ஜெய் பீம் காம்ரேட்(ஜெய் பீம் தோழர்) ஆவணப்படம் பார்த்து முடித்தேன். தமிழாக்கம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. மிகச் சிறந்த படைப்பை ஆனந்த் பட்வர்த்தன் தந்திருக்கிறார். 14 வருடங்கள் கடின உழைப்பு அவருக்குத் தேவைப்பட்டிருக்கிறது. அவரது நீண்ட, கடின உழைப்பை நினைத்துப் பார்க்கும்போது படத்தின் நீளம்(மூன்றரை மணி நேரம்) ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. மராத்தா தலித் கவிஞர், பாடகர் விலாஸ் கோக்ரே தான் இப்படத்திற்கான உந்துசக்தி.

anand_patwardhan_3701985ல் வெளிவந்த "பாம்பே நமது நகரம்" என்னும் ஆவணப்படத்தின் இறுதிக்காட்சியில் அமைந்துள்ள விலாஸ் கோக்ரேவின் கர்ஜனையான பாடலோடு படம் ஆரம்பமாகிறது.

 சகோதர, சகோதரிகளே!!

 சாதி, மத ஏற்றத்தாழ்வுகளை மறப்போம்

 தொழிலாளர்களோடு கை கோர்ப்போம்

 இந்த ஒற்றுமையின் மூலம்

 பொய்களால் ஆன நாடாளுமன்றத்தை வீழ்த்துவோம்

 பரட்சிக்கான முழக்கமிடுங்கள்

 அப்பொழுதே நம் சிக்கல்கள் தீரும்.

 இது எப்பொழுது நிகழும்?

 பாட்டாளிகள் ஆளும்போது.

 பாட்டாளிகள் ஆட்சியில் உண்ண உணவிருக்கும்

 குடிக்க நீர், வசிக்க வீடு, உடுத்த உடை கிடைக்கும்

 அந்த நாள் வரவேண்டும்

 சகோதரர்களே

 ஓ தோழர்களே!

 ஒற்றை இசைக்கருவியோடும், தனது குழுத்தோழர்களோடும் பம்பாய் நகர வீதிகளைத் தனது இசையால், பாடலால் கவிஞர் விலாஸ் தன்வயப்படுத்துகிறார்.

  1997 ம் ஆண்டு மும்பை நகரில் ரமாபாய் காலனியில் அம்பேத்கர் சிலைக்கு செருப்புமாலை அணிவிக்கப்படுகிறது. சிலைகளின் தேசமாக மாறிப்போய்விட்ட இந்தியாவில் அம்பேத்கர் சிலைகள்தான் மிக அதிகமாக சேதமாக்கப்படுகின்றன. தலித் தலைவர்களின் சிலைகளும் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாகின்றன. அதற்கான உளவியலை நாம் வரையறுக்கமுடியும். ஒரு தலித் தெருவில் நடந்து போவதை சகித்துக்கொள்ளாத தேசமாக இது இருந்தது. இன்னமும் இருக்கிறது. அவ்வாதிக்கத்திற்கு தலித் தலைவர்களின் சிலைகள் ஒவ்வாமையை வரவழைக்கும். பலநூறு ஆண்டுகளாக காலில் மிதிபட்ட மக்கள் கடந்த ஒரு நூற்றாண்டில் ஒரு தலைவனால் விழிப்புணர்வு பெற்று நேருக்கு நேர், ஒத்தைக்கு ஒத்தை நிற்கும்போது ஆதிக்கத்தின் தசையும் ஆடத்தானே செய்யும். ஆனால் தசை மட்டும் ஆடவில்லை. முழு ஆதிக்கமே ஆடுகிறது. அது போடும் ஆட்டத்தை படம் முழுவதும் பார்க்கிறோம்!பிரம்மாவின் தலைப்பகுதியிலிருந்து தோன்றினோம் எனச் சொல்லிக்கொள்ளும் (சித்பவன்)பிராமணர்களின் ஆட்டத்தைப் பார்க்கிறோம். ஷத்திரியர்களின், வைஷியர்களின்(சிவசேனா, பா.ஜ.க, காங்கிரஸ் அரசியல்வாதிகள்)கோபத்தைப் பார்க்கிறோம். அவ்வளவு சீக்கிரம் அவர்கள் கோபத்தை நிறுத்திவிடுவார்களா என்ன? 

