நேரம்...மாலை 6.30

அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்...

மாலை மயக்கம்.... தயக்கம் உதறிய..... இரவை, இன்னும் சற்று நேரத்தில் பரவச் செய்யும் மாயங்களை ஆங்காங்கே விதைத்துக் கொண்டிருந்தது... காற்றில்லா வெளி எங்கும்... தீர்க்கமற்ற உருவங்களை சுமந்த சப்தம்.... அவர்களின் பெரு மூச்சாகவும்..எதிர் வரும் டென்னிஸ் பந்தை ஓங்கி ஓங்கி அடிக்கையில் எழுப்பும்.... நுரையீரல், காற்றைத் தள்ளும் வார்த்தைகளற்ற மொழி கொண்ட சத்தமாய் மாறி கொண்டே இருக்க..... வித்ரனும்... மாயனும் விளையாடிக் கொண்டிருந்தார்கள்...

woman scaredவேகம் கூடியது.. இருவருமே சளைத்தவர்கள் இல்லை.. எதிலும்.. அதுவும்.. இதில்.. ம்ஹும்.. விட்டுக் கொடுக்கவே முடியாத நண்பர்கள்.. படிக்க வந்த இடத்தில் சேர்ந்து கொண்ட இதயங்கள்....இருப்பினும்.. சுயம் கொண்ட தனித் தன்மையுடையவர்கள்.. அடிக்க அடிக்க... கதறிய பந்தின் வலிமையில்.... அவர்கள்... வியர்த்து, ததும்பி.. உற்சாகத்தை மண் மீது தெளித்து.. புதைத்து.. பண்பட்ட மண் கண்ட மேடுகளின் உயிர்ப்புகளை சுமந்தவண்ணம்.. தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.....வித்ரன், அடித்துக் கொண்டேயிருந்தான்..... மாயனிடம் இருந்து வரும் பந்து..நொடிகளில் பந்துகளாய் ஆக.... ஆனாலும்.. கண்கள் சுருக்கி.. மூச்சு பிடித்து தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்த வித்ரன்..... சற்று கணத்தில் சோர்வடையத் துவங்கினான்...எதிர்ப்பக்கம்.. நிதானமாக வந்த எப்போதும் போலான டென்னிஸ் பந்தை எப்போதும் போல அடித்து வெற்றி வாகை சூடும் நிலையில் இருந்தான்..மாயன்...

நொடிக்கும் குறைவான நேரத்தில் வந்து விழுந்த பந்து.. ஒன்றாய்.... இரண்டாய்..... நான்காய்.... ஆறாய்.... எட்டாய்..... பத்தாய்.... அவன் மீது வழிந்து அவனை முழுக்க குறி வைத்து வந்து விழ.... சட்டென்று பேட்டை தவற விட்டு.. கத்திக் கொண்டே கீழே விழுந்தான் வித்ரன்.... எதிர் திசையில் கடைசியாக வித்ரனிடம் இருந்து வந்த பந்தை எப்போதும் போல... இயல்பாக அடித்த மாயன்...." என்னடா இவன்.... சோர்ந்து இப்டி விழறானே?" என்று முணு முணுக்கும் மூளையில் பர பரவென்று ஓடி வந்து எதிர் திசையில்.. அவன் அருகே நிற்க..... அப்போதும்...தலையைப் பிடித்துக் கத்தி கொண்டிருந்தான்... வித்ரன்...

"என்னடா.... மாப்ள.. என்னாச்சு..?... தலைல கீற பந்து பட்ருச்சா..?".. என்றபடியே அவன் அருகே காலை மடக்கி அமர்ந்த மாயன் அவன் தலையை மெல்ல பிடித்து பார்வையாலும்.. உடல் மொழியாலும் விசாரிக்க, அதற்குள் ஏதோ சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்து....மிர்ணாளினியும்....நிஷாந்தினியும் .... வெளியே ஓடி வந்தார்கள்...நண்பர்கள் மூவரும் சுற்றி நிற்க..... மூவரையும் பார்த்து மனம் புரியாமல் கண்கள் சிவக்க... தலை சுற்றிய முகத்தை மேலும் சுற்றும்.. பார்வையோடு.. பேச்சிழந்து பார்த்துக் கொண்டேயிருந்தான் வித்ரன்..... பேயைப் பார்த்தவன் போல...

மூவரின் பார்வைக்கும்.....அவனே பதிலும் மெல்ல கூறினான்..... நா வறண்ட நொடியை எச்சிலால் நிரப்பிய கனத்தோடு...

"இல்....லடா... ஒ......ரு....... 20, 30 டென்னிஸ்.................. பந்து என்னை பார்த்து உன்கிட்ட இருந்து வந்துட்டே இருந்துச்சுடா......" என்றான்...

பக்கத்து மரத்தில் இருந்து ஒரு கொத்து சருகுகள்... ஒவ்வொன்றாக தன்னை துண்டித்துக் கொண்டு காற்றினில் தவழத் துவங்கின.. திடும்மென எங்கிருந்தோ வந்த காற்று... அவர்களை ஒரு நிழல் போல சுற்றத் துவங்கியது ...

அடுத்த கணம் மூவரும் ஒருவரை ஒருவர்.. பார்த்துக் கொண்டும்.... "என்னடா. இப்டி காத்து அடிக்குது" என்று முணங்கியபடியும்...வித்ரனை ஒருசேர பார்த்தார்கள்......

அங்கு சூழ்ந்த ஒரு மாதிரி, மௌனத்தை கலைக்கும் படியாக யோசித்த மாயன் பேசத் தொடங்கினான்...

"நத்திங்டா.... சம்டைம்ஸ் மூளை பண்ற குளறுபடி இது... ஒரு பஸ் தான் எதிரே வரும்.. ரெண்டு மூணு வர்ர மாதிரி காட்சி பிழை தோணும்.. அது சகஜம் டா.. சைண்டிபிக்கா பார்த்தா.. இந்த மாதிரி குளறுபடி நிறைய உண்டு...நீ ஜெய்க்கனும்னு வெறியா விளையாடின இல்ல... அதான்... ஸ்ட்ரெஸ் அதிகமாகி அப்டி தோனிருக்கு... லைட் வேற போய்டுச்சு.. சோ.. குழப்பம்..... நீ ரெஸ்ட் எடு.. சரி ஆகிடும்'- என்றபடியே அவனை நடக்கக் செய்து அவன் அறையை நோக்கி நடந்தார்கள்....

"எல்லாமே உன் பிரமைடா..."-என்ற மிர்ணாளினி, வித்ரனை தோளில் தட்டிக் கொடுத்தாள்....

"டேய் சீக்கிரம்.. காத்து பலமா இருக்கு...." என்றபடியே நிஷா முன்னால் செல்ல.. மூவரும் வேக வேகமாய் பின்னால் ஓடினார்கள்...


நேரம்...மாலை 7.00

மிர்ணாளினியும்....நிஷாவும் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள்.... வெளியே அடிக்கும் காற்று, ஜன்னல் தாண்டி ஒரு வித குளிர்ச்சியை அறை முழுக்க வியாபித்திருக்க செய்தது..

வழக்கம் போல.. சேனல் சண்டை.... சேனலுக்குள்ளும் சண்டை.... கை மாறிய ரிமோட்.. மாநிற மத்தாப்பு.....நிஷாவின் கைக்கு செல்ல....எப்போதும் போலான கன்னக் கிள்ளலுடன்..... எழுந்து தன் அறை நோக்கி செல்லத் துவங்கினாள் மிர்ணாளினி....காற்றுடன் மழையும்.... சேர்ந்து கொண்ட இரவாய் அது... எதையோ மூடி வைத்துக் கொண்டு மூச்சு விட்டுக் கொண்டிருப்பது போல ஜன்னல் தாண்டிய சதுரக் காட்சி வெளிப்படுத்தியது....

