"கோச்சிக்காத மச்சி.. வேற வழியே இல்ல.. இங்கே இருந்து நடந்துதான் போகனும். வெறும் மூணே கிலோமீட்டர்தான். அரை மணிநேர‌த்துல நடந்துடலாம்" என்ற கோபுவிடம், "விடுப்பா... இப்பயென்ன, நடந்தா போச்சு" என்று கூறி சமாதானப்படுத்தினேன். அவனுக்கு ஒரு உறுத்தல்.. முதன்முதலில் தன் நண்பனை நடக்க வைத்தா வீட்டிற்கு அழைத்துச் செல்வதென்று. அவன் என்ன செய்வான் பாவம்... அவங்க ஊருக்கு நேரடியா காலையிலே ஒரு முறையும் சாயங்காலம் ஒரு முறையும் தான் பஸ் வருமாம். மத்த நேரத்துல வந்தா இப்படித்தான்.. அதாங்க நடராஜா வண்டியிலே நடையக்கட்ட வேண்டியதுதான்.

ஆமா சொல்ல மறந்துட்டேன் பாருங்க.. கோபும் நானும் ஒன்னாதான் படிக்கிறோம் காலேஜ்ல. இந்த சினிமா படத்துல காட்டற‌மாதிரியெல்லாம் கற்பனை பண்ணிக்காதீங்க. அது இல்லாதவன், பொல்லாதவன் படிக்கிறத்துக்குன்னே கட்னமாதிரி நாலஞ்சு கட்டடம்.. அஞ்சாறு கோர்ஸ்... முக்கியமா வரலாறு, பொருளாதாரம், தமிழ், பண்பாடுன்னு வேலையே கெடக்காத படிப்புங்க. பாதி நேரம் அரட்டைதான்... அப்பப்ப யாராவது ஒரு வாத்தியாரு வந்து வகுப்பெடுப்பார். அதுலயும் பெரும்பாலும் கெஸ்ட் லக்சரர்தான்.

கோபும் நானும் நெருங்கிய நண்பர்கள்.. முதல் நாள் வகுப்புலேயே பக்கத்துல ஒக்காந்து ஒருத்தர் அறிமுகப்படுத்திக்கிட்டதுல இருந்து ஒண்ணா மண்ணாயிட்டோம். ரெண்டுபேரும் ஒருத்தர ஒருத்தர் பிரிஞ்சு எங்கேயும் போற‌துமில்லை; எதுவும் செய்யற‌துமில்லை.. ரொம்ப நல்ல பையன். வெளிப்ப‌டையா பாராட்டுவான். நான் சின்னதா எதாவது செஞ்சிட்டா போதும்.. இந்த செமஸ்டர் ரேங்க் வாங்கறது, கவிதை எழுதுற‌துனு... துள்ளிக் குதிப்பான். என்னமோ உலகத்தையே செயிச்சிட்ட மாதிரியான பூரிப்பு அவன் முகத்துல தெரியும். அப்புறம் ஏதாவது தப்புனு பட்டா மூஞ்சுக்கு நேரா கேட்டிருவான். அப்புறம் அவனப் பத்தி சொல்லனுமுன்னா... ம்ம்... அவங்கிட்ட ஊருக்குப் போயிட்டு வர்ரன்னைக்கு தவிர மத்த நாள்ல எப்பவுமே காசிருக்காது. க‌டன் வாங்கித்தான் செலவு பண்ணிக்குவான். பணம் வந்ததும் திரும்பிக் கொடுத்துட்டு மறுபடியும் கடன்வாங்க ஆரம்பிச்சிடுவான். இதுல பாதிநாள் என் பாக்கெட்டத்தான் தொலைப்பான். சரி அதவிடுங்க, தலைவரு எதுக்காக‌ என்ன அவங்க வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போறாரு தெரியுமா, இன்னைக்கு அவங்க குலசாமிக்கு பூசை.. அதுக்கு தான் இப்படி நடந்தே போய்க்கிட்டி இருக்கோம்.

