modi amith shahCAA-NPR போன்ற சட்டங்களை இயற்றுவத்தில் பாஜக அரசு தீவிரம் காட்டுவதின் பின்னணி என்ன. குஜராத் கலவரங்கள் போன்றவற்றில் அதன் வழிகாட்டுதல்கள் என்ன. அறிவியலை கேலிக்கூத்தாக மாற்றும் பாஜகவின் நடவடிக்கைகளுக்கு என்ன உளவியல் காரணம். செத்த பாஷையான சமஸ்கிருதத்தை முன்னிறுத்துவதான் காரணம் என்ன. அதன் கார்ப்பரேட் அடிமைத்தனங்கள் எங்கிருந்து பெறப்பட்டன.

இந்துத்துவம் என்ற கோட்பாடு எங்கிருந்து பெறப்பட்டது. அந்த கோட்பாட்டால் வடிவமைக்கப்படும் இந்து என்ற கட்டமைப்புக்குள் யாரெல்லாம் பொருந்த முடியும். இந்த கட்டமைப்பு யாரால் உருவாக்கப்பட்டது.

இந்து மதத்துக்கும் இந்துத்துவதுக்கும் என்ன வேறுபாடு. வேதகால மதமும் இந்துத்துவமும் ஒன்றா. இந்துத்துவம் முன்வைக்கும் ஒற்றைத்தன்மை இந்தியாவில் எந்த காலத்திலாவது நிலவியதா. தேசியம் குறித்த இந்துத்துவத்தின் பார்வை என்ன.

தேசத்தின் எதிரிகளாக இந்துத்துவம் யாரை முன்னிறுத்துகிறது. அதற்கான தீர்வாக எதை முன்வைக்கிறது. என்ற கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கான விடைகளைத் தேட சுந்தரசோழனின் "இந்துத்துவம்: கோட்பாடும் அரசியலும்" நூல் முயல்கிறது.

இந்துக்களே மண்ணின் மைந்தர்கள், இந்துக்கள் பல்லாயிரம் ஆண்டுகள் முன்பே அறிவியல் வளர்ச்சியடைந்திருந்தார்கள், இந்துக்களைத் தவிர அனைவரும் வந்தேறிகளே என்பதுபோன்ற வெறிக்கூச்சலிடும் அரசியல் கட்சி வலுப்பெற்றிருக்கும் இன்றைய அரசியல் சூழலில், இந்த நூல் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

உலகிற்கு பல அறிவுசார் கொடைகளை வழங்கியதாக மார்தட்டிக் கொள்ளும் இந்துத்துவம், குறைந்தபட்சம் தனது கொள்கையைக் கூட சொந்தமாக கண்டறியவில்லை என்ற நகைப்புக்குரிய உண்மையை விவாதிக்கிறார்.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் உருவாக்கிய இந்துக்கள் யார் என்கிற வரையறைகளையே இந்துத்துவத்தின் பிதாமகர்களாகக் கருதப்படும் சாவர்க்கரோ, அல்லது ஹெட்கேவாரோ பிடித்துத் தொங்குவதை நம்மால் உணர முடிகிறது.

இந்துக்கள் யார்? என்ற கேள்விக்கு ‘கருப்பு சட்டையும், செவப்பு சட்டையும், பச்சை சட்டையும் போட்டவனைத் தவிர எல்லாரும் நம்மாளுங்கதான்' என்பதுபோன்ற ஒரு விளக்கத்தையே இந்த பிதாமகர்களால் வழங்க முடிகிறது.

இதற்கெல்லாம் காரணம், இந்தியா என்ற மாபெரும் நிலப்பரப்புக்குள் வாழ்ந்த மக்கள் தொகுப்பைப் பற்றிய அடிப்படை அறிவுகூட இல்லாமல் இவர்கள் இருந்தது ஒருபுறம் என்றாலும், அது பற்றிய உண்மைகள் தங்களுக்கே எதிராக முடியும் என்பதை இந்துத்துவவாதிகள் நன்றாக உணர்ந்திருந்தனர்.