ஹாலைத் தாண்டிய மிர்ணாளினி... மீண்டும் அதே ஹாலுக்குள் நுழைவது போல நுழைந்தாள்... பக்கவாட்டில் அமர்ந்து அதே டோராபுஜ்ஜியைப் பார்த்துக் கொண்டிருந்த நிஷா, கண்களில் விழ... சட்டென்று ஒரு சுற்று சுற்றியது போல தலைக்குள் நிகழ்ந்த மாயத்தின் சாயலை உடலின் சிறு ஆடுதலில் தள்ளி வைத்து விட்டு.. மீண்டும்..... நிஷாவை மனம் திறந்த விழி கொண்டு உற்றுப் பார்த்தாள்.... அந்த அறையை சுற்றி ஒரு கணம் அனிச்சை செயல் போல..பார்த்து....... தனக்குள்ளாகவே காலங்களின் முன் பின் பயணத்தை.. ஒரு புள்ளியில் நிறுத்த முயற்சித்தபடியே எதுவோ திடமாக அவளை உந்தித் தள்ள.. சற்று பின்னோக்கி கழுத்தைத் திருப்பி, திரும்பி பார்த்தாள்..... அவள் பார்வையில் முன்பு கடந்து வந்த ஹாலும், டிவி பார்த்துக் கொண்டிருந்த நிஷாவும் முன்பிருந்ததைப் போலவே இருக்க..... திக்கென்று உணர்ந்த பயத்தோடு..... கழுத்தை திருப்பி கண்களை இப்போது பதறி நின்று கொண்டிருக்கும், அறைக்குள் படர விட... அங்கேயும்.... அதே அறையும், நிஷாவும் இருக்க... சட்டென்று பின்னோக்கி ஓடி....முதலில் கடந்து வந்த அறைக்குள் சென்றாள் மிர்ணாளினி ....

அங்கும் இங்கும்... கரப்பான் பூச்சியை துரத்தும் மன நிலையோடு இருப்பவள் போல நடந்து கொண்டிருந்த மிர்ணாளினியை கவனித்தபடியே - "ஏன்டி இப்டி பண்ற....வேணும்னா.... இந்தா.... நீயே பாத்துக்கோ.... இந்தா..... பாரு.. போகோ சேனல்தான..?... பாத்துக்கோ...... நான் போய் படிக்கறேன்...." என்றபடியே எழுந்தாள் நிஷா....

எதுவும் பேசமுடியாத பூட்டப்பட்ட குகையின் மூச்சடைத்தலுடன்.... முன்னோக்கி நாலு அடி எடுத்து வைத்து ஓடி நின்று பார்க்க...... அதே வசனத்தை இரண்டாவது தெரிந்த ஹாலில்... அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த இரண்டாவது நிஷா பேசினாள்...

இரண்டு ஹாலையும் எட்டி எட்டி ஒரே இடத்தில் நின்று பார்த்தபடியே, கணங்களின் சூழ்ச்சிக்குள் காலக் கோட்டில் நின்று கொண்ட மறுகணம் கத்திக் கொண்டே மயங்கி சரிந்தாள் மிர்ணாளினி....

மூன்று பக்கமிருந்தும் ஓடி வந்த மூவரும்.....அவளை சுற்றி.....அமர்ந்திருக்க.. அவள் நடந்தவைகளை மிக மெலிதான கோடுகளால் ஓவியம் போல பேசிக் காட்டினாள்.....மூவரும்.... ஒரே புள்ளியில் பார்வையை வைத்துக் கொண்டிருந்தார்கள்....வலது பக்கம் முட்டி போட்டு அமர்ந்திருக்கும் நிஷாவை ஆழமாக பார்த்த மிர்ணாளினி.....அவளிடம் ஆரம்பித்த பார்வையோடு, "...இல்ல.... என்ன நம்புங்க.. ஒரே மாதிரி ரெண்டு ஹால்.. ரெண்டு நிஷா.... ரெண்டு டிவி.. ஒரே சீன் ரெண்டு முறை நடக்குது.. நம்புங்க....." என்று நடுங்கிக் கொண்டே முணங்கிய போது.... பார்வை.. வித்ரன் தாண்டி... மாயனிடம் முடிந்திருந்தது......

மிர்ணாளினியை மெல்ல எழுப்பி...கூட்டிசென்று கட்டிலில் படுக்க வைத்து விட்டு.. வித்ரனும்... நிஷாவும்......யோசித்தபடியே..அருகில் அமர்ந்திருக்க... "என்ன இது.. வியர்டா என்னென்னமோ நடக்குது... மழை வேற.... இவ்ளோ காத்து....டவர் வேற இல....பவரும் போய்டுச்சு..." என்றபடியே மெழுகுவர்த்தி பற்ற வைத்துக் கொண்டு.....வந்தான் மாயன்.. அந்த வெளிச்சத்தில் மாயனே ஒரு பிசாசு போல இருப்பதாக தோன்றியது மிர்ணாளினிக்கு...

வித்ரன் ஏற்கனவே மனதுக்குள் மிரண்டு விட்ட, தொடர்பு படுத்திய நினைவுகளின் மெல்லிய மௌனமாக, சத்தமே இல்லாத வார்த்தைகளை பூட்டி..." நாம இன்னைக்கு நைட், ப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு போய்டலாமா...?..... எனக்கென்னமோ பயமா இருக்கு...!" என்றான்...முகம் வழிந்த சாரலை துடைத்தபடியே....

"நான் அப்பவே சொன்னேன்..! இவ்ளோ தள்ளி காட்டுக்குள்ள வீடு பாக்க வேண்டாம்னு..... இப்போ பாரு..... கொஞ்சம் வித்தியாசமா ஏதாவது நடந்தா கூட... என்னென்னமோ யோசிக்கத் தோணுது..... என்றபடியே, மிர்ணாளினியின் கைகளைப் பற்றிக் கொண்டு....."பயப்படாதடி... இதுவும் பிரமை தான்..."என்று நிஷா சொல்ல சொல்லவே.....

"எனக்கும் ஸ்ட்ரெஸ்னு சொல்ல போறீங்க....ளா.. அப்போ நான் பார்த்தது பொய்யா.....?.....இல்ல.... எனக்கென்ன பைத்தியமா....?... என்று அர்த்தத்தோடு ஆதங்கப் பட்ட மிர்ணாளினி, படபடப்பின் பிடிக்குள் பயந்து விட்ட குழந்தையின் மிரட்சியோடு... பார்த்தாள்...உள்ளுக்குள் சுழன்ற காற்றுக்குள் கரைந்து போவது போல....

மூவரும் அமைதியாக பார்த்துக் கொண்டார்கள்...மனதுக்குள் தெரியாத காடுகள் கட்டவிழ்க்கப் படுவதாக உணரும் நொடிகளுக்குள் மெல்ல மெல்ல போய்க் கொண்டிருந்தார்கள்....இனம் புரியாத கட்டுக்குள்... நால்வரும் இருப்பதாக ஒரு அழுத்தம் அந்த வீடு முழுக்க நிறைந்து வழிவதாக தெரிந்த வண்ணங்களில் நிறமற்ற மழை, மொழியின் சப்தங்களை காற்றுடன் கலந்து அடித்து வீழ்த்திக் கொண்டிருந்தது...

"ஒன்னு கவனிச்சிங்களா... இதுவரை மூனு முறை இந்த ஜன்னலை அடைச்சிட்டேன்.... ஆனாலும் திறந்துட்டே இருக்கு...."-என்ற மாயன்... மறுபடியும்.. நான்காவது முறையாக ஜன்னலை இழுத்து அடைத்தான்....அவன் கைகள் நடுங்குவதை அவனால் நிறுத்த முடியவில்லை...

