு வன்முறை மலிந்திருக்கும் நிலையிலும் குழந்தைகள் குழந்தைகளாகவே பிறந்து, குழந்தைத் தனத்துடன் வளர்வது பேரதிசயம். மனிதர்களில் யார் பேரழகுடன் இருக்கிறார்கள் என்று கேட்டால், யார் ஒருவர் குழந்தை மனத்துடன் வாழ்கிறாரோ அவரே பேரழகு மனிதர் என்று எளிதில் விடை சொல்லி விடலாம். பூவிதழ்களைத் தொடும்போது குழந்தையின் மென்மையான பாதம் நினைவில் வந்து போகும். ரோஜா மொட்டுகளைப் பார்க்க நேர்ந்தால் குழந்தைகளின் கன்னத்தை உணர்ந்து கொள்ளலாம். கள்ளம் கபடமில்லாத குழந்தைகளை அமைதியான புத்தருடன் ஒப்பிடுவது எத்தனை அழகு!

பாதி திறந்நிருக்கும் புத்தரின் தியான விழிகளில் தெரியும் பொருளைக் காட்சிப்படுத்துகிறது முதல் கவிதை. புத்தரின் கண்களில் உறங்கும் குழந்தையைக் கண்டுவிடலாம். அதுபோல உறங்கும் குழந்தையின் பூ இதழ்களில் புத்தரைத் தரிசித்து விடலாம் என்கிறது. குழந்தையின் புன்னகை உலகில் அமைதியைக் கொண்டுவரும் பேராற்றல் வாய்ந்த்து என்பதை இத்தனை எளிமையாகச் சொல்லும் நிலையில் கவிதை வெற்றி பெறுகிறது.

இலக்கியங்களைப் படிப்பதால் என்ன பயன்? கவிதைகளை எழுதுவதால் காசு சம்பாதிக்க முடியுமா? எந்த வேலைக்கும் போகாதவன் கதைகளை எழுதிக் கொண்டு இருக்கிறான் என்பன போன்ற நியாயமற்ற வாதங்கள் ஆரோக்கியமான சமுதாயத்தைக் கெடுத்துவிடும். சாதாரண வண்டுகள் ஒலிக்கும் பாடல்களில் என்ன நிரம்பியிருக்கின்றன என்பதைத் தலைப்பற்ற ஒரு கவிதை சொல்கிறது. கவிதையைப் படிப்போர் எந்தத் தலைப்பை வேண்டுமென்றாலும் சூட்டிக் கொள்ளலாம் என்ற விடுதலை உணர்வை மதித்ததால் கவிஞர் தலைப்பு வைக்காமல் விட்டார் என்று எண்ணத் தோன்றுகிறது.

புத்தக அலமாரியில் வண்டுகள் கூடு கட்டி வசிக்கின்றன என்பது அருமையான பதிவு. அவை அந்த வீட்டு மனிதர்கள் உறங்கிய பிறகு வெளியில் சென்று பாடுகின்றன. எதைப் பாடுகின்றன என்றால் வாசித்த கவிதையைப் பாடுகின்றன. தூங்க வைக்கும் இரவு நேரம் அக்கவிதைகளால் மயங்கிக் கிடக்கிறது. உண்மையில் இவை வண்டுக்கும் இரவுக்குமான கவிதை அன்று. இரவின் இனிமை தூக்கத்திலும், தூக்கம் தாண்டிய கவிதையிலும் இருக்கிறது என்பதன் வெளிப்பாடு. மழைக்கும் குருவிகளின் இனிய பாடல்களில் நனைய ஆசை பிறக்கிறதாம். அப்படியென்றால் மழையின் ஆசையைப் பூர்த்தி செய்ய அழிவின் விளிம்பில் இருக்கும் குருவிகளை மீட்டெடுக்கச் சொல்கிறார் கவிஞர்.