இந்த ரோட்டப் பாருங்க.. இதுல எப்படி பஸ் ஓடும்.. நடக்கவே முடியல குண்டும் குழியுமா இருக்கு.. போதாக்குறைக்கு பத்தடிக்கு ஒரு வளைவு வேற.. ஆனா ஊரு பச்சப்பசேல்னு இருக்கு... இந்த உச்சி வெயிலேயும் காத்தப்பாருங்க சும்மா ஆளையே தூக்கிட்டுப் போயிடும் போலே இர்ருக்கு. ஆடிக்காத்துல அம்மிக்கல்லும் பறக்குமுன்னு சும்மாவா சொன்னாங்க. இந்த ஊரு காத்து ஆளையே தூக்கும் போல... ஒரு நிமிஷம் இருங்க... ஏதோ தப்பு சத்தம் கேக்குது. கோபுகிட்ட கேட்போம், ஊரு நெருங்கிடுச்சானு. "என்ன மச்சி இன்னும் எவ்வளவு தூரம்பா? என்னது வந்துட்டோமா? இந்த தப்புச் சத்தம் கேக்குற இடமா?" நெருங்க நெருங்க தப்புச் சத்தம் மிகத் தெளிவாக கேட்டது. முன்று கி.மீ. தொடர் நடைபயணத்தை முடித்து ஒருவழியாக வீடுபோய் சேர்ந்துவிட்மோம். அம்மா, அப்பா, தங்கை, அண்ணன், பாட்டி என அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தான். அண்ணன் எங்கோ வெளியில் செல்வதாக சென்றுவிட்டார். அம்மாவும், அப்பாவும் என் அருகில் வந்து அமர்ந்து கொண்டு எங்களது படிப்பைப் பற்றியும், ஹாஸ்டல், உணவு மற்றும் எனது குடும்ப விவரங்களையும் கேட்டுக் கொண்டிருந்தனர். அதற்குள் கோபுவின் தங்கை டீ கொண்டு வந்து தந்தாள். டீயைக் குடித்துவிட்டு இருவரும் குளத்திற்கு குளிக்கச் சென்றோம்.

அந்த குளத்தங்ரையில் தான் கோயில் இருந்தது. கோயில் என்றால் ஒரு சிறிய கீத்துக் கொட்டகை. கொட்டகைக்குள் சிறிய களிமண்ணால் அமைக்கப்பட்ட மேடை. அந்த மேடையின் நடுவில் செங்கல் நடப்பட்டு அதில் பூமாலை போடப்பட்டிருந்தது. அது தான் சாமி. அந்த மேடையின் கீழ் வாழை இலையில் படையல் பொருட்களான பழங்கள், மாவு, பொங்கல் வேறு சிலவும், வேப்பிலை கொத்துக்களும் இருந்தன‌. அப்புறம் கொட்டகையின் வெளியில் ஒரு சிறிய பந்தல் போடப்பட்டு அதன் கீழ் நான்கைந்து மேடைகள்.. அவற்றில் உள்ளே இருந்தது போலவே படையல்கள் போடப்பட்டிருந்தது. பந்தலருகே நின்று நான்கைந்து பேர் பறையடிக்க, சிறார்கள் சிலர் பறையடிக்குத் தகுந்தாற்போல் ஆடிக்கொண்டிருந்தனர். இன்னும் சிலர் மண்ணில் அமர்ந்து ஏதோ விளையாடிக் கொண்டிருந்தனர்.

குளித்து விட்டு வீட்டிற்குச் சென்றதும் அம்மா என்கையைப் பிடித்துக் கொண்டு, "ஏம்பா எப்ப சாப்பிட்டு வந்தீங்களோ தெரியல, சாமி கும்பிட்ட பிறகுதான் சாப்பிடணும்.. கொஞ்ச பொருத்துக்கப்பா"ன்னு கெஞ்சலாக கேட்க, "பசியெல்லாம் ஒன்னுமில்லம்மா... வர்றப்பதான் பஜ்ஜி வடையெல்லாம் சாப்பிட்டு வந்தோம். சாமி கும்பிட்டுட்டே சாப்பிடலாம்.. நீங்க கவலப்படாதீங்கம்மா" என்று சொன்னதும், "சரிப்பா.. அப்ப நான் கோயில் வாசலுக்குப் போறேன். நீங்க சீக்கிரம் கௌம்பி வாங்க"ன்னு கூறிவிட்டு தங்கையையும் கூட்டிக்கொண்டு சென்றுவிட்டார். பிறகு நானும் கோபும் ஆடை அல‌ங்காரங்கள் பண்ணி, அட ஒண்ணுமில்லங்க.. வேற கைலி சட்டையை மாற்றிக் கொண்டு கோயிலுக்குக் கிளம்பினோம். இப்போ கோயில்ல‌ ஒரு இருபது முப்பது பேர் இருப்பாங்க. கொஞ்சம் கூட்டமா இருந்துச்சி. எல்லாம் அவங்க பங்காளிங்க. அந்த கூட்டத்துக்குள் ஒருவர் மட்டும் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். சாமி கொட்டகைக்குள் போற‌தும், பின் வெளியில் பந்தலருகில் வருவதும், 'டேய் பெரியவனே அந்த நெருப்புச்சட்டிய நல்ல ஊதிவிடு, எப்பா நீ போய் அந்த கடைசிவூட்டுக்காரன கூட்டிக்கிட்டு வாயேன்' என்று கட்டளைகளை அள்ளி வீசிக்கொண்டும் காணப்பட்டார். அவர் தான் அந்தக் கோயிலின் பூசாரியாம். அதுமட்டுமில்லை அவங்க பங்காளி குடும்பத்துலேயே வயசுல மூத்தவரு, கொஞ்சம் விசயம் தெரிஞ்சவரும் கூட.

