தமிழகம் முழுவதும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், பீட்டா அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்ற பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. போராட்டம் திட்ட மிட்ட முறையில் தமிழகம் முழுவதும் பரப்பப்பட்டுள்ளது. பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்பதோ, ஜல்லிக்கட்டுக்கு ஒரு அவரசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்பதோ ஒரு பெரிய கோரிக்கைகள் இல்லை. நிச்சயமாக மத்திய அரசால் இதைச் செய்ய முடியும். ஆனால் செய்வதற்கான வாய்ப்பு என்பது பல மடங்கு குறைவாகவே இருக்கின்றது. நாடு முழுவதும் 30 லட்சத்து 81 ஆயிரத்து 873 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உள்ளதாக சி.பி.ஐ உச்சநீதிமன்றத்தில் 2015 செப்டம்பர் மாதம் தெரிவித்துள்ளது. இத்தனை லட்சம் என்.ஜி.ஓவில் ஒன்றுதான் இந்த பீட்டா அமைப்பு. கடந்த டிசம்பர் மாதம் கூட 20000 என்.ஜி.ஓக்களுக்கு மத்திய பி.ஜே.பி அரசு தடை விதித்தது. சென்ற ஆண்டு நவம்பர் மாதம் முஸ்லிம் மத போதகர் ஜாகிர் நாயக்கின் தொண்டு நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து நிதி பெற தடைவிதிக்கப்பட்டது. தொண்டு நிறுவனங்களை அனுமதிப்பதற்கும், அதைத் தடை செய்வதற்கும் உள்ள அரசியல் தொடர்பை நாம் புரிந்து கொள்ளாதவரை இது போன்ற கோரிக்கைகளை வைத்துக் கொண்டுதான் இருப்போம்.

jallikattu tamils

நிச்சயம் மத்திய அரசு பீட்டாவைத் தடை செய்யாது. பீட்டாவில் நிரம்பியுள்ள பார்ப்பன மேட்டுக்குடி அம்பிகள் பி.ஜே.பியின் மதவாத அரசியலுக்குப் பக்க வாத்தியம் வாசிக்கின்ற பேர்வழிகள். மாடுகள் மீதான பி.ஜே.பியின் இந்தக் கரிசனமும் பீட்டாவின் கரிசனமும் ஒன்றுபடும் புள்ளி என்பது பார்ப்பனியம் மட்டுமே. அதைத் தாண்டி வேறு எந்த நோக்கமும் பி.ஜே.பிக்கும் இல்லை, பீட்டாவை ஆக்கிரமித்து இருக்கும் அம்பிகளுக்கும் இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் தற்பொழுது தலையாய பிரச்சினையாக மாற்றப்பட்டிருக்கும் ஜல்லிக்கட்டு, பீட்டாவையும் பி.ஜே.பியையும் ஆக்கிரமித்து இருக்கும் பார்ப்பனியத்துக்கு எந்த வகையிலும் குறைந்தது இல்லை. முன்னதின் நோக்கமும், பின்னதின் நோக்கமும் ஒன்றேதான். அது சாதிய மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ளுதல் என்பதுதான். மத்திய அரசு தமிழ்நாட்டின் மீது பல பண்பாட்டுத் தாக்குதல்களைத் தொடுத்திருக்கின்றது. இந்தி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு, நீட் நுழைவுத் தேர்வு என்று சொல்லிக்கொண்டே போகலாம். இது எல்லாம் பொதுப்பிரச்சினைகள். அனைத்துத் தரப்பு மாணவர்களும் பாதிக்கப்படும் பிரச்சினை. அதே போல காவிரி, முல்லை பெரியாறு, கெயில் எரிவாயுக்குழாய் பதிப்பு போன்றவையும் ஒட்டு மொத்த தமிழகத்தின் வாழ்வாதாரத்தையும் சூறையாடும் பொதுப்பிரச்சினைகள். இதற்காக எல்லாம் விவசாய அமைப்புகள், சில அரசியல் கட்சிகள் போன்றவற்றைத் தாண்டி இந்தப் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கவில்லை. இது போன்ற போராட்டங்களில் மாணவர்களின் பங்களிப்பு என்பது அவ்வளவாக இல்லை என்று உறுதியாக சொல்ல முடியும்.

