பீசா டெலிவரி பாய் - ஐ முறைத்த கண்ணோடு காதல் மனைவி பக்கம் திரும்பினான் ரஞ்சித்.

"வாட் ரஞ்சி..." அவள் கண்களில் பால்கனி வழியே எட்டிக் குதித்துக் கொண்டிருக்கும் காலை வெயில் பட்டு தெறித்தது.

"ப்ச்... அனாமிகா... உனக்கு புரியவே மாட்டேங்குது..." அவள் முகத்தை இன்னும் கூர்ந்து பார்த்தபடியே வாய்க்குள்ளாகவே கத்தினான்.

உணர்ச்சி வயப்படுதல் கூட பிளாட் அளவுக்கு தான் பட வேண்டும். மேல்தட்டு நடுத்தர வர்க்கத்தின் இ எம் ஐ கோட்பாடுகளுள் அதுவும் ஒன்று... என்பது போல இருந்தது அவன் உடல்மொழி.

"என்ன புரியல... ஸீ ரஞ்சி... எனக்கு எல்லாம் தெரியும். அந்த பீசா பாய் எங்க பார்த்தான்னுதான சொல்ற... ஐ நோ..." அவள் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு ஒரு சி இ ஓ வின் நெற்றி சுருக்கத்தைச் செய்து பார்த்தாள்.

"தெரியுதுல்ல... அப்புறம் துப்பட்டாவை போடறதுக்கு என்ன....?" மனம் நாலைந்து பளார்களை மூளையின் அடி பாகத்தில் செய்து பார்த்தது.

"உனக்கு எத்தனை வாட்டி சொல்றது ரஞ்சி... தப்பு அது இது எல்லாம் ட்ரெஸ்ல இல்ல... அவன் கண்ணுல இருக்கு. பார்க்க கூடாதுன்னு அவனுக்கு தெரியணும். நியாயமா நீ அவன்கிட்ட கோப பட்ருக்கணும்... அதை விட்டு..."

குறுக்கிட்டான்.

"ஊர்ல இருக்கறவன் கண்ணெல்லாம் அடைக்கறதுக்கு பதில்... நீ மூடிட்டு இருந்தா அது தான் சேப்..."

"பாக்கணும்னு முடிவு பண்ணிட்டவன்.. மூடிட்டு இருந்தாலும் பார்க்க தான் செய்வான்..."

வீட்டுக்குள் சட்டென இரு வாசல் உருவானது போல தோன்றியது. வார்த்தைக்கு வார்த்தை... வையகத்தில் உண்டு தானே. மௌனமும் மெல்ல பேசும் வார்த்தைகளைக் கொண்டிருக்கிறது தானே.

பக்கத்து வீட்டுக்காரன் தவறாக நினைத்தாலும் பரவாயில்லை. கோபத்தை காட்டாமல் போக கூடாது. படாரென அடைத்து சென்றான்.

பால்கனியில் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு.... உத்து உத்து பார்க்கிறவன் கண்களை குத்திக் குத்தி எடுத்து வட சட்டியில் போட்டு எண்ணெய் ஊற்றி வறுத்தெடுக்கும் காட்சி வந்து வந்து போனது.

கிரவுண்ட் ப்ளோர் பல்லவி ஆன்டி குனிந்து குட்டியூண்டு தோட்டத்தில்... மண் வெட்டிக் கொண்டிருந்தது.

"என்ன ரஞ்சி... என்னாச்சு... மூஞ்சில இப்டி சாத்தான் குடி கொண்டிருக்கான்..." ஒற்றைக்கண் சிமிட்டி வம்பிழுத்தது.

ரஞ்சித்தின் கண்கள் ஒரு முறை அனிச்சையாக துப்பட்டா அற்ற குனிந்து தொங்கும் பல்லவி ஆன்டியின் மார்புகள் மீது கவிந்து நிமிர்ந்தது. அதே வேகத்தில் மீண்டும் கவிய விரும்பியது.

"ஷிட்... என்ன இது...!?... பீசாகாரன் பண்ணின அதே தப்பு..." தன்னை தானே கணத்தில் நொந்துக் கொண்டு கண்களை மேல் எழுப்பி ஆன்டியின் கண்களைப் பார்த்தான். உள்ளே நிமிசத்தில் போராட்டம்.

"பார்த்துருக்குமோ...?"

ஆன்டி என்னென்னவோ பேசிக் கொண்டிருக்க.. ரஞ்சித்தின் கண்கள் வலுக்கட்டாயமாக ஆன்டி முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தது. கழுத்திலிருந்து இறங்கி தன் டிகினிட்டி குறைந்து விட கூடாது என்ற நடுக்கம்.. பதற்றம்.. தவிப்பு... அவன் முகத்தில் வேர்க்க கூட செய்து விட்டது.

ஏதோ பேசியவள்... மெல்ல புன்னகைத்தாள். அவனையே உற்றுப் பார்த்தாள். அவன் சொற்களை நகர்த்துவது போல சுவரோரம் சாய்ந்து நின்றிருந்தான்.