ஒருவர் இருவராக அனைவரும் பந்தலருகில் வந்து சேர்ந்தார்கள். "என்னப்பா எல்லாரும் வந்தாச்சா... சாமி கும்பிட ஆரம்பிச்சிடலாமா.." பூசாரி கேட்க, "ம்ம்ம் வந்தாச்சு வந்தாச்சு ஆரம்பிங்க நேரமாவுது"னு அங்குமிங்குமா நான்கைந்த குரல்கள் ஒலிக்க, "ஏப்பா மரளாளியெல்லாம் வந்து சட்டைய கழட்டிட்டு வரிசையா நில்லுங்க" என்று சொல்லவும், ஒரு ஏழு எட்டு பேர் ஆண்கள் மட்டும் வரிசையாக நின்றார்கள் அதில் கோபுவும் ஒருத்தன். சும்மா சொல்லக்கூடாது.. அவங்களுக்கெல்லாம் அப்படி ஒரு உடல்கட்டு. வெயிலு மழையினு பாக்காம இராப்பகலா சேத்தோடு வாழ்ற இவங்கள மாதிரியான ஆளுங்களுக்கு ஒடம்பு இப்பிடி கின்னுன்னு இருக்கிறது ஒன்னும் ஆச்சரியமில்லைதான். சேத்தோடு சோறு தின்னு வளர்ந்த, கருத்து உருண்டு திரண்ட உடம்பு.

நெஞ்சு, கையினு சந்தனத்தைப் பூசி ஆளுக்கொரு மாலையணிவித்த பூசாரி, "ஏலே தப்படிங்களேன்டா.. நீங்க ஏன் மசமசனு நிக்கிறீங்க" என்று கூறியதோடு "ஏ சின்னவனே.. அந்த நெருப்பு சட்டிய இங்க கொண்டுவா" என்று கூறிவிட்டு கொட்டகைக்குள் சென்று எதையோ தேடிக்கொண்டிருந்தார். அதை பார்த்துக் கொண்டிருந்த ரெத்தினம், "அட என்னாத்த தேடுற.. சம்பிராணி தானே! அந்த மூங்கிக் கூடையில இருக்குது பாரு." என்றார். பூசை ஆரம்பிச்சு பூசாரி நெருப்பு சட்டியில சாம்பிராணியக் கொட்டி சாமி மேடைகளில் காட்டிவிட்டு மரளாளிகளின் முகத்தில் காட்டி சாமி வரவழைக்க ஆரம்பித்தார். சாம்பிராணி வாசத்திற்கும் கண்ணுசாமியின் பறையடிக்கும், வெளியூரிலிருந்து கூட்டிவந்திருந்தவரின் உடுக்கை சத்தத்திற்கும் எனக்கே மயக்கம் ஏறி ஆடவேண்டும் போலிருந்தது. ஆனால் சாமி அருள் மட்டும் யார்மேலயும் இன்னும் வரல. பூசாரியும் உடுக்கையடியாளும் "ம்ம்ம் வந்துரு, வந்துரு"னு அதட்டிக் கொண்டிருந்தார்கள். போதாக்குறைக்கு பூசாரி திண்ணூரு அள்ளி அவர்கள் தலையில் அடிப்பதும், நெற்றியில் பூசிவிடுவதுமாக இருந்தார். அப்போது தம்புசாமி லேசாக அசைவதைக் கண்டவுடன் அவர்பக்கமாக நகர்ந்து நின்னு, நெருப்பு சட்டியில் சாம்பிராணியைக் கொட்டி புகையை அவர் மூஞ்சில் பிடித்து 'என்ன தாமதம் வந்துருங்க' என்று திண்ணூரை அள்ளி தலையில் போட அவர் அப்பிடியே அசையாமல் நின்னுவிட்டார். பூசாரிக்கு முகம் வாடிவிட்டது. உண்மையில் அவர் கடுப்பாகியிருக்க வேண்டும்.