 அம்பேத்கர் சிலை செருப்புகளால் அலங்கரிக்கப்பட்ட பின்னர் ரமாபாய் காலனி மக்கள் தன்னெழுச்சியாகப் போராட்டம் நடத்துகின்றனர். அங்கு வந்த காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்துகிறது. எல். பி. ஜி டாங்கருக்கு தீ வைக்க போராட்டக்காரர்கள் முயற்சி செய்தார்கள். அதைத் தடுப்பதற்காகத்தான் துப்பாக்கிச்சூடு நடத்தப்படவேண்டியதாகிப் போனது என்று காவல்துறை வாதம் செய்தது. காவல்துறையின் வாதம் பொய் என்பது இறுதித்தீர்ப்பில் வெளிஉலகிற்கு வெட்ட வெளிச்சமாகியது. துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்ட காவல் உயரதிகாரி கதமிற்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை பெற்ற கதம் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படவில்லை. மாறாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படுகிறார். மேல்முறையீடு செய்தபிறகு சில நாட்களில் பிணையிலும் வெளிவந்தார். பதவி உயர்வும் கொடுக்கப்பட்டது. ஆதிக்கத்திற்கு இது ஒரு சடங்கு. அவ்வளவுதான். தலித்துகள் கொல்லப்படுவார்கள், சித்திரவதை செய்யப்படுவார்கள். கோழி திருடினான் என்று நாட்கணக்கில் சிறையில் கேட்பாரின்றி வைத்திருப்பார்கள். பெண்களை மானபங்கம் செய்வார்கள். தட்டிக்கேட்கும் அவனது கணவனை கொலை செய்வார்கள். அம்மணமாக தெருவில் ஊர்வலம் விடுவார்கள். சாதிப் பெயரைச் சொல்லித்திட்டுவார்கள். எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு தன் சொத்துக்களைக் கரைத்து வழக்கு நடத்தி ஆதிக்கத்திற்கு ஒரு தண்டனை வாங்கித் தந்தால் எல்லோருக்கும் பொத்துக்கொண்டு வருமே கோபம்!

   ரமாபாய் காலனியின் 10 உயிர்கள் துப்பாக்கிச் சூட்டில் காவுவாங்கப்பட்டன. துடித்துப்போன ரமாபாய் காலனிவாசியான கவிஞர், பாடகர் விலாஸ் கோக்ரே சில நாட்களில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்த தேசத்தில் தலித்துகள் இன்னமும் வாழ்வது வெட்கத்திற்குரியது என்று அவர் மனம் வெறுத்திருக்கவேண்டும்.

  1970 களில் தலித் இயக்கங்களால் ஈர்க்கப்பட்ட விலாஸ் கோக்ரே, 80 களில் அவ்வியக்கங்கள் வலுவிழந்தும், பிளவுபட்டும் போனபிறகு இடதுசாரிகளின் மீது நம்பிக்கை வைக்கிறார். மார்க்சிய, லெனினியக் கொள்கைகளை பிரதிபலிக்கும் 'அவ்ஹான் நாட்டிய மஞ்ச்' என்னும் கலைக்குழுவில் சேர்ந்து வெகுகாலம் அதில் பங்களிக்கிறார். விலாஸின் வருகைக்குப்பிறகுதான் ஆவ்ஹான் கலைக்குழு எழுச்சி பெற்றது என புரட்சிப்பாடகரும், கவிஞரும், விலாஸின் நண்பருமான கத்தார் குறிப்பிடுகிறார். ரமாபாய் காலனியில் ஒரு சிறிய குடிலில் வசிக்கும் கோக்ரே தனது மகனின் திருமணத்துக்குப் பிறகான அவனது வசிப்பிடம் குறித்துக் கவலை கொள்கிறார். தனது சிறிய வீட்டிற்குள்ளாகவே ஒரு அறை ஒன்றை கட்டவேண்டும் எனத் திட்டமிடுகிறார். அதற்காகவும் தனது குடும்பத்தின் அன்றாட செலவுகளை சமாளிக்கவும் அவ்வப்பொழுது குடியரசுக்கட்சியின் நிகழ்வுகளிலும், தலித் எம். பி ஒருவரது இல்லத்திலும் பாடுகிறார், கலை நிகழ்ச்சிகள் நடத்துகிறார். அவ்வாறாக நிகழ்ச்சி நடத்துவது கட்சி நடவடிக்கைகளுக்குப் புறம்பானது என்று கூறி கட்சியைவிட்டும், அவ்ஹான் நாட்டிய மஞ்சிலிருந்தும் கோக்ரே வெளியேற்றப்படுகிறார். மனம் வெறுத்துப் போன கோக்ரே கோபக்காரராகவும், குடிகாரராகவும் மாறுகிறார். அச்சமயத்தில்தான் ரமாபாய் காலனி சம்பவங்கள் நடக்கின்றன. போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்துகின்றனர். "காவல்துறை நடவடிக்கை ஒழிக, தியாகிகளாகிப்போன அம்பேத்கரின் குழந்தைகளுக்கு தலை வணங்குகிறேன். அம்பேத்கரிஸ்டுகளின் ஒற்றுமை ஓங்குக!" என்று தனது வீட்டின் சுவரில் எழுதிவைத்துவிட்டு கோக்ரே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்கிறார்.

