இயங்கும் இயக்கப்படும் அனைத்தையும் கவிதைகள், கதைகள் என்று மொழிப்படுத்திவிட்டதாக எண்ணுகிறோம். இருந்தும் கற்பனைகளின் வழி ஆக்கங்கள் பிறந்துக்கொண்டேதான் இருக்கின்றன என்பதை பாப்லோ நெருடாவின் வரிகள் நினைவுக்கு கொண்டு வருகின்றன.

muthamizh virumbi book“நீங்கள் எல்லா மலர்களையும் பறித்துவிடலாம்
ஆனால் வசந்தம் வருவதை தடுக்கமுடியாது”

கவிதையுலகில் நவீனத்துவம் என்பது புதிதுபுதிதாய் வடிவங்களை அமைத்து கொள்கிறது. அந்த நவீனத்துவத்தால் என்றோ எழுதிய ஒரு கவிதை,கருத்தில், பாடுபொருளில் மாற்றங்கள் ஏதுமின்றிஇன்றும் உயிர்பெறுகின்றது. கவிஞர் முத்தமிழ் விரும்பியின் ‘வறட்சியின் பாடல்கள்’ என்ற தலைப்பில் 2005யில் முதல் பதிப்பாக வெளிவந்த கவிதை தொகுப்பு, இம்முறை காவ்யா பதிப்பகத்தால்2018யில் பெயர் மாற்றப்பட்டு,‘திட்டிவாசல் பெண்ணொருத்தி’ என்பதாய் வெளிவந்துள்ளது. புதுக்கவிதையின் அடிநாளத்துடன் நவீனத்துவம் பூசிய கவிதைகள் படிக்கும் வாசகனை ஈர்க்கின்றன.

“யாரோருவரால் கவிதைக்குள்ளிருந்து உன்னதமான இன்பங்களைப் பெறமுடிகிறதோ அவனே உண்மையான கவிஞன், அவனுடைய வாழ்நாளில் ஒரு வரியைக் கூட அவன் எழுதியிருக்காவிடினும்.” என்கிறார் ஜார்ஜ் சான்ட்.

கவிதையின் நுணுக்கங்களில் இருந்து உணரப்படும் நுட்பம், அக்கவிதையின் நேர் மற்றும் மறைபொருளை உணர்த்தும் தன்மை கொண்டது. கவிதைகள் காட்டும் இந்த நுண்ணரசியல் மிகப்பெரிது. உரைநடை போலல்லாமல், சாதாரண வாசிப்புக்கு அப்பாற்பட்டது. பெரும்பாலான படிம கவிதைகள், யதார்த்தம் பேசும் ரியலிச கவிதைகள் தவிர்த்து, வாசித்தல் சுட்டும் நேர்பொருள் கடந்து, மறைபொருள் உணர்த்தும் கவிதையினம் ஒருவகை என்றால், அடுத்தவகையாய் முதல் வாசித்தலில் புரியாத பொருள் மறுவாசிப்பில் கைக்கெட்டும் வகையைச் சேர்ந்தது.

எவ்வகையாயினும் கவிதை என்றவுடன் தோன்றும் மனதின் எதிர்பார்ப்பில், வாசிப்பில் பிடிபடும் வரிகள் வியப்பை ஊட்ட, அது மறைந்து, பின், கவிதை உணர்த்தும் அனுபவம் அலாதியானது.

“Poetry should surprise by a fine excess.. “ என்னும் ஜான் கீட்ஸின் இந்த வரி இதை மெய்ப்படுத்துகிறது.

அவ்வகையான கவிதைகளில் இழையோடும் இயல்பான மற்றும் மிதமிஞ்சிய உணர்வுகள் கவிதை தரும் வியப்பின் பின் இரண்டாவதாய் உணரப்படும். வாசிப்பின் முதலில் சட்டென உணரப்படும் வியப்பானர்வால், கவிதையின் சாரமாய் இயங்கும் பாடுபொருளின் அழுத்தம் குறைக்கப்படும் சாத்தியங்களும் நேரும்.

விரும்பி அவர்களின் இக்கவிதை காட்டும் இயல்பு வாழ்க்கையின் ஒரு கணம் அலாதியானது.

“வெட்டுக் கத்தியைத்
தனித்து வைத்து
அவர் திரும்பும் கணத்தில்
கறிக்கட்டையில்
இறைச்சித் துண்டுகளைப்
பொறுக்கிப் பறக்கின்றன
காகங்கள் “ - ( பார்வை )

காகத்தின் இயக்கம், ஓன்றாய் மட்டும் இல்லாமல் ‘பொறுக்கிப் பறக்கின்றன’ என்று இரண்டு செயல்களாய் ‘அவர் திரும்பும் கணத்தில்’ நடைபெறுவதாக சொல்லப்படும் கவித்துவத்தில் சுட்டப்படும் சொல் சொக்கட்டான் விளையாட்டு ரசிக்க வைக்கிறது. 