எச்சில் விழுங்கிய மிர்ணாளினி...படுக்கையில் சுவரோரம் சாய்ந்து ஒளிவது போல ஒதுங்கிக் கொண்டாள்...நிஷாவின் பார்வை முழுக்க இப்போது ஜன்னலில்... அடித்துக் கொண்டு இருந்தது....இமைக்க மறந்து...

"நான் தான் சொன்னேன்ல..... டென்னிஸ் பந்து நிறைய வந்து என் மேல விழுந்துச்சுன்னு.... அதும்.. ஒவ்வொன்னா ஆரம்பிச்சு.. அடுத்தடுத்து.. வேக வேகமா.. குண்டு விழுகற மாதிரி.. விழுந்துச்சே...அதையும் என் பிரமைன்னு சொன்னீங்க....இப்போ மிர்ணாளினிக்கு..... ரெண்டு ரூம் ஒரே மாதிரி தெரிஞ்சிருக்கு.....எல்லாருக்கும் ஒரே நேரத்துலயா பிரமை வரும்... எனகென்னமோ சம்திங் ராங்னு படுது....... பயமா வேற இருக்குடா" என்ற படியே வித்ரனும்.... அதே பெட்டில்.... ஓர் ஓரமாய் இறுக்கமாக அமர்ந்து கொண்டான்....அவன் கண்களில் பயம் கலந்த தடுமாற்றம்... நிறமற்ற காட்சியாய்... உருண்டு கொண்டிருந்தன....

மூவரும் இப்போது.. கண்கள் விரிய மாயனைப் பார்க்க..ஜன்னலோரம் நின்றிருந்த மாயன்... மெல்ல முணங்கத் துவங்கியிருந்தான்...

"என்ன ஆச்சு மாயா......!?"- என்று கத்திக் கொண்டே மூவரும் அவனை நெருங்க முயற்சிக்க...... முடியவில்லை.. அவனை சுற்றி நெருப்பாய் சுடத் தொடங்கியிருந்தது........அவன் உடல் வியர்த்துக் கொட்டியது...மூவரின் பார்வையும் பயத்தில் சிவந்து... என்ன செய்வதென்றே தெரியாமல்... தடுமாறி... நடுங்கும் உடல்களோடு, உள்ளக் கசிவின் ஓரமெங்கும்... பயத்தின் சாயலைக் கொண்டவாறே... அங்கும் இங்கும் ஓடி..மாயனை சுற்றி நெருங்க, முயற்சித்துக் கொண்டே இருக்க...

"தாங்க முடியலடா...... வித்ரா......நிஷா.....மிர்ணா.......என் உடம்பு கொதிக்குது... சூடு... தாங்க முடில..... ஏதாது பண்ணுங்க...."- என்று கத்திக் கொண்டே...சட்டை பேன்ட்டை அவிழ்த்து விட்டு உள்ளாடைகளையும் வேக வேகமாய் களைந்தான். நிர்வாணமாக அங்கும் இங்கும் உருண்டு புரண்டான்.. மூவரும்.. அவனை ஆசுவாசப் படுத்த, அடக்க.. எத்தனை முயற்சித்தும் முடியாமல் மாற்றி மாற்றி கத்த துவங்கினார்கள்...அந்த அறை முழுக்க.... கெட்ட வாசத்தின் நறுமணம். கேட்கும் குரலின் கரகரப்பு.... உடல் கொள்ளும் கனம்... நகர முடியாத கால்களின் பிடிப்பு.. என்று.. ஈர்ப்பு விசை அற்ற .. உருளைக்குள் சுருள்வது போல.. நால்வருமே உணர்ந்தார்கள்.... மாயன்.. கொதித்துக் கொண்டு குதித்துக் கொண்டிருந்தான்....

"இங்க என்னமோ நடக்குது.. இங்க என்னமோ இருக்கு..எதுவுமே சரி இல்ல.. யாரோ நம்மல பாக்கற மாதிரியே இருக்கு..."என்று கத்திக் கொண்டே அறை முழுக்க பேய்களைப் போல... ஓடினார்கள்....ஒருவர் மேல் ஒருவர்...பைத்தியங்களைப் போல.... முட்டிக் கொண்டும்.. தாக்கிக் கொண்டும்... அழுது கொண்டும்.....சிரித்துக் கொண்டும்...விழுந்து புரள...... வீட்டில் இருந்த அனைத்து ஜன்னல்களும் திறந்து கொண்டன.... கதவுகள் திறந்து கொண்டு, அடித்த காற்றில் 'படீர்...படீர்.....' என்று பியித்து கொண்டே வெளியில் மழைக்குள்.... விழுந்து சிதறின..... வீட்டுக்குள் மழைச்சாரல்.. நெருப்பு துகள்களாய் வந்து விழ... வீடு முழுக்க மரண ஓலங்கள்......

எல்லாம்.. சட்டென...சற்று கணத்தில் சாந்தி அடைந்து நிற்க..... மழை இல்லா, காற்றும் இல்லா... எதுவும் நடக்காத போன்றதான வீடு அமைதியில் சூழ.. மூவரையும் அங்கு காணாமல்.. நிஷா மட்டும்.. தனித்து நின்றாள்... ..... அவள் தலை விரி கோலமாய்... வெளிர் நிறக் கண்களுடன்.....வேட்டைக்கு தப்பித்த மிருகம் போல...... எச்சில் ஒழுகும் வாயோடு... கழுத்து திரும்பிய பயத்தோடு.. வீட்டை விட்டு வெளியே ஓடத் துவங்கினாள்....அது மாயங்களின் குளத்தில் இருந்து மேலேறிய மூச்சுக் காற்றாய்... .. வேதனை நிரம்பிய முணங்கலோடு.. பயம் விதைத்துக் கொண்டே....சிதறியது.......

அவள் ஓடிக் கொண்டேயிருந்தாள்...

தான் ஒரு மாயலோகத்தில் இருப்பதாகவே நினைத்தாள் நிஷா....அவளை சுற்றி பூத்திருந்த பூக்களில்...அந்த நந்தவனத்தை ஒரு கவிஞனே செய்திருக்க முடியும் என்று நம்பினாள்... ஒரு விதமான நறுமணம் அங்கு கசிந்து கொண்டேயிருந்தது..... பார்க்கும் இடமெங்கும், அழகிய கலைப் பாடுகள் பகிரும் வேளைகளாய்..... மிளிர்ந்து, இளம் மனதை தூண்டி விட்டன... நிலவுக்காரி....தேவதைகளை... கட்டவிழ்த்து விட்டதாகவே உணர்ந்தாள்... ஒரு மேக மெத்தையில், தான் நின்று கொண்டும்.. நடந்து கொண்டும் இருப்பதாகவே நம்பினாள்....

அவன் வருவான்.... அத்தனை கம்பீரமான தேகத்தையுடைய ஒரு சாமுராய் வீரனைப் போல இருந்த அவன், மீண்டும் வருவான்.. தொட்டுத் தூக்கிய அவளின் வலிமையுடைய தோள்களின்.. தினவு... இன்னமும் உரசிய மார்புக்குள் வெட்கம் பூக்க வைக்கிறது..... சோடி கனவுகளை அவன் மீண்டும் விதைப்பான்...தோளில் புரண்ட அவனின் கூந்தலில்... இயற்கையாகவே ஒரு வித மணம் இருப்பதை... முயங்கி சரிந்து கிடந்த பொழுதுகளில்... அவன்... தெளித்து விட்டு போயிருந்தான்.. அவன்... பார்த்த பார்வைக்குள் நீலம் பூத்த வெண்ணிலாக்கள்....அகல விரிந்த மார்புக்குள், தான் ஒரு பூவைப் போல மலர்ந்து விரிந்து பூக் காடாக, மீண்டும் வேண்டும் அவன்....அவன் வருவான்.....