சுவாசிக்கும் மூச்சுக் காற்றிலிருந்து, உடலைத் தழுவிச் செல்லும் தென்றல் தொடர்ச்சியாக, சிலநேரம் சீற்றம் கொண்டு புயலாக உருமாறுவது வரை எந்த நிலையிலும் காற்றை உணர்ந்து கொள்ள முடியுமே தவிர கண்களால் பார்க்கவோ, கைகளால் சிறை பிடிக்கவோ இயலாது. மலர்களை உதிரச் செய்த குற்றத்திற்காக எல்லா நேரமும் தலைமறைவாகித் திரிகிறது காற்று என்ற கற்பனை அற்புதம். மின்மினிப் பூச்சிகளின் அழகைப் பகலில் காணமுடியாத உண்மையையும் கவிதைகள் பேசுகின்றன. குழந்தைகளின் இரவை அழகாக்கிய பெருமிதத்தில் எங்கோ பறந்து விட்டனவாம்.

தாவரங்கள் தன்னை முழுமையாகத் தந்து உயிர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன. வரத்தைத் தருவதால் அதற்கு ‘தாவரம்’ என்று பெயரிடப்பட்டதாக அன்பு கொண்ட மனிதர்கள் கூறுவார்கள். பழங்களைக் கொடுத்து உணவாகவும், வெயில் நேரத்தில் நிழல் கொடுத்தும், மூலிகைச் செடிகளாக மாறி மருந்தாகவும், சில்லென்ற காற்றை வீசி உணர்வுகளைக் குளிர்வித்தும், வசிப்பதற்கு ஏற்ற வீடாகவும், வீட்டின் கதவாகவும், மரச் சாமான்களாகவும், வேலியாகவும் இருக்கும் மரங்களின் பயன்பாட்டைக் கொண்டாடத் தவறியவனுக்குப் புத்தி சொல்லித் திருத்த முயல்கிறது படைப்பு.

உயிர் இரக்கம் பற்றிப் பேசும் வள்ளலார், இறைவன் தன்மையைப் பாடும்போது மரங்களோடு ஒப்பிடுகிறார். கோடையைப் போலச் சுட்டெரிக்கும் வாழ்க்கையில் நிழல் தரும் குளிர்ச்சியான மரம் போலவும், அம்மரம் வழங்கும் இனிய பழங்கள் போலவும் இறைவனின் அருள் கொடை இருக்கிறது என்று தாவரங்களையும் இறைவனையும் தொடர்புபடுத்தும்போது காடுகளின் மேன்மையை உணரமுடியும். அவை குளிர் காலத்தில் நடுங்கும் புல்லுக்கு இலைகளைப் போர்வைகளாக்குகின்றன. ஆனால் காடுகளை மரச்சாமான்களில் புதைத்துவிட்டோம் என்றும் குற்றம் சாட்டுகிறது கவிதை.

‘‘தன் வாழ்வின் நெடும் அனுபவங்களை

சொல்லித் தீர்க்க

குகை மனிதர்களைப் பற்றிப்

பேசி மகிழ

நமக்காகக் காத்திருக்கின்றன

காடுகள்”

என்ற இடத்தில் காடுகளின் ஏக்கத்தைத் தெரிந்து கொள்கிறோம். மரங்கள் வெப்பத்தைப் போக்குவதற்கு மட்டும் நின்று நிலைபெறவில்லை. அவை மனிதர்களிடம் பேசுவதற்காகப் பல விஷயங்களையும் சேகரித்து வைத்திருக்கின்றன என்ற இடத்தில் வாழ்நாளெல்லாம் நம் உயர்வுக்காகப் பாடுபட்ட பெற்றோருக்குக் கடைசி காலத்தில் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாமல் இருக்கும் அவலமான நிலையும் மனதில் தோன்றி மறைவதைத் தடுக்க முடியவில்லை. அன்பைப் பரப்பும் இந்த மரங்கள் வன்முறையாளன் கண்ணில் படும்போது துப்பாக்கிகளாக மாற்றப்படுகின்றன. இங்கே தன் பேராசை காரணமாக மனிதர்களைச் சூறையாட இயற்கையைப் பலியிடும் மனித போக்கு கண்டிக்கத்தக்கது.