   விலாஸ் கோக்ரேவின் மரணத்தை நாம் எப்படி எடுத்துக்கொள்வது?ரமாபாய் துப்பாக்கிச்சூட்டையடுத்து தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலை தனது தோழர்களோடு பகிர்ந்து கொண்டிருப்பாரேயானால் அவர் இந்த முடிவை எடுத்திருக்கமாட்டார் என நாம் கருதலாமா? அவ்ஹான் நாட்டிய மஞ்சிற்கு விலாஸின் பங்களிப்புகள் தோழர்களுக்குத் தெரிந்திருந்தும் ஏன் அவரை அதைவிட்டு விரட்டியடித்தார்கள்?விலாஸ் குடிகாரராக மாறியது யார் தவறு?காலம் காலமாக கம்யூனிஸ்ட் இயக்கங்களில் மிகத்தீவிரமாக ஈடுபட்டு வந்திருக்கும் தோழர்களை உப்புச்சப்பு இல்லாத காரணங்களைக் கொண்டு நீக்கும் தலைமைத் தோழர்களுக்கு இன்னமும் தோழமைப் பக்குவம் இல்லை என்றுதான் நாம் கருதமுடியும்.

 ரமாபாய் காலனிக்கு அருகில் அமைந்துள்ள மும்பையின் மிகப்பெரிய குப்பைமேடு தேவ்நார் குப்பைமேடு. அங்கு ஒப்பந்தக்கூலிகளாகப் பணிபுரியும் தலித்மக்களின் வேதனைகளைக் காட்சிப்படுத்தும் பட்வர்த்தன் நம்மை வேதனையின் உச்சத்திற்குக் கொண்டுசெல்கிறார். என்ன உலகம் இது?என்னை அவ்விடத்தில் கற்பனை செய்துபார்த்துக்கொள்கிறேன். இந்த உலகத்தை சுட்டெரிக்கவேண்டும் என்ற ஆசை பிறக்கிறது. மாநகராட்சியின் தற்காலிக ஊழியர்களாக பல்லாண்டுகளாகப் பணிபுரியும் தலித் தொழிலாளர்களுக்கு செருப்பு கிடையாது. தொப்பி கிடையாது. மனித மலக்குவியல்கள் குவிந்திருக்கும் பகுதி மும்பையின் "ஹவுஸ் கல்லி". அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு முகமூடி கிடையாது. தங்கள் உடலில் விழும் அசுத்தங்களை அகற்றிக்கொள்ள தண்ணீர் கிடையாது. பேருந்துகளில் அவர்களுக்கு இடம் கிடையாது. தொழிற்சங்கம் கட்டியபிறகுதான் தங்களுக்கு கொஞ்சம் மதிப்பு கிடைத்துள்ளது எனப் பெருமையாகக் குறிப்பிடுகிறார் ஒரு தொழிலாளி.

செருப்பு, தொப்பி, முகமூடி, மழை கோட் ஆகியன ஒப்பந்ததாரர்களால் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படவேண்டும். ஒப்பந்ததாரர் தரத்தவறினால் மாநகராட்சி தரவேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபிறகும் மாநகராட்சி அத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது. 2000 ஊழியர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வக்கிலாத மாநகராட்சி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கட்டணமாக செலவழித்த தொகை மட்டும் 65000 ரூபாய். மும்பை மாநகராட்சி மற்றும் மஹாராஷ்டிரா மாநில அரசின் சாதிப்பாசத்தையும், சாதி வெறியையும் இக்கட்டுரை படிக்கும் வாசகர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.

 தலித்துகள் ஏன் இவ்வாறு வெறுக்கப்படுகிறார்கள்? 

