கவிஞர் எழுதிய இஸ்லாமியத் தமிழ்க் காப்பியமான பல்கீசு நாச்சியார் காவியம், 1991 ஆம் ஆண்டு வெளிவந்தது. கிறித்துவர்களின் புனித வேதமான விவிலியத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்தக் கதை இஸ்லாமிய ஏற்புக்குத் தகுந்தவாறு கவிஞரால் பல்கீசு நாச்சியார் காவியமாக இயற்றப்பட்டுள்ளது. மானிட இனமும் வேண்டிய உருவை எடுத்துக்கொள்ளும் ஆற்றலுடைய ‘ஜின்’ எனப்படும் அணங்கினமும் கொண்ட காதலின் ஆழத்தைக் காட்டும் இக்காப்பியத்தில் பெண்களின் கற்பைச் சூறையாடும் சுறாயிக் எனும் பேயரசனைக் கொன்றொழித்த ‘பல்கீசு’ என்னும் பெண்ணரசியின் வீரம் நயமாகப் பேசப்படுகிறது.
‘பிறை’ என்னும் இதழில் வெளிவந்த இக்காப்பியம் மூன்று அங்கங்களைக் கொண்டது. கவிஞர், முதல் அங்கத்தை மட்டும்தான் எழுதியுள்ளார். எஞ்சிய இரு அங்கங்களை எழுதக் காலம் கவிஞருக்கு ஒத்துழைக்கவில்லை. முதல் அங்கத்தில் மட்டும் மொத்தம் 302 விருத்தப்பாக்கள் உள்ளன.
‘சுறாயிக் மன்னனை மணந்து, அவன் தன்னைத் தொடுவதற்கு முன்பே கொன்று, அவனுடைய நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று, சிறந்த ஆட்சி எனும் மக்கள் பாராட்டினைப் பெறுவது’ இக்காப்பியத்தின் இரண்டாவது அங்கமாகும். திருவிவிலியம் சாலமன் என்றழைக்கும் சுலைமான் நபியை மணந்து, அவருடன் பதின்மூன்றாண்டுகள் அவர்களுடைய நன் மனைவியாக வாழ்ந்து, ஓர் ஆண் குழந்தையையும் பெற்று மரணித்ததாக நிறைவுபெறும் அங்கம், இக்காப்பியத்தின் மூன்றாவது அங்கமாகும்.
“இந்த முப்பெரும் அங்கங்களையும் கவிதைகளாக்கிடும் எண்ணத்தில் ‘பிறை’ எனும் திங்கள் ஏட்டில் 1977 ஜனவரியில் ஆரம்பித்தேன். முற்றுற்றிடா நிலையில் எனது தொடர் நின்றது. பின்னர் பிறை வெளிவருவதும் நின்றுவிட்டது. ஒரு ஏட்டில் தொடராக வெளிவந்ததை மற்றோர் ஏட்டில் தொடர்ந்தால் புது வாசகருக்கு முற்பகுதி தெரியாததால் படித்திடத்தோன்றாது. எனவே, வேறு ஏடுகளை அணுகிடவில்லை. சீறாப்புராணத்திற்கு உரை எழுதிடும் கடினமான பணியில் ஈடுபட்டிட வேண்டியதிருந்ததால், தனியாக இதன் பிற்பகுதியை எழுதிட முடியவில்லை. பலர் நேரிலும் கடிதங்கள் மூலமாகவும் இக்காப்பியத்தை முழுவதுமாக எழுதி முடித்திடுமாறு வற்புறுத்தினார்கள். அவர்களின் அளவு கடந்த கவிதைச் சுவைப்பார்வத்தை என்னால் உணர முடிந்தது. ஆயினும் நிறைவேற்றிட இயலவில்லை. தம்பி ஆலிஜனாப் எம். சையது முகம்மது ஹஸன் அவர்கள், வெளிவந்துள்ள வரையிலான கவிதைகளையேனும் நூலாக்கிடலாமே என உரைத்தார்கள். அவர்களின் விருப்பு எனக்கும் விருப்பாயிருந்ததால் இந்தக் குறைக் காப்பியம் உங்கள் கையில் திகழ்கின்றது. இறையருளால் நான் உடல் நலம் பெற்றால், சீறா உரை எழுதும் பணி நிறைவுற்றதும் இக்காவியத்தை முற்றுமாக எழுதி முழுமையாக்கி வெளியிட்டிட எண்ணம். முடிவில் கிட்டிடும் பயன். தன்னலம் கருதாமல் பொதுநலம் கருதிச் செயல்பட்டால், அதற்கு ஆண்டவன் தந்திடும் கூலி மிக உயர்ந்ததாக இருந்திடும். ஆம். பல்கீஸ் நாச்சியாரின் சிந்தித்திடவும் இயலா வீரச் செயலுக்கு, பெண்களின் கற்பைக் கவர்ந்து களம்புகப்படுத்திய சுறாயிக் மன்னனைக் கொன்றொழித்தற்கு இறைவன் அளித்த பரிசு, அறிவாளராகவும் மிகப் பெரிய பேரரசாகவும் விளங்கிய சுலைமான் நபியவர்களைக் கணவராக்கி அளித்த நற்பேறாகும்!’ எனக் கவிஞர் கருத்துரைக்கிறார்.
