சமீபத்தில் நடந்த சென்னைப் புத்தகக் காட்சியில் நான் கண்ட காட்சி இது. ஒரு பையன் தான் விரும்பிய புத்தகத்தை வாங்கித் தரும்படி தன் தந்தையிடம் கேட்கிறான். தந்தை புத்தகத்தை வாங்கிப் பார்க்கிறார். அவர் கண்களில் திருப்தி தெரியவில்லை. புத்தகத்தின் பெயர் ‘சுறு சுறு நத்தை.’ ஒவ்வொரு பக்கத்திலும் படம்தான் பெரிதாக இருக்கிறது. பக்கத்துக்கு இரண்டு வாக்கியங்கள்தான் இருக்கின்றன. கொடுக்கிற காசுக்கு நிறைய எழுதப்பட்டிருக்க வேண்டாமா? என்று நினைக்கிறார், அப்புத்தகத்தை ஒதுக்கித் தள்ளி விடுகிறார்.
ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம் என்பதை அவர் அறியவில்லை. மேலும் அந்த ஆறு வயது பையனுக்கு அந்தப் புத்தகம்தான் ஏற்றது என்பதையும் அவர் உணரவில்லை.
தமிழில் வெளிவரும் குழந்தை இலக்கிய நூல்களைப் பார்க்கும் போது ஓவியத்தின் (illustration) முக்கியத்துவம் இன்னும் புரிந்துகொள்ளப் படவில்லை என்றே தோன்றுகிறது.
புத்தகம் பற்றி குழந்தையின் பார்வையை அழகாகச் சொல்லுகிறது. குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பாவின் பாடல் ஒன்று.
‘அப்பா வாங்கித் தந்தது
அருமையான புத்தகம்
அதில் இருக்கும் படங்களோ
ஆஹா மிக அற்புதம்!
யானை உண்டு, குதிரை உண்டு
அழகான முயலும் உண்டு
பூனை உண்டு, எலியும் உண்டு
பொல்லாத புலியும் உண்டு
அப்பா வாங்கித் தந்தது
அருமையான புத்தகம்
பந்து உண்டு, பட்டம் உண்டு
பம்பரமும் கூட உண்டு.
இன்னும் அந்தப் புத்தகத்தில்
எத்தனையோ படங்கள் உண்டு
அப்பா வாங்கித் தந்தது
அருமையான புத்தகம்
அதில் இருக்கும் படங்களோ
ஆஹா, மிக அற்புதம்!
குழந்தை இலக்கியப் புத்தகங்களில் ஓவியத்தின் முக்கியத்துவத்தை குழந்தைக் கவிஞர் புரிந்து கொண்டிருந்ததால்தான் தன்னுடைய பாடல்கள் தொகுதியான ‘சிரிக்கும் பூக்கள்’ நூலுக்கு புகழ் மிக்க ஓவியர்களான திருவாளர்கள் உமாபதி, லதா, சுப்பு, விஜயன், ஆழி.வே.ராமசாமி ஆகியோரின் ஓவியங்களை வாங்கி சேர்த்திருந்தார்,
ஒரு ஓவியம் கூட இல்லாமல் தமிழில் குழந்தை இலக்கிய நூல்கள் வந்து கொண்டிருப்பதைப் பார்க்கும்போது ஐந்து ஓவியர்களை அழ.வள்ளியப்பா பயன்படுத்தியிருந்தது அவரின் அக்கறையை உணர்த்தும்.
குழந்தைகளை வாசிக்கத் தூண்டுவது படங்களே. (Pictures Motivate Children to Read) வார்த்தைகளின் உலகத்தில் நுழைய சித்திரங்களே முதல்படி. முதன் முதலில் படிக்க ஆரம்பிக்கும் குழந்தைகளுக்கு வண்ண ஓவியங்கள் குதூகலத்தை ஏற்படுத்துவதாக ஓர் ஆய்வு சொல்லுகிறது.