அலுத்துக் கொண்டே அருகில் நின்றவர்களிடம் புகையை காட்டிக் கொண்டிருக்க ஓ..... வென ஒரு சத்தம்.. கூட்டத்தில் நின்ற பலருக்கு தூக்கி வாரிப் போட்டுருச்சி.. பாவய்யா ஜங்கு ஜங்கினு ஆடிக்கொண்டிருக்க பூசாரி குறுக்கிட்டு "சும்மா வந்து ஆடிக்கிட்டிருந்தா.. எப்பிடி? வந்திருக்கிறது யாருனு சொல்லனுமில்ல" என்று கேட்டதும், சாமி ஆடிக்கொண்டிருந்த பாலய்யா மேடையில் போய் விழ, அது முனியாண்டிதான் என அனைவரும் உறுதிப்படுத்திக் கொண்டனர். இதற்கிடையில் படபடவென புல்லட் சத்தம். கருப்பையா தேவர் வந்து கோவிலுக்கு அருகில் வண்டியை நிறுத்தி இறங்கினார். கூடவே கோயம்புத்தூரிலிருந்து மரம் வாங்க வந்திருக்கும் கவுண்டரும் இறங்கி நிற்கிறார். பக்திமயக்கத்தில் அவர்களை யாரும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. சுப்பையா மட்டும் லேசாக நகர்ந்து சென்று ஊர்த்தலைவர் என்ற முறையில் வணக்கம் வைத்து "என்ன வேலையா வந்தீங்க" எனக் கேட்க, "ஒன்னுமில்ல சுப்பையா.. நம்ம கவுன்டருக்கு பாலையா வீட்டு கொள்ளைல நிக்குற மரத்தை பார்த்துட்டு போனோம், அதான் பேசி பணத்தக் குடுத்துட்டா காணாமல் மரத்தை வெட்டி ஏத்திடலாம். இவயென்னனா சாமியாடிகிட்டு இருக்கான்." என்றார். "அட ஒரு அஞ்சு நிமிசம் பொறுங்க இப்ப. மலையேறிடும்" என்ற சுப்பையாவிடம், "அது யாரு ரெண்டு பேரு இந்நேரத்துக்கு வயக்காட்லேர்ந்து வர்ற‌துங்க?" என்று கேட்டார்.

கருப்பையாவை மறித்து, "அவனா நம்ம ராமு கோணாரு, கிழக்க ஆப்டுக்கின போய் கூட்டு வர்ராறு, முத்துசாமி நாடார் பனை ஏறிட்டு வர்றாரு" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் இருவரும் இவர்களை நெருங்கிவிட "அட என்ன ரெண்டு பேரும் இன்னேரத்துக்கு பள்ளத்தெருக்குள்ளேருந்து வர்ரீங்க" என்று கேட்டவர், தனக்கு பேச்சத் துணையாக அவர்களையும் நிறுத்தி வைத்துக்கொண்டார். அந்தப் பக்கத்தில் முன்னடியான் அமர்கள‌ப்படுத்திக் கொண்டிருந்தார். பல்லயத்தில் விழுந்த பாலையா எதையோ பரக்கபரக்க தேடிக்கொண்டு "எனக்கு கொர வெச்சிடீங்கடா டேய்.." என்று சத்தம் போட, பக்கத்துலு நின்ற பெரியசாமி "என்ன கொற வெச்சாங்க... அவனவன் கையில காசு பணமில்லாம நடவு நட்டுவுடுறோம், நாத்து பறிச்சி வுடுறேர்முன்னு கடனவொடன வாங்கி சாமி கும்புட்டா எப்ப பாரு கொற கொறனு சொல்லிக்கிட்டு, இப்ப என்ன! சரக்கு தான தேடுறே? அந்த பாட்டீல்லே இருக்கு பாரு.. ஓ.. கலரா இருக்கிறதால தெரியலயா. அது அரசாங்க சாராயம்.. கலர் மட்டும் தான் மாறியிருக்கும். மத்தப்படி காரம் சாரம் எல்லாம் ஒன்னுதான்.. ஆனா காசுதான் அதிகம்." என்றார். "டேய்.. ம் ம் ம்.. அது இல்லடா.. எங்கடா ஒரு வரப்புக்குள்ள கட்டடம் கட்றோமுன்னு போன வரப்புல சொன்னீங்களே என்னடா ஆச்சு ம்..ம்..ம்..."