  ஒவ்வொரு வருடமும் டிசம்பர், 5 அம்பேத்கர் நினைவு நாளில் மஹாராஷ்டிராவிலிருந்து மட்டுமல்ல நாடு பூராவிலிருந்தும் தலித் மக்கள் மும்பையின் அவரது நினைவிடத்தில் கூடுகிறார்கள். மிகப்பெரும் கூட்டம் ஆதிக்கவாதிகளை எரிச்சலடைய வைக்கிறது. ஆவணப்படத்திலேயே வருகிறது. ஆதிக்கம் 1 கூறுகிறது: " அவர்கள்(தலித்துகள்) வேறு எங்காவது போய் கூட்டம் நடத்திக்கொள்ளட்டும்". ஆதிக்கம் 2 கூறுகிறது: " அவர்கள் அசிங்கம் பிடித்தவர்கள்". அவர்கள்தானே உங்களது கழிவுகளை சுத்தம் செய்கிறார்கள் என்பதற்கு அது அவர்களது விருப்பம் என்கிறது ஒரு ஆதிக்கம். இட ஒதுக்கீட்டை கண்டித்து ஒரு ஆதிக்கம் பேசுகிறது. என்னுடைய பாட்டனாருக்கு பாட்டானார் அவர்களுடைய(தலித்துகள்) பாட்டனாரின் பாட்டனாருக்கு கல்வி கொடுக்கவில்லை என்பதற்காக இன்று நான் ஏன் (இட ஒதுக்கீட்டினால்) பாதிக்கப்படவேண்டும்? என்கிறது ஒரு ஆதிக்கம். 

 தனது பேச்சாற்றலால் தலித் மக்களைக் கவர்ந்த தலித் தலைவர் பாய் சங்கரே கொல்லப்படுகிறார். அம்பேத்கரிஸ்டுகள் முக்கியமான அத்தலைவரை இழக்கும் காட்சிகளோடு படத்தின் முதல் பகுதி நிறைவடைகிறது.

 1998களில் நடைபெற்ற தேர்தல் காட்சிகளை படம் அசை போடுகிறது. தலித் மக்களின் ஓட்டுகளைப் பெறுவதற்காகவும், ரமாபாய் காலனி துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களை மறக்கடிக்கவும் தலித் தலைவர்கள் சிலரை சரி கட்டுகிறது சிவசேனா - பா.ஜ.க. கூட்டணி. ஆனாலும் அக்கூட்டணி தேர்தலில் தோற்கடிக்கப்படுகிறது

   காந்தியின் கொலையை நியாயப்படுத்தும் "நான் நாதுராம் கோட்சே பேசுகிறேன்" என்னும் நாடகநிகழ்வோடு படத்தின் இரண்டாம்பகுதி தொடங்குகிறது. தனது சகோதரரின் செயலை வரலாறு நியாயப்படுத்திவிட்டது என்கிறார் நாதுராமின் சகோதரர். காந்தி சுட்டுக்கொல்லப்படும் காட்சியில் கொப்பளிக்கும் சிவப்பு நிறம் குஜராத்திலும், மும்பையிலும் நாம் கண்ட அதேசிவப்பு நிறம்தான். அதைப்பற்றி அவர்கள் வெட்கம் ஏதும் படவில்லை. காந்தியின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பின் விடுதலையான வீரசவர்க்காருக்கு மாலை அணிவிக்கப்படுகிறது. வீரசவர்க்காரைப் பற்றி ஒரு ஆதிக்கம் மிகப்பெருமையாகப் பேசுகிறது. அவர்களுக்கு அவர்தான் தேசத்தந்தை போலும். மராத்தா சமூக இளைஞர்கள் நடத்தும் ‘சாவா’ என்னும் தீவிரவாத அமைப்பு பற்றி பேசப்படுகிறது. சாவாவின் அறிவிப்பு பலகை இருக்கும் இடங்களில் எல்லாம் தலித்துகள் மீது வன்கொடுமைகள் கட்டாயம் நடக்குமாம். இது என்ன மாதிரியான தேசம் என்றுப் புரியவில்லை. மகர்களுடைய கிணற்று நீரைக் குடித்தால் தீட்டு என்னும் சாதி இந்துக்களின் மனநிலையை படம் விவரிக்கிறது. அட இன்னுமா இக்கொடுமை நிலவுகிறது?! சாதிக்கொடுமைகளும், சாதியும் முழுவதுமாக ஒழிய மிகப்பெரும் புரட்சி நடக்கவேண்டும் என்னும் புரட்சிப்பாடகர் கத்தாரின் (எப்போதோ கூறிய)வாசகங்களை நான் நினைத்துப்பார்க்கிறேன்.