காதில் கிசு கிசுத்தானே.....அவன் பெயரில் காதலும் காமமும்... பின்னிப் பிணைந்த புது மொழி போல... அவள் யோசித்தாள்..யோசனை இனித்தது.... அவன் பெயர்...

வசீகரன்.......

தேக்கு மரத்தில் செய்த தேகம் கொண்டவன்... கன்னம் உரசிய வில்களில்.. அவனின் சாயம் கொண்ட மருதாணி ஆன கதையை அவளுக்குள் அவள் மீண்டும் உள் வைத்தே சிவக்க செய்தாள்.. அவளின் உள் கொண்ட திறவுகளின் வசம், அவனின் அண்டாக்கா கசம்....விரல் கோர்த்துத் தூக்கிய அவனின் நிலை.. ஒரு மாயலோக கடவுளின் தீட்சண்யம் போல.. அத்தனை சாதுர்யமான வீச்சில் மெல்ல மெல்ல ஒரு குழந்தையைப் போல.. தூக்கி அனைத்து... அவனுக்குள் ஒரு பகுதியைப் போல அடைத்துக் கொண்டே இந்த மாட மாளிகையில் அவன் நடந்த நேற்றைய பின்னிரவு.... ஒரு கனவுக்குள் தெரியாமல் புகுந்து விட்ட வண்ணங்களின் ஆச்சரியங்களைப் போல அத்தனை ஆனந்தமானது..... அவள் தன்னை ஒரு தேவதையாக நினைக்கும் தருணத்தை அவனே சமைத்தான்.... நெற்றியில் ஆழப் பதிய வந்த முத்தத்தை... அதிகாலை சூரியனின்.... வெட்கமோ என, அவள் அவனைப் பார்க்க..

"இதோ வருகிறேன்.... கொஞ்சம் வேலை.. நீ மாளிகை சுற்றி பார்... எல்லா வசதிகளும்.. உனக்கு தானே நடக்கும்....."-என்றபடியே மிக அருகில் வந்து....மொத்தமாக அவளை உரிந்து விடுபவன் போல...அவளை சுவாசித்துக் கொண்டே, "இந்த கண்களின் வசம் நான் இழந்து விட்டது.... எல்லாவற்றையும் விட.... என்னையே என்பது தான்....தாகத்தின் சூட்சுமம்.."-என்று கிசுகிசுத்து சட்டென்று அவள் கண்கள் திறக்கும் முன் காணாமல் போனான்...

"காலைப் பனி உன் காலை பணிய உனையே சுற்றும்..."-அவன் சென்ற பிறகும் அவனின் குரல் ஓர் அசரீரியைப் போல...விரல் தொட முடியாத, விழி பட முடியாத..தூரத்தில்...மனம் பட்டு விட்ட மார்பில் உள் பொதிந்து மேலெழும்...மெழுகு சிலையென அவளை சிணுங்க வைத்து அவள் பெண்மையை சற்று நாணம் கொள்ள வைத்தபடியே அவன் ஸ்பரிஷம்... எங்கும் விரவிக் கிடக்க..புன்னகைத்துக் கொண்டே அவள் நடந்தாள்... அவள் உடல் பூரித்து கிடந்ததை கண்ட சுவர்கள்... அவளை சற்று நிற்க வைத்தன...அவளே சுடரோ என்று போதித்த சுவற்றை அவள் கண்கள் காண, பூட்டிக் கிடந்த ஓவியங்கள் கண் திறந்தன......

சுவர் கண்டதில்.. முழுக்க ஓவியங்கள்... புரியா ஓவியங்கள்.. புணர்ந்து கிறங்கிய ஓவியங்கள்.. பாதி உடல் மறைத்து மீதி மனம் துளிர்க்க வைக்கும் ஆண் பெண் முக ஓவியங்கள்... கலைகளின் உச்சமென.. கலவிகளின் மிச்சமென அவைகளின் தீர்க்கம் அவளுள்.. மீண்டும் மீண்டும் அவனையே கோலோச்சியது......சில ஓவியங்கள்.. அவளின் கண்களை மயக்க நிலைக்கு கொண்டு சென்றன..சில ஓவியங்கள் கோடுகளாலும்... ஆண் பெண் மாற்றிய உடல்களாலும்... கர்ப்ப வயிறுகளாலும்.. ரத்தச் சுவடுகளாலும்... கொலைக்களங்களாலும், சிவந்தும் மறைந்தும்..... மர்ம முடிச்சுகளாக இருக்க.... அவள் ஒரு வித மயக்க நிலைக்கு ஆட்ப்பட்டு.... . தன் ஆடைகளை களைந்துவிட்ட, ஒரு பதுமையாய்... ஈரம் சொட்ட சொட்ட.. பனிகளில் இறங்கி.... துளிகளில் கிறங்கி... குளித்து... வந்தாள்... அவளை நனைத்த பனிகளோ நதியாய் ஆனது.. நனைக்க முடியாத பனி.. வருத்தி ஆவி ஆனது...

சூரியன் மேல் எழும்பி... ஒரு சாட்சியாய் பார்த்துக் கொண்டிருந்தான்... இருப்பதிலேயே உயர் தரப் பூக்கள் கொண்ட ஆடை சுற்றிக் கொண்டாள்...... எந்த பூவில் அவள் அழகு என்று தெரியாத அளவுக்கு அவள் அழகு முழுக்க பூக்களால் நிரம்பிக் கிடந்த நினைப்பில், வசீகரன்.. மஞ்சள் குதிரையில் ஒரு வீரனைப் போல இதோ வந்து விட மாட்டானா.....? அதோ வந்து விட மாட்டானா...! பின்னாலிருந்து அணைத்து தூக்கி... சுவரோரம் வைத்து.. முதுகில் முத்தக் கோடுகள் வரைந்து விட மாட்டானா...?!!!!

அவள் ஏக்கத்தின் பிடியில்... சரிந்து... மாளிகையில் முகப்பில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து, மெல்ல தன் உடல் அசைத்தாள்...அது அசையும் கவிதை என்று அங்கிருக்கும் புறாக்கள் அதன் மொழியில்...பட படவென சொல்லிக் கொண்டே அங்கும் இங்கும் பறக்க.. அவைகளில் ஒன்று...அவளின் தொடை மேல்... வந்தமர்ந்து.... மார்பு கொத்தி தின்ன முயற்சிக்க......"அவனைப் போலவே தான் நீங்களும்..! அவன் வளர்க்கும் புறாக்கள் தானே..? பிறகெப்படி இருக்கும்.....!" என்று செல்லமாய் சிணுங்கிக் கொண்டு சிரித்தாள்....முதுகை மூடி இருந்த கூந்தலை... எடுத்துக் கொண்டையிட்டாள்... முதுகில் பட்ட இளம் வெயில்.. அவளுக்கு இன்னும் கொஞ்சம் நிறம் கூட்டின... மெல்லிய தென்றலின் அசைவில் அவள் தேகம் சூட்டுக்குள் குளிர்.. கொண்ட.... இதம் விதைத்தது... வெற்றிடங்கள் முத்தமிட்ட அவளின் முகம் முழுக்க வந்து மோதிய பட்டாம் பூச்சிகளின்.. சிறகசைப்பில்.. கவிதை செய்தது நேரங்கள்..... அவள், மெல்ல மெல்ல ஓர் அன்னப் பறவையாக..... மாளிகைக்குள் நடந்தாள்.... எத்தனை பெரிய மாடமாளிகை.. வெளியே அத்தனை பெரிய சுவர்கள்.. வெளி உலகமே தெரியாத, தெரிய வேண்டிய அவசியம் இல்லாத சொர்க்கபுரி அது.... அத்தனை பெரிய வரண்டாவில் அவள் நடக்க நடக்க... பக்கவாட்டில் கண்ணுக்குள் பெரிய வடிவ தீப்பெட்டிகள் போல...வந்து விழுந்து கொண்டேயிருந்தன.... அடுத்தடுத்து அடுக்கி வைக்கப் பட்டிருந்த அறைகள்...... கண்களை தூரம் வரை விட்டு எடுத்தவளுக்கு அவைகளின்... எண்ணிக்கை கணக்கில் அடங்காதவை...என்று புரிந்தது... அப்போதுதான் ஒன்று யோசித்தாள்..... "இதுவரை ஒரு வேலையாள் கூட அந்த மாளிகையில், தான் பார்க்கவில்லை என்பதும்...அதன் தொடர்ச்சியான யோசனையாக ... இத்தனை பெரிய அரண்மனையில் இவன் ஒருவன் மட்டும் எப்படி இருக்கிறான்...... "என்றும் வந்தது... ஆனால் அந்த நினைப்புகள் கூட... மனதுக்குள் அவனை நினைக்க தோதுவாகத்தானிருந்தது......