ஆனால் ஜல்லிக்கட்டு என்பது ஒரு சிறிய ஆதிக்க சாதியின் ஆண்டைத் திமிரை காட்டுவதற்காக மட்டுமே நடத்தப்படக்கூடிய ஒரு விளையாட்டு. இது நடக்காமல் போனால் அந்தச் சிறிய கூட்டத்திற்கு ஏற்படக்கூடிய கெளரவக் குறைச்சலை தாண்டி வேறு எதுவும் நடந்துவிடப் போவதில்லை. தமிழகத்தின் தலையாய பிரச்சினைக்கெல்லாம் தங்களது ஆதரவை தராத மாணவர் குழாம்கள் தற்போது இந்த ஆதிக்க சாதிப் பண்பாட்டை காப்பாற்றுவதற்காக களத்தில் இறங்கி இருப்பது உள்ளபடியே அதன் அரசியல் வறட்சியையும், மாணவனாய் இருந்தாலும் தானும் ஆதிக்க சாதி வெறியர்களின் நண்பன் என்பதைத்தான் காட்டுகின்றது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் இது போன்ற ஆதிக்க சாதி மனோநிலையில் கலந்துகொண்டவர்கள் என்பது இதன் பொருளல்ல. ஏனென்றால் இதைப்பற்றி இன்னும் விரிவாக நாம் உள்நுழைந்து பார்க்க வேண்டி இருக்கின்றது. பல்வேறு கல்லூரிகளில் உள்ள மாணவர்கள் ஒட்டுமொத்தமாக வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு இருக்கின்றார்கள். இது எப்படி சாத்தியம் என்று உங்களுக்குத் தெரிகின்றதா? நிச்சயமாக மாணவர் அமைப்புகள் உள்ள கல்லூரிகளில் படித்தவர்களுக்கு இந்த விடயம் எளிதில் விளங்கும்.

ஒவ்வொரு கல்லூரியிலும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மாணவர் அமைப்புகள் இருக்கும். CPM, CPI, திமுக, அதிமுக, மதிமுக, பாமக, தேமுதிக, ஆர்.எஸ்.எஸ் சின் ABVP போன்றவை மாணவர் அமைப்புகளை வைத்திருக்கின்றன. இப்போது தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்புகளைத் தவிர மற்ற எல்லா மாணவர் அமைப்புகளும் தங்களின் கட்சி நிலைப்பாடான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு என்ற நிலைப்பட்டை எடுத்திருக்கின்றன. கல்லூரியில் மாணவர் அமைப்புகளின் பலம் என்பது என்ன என்று நமக்கு எல்லோருக்கும் தெரியும். மாணவர் தலைவன் சொல்லிவிட்டால் அதை வாய்மூடி செயல்படுத்துவதுதான் மற்ற மாணவர்களின் ஒரே வேலை. மாற்றுக் கருத்து என்ற பேச்சுக்கே அங்கு இடமில்லை. ஓட்டுக்கட்சிகளை சேர்ந்த மாணவர் அமைப்புகள் தங்கள் சுயநல நோக்கத்திற்காக வேண்டுமென்றே ஒட்டுமொத்த மாணவர்களையும் திட்டமிட்டு போராட்டக் களத்திற்கு அழைத்து வந்திருக்கின்றார்கள். இந்தப் போராட்டம் அரசியல் கட்சிகளின் தலையீடு இன்று நடைபெறுகின்றது என்பதெல்லாம் சுத்த ஏமாற்று. மாணவர்களைத் திரட்டுவதற்கு, அவர்களை பேருந்துகளில் அழைத்து வந்து சாப்பாடு , தண்ணீர் மற்ற பிற சேவைகளை வழங்குவதற்கும் தேவையான நிதி என்.ஜி.ஓக்கள், மக்கள், சில அரசியல் கட்சிகளால் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

