கொஞ்சூண்டு வெட்டாப்பு கொடுத்திருந்த வானம் மறுபடியும் பொத்துக் கொண்டு ஊத்தியது. சுதாரிக்க அவகாசமில்லாத தாக்குதல். ஒரு நாள் ரெண்டு நாளுன்னா சமாளிக்கலாம். வாரம், பத்து நாளுன்னா என்ன பண்ண முடியும்... மூச்சு முட்டி திணறி தவிக்குது ஊர் ஜனமே.
திடீர்னு மழை நின்னு தூறலா தனிச்சு சிறுத்து பளீர்னு வெளி வாங்கும். கூண்டை திறந்து விட்டதும் குப்பைமேட்டுக்கு ஓடுற கோழிகளாட்டம் ஜனங்க பறக்கும். அவங்கவங்களுக்கு ஆயிரம் வேலை. இன்னேரம்வரைக்கும் வயிறுமுட்ட அடக்கிவச்சிருக்கிற மூத்திரம் பேயணும்... கோணப்பன் கடைக்கு ஓடி சூடா போண்டா வடை தின்னு டீகுடிச்சு கதகதப்பா பீடி பத்தவைக்கணும்... மேங்காட்டுத்தண்ணி வயல்ல நின்னு சவுக்கு எடுக்காம இருக்கிறதுக்கு வாய்க்கா வெட்டி ஓடைக்குத் திருப்பணும்... மாடுகன்னுக்கு தீனி போடணும்... ராத்திரிக்கு கரண்ட் போயிடும். அதனால் சிம்னிக்கும் ராந்தலுக்கும் சீமெண்ணய் வாங்கணும்... முக்யமா யாரையாச்சும் பாத்து அஞ்சோ பத்தோ கடன் கேட்கணும்... ஜனங்க அதுக்கும் இதுக்கும் பறந்து வேலையை முடிக்கிறவரைக்கும் பொறுக்காது. கிர்ருன்னு மேகம் கூடி கரைஞ்சி அடர்த்தியா இறங்கும்.
மழைக்கு முன்னாடி, தினத்துக்கும் ஆளாளுக்கு அண்ணாந்து பாக்குறதும் மோவாயை சொறிஞ்சிக்கிட்டு உதட்டைப் பிதுக்குறதுமா கவலை கொண்ட ஜனங்கள், நிலாவை சுத்தி வளையத்தைக் கண்டதும் மழை கிட்டத்தில் இருப்பதாக பேசிக் கொண்டார்கள். ரேடியோவிலும் பேப்பரிலும் சொல்வதில் அவர்களுக்கு பிடிப்பில்லை. அவர்களுக்கென்று தனியான அடையாளங்களும் குறிகளும் யூகங்களுமிருந்தன.
''முந்தாநேத்து ராத்திரி ஒசூர்ல மம்மானியான மழை. ஒம்பது மணிக்கு புடிச்சது காலைல விடிஞ்சுதான் நின்னுச்சு. பஸ் ஸ்டாண்டுல மொழங்காலம்புட்டுக்கு தண்ணீன்னா எப்பிடி பேஞ்சினிக்கும்னு பாத்துக்கோ...'' ஒசூர் கம்பனியில் வேலைபார்க்கும் சின்னமுத்து லீவில் வந்தப்ப சொன்னதும் கந்தசாமிக்கு சுர்ரென்று வந்தது ''அக்காண்டா பைய்யா... அங்க மழ பேயாம கட்டமும் கம்பெனியும் அப்பிடியே காய்ஞ்சி தீஞ்சிருச்சு. அதுக்கொசரம் அங்க மழ பேஞ்சினுக்குது... ஏண்டா வெகாளம் கௌப்புற... காட்டுல கரம்புல பேஞ்சித் தொலைக்கமாட்டன்னுதே... மாடு கன்னெல்லாம் பில்லுக்கு மோந்து பாத்து மண்ண நக்கினு திரியுது...''
பசேல்னு பாக்க எதுவுமில்லாமல் போனது ஊரும் கொல்லைகளும். செடியும் கொடியும் பயிரும் பச்சையுமாய் தெரிந்த வட்டாரம் இப்போது செத்தையும் சருகுமாகி பழுப்புநிறத்தில் தெரிந்தது.