இந்தியாவில் எந்தவொரு தலித்தும் படிக்கக்கூடாது, வேலைக்குப் போகக்கூடாது, சாதி இந்துக்களுக்கு அவர்கள் தொடர்ந்து சேவை செய்துகொண்டே இருக்கவேண்டும் என்ற பைத்திய மனநிலையை சாதி இந்துக்களிடமிருந்து நாம் எப்படி போக்கப்போகிறோம்?தலித்துகளின் கொஞ்சநஞ்ச முன்னேற்றத்தையும் சாதி இந்துக்களால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. ஒவ்வொரு தலித்தும் தன்னுடைய சுயமரியாதையை நிலைநிறுத்தமுயற்சிக்கும்போது வன்கொடுமையை எதிர்கொள்கிறான். இந்தியாவில் தினமும் 2 தலித்துகள் கொல்லப்படுவதாகவும், 3 தலித்துகள் வன்புணர்வுக்கு ஆட்படுவதாகவும் படம் தெரிவிக்கிறது. ரமாபாய் காலனி படுகொலை நடைபெற்றபோது ஆட்சியில் யார் இருந்தார்கள் என்பதையே அம்மக்கள் மறந்துபோய்விட்டார்கள் என்பதை படம் நிரூபிக்கும்போது இந்திய ஜனநாயகம் வாழ்க என்றே கர்ஜிக்கத் தோன்றுகிறது.

 காங்கிரஸ் கூட்டணி முதல்வர் புதிய அம்பேத்கர் சிலை ஒன்றை திறக்கிறார். சிவசேனாவும் பா.ஜ.க.வும் ரமாபாய் காலனிக்குள் ஊடுருவுகிறது. காலத்தின் சாபத்தை இந்த ரூபங்களில் நாம் படத்தில் பார்க்கிறோம். தலித்துகள், பழங்குடிகள் இப்போது பா.ஜ.கவின் சேனைகளாக மாற்றப்படுவது குறித்து நாட்டின் பல பகுதிகளில் நடைபெறும் மதவன்முறைகளில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். எனவே செருப்பு மாலைகளைவிட இத்தகைய துரோகங்களை நினைத்துதான் அம்பேத்கார் கண்ணீர் விட்டுக்கொண்டிருப்பார்.

 கபீர் கலா மஞ்ச் கலைக்குழு நமக்கு நம்பிக்கை அளிக்கிறது. தலித்துகளுக்கு மட்டுமல்லாது பாட்டாளிகளுக்கும் கூட அது விழிப்புணர்வை வழங்கி வந்தது. ஆனால் அதுவும் இப்போது தடை செய்யப்பட்டுவிட்டது. கபீர் கலா மஞ்சின் ஷீத்தல் சாத்தே தலைமறைவாக உள்ளார். அவரது கலைக்குழுவைச் சார்ந்தவர்கள் எல்லாம் மாவோயிஸ்டுகளாம். இக்குழுவைச் சேர்ந்த இருவரை மஹாராஷ்டிரா போலீசார் கைது செய்திருக்கிறார்கள். துப்பாக்கியை விட ஆட்டமும், பாட்டும் அரசை அப்படி பயமுறுத்தியிருக்கிறது. குழுவினரின் பாட்டையும், பிரச்சாரத்தையும் படத்தில் பார்த்தபின்புதான் அரசு இவர்களுக்கு ஏன் பயப்படுகிறது என்பது புரிந்தது. கயர்லாஞ்சி படுகொலைகள் அதையொட்டி நடைபெற்ற தலித்துகளின், மனிதாபிமானிகளின் போராட்டங்கள், உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் போனது, காவலர்கள் லஞ்சம் வாங்கிக்கொண்டு விசாரணையை சரியாக நடத்தவில்லை என காவல் உயரதிகாரியே ஒப்புக்கொண்டது என படம் விரிந்து பரந்து தலித்மக்கள் படும் எல்லா துன்பங்களின் அடி ஆழம் வரை செல்கிறது. கயர்லாஞ்சியில் ஆடை உரிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் நடத்தைக் கெட்டவளாம். ஒரு ஆதிக்கம் சொல்கிறது. அப்படியானால் இவர்கள் என்ன இந்து தலிபான்களா?

 நீலநிற ஆடைகளோடு தலித் இளைஞர்கள், யுவதிகள் மேற்கொள்ளும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள், தலித் இசைக்கலைஞர்களின் ஆக்ரோஷ பாடல்கள் மிகப்பெரும் நம்பிக்கைக் கீற்றாக தெரிகிறது.

 “என்ன நடந்தது என்பதை அறி

 அதைத் தாண்டிச் செல்லப் போராடுங்கள்

 ஒற்றுமை வாகனத்தின் லகானைப் பிடியுங்கள்

 பற்றியெரிகிறது ம‌ராத்வாடா. . . . . . . . . . . . . . .