எனவே மிகத்தெளிவாக திட்டமிட்டு அவற்றை இருட்டடிப்பு செய்து, ‘எல்லோரும் ஒரே ரத்தம் ஓடும் இந்துக்கள்' என்று அறைகூவல் விடுத்தனர். அந்த ஒரே ரத்தம் ஓடும் இந்துக்கள் - கோட்பாட்டுக்கு அவர்கள் நேர்மையாக இருந்தார்களா என்ற நூலின் அலசலில் அதுவும் இல்லை என்பதும் தெளிவாகிறது. சாதி இந்துத்துவ கோட்பாட்டின் அசைக்க முடியாத அங்கம். ஏனென்றால், இந்துத்துவமோ, அல்லது அதை அடிப்படையாக கொண்ட இந்து மதமோ சாதி என்ற தவிர்க்க முடியாத கட்டமைப்பின் மீதே நிலைகொண்டு நிற்கிறது.

சாவர்க்கரும், ஹெட்கேவாரும், கோல்வர்க்கரும் பல இடங்களில் சாதியை இந்திய, இந்துத்துவ பாரம்பரியத்தின் பெருமைமிகு அங்கமாக குறிப்பிடுகின்றனர். மேலும் பௌத்தத்தையும், சமணத்தையும் சாதியை ஒழித்ததற்காக குற்றவாலிக் கூண்டில் ஏற்றுகிறார்கள்.

ஆனால் அதே சமயம் திருதிராஷ்டிர ஆலிங்கனத்தைப் போல் அவர்களும் இந்து மதத்தின் ஒரு அங்கம் என்று இணைத்துக்கொள்ளப் பார்க்கிறார்கள். இப்படி இந்த கோட்பாட்டின் பிதாமகர்களுக்கு இந்த நாட்டில் வாழ்ந்த பிற நம்பிக்கையுடையவர்களையும், பழங்குடியினரையும் பற்றிய அடிப்படை அறிவுகூட இல்லாமல் இருந்ததை இந்த நூல் அலசுகிறது.

முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல கும்பலின் முன்னோடிகள் கோல்வர்க்கரும், சாவர்க்கரும்தான் என்பதை நம்மால் நன்றாக உணர முடிகிறது. வேதகாலத்தை நோக்கி திரும்புவோம் என்ற வரலாற்றறிவில்லாத வாதமே இவர்களின் அறைகூவலாய் இருந்து வந்துள்ளது.

எந்த ஒரு கண்டுபிடிப்பையும், அறிவியல் கோட்பாடுகளையும், பிதாகரஸ் தேற்றம் உட்பட கணித சூத்திரங்களையும்கூட வேதத்தில் உள்ளது என்று முட்டாள்தனமாக நம்பி அதை பெருமையாக பறைசாற்றும் காலத்தில் வேதங்களில் வருடத்துக்கு 360 நாட்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை அம்பலப்படுத்துகிறது இந்நூல்.

மேலும் விநாயகர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டார், கர்ணனின் பிறப்பிலிருந்து மரபணு தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் இந்துக்கள் என்ற உளறல்களை இந்த நாட்டின் பிரதமர் சொல்வதும், அந்த அடிப்படையில் இந்திய அறிவியல் காங்கிரஸை, தங்கள் இந்துத்துவ அஜெண்டாவை வெளியிடும் கேலிக்கூத்தான அமைப்பாக மாற்றி, உலகளவில் இந்தியாவுக்கு தலைகுனிவு ஏற்படுத்தியதற்கு இந்துத்துவம் என்ற கோட்பாடும் அதை நம்பும், அதற்கு அடிபணியும் ஆட்சியாளர்களுமே காரணம் என்பதை நூலில் புரிந்துகொள்ள முடிகிறது.

இந்து ராஷ்டிரம் என்பது குறித்த கருத்தாக்கம் கூட கொஞ்சமும் இந்திய நிலப்பரப்பைக் குறித்த அடிப்படை அறிவின்றியும், இங்கு வாழ்ந்த இனக்குழுக்களைப் பற்றியும், இங்கு நடந்த இனக்கலப்பை பற்றியும் சிறிதும் கவலைப்படாமல், இது ஒற்றை தேசம் என்ற ஒருமைக் கோட்பாடுகளை முன்வைப்பதை இந்நூல் அலசுகிறது.

