காணொளி விளையாட்டுகளில் குழந்தைகளைத் தொலைத்து விடாமல் பாதுகாக்கக்கூடிய ஒரே ஒரு வாய்ப்பு நம் கையில் இருக்கிறது. இணையதளங்களில் இதயங்களை வைத்து இழந்து விடாமல் சிறுவர்களை மீட்டெடுக்கக்கூடிய ஒரே ஒரு சாதனம் நம் வசப்பட்டிருக்கிறது. பாதை இடறிச் சறுக்கி விழும் அபாயத்திலிருந்து நல்வழிப்படுத்தும் ஒற்றை வழிகாட்டி எல்லோருக்குமாகப் பொதுவாக்கப் பட்டிருக்கிறது.

umaiyavan bookவழிகாட்டும் சாதனத்திற்குப் புத்தகங்கள் என்று பெயர் சூட்டி இருக்கின்றனர். அவற்றை நூல்கள் என்ற சொல்லாலும் குறிப்பிடலாம். எப்படிக் கட்டடத் தொழிலாளி நூல் பிடித்துப் பார்த்து நீள அகலத்தைச் சரி செய்து கொள்வாரோ அது போல மனத்தைச் சமன்படுத்தி வைக்கும் அச்சடித்த தாள்களை நூல்கள் என்கிறோம்.

சமீபத்தில் வெளியான ‘மந்திரமலை’ என்ற உழவுக் கவிஞர் உமையவனின் நூல் சின்னஞ் சிறுவர்களைத் தவறான வழியில் செல்லவிடாமல், அதே வேளையில் அவர்களின் கற்பனை உலகுக்கு விருந்து படைக்கும் பத்துக் கதைகளுடன் வெளிவந்துள்ளது. குழந்தைகளுக்கு இலக்கியம் படைப்பது என்பது ஒரு சவால்.

சிலர் குழந்தைகளுக்குப் பிடித்தமானவற்றை எழுதினாலே அது சிறுவர் இலக்கியம் என்று சொல்லிவிடலாம் என்று கருதுகின்றனர். “நம்முடைய குழந்தைப் பருவ அனுபவங்களை, நிகழ்வுகளை, கற்பனைகளை அப்படியே எழுதுவது என்பதல்ல. குழந்தைகளின் கண்களைக் கொண்டு சமகால உலகத்தைப் பார்க்க வேண்டியுள்ளது. குழந்தைகளின் பார்வையில் இந்த உலகம் எப்படித் தெரிகிறது என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. மொத்தத்தில் நாம் குழந்தைகளின் மனவுலகத்துக்குள் கூடுவிட்டுக் கூடு பாய வேண்டியிருக்கிறது. அந்த வித்தை உமையவனுக்குக் கிட்டத்தட்ட கைகூடியிருக்கிறது,” என்று அணிந்துரையில் உதயசங்கர் கூறியிருப்பது போல மிக நேர்த்தியாகக் குழந்தைகளுக்கான கதைகளைப் புனைந்திருக்கிறார் ஆசிரியர்.

எதிர்பார்க்காமல் இரட்டிப்பாகக் கிடைக்கும் இனிப்பு, பிறந்தநாளில் புதுத்துணி, நவீன எழுதுபொருட்கள், விளையாட அனுமதி – இப்படி எதில் வேண்டுமானாலும் அமைதி கொள்ளும் குழந்தை மனத்தில் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை விதைப்பது மிக முக்கியம். மேலும் சக உயிர்களை நேசித்து, இயற்கையைப் பாதுகாக்கும் வழிமுறைகளைச் சொல்லித் தர வேண்டியது இன்றைய காலத்தின் அவசியம். இவற்றை இயல்பாகச் சொல்லியிருக்கிறது நூல்.