நிலவுக்கும் நமக்கும் பெரிய பந்தம் இருக்கிறது. வானில் உலவும் சந்திரன் கீழே மண்ணில் நாம் நடக்கும் போது தலைக்கு மேல் நம்மைத் தொடர்வதாக நம்புவோம். அதே நிலவு பாட்டி வடை சுடும் காட்சியை நமக்குக் காண்பிக்கும். காதலர்களுக்கு முழுநிலவு தரும் இன்பம் அலாதியானது. அந்த நிலவின் தூக்கத்தைக் கலைக்கக்கூடாது என்று வாதாடுகிறது கவிதை.

‘‘தண்ணீர் எடுக்காதே

கிணற்றில் உறங்கட்டும்

நிலவு”

என்று ஹைகூ வடிவில் அமைந்த கவிதையின் தொடர்ச்சியாக நாள்காட்டியின் தேதித் தாளைக் கிழிக்க மனமில்லாத ஓர் ஆண் தென்படுகிறான். நேற்றின் தேதியைக் கிழிக்க மறுக்கும் காரணம் சொல்லும் வேளையில் உன்னதமான காதல் முகம் காட்டுகிறது. ஏனென்றால் தன் காதலியின் பிறந்தநாள் என்பதால் அந்தத் தேதியைக் கிழித்துப் போட மனம் மறுக்கிறது.

கொரோனா தொற்றுநோய் காலத்தில் அரசு சார்பில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது தேநீர் கடைகளில் யாரும் நின்று தேநீர் குடிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. அந்த நேரத்தில் கவிஞர் வெயில் ஒரு கவிதை எழுதினார். வீட்டுக்குள் கொடுக்கப்படும் தேநீரில் அன்பு, ஆரோக்கியம் என்று எல்லாம் இருக்கும். ஆனால் வானம் மட்டும் இருக்காது என்று முடித்திருப்பார். அது போல மொட்டை மாடியில் கறுப்புத் தேநீரைச் சுவைக்கும் கவிஞர் தனக்கு முன்னால் நிலவும், நட்சத்திரங்களும் தேநீரைப் பருகுகின்றன என்று கற்பனை செய்கிறார்.

‘‘எனக்கு முன் தேநீர் பருக

கோப்பைக்குள் விழுந்து கிடக்கின்றன

முழுநிலவும் சில விண்மீன்களும்’’

என்ற வரிகள் காட்சியாகக் கண் முன் விரிகின்றன.

கடைசி மனிதனின் கண்ணீருக்கான ஆறுதலாகக் கடவுள் உருவானார். ஆனால் அந்தக் கடைசி மனிதனின் கண்ணீருக்குக் காரணமானவரே கடவுள்தான் என்பதை மனிதர்கள் உணர்ந்து கொண்டார்களோ இல்லையோ, ஆனால் கவிதைகள் நன்றாகப் புரிந்து கொண்டிருக்கின்றன. ‘‘கடவுளை மற, மனிதனை நினை’’ என்று வலியுறுத்தியதற்குப் பின்னால் இருக்கும் நியாயம் இதுதானே!

பிறப்பின் வழியாகச் சிலரைக் கோயிலுக்குள் கடவுளுக்குப் பூசை செய்யலாம் என்றும், வேறு சிலரைக் கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்பதும் கொடுமை! இறைவன்தான் எல்லோரையும் படைத்தார் என்றால் தன் பிள்ளைகளை ஏற்றத் தாழ்வுடன் அவர் படைக்க வேண்டிய அவசியம்? ஒருவேளை அப்படிச் செய்திருந்தால் அப்படிப்பட்ட கடவுளை மறந்துவிட்டு மானுடச் சமுதாயம் நான் என்று கூவு என்று சொல்லும் வகையில் மனிதனை நினை என்கிறார் தந்தை பெரியார். அதை எதிர்மறைக் கருத்தாக முன் வைக்கிறது கவிதை,

‘‘கடவுளுக்கான

சண்டைகளில்

இழந்து விட்டோம்

நிறைய மனிதர்களை’’

என்ற வரிகள் மிகவும் ஆழமானவை.