பொன்னியின் செல்வன், கடல்புறா, சிவகாமியின் சபதம் தொடர்கதைகளாக வந்த போது அதில் இடம்பெற்ற ஓவியங்களே பெரியவர்களைக் கூட படிக்கத் தூண்டியது. குழந்தைகளையும் புத்தகத் திற்குள் கொண்டு வருவதற்கு ஓவியம்தான் காரண மாக அமைகிறது. ஆனால் தமிழில் வெளி வந்திருக்கும் குழந்தை இலக்கிய நூல்களைப் பார்க்கும் போது ஓவியத்தின் முக்கியத்துவம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
அன்பை வளர்க்கும் கதைகள், பண்பை வளர்க்கும் கதைகள், அறிவை வளர்க்கும் கதைகள், நீதிக் கதைகள், அறிவுரைக் கதைகள், நன்னெறிக் கதைகள், தாத்தா சொன்ன கதைகள், பாட்டி சொன்ன கதைகள், பாட்டி சொல்லாத கதைகள், குழந்தைகளுக்கு தெனாலிராமன் கதைகள், மரியாதை ராமன் கதைகள், சிறுவர்களுக்கு ஆத்திசூடிக் கதைகள், திருக்குறள் கதைகள், சிறுவர் களுக்கு அயல் நாட்டுக் கதைகள், பல நாட்டுக் கதைகள், நாடோடிக் கதைகள், குழந்தைகளுக்கு புத்தி புரட்டும் கதைகள், அருள் நெறிக் கதைகள், சிரிக்க வைக்கும் கதைகள், சிந்திக்க வைக்கும் கதைகள், நல்லொழுக்கக் கதைகள், குறள் கூறும் அறிவுரைக் கதைகள் என்று வெளிவந்திருக்கும் நூல்களில் அட்டையைத் தவிர உள்ளே எந்த ஓவியங்களும் இல்லை.
மேலே கண்ட நூல்களின் பெயர்கள் ஒரு உதாரணத்துக்குத்தான், மேற்படி கதை நூல்கள் 9 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளே படிக்க முடியும். தமிழில் வரும் குழந்தை இலக்கிய நூல்களில் ஐந்து சதவீதம்கூட 4 முதல் 8 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வரவில்லை.
பெரிய குழந்தைகளுக்கான கதை நூல்களாக இருந்தாலும் ஓவியர்கள்தான் படிக்கத் தூண்டும். படங்களையும் சொற்களையும் கொண்டே குழந்தை இலக்கிய நூல்கள் உருவாக்கப்படுகிறது.
தமிழ்க் குழந்தை இலக்கிய நூல்களில் ஓவியம் இந்தளவிற்கு புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு ஏதாவது சிறப்பான காரணங்கள் இருக்கிறதா? என்று சிந்திக்க வேண்டியதிருக்கிறது.
‘குழந்தைகளுக்குத்தானே என்று ஓவியம் சாதாரணமாக இருக்கக் கூடாது. அவர்களுக்குத் தான் விசேஷமாக இருக்க வேண்டும்’ என்று சிறுவர் மணி ஆசிரியர் ஓவியர் சி,மணியின் கூற்றிலிருந்து ஓவியர்கள் குழந்தை இலக்கியத்திற்கு ஓவியத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தே இருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.
பிறகு எங்கே பிரச்சினை?
‘பதிப்புத் துறையிலுள்ள பொருளாதார விதி ஓவியத்தைத் தீர்மானிக்கிறது’ என்று ஓவியர் டி.என்.ராஜன் கூறுவது கவனிக்கத்தக்கது.
நூலகத்துறை புத்தகத்தை வாங்குவதில் ‘பாரம்’ கணக்கை கடைப்பிடிக்கிறது. அதில் ஓவியத்திற்கு எங்கே இடம் இருக்கிறது? மேலும் அத்துறையி லுள்ள ஊழல் நடைமுறைகள் பதிப்பாளர்களை ‘பாஸ்ட் புட்’ போல் புத்தகங்களைத் தயாரிக்க வைக்கிறது. அதனால் பாதிக்கப்பட்டிருப்பது தமிழ்க் குழந்தை இலக்கியமும் குழந்தைகளுமே!
கதையின் ஒரு சம்பவத்தை வார்த்தைகளை விட 60,000 தடவை வேகத்தில் ஒரு படம் உணர்த்தி விடுகிறது. அப்படியென்றால் அத்தகைய வலிமை யான ஒரு படத்தை வரையும் ஓவியரின் வேலை எவ்வளவு கடினமானது என்பதை புரிந்துகொள்ள முடியும்.