போன வெள்ளிக்கிழமை மத்தியானம், தோல் பொசுங்குற அளவுக்கு அடிச்சினுருந்த வெயில் திடீர்னு தணிஞ்சு குளுமையா காத்தடிச்சதும் மறுபடியும் வானம் பார்த்து யூகம் பேசினார்கள். பொசபொசன்னு கொஞ்சம் தூறல்.
வறண்டு மிதிபட்டு பொடியாகியிருந்த புழுதியில் ஈரம்பட்டதும் கும்மென்று வாசனை கிளம்பியது. சொறி படிந்த உடம்பில் தூறல்பட்டு கரும்புள்ளி செம்புள்ளி குத்தியமாதிரி தெரிந்தார்கள் சின்னப்பசங்கள். இங்கு தூறும்போதே சாணங்கொல்லையில் வெயிலடித்து மின்னியது. ''...ஹைய்யா... காக்காய்க்கும் குருவிக்கும் கண்ணாலமாம்... காக்காய்க்கும் குருவிக்கும்..." குஷாலாய் கத்தித் திரிந்தார்கள் சிறுசுகள்.
மழையை எங்கோ நெட்டித்தள்ளிவிட்டு கொஞ்சம் கொஞ்சமாய் பரவி வெயில் மட்டுமே மிச்சமாய் நின்றது.
"வேட்டி கூட நனையாத மழை பேஞ்சா வெள்ளாமையா பண்ணமுடியும்... சனியன் வந்ததுதான் வந்துச்சு கொஞ்சம் கனக்க பேஞ்சிட்டா என்னாயிடும்... இப்பிடி அஞ்சாறு தூத்தல்போட்டு கீற சூட்டையும் கௌப்பியுட்டுரும்..." இதையே வெவ்வேறுமாதிரி சொல்லி அங்காலாய்த்தார்கள். இன்னும் சிலர், யாரோ எதிரில் இருக்கிறவனிடம் பேசுகிற பாவனையில் கை காலை ஆட்டி நவரசம் கூட்டிப் பேசினார்கள். எல்லாம் பொய்த்து அண்ணாந்து பார்ப்பதை வெறுத்து குனிந்த போதுதான் சடசடத்து இறங்கியது.
ஒரு காற்று கலக்கமில்லாத மழை. கூரையடி மறைப்பில் ஒளிந்து கொண்டு வெளியே கை நீட்டி லங்கட்டியை பிடித்து பக்கத்தாள் தலையில் போட்டு மகிழ்ந்தார்கள். முறையானவர்கள் பக்கத்திலிருந்தால் ஆலங்கட்டியை எடுக்கமுடியாத இடங்களில் போட்டுவிட்டு பார்த்து ரசிக்கலாமே என்று ஏங்கினார்கள். "சளி புடிச்சிக்கும்...காய்ச்ச வரும்..." எச்சரிக்கைகளை மீறி "கத்திக்கப்பல் காயிதக்கப்பல்" விட்டு விளையாடின சிறுசுகளை பொறாமையோடும் சந்தோசத்திலும் தாவாரத்தில் உட்கார்ந்து ரசித்துப் பார்த்திருந்தார்கள்.
எவ்வளவு நேரம் ஒரே இடத்தில் இருக்கமுடியும்... சாக்குப்பையில் கொங்காடை செய்து மாட்டிக்கொண்டும் குடையோடும் பஞ்சாயத்து பிசுக்கு கொஞ்சம் பேர் வந்து சேர்ந்தார்கள். அப்பன் அம்மாளுக்கு தெரியாமல் பீடி குடிக்க வந்தவர்களே அதிகம்.
"எப்பிடியோ இப்பவாச்சும் பகவான் கண் தொறந்தானே..."
"ஏன் காய்ஞ்சு தீய்ஞ்சு கருவாடாட்டம் நாறினு கெடக்குறப்ப உங்க பகவான் பாதாளம் தோண்டி படுத்துணுந்தாரா..."
"யப்பா சாமி...உன்...இதுக்கு ஒரு கும்புடு. நீ அகடவிகடம் பேசினு திரியறவன்...உன்னான்ட நான் பேசல்றா யப்பா..."
"பேயட்டும்....பேயுட்டும்... இப்பிடி ஆறஅமர பேஞ்சாத்தான் பூமி குளுந்து மண்ணுல சேக்கம் நிக்கும்... நல்லா ஊத்து பொங்கினு வர்ற மாதிரி பேயுட்டும்..."