வாழும் வீட்டின் இருக்கும் சின்னச் சின்ன அசௌகரியங்களைப் பற்றிப் புலம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், வீடுகளற்ற மனிதர்கள் கடும் வெயிலிலும், புயல் மழையிலும், அதிகப்படியான குளிர் காலங்களிலும் எப்படி வாழ்வார்கள் என்று யோசிப்பது இல்லை. அடித்தட்டு மக்களுக்காகவும், விளிம்பு நிலை மக்களுக்காகவும் ஒரு குரல் ஒலிக்கிறது என்றால் அது படைப்பாளனின் குரலாகத்தான் இருக்க முடியும்.

வீடுகளற்ற சாதாரண தொழிலாளிகள் நடைபாதையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கின்றனர். வாகனங்களின் ஒலி குழந்தைகளுக்கான தாலாட்டாக மாறுகிறது. அதன் புகையோ கொசு விரட்டியாகி விடுகிறது. வரவேற்பறை, சமையலறை, பள்ளியறை, குளியலறை என்று எல்லா அறைகளும் அதே இடத்தில் இருக்க அவர்களின் வாழ்க்கையும் அங்கேயே முடிந்து போகிறது என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறது கவிதை. அந்த வாழ்க்கையின் அதிகபட்ச சோகத்தைக் கவிஞன் பார்க்கும் விதம் தனிக்கவனம் பெறுகிறது.

‘‘அங்கேயே தங்கள் ஆயுளை

முடித்துக் கொள்கிறார்கள்

மனைவியின் பூரண உடலைக் காணாத

கணவனும்

கணவனின் பூரண உடலைக் காணாத

மனைவியும்”

என்ற வெளிப்படுத்திக் கொள்ள முடியாத சோகத்தை ஒரு படைப்பாளி இந்தச் சமூகத்திடம் சொல்லிப் புரிய வைக்கிறார் அவர்களுக்கு ஒரு வீடு கட்டித் தரச்சொல்லி.

குழந்தைகளைக் கொண்டாட வேண்டிய தருணங்களைக் காலி செய்து விடுகிறது வறுமை. குழந்தைகளை வேலைக்கு அனுப்பவது சட்டப்படி குற்றம் என்றாலும் தெரிந்தும் தெரியாமலும் குழந்தைத் தொழிலாளர் வேலைக்குச் சேர்க்கப்படுகின்றனர். பெற்றோர்களின் இயலாமை, சமூகத்தின் புறக்கணிப்பு, முதலாளிகளின் சுரண்டல் என்று இருக்கும் பிரச்சினைகளை நுட்பமாக வெளிப்படுத்தும் கவிதையில் காலங்காலமாகச் சொல்லப்பட்ட வந்த பழமொழியின் பொருள் மாறுபடுகிறது.

தாய்க்கோழி தன் முட்டைகளை அடைகாத்துக் குஞ்சு பொறிக்கும் நிலையில் சொல்லப்பட்ட பழமொழி ஒன்று உண்டு. கோழி மிதித்துக் குஞ்சு சாகாது என்ற பொருளில் கோழி மிதித்துக் குஞ்சு சாகுமா என்ன? என்ற பழமொழி. இங்கே கோழி மிதித்துக் குஞ்சுகள் சாகின்றன என்ற அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார் கவிஞர். குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கும் சூழலில் இப்படித்தானே கவிதை எழுத முடியும்!

பதற்றம் நிறைந்த பகுதிகளில் ஊரடங்கு அறிவிக்கப்படும்போது வெறும் செய்தியாகக் கடந்து போகும் நாம் உலகம் முழுதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போதுதான் அதன் வலிகளையும் வேதனைகளையும் உணர்ந்து கொண்டோம். காஷ்மீரில், பாகிஸ்தானிய தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்துவதால் ஊரடங்கு அறிவிக்கும் நிலையில் அந்த மண்ணின் மைந்தர்கள் தீவிரவாதிகளின் வன்முறையாலும், எல்லைக் காவல் படை என்று சொல்லப்படும் இராணுவத்தாலும் பாதிக்கப்பட்டனர். இதனால் குழந்தைகளின் கல்வி கனவில் வந்து போகும் நிகழ்ச்சியாகி விட்டது.