பல்கீஸ் நாச்சியார் வரலாற்றை விவிலிய அடிப்படையை மையமாக வைத்து இஸ்லாமிய ஏற்பிற்கு மாற்றமுடைய வகையில் ஆங்கிலத்தில் ஷிபா (SHEBA) என்னும் பெயரில் வரலாற்றுப் புதினம் புனையப்பட்டிருந்தது. அப்புதினம் ஆங்கிலத் திரைப்படமாகவும் நாற்பதாண்டுகட்கு முன்னர் வெளிவந்துள்ளது. ஏமனில் காதுவழிக் கதையாக இவ்வரலாறு இன்றளவும் பேசப்படுகிறதென்பர். கல்வெட்டுக்களிலும் உளதென்பர். அபிசீனிய அரச பரம்பரையினர் தடங்களைப் பல்கீஸ் நாச்சியார் வழித்தோன்றலாக உரைத்துப் பெருமைப்படுவதாகவும் தெரிந்திட முடிகின்றது. அங்கேயும் காதுவழிச் செப்பலும் கதைகளும் கல்வெட்டும் உண்டென்பர்.
இந்த அரிய வரலாற்றினைக் கவிநயத்துடன் காவியமாக்கிட முற்பட்டதற்கான கதைக் கருவூலம் ‘கசசுல் அன்பியா’ எனும் பெயரில் துலங்கிடும் நபிமார்களின் வரலாற்றுரை நூலையும் வண்ணக் களஞ்சியப் புலவர் யாத்தளித்துள்ள ராஜ நாயகம் எனும் சுவை நிரம்பிய தமிழ்க் காப்பியத்தையும் படித்துப் பெற்றதாகும்.
காவியம் முற்றுறாதாயினும் கற்பனை வளமும் கவிதை வளமும் நிறைந்ததாகும். கவிதைகள் பலவித யாப்புகளில் அமைக்கப்பட்டுள்ளன. சந்த விருத்தங்கள் நிறைந்து திகழ்வதைக் காணலாம். படிப்போருக்கு எளிதாக இருந்திடக் கருதி, சில சந்தப் பாடல்களுக்குத் தத்தகாரம் தலைப்பில் தரப்பட்டுள்ளது’ எனக் கவிஞர் சுட்டுகிறார்.
சுறாயிக் மன்னன் அறபு நாட்டில் ‘சபா’ என்னும் ஊரிலிருந்து ஆண்டுவந்தான். அவன் ஆட்சி, தீய நண்பர்களின் வழிகாட்டுதலால் மனம்போன போக்கில் நடந்துவந்தது. பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. இவ்வுலக உடைமைகள் அனைத்தும் தனக்கே சொந்தம் எனும் ஆணவப் போக்கோடு செயல்பட்டான்.
“மன்னவன் எனக்கே இந்த வையத்தில்
உடைமை சொந்தம்
பொன்னோடு பூமி பெண்கள்
போகபோக்கியங்கள் எல்லாம்
என்னதே இவற்றில் ஒன்றை ஏற்கநான்
விருப்பங் கொண்டால்
அன்னதைத் தடுக்க யார்க்கும் அளித்திலேன்
உரிமை காண்க”
என சுறாயிக் மன்னனின் ஆணவத்தைக் கவிஞர் எடுத்துக்காட்டுகிறார்.
சுறாயிக் மன்னன் தன்னுடைய நாட்டில் மக்கள் தவமாய்த் தவமிருந்து பெற்றெடுத்த பெண் பிள்ளைகளைப் பூப்படைந்தவுடன் தனக்கு இன்பம் தருவதற்கு அனுப்ப வேண்டும் என்றும், தான் இன்பம் துய்த்தபின் வேறொருவனுக்கு மணம் முடித்துத் தரலாம் என்றும் பெற்றோருக்குக் கட்டளையிட்டிருந்தான்.