ஏற்கனவே ‘வாக்கிங் சென்ற மரங்கள்’ என்று கதை எழுதிய எழுத்தாளருக்கு ‘நடக்க நினைத்த கல்’ என்ற தலைப்பில் கதை எழுதுவது ஒன்றும் இயலாததாக இருந்திருக்காது. நடக்கும் நிகழ்வுகளின் மீது கேள்விகளை எழுப்புவது சிறுவர்களின் இயல்பு. அப்படித்தான் யானையைப் போலவும், மான் போலவும், முயல் போலவும் இருக்கும் செம்மலையில் உள்ள சின்னக் கல்லுக்கு ஏன் தன்னால் நடக்க முடியவில்லை என்ற வினா எழுகிறது. நடந்து பார்த்தால் என்ன என்ற விருப்பம் மேலிடுகிறது.

தன்னால் நடக்க முடியாது என்ற உண்மையை மாற்ற நினைக்கிறது கல் என்று விரியும் கதையில் ஆட்டின் கால் பட்டுச் சின்னக் கல் இடம் பெயர்கிறது. கடைசியில் பெற்றோரை எப்படியாவது பார்த்துவிட வேண்டுமே என்ற தவிப்புடன் முடியும் கதையில் பெற்றோர் – பிள்ளைப் பாசத்தை ஆழ்மாகப் பதிவு செய்கிறார் ஆசிரியர்.

அறிவியலில் ‘பிம்பம்’ என்ற சொல்லுக்குப் பெரிய கவனம் உண்டு. ஒருமுறை காட்டில் ஒரு பெரிய கண்ணாடியை வைத்து ஒவ்வொரு விலங்கும் தன் பிம்பம் கண்ணாடியில் தெரியும் போது என்ன செய்கிறது என்ற ஆராய்ச்சி நடந்தது. சில விலங்குகள் கோபப்பட்டுக் கண்ணாடியை உடைக்கத் தொடங்கின. சில விலங்குகள் அச்சப்பட்டு ஓடத் தொடங்கின. ஆனால் மனிதக் குரங்கு தன் பிம்பத்தைக் கண்ணாடியில் பார்த்தவுடன் முத்தமிட்டதாம். அது போல் சிறுவர்கள் என்ன செய்வார்கள் என்ற யோசனையால் உதித்த கதை ‘நீரில் விழுந்த நிலா’.

கயல் என்ற சிறுமி இரவு நேரத்தில் தன் வீட்டின் அருகில் உள்ள குட்டையில் நிலவின் பிம்பத்தைப் பார்க்கிறாள். வானத்திலிருந்து நிலவு தவறிக் குட்டையில் விழுந்து விட்டதாக எண்ணுகிறாள். நீச்சல் தெரியாத நிலவு எப்படி மேலே செல்லும் என்று இரக்கப்படுகிறாள். தானே அதைக் கரையேற்றும் முயற்சியில் ஈடுபட்டுச் சந்திரனை மீண்டும் ஆகாயத்திற்கு அனுப்பிவிடவேண்டும் என்று துடிக்கிறாள். அம்முயற்சியில் வெற்றி பெற்றதாக எண்ணிக் கொண்டு திரும்பினால் மீண்டும் வான்மதி குட்டையில் தெரிகிறது. இந்த வருத்தத்தில் இருக்கும் மகளுக்கு அப்பா பிம்பத்தின் இயல்பைக் கூறி விளக்குவதாகக் கதை முடியும்.

முடிவைப் படித்துவிட்ட கவிஞர் ஈரோடு தமிழன்பன் அறிவியலைச் சொன்னவுடன் சிறுமியின் கற்பனையும் முடிந்து விடும் என்று பதிவு செய்தார். கற்பனையில்தான் எத்தனை மகிழ்ச்சி! விலங்குகளும், பறவைகளும் குழந்தைகளின் உலகத்தில் பேசிக் கொள்ளும். உண்மையில் அவை பேசாது என்பது எல்லோருக்கும் தெரியும். சிறுவர் உலகத்தில் எல்லாம் வேறுபடும். குழந்தைகளுக்கு எல்லாவற்றின் மீது இரக்கம் பிறக்கும். அந்த மனநிலையை அப்படியே பாதுகாக்க இது போன்ற நூல்கள் துணை செய்யும்.