 தலித்துகளே ரத்தம் சூடேறட்டும்

 அநீதியை எதிர்த்துப் போராடுங்கள்

 தலித்துகளே போராட்டக்களத்தில் வாழ்வதற்காக

 சாக‌த்துணியுங்கள்”

 என்னும் பாடல் இன்னமும் காதுகளில் ரீங்காரமிட்டு ரத்தம் கொதிப்புறச் செய்கிறது.

 படத்தின் சிக்கலான பகுதிக்கு படம் வருகிறது. விலாஸ் கோக்ரே மார்க்சியவாதியாக இருந்தார். ஆனால் மார்க்சியவாதியாக இறந்தாரா?அவர் இறந்தபோது அவரது தலைப்பாகையின் நிறம் நீலமாக இருந்தது. நீலநிறம் தலித் அடையாளத்தின் குறியீடு. இறப்பதற்கு முன் அவர் தனது குடிசையின் சுவரில் எழுதிய வாக்கியங்கள் அம்பேத்கரிஸ்டுகளின் ஒற்றுமையை வலியுறுத்தின. குடியரசுக் கட்சியின் அரசியலுக்குள் விலாஸ் செல்லவில்லை என வரவரராவ் மறுக்கிறார். தலைப்பாகையின் நிறம் நீலமல்ல மாறாக அது கத்தரிப்பூ நிறம் என விலாஸின் தோழர் ஒருவர் போகிறபோக்கில் சிரித்துக்கொண்டே சொல்கிறார். நல்ல வேளை தற்கொலைக்குமுன் அவரது வீட்டுச் சுவரில் அவர் எழுதிய எழுத்துகள் அவரது கோபத்தை, அவரது திசையை வெளிப்படுத்திவிட்டது. போஸ்ட்மார்ட்டம் செய்யப்படவேண்டியது அவரது தலைப்பாகையின் நிறம் பற்றியல்ல. பாட்டாளிக‌ளை ஒருங்கிணைக்கும்போது ந‌ம‌து தேச‌த்திற்கேயுரிய‌ சில‌ ப‌ண்பு ந‌ல‌ன்க‌ளை எப்ப‌டி அர‌வ‌ணைத்துச் செல்வ‌து?

சாதி நம் நாட்டிற்கேயுரிய‌ ப‌ண்பு. அதை ஒருக்காலும் நீங்க‌ள் அழிக்க‌முடியாது. அதை அழிக்கிறேன் என்று சொல்லி அதைப்ப‌ன்ம‌ட‌ங்கு வ‌ள‌ர்த்துவிட்ட‌வ‌ர்க‌ள் நாம். சாதியை அழித்த‌பின்ன‌ர்தான் க‌ட்சி க‌ட்ட‌முடியும், தோழ‌மை உருவாக்க‌முடியும் என்று சொல்ல‌முடியாது. நூறு ஆண்டுக‌ளுக்கு முன்ன‌ர் ஒருவித‌மாக‌ வெளிப்ப‌ட்ட‌ சாதி இன்று வேறுவித‌மாக‌ வெளிப்ப‌டுகிற‌து. நூறு ஆண்டுக‌ளுக்கு முன்ன‌ர் கோவிலுக்குள் தீண்ட‌த்த‌காத‌வ‌ர்க‌ள் செல்வ‌தை த‌டுத்த சாதியாதிக்க‌ம் இன்று அதே ம‌க்க‌ளை ஒரு அர‌சு நிறுவ‌ன‌த்திற்குள், ஒரு பெரும் க‌ல்வி நிறுவ‌ன‌த்திற்குள், ஒரு பெரிய‌ ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌த்திற்குள் நுழைவ‌தை த‌டுத்து நிறுத்துகிற‌து. இது ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌ங்க‌ளின் கால‌ம். ந‌வீன‌ம‌ய‌த்தின் கால‌ம். அத‌னால்தான் க‌ழிவ‌றையை சுத்த‌ம் செய்யும் ஆக‌க்கீழ்சாதி ம‌னித‌னைப் ப‌ற்றி தான் ஒன்றும் க‌வ‌லைப்ப‌ட‌த்தேவையில்லை என‌க்கூறுகிறான் நவீன‌ சாதித் திமிர் பிடித்த‌ ஒரு இளைஞ‌ன். ஆவ‌ண‌ப்ப‌ட‌த்திலேயே அக்காட்சிக‌ள் வ‌ருகிற‌து. எல்லாமே நிஜ‌க்காட்சிக‌ள். ஆகக் கடைநிலை மனிதனின் அரசியல் அபிலாஷைகள் காங்கிரஸ் கட்சியாலும், இந்துத்வா கட்சிகளாலும் நிறைவேற்றப்படாது என்று அறிந்தபின்னர்தான் தலித்துகள் கம்யூனிஸ்டுகளையும், அம்பேத்கரிஸ்டுகளையும் நாடுகிறார்கள்.