பெண்மையைப் போற்றாமல் கேவலமாய்ப் பார்த்த சுறாயிக் மன்னனின் அமைச்சனாகத் திகழ்பவன் யூசருகு. தாய் தந்தை இல்லாத யூசருகுவைச் சார்ந்து யாரும் வாழவில்லை; அவனுக்குத் திருமணமும் ஆகவில்லை. அமைச்சனாக இருந்தும் தவறிழைத்து வாழும் அரசனைத் திருத்தும் வழி எதுவும் தெரியாமல் தவித்தான் அமைச்சன் யூசருகு. மனம் பொறுக்காமல் பெண்களைப் போற்றும் இயல்புடைய யூசருகு, ஒரு காட்டுப் பகுதிக்குச் சென்றுவிட்டான். அங்கிருந்த ‘ஜின்’ நாட்டின் அழகியர் மான் வடிவில் வந்து யூசருகு ஜின்கள் நாட்டுச் சிறுதோப்பில் மயங்கிய நிலையில் உறக்கம் கொண்டான். விழித்ததும் ஜின் குலத்துக் கன்னியர்,
“உன்னழகைப் பருகுவதே எங்களின் நோக்கம்
உன்றனுக்கோர் சிறிய தீங்கும் நாங்கள் செய்திடோம்
ஜின்னரசன் தனைக்கான நீ விரும்பினும்
சிரமமின்றி நாங்களதை நிறைவு செய்வோம்
இன்னுமெதற்காக நீயும் பயமடைகின்றாய்
எழிலையெலாம் திரட்டிவந்த வடிவழகனே
தன்னை விரும்பாதபேரை வற்புத்துதல்
தருமமன்று நாங்களதை நன்கறிவோம்”
என்றுரைத்தனர். பின்பு அவர்களை யூசருகு ஏறிட்டுப் பார்த்தனர். வலுக்கட்டாயமாக யூசருகுவை அடைய அவன் விரும்பவில்லை; இந்த நிலையிலும் அவன் பெண்மையைப் போற்றும் இயல்புடையவனாகத் திகழ்ந்தான்.
சந்திரனும் பார்த்து நாணமடையும் அழகுடையவள் ஜின்னரசனின் மகளான உமையிரத்து. அவளைச் சுயம்வரத்தில் மணம் செய்ய வந்த வாலிபவர்கள் அனைவரும் அவள் கண்களைக் கண்டவுடன்
கண்ணொளி இழந்தனர்; திண்ணிய தோள்களின் வலிமையையும் இழந்தனர்; சிறிது நேரத்தில் மூச்சையுமிழந்தனர். இதனைப் பார்த்த உமையிரத்து வருந்தியிருந்தாள். பிறகு அவள் யூசருகுவைக் காணுகிறாள்; காதல் கொள்கிறாள்; ஜின்னரசனின் ஒப்புதலோடு இருவருக்கும் திருமணம் முடிந்தது. யூசருகுவும் இதுவரையிலும் எந்தப் பெண்களையும் நிமிர்ந்து பார்க்கவில்லை. இதன் முதலாக உமையிரத்தைத்தான் பார்த்தான்.
காலையில் ‘சபா’ நாடடைந்து அங்கு அமைச்சர் பணியாற்றினான். பின் மாலையில் ஜின் நாட்டிற்கு வந்து மனைவியுடன் மகிழ்வோடிருந்தான். சிறிது காலத்தில் உமையிரத்து ஓர் அழகிய பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அக்குழந்தைக்குப் ‘பல்கீஸ்’ என்று பெயரிட்டனர். ஆயிரக் கணக்கான மக்களின் நாவுகளில் ‘பல்கீஸ்’ என்னும் நாமம் ஒலித்தது. பல்கீஸின் தாயார் உமையிரத்து ஊஞ்சலாட்ட வந்தபோது வழுக்கி விழுந்து இறந்துபோனார். பல்கீஸைத் தந்தையும் பாட்டனும் இணைந்தே வளர்த்தனர். பல்கீஸ் பூப்படைந்த நிலையில் தந்தை யூசருகுவின் சபா நாட்டினைச் சென்று பார்க்க எண்ணினாள். இதனை யூசருகு ஏற்கவில்லை. முதுமைப் பருவத்திலும் திருந்தாத சுறாயிக் அரசனின் நாட்டிற்கு வரக்கூடாது என்றான். பின்னர், பல்கீஸ் தன் பாட்டனாரிடம் பேசி ‘சபா’ நாட்டிற்குச் செல்ல அனுமதி பெற்றாள்.