"அட இங்க பார்றா.. சாமியே சைக்கிள்ளே போற‌ப்ப பூசாரிக்கு புல்லட்டு கேக்குது.. நாமளே கோழிக்கூண்டு போல காலனி வூட்டுக்குள்ள கெடந்து கஷ்டப்படுறோம். வெயில் காலத்துல அனலா கொதிக்குது.. மழைக்காலத்துல ஒழுகித் தொலைக்குது. இதுல இவங்களுக்கு கட்டட‌ம் வேணுமாமுல"னு ஆனந்து நக்கலாக பேசிக்கொண்டிருக்க, "டேய் சும்மா இருக்கமாட்டே" என்று அதட்டிய பூசாரி, "சரி சரி! ஆடுனது போதும்.. வாங்க அம்மனை வரவழைக்கலாம்.. பொங்க வைக்க நேரமாகுது" என்றார். வழக்கமாக அம்மன் சாமி வரும் குப்புசாமியின் நெற்றியில் திண்ணூரைப் பூசிய பாலையா "ம்ம்ம்... வாடையப் புடிங்கடா.. ஆத்தா வந்துருவாடா" என்று கத்திக்கொண்டிருக்க உடுக்கையோடு பறைசத்தமும் சும்மா நிற்பவர்களையே சிலிர்க்க வைக்க, குப்புசாமி தாத்தா லேசாக அசைய ஆரம்பிக்கிறார். "இப்ப பாரேன் இவரு ஓடீப்போய் வேப்பிலையை எடுத்துக்கிட்டு குதிச்சு குதிச்சு ஆடுவாரு"னு பக்கத்துல நின்னுகிட்டு இருந்த சிறுவர்கள் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள்.

ஓ..ஓ... என்று சத்தமிட்டபடி அம்மன் அருள் வந்த குப்புசாமி தரையில் விழுந்து புரண்டுக்கொண்டு "டேய்... மஞ்ச தண்ணிய ஊத்துங்கடா... ஒடம்பெல்லாம் எரியுதுடா" என்று சத்தம் போட்டுகிட்டு உருண்டு பிரண்டு வர அனைவரும் பயந்தே போய்விட்டனர். பூசாரி குடத்தில் கரைத்து வைத்திருந்த மஞ்சத் தண்ணிய குப்புசாமியின் தலையில் ஊத்திக்கொண்டே "ஆத்தா நாங்க ஏதாவது குத்தம் கொற வச்சுருந்தா மன்னிச்சிருமா" என்று பயப்பக்தியுடன் நடுங்கிக் கொண்டிருக்க சுற்றியிருந்தவர்களும் பதற்றத்துடனேயே காணப்பட்டனர். மஞ்ச தண்ணி ஊற்றியபின் சற்று ஆசுவாசப்பட்ட அம்மனைத் தூக்கி நிறுத்திய பூசாரி "எங்களுக்கு ஏதாவது குறைன்னா ஒண்ண கூப்பிட்டு சொல்லி எங்க மனச தேத்திக்குரோம்.. நீயே வந்த குறையினு சொன்னா நாங்க என்ன பண்ண முடியும்" என்றவர் தொடர்ந்து "யாராவது சுத்த பத்தம் இல்லாம வந்திருக்கீங்களா?" என்று அதட்டலாக கேட்டுக் கொண்டிருந்தபோது "உங்கமேல ஒரு குறையும் இல்லடா.. எல்லாம் நாங்க பாத்த வேலைக்கு தான் இப்ப அனுபவிக்கிறோம். எங்களயெல்லாம் அந்த பெரிய சாமிங்க சேந்து அடிக்கிறாங்க... அதுவும் சாட்டையாலயே அடிக்கிறாங்க" என்று அம்மன் கூற இதை சற்று தொலைவில் நின்று கேட்டுக்கொண்டிருந்த தேவர், நாடார், கவுண்டர் மற்றும் கோனார் என அனைவரும் "வழக்கமா சாமி வந்த பொங்க வைக்கச் சொல்லும்; கெடா வெட்டச் சொல்லும். இது என்ன புதுக் கதையா இருக்கு"ன்னு முணுமுணுத்துக் கொண்டே சாமி கூறுவதை கேட்க பந்தலை நோக்கி நெருங்கி வந்தனர்.