 தனது குடும்பத்தின் நிதிச்சுமையை சமாளிக்க விலாஸ் மேற்கொண்ட சில அரசியல்பூர்வமான நடவடிக்கைகள் ஆவ்ஹான் கலைக்குழுவினருக்குப் பிடிக்கவில்லை. எனவே அவரை குழுவிலிருந்து நீக்க முடிவெடுக்கப்பட்டதாக அவரது மற்றொரு தோழர் குறிப்பிடுகிறார். அவர் தனது நிதித்தேவைக்காக இந்தியக் குடியரசுக்கட்சியின் கூட்டங்களுக்குச் சென்று பாடினார் என்பது மிக முக்கியக் குற்றச்சாட்டு. அதாவது குடியரசுக் கட்சி ஒரு சாதிக்கட்சி. சாதி என்பது மக்களின் கலாச்சாரம், பண்பாடு சார்ந்தது. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு(வலது, இடது, மாவோ எதுவானாலும்) சாதி என்பது ஒரு மேற்கட்டுமானம். அடிக்கட்டுமானம்(பொருளாதாரம்) மாறும்போது சாதியின் பண்புகளும் மாறும். ஆனால் அப்படி எதுவும் மாறவில்லை என கம்யூனிஸ்டுகள் கண்டுபிடிப்பதற்கு வெகுகாலம் ஆனது. மாவோயிஸ்டுகளே அதிகாரத்திற்கு வந்தாலும் சாதி கட்டாயம் இருக்கும் என கத்தார் குறிப்பிடுவார்.

sheetal_380சாதியும், வர்க்கமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். சாதியை கம்யூனிஸ்டுகள் புறக்கணிக்க முடியாது. வர்க்கப்போராட்டத்தை அம்பேத்கரிஸ்டுகள் புறக்கணிக்கக்கூடாது. தலித்துகள் கம்யூனிஸ இயக்கத்தில் புறக்கணிக்கமுடியாத இடத்தை அடைந்திருக்கிறார்கள். கம்யூனிஸ இயக்கம் முழுவதும் தலித் எதிர்ப்பாட்டைக் கொண்டிருக்கிறது என பொத்தாம்பொதுவாகச் சொல்லமுடியாது. தமிழ்நாட்டையே எடுத்துக்கொள்ளுங்கள். தீண்டாமை எதிர்ப்பு முன்னணியும், மலைவாழ் மக்கள் சங்கமும் மிகவும் ஆக்கப்பூர்வமாக பல செயல்களை செய்து வருகிறது. தலித்துகள் கம்யூனிஸத்தின் தலைமைப் பாத்திரத்தை அடைய முடியவில்லை என்ற விமர்சனமும் வைக்கப்படுகிறது. படித்த தலித்துகள் கம்யூனிச இயக்கத்தின் தலைமைப் பொறுப்புகளை அடைந்திருக்கிறார்கள். அடைகிறார்கள். ஆனால் சாதிவெறி பிடித்த கம்யூனிசத் தலைவர்கள் எல்லா மட்டங்களிலும், எல்லா இயக்கங்களிலும் இருக்கிறார்கள். சாதி இருக்கும்வரை இத்தகையத் தலைவர்களும் இருப்பார்கள் என பதில் கூறிக்கொண்டிருக்காமல் இத்தகைய சாதித் துவேஷத் தலைவர்களை கம்யூனிச இயக்கங்கள் களையெடுக்கவேண்டும். அப்படி எடுக்கப்பட்டால் தகுதியான தலித்துகள் அனைவரும் கம்யூனிச இயக்கங்களின் உச்சியைத் தொடுவார்கள்.