நடக்க நடக்க கடக்க கடக்க அறைகளின் அடுக்குகளாகவே அந்த அரண்மனை இருக்க.. அங்கு யாருமே இல்லாமல் இருந்தது... ஒரு வகை... நிதானத்தை அவளுக்குள் விதைக்கத் துவங்கியது....... அவளை சுற்றி இருந்த புன் முறுவல் இப்போது மெல்ல களைவதாக ஒரு யோசனை அவளுக்குள் இருந்து வந்தது..... சுழன்ற கண்கள் ஒரு கதவில் நிற்க, அது கொஞ்சம் திறந்திருக்க, அந்தக் கதவை அனிச்சை செயலாய் தள்ளிக் கொண்டு நுழைந்தாள்.......

இருட்டுக்குள் அந்த அறை... சுருண்டு கிடந்தது....தன் உள்ளம் இப்போது வேறு ஏதோ புரிந்து கொள்ள முயற்சிப்பது போல.... மனதுக்குள்... ஒரு ஓட்டம்... புரிபடுவது போல இருக்க.....

"நி......ஷா...இங்க இருந்து போய்டு......" என்று ஒரு ஈனக் குரல் அந்த அறைக்குள் நிரம்பி வழிந்தது....

திக் என்று நின்ற நிஷா..... கண்கள் விரிய.. எங்கோ விட்ட படபடப்பை.. மீண்டும் தொடர... மயக்கத்தில் இருந்து தெளிந்தவள் போல.. சுற்றும் முற்றும் பார்த்து....மிரட்சியின் செவிக் கூர்மையோடு.. மூளையில் பதிந்து விட்ட அந்த ஒற்றை வாக்கியத்தை மீண்டும் மீண்டும் கவனத்திற்கு கொண்டு வந்தவள்... சற்று தலை சுற்றி.. உடல் சுற்றி.. கதவில் 'ப.....டீர்' என்று சாய்ந்துக் கொண்டு... அது வித்ரனின் குரல் என்பதை யூகித்தபடியே...

"வித்.......ரான்........." என்று கத்தினாள்...

சுற்றும் முற்றும் பார்த்தபடியே தன்னையும் குனிந்து பார்த்துக் கொண்டு..... அரை குறை ஆடையில் தானிருப்பதைக் கண்டு நொடி நேர அதிர்ச்சிக்கு ஆளாகி...சட்டென்று ஆடையை சரி செய்தபடியே.... "ஓ... என்ன நடக்குது... நான்.......... ஓ.... காட்... நான் எங்க இருக்கேன்.... இது என்ன இடம்.. வித்ரன்...... எங்க இருக்க.. இங்க எப்டி வந்தோம்......" என்று கத்திக் கொண்டே..... வேகம் பிடித்த பேய் மழை போல அறைக்குள் அங்கும் இங்கும் ஓடினாள்...தேடினாள்.. அந்த அறையே ஒரு குட்டி வீட்டைப் போல இருக்க.. அறை முழுக்க தேடுவதே... முயல் வேட்டையைப் போல இருந்தது.... பின் அறையின் இருட்டு கண்களுக்கு பழகத் துவங்க... அறையின் மூலையில் ஒரு பெட்டி இருப்பதை நடுங்கிக் கொண்டே பார்த்தாள் நிஷா....

வெளியே..... திடும்மென கொட்டத் துவங்கியிருந்தது.... கடும் மழை.... மழையின் நிறம் முழுக்க ரத்தம்....

ஒரு முறை திரும்பி கதவைப் பார்த்துக் கொண்டாள்.. பார்க்க தூண்டியது உள் மனம்... இனம் புரியா நடுக்கத்தின் தொடர் வண்டியைப் போல.. மெல்ல பெட்டியை நெருங்கினாள்... இருண்மையின் வெளிச்சத்தில் மேகம் மூடிய மாலை நேரம் போல அந்த அறையின் வெளிச்சம்.. அவள் கண்களை இன்னும் ஊடுருவி பார்க்க செய்தது......

பார்த்தாள்..... பார்த்தாள்... ..பார்த்துக் கொண்டே மெல்ல குனிந்தாள்...குனிந்து உற்றுப் பார்த்தாள்... உற்றுப் பார்க்க பார்க்க.. தலை சுற்றிய நிழல் அவள் முன் நின்று இதயம் பிசைவதாய் தெரிந்தது.... அது ஒரு சவப்பெட்டி.....பயந்து கொண்டே உள்ளே ......எட்டிப் பார்த்தாள்... பெட்டியில் சதுரத்தை கண்களின் வட்டத்தில் முழுக்க அடைத்தாள்...உள்ளே......உள்ளே....... வித்ரன் படுத்திருந்தான்.....

கணம் ஒன்றில் சுக்கு நூறாக வெடித்த மூளையின் மூலையில் திசுக்களின் வழிதலை சுவரோரம் ஓடி, சரித்தாள்.....கத்தி, அழுது....அரண்டு மிரண்டு... மிரண்டு...சுருண்டு...... "ஆ..... ஹ்....... ஆஹ்..அயோ.... கடவுளே.... என்ன நடக்குது... இங்க......... வித்ரான்........ வித்ரா......எந்திரி வித்ரா....உனக்கு என்னாச்சு...! ஏன் இப்டி படுத்திருக்க.....?" என்று தொண்டை கிழிய கத்தி, கூச்சலிட்டு... தட்டுத் தடுமாறி எழுந்து ஓடி...... சவப்பெட்டிக்குள் படுத்திருந்த வித்ரனை மிக அருகில் பார்த்து, நெஞ்சு சட்டையைப் பற்றி உலுக்கினாள்.... குளிர்ந்த நிலையில் அவன் அசையாமல் படுத்திருக்க... சட்டென்று எடுத்த கைகளை மிரட்சியோடு மூக்கின் அருகே கொண்டு சென்றாள்...மூச்சு இல்லை...'சுவாசம் அற்று பிணமாகி விட்ட அவனா சற்று முன் பேசியது........!!!!!' அவள் யோசித்துக் கொண்டே கையை வித்ரனின் நெஞ்சில் வைத்து... இதயத் துடிப்பு இருக்கிறதா என்று பரிசோதிக்க.... பரிசோதிக்க... கண்கள் மூடிய நிலையில் உதடு திறக்காத வித்ரன்,

"நிஷா.... இங்கிருந்து போய்டு...."என்று வாய்க்குள்ளேயே மீண்டும் பேசினான்.... தூக்கி வாரி போடப் பட்ட நிஷா, ஒரு அடி பின்னால் வேகமாக நகர்ந்தாள்... எங்கிருந்தோ வேகமாக வந்த காகம் ஒன்று ஜன்னலில் மோதி மயங்கி விழுந்தது... ஒரு சூறைக் காற்று....." ம்......ம்ம்.......ம்ம்ம்.....ம்ம்ம்ம்ம்"......... என்று கீழ் நோக்கி வந்து விட்டு அந்த மாளிகையை சுற்றி மேல் எழும்பி போனது....