பல்கீஸ் நாச்சியார், ‘தாரமில்லா மாதரைத் தன்னருந் தாயாய் நினையாத பழிகாரனை மேலவன் என்று மதிப்பது கற்றோர் செயலாமோ?’ என்று வினாத் தொடுக்கிறார். ‘படுசூரனே யாயினுந் தாரங்கடப்பவன் துட்ட விலங்காவான்; அவனை வேரோடழித்திடுவதற்கு வேண்டுவனவற்றைச் செய்வதே வீர மறச் செயலாம்’ எனத் தெளிவுபடுத்துகிறார். அங்ஙனம் வேரோடழிக்கும் பணியினையும் பல்கீஸ் நாச்சியார் வேரோடழிக்கத் துணிகிறாள். தீயவனை அழிக்கும் பொறுப்பினை ஏற்றுச் செயல்பட வேண்டும். தீயவன் செய்யும் தீமைகளைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கக் கூடாது என்கிறார் பல்கீஸ் நாச்சியார். இத்தகைய கருத்துடைய பல்கீஸ் நாச்சியார், சுறாயிக் மன்னனை அழிக்கும் பொருட்டுப் பாட்டனாரின் ஒப்புதலுடன் சபா நாட்டுக்குப் புறப்பட்டு விட்டார் என்பதைக் கவிஞர்,
“தீயவை செய்பவன் தன்னிலும்
தீயதைப் பார்த்திருத் தல்மிகத்
தப்பிதமாகுமத் தப்பிதம் தன்னையென்
தந்தையே செங்குவ தோஇனை
ஒப்பிலதென்மனம் ஒப்பிலேன் இங்கினி
ஓர்கணம் நானிருக்க இதோ
இப்பொழுதே சபா நாட்டிற்கே நான்
எழுந்தனன் என்றாளவள்”
என்று காப்பியத்தில் எடுத்துரைக்கிறார்.
இறை மறுப்புக் கொள்கையாலும் உரை மறுப்புக் கொள்கையாலும் இறைவனால் சபிக்கப்பட்ட ஜின்கள் பற்றிக் கவிஞர்,
“பின்பவை உலகில் செய்த பீடறு நடத்தைகண்டு
மன்பெறும் இறையவற்றை வதையுற அழித்துப் போட்டான்
பின்பவை இறைஞ்சி வேண்ட பிசாசுபோல் உலகந்தன்னில்
மன்னிடும் அருவமாக வாழ்ந்திட வைத்து விட்டான்”
“நிறைபட வாழ்ந்த வாழ்க்கை நெடியவன் உரை மறுப்பால்
குறைபட மாய்ந்து கெட்டுக் கெட்டுக் கொடியபேய்
பிசாசு போன்று
மறைந்துமே உலகம் தன்னில் மனிதனுக்கு அடங்கி நாளும்
உறைந்திடும் கீழ்மை ஜின்கள் உற்றதாம் மேலும் கேளும்!”
“பூமியும் வெறுத்தொதுக்க புனல் செடி கொடி மரங்கள்
ஏமமில் பூண்டு புற்கள் யாவையும் வெறுத்தொதுக்க
தாமமர்ந்திருக்க வுண்ண ஜெகத்திலே ஏதுமின்றி
வாமமாம் அந்தரத்தில் வதியவும் உண்பதற்கு”
“மானுடன் தின்றெறிந்த மாசுடை எலும்பைச் சோற்றை
தானுணும் நிலையை ஜின்கள் தனக்கிணையாக்கி வைத்தான்
மாணுநல் லொழுக்கம் நீதிமறைவழி நடத்தி விட்டோர்
தானிதை நோக்கியாய்ந்து தனியவன் வழிநடத்தல்
நன்றென உரைப்பேன் இன்றேல் நரகிடை வீழநேரும்”
என்று எடுத்துரைக்கிறார். இதில் இறை மறுப்பாளர்கள் இறைவனால் சபிக்கப்பட்டவர்கள் என்பதும் இறைமறுப்பு என்பது வெறுப்புணர்வு மிக்கது என்பதும் கவிஞரால் காட்டப்படுகிறது. ஆகவே, மேற்காணும் அடிகள் கவிஞரின் வெறுப்புணர்வின் வெளிப்பாடாய் அமைந்துள்ளன.