சாமி சாட்டையால அடிவாங்னதா சொன்னதக் கேட்ட பூசாரி "என்னாத்தா சொல்லுற? நாங்கதான் பேருக்கு மனுசனா பொறந்து அடிப்பட்டு நசுக்கப்பட்டு சாகுறோம்னா சாமியான உங்களுக்குமா இந்த நிலை" என்று அப்பாவியாகக் கேட்க, "அடபோட சாமியாமுல்ல சாமி.. அதெல்லாம் உங்களுக்குதான், அங்க நாங்களும் உங்கமாதிரித்தான். இங்க வந்தா வீச்சரிவாளையும் சுக்குமோத்தாடிளையும் தூக்கி சுத்திகிட்டு மீசைய முறிக்கிட்டு ஆடுர வீரன், கருப்பண்ணன், அய்யனாரெல்லாம் அங்க போனா எல்லாத்தையும் சுருட்டி கம்கட்டில வச்சுகிட்டு குனிஞ்சுத்தான் நிக்கனும்" என்று அம்மன் சொல்ல "அப்ப நீங்கெல்லாம் சாமியில்லையா, நாங்க கும்பிடற‌தெல்லாம் வேஸ்ட்டா" என்று பூசாரி கேட்க, "அதயேண்டா கேக்குற.. அத கேக்கபோயிதான் இவ்வளவு அடியும் ரணமும்" என்று அம்மன் கூறியது. "நல்லா புரியற‌படி சொல்லும்மா... நாங்க என்னாத்த கண்டோம்" என்று பூசாரி கேட்டார். சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு மூச்சை நல்லா உள்வாங்கிவிட்டு அம்மன் தொடர்ந்தது.

"அதுவந்து என்ன நடந்ததுன்னா, போன வெள்ளிக்கிழமை பெரிய கோவில்ல பூசை வைச்சுருக்காங்க. அதுல பெரிய சாமிக்கெல்லாம் அதான் பெருமாள் லெட்சிமிக்கெல்லாம் வகை வகையா படையல் வெச்சுட்டு வெளியில இருக்கிற நம்ம பெரியாச்சி மேடைக்கு வந்த அய்யரு கையில உருட்டிகிட்டு வந்த சோத்துருண்டைய வச்சி தண்ணி தெளிச்சிருக்காரு. கடுப்பான பெரியாச்சி ஓங்கி அடிச்சிடுச்சான்.. அய்யரு மயக்கம் போட்டுட்டான். மயக்கம் தெளிஞ்சு எழுந்திருச்சவன் நேராப் போய் பெருமாள் கிட்ட சொல்லிட்டான். பெருமாளு இன்னைக்கு காலையில பஞ்சாயத்துனு சொல்லிட்டாரு."

"அப்புற‌ம் என்னதான் ஆச்சி" என்று பூசாரி கேட்க.. "அப்புற‌ம் என்ன கீழத்தெரு, வடக்கு தெக்கு தெரு சாமிங்க, மொத்தத்துல பெரும்பாலான தமிழ் சாமிங்க எல்லாம் கௌம்பிப் போனா அங்க பெருமாள் செம கோவத்துல இருக்காரு. கண்ணெல்லாம் சும்மா செவந்து போய் கிடக்கு. இதுல அந்த நாரதரு வேற சும்மா "நாராயணா! நாராயணா!! என்ன பண்ணீட்டாள் பார்த்தீர்களா பிரபு. ஒரு பிராமணாளை அடிக்கும் அளவிற்குப் போய்விட்டது, கலிகாலம் பிரபு"ன்னு எதையாவது சொல்லி எரியுற நெருப்புல எண்ணெய்யை ஊத்திக்கிட்டு இருக்காரு.