"அவன் வரதுக்குள்ள போய்டு..... நீ நினைக்கற மாதிரி.. அவன் இல்ல... அவன் வேற.... நீ போய்டு....." வித்ரன் தொடர்ந்து வராத வார்த்தைகளோடு வாய்க்குள்ளாகவே பேச, கனமான கணத்தில் வாய் பொத்தி... வெளியே வந்து வந்து விழும் கண்ளை உள்ளிழுத்துக் கொண்டே.... இன்னும் ... பின்னோக்கி வேகமாய் நகர்ந்து, சுவற்றில் மோதி... சுவரோரம்.. சரிந்து விழுந்து சுவற்றில் தன்னை சாய்த்தபடியே.. மூச்சு விட முடியாமல்... வாய்க்குள்ளேயே கத்தினாள்.....

பைத்தியம் பிடித்தவள் போல உருண்டு எழுந்து...என்ன செய்வதென்று தெரியாமல், கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடியவள், நடுக்கத்தின் பதற்றமாய்... எதிரே இருந்த அறைக்குள் முட்டி மோதி உள்ள நுழைந்து விழுந்தாள்...அந்த அறையின் குளிர்ச்சி.... பூஜியத்திற்கும் குறைவாக இருக்க.. கணத்தில் உறைவதாகப் பட்டாள்...... அங்கே கால்களில் தட்டுப்பட்ட சவப்பெட்டியில்......மிர்ணாளினி....... அதே போல... பிணமான பின்னும்.. பேசினாள்... வாய் திறக்காத வார்த்தைகள், கல்லறையிலிருந்து பேசுவது போல இருந்தது.... அது கல்லறையே பேசுவது ...போல இருந்தது....

"நிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்............ஷா......ஆஹ்..........போ........ய்ய்..... டு....... இது கல்லறை கோட்டை...... அவன் வந்துடுவான்..... மயக்குவான்..... மயங்குவான்..... அப்புறம்..... அப்புறம்........ அப்புறம்........."

"அய்யோ....... அய்...........யோ...." என்று கத்திக் கொண்டே...... மீண்டும் வெளியே ஓடி வந்த நிஷா... பக்கவாட்டில் இருந்த அறைக்குள் ஓட..அங்கே... மாயன்..அதே போல.....சவப்பெட்டிக்குள் படுத்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தான்......

"இப்போ வந்துருவான்.. என் தலைவன்... உன்ன விடமாட்டான்....ஓடிடு....ஓடிடு ......ஓடிடு ......ஓடிடு ........"...-மாயன் மீண்டும் சிரித்தான்.... ஆனால் இம்முறை அது அழுவது போல் இருந்தது.

கால்கள் பலமிழந்து.. மூச்சு வாங்க.. உடல் நடுநடுங்க... உள்ளம் வெடித்தே விடுவது போல சூடாக... மூளைக்குள் ரத்தமே கசிவது போல.... அங்கும் இங்கும் மாளிகை குழம்பியவளாக ஓடத் துவங்கினாள்..... ஒவ்வொரு அறைக்குள்ளும் ஒவ்வொரு சவப்பெட்டி.. ஒவ்வொரு உடல்... பார்க்கும் அறையெங்கும் உடல்கள்..... அது பிணங்களின் தேசமாக... கல்லறைகளின் துண்டுகளாக மிதந்து கொண்டிருந்தது...... வெளியே பெய்யும் மழை முழுக்க சிவப்பாய், ரத்தம் பொழிந்து கொண்டிருக்க.......கூந்தல் தளர்ந்த தலையை பிடித்துக் கொண்டு... கொலை செய்யப் பட்ட தேவதையாக.....உருண்டு புரண்டு.... புரண்டு மிரண்டு...... காணும் இடமெல்லாம் முட்டி மோதி.. உடலில் பல இடங்களில் காயம் கொண்டு...மரணத்தின் பயத்தை வாயில் கவ்விக் கொண்டு.......ஒரு பேயைப் போல ஓடினாள் நிஷா...

"ஓடிடு........ ஓடி.......டு.........ஓ..............டிடு........." என்று எல்லா பிணங்களும் மொத்தமாக கத்த... அந்த ஒலிகளின் நாற்றம் அவள் செவியிலிருந்தும் மூக்கிலிருந்தும் ரத்தம் கசிய வைத்தது.... அங்கும் இங்கும் தடுமாறினாள் ..... எல்லா வழிகளும் அவளை, அங்கேயே கொண்டு வந்து சேர்த்தன..... வாயில் கதவைத் தாண்டவே முடியாத தூரத்தில் அது வானம் பாதி மறைத்து நிற்க....மாளிகையை சுற்றி மதில் சுவர்கள் முக்காடு போட்ட பிசாசுகளாக நிற்க.. அவளால் அங்கிருந்து தப்பிக்கவே முடியாது என்று புரிந்த நொடியில் கீழே விழுந்து அழ மட்டுமே முடிந்தது..... அழுது மனம் புலம்பும் பயத்தின் நடுக்கம் அவளை சூழ்ந்து கொண்டே இருந்தது.... அவள் நம்பிக்கை இழந்த மன நிலையில்.... "ஏன் இப்டி.... என்ன நடக்குது.... யார் அவன்.. எதுக்கு இப்டியெல்லாம் பண்றான்... ஒரு வேளை இது எல்லாமே கனவோ....?"- அவள் தலையை சுவற்றில் வைத்து அழுந்திக் கொண்டு... ஈனக் குரலில் தானாகவே புலம்பினான்....புலம்பி ஓய்ந்த ஒரு தருணத்தில்...அழுத கண்களில்....எதிரே இருந்த சுவற்றில், குதிரையில் தோள் புரளும் கூந்தலோடு வசீகரன், ஓவியமாய் மெல்ல புன்னகைத்துக் கொண்டிருந்தான்....உற்றுப்பார்த்த விழிகளின் மூளையில்.... சட்டென ஞாபகம் வந்த நினைவுகளாய்.... நேற்றிரவு....நேற்றிரவு....நேற்....நே....

மூவரையும் காணாமல் அங்கும் இங்கும் தேடி பித்து பிடித்தவள் போல....."காப்பாத்துங்க........யாராவது வாங்க.... ப்ளீஸ்.... காப்பாத்துங்க....." என்று கத்திக் கொண்டே வீட்டுக்கு பின் புறம் இருக்கும் சந்தன மரக் காட்டுக்குள் ஓடுகையில்தான்...... இதே போல அவன் குதிரையில் வசீகரமாய் நின்றிருந்தான்...... அவன் கண்களில் இரவை மீறிய சூரியன்கள் இரண்டு... சூட்சுமக் கவிதைகள் சொல்ல.... இதழில் குருதியை மதுவாக சேமித்த நுட்பமான புன்னகையில் பழக்கப்படாத பூ ஒன்று விரிய...அடித்து முடிந்த காற்றில்... மழையில்.... மேலாடை இல்லாமல்... பட்டும் படாமலும்... தாமரை இலையில் தவழும் துளிகளென மழை-கள் அவன் மேனியில் உருட்டு விளையாட.... அவன் செய்யும் மாயங்களின் நீட்சியில், மிச்சமென... அவள் தன்னை மறந்து கைகள் விரித்துக் கொண்டு ஓடிச் சென்று அவனை அணைத்துக் கொள்ள, அவன் தேவதை செய்தவன் போல அள்ளி அணைத்து....தூக்கி குதிரையில் அமர்த்திக் கொண்டு ஒரு காட்டு ராஜாவைப் போல.. மழைக்குள் சென்று துளிகளாய் சிதறி மறைந்தது, இப்போது ஞாபகத்தில் உரைத்தது.. இப்போது அந்த புன்னகையில் வீசிய ரத்த வாடை அவளின் ஆழ் மனம் உணர்ந்தது...... குமட்டிக் கொண்டு வந்தது...

