பழந்தமிழ் இலக்கியங்கள் மீதான பெரியாரின் பார்வையை 'கொஞ்சம்கூட கரிசனை இல்லாத முரட்டு அடி' என்று சொல்வார்கள். பேராசிரியர் இரா.மணியன் எழுதியுள்ள 'பெரியாரின் இலக்கியச் சிந்தனைகள்' நூலை வாசிக்கும்போது, அது உண்மைதான் என்பதை உணர முடிகிறது. ஆனால், நாடெங்கும் கம்பராமாயண, பெரிய புராண கதாகாலட்சேபங்கள் நடந்து கொண்டிருந்த சூழலில், புராண புரட்டுகளில் மக்கள் மயங்கிக் கிடந்த வேளையில், பெரியார் ஓங்கித்தான் அடிக்க வேண்டியிருந்தது. அந்த முரட்டு அடிதான், வெள்ளமென வெளிவந்து கொண்டிருந்த பக்தி இலக்கியங்களுக்குத் தடை போட்டது.
பெரியாரின் வருகைக்கு முன்பு வெளிவந்த பக்தி இலக்கியங்களின் என்ணிக்கையையும், அதன்பின்பு வெளிவந்த பக்தி இலக்கியங்களின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இது பளிச்சென விளங்கும். இன்று பக்தி இலக்கியம் எழுதும் வகைமையே ஒழிந்து விட்டது. ஜெயமோகன், பாலகுமாரன் போன்ற இந்துத்துவ எழுத்தாளர்கள் மட்டுமே அங்கொன்றும், இங்கொன்றுமாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் பழைய கதைகளை புதிய அட்டையில் போட்டுத் தருகிறார்களே ஒழிய, புதிதாக ஒன்றையும் பெரியளவில் படைக்கக் காணோம். கவிதை இலக்கியங்களில் நவீன பக்தி இலக்கியங்கள் சுத்தமாக இல்லாது போய்விட்டது. இதுதான் பெரியாரின் முரட்டு அடிக்குக் கிடைத்த வெற்றி.
"தங்கள் இனத்தை இழிவுபடுத்துவதற்கென்றே (இன) எதிரிகளால் இயற்றப்பட்ட கற்பனைக் கதைகளில் வரும் பாத்திரங்களைத் தங்கள் கடவுள்களாகவும்; அவற்றின் நடத்தைகளைத் தாங்கள் பின்பற்றும் கொள்கைகளாகவும்; அவற்றைத் தங்கள் இலக்கியங்களாகவும் கொண்டு போற்றும், பின்பற்றும் அவற்றில் புலவர்களாகப் பெயர் பெற்று வாழும் இழிமக்களை - இந்த இந்திய நாடு, தமிழ்நாடு தவிர்த்து வேறு எந்தக் காட்டுப் பிரதேசங்களிலுங்கூடக் காண முடியாது." என்று தமிழ் இலக்கியங்களையும், புலவர்களையும் கடுமையாக விமர்சிக்கிறார் பெரியார் ('விடுதலை' தலையங்கம், 27-10-1972)
அதே பெரியார்தான், "திருவள்ளுவர் கூறியுள்ள கருத்துக்களுள் ஒன்றேனும் ஒழுக்கக் குறைபாடுள்ளதாகக் காணப்படாது. அறிவுள்ளவர் யாரும் மறுக்க முடியாத - வெறுக்க முடியாத கருத்துக்களை அமைத்துத்தான் அவர் குறளை இயற்றியுள்ளார். குறளை ஊன்றிப் படிப்பவர்கள் எல்லோரும் நிச்சயம் சுயமரியாதை உணர்ச்சி பெறுவார்கள். அரசியல் ஞானம், சமூக ஞானம், பொருளாதார ஞானம் ஆகிய சகலமும் அதில் அடங்கிவிடுகிறது." என்றும்,
"ஒவ்வொருவனும் , 'நான் இந்துவல்ல; திராவிடனே - திருக்குறள் விரும்பியே' என்று கூறிக்கொள்வதில் பெருமை அடைய வேண்டும்; விபூதியையும், நாமத்தையும் விட்டொழிக்க வேண்டும்; புராணங்களைப் படிக்கக்கூடாது. 'நீ என்ன மதம்?' என்றால் - 'குறள் மதம்', 'மனித தர்ம மதம்' என்று சொல்லப் பழக வேண்டும்." என்றும் சொல்லி இருக்கிறார் (விடுதலை 5.11.1948)
பகுத்தறிவுக்கு ஒவ்வாத, மூடநம்பிக்கைகளை வளர்க்கும் இலக்கியங்களை பெரியார் விமர்சித்தபோதும், அதன் உச்சமாக கம்பராமாயணத்தைக் கொளுத்தச் சொன்னபோதும், அவருக்கு எதிராகக் களம் இறங்கியவர்கள் இடதுசாரியான ஜீவாவும், தமிழ்த் தேசியவாதியான ம.பொ.சிவஞானமும். ஊர் ஊராகப் போய் கம்பன் விழாக்களில் கலந்துகொண்டு கம்பராமாயணத்தைத் தூக்கிப் பிடித்தார் ஜீவா. பெரியாரை 'வறட்டு நாத்திகவாதி' என்று அன்றைய இடதுசாரிகள் விமர்சித்தார்கள். ம.பொ.சி., காரண காரியம் இல்லாமல் சுயவிளம்பரத்திற்காக பெரியார் இதைச் செய்கிறார் என்றும், நாட்டில் நடைமுறையில் இருக்கும் நல்லதெற்கெல்லாம் அவர் எதிரி என்றும் கடுமையாகச் சாடினார்.