நவீனம் :

கவிதைகள், கவிதை புத்தகம் என்றாலே ஒரு மாலை பொழுதில், மெல்லிய இசையுடன் அல்லது ஒரு கோப்பை தேநீருடன் வாசிக்க தகுந்ததாய் இருக்கலாம். இசையுடன் வாசிக்க முடிந்தவை சற்று இலகுவானவை. கோப்பை தேநீருடன் வாசிக்க முடிந்தவை இலகுத்தன்மை சற்று மாறியவை. கவிஞர் விரும்பியின் கவிதைகளை இரண்டாவதாய் கொள்ளலாம்.

சற்று நவீனத்துவம் சுட்டும் கவிதைகள். அதற்குள் பிரக்ஞையுடன் சேர்க்கப்பட்ட வாழ்வின் இயல்புகள் வியக்க வைக்கின்றன.

“மாலைச் சூரியனின்
காலடியில் விழும் நிழல்
பார்த்து விளையாடும்
குழந்தைக்குத் தனிமையேது?” - (விளையாட்டு )

என்னும் கேள்விக்கு ஆம் என ஒத்திசைக்கிறது மனசு.

கவிதைகளின் தலைப்பு அதனுள் இயங்கும் பொருளை குறிப்பதாய் அமைந்திருக்கிறது. இசைக்கும் கலைஞன் குறித்த கவிதையொன்றுக்கு ‘இசைஞன்’என்னும் தலைப்பிட்டு அழைக்கும் மயக்கம், அக்கவிதைக்குள்ளும் இருக்கிறது. இரவில் அந்த ஊரில் இசைக்கும் ஒரு இளைஞனின் இசை, அவன் அந்த இடத்தில் இல்லாத போதும் அந்தப் பாடலின் துளிகள், இசை குறிப்புகள் என்று அவன் விட்டுச்சென்றவை எல்லாம் ஒரு பெண்ணின் வழியாக அவளின் குழந்தைக்கு ஊட்டப்படுவதாக எழுதியிருக்கும் கவிதை, நளினம்.

“ஆண்டுகள் சில நிறைந்தாலும்
நிலாச்சோறு கைக்கொண்ட பெண்
குறை ஒளியில் குழந்தைக்கு
விடைபெற்றுப் போன அவனது
இசை குறிப்புகளை மீட்டு
ஊட்டுகிறாள் “- ( இசைஞன் )

நவீனத்துவத்தின் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கும் ‘வடு’ என்னும் மற்றுமொரு கவிதை,

“பச்சை மண்கலயத்தில்
நுழைந்த சிறு பாம்புக்குட்டி
உன் நினைவை
அழைக்கிறது

வற்றிக் காய்ந்த
கள் குடத்தைத்
தழுவிக் கிடக்கும் சிறுதுளிகள்
சொல்லுமந்த புளிப்பின் வாடை “ - (வடு) 

மீறல் :

சில கவிதைகளில் காட்டப்படும் திமிறலின் மீறலின் அவஸ்தைகள் மனித வாழ்வின் நெருக்கடிகளை நினைவூட்டுகின்றன.

“கட்டைவிரல் வெட்டுண்ட
கதாபாத்திரமாய் திமிறி
தான் வளரும் மண்சட்டி
உடைக்கும்
குறுந்தாவரம்” - (திமிறல்)

“அடி பெருத்தும்
நுனி விரிந்தும்
தரம் பிரித்து
வனையும் வடிவத்தில்
எப்போதும் குறுகி கழுத்து நெறிபட்டு
அழுத்தம் கூடி
அந்தக் குடுவையின் குரல்வளை” - (நிரந்தரம் )

இரண்டு கவிதைகளிலும் இருக்கும் அழுத்தம் நித்தமுமான நம் வாழ்வின் நெருக்கடிகளையும் அதனால் ஏற்படும் உடைப்புகளையும் சுட்டாமல் இல்லை. இந்த அழுத்தங்களையும் சில கவிதைகளில் உடைத்து வார்த்தை தென்றலில் குளிரச் செய்கிறார்.

“நெகிழி சாமான்கள் புழங்கும்
பெரு நகர வீதியில்
கான்கிரீட் பெட்டிகளின் அடைசலில்
பரம்பரை இருப்பென
ஆழ் சுவாசமொன்று தர
வாய்த்தது இவ் ஓட்டு வீடு
சிலிர்த்து நிற்கும் சாய்ந்த தென்னையின்
பச்சை விசிறல்“ - (நித்தியம் )

வாசிக்கும்போதே கவிதையின் படிமத்தன்மை கண்முன் விரிகிறது, ஒரு குளுமையைத் தருவதையும் உணரமுடிகிறது. 

மாற்றம் :

சில கவிதைகளில் மாற்று சொற்கள் கொண்டும் கவிதையின் திசையை சற்று மாற்றிக்காட்டுகிறார் கவிஞர்.