பயங்கர ஆவேசத்துடன் ஆரம்பித்த பெருமாள், "சூத்திரசாதி உமக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும், ஒரு பிராமணனை அடிக்கும் அளவிற்கு. உங்களுக்கான அளவீடுகளின் படிதான் அவா சரியாக படைத்துக்கொண்டு இருக்காளே அப்பற‌ம் என்ன சொல்லும். கேக்குறேன்ல சொல்லும்" என்று அதட்ட, மெல்ல மெல்ல தயங்கியபடி "என்ன பெரிய படையல்.. ஒரு உருண்டை பொங்கல்.. ஆனா உங்களுக்கு மட்டும் ஆறுகால பூசை.. விதவிதமா சோறு, பழம், இனிப்பு அது இதுனு... நாங்க நாள்பூரா காவலாளியாவும் உங்க ஏவலாளியாகவும் இருக்கோம். ஆனா நீங்க சும்மா கோயிலுக்குள்ள உக்கார்ந்து இருக்கீங்க" என்று சொல்லி முடிப்பதற்குள் "ஓகோ... அந்தளவுக்கு ஆயிடுத்தா.. என்மேல விழ வேண்டியதுதான் அவா மேல விழுந்துடுத்தா" என்று பெருமாள் பேசிக்கொண்டிருக்கும்போது, வீரன் கோவப்பட்டு, "பின்ன என்னவாம் ஒண்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரிய வெரட்டுன கதையா எங்காளுக கட்டுன கோயில்லே நீங்க வந்து உக்காந்துக்கிட்டு எங்களை ஒதுக்குப்புறமா நிக்க வச்சுட்டீங்க"னு பேசும்போது பாக்கணுமே. சும்மா வெறச்சு நிக்கற‌‌ குதிரை கணக்கா ஒடம்பெல்லாம் சிலுத்துக்கிட்டு கம்முகட்டியில் வச்சிருந்த வீச்சரிவாளை நிமித்தி கையில புடிச்சிக்கிட்டு நிக்குறாரு.

அவர் முடிச்சதுதான் தாமதமுன்னு அய்யனாரு ஆரம்பிச்சாரு பாரு.. சும்மா லெப்டு ரைட்டுனு வாங்கிட்டாரு. "என்னது நாங்கெல்லாம் அழுக்கா சுத்த பத்தம்மில்லாம இருக்கோமா? எப்பிடி சுத்தமா இருப்போம். தெப்பக்கொளம் உங்களுக்கு மட்டும்தான்.. இந்த கெண‌த்துலயும் தண்ணி எடுக்க முடியாது. குந்தி கெள‌ம்ப ஒரு நல்ல இடம் கூட கிடையாது. ஆனா உங்களுக்கு மட்டும் தெப்பகுளம், தேரோடும் வீதீ, நாலு கோபுர கோவிலு. ஆமா தெரியாமத்தான் கேட்குறேன். இதையெல்லாம் நீங்களா வெட்டி நோண்டுனீங்க. எல்லாம் நாங்க. நாங்கதானயா ஒத்துமையா நின்னு அவ அவனுக்கு தெரிஞ்ச வேலைய செஞ்சி உருவாக்குனோம். ஆனா இன்னைக்கு நீங்க பிரிச்ச நாலு நானூறாயி, நானூறு நாலாயிரமா ஆயிப் போச்சு.. இப்ப எங்களுக்குள்ளேயே அடிச்சுக்குறோம்; வெட்டிக்கிறோம். ஆனா நீங்க ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு தொக்குனு நல்லா குளிர்காயிறீங்க. ஆனா ஒன்னு மட்டும் சொல்லுறேன்.. இனிமே பொறுக்க முடியாது"ன்னவரு இந்தப் பக்கமா திரும்பி, தமிழ் சாமிகளை எல்லாம் பார்த்து, "இங்க பாருங்க இதுக்கு மேலயும் சும்மா இருக்க முடியாது.. நாமெல்லாம் ஒன்னா சேர்ந்து ஏதாவது செஞ்சாவனு"மின்னு சொன்னாரு.. பாரு அவ்வளவுதான் .