"மச்சான் மேல் அணப்பு நெட்டுக்கும் கல்லக்கா போட்டுட்டு மிச்சத்துக்கு கெழங்கு குச்சி ஊனியுட்டுரு. எறங்காட்டு மண்ணுக்கு சும்மா ஆட்டம் போட்டுனு வரும்..."
"இவன் ஒருத்தன்டா... ஆடு அறுக்கறதுக்கு மின்னயே..."
"அதான் ரெண்டு மூணு ஒழவு மழை பேய்ஞ்சிருக்கில்ல..."
இப்படியாக தொடங்கிய வாத பிரதிவாதங்கள் கைவசமிருந்த பீடியும் பொகலையும் முடியும்வரை நீண்டு முடிந்தது. மழையும் நிற்கவில்லை கரண்ட்டும் வரவில்லை. தட்டுத்தடுமாறி இருட்டுக்குள்ளேயே புழங்கி பழகி அடங்கிப் போனது ஊர் முன்னிரவில்.
முதல் ரெண்டுநாள், விட்டுவைத்திருந்த கூலிபாக்கி வாங்கியும், கையிலிருந்த சொச்சத்திலும் காலம் ஓடியது. இப்ப நின்னுடும் அப்புறம் நின்னுடும்னு பார்த்து பார்த்து ஒன்பது நாளாயிடுச்சு.
சூட்டுப்பானையில் விழுந்த மை, ஆரம்பத்தில் கிடைத்த இதத்தில் சந்தோசப்பட்டு மயங்கி கிடந்து, சூடேற சூடேற வெந்து தவித்ததை சில பெரிசுகள் மழையோடு ஒப்பிட்டு கதை சொன்னார்கள். ஈரத்தில் நமுத்து சொதசொதக்கும் கூரையில், அடுப்படியிலிருந்து எழும்பி தடம்பிடித்து உயர்கிற புகையைக் கண்டு " எங்கூடு பீடி குடிக்குது..." " எங்கூட்டு மேல ரயிலு ஓடுது" என்று கை தட்டி எகிறிகுதித்து விளையாடின சிறுசுகள் இப்போது வெளியே வருவதில்லை. வேட்டி எதையாவது இறுக்கிப் போர்த்திக்கொண்டு அடுப்புத்திட்டு கனப்புக்கு சுருண்டு கிடந்தார்கள். ஈரவிறகில் கஞ்சி காய்ச்சுவதும் களி கிண்டுவதும் பெரும்பாடாகி கண்ணை கசக்கிக்கொண்டு விறகோடு குமைந்தார்கள் பொம்பளைகள். தூங்கிக் கொண்டிருந்தவர்களை தூக்கிப்போய் எங்கோ மழைநாட்டில் வீசிவிட்ட மாதிரி வெறுப்பான வெறுப்பாகி விட்டது பொழப்பு.
கூலிநாழிக்குப் போன ஜனங்களை வீட்டோடு முடக்கியாச்சு. கொட்டுற மழையில் என்ன வேலை பார்க்க முடியும்... ஒருத்தர் முகத்தை இன்னொருவர் முறைத்து என்ன வரும்... மழை நின்னாகணும். எதுக்கும். எல்லாருக்கும். எங்கும் புழங்க முடியவில்லை. பைனான்ஸ்காரர்கள் தினக்கந்து மட்டும் தான் கொடுப்பது வழக்கம். ரொம்பவும் நம்பிக்கையானவங்களா இருந்தா மட்டுந்தான் வாரக்கந்து, மாசக்கந்து. இப்ப அதுக்கும் அல்லாட்டம். போனவாரம் வாங்குன கந்துக்கு வட்டி பணத்தை இந்த மழையிலயும் குடைபுடித்து வந்து கேட்டார்கள். வட்டிக்கு வட்டி ஏறியது. ரசிப்பின் வட்டத்திலிருந்து வசவின் கோடுகளுக்குத் தாண்டியது மழை. மாதம்மாளோ வசவின் எல்லைக்கே தாவிவிட்டாள்.
"கெரகம்... ஒண்ணா காய்ஞ்சி கெடக்குது. இல்லங்காட்டினா பேய்ஞ்சி கெடுக்குது... சீவனத்த கெடுக்குற சிங்காரம் எதுக்கு...கண்ணு, வெளிய எட்டிப் பாரு சாமி..."