இந்துக்களைத் தவிர மற்ற அனைவருமே இந்த நாட்டின் மீது விசுவாசமற்றவர்கள், அல்லது பிளவுபட்ட விசுவாசிகள் என்ற கோட்பாட்டினை ஏன் இந்துத்துவம் முன்வைக்கிறது என்பதை விளக்குகிறார்.

இன்றும் RSS பாலபாடங்களில் இந்துக்களின் புண்ணிய பூமி இந்தியா (அல்லது ஹிந்துஸ்தானம்), அதே நேரம் முஸ்லிம்களுக்கோ கிறிஸ்தவர்களுக்கோ அப்படியில்லை. அதனால் அவர்கள் தங்கள் புண்ணிய பூமியான, மெக்காவுக்காகவோ, அல்லது ஜெருசலேமுக்காகவோ இந்திய மண்ணை காட்டிக்கொடுக்க தயங்க மாட்டார்கள் என்ற மூளைச்சலவை இருந்துகொண்டே இருக்கும்.

இவ்வளவு தேசபக்தியுடைய, புண்ணியபூமிக்காக எதையும் செய்ய தயங்காத RSS மற்றும் இந்து மகா சபா சுதந்திரப்போராட்டத்தில் அளித்த பங்கு என்ன என்ற தன்னெழுச்சியான கேள்விக்கு கிடைக்கும் நகைப்புக்குரிய பதிலைப் பற்றியும் நூல் அலசுகிறது.

அப்படி சொந்தமாக சுதந்திரப் போராட்ட தியாகிகள் இல்லாததும், வாஜ்பாய் போன்ற தியாகிகளைக் காட்டிக்கொடுத்தவர்களும், சாவர்க்கர் போன்ற மன்னிப்புக்கடிதம் தந்து பிரிட்டிஷ் அரசுக்கு விசுவாசிகளாக இருந்தவர்கள் மட்டுமே அங்கமாக கொண்ட இந்துத்துவம் பிற தலைவர்களை தங்களுக்கு நெருக்கமாக காட்டிக்கொண்டு பொய்கள், மற்றும் அரை உண்மைகள் மூலமாக அந்த தலைவர்களை தங்களுக்கானவர்களாக சுவீகரிக்க முயல்வதையும் இந்நூல் அம்பலப்படுத்துகிறது.

பட்டேல், நேதாஜி போன்ற தலைவர்கள் எப்படி RSS மற்றும் சாவர்க்கருக்கு எதிரான மனநிலையைக் கொண்டிருந்தனர் என்பதையும் தக்க ஆதாரங்களுடன் விளக்குகிறது. அதிலும் நேதாஜி கொடுத்தது வலுவான அடி.

காந்தி படுகொலையில் RSS பங்கு குறித்து ஏற்கனவே பலரும் விவாதித்திருந்தாலும், இந்துத்துவவாதிகளின் சப்பைக்கட்டான கோட்சேவின் வாக்குமூலத்தின் பொய்களை இந்நூல் அம்பலப்படுத்துகிறது. மேலும் RSS தலைவர்களுக்கு காந்தி மீதிருந்த வன்மமும் அவர் மீது நடந்த கொலைமுயற்சிகளையும் விளக்குகிறது.

இந்தியாவின் எதிரிகளாக இந்துத்துவம் முன்வைக்கும் இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் கம்யூனிசம் போன்றவற்றை எதனால் எதிரிகளாக முன்வைக்கிறார் என்பதை நூல் அலசுகிறது. அதில் கம்யூனிஸ்டுகள் குறித்த பார்வை பரிதாபகரமானதாக தோன்றுகிறது.

இந்துத்துவவாதிகளின் ஆதர்ச நாயகர்களான, ஹிட்லர், முசோலினிக்கு பிடிக்காததால் தங்களுக்கும் பிடிக்கவில்லை என்ற பரிதாபகரமான உண்மையை மழுப்பி, கம்யூனிசத்தை கடவுளற்ற மதம் என்றும் காரல் மார்க்ஸை அவர்களின் இறைத்தூதர் என்றும் உளறிக்கொட்டுவது பரிதாபமாக உள்ளது.