காலத்தின் போக்கில் எது நிலைத்து நின்றது? இன்று கம்பராமாயண சொற்பொழிவுகளை ஆற்ற இடதுசாரிகள் மரபில் யாருமில்லை. பக்தி இலக்கியங்களில் மிகுந்திருக்கும் இலக்கிய நுட்பத்தைப் பேசுவதற்கு தமிழ்த் தேசியவாதிகள் யாரும் இன்றைக்குத் தயாராக இல்லை.
வறட்டு நாத்திகவாதி என்று பெரியாரை விமர்சித்தவர்கள், இன்றைக்கு வரைக்கும் அறிவியல்பூர்வமான நாத்திகத்தை மக்களிடம் பேசவில்லை.
பெரியாரின் எழுத்துக்களை திராவிட இயக்கங்கள் போட்டி போட்டுக் கொண்டு வெளியிட்டு வரும் வேளையில், பெரியாரின் எழுத்துகளை குறுக்கும், நெடுக்கிலும் ஆராய்ந்து, அவற்றை வரலாற்றுப் பின்புலங்களோடு மக்களிடம் கொண்டு சேர்க்கும் திராவிட இயக்க எழுத்தாளர்களும் அதிகரிக்க வேண்டும். கி.வீரமணி, வே.ஆனைமுத்து, விடுதலை இராசேந்திரன், சுப.வீரபாண்டியன், நன்னன், ஓவியா, வே.மதிமாறன், அதிஅசுரன், வாலசா வல்லவன், தமிழேந்தி என நீளும் இந்த வரிசையால் பெரியாரியல் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.
பெரியார் பேசியதையும், எழுதியதையும் மட்டுமே வைத்துக் கொண்டு பெரியாரியலை நாம் குறுக்கி விடக்கூடாது. சமகாலத்துப் பிரச்சினைகளை பெரியாரின் பகுத்தறிவுக் கண்ணாடி கொண்டு பார்த்து, பெரியாரியலை விரிவுபடுத்த வேண்டும்.
உதாரணத்திற்கு ஒன்றை எடுத்துக் கொள்வோம் - சிறுதெய்வ வழிபாடு.
இது 'நாட்டார் வழிபாடு' என்று இடதுசாரி அமைப்புகளால் விதந்தோதப்படுகிறது. சிறுதெய்வ வழிபாடு, பெரியாரியலுக்கு எதிரானது அல்ல என்றும், பெருந்தெய்வங்களை விமர்சித்த பெரியார் இவற்றை விமர்சிக்கவே இல்லை என்றும் ஆய்வாளர் தொ.பரமசிவன் கூறுகிறார். ஆனால், உண்மை என்பது அப்படித்தானா?
பெரியார் 'கடவுள் இல்லை' என்றுதான் சொன்னார்; இந்து மதக் கடவுள்கள் மட்டும் இல்லை என்று கூறவில்லை. முஸ்லிம், கிறித்துவம் என அனைத்து மதக்கடவுள்களையும் இல்லை என்றுதான் அவர் நிராகரித்தார். அவற்றில் சிறுதெய்வங்களும் விதிவிலக்கில்லை.