"ஏன் இவ்ளோ கஷ்டம் ரஞ்சி. இயல்பா விடு. கண்ணு முகத்தை தான் பார்க்கணும்னு இல்ல. பேச்சு ப்ளோல அது இயல்பா எப்படி இருக்குமோ அப்டி இருக்கட்டும். அப்டி கண்ணு கழுத்துக்கு கீழ ஒரு வாட்டி வந்துட்டு போனா போகட்டுமே... இப்ப என்ன. அதை இயல்பா கடந்துட்டா... அது பத்தின உறுத்தலோ... அது பத்தின கவனமோ வராது. கண்ணு மூக்கு மாதிரி அதுவும் ஒரு பாகம்தான உடம்புல. எதுக்கு அதை அவ்ளோ கஷ்டப்பட்டு பார்க்க கூடாதுன்னு கங்கணம் கட்டிட்டு இருக்கனும்....."

"ஐயோ.. ஆன்டி... இல்ல...." தடுமாறினான்.

"இட்ஸ் ஓகே... பாய்... சரி... அதை விடு... இன்னைக்கு சண்டே ஸ்பெஷல் என்ன... சண்டேன்னா ரெண்டா..." வழக்கமான குறும்போடு கண்ணடித்தாள். தொடர்ந்து குனிந்து மண்ணை பண்படுத்தும் வேலையைத் தொடர்ந்தபடியே.

பட்டென என்னவோ பாரம் இறங்கிய மாதிரி உணர்ந்த ரஞ்சித்-க்கு பட்டென மனதுக்குள் பாறையற்ற பூங்காவனம் சங்கர் பட காதல் காட்சி போல மலர்ந்தது. ஆன்டியின் ஒவ்வொரு சொல்லும் மீண்டும் மீண்டும் மனதுக்குள் காதாட்ட... மனதுக்குள் நன்றி சொன்னான்.

வீட்டுக்குள் நுழைந்த போது முகத்தில் புன்னகை... கண்களில் தெளிவு.

அனாமிகா சோபாவில் சாய்ந்து ஓடாத டிவியை வெறித்துக் கொண்டிருந்தாள்.

"எப்படி சமாதானம் செய்ய...இந்த மௌனத்தை எப்படி கலைக்க...?" இதயம் படபடக்க... தொண்டையை செறுமியபடியே டைனிங் டேபிள் மீதிருந்த வாட்டர் கேனைத் திறந்து கொஞ்சம் நீர் குடித்தான். கண்கள் அவள் மீதே கவிழ்ந்திருந்தது. சரி சாரி சொல்லி விடலாம்... என்று நினைத்தபடியே... அவள் அருகே நெருங்கி கொண்டே... "அனாமிகா... சா..."

சாரி சொல்வதற்குள்... காலிங் பெல் அடிக்க... ஒரு சேர இருவரின் கண்களும் கதவுக்குச் சென்றன.

அடுத்த கணம் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். நெற்றி தடவும் ஒற்றை விரலில்... தயக்கம் நகர வேண்டும் அவனுக்கு. அவள் அருகே கிடந்த துப்பட்டாவை எடுத்து மேலே போட்டுக் கொண்டு கதவை நோக்கி நகர்ந்தாள்.

துப்பட்டாவை அவள் போட்டுக் கொண்டதை பார்த்து... "அயோ... நான் அப்டி சொல்ல வரல..." என்பது போல... வாய் வரை வந்த சமாதானத்தை கண்கள் வழியே தடுமாற்றினான்.

கதவு திறந்த வாசலில்... ஊது பத்தி விற்பதற்கு பார்வை இல்லாத ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

அனாமிகா... பெருமூச்சோடு செய்வதறியாது அவரையே பார்த்தாள். பேச ஒன்றுமில்லாமல் கண்கள் விரிய ரஞ்சித்தும் அவரையே பார்த்தான். சடுதியில்... அந்த பிளாட்டில் கருணையோடு கூடிய பேரமைதி... சுழல ஆரம்பித்தது.

இருவருமே ஒருமுறை துப்பட்டாவைப் பார்த்துக் கொண்டார்கள். அதே பொருளுக்கு அர்த்தம் மாறுபடும் சூழல் தான் வாழ்வின் முரண். அமைதியில்...அர்த்தம் கூடும் புரிதல்.

"ரெண்டு பாக்கெட் வாங்கிகோங்கம்மா..." கிட்டத்தட்ட கெஞ்சுவது போல கேட்டுக் கொண்டிருந்த அவரின் கண்களற்ற முகத்தில்... வாழ்வின் எல்லா விதமான கழிவிரக்கமும் மேலும் கீழும் அசைந்துக் கொண்டிருந்தது.

பேச்சே வராத கரகர குரலில்... பெருமூச்சு விட்டபடியே... "சரி... ரெண்டு குடுங்க..." என்றாள். வெற்றிடத்தில்... மொழி தேடும் அவரின் விழியற்ற முக அசைவையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு... எதுவோ சமன் பட்டது போல இருந்தது.

வேகமாய் கதவருகே சென்ற ரஞ்சித்... "ஒரு பத்து குடுங்கண்ணே..." என்றான். குரலில் பரிசுத்த சமாதானம்.

கதவோரத்தில் தோள்கள் உரச... கண்கள் நான்கும் சந்தித்துக் கொள்கையில்... மெல்லிய சிரிப்பில் இரு முகமும் அருகருகே நுகர... ஊது பத்தி வாசம் இருவர் மனதுக்குள்ளும் பூக்க ஆரம்பித்தது.

- கவிஜி

Pin It