இந்தச் சூழலில் காஷ்மீர் ஆப்பிளின் சுவை நம் நாவில் இனிக்குமா என்ற அழுத்தமான கேள்வியை எழுப்புகிறது கவிதை. கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழ்நாட்டு மீனவர்கள் தவறுதலாக எல்லையைக் கடந்துவிட இலங்கை ராணுவம் கைது செய்து, அவர்களின் வலைகளைக் கிழித்து எல்லாவற்றையும் நாசம் செய்கிறது. தமிழக மீனவர்களைப் பலி கொடுத்துப் பிடித்து வரும் மீன்கள் மீது நம் விருப்பம் இருக்கத் தேவையில்லை என்று சொல்வது போல இருக்கிறது இந்தக் கவிதை. இனவெறியர்களின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கும் ஈழத்தையும், பாலஸ்தீனத்தையும், ஆப்கானையும், காஷ்மீரையும் மீட்டெடுக்க உத்தரவிடுகிறது படைப்பு. இல்லையென்றால் நடைமுறையில் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இலங்கை மக்கள் இரத்த வெறி பிடித்த ராஜபக்சேக்களை விரட்டும் புரட்சி அரங்கேறும்.

உலகத்தில் இரு பிரிவினரையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒருவர் தேவைக்கு அதிகமாக வைத்திருப்பவர்கள். இன்னொருவர் தேவையை நிறைவு செய்ய முடியாதவர்கள். இந்த இரு பிரிவினருக்கும் இடையில் சுழல்கிறது உலகம். மிதமிஞ்சிய உணவை உண்ண முடியாமல் குப்பைத் தொட்டியில் வீசுபவருக்குப் பசியின் துன்பம் புரியாது; எப்போதுமே முதல் மதிப்பெண் பெறுபவருக்குத் தேர்வில் வெற்றி பெறாத மாணவரின் வருத்தம் தெரியாது; ஒருநாள் அணிந்த ஆடைகளை மீண்டும் அணிவதற்குப் பல மாதங்கள் ஆகும் என்ற அளவில் ஆடைகளைக் குவித்து வைத்திருப்பவர் கிழிசல் ஆடையைத் தைத்து அணிந்து செல்லும் ஒருவரின் வாழ்வியலை உணர்ந்து கொள்வதில்லை. அப்படித்தான் வீடுகளுக்குத் திரும்பிய பறவைகளுக்கு அகதிகளாக முகாம்களில் தஞ்சம் அடைந்த மக்களின் வலிகள் புரிவதில்லை என்கிறார் படைப்பாளி. கூடு திரும்பும் பறவைகள் என்ற சொற்கள் வீடு திரும்பும் மனிதர்கள் என மாற்றி நினைக்க வைக்கின்றன.

எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்கிறது சமத்துவம். யாருக்கு எந்த அளவு கொடுக்க வேண்டும் என்று பார்த்துக் கொடுக்க வேண்டும் என்கிறது சமூகநீதி. சமபோட்டியாளர்கள் இருக்கும் சூழலில் சமமான வாய்ப்பு வழங்குவது சரியானதாக இருக்கும். போட்டியாளர்களின் திறன் வேறு வேறாக இருக்கும்போது அவர்களை அதற்குப் பொருந்தாத போட்டியில் கலந்து கொள்ள நிர்பந்திப்பது வன்முறை. உதாரணமாக, மரம் ஏறும் போட்டியை விலங்குகளுடன் சேர்த்து மீன்களுக்கும் வைப்பது பொருந்தாது. விலங்குகளிலும் மரம் ஏறிப் பழக்கப்பட்ட குரங்கு வகையறாக்கள் எளிதில் வெற்றி பெற்றுவிடும். மற்ற விலங்குகள் ஏமாந்து போகும். ஓவியக் கலைஞனை நீச்சல் போட்டியில் கலந்து கொள்ள பரிந்துரை செய்யும் போது அந்தக் கலைஞன் படும்பாட்டைப் புரிய வைக்க வேண்டியது படைப்பின் பொறுப்பு.