வாசப்படியில் மறைப்புக்கு கட்டியிருந்த தெத்துப்படலை விலக்கி எட்டிப்பார்த்தான் சீனு.
"யம்மோவ்...இருட்டினுக்கீதுயா..."
கட்டாந்தரையிலிருந்த மாடு குளிர்தாளாமல் ஒரு சிலிர்ப்பு சிலிர்த்து இவனைப் பார்த்தது. வாலை ஒரு கோணலா முறுக்கி நிட்டி உடம்பே சிறுத்து குறுகின மாதிரி நின்றிருந்தது.
"முன்னாடியெல்லாம் தண்ணி மேல உழுந்தா உருண்டுனு கீழ வந்துரும். அப்பிடி மினுமினுன்னு நெகப்பாயிருந்த மாடு இப்பிடி டொக்குடொக்காயிருச்சு... ம்ஹ¥ம்... ஆனானப்பட்ட தெக்கித்தியான்வூட்டு மாடுங்களே மேய்ச்சலும் தீனியுமில்லாம 'பட்' ஆடாயிட்டப்புறம் இதெல்லாம் எங்கித்தி மூலைக்கு..". என்று நினைத்துக் கொண்டான்.
இவன் நாலாவது படிக்கும்போது தான் சினையாக வந்தது. ஒரு பட்டி நெறைய மாடு இருந்தது தாத்தனுக்கு. மகன்களுக்கு சொத்து பிரிக்கிறப்ப மகளுக்குன்னு சீதனமா கொடுத்தது. வந்த மூணாம் மாசத்தில் கன்னு போட்டது. கெடா கன்னுதான். அப்பத்தான் இவன் மொதமொதல்ல சீம்பால் தின்னது. அதுக்கப்புறம் மாட்டோடும் அதன் பாலோடும் சேர்ந்தே அவனுக்கு எல்லாம் நேர்ந்தது. பிடித்துமிருந்தது.
படுக்கையிலிருக்கிறப்பவே சொம்புக்குள் "சொய்ங் சொய்ங்'னு பால் இறங்குவதும் ரெண்டு மூணு இழுப்புக்கப்புறம் சொர் சொர்னு நுரைக்குள்ள பீச்சியடிக்கிறதும் கேட்கும். பால் கறக்கறது அவங்கம்மா வேலை. விட்டுக்கு வச்சது போக, மீதியை கொண்டு போய் டீக்கடைக்கு ஊத்துவது இவன் வேலை. திரும்பி வர்றப்ப மோர் சிலுப்பும் சத்தம் கேட்கும். அவசரமாய் ஓடி பக்கத்தில் நின்னுக்கவான். அவனும் பல நாள் சொல்லிப்பார்த்தும் முடியவில்லை. ம்ஹ¥ம்... மத்துக்காம்பில் சுற்றியிருக்கும் கயிறு முன்னும்பின்னும் சுற்றிச்சுழன்று அம்மாவின் கைவாகுக்கு இழைகிறபோது எழும்புகிற அந்த சத்தத்தை இவனால் சொல்லிப்பார்க்கவே முடியலை.
ஒவ்வொரு சிலுப்புக்கும் ஒவ்வொரு சத்தம். அதுக்கேத்தாப்ல அம்மா உடம்பும் ஆடும். ரொம்பநாளாய் தயிர் கத்துகிற சத்தம் இதுன்னு நினைத்திருந்தான். அப்புறம் மத்து மீது சந்தேகம். கொஞ்சநாள் கழித்து அம்மா வாயை கவனித்தான். அவள் சில நேரங்களில் அமைதியாகவும் சில நேரங்களில் இவனோடு பேசியபடியும் சிலுப்பினாள். கயிறு, மத்து, சட்டி, தயிர், பிரிமனை, அம்மா இழுக்கும் லாவகம் எல்லாம் சேர்த்தே இந்த சத்தம்னு புரிய நெடுநாளாகிவிட்டது. சிலுப்ப சிலுப்ப சோப்பு நுரையாட்டம் குமிழியிட்டு அப்பிடியே கொஞ்சம் கொஞ்சமா கெட்டியாகி சடார்னு உடைஞ்சி பதமாகி திரள்கிற வெண்ணையில் மத்து மின்னும். மெதுவா உருட்டி தண்ணிக்குள்ளயோ மோர்லயோ விட்டதும் பந்தாட்டம் மிதக்கும் இவனிடம் தப்பி மிச்சமிருந்தால். நெய்யும் அப்படித்தான். காய்ச்சினால் சும்மா அப்படியே ஊரையே கூப்பிடும்.