ஓவியரிடமிருந்து வலிமையான படத்தைப் பெறுவது என்பது சாதாரண வேலை அல்ல. ஆனால் இங்கே பொறுப்பற்ற முறையிலே எல்லாம் நடக்கிறது.
ஆங்கிலத்தில் வரும் குழந்தை இலக்கிய நூல் களில் எழுத்தாளரின் பெயரோடு ஓவியரின் பெயரும் சம அந்தஸ்தில் இடம் பெறுகிறது. இங்கே ஓவியரின் பெயரை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். தேடினாலும் பல புத்தகங்களில் கிடைக்காது.
குழந்தை இலக்கிய நூலைப் பொறுத்தவரை ஓவியரும் ஒரு படைப்பாளியே.
ஓவியம் கதையை இன்னொரு முறை கூடின பரிமாணத்தில் சொல்லுகிறது. (illustration retell the story and more).
நூலின் உள்ளடக்கத்தை (Text) ஓவியங்களே தெளிவுபடுத்துகிறது, காட்சிப்படுத்துகிறது, அழகுப் படுத்துகிறது.
இவற்றை முழுமையாகப் புரிந்துகொண்ட எழுத்தாளரோ, பதிப்பாளரோ இல்லை என்பதை தமிழில் வரும் பெரும்பாலான குழந்தை இலக்கிய நூல்கள் சொல்லாமல் சொல்லுகிறது.
ஓவியம் கதையில் இடம்பெறும் பாத்திரங் களை அச்சு அசலாக சித்தரிக்க வேண்டும். (உ.ம்) உயரமானவன், நீண்ட அங்கி அணிந்திருந்தான் என்று வருணனை இருந்தால் ஓவியம் அவ்வாறு இருக்க வேண்டும்.
விலங்குகளின் உணர்ச்சிகள் கூட ஓவியங் களில் வெளிப்பட வேண்டும். கோழி கிறுக்கலாக இருக்கும் கோட்டு படங்களில் அதை எப்படி எதிர்பார்ப்பது?
ஓவியங்கள் புதுமையாக அமைவது குழந்தை களைக் கவரும். குறைந்த காசு, கால அவகாசத்தில் வரையப்படுவதில் என்ன புதுமை இருக்கும்?
உள்ளடக்கத்தை புலப்படுத்தவே ஓவியம் இடம் பெறுகிறது. ‘ஏழு சித்திரக்குள்ளர்களும் இளவரசியும்’ என்ற புத்தகத்தில் எந்த ஓவியங் களும் இல்லை. குழந்தைகள் சித்திரக்குள்ளர்களை எப்படி புரிந்து கொள்வது?
‘மாணவர் லட்சியக் கதைகள்’ என்றொரு புத்தகம், ஓவியங்கள் இடம்பெற்றிருக்கிறது. படங்கள் குழந்தைகளைக் கவரும் விதத்தில் இல்லை. ஓவியங் களில் குழந்தை முகமே இல்லை. பெரியவர்களின் முகம் தெரிகிறது. அட்டையில் ஓவியரின் பெயரும் இல்லை. நூல் விளக்கம் பகுதியிலும் இல்லை.
‘ஜப்பானியச் சிறுவர் கதைகள், வெளிநாட்டு கதைகளில் இடம் பெறும் ஓவியம் அந்தந்த நாட்டு மக்களின் முக அமைப்பு, உடை, சுற்றுப்புறங்களை வெளிப்படுத்த வேண்டும். அட்டையில் ஜப்பானிய குழந்தைகளின் புகைப்படம். அவ்வளவுதான். நூலில் ஒரு ஓவியம் இல்லை. இருந்திருந்தால் அது ஜப்பானிய முகத்திற்குப் பதில் ஐரோப்பிய முகத்தில் இருந்திருக்கும்.