அந்த வகையில் இட ஒதுக்கீட்டைப் பற்றி விவாதிக்க அடித்தட்டு மக்களை அழைக்க வேண்டும் என்று ஓங்கிக் குரல் கொடுக்கிறது படைப்பு.

‘‘என் மகளும்

வெள்ளை வெளிச்சம் நிரம்பிய அறையில்

ஹார்லிக்ஸ் ஆறிக் கொண்டிருக்கும்

கணிப்பொறி மேசையில்

புத்தகம் வைத்துப் படித்துக் கொண்டிருப்பாள்

அப்போது விவாதிப்போம்

இருவரும் இட ஒதுக்கீட்டைப் பற்றி”

என்ற வரிகள் மிகவும் ஆழமானவை. ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கும் நாங்கள் கல்வி பெற்றுச் சமநிலை அடையும் போது ஒதுக்கீடு பற்றி அலசுவோம் என்ற தீர்வு மிக முக்கியமானது.

மனிதக் கழிவுகளை மனிதக் கைகள் அள்ளும் கொடுமை பிறப்பின் அடிப்படையில் அதாவது இன்ன சாதியினர்தான் செய்ய வேண்டும் என்ற வன்மம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. கழிவறைக்குள் இறங்கும் மனிதர்கள் விஷவாயு தாக்கிப் பலியாகும் சூழலில் அவர்களின் குடும்பங்கள் ஆதரவற்றுப் போகின்றன. எத்தனையோ அறிவியல் கண்டுபிடிப்புகள் புதிது புதிதாகச் செயல்பாட்டிற்கு வந்தாலும் மலம் அள்ளும் மனிதக் கைகளுக்கு மாற்றுச் சாதனத்தை உருவாக்கித் தரவில்லை என்ற கோபம் ஒருபக்கம். மக்கள் தங்களைத் தாங்களே ஆளும் மக்களாட்சியும் இதற்குத் தீர்வு காண முற்படவில்லையே என்ற ஆதங்கம் மறுபக்கம். அதனால் சித்தார்த்தன் பாரதி எழுதுகிறார்,

‘‘விஞ்ஞானத்தின் கன்னங்களிலும்

ஜனநாயகத்தின் முகத்திலும்

ஓங்கி ஓங்கி

குத்திக் கொண்டிருக்கிறது

ரயில் நிலைய

தண்டவாளங்களில்

மலம் அள்ளும் மனிதக் கைகள்”

உலகத்தின் எந்த மூலையில் கிடைக்கும் பொருளாக இருந்தாலும் உலகமயமாக்கல் என்ற பெயரில் உலகம் முழுக்கக் கிடைக்கச் செய்கிறோம். அந்தப் பொருள்கள் கொண்டு வந்து சேர்த்த இடத்தோடு சேருமா என்பதைக் கருத்தில் கொள்ளமல் தன்னலத்தோடு செயல்படுகிறோம். கடலில் இருந்து கரை ஒதுங்கிய கிளிஞ்சல்களை வீட்டுத் தோட்டத்தில் தூங்கச் சொல்லும் காட்சியைப் பதிவு செய்கிறது கவிதை. அலைகளின் ஓசையில்லாமல் தூங்காத கிளிஞ்சல்கள் கொண்டு வந்தவரின் குரலுக்குக் கட்டுப்படாமல் ஒன்றாகச் சேர்ந்து பாடி மீண்டும் அலை ஓசையையும், கடலையும் வீட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது என்று முடிகின்ற இடத்தில்,

‘‘மாடியிலிருந்து துப்பினால்

குடிசையில் விழும்

குடிசையில் நின்று துப்பினால்

மாடியே விழும்!”