பெரியார் இந்துக் கடவுள்களை மட்டும்தான் எதிர்க்கிறாரோ என சந்தேகம் கொண்டு, முஸ்லிம் அன்பர் ஒருவர் பெரியாரை அணுகி இதுகுறித்துக் கேட்கிறார். அதற்கு பெரியார் பதில் சொல்கிறார்:
"நீங்கள் கடவுள் என்பதற்கு என்ன பொருள் கொண்டு கேட்டிருந்தாலும் நான் கடவுள் என்று பேசுவதில், சர்வ சக்தியும், சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும், உலகில் நடைபெறும் சகல நடவடிக்கைகளுக்கும் தானே காரண பூதனாயிருக்கின்றதும், அதை வணங்கினால் நமது தேவைகள் பூர்த்தியாகுமென்பதும், அதற்குப் பணிவிடை செய்தால் நமது குற்றங்கள் மன்னிக்கப்படும் என்பதும், நாம் உயிருடன் இருக்கும்போது செய்த கருமத்திற்குத் தகுந்த பலனை நாம் செத்த பிறகு நமது ஜீவன் அல்லது ஆத்மா என்பவைகளுக்கு அளிக்கின்றது எண்ணப்படுவதுமான கடவுள் என்பது எந்த மதத்தைச் சேர்ந்ததானாலும், அந்த அர்த்தம் கொண்ட கடவுளைப் பற்றித்தான் பேசுகின்றோம்". (குடிஅரசு கட்டுரை, 15-2-1931)
பெரியாரின் இந்த விளக்கத்திற்குள் சிறுதெய்வ வழிபாடும் அடங்கத்தானே செய்கிறது. பார்ப்பனர்களின் பூசாரித்தனமும், ஆதிக்கமும் இல்லை என்பதைத் தவிர, சிறுதெய்வ வழிபாட்டிற்கும், பெருந்தெய்வ வழிபாட்டிற்கும் என்ன பெரிய வேறுபாடு இருக்கிறது? சிறுதெய்வ வழிபாட்டில் சாதி ஒடுக்குமுறை இல்லையா? எல்லா சிறுதெய்வ சிலைகளையும் தலித் மக்கள் தொட்டுக் கும்பிட முடியுமா? சிறுதெய்வ வழிபாட்டில் பூஜை, புனஸ்காரங்கள் இல்லையா? மூடநம்பிக்கைகள் இல்லையா? மக்களின் பணம் வீணாவது இல்லையா?
பேராசிரியட் தொ.பரமசிவன் சொன்னது போலல்லாமல், பெரியார் சிறுதெய்வ வழிபாட்டையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
"இப்போது இந்த கோடைகாலப் பருவத்தில் தமிழ்நாட்டில் எங்கும் மாரியம்மன் பண்டிகை என்பதாக ஒரு பண்டிகை நடந்து வருகிறது. மாரியம்மன் கடவுள் - கிராம தேவதை என்று பெயர் இருந்தாலூம், அது ஆரியக் கதைப்படி, ஜமதக்கினி முனிவரின் மனைவி ரேணுகாதேவி, மாரி ஆகிவிட்டாள். இந்த மாரி இல்லாத கிராமமே தமிழ்நாட்டில் இல்லை. மாரி, கிராம தேவதையாதலால், பாமர மக்கள் எல்லோருக்கும் கடவுளாகிவிட்டாள்." (விடுதலை கட்டுரை 25.3.1960)
"மக்கள் மாரியம்மன் பண்டிகையின் பேரால் காட்டுமிராண்டித்தனமாக தப்புகளைக் கொட்டிக் கொண்டும் மலைவாச லம்பாடிகள் ஆடுவதுபோன்ற ஆட்டங்களையும் ஆடிக்கொண்டும் கீழ் மக்கள் நடப்பதுபோன்ற வேஷங்களைப் போட்டுக் கொண்டும், ஆபாசமான பேச்சுகளைப் பேசிக் கொண்டும், ஆயிரக்கணக்கான ரூபாய்களை பாழாக்கிக் கொண்டும் செய்துவரும் அக்கிரமம் இந்த நாட்டில் அறியாதார் யாரும் இல்லை.
இது நாளாக நாளாக அதிகமாகின்றதே தவிர மக்களுக்கு அறிவு வந்து, இந்த பழைய கால நிலைமை சிறிதாவது மாறி இருக்கின்றதென்று சொல்லுவதற்கே இல்லை.
... .... ...
ஒரே கடவுள் என்று சொல்லுகின்ற அல்லாசாமியின் உற்சவமும் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது. ஆனால் இந்த மாரி, கருப்பன், காத்த வராயன் என்று சொல்லப்பட்ட 'கீழ்த்தர பரிவார தேவதைகள்' என்று சொல்லப்படும் சாமிகளின் பக்தர்கள் செய்யும் ஆர்ப்பாட்டம் இப்போது அளவு கிடையாது. இந்த 'தேவதைகளை' வணங்குவதும் இவைகளுக்கு உற்சவம் செய்வதும் கீழ் மக்களாயிருப்பவர்களது செய்கை என்று அனேக சைவ வைணவ பண்டிதர்கள் எழுதி இருக்கின்றார்கள். அன்றியும் மாரி என்றால் என்ன அது எப்படிப்பட்ட தெய்வம் அதன் கதை என்ன என்பது யாருக்காவது தெரியுமா? அது அறிவுள்ள மக்களால் ஒப்புக் கொள்ளக் கூடியதா? என்று பார்த்தால் அது கடைசியில் சைபராகத்தான் முடியும்.