எவன் பொண்டாட்டி எல்லாம் பத்தினியோ, அவன் கண்ணுக்கு மட்டும்தான் கடவுள் தெரிவார் என்று ஒரு படத்தில் வடிவேலு சொல்வார். அந்த நிலைமைதான் தற்போது தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கின்றது. எவன் எல்லாம் ஜல்லிக்கட்டை ஒட்டுமொத்த தமிழகத்தின் பண்பாடாக வரித்துக்கொண்டு அதை ஆதரிக்கின்றானோ, அவன் தான் தமிழன் என்ற சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டார்கள். அதனால் எவன் எவனோ ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தருகின்றான். தேவர் சாதிவெறியன் வைரமுத்து, பாரதிராஜா, கருணாஸ் இன்னும் அந்த முக்குலத்தோர் சாதியில் இருந்து திரைத்துறையில் வலுவாக காலுன்றி இருக்கும் பலபேர் இதற்காக குரல் கொடுத்து இருக்கின்றார்கள். இவர்கள் மட்டும் அல்லாமல் பெண்களைப் பற்றி மிகக் கேவலமாக, வக்கிரமாக பாட்டெழுதிய சிம்பு, சிவகார்த்திகேயன், சூர்யா, விஜய் போன்ற தேவர் சாதியைச் சேராதவர்களும் குரல்கொடுத்து இருக்கின்றார்கள். இவர்களின் நோக்கம் எல்லாம் மிகத் தெளிவானது, அது ஆதிக்க சாதிகளை பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதுதான். அது அரசியலுக்கும் நல்லதல்ல, சினிமா நோக்கில் பார்த்தால் வருமானத்திற்கும் நல்லதல்ல என்பதுதான். ஜல்லிக்கட்டுக்காக இன்று களத்தில் இறங்கி குரல் கொடுக்கும் ஒவ்வொருவனின் கடந்தகால யோக்கியதையும், அவன் தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த துரோகத்தையும் நம்மால் மிக விரிவாகவே பட்டியல் இடமுடியும்.

தமிழகம் முழுவதும் திரளாக போராட்டத்தில் பங்கெடுத்திருக்கும் மாணவர்களைக் குறிவைத்து பல லெட்டர்பேட் அமைப்புகள் களத்தில் இறங்கியுள்ளன. அவர்களுக்குக் கொழுத்த தீனி மாட்டி இருப்பதாகவே நினைக்கின்றார்கள். கட்சி ஆரம்பித்து 20 வருடம் 30 வருடம் ஆனபின்பும் கூட ஊருக்கு பத்துபேரைச் சேர்க்க துப்பிலாத உதவாக்கரை அமைப்புகள் எல்லாம் ஜல்லிக்கட்டை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி ஆள் சேர்க்க நாக்கை தொங்க போட்டுக்கொண்டு அழைகின்றன. மார்க்சிய- லெனினியம் பேசும் ஒரு பார்ப்பன கம்யூனிஸ்ட் கட்சி தானாக முன்வந்து மஞ்சுவிரட்டை நடத்தியுள்ளது. ஏற்கனவே செட்டியார் சாதி வெறியன் பழ.கருப்பையாவின் பட்டா பட்டி டாயரை துவைத்து, அதற்கு இஷ்திரி போட்டுக் கொடுத்து அழகு பார்த்த அயோக்கியர்கள் தாங்கள் எப்போதுமே ஆதிக்க சாதிவெறியர்களின் நண்பன் என்பதை அம்மணமாகக் காட்டியுள்ளனர். கூடிய விரைவில் கட்சியின் தலைமைப் பார்ப்பனன் தன்னுடைய பார்ப்பன ஊத்தவாயால் அருளிய 'தமிழ் மக்கள் ஏன் மஞ்சுவிரட்டை ஆதரிக்க வேண்டும்?' என்ற தலைப்பில் ஒரு ஒளிப்பேழையை நாம் எதிர்ப்பார்க்கலாம். ஜல்லிக்கட்டு, ஏறுதழுவுதல், இல்லை மஞ்சு விரட்டு தமிழர்களின் பண்பாடு என்று சொல்பவர்கள் அதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும்.