மனம் ஒரு மாதிரி சீரான நிலைக்கு வந்தது போல உணர்ந்தாள்.... 'இங்கிருந்து தப்பிக்க வேண்டும்..'-என்று அவள் மனம் கணக்கு போடத் துவங்கியது.... நண்பர்கள் மூவரும் இறந்து விட்டதை இப்போதுதான் மூளை நம்பியது......தானும் செத்து விடக் கூடாது...என்று திடப்படுத்திய மனம்...."அவன்கிட்ட ஏதோ மாயம் இருக்கு..."-என்றபடியே, அவன் வந்தது.. பேசியது.. பழகியது என்று எல்லாவற்றியும் மனக் கண்ணில் ஓட்டிப் பார்த்தாள்... .."யார் இவன்... ஏன் இதெல்லாம் பண்றான்.. அவன் முன்னால.. நாம செயல் இழந்து போறோமா...?"- .. என்று பல மிரட்சியான கேள்விகளோடு யோசித்த அவளை, கண்கள் மீண்டும் பக்கத்தில் இருந்த சுவற்று ஓவியத்தைப் பார்க்க செய்தது... மீண்டும் ஒரு அனிச்சை செயலைப் போல.......

சற்று முன் பார்க்கையில் புரியாத ஓவியங்களின் கதை இப்போது மெல்ல விளங்கத் துவங்கியது .....அவள் ஆழமாக கவனித்தாள்....மழையும் காற்றும்... போட்டி போட்டுக் கொண்டு.. மாளிகையை சுற்றி காவல் இருக்க... மாளிகை முழுக்க...... குளிரின் வேகம் அதிகப்பட்டுக் கொண்டே இருந்தது.....சூரியனை மறைத்து விட்ட கரு மேகங்களின் ஊடாக.... பட்சிகளும்... பறவைகளும்... விழி தொலைத்த பாதங்களைத் தேடி அழுது கொண்டே..... சிறகடித்தன........... அந்த வராண்டா முழுக்க ஒரு நகரும் படமாய் அந்த ஓவியங்கள் கதை சொல்லத் துவங்கின.........

அந்த ஓவியத்தில் ஒரு அழகிய மென்மையான வாலிபன்..ஒரு கட்டிலில் படுத்திருக்கிறான்..... அருகே ஒரு மருத்துவர் நின்று கொண்டிருக்கிறார்....... அடுத்த ஓவியத்தில் .. அவன் வயிறு சற்று பெரியதாக இருக்கிறது.. முகம் அழுகிறது... மருத்துவர்.. ஏதோ பேசுவது போல இருக்கிறார்....

"டாக்டர் எனக்கு என்னாச்சு...ஏன்..... என் வயிறு பெருசாகிட்டே போகுது....?"-படுத்திருப்பவன் கேட்கிறான்...

டாக்டர் சொல்லி முடிக்கிறார்......

அவன் அழுது கொண்டே கேட்கிறான்..."டாக்டர் இது உங்களுக்கே நியாயமா இருக்கா..... உங்க பரிசோதனைக்கு என் வாழ்க்கைய பலி குடுக்கறீங்களே........."

அவன் முகம் கோணியது...... உதடு அழுதது... உள்ளம் புரண்டது...

பரிசோதனைகள் இல்லாமல் இந்த உலகம் இல்லை... இன்று இருக்கும் எத்தனையோ நோய்களுக்கு மறந்து எப்படி கண்டு பிடித்தோம்..?.... சோதனை செய்துதான்...சில மருந்துகளை மிருகங்கள் மீது செய்து சரியான விடையைக் காண முடியாது.... ஓர் ஊர் அழிந்தால்தான் ஒரு நாடு நன்றாக இருக்கும் என்றால் அந்த ஊரை அழிப்பதில் தவறில்லை.. இதில் நியாய தர்மத்துக்கு இடம் இல்லை.... ஒவ்வொரு அடுத்த கட்டமும் பலிகள் இல்லாமல் நகர்வதில்லை....நாட்டைக் காப்பவனும் பலி ஆகிக் கொண்டுதான் இருக்கிறான்... வீட்டைக் காப்பவனும் பலி ஆகிக் கொண்டுதான் இருக்கிறான்...எத்தனையோ ஆராய்ச்சிகளுக்கு எத்தனையோ உயிர்கள் பலி கொடுத்துதான்.. இன்றைய அறிவியல் இந்த வளர்ச்சியை அடைந்திருக்கிறது..... அதில் ஒரு கட்டம்தான்....... ஆண் வயிற்றில் குழந்தை வளருமா என்பது.......... இதோ வளரும் என்று இன்றைய தொழில் நுட்பமும்... அறிவும் அறிவியலும்........ சாதித்திருக்கிறது.........

நாட்கள் நகர.. குழந்தையும் வளர்ந்தது...... அவனோ மனதளவில் மிக மோசமான நிலைக்குள் இருந்தான்.. கிட்டத்தட்ட பித்து நிலைக்குள் அவன்... விழுந்து கிடந்தான்... தன்னை ஒரு பெண்ணாக அவன் பாவிக்கத் துவங்கினான்.....மன உளைச்சலும்.... உடல் பிரச்சினைகளும்.... அவனை.... கடுமையாக பாதித்தன.... கோபமும்... உறுமலும்.. அவனை ஒரு வித மிருக நிலைக்குத் தள்ளின.... . அந்த சிற்றூருக்குள் விஷயம் பரவியது.... குழந்தையும் பிறந்தது......

"ஏன்டா தேவிடியா பசங்களா....இதே பரிசோதனையை ஒரு பணக்காரன் மேல பண்ண வேண்டியதுதாண்டா.....?.உங்களால பண்ண முடியுமா....? நாய்ங்களா...."-என்று கத்திக் கொண்டே மூளை வெடித்து செத்துப் போனான்....

அந்தக் குழந்தை ஆனாதை ஆசிரமத்தில் வளர்ந்தது... அது ஆரம்பத்திலேயே விநோதமான குழந்தையாக தெரிந்தது..... மற்ற குழந்தைகள் அந்த குழந்தையிடம் நெருங்க முடியாமல் ஒரு வகை... முரட்டு குணம் அதற்கு இருந்தது..... கிடைக்கும் பொருட்கள் கொண்டு... அடிப்பது.... தூங்கும் சக பிள்ளைகள் மேல் தட்டைத் தூக்கிப் போடுவது...நகம் கொண்டு கண்கள் கீறி விடுவது... விரலைக் கடித்து துப்புவது...என்று இன்னும் பல விதமான மன நோய்க்கான அனைத்து செயல்பாடுகளும் அதனிடம் இருந்தது......

கடுமையாக தண்ணீர் தாகம் ஏற்பட்ட ஒரு நாளில்.... தண்ணீர் வருவதற்குள்.. பக்கத்து சிறுவனின் கழுத்தைக் கடித்து ரத்தம் உரியத் துவங்கியது..... மிரண்டது ஆசிரமம்..சங்கிலியால் கட்டி வைத்தார்கள்.......ரத்தத்துக்கு ஏங்கத் துவங்கினான் சிறுவன்... தன் கையையே கீறி ரத்தம் குடித்தான்.....