  அம்பேத்கரிஸ்டுகளுக்கும், தோழர்களுக்குமான உரசலை 1952 பொதுத்தேர்தல் கட்டத்திற்கு நாம் கொண்டுசெல்லலாம். 1952 பொதுத்தேர்தலில் தனது தோல்விக்கு காரணம் கம்யூனிஸ்ட் தலைவர் டாங்கேதான் என்று அம்பேத்கர் கருதினார். காஷ்மீர் பிரித்துக் கொடுக்கப்படவேண்டும், இஸ்லாமிய மக்களுக்கும் தனி வாக்காளர் தொகுதி தரப்படவேண்டும் என்று அம்பேத்கர் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியது அம்பேத்கர் ஒரு பிரிவினைவாதி என்றப் பிம்பத்தை டாங்கேயிடம் ஏற்படுத்தியது. பம்பாய் வடக்குத் தொகுதியில் ஒதுக்கப்பட்ட இடத்திற்காக அம்பேத்கருக்குக் கிடைத்திருக்க வேண்டிய 50000 வாக்குகள் வீணடிக்கப்பட்டன. 15000 வாக்குகள் வித்தியாசத்தில் அம்பேத்கர் தோற்றுப்போனார். இதற்குக் காரணம் கம்யூனிஸ்டுகள்தான்(டாங்கே) என அம்பேத்கர் கருதினார். இப்படியாகத்தான் இவ்விரு இயக்கத்தவருக்கும் இடையேயான் உறவு சுதந்திர இந்தியாவில் கசப்புடன் தொடங்கியது. இன்று அவர்களின் கசப்புணர்வு மாற்றப்பட்டாகவேண்டும் என்று காலம் வேண்டுகிறது. தீண்டாமையை வேரறுக்க இவ்விரு இயக்கங்களும் இணைந்து களம் காணவேண்டும். இவ்விருவரும் பிரிந்திருப்பது ஆதிக்கத்திற்குக் கொண்டாட்டமாக இருக்கும். ஆனால் பாதிக்கப்படுவது அப்பாவி தலித்துகளும், தோழர்களும்தான்.

விலாஸின் தலைப்பாகை நீலமா, கத்தரிப்பூ நிறமா என ஆராய்ந்து கொண்டிருக்காமல் தலித்திய, கம்யூனிச கலை, இலக்கியவாதிகளுக்கு ஏற்பட்டுக்கொண்டிருக்கும் ஆபத்துகளை உணர்ந்து உடன் செயல்படவேண்டும். கபீர் கலா மஞ்ச் கலைக்குழுவை ஆதிக்கவாதிகளின் ஆபத்திலிருந்து காப்பது இந்திய ஜனநாயகவாதிகளின் உடனடிக் கடமையாக இருக்கமுடியும்!. இத்திசை நோக்கிதான் கபீர்கலாமஞ்ச் பாதுகாப்பு குழு தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. கபீர் கலா மஞ்ச் குழுவில் விரல்விட்டு எண்ணக்கூடிய என்ணிக்கையில்தான் உறுப்பினர்கள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் நக்சலைட்டுகள் என மஹாராஷ்டிரா அரசால் முத்திரை குத்தப்பட்டுள்ளார்கள். இரண்டு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு விட்டார்கள். பாடலையும், தாளத்தையும் தங்களது ஆயுதங்களாகத் தரித்துக்கொண்டு மதசகிப்புத்தன்மையையும், கபீரின் அன்பையும் பரப்பிக்கொண்டு அதே சமயத்தில் மதவாதிகளையும், போலி அம்பேத்கரிஸ்டுகளையும், பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தையும், அதற்குத் துணைபோகும் அரசியல்வாதிகளையும் தோலுரித்துக்காட்டியும் இயங்கிவந்தனர். தடை செய்யப்பட்ட அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துதான் கபீர்கலா மஞ்ச் பாதுகாப்புக் குழு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனந்த் பட்வர்த்தனும் இக்குழுவில் செயல்படுவதோடு இப்படத்திற்காக மஹாராஷ்டிரா அரசு தனக்கு வழங்கிய 51000 ரூபாயை இக்குழுவிற்கே வழங்கியுள்ளார். கபீர் கலா மஞ்சையும், கயர்லாஞ்சியின் வன்கொடுமைகளுக்கு ஆளான பிரியங்காவுக்காகவும், சுரேகாவுக்காகவும் மட்டுமல்ல, இந்நாட்டின் ஒவ்வொரு தாய்க்காகவும் பாடும் ஷீத்தல் சாத்தேயையும் பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையல்லவா?!

“கதையை கேளுங்கள் மக்களே

 பாட்டாளிகளின் கதையை

 நெருங்கி வந்தால் மட்டுமே உணரலாம்

 கதையைக் கேளுங்கள் மக்களே!”

படம் பார்த்து முடித்தபின்னரும்கூட கவிஞர் விலாஸின் இசைக்குரல் மட்டும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

 - செ. சண்முகசுந்தரம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It