என்ற காசி ஆனந்தனின் ஒடுக்கப்படவரின் வலிமையைப் பேசும் கவிதைகளின் சாயலைப் பார்க்க முடிகின்றன. ஒடுக்கப்பட்டவர்களின் இசைக் கருவிக்கு ‘தப்’பென்னு பெயர் சூட்டுகிறது ஆதிக்க மனோபாவம். தூய்மைப் பணியாளர்கள் விடிந்தும் விடியாமலும் தங்கள் பணியைச் செய்யத் தொடங்கி விடுகிறார்கள். மதுபானக்கடை வாசலில் இருக்கும் குப்பைகள் முதல் உணவுக் கடைகளிலிருந்து வெளியேறிய மக்கும் குப்பைகளும், மக்காத குப்பைகளும் அவர்கள் கரங்களால் தூய்மை செய்கின்றனர்.

ஆனால் அவர்களுக்குத் தேநீர் குடிக்கும் ஈயத் தேநீர் குவளை மக்கிய கயிற்றில் கட்டப்பட்டுத் தொங்கவிடப்பட்டிருக்கும். அத்தனையையும் சுத்தம் செய்த அவர்களின் கைகள் பட்டுத் தேநீர் குவளை தீட்டாகிவிடக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு என்ற இடத்தில் சமத்துவமும், சமூகநீதியும் மலர வேண்டிய அவசியம் புரிந்து விடுகிறது.

சக மனிதர்களை மனிதர்களாக நடத்தாதவர்கள் மீதும் வெறுப்பு கொள்ளாமல் இருக்கும் ஓர் இடுகாட்டுத் தோழனை அறிமுகப்படுத்தும் இடத்தில் கண்கள் ஈரம் கசிகின்றன.

‘‘வீடுவரை உறவு

வீதிவரை மனைவி

காடுவரை பிள்ளை

கடைசிவரை யாரோ”

என்ற கவியரசர் கண்ணதாசன் கேள்விக்கு இந்தக் கவிதைத் தொகுப்பைப் படிப்பவர்கள் விடை சொல்லிவிடக்கூடும். இறந்தவரின் உடலுக்கு நட்புவட்டம் விடை கொடுத்த பின், உறவுகள் வழி அனுப்பி வைத்த பின் வேறு வேலைகளில் மூழ்கிப் போகும் சொந்தப் பந்தங்களுக்கு நடுவில் அறிமுகமில்லாத நபரின் உடல் என்றாலும், துர்நாற்றம் வீசும் உடலை எரித்துச் சாம்பலாகும் வரை கரிசனத்தோடு கவனித்துக் கொண்டிருக்கும் இடுகாட்டுத் தோழன் சமுதாயத்துக்கு ஒரு பாடத்தைச் சொல்லித் தருகிறார்.

ஈராயிரம் ஆண்டுகள் முன் பாடப்பட்ட வள்ளுவம் உயிர் பெறும் தருணம் இது.

‘‘இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்து விடல்”

என்று நமக்குத் தீமை செய்தவருக்கும் நன்மை செய்வதைவிட அவருக்கு நாம் தரக்கூடிய சரியான தண்டனை வேறு இருக்க முடியாது என்ற புரிதலை உருவாக்குகிறது.

படிக்கப் படிக்க அறிவு தெளிவு பெறுவது போல இந்தக் கவிதைத் தொகுப்பு வாசிக்க வாசிக்கப் புதிய தரிசனத்தைத் தந்து கொண்டிருக்கிறது. நீர்நிலை ஆக்கிரமிப்பு, அநீதிகளிலும் வெளிப்படாத கடவுள், சொல்ல முடியாத காதல், இயற்கையைத் தொலைத்த இடங்களை ஆக்கிரமித்த வன்முறைகள் என்று பல தளங்களில் கவிதை பயணப்படுகிறது. மென் உணர்வுகளை, பாதுகாக்க வேண்டிய இயற்கைச் சூழலை, களையப்பட வேண்டிய வன்முறையை, குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்க வேண்டிய அறிவுரையை, ஆழமான சமூகச் சிந்தனைகளை என்று வாழை இலையில் பரிமாறப்படும் அறுசுவை போலப் புத்தகத்தில் படைக்கப் பட்டிருக்கின்றன. வாசகர்கள் இதை உணரக்கூடும்!

- முனைவர் இரா.மஞ்சுளா

Pin It