இக்காப்பியம் குறித்து மு.வலவன் குறிப்பிடுவதும் இங்கு சுட்டத்தக்கது.
‘பல்கீசு நாச்சியார் காவியம்’ விவிலிய மூலத்திலிருந்து முளைத்தது. ஏமன் நாட்டில் பேசப்படும் ‘பாட்டி சொன்ன கதை’ அபிசீனிய அரசு வரலாற்றுக் கருவூலம். பெண் கற்பைச் சூறையாடும் பேயரசை ஒழித்த மாதரசியின் நோன்பு கூறும் பெண்ணுரிமைப் பெட்டகம் எனினும் அதை செரீபுப்பாட்டன் படைப்பில் படிக்கும்பொழுது, நம் தமிழ்நாட்டுப் பெண்ணின் வரலாறுபோல் உணர்கிறோம். அதுமட்டுமல்ல பழந்தமிழ் மரபைப்போல அந்நாட்டிலும் மலர்களின் பெயரை மகளிர்க்கு இடும் வழக்கமிருப்பதை அறிந்து வியப்படைகிறோம்” எனக் குறிப்பிடும் வலவன் இதற்குச் சான்றாதாரமாக,
“பிள்ளையின் தந்தையூர் ‘சபா’ அந்நாட்டுறும்
பீடுறும் மலர்ப்பெயர் ‘பல்கீஸ்’ ஆனதால்
கொள்ளை வனப்புள பிள்ளைக்கு அப்பெயர்
சூட்டுதல் பொருத்தமே கொள்ளும் என்றனர்”
எனும் பாடலையும் தருகிறார்.
கவிஞர் இக்காவியத்தில் கையாண்டுள்ள உவமை நயங்களையும் சுட்ட வேண்டும். பசியின் கொடுமையினை உணர்ந்தோர்க்கு உடனடியாகப் புலப்படும் ஓர் உவமையினைக் கவிஞர் கையாண்டுள்ளார். ‘பசித்தோன் உண்ணும் உணவுதனைப் பறித்தல் போன்ற அவ்வுரை...’ என்று பாடுவது காவியத்திற்கு அணி சேர்க்கிறது. காவிய அழகு கவித்துவ நடையிலும் காணப்படுகிறது. ஓர் இடத்தில் கவிஞர் ‘திரண்டெழுந்த புண்ணியத்தின் உருவம் ஈதோ சித்திரத்தில் உயிர் புகுத்திவிட்டார் தாமோ?” என்று அதனை வெளிப்படுத்துகிறார். கவிஞர், காவியத்தில் சந்த நயங்களும் சிந்து பாடுகின்றன. மதுவிலும் மங்கையர் மயக்கத்திலும் மகிழ்ந்து களிக்கும் சுறாயிக் மன்னனின் எண்ணத்தை அமைச்சர் யூசருகு தன் மகளிடம்,
“அழகேந்திய கொடியே அறிவேந்திய மகளே
இழிவேந்திய அரசன் எனையாளுவோ னானான்
பழிதாங்கிய அவனின் செயலால் உனை அழகார்
பொழிலேந்திய திருநாட்டைத் தேகிட மறுத்தேன்”
என்று எடுத்துரைக்கிறார். இதில் சந்த நயம் மிக்க கவித்துவம் வெளிப்படுவதுடன் காவியத்திற்கும் அழகு சேர்க்கிறது.
“இப்படிப் பல்வேறு சந்த விருத்தங்கள் பாங்குற அமைந்த நூலாக ‘பல்கீசு நாச்சியார் காவியம்’ பரிமளித்தாலும் மூன்று அங்கங்களாய் அமைய வேண்டிய இந்நூல் முதல் அங்கத்தோடு முற்றுப்பெறாமல் நின்றுவிட்டதால், படைப்பின் முழுப் பாங்கையும் சுவைத்துணர முடியாச் சோகவுணர்வையே நமக்கு அளிக்கிறது. சுவையான விருந்தைப் பாதியிலே சுவைத்து எழுந்தோட நேரிட்டால் என்னவுணர்வு ஏற்படுமோ அந்த உணர்வுதான் நமக்கேற்படுகிறது” என்று மு. வலவன் ஆய்ந்துரைப்பது மிகவும் பொருத்தமுடையதாக இருக்கிறது.
பேராசிரியர் உ. அலிபாவா, தலைவர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம்,
& அ.முகம்மது அசாருதீன், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல்துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி - 620 024