"இங்க இருக்காதே.... ஓடி விடு மகனே.... உனக்கு நிறைய வேலை இருக்கிறது..." என்று சிறுவனிடம் ..... செத்துப் போன பாவப்பட்ட அப்பா... கிசுகிசுக்க... தப்பி ஓடினான்...பிச்சை எடுத்தான்.... கிடைக்கும் வேலையை செய்தான்....சிரிக்க சிரிக்க பேசி பழகி..... கிடைக்கும் சந்தர்ப்பத்தில் கழுத்தைக் குதறி ரத்தம் குடித்து ஓடி விடும் சிறுவன், மெல்ல மெல்ல வளர்ந்தான்... அவன் ரத்தம் குடிக்கும் காட்சியைக் கண்டவர்கள்... அவனுக்கு, ரத்தம் குடிக்கும் சமயத்தில் வாய்க்குள் இரண்டு பற்கள் கீழ் நோக்கி.. வளருகிறது. என்று கூறினார்கள்....சந்தேகமே இல்லாமல் அவன் ரத்தக் காட்டேரிதான் என்று ஊர்ஜிதப்படுத்தினார்கள் மருத்துவர்கள்...... ஆண் வயிற்றுக்குள் நடந்த ரசாயன கலவையோடு ஏற்பட்ட வேதியியல் மாற்றம்... அவனை மனித குலத்திலிருந்து பிரித்திருக்கிறது.... என்பதை உணர்ந்தார்கள்... இனி அவனை எப்படி அடக்குவது என்று கூட்டம் போட்டு பேசினார்கள்... இன்னமும் பேசிக் கொண்ருக்கிறார்கள்.....

"எப்போதெல்லாம் இயற்கைக்கு எதிராக மனித குலம் முன்னேறுகிறதோ அப்போதெல்லாம்.. அது அழிவை நோக்கியே போகும் என்பது மீண்டும்... உறுதி செய்யப்பட்டிருகிறது...." என்று புலம்பினார்கள்...விஷயம் ஊருக்குள் பரவியது..... நிறைய பலிகள் கேட்டான் ரத்தக் காட்டேரி... ...... ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு உரு கொண்டான்.... பெயர் கொண்டான்... இம்முறை வசீகரன்..... விரைவாக காட்டேரிகளின் தலைவன் ஆனான்... மாயங்களாலும் தந்திரங்களாலும் அவன் தன்னை நிலை நிறுத்திக் கொண்டான்..... பெரிய பெரிய பணக்கார முதலைகளை வஞ்சகமாகக் கொன்றான்... செல்வங்களை எடுத்துக் கொண்டான்... ஹிப்னாடிசம்..... மெஸ்மரிஷம்.... பில்லி சூனியம்.... ஆவிகளோடு பேசுதல்.... மந்திர தந்திரங்கள்.... மாயா ஜாலங்கள்... என்று அவன் இருண்மை உலகின் அனைத்து வித்தைகளையும் கற்றுக் கொண்டான்... பசிக்கு அழுத போது தண்ணீர் தராத சமுதாயத்தின் ரத்தத்தை அவ்வவ்போது உரிவதே அவனின் பொழுது போக்கு.. வேலை... அதைதான் செய்து கொண்டிருக்கிறான்...

சட்டென்று, கதை சொல்லிக் கொண்டிருந்த ஓவியங்களின் மீதிருந்து பார்வையை விலக செய்தது.. எங்கிருதோ வந்து மாளிகை முகப்பில் அமர்ந்த வௌவால்...... திக் என்று திரும்பினாள் நிஷா........ .... சூரியனைக் காணவில்லை... இரவு விரிந்து கிடந்தது....

வசீகரன் வந்து விட்டான்.....

அவளுக்கு ஒன்று விளங்கியது... தாங்கள் நால்வருமே மருத்துவர்கள்..... என்பதை அப்போது அழுத்தமாக உணர்ந்தாள்.... இருள் சொல்லும் அந்த மாளிகையில்... காகங்களும்.. கழுகுகளும்.. வௌவால்களும்... இரைச்சலின் வழியாக நிறைந்து வழிந்தது...வெளியே தெறித்துக் கொண்டிருந்த மழைக்குள்ளும் காற்றுக்குள்ளும் ஒரு தேவதூதன் போல.. இருட்டால் செய்யப்பட்ட வசீகரன்...தன் கோரப் பற்கள்..... நீள... இறங்கி வந்து கொண்டிருந்தான்....உள்ளுக்குள் இருக்கும் பிணங்கள் எல்லாம் ஆரவாரத்தோடு கத்திக் கூச்சலிட்டன.. மாளிகைகளின் கதவுகள் அனைத்தும் மாற்றி மாற்றி அடைத்துக் கொண்டும் திறந்து கொண்டும்... ஆர்ப்பரித்தன... பேய்களின் மரண ஓலங்களின் அந்த மாளிகையே... ரத்தம் கக்கி... சிவப்பு நிறம் பூசிக் கொண்டன.......

அவள்.. மிரண்டு.... சுவரோரம்.. தன்னை சாய்த்து... வேறு வழியில்லாமல்.. நடுங்கிக் கத்திக் கொண்டு......"வராத.. போய்டு.... போய்டு.. பிசாசே.. போய்டு.." என்று சபித்துக் கொண்டிருந்தாள்...அவன் புன்னகை மாறாமல்... ராஜ நடையில் கம்பீரமாக.. அவளை நெருங்கினான்..... ரத்த வாடை குமட்டிக் கொண்டு வந்தது அவளுக்கு....... கோட்டை கதவு பட்டீர் என்று சாத்திக் கொண்டன....

அவன் அவளை மிகவும் நெருங்கி விட்டான்....அவள் தன்னை எத்தனை குறுக்க முடியுமோ அத்தனை குறுக்கினாள்...... பலமான கைகள் கொண்டு... சில்லிட்ட உடல் கொண்டு...... அவளைப் போர்த்தினான்.. அவளோ....உடல் தடுமாறி.. உள்ளம் அழுது.... "ப்ளீஸ்.. என்னை விட்ரு.. நான் உன்ன ஒன்னும் பண்ணலியே.. எதுக்கு இப்டி பண்ற.. நான் வேணும்னா இனி டாக்டர்க்கு படிக்கல.... ... ப்ளீஸ்... விட்ரு..."-மனமும் உடலும் சோர்ந்து... இனி அழக கூட முடியாது,,, என்றபடி... தடுமாறி.. இரண்டு கைகளாலும் அவனின் மார்பை குத்தி... கத்தி... ஒன்றும் முடியாமல்... அவனுள் அடங்கினாள்..

அவன் தன் கோரப் பற்களை............" கர்.......................ர்ர்..................ர்......" என்று வெளியே நீ...............ட்ட்டி அவளின் கழுத்தில் பதித்தான்.....

மழையும் காற்றும்.... மூச்சுக் காட்டாமல் அடங்கின....பிணங்களின் பெருமூச்சு மட்டும்.... கோடி பாம்புகளின் சுவாசமாக கேட்டன .....

சற்று நேரத்துக்கு பிறகு...

வசீகரன்... அந்த மாளிகையின் மேல் தளத்தில் இருந்து வெறும் பிணமாய்... கீழே விழுந்தான்.....

சற்று தூரத்தில் இருந்த, இன்னும் ஒரு காட்டுப் பங்களாவில் இருவர் செஸ் விளையாடிக் கொண்டிருந்தார்கள்....

அந்த பங்களாவின் பின் புறம்.... கோரப்பற்கள்.. வெளியே நீட்ட... நீல நிறக் கண்களில்.. கூந்தல் காற்றினில் பறக்க...... மஞ்சள் குதிரையில்.... அமர்ந்து வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தாள் நிஷா... இல்லை... வசீகரி....

இரவு இன்னும் இருக்கிறது....

- கவிஜி

Pin It