பதிப்புரையிலிருந்து...
அறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி (1900-1960) அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிற இந்நேரத்தில் அவரது மிகச் சிறந்த ஆக்கங்களில் ஒன்றாகிய ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’- நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். களப்பிரர் காலத்தை ‘இருண்ட காலம்’ எனத் தமிழ் ஆய்வுலகம் வரையறுத்து கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் அக்கருத்தை மறுத்து எழு தப்பட்டது இந்நூல். கிடைக்கும் இலக்கியத் தரவுகளின் அடிப்படையில் தமிழ்ப் பண்பாடு தழைத்தோங்கிய காலகட்டம் அது என மயிலை சீனி இந்நூலில் நிறுவுகிறார். இந்நூலின் முதற்பதிப்பு வெளிவந்து கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம் ஒடிவிட்டது. இடைப்பட்ட காலங்களில் களப்பிரர் காலம் குறித்து நமது புரிதல் அதிகரிக்கத்தக்க அளவிற்கு தமிழக வரலாறு குறித்த பல புதிய ஆய்வுகள் வெளிவந்துள்ளன. அவற்றை எல்லாம் கணக்கிலெடுத்துக்கொண்டு மயிலை சீனி அவர்களது நூலில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகட்கு விடைகாண முயலும் பேரா.அ.மார்க்ஸ் அவர்களது விரிவான ஆய்வுரை ஒன்றையும் இப்பதிப்பில் இணைத்துள்ளோம்.
தமிழகத்தில் விவசாய சமுகம் உருப்பெற்றபோது எழுந்த முரண்களின் பின்னணியில் களப்பிரர் காலத்தை விளக்க முயலுகிறார் மார்க்ஸ். களப்பிரர் காலம் குறித்து மிக முக்கியமான வரலாற்று ஆவணமாகக் கருதப்படுவது வேள்விக்குடிச் சாசனம். பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட தானங்களைக் களப்பிரர்கள் நீக்கினார்கள் என்கிற கருத்தை மயிலை சீனி அவர்கள் ஏற்காததன் விளைவாகவோ என்னவோ முதற்பதிப்பின் பின்னிணைப்புகளில் ஒன்றாக அதனை அவர் சேர்க்கவில்லை. எனினும் அதன் முக்கியத்துவம் கருதி இப்பதிப்பில் வேள்விக்குடிச் சாசனத்தையும் பிற்சேர்க்கையாகச் சேர்த்துள்ளோம். மொத்தத்தில் களப்பிரர் காலம் குறித்த பல முக்கியத் தகவல்களையும் தரவுகளையும் உள்ளடக்கியதாக இந்நூலை உங்கள் முன் அளிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
மயிலை சீனி.வேங்கடசாமி
விடியல் பதிப்பகம், 11, பெரியார் நகர், மசக்காளிப்பாளையம் (வடக்கு)
கோயம்புத்தூர்-641 015. தொலைபேசி:0422 2576772
விலை : ரூ.75