“நெல் அரவையாலையின்
புகைக்கூண்டில்
ஓய்வெடுக்கும் குருவிகள்

மழை நாள் முடிந்ததும்
புகையுடன் கலக்கும்
கார்மேகம் “ - (மீறல் )

இதில் இருக்கும் படிமங்கள் குருவிகள், புகைக்கூண்டு, கார்மேகம் சுட்டும் பொருள் மாருபடுகிறது. ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் குருவிகள் மழை நாள் முடிந்ததும் புகைக்கூண்டை விட்டு வெளியேறிவிடுவது வெளிப்படையாக சொல்லாமல் புரிந்துக்கொள்ளவும், மழைக்காலம் முடிந்த பிறகான காலம் நெல் அரவையாலையின் வேலை காலம் என்பதும் புகை வருவதன் மூலமும் காட்டப்படுகிறது. புகையும் கார்மேகமும் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது இக்கவிதையின் நவீனம் எனலாம்.

சில கவிதைகளின் கருபொருளில் தொனிக்கும் வன்மம் கூட சரியாய் ஒரு புள்ளியில் மென்தன்மை அடைகிறது.

“காற்றடித்தால் பறந்து
கூரை ஏறலாம் அன்றி
உன் தலைகவசத்தில் குடியேறுவது
இயல்பா காது“ - (அசைவு )

இந்த கவிதையில், இரண்டில் ஒன்றாய் சுட்டப்படும், கூரை ஏறுதல் அல்லது தலைக்கவசத்தில் குடியேறுதல்என்னும் சமன்பாட்டை முறியடித்து,‘உன் தலை கவசத்தில் குடியேறுவது தவறு’ என்று இயம்பும் மென்மையை, மேன்மையாய் காணமுடிகிறது. 

இலக்கியமும் நண்பர்களும் :

கவிஞர் முத்தமிழ் விரும்பி அவர்கள் இலக்கியம் என்பது படைப்பிலக்கியம் மட்டுமல்லாமல், அதன் செயல்பாடுகள் குறித்த கருத்துரையாடல்களையும் படைப்பிலக்கியத்தை அடுத்த கட்ட நகர்வுகள் கொண்டு செலுத்துதலிலும் தான் உள்ளது என்பதை பல கவிதைகள் மூலமும் சுட்டுகிறார்.

“உள்ளும் புறமும்
கவிழ்ந்து கவிழ்ந்து
தொடுகையின் உச்சத்தில்
நொறுங்கி வீழ்கிறது
இலக்கின்
கண்ணாடிப் பாத்திரம்” - (காலம் )

இலக்கிய செயல்பாடுகளில் இருந்து சற்று விலகி இயல்பு வாழ்க்கைக்கான களத்துக்குள் மாறும் கவிதையொன்று இருக்கிறது. வாசிக்கும் ஒவ்வொரு படைப்பாளியின் மனதையும் அசைத்துப் பார்க்கும் இக்கவிதை.

“தென்றலையும் நிலவையும்
பாட மறுத்திருந்தவன்
அவளது கால எல்லையை தொட்டவுடன்
கையில் இருக்கும் நீள் துப்பாக்கியை
ஓரம் சார்த்தி
வெயிலையும் சூறாவளியில் பறக்கும்
சருகுகளையும் கவனிப்பில் இருந்து
விடுவிக்கிறான்

களத்தில்
காய்கள் மோதி
முனைகள் நெளிந்து
புத்துயிர் கொண்டன

களைக்கொத்தி
பூவாளி தூக்கி
செடியொன்று நட்டுநிமிர்கிறான்

நேற்றைய தோழர்கள்
கூர்மை கொள்ளகளம் இவனிடமிருந்து
கை நழுவுகிற வேளையில் வியர்வை வழிய
பூவிதழ்களை வருட காண்முளை
நெருங்கிக் கொண்டிருக்கிறது” - ( களம் )

நட்பு என்று தலைப்பிட்டு கவிதை நூல்களைப் பார்த்திருக்கிறோம். இயல்பில் நண்பர்களை சேர்த்தே பயணப்படுகிற மனிதர்களைப் பார்க்கும்போது வியக்காமல் இல்லை மனது. கவிதைகளில் நண்பர்களின் ஊர் குறித்த பயிர் பச்சை குறித்த விசாரிப்புகள், நண்பர் அடைந்த சோர்வு குறித்து தானும் சோர்வுறுதல், ‘நண்பர்களோடு நடக்கின்றன நாட்கள்’ போன்ற சொல்லாடல்கள் கவிஞரின் இயல்பான வாழ்விலும் நட்பும் இலக்கியமும் இணைந்திருப்பதைக் காண இயலுகிறது.

கவிதைகளில் நவீனம் தீட்டும் ‘திட்டிவாசல் பெண்ணொருத்தி’க்கு வாழ்த்துகள்.

- அகிலா

Pin It