குழந்தைகள் படிக்கும் பழக்கத்தில் மாட்டு வதற்கு புத்தகங்களில் இடம்பெறும் ஓவியங்களே தூண்டில்களாக இருக்கிறது. இதை ஆங்கிலத்தில் குழந்தை இலக்கிய நூல்களாக வெளியிடுபவர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். அதனால் பளபளப்புத் தாளில் வண்ண அச்சுடன் பெரிய சைசில் கெட்டி அட்டையுடன் நூல்களை வெளியிடுகிறார்கள். நூல்கள் வயது பிரிவை கருத்தில் கொண்டு வருகிறது.
சமீப காலத்தில் தமிழிலும் பளபளப்புதான், வண்ண அச்சு, பெரிய சைசு என்று குழந்தை இலக்கிய நூல்கள் வந்துள்ளது. அவை வயது பிரிவை கணக்கில் கொள்ளவில்லை. நூல் கதை பொதி சுமக்கிறது. நூல் பதிப்பு ஒரு கலை. அந்த கலையின் எந்த வாசனையும் இல்லாமல் குழந் தைக்கு குமரியின் ஒப்பனை செய்யப்பட்டிருக்கிறது.
தமிழில் விரல் விட்டு எண்ணக்கூடிய சில பதிப்பகங்கள் குழந்தைகளின் வயது பிரிவை கருத்தில் கொண்டு பதிப்பை ஒரு கலையாகப் புரிந்துகொண்டு குழந்தை இலக்கிய நூல்களை வெளியிட்டு இருந்திருக்கிறார்கள்.
மானும் செடியும் ((NCBH)), பால்காரரின் பசு (CBT), சுறுசுறு நத்தை (TULIKA), ஓலை வெடி (Publi cation division), மாயக் கண்ணாடி (வானம்) போன்ற நூல்களை உதாரணங்களாகக் குறிப்பிட விரும்பு கிறேன். இன்றும் குழந்தைகள் விரும்பும் புத்தகம் சித்திரக் கதை (நிக்கொலாய் ரட்லோப்) சோவியத் புத்தகமாகும். ஆதிமனிதனின் முதல் மொழி சித்திரமே.
குழந்தையும் இரண்டு வயதிலேயே வரைய ஆரம்பித்து விடுகிறது. அவர்களின் கற்பனைக்கும் படைப்பாற்றலுக்கும் ஓவியம் உறுதுணை செய்கிறது.
குழந்தைகள் வரையும் ஓவியங்களை இதழ் களிலும் நூல்களிலும் பயன்படுத்துவது ஆக்கப் பூர்வமான விஷயமாகும். பஞ்சுமிட்டாய், குட்டி ஆகாயம் ஆகிய சிறுவர் இதழ்கள் முழுவதும் குழந் தைகள் வரைந்த ஓவியங்களை பயன்படுத்தியிருப்பது பாராட்டத்தக்கது. ஓவியங்கள் மட்டுமல்ல கதை களும் பாடல்களும் குழந்தைகள் படைத்தவையே. பெ. கருணாகரனின் ‘அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனமும் எப்படித் தோன்றின?’ என்ற சிறுவர் கதைகள் நூலில் குழந்தைகள் வரைந்த ஓவியங்களே இடம் பெற்றிருக்கிறது. நம்பிக்கை தரும் போக்குகள் இவை.
படக்கதை நூல்கள் பற்றி குறிப்பிட வேண்டும். குழந்தைகள் வாசிப்பதில் சௌகரியத்தையும் மகிழ்ச்சியையும் படக் கதைகள் தருகின்றன. இதழ்களில் வரும் படக்கதைகளை குழந்தைகள் விரும்பிப் படிக்கின்றனர். படக்கதைகள் நூல் களாக வருவது குறைவாக இருக்கின்றன.
வாழ்க்கை வரலாறு, அறிவியல் நூல்கள் படப் புத்தகங்களாக ஆங்கிலத்தில் நிறைய வருகின்றன. தமிழில் குறைவு.
ஓவியங்களுக்கும் ஓவியருக்கும் முக்கியத்துவம் தந்தும் பதிப்பை கலையாக உணர்ந்தும் தமிழில் குழந்தை இலக்கிய நூல்கள் வெளிவர வேண்டும். இதுவே குழந்தைகளை புத்தகத்தை நேசிக்க வைக்க உதவும் வழி.