மரம் நடுதல், தூக்கணாங்குருவிக் கூட்டின் மகத்துவம், புயலின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை, ஏற்றம் இறைத்தல், குறட்டைச் சத்தம் என்று பலவற்றையும் பேசுபொருளாகச் சொல்லி இருக்கிறது கதை. நாம் பார்த்திராத - பார்க்க மறந்த உயிரினங்களை மழலைக்கு அறிமுகப்படுத்துவதில் உமையவனுக்குத்தான் எத்தனை ஆர்வம்! காட்டில் ஒரு மின்சார விளக்கு உண்டு என்று விடுகதை போடும் கதைகள் அதுதான் மின்மினிப் பூச்சிகள் என்றும் பதில் தருகின்றன.

தொகுப்பில் காணப்படும் அத்தனை கதைகளுக்கும் இடையில் ஒரு பொதுவான பண்பு உண்டு. எல்லாவற்றையும் ஒற்றுமை என்ற சின்ன இழையால் நெய்து கொடுத்திருக்கிறார். அதனால்தான் சிங்கமும், புலியும், யானையும், மானும், நரியும், பாம்பும், பறவைகளும், மீன்களும், தவளைகளும் – எல்லாம் ஒரே இடத்தில் நின்று பேசிக் கொள்கின்றன. ஓர் உயிருக்கு ஒரு துன்பம் என்றால் அடுத்த உயிர்கள் பதைக்கின்றன.

நம் மரபில் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்கள்தான் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. பயன்படுத்தித் தூக்கி எறியும் பண்பாடு நம் பயன்பாட்டில் இருந்ததே இல்லை. இன்று கூடுமானவரை மனிதர்களை எவ்வளவு தூரம் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அவ்வளவு தூரம் பயன்படுத்திக் கொண்டு அவர்களின் இயலாமையில் ஆதரவற்றோர் இல்லங்களுக்கோ, முதியோர் இல்லங்களுக்கோ துரத்தி விடுவதை வாடிக்கையாகக் கொண்ட சமுதாயத்திலிருந்து ஓர் எதிர் கருத்தைச் சொல்பவன்தானே படைப்பாளி.

பள்ளி நாள்களில் ஆள் அரவமற்றுக் காணப்படும் கருமலை வார இறுதி நாள்களில் கலகலப்பாகிவிடும். ஊரில் உள்ள எல்லா சிறுவர்களும் மலை மீது ஏறி விளையாடி மகிழ்வார்கள். அதிலே மலையும் மகிழுமாம். திடீரென்று சிறுவர்களின் வருகை நின்று போனது. அதற்குக் காரணம் வீட்டில் இருந்த பெற்றோர்கள் அந்த மலைக்குச் சென்று விளையாடினால் படித்தது எல்லாம் மறந்து போகும் என்று சொல்லி விட்டனர்.

குழந்தைகளும் பெற்றோர் சொன்னதை உண்மை என்று நம்பி, பயந்து போய் கருமலைக்கு விளையாடப் போகாமல் இருந்து விட்டனர். குழந்தைகளை இயற்கையோடு விளையாட வைக்க வேண்டும் என்று விரும்பிய எழுத்தாளர் பெற்றோர் கூறியதைப் போல ஒரு புனைவை ஏற்படுத்தியிருக்கிறார்.

ஒருநாள் ராமு மலையின் கண்ணில் தென்பட்டான். கருமலை பிள்ளைகளை விளையாட அழைக்க வேண்டும் என்று விரும்பியது. படித்தது எல்லாம் மறக்காமல் இருக்க தான் ஒரு மந்திரம் சொல்லித் தருவதாகவும், அதைச் சொல்லிவிட்டு மலை மீது ஏறி விளையாடினால் படித்தது எதுவும் மறக்காது என்றும் கூறியது. அதன் பிறகு மந்திரமலை என்ற சிறப்புப் பெயரையும் பெற்றது கருமலை. அது என்ன மந்திரம் என்று கடைசிவரை கதாசிரியர் சொல்ல மாட்டார் என்று நினைத்த வாசகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆசிரியர் அந்த மந்திரத்தையும் கடைசியில் சொல்லியே விட்டார். புத்தகத்தில் இருக்கும் மந்திரத்தை நீங்களே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்!

- முனைவர் சி.ஆர். மஞ்சுளா

Pin It