எப்படி கம்யூனிச எதிரியை முன்னோடிகளான ஹிட்லர், முசோலினியிடம் இருந்து பெற்றுக்கொண்டார்களோ அதைப்போலவே அந்த எதிரிகளுக்கான தீர்வையும் ஹிட்லர் யூதர்களுக்கு செய்ததுபோலவே இருக்க வேண்டும் என்று முன் வைக்கிறார்கள்.

சொந்த நாட்டில் இரண்டாம்தர குடிமக்களாக சிறுபான்மையினரை ஆக்க வேண்டும் என்ற யோசனைகளெல்லாம் அங்கிருந்தே பெறப்பட்டு இன்று CAA-NPR போன்ற சட்டங்களாக பரிணமிக்கின்றன. இப்படி ஹிட்லரை முன்னோடிகளாக கொண்டவர்களின் அபத்தமான தீர்வுகளை அலசுகிறது.

இதில் கடைசி பகுதியாக இருக்கும் ‘இந்துத்துவம், பாசிசத்தின் இந்திய வடிவம்' என்பது ஏற்கனவே பிரச்சார வெளியீடாக பொன்னுலகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. அந்தப்பகுதியில் பாசிசத்தின் குணாதசியங்கள் எப்படி இந்துத்துவதுடன் ஒன்றிப்போகிறது என்பதையும், எப்படி பாசிசம் இந்த்துவத்தின் முன்னோடியாக இருக்கிறது என்பதையும் அறிய முடிகிறது.

கடைசியாக நூலாசிரியர் தொகுப்பாக எப்படி இன்றைய சூழலில் இந்துத்துவத்தின் கோட்பாடுகள் பிரதிபலிக்கின்றன என்பதை விளக்கியுள்ளார். இந்த புத்தகத்தின் மற்ற பகுதிகளெல்லாம் இந்துத்துவத்தின் கோட்பாடுகளையும் வரலாறுகளையும் கால பேதமற்ற பரிமாணத்தில் விளக்கும் போது, அதை இன்றைய சூழலுக்குப் பொறுத்திப் பார்க்க இந்த கடைசி பகுதி உதவுகிறது. இன்னமும் கூட கடைசி பகுதியை விரித்து எழுதியிருக்கலாம் என்பதுதான் அதில் குறையாக உள்ளது.

சமீப காலத்தில் நடந்த மிகப்பெரிய போராட்டமான குடியுரிமை திருத்த சட்டத்தினை இந்துத்துவக் கோட்பாட்டுடன் ஒப்பு நோக்கில் குறிப்பிட்டிருக்க வேண்டும். அதை ஏன் நூலாசிரியர் விட்டுவிட்டார் என்று புரிந்துகொள்ள முடியவில்லை.

இந்துத்துவத்தின் பொருளாதாரம், என்ற ஒரு தலைப்பு மொத்தமாகவே இல்லாமல்போய்விட்டது. கடைசி பகுதியில் அதன் இன்றைய நடைமுறைகளைப் பற்றி எழுதியிருந்தாலும்.

கோட்பாட்டு ரீதியாக இந்துத்துவ பொருளாதாரம் என்ன என்பதையும் அலசியிருக்கலாம். ஏனெனில் இந்துவம் என்பதை மதவியல் கோட்பாடாக நிறுவி பிளவுவாதத்தில் ஈடுபடும் நேரத்தில் அதனை பொருளியல் நோக்கில் கோட்பாட்டு ரீதியாக அம்பலப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

மொத்தத்தில் இந்த நூல் இந்துத்துவத்தை அம்பலப்படுத்த எடுக்கப்பட்ட நல்ல முயற்சி எனலாம். விவாதத்துக்கு உட்படுத்தி விரிவு படுத்தப்பட வேண்டிய சங்கதிகள் இன்னும் நிறைய இருக்கின்றன. அவற்றை விவாதிக்க, செழிமைப்படுத்த படிப்பதும், தொடர்ந்த இயக்கங்கள் மூலம் அம்பலப்படுத்துவதும் இன்றைய தேவை

- சத்யா

Pin It