பெருமாள் கண்ணுலே மரணபயம். ஆனாலும் அத மறச்சிக்கிட்டு "யாரங்கே இந்த சூத்திர சாதிகளைப் பிடித்து பாதாள சிறையில் அடையுங்கள். மேலும் தினமும் ஆயிரம் சவுக்கடிகளை பரிசாக்குங்கள்" என்று சொன்னதும் நம்ம சாமிகளும் ஆள் அளுக்கு கையில இருந்தா அருவா கத்தினு தூக்கிக்கிட்டு சண்டைக்கு தயாராயிட்டாங்க.. அப்புறம் நான்தான் 'இப்ப இருக்கிற நிலமையில சண்டை போட்டா செயிக்க முடியாது. முதல்ல விடுபட்ட நம்பளோட மத்த சாமிகளயும் சேத்து பலப்படுத்திகிட்டு வந்து ஒருகை பாத்திடுலாமு'ன்னு மல்லுகட்டி கூப்டுகிட்டு வந்தேன். அப்படி ஓடியாரப்ப‌தான் அவங்க பின்னால வந்து அடிச்சதுல ஒடம்பெல்லாம் காயமாச்சு.. அந்த எரிச்சலோடதான் கூடி உட்காந்து பேசிகிட்டு இருந்தோம். அந்த நேரம்பாத்து நீங்க வேற கூப்டீங்களா.. அதான் கொஞ்சம் ஆசுவாசப் படுத்திகலாமுன்னு இங்க வந்தேன்" என்று அம்மன் சொல்லி முடித்தது. உடனே பூசாரி "என்னம்மா சொல்ற? நாங்கதான் இப்படினா நீங்களும்மா? சரி சரி.. உன் புள்ளைங்க எல்லாம் காத்துக் கிடக்குது பாரு. கொஞ்சம் திண்ணூரு கொடுத்து நல்ல சேதி சொல்லிட்டுப் போ."

"இல்லடா. நான் மலையேறனும்டா! வீரண்ணன் கூப்பிடுறான் பாரு.. மத்த சாமிகளெல்லாம் வந்துட்டாங்கனு நினைக்குறேன்.. அதான் கூப்பிடுறான். ஒன்னும் கவலப்படாதடா.. காலையில கெடா வெட்டுப் பூசைக்கு எல்லாம் சேர்ந்தே வந்து நல்ல சேதி சொல்ரோமுன்"னு சொல்லிட்டு அம்மன் மலையேறுடிச்சு. கோயில நின்ன எல்லாரும் பெருமூச்சு விட்டுக்கிட்டு ஒருத்தர ஒருத்தர் திரும்பி பாக்குறாங்க.. கொஞ்ச நேரத்துல பார்த்தா பந்தலுக்கு வெளியில நின்னு தப்படிச்ச கண்ணுசாமி, மத்த அவரோட ஆளுக. மரம் வாங்க வந்த தேவரு, கவுண்டரு, கூட பேசிகிட்டு இருந்த கோனாரு, நாடாருன்னு எல்லாருமே பந்தலுக்குள்ள... பூசாரி தாத்தா எதையோ சொல்ல மத்தாளுக எல்லாம் தலைய தலைய ஆட்டிகிட்டு ஆளாளுக்கு ஏதேதோ பேசிக்கிட்டு இருக்காங்க. ஒரே கூச்சலா இருக்கு.. ஒன்னும் புரியல.. அப்புறம கொஞ்ச நேரத்துல பாத்தா எல்லாரும் அந்த பந்தலுக்குள்ளேயே உட்கார்ந்துட்டாங்க. எதையோ பேச ஆரம்பிச்சாங்க...

அதுக்குள்ள என் செல்போன் அலர கொஞ்சம தள்ளிப்போய் யாருனு பாத்தா எங்கப்பா பேசுறாரு.. அவருக்கு என்மேல அவ்வளவு பாசம். ஒரு நாளைக்கு ரெண்டு மூணு முறையாவது போன் பண்ணிடுவாரு. "ஏன்பா நல்லாயிருக்கியா.. பாத்து பத்திரமா இரு.. எங்க உன் பிரண்டு வீட்டுக்குத்தானே போயிருக்க. அவங்க வூட்டவிட்டு எங்கயும் வெளியில் போயி சுத்தாத.. பத்திரமா இரு"னு ஒருமாதிரியா பேசுனாரு. ஏன் என்னான்னு கேட்டா அப்புறம்தான் சொல்லுறாரு.. பெரிய கோயில்ல இடிவிழுந்துடுச்சாம். அதுவும் நேரா கர்ப்ப‌‌கிரகத்திலேயே விழுந்திடுச்சாம்.

- முருகவிஜயபாலாஜி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It