சனி ஞாயிறில் மேய்க்கிறதும், கடிச்சிக்கிட்டிருக்கிற 'தொனசி'களை பிடித்து கிள்ளி நெருப்பில் போடுவதும், கழுவிவிடுவதும் பிடித்தமான வேலை. கழுவினதும் வெயிலில் நிப்பாட்டிவிடணும். இல்லேன்னா இழுத்துக்கிட்டு ஓடி குடுகுடுன்னு உடம்பை ஒரு ஆட்டுட்டி சிலுக்கும். நடுங்குறதாட்டம் பாவலா செய்யும். கைவச்சு நீவ ஆரம்பிச்சதும் 'ஏமாந்துட்டியா'ன்னு சும்மா சுகமா நிக்கும். இப்ப பாவம் மழையில தொப்பலா நனைஞ்சு...
"ஏ யம்மா, மாட்டுக்கு குளுருதாட்டங்கீதுயா... புடிச்சினு வந்து உள்ளாற கட்டுட்டுமாயா..."
"ஆங், அத்த புடிச்சினு வந்து வூட்ல கட்டிப்புட்டு அது மடியில பூந்து படுத்துக்க... ஒங்கொப்பன் ஒம்புது தூலம் போட்டு கட்டினுக்கீற இந்த பங்களாவுல அதொண்ணுதான் பாக்கி... எனுக்கு குளுருதுடா சீனுன்னு இவனாண்ட வந்து அது சிணுங்குச்சாம்... ஆளப்பாரு அவனப் பாரு... இங்கயே வூடு பூரா ஓதம் ஏறிக்குனு வரகம்பில்லு ஒதறிப்போட்டு படுத்துணுக்கீறம். இதல அதக் கொண்ணாந்து கட்டி சாணியிலயும் கோமியத்துலயும் சீப்பட்டுனு இருக்கணுமா... படல சாத்தினு உள்ளாற வாடா..."
பாதத்திலிருந்த சேத்துப்புண்ணை வரட்டு வரட்டுனு சொறியும் ஆத்திரத்தில் கத்திய அம்மா மேல் கோபம் கோபமாய் வந்தது. இப்ப திருப்பி ஏதாச்சும் பேசினால் அடி விழுந்தாலும் விழும்.
பால் நின்னதிலிருந்து இந்த அம்மா இப்படித்தான். கவனிப்பும் கரிசனமும் காணாமல்போய் வெறுப்பும் எரிச்சலும் காட்டுகிறாள். அப்பன் இருந்திருந்தால் இன்னேரத்துக்கு 'புடிச்சினு வாடா சீனு'ன்னு சொல்லியிருக்கும். மாட்டுக்கும் மனுசனுக்கும் வித்தியாசம் பாக்கத்தெரியாது அப்பனுக்கு.
"கறக்க கறக்க கைதான் வலிக்கும். ஆறு ஈத்து போட்டப்புறம் அதுந்தான் என்னா பண்ணும்... தாயிக்கே மாரு சுருங்குறப்ப மாடுமட்டும் சொரக்குமா"...ன்னு பரிஞ்சு பேசும் - எல்லாக் கன்னும் கெடாவாகி ஜாதி விருத்தி காத வருத்தம் இருந்தாலும்.
"காத்தால போன மனுசன் இன்னேரங்காட்டியும் வூடு வந்து சேரலன்னா என்னாத்த சொல்றது. போனா போன எடம், நின்னா நின்ன எடம்... ஆச்சு, செத்தநேரம் போனா பைனான்சுக்காரன் வருவானே நான் என்னா ஜவாப்பு சொல்றது... பொம்மனாட்டி எப்பிடி சமாளிப்பாள்னு ஒரு ரோசனை வேணாமா ஆம்பளைக்கு. ஊரு ஒலகத்துல ஒவ்வொரு ஆம்பளையும்..." நீட்டி முழக்கி புலம்பிக் கொண்டிருந்தவள், படலை தள்ளிக்கொண்டு நுழைந்த புருசனைக் கண்டதும் விசுக்கென்று நிறுத்திவிட்டாள்.