இப்படி பல்வேறு பெயர்களில் நடைபெறும் இந்த விளையாட்டுகள் தமிழகத்தில் எங்கு எங்கு நடைபெறுகின்றது? எத்தனை ஆண்டுகளாக நடைபெறுகின்றது?. அதில் எந்த எந்த சாதிக்காரர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகின்றார்கள்? குறிப்பிட்ட சாதிக்காரர்கள் மட்டும் தான் அனுமதிக்க படுகின்றார்களா? என்பதைப் பற்றியெல்லாம் கள ஆய்வு செய்து , இது ஒட்டுமொத்த தமிழகத்தின் பண்பாடு என்பதை நிரூபித்துவிட்டு பின்பு ஜல்லிக்கட்டு, ஏறுதழுவுதல், மஞ்சு விரட்டு என எப்படியாவது அதற்கு ஒரு பெயர் வைத்து ஆதரவு தரட்டும். ஒட்டுப்பொறுக்கி அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு தர ஆதாரங்கள் தேவையில்லை. ஆனால் ஒரு பெரியாரியவாதியோ, மார்க்சியவாதியோ அப்படி பொத்தாம் பொதுவாக ஆதரவு கொடுத்துவிட முடியாது. பெரியாரியமும், மார்க்சியமும் உண்மைகளின் மீது எழுப்பப்பட்டது. அது போலித்தமான உண்மைக்கு மாறான தரவுகளை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கின்றது. சாமானிய மக்களின் பண்பாடு என ஜல்லிக்கட்டு, ஏறுதழுவுதல், மஞ்சுவிரட்டு போன்றவற்றை ஆதரிப்பவர்கள் உண்மையில் பீட்டா அமைப்பைப் போலவே, ஆர்.எஸ்.எஸ் பிஜேபியைப் போலவே சாமானிய உழைக்கும் கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மிகப்பெரிய எதிரிகள் ஆவர்கள். அவர்களின் ஆதிக்க சாதி ஆதரவு மனோபாவம் தான் அவர்களை பின் நின்று இயக்கும் ஆதார சக்திகளாக உள்ளன.

டெல்லியில் ஒரு நிர்பயா பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட போது இந்தியாவே கொந்தளித்தது. ஆனால் அதே ஆண்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தலித் நிர்பயாக்களுக்காக இந்திய சமூகம் தனது முணுமுணுப்பைக் கூட தெரிவிக்கவில்லை. இது தான் இந்திய சமூகத்தில் புரையோடிப்போய் இருக்கும் சாதி ஆதிக்க மனோபவம். ஒன்றுக்கு ஆதரவு, ஆதரவு இன்மை என்பது சாதியின் அடிப்படையில் இருந்தே தோன்றுகின்றது. தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட வன்கொடுமைகள் பற்றிய மிகப்பெரிய பட்டியலே உள்ளது. சென்ற ஆண்டு கூட 100க்கும் மேற்பட்ட சாதி ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளன. ஆனால் இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களின் பலபேர் இதை குறைந்த பட்சம் கண்டிக்கக் கூட இல்லை. உண்மையில் சொல்லப்போனால் இப்படியான சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெறுகின்றது என்பது கூட அவர்களுக்குத் தெரியாது என்பதுதான் உண்மை.

மோசடிகளின் மீது கட்டமைக்கப்பட்ட இந்தப் போராட்டத்தால் யாருக்குப் பயன் என்றால், நிச்சயம் அது தமிழகத்தில் உள்ள ஆதிக்க சாதிவெறியர்களுக்குத்தான் பயன். ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு,பிஜேபி எதிர்ப்பு, இந்திய மேலாதிக்கத்திற்கு எதிரான எதிர்ப்பு போன்றவை எல்லாம் இன்று புதிதாக உற்பத்தி செய்யப்பட்ட எதிர்ப்புகள் கிடையாது. இது எல்லாம் ஏற்கெனவே மிக வலுவாக தமிழ்நாட்டின் தனித்த அடையாளமாக பல ஆண்டுகளாக உள்ளவைதான். இதை ஜல்லிக்கட்டுக்கான தடையைப் பயன்படுத்தித்தான் உசுப்பிவிட வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதாக இருந்தாலும் ஒரு பீட்டாவை கழித்துவிட்டு மீதமுள்ள லட்சக்கணக்கான அரசு சாரா தொண்டு நிறுவனங்களை பற்றி பேசாமல் இந்தக் கோரிக்கையை முன்னெடுப்பது மிக மலிவான அரசியல் கோரிக்கையாகும். ஜல்லிக்கட்டுக்கான தடையை வைத்து தமிழகத்தில் பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்புப் போராட்டம் முன்னிலைபடுத்தப்படுவது மிகவும் துரதிஸ்டவசமானதாகும்.

- செ.கார்கி

Pin It