இம் மாதிரி அர்த்தமற்றதும் அனாகரீகமானதும் காட்டுமிராண்டித்தனமானதுமான காரியங்களை மதத்தின் பேரால், கடவுள்களின் பேரால் சற்றும் மான வெட்கமில்லாமல் செய்து கொண்டிருக்கின்ற மக்கள் நம்மை நாஸ்திகமென்றும், மத தூஷணை என்றும், கடவுள் தூஷணை என்றும் சொல்லுவது எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. இந்த லட்சணத்தில் இந்த மாரியாயி என்கின்ற சாமிகள் ஒரு ஊருக்கு இரண்டு மூன்று இருந்துகொண்டு ஏககாலத்தில் உற்சவம் செய்து சிறுபிள்ளைகளின் புத்தியை மூடமாக்கி அவர்களையும் காட்டுமிராண்டிகள் போல குதிக்கும்படி செய்வது மிகவும் அக்கிரமமான காரியமாகும். இதற்கு வியாபாரிகள் என்று சொல்லப்படுவோர்கள் கடைகடைக்கு 10-ம் 5-ம் கொடுத்து இதை வளர்ப்பது என்பது அதி மூடத்தனமும் அக்கிரமுமான காரியமாகும்.
மற்றும் இப்படிப்பட்ட காரியங்கள் பொது ஜனங்கள் சுகாதாரத்திற்கு எவ்வளவு கெடுதி என்றும் கட்சி, பிரதிக் கட்சிகளால் பொதுஜன அமைதிக்கு எவ்வளவு பங்கம் என்றும் நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை." (குடி அரசு துணைத் தலையங்கம், 2-4-1933)
பண்பாட்டு மீட்டுருவாக்கம் என்ற பெயரிலும், நாட்டார் வழிபாடு என்ற பெயரிலும் பொதுமக்களின் மூளையில் திணிக்கப்படுவது மூடநம்பிக்கைக் கருத்துக்கள் அல்லவா?
நல்ல புத்தகம் என்பது அப்புத்தகத்தில் சொல்லப்பட்டவற்றையும் தாண்டி, நம்மை சிந்திக்க வைக்க வேண்டும். அந்த வகையில் பார்த்தால், பேராசிரியர் இரா.மணியன் எழுதியுள்ள 'பெரியாரின் இலக்கியச் சிந்தனைகள்' மிக நல்ல புத்தகம். தமிழ் இலக்கியங்கள் பற்றி பெரியாரின் எண்ணம் என்னவாக இருந்தது என்பதை அறிய வேண்டுமானால், சிறுமலைபோல் குவிந்திருக்கும் குடிஅரசு, விடுதலை தொகுப்புகள் முழுவதையும் படிக்க வேண்டியதில்லை; பேராசிரியர் இரா.மணியனின் புத்தகத்தைப் படித்தால் போதும்.
இன்றைக்கும் இலக்கியச் சுவைக்காக கம்பராமாயணத்தையும், சிலப்பதிகாரத்தையும் கொண்டாடுவதில் தவறென்ன என்று கேட்கும் முற்போக்காளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் படிக்க வேண்டிய புத்தகம் இது. வியாபார நோக்கம் இல்லாமல், மக்களிடம் திராவிடக் கொள்கைகள் போய்ச் சேர வேண்டும் என்ற நோக்கில் பதிப்பித்து இருக்கும் திருச்சி கே.சௌந்தரராசன் அய்யாவிற்குப் பாராட்டுகள்.
படித்தும், பகுத்தறிவற்றவர்களாய் நம் மக்கள் வாழும் நிலையில் அவர்களிடம் நாம் அறிமுகப்படுத்த வேண்டியது முற்போக்கு இலக்கியங்களையும், பகுத்தறிவு ஊட்டும் நூல்களையும்தான் என்பதை கருத்தில் கொள்வோம்; அவற்றையே தூக்கிப் பிடிப்போம்.
பெரியாரின் இலக்கியச் சிந்தனைகள்
ஆசிரியர்: பேராசிரியர் முனைவர் இரா.மணியன்
வெளியீடு: புரட்சிப்பாதைப் பதிப்பகம்
10, சவகர்லால் நேரு சாலை,
கோயம்பேடு, சென்னை - 70.
பக்கங்கள் 197, விலை. ரூ.60
- கீற்று நந்தன்