"ஏப்பா மாதேசு, ஏன் மழையில வெளிய நின்னுன்குனு... உள்ளாற வா... அட பரவால்ல வா... வாப்பா... இந்தா புள்ள, அந்த மனையை எடுத்து இப்பிடி போடு..."
வாசப்படிக்கு எட்டிப்பார்த்து அப்பன் கூப்பிடுவது யாரை என்று தெரியாமல் முழித்தான் சீனு. புது ஆள்.
"அந்த ஆளு போனதும் மாட்டை உள்ளாற கட்டணும்னு அப்பனாண்ட சொல்லணும்".
"உனக்கு தெரியாதது ஒன்னுமில்லீண்ணா... இப்ப சரக்கோட போனாலியும் மானம் காய்ஞ்சாத் தான் மொதுலு கைக்கு வந்து சேரும். ரொம்ப நெருக்கடின்னு சொல்றதால தான் நான் அட்வான்ஸ் குடுக்க ஒத்துக்கினேன்..."
"என்ன பண்றது மாதேசு... நானும் உருண்டு கொஞ்சும் பொரண்டு கொஞ்சம் பொரட்டிரலாம்னு தான் இருந்தேன். எங்கயும் சிக்குல. பிரசரண்டு கிட்டயும் ஒன்னும் பேரல. நாயி எலக்சனப்ப பேசின மாரியா பேசறான்... வெதைக்கு வச்சிருந்த சோளத்த குத்தி ரெண்டு நாளா கஞ்சியாவுது. பைனான்ஸ்காரன் வந்தான்னா வாயில வந்ததெல்லாம் பேசுவான்... மானம் மரியாதய வுட்டுட்டு மத்தது எதுக்குன்னு தான் விக்கிறேன்... பாத்து சொல்லு..."
குரல் உடைந்து தன்னையே அறுத்து தராசில் நிறுத்தி விலை பேசுகிற தொனியில் புருசன் பேசியதன் அர்த்தம் புரிந்தது மாதம்மாளுக்கு.
"சரிண்ணா, முக்கால்ல முடிச்சிக்கலாம்னா..."
"...தா பாரு மாதேசு, எத்தினி பேசினாலயும் ஒண்ணு தான். தின்னா பத்து ரூவா நீ தின்னு இல்ல நான் திங்கறேன். குறுக்கால தரகன் எதுக்குன்னு தான் நேரா பேசறோம். கொஞ்சம் ஏறி வா..."
"இந்தாண்ணா அட்வான்ச புடின்னா, ரவுண்டா முடிச்சிக்கலாம்..."
"மீதி எப்ப..."
"மானம் காய்ஞ்சா, ஒரு வாரமா இல்லாததுக்கு ஞாயித்துக்கெழம அறுப்பு கொஞ்சம் அதிகமாத்தான் உழும். முடிஞ்சா தள்ளியுடறேன். அன்னிக்கு சாயந்திரமே மீதிய வாங்கிக்க. அதுல என்னா இருக்கு. ஆனா கூட கொஞ்சம் ஜாஸ்தியாத் தான் ஒத்துக்கிட்டேன்னு தோணுது. அங்க பாருங்க பரியெலும்பெல்லாம் தூக்கிணுக்கீது. வாங்கினுப்போற ரொணத்துக்கு தோல் விக்கிறதுல தான் அஞ்சோ பத்தோ மீறும்...''
''சரி, காலைல வந்து புடிச்சினு போ. இன்னிக்கு வாணாம், வெள்ளிக்கெழமை. வூட்டாண்ட கீற லச்சுமிய ஓட்டறது நல்லதில்ல...''
"இதப் புடிங்க..."
நெடுநேரமாய் நீட்டிக் கொண்டிருந்த அட்வான்சை வாங்க ஒருவருக்கும் கை நீளாமல் நடுங்கிக் கொண்டிருந்தது.
பால் கரக்கும் சத்தமும் மோர் சிலுப்பும் சத்தமும் பேரோசையாகி காதடைக்க, தொங்கும் உரியில் கறுத்துக் கிடக்கும் பழைய நெய்ச்சட்டியை வெறித்துப் பார்த்திருந்தான் சீனு.
வெளியே மாடு கத்திக் கொண்டிருக்கிறது.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அழும்பு
- விவரங்கள்
- ஆதவன் தீட்சண்யா
- பிரிவு: சிறுகதைகள்