அவன், ரமாமணி என்கிற ஒரு நாடக நடிகையிடம் போய் வேலை கேட்டான். ரமாமணி அவனின் பெயரைக் கேட்டாள், அவன் சொன்னான், "என் பெயர் போன வருஷம்" என்று. சொன்னவுடன் அவளுக்குத் தன்னையறியாமல் சிரிப்பு வந்து விட்டது. " என்னது உன் பெயர் போன வருஷமா" என்று கள கள வென சிரித்தாள். அவன் கண்கள் கலங்கியது. உடனே,ரமாமணி, "உங்களுக்கு எப்படி இந்தப் பெயர் வந்தது" என்று கேட்க. அதற்கு அவன், " இது எங்கள் குடும்பப் பெயர் நீங்கள் வேணும் என்றால் வீட்டில்வந்து கேட்டுப் பாருங்கள்" என்று கண்ணை கசக்கிக்கொண்டே சொன்னான்.

அன்றையிலிருந்தே அவனை வேலைக்குச் சேர்த்துக்கொண்டாள். அவள் ஊரு ஊராக நாடகம் நடிப்பதற்குச் செல்வாள். இவனும் கூடவே போவான். ரமாமணி புகழின் உச்சிக்குச் சென்றாள். பட்டித் தொட்டி எல்லாம் ரமாமணியின் பேச்சு தான். அதற்கு காரணம் ‘போன வருஷம்’ செய்த உதவியும் கூட, இவன் தான் நன்றாக விளம்பரப் படுத்தினான். வீட்டு வேலையிலிருந்து நாடக வேலை வரை அனைத்து வேலைகளையும் பார்த்தான். ஆதலால் அவனையே திருமணம் செய்யதுகொள்ளலாம் என்று முடிவு எடுத்தாள் ரமாமணி. 

அதற்கு, 'போன வருஷம்', "அம்மா நீங்கள் என் முதலாளி உங்களை எப்படித் திருமணம் செய்து கொள்ள முடியும்" என்றான். 

ரமாமணி, "எனக்காக எவ்வளவோ கஷ்டப்பட்ட உனக்கு என்னை கொடுப்பதில் தவறு ஒன்றும் இல்லை" என்றாள். 

இவர்களின் திருமணம் கோயிலில் நடந்தது.  இருவரும் நல்ல கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். அன்று நள்ளிரவு 12 மணி இருக்கும். தூக்கத்தில் இருந்து எழுந்தான் 'போன வருஷம்'. அவளுக்குத் தெரியாமல் நகைகளையும் பணத்தையும் எடுத்துக்கொண்டு அர்த்த ராத்திரியில் வீட்டை விட்டு கிளம்பினான். காலையில் கண்விழித்தாள் ரமாமணி. பக்கத்தில் படுத்திருந்த கணவனைக் காணவில்லை என்றவுடன் அவளின் இதயத் துடிப்பு அதிகரித்தது. அக்கம் பக்கத்திலும் விசாரித்தாள். கடைசி வரை கண்டுபிடிக்க முடியவில்லை. உடனே அந்த நாட்டின் அரசரிடம் போய் முறையிட புறப்பட்டாள். 

‘போன வருஷம்’ தப்பித்து வெளியூருக்குப் போய்க்கொண்டு இருந்தான். அந்த வழியே ஒரு முதியவர் குதிரை வண்டியில் வந்து கொண்டிருந்தார். வண்டியை நிறுத்திய முதியவர், "தம்பி! இந்தக் குதிரை வண்டியைப் பார்த்துக்கொள், தாகமாக இருக்கிறது. தண்ணீர் குடித்து விட்டு வருகிறேன்" என்றார். போவதற்கு முன் 

முதியவர், " தம்பி உங்க பெயர்" என்று கேட்க 

" குதிரைவண்டிக்காரன்"  என்று பெயரை மாற்றிச் சொன்னன். 

"நல்ல பெயர், இவன் அப்பன் கிறுக்கனோ! இப்படிப் பெயர் வைத்திருக்கிறான்." என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு அருகில் உள்ள குளத்திற்குத் தண்ணீர் குடிக்கப்போனார். 

அந்த முதியவர் போனவுடன் குதிரை வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டான் ‘குதிரைவண்டிக்காரன்’. முதியவர் வந்து பார்க்க, குதிரையைக் காணோம். வெகு நேரமாகியும் ஆள் வரவில்லை. "அரசரிடம் போய் நீதி கேட்போம் "என்று முதியவர் முடிவு பண்ணினார்.

குதிரை வண்டியில் போய்க்கொண்டிருந்தான் குதிரைவண்டிக்காரன். அப்போது பட்டணத்துக்குப் போவதற்காக  இலக்குமி அம்மா தன் வயதுக்கு வந்த மகளுடன் நின்று கொண்டிருந்தாள். குதிரை வண்டியை கை மறித்து நிறுத்தினாள். 

"தம்பி! என் மகளுக்கு கால் வலிக்கிறது பட்டணம் வரைக்கும் போக வேண்டும். இறக்கி விட முடியுமா?" என்று இலக்குமி அம்மா கூற, 

" ம்ம்…. போகலாமே".. 

" தம்பி உங்க பெயர்?" 

" மாப்பிள்ளைத் தம்பி" என்று இப்போதும் பெயரை மாற்றிச் சொன்னான். 

முதலில் அந்த அம்மாவின் மகள் ஏறினாள். அவளின் விழியைப் பார்த்ததும்  இவனுக்கு வியர்த்துவிட்டது. அடுத்து இலக்குமி அம்மா ஏறுவதற்குள் வண்டியை எடுத்துவிட்டான். அவள் தடுமாறி கீழே விழுந்தாள். "பாவி பய! என் பெண்ணைக் கூட்டிக்கொண்டு போகிறானே! காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்"  என்று அலறினாள். யாரும் வந்த பாடில்லை. லக்குமி அம்மாள், நீதி வேண்டி அரசரிடம் முறையிடக் கிளம்பினாள். 

ரமாமணி, குதிரை வண்டியை இழந்த முதியவர்,   இலக்குமி அம்மா என மூன்று பேரும் அரசரிடம் முறையிட்டனர். 

அரசர் ஒவ்வெருவரையும் தனியாக விசாரித்தார். 

முதலில் ரமாமணி வந்தாள், "அரசே போன வருஷம் என் நகைகளையும் என்னையும் ஏமாற்றி விட்டான்" 

அதற்கு அரசர், " ஏம்மா அதற்கு ஏன் இப்ப வந்து சொல்லுகிறாய்" 

" இல்லை அரசே அவன் பெயரே போன வருஷம் தான்" 

"என்னம்மா சொல்லுகிறாய் பெயரே போன வருஷமா ஆச்சரியமாக இருக்கிறதே. சரி அப்படி போய் நில், மந்திரியிடம் சொல்லி அவனை கண்டுபிடிக்க ஏற்பாடு செய்கிறேன்" 

அடுத்து வந்தார் முதியவர், " அரசே குதிரைவண்டிக்காரன் குதிரையை ஓட்டிகொண்டுபோய் விட்டான்" 

"குதிரை வண்டிக்காரன் ஓட்டாமல் வேற யார் ஓட்டுவார் முதியவரே"

 "இல்லை அரசே குதிரைவண்டிக்காரன் என்பது அவனுடைய பெயர்" 

" ஒரே குழப்பமாக இருக்கிறது, சரி நீயும் போய் அங்கே நில்"

அடுத்த இலக்குமி அம்மா வந்தாள், "அரசே மாப்பிள்ளைத் தம்பி  என் பெண்ணை கூட்டிக்கொண்டு போய்விட்டான்"

"மாப்பிள்ளைத் தம்பி என்பது உன் பெண்ணைக் கூட்டிக்கொண்டு போனவன் பெயர் தானே" 

" ஆம் அரசே" என்றாள் இலக்குமி. 

" நினைத்தது சரியாகப் போயிற்று"

மூன்று பேரிடமும் விசாரித்தார் அரசர். அவர்கள் அனைவரும் அவனின் அங்க அடையாளங்களைச் சொன்னார்கள். 

"ஆக, மூன்று பேரையும் ஒருவனே ஏமாற்றி இருக்கிறான். இதிலிருந்து நன்றாகப் புலப்படுகிறது. சரி இனி நான் பார்த்துக்கொள்கிறேன். வழக்கு முடியும் வரை நம் அரண்மனையிலே தங்கி இருங்கள்" என்று உத்தரவு இட்டார். 

மந்திரி, படைவீரர்கள் என பத்து பேர் கொண்ட தனிப்படை நாடு முழுவதும் தேடினர்.  மூன்று பேரும் சொன்ன அடையாளத்தை வைத்து ஒருவனை அழைத்து வந்தார்கள். 

அரசர் அவனைப் பார்த்தார். அவனின் முகம் அப்பாவித்தனமாகவும், எதுவுமே தப்பு செய்யாதது மாதிரியும் தெரிந்தது. ரமாமணி, குதிரை வண்டியை இழந்த முதியவர்,  இலக்குமி அம்மா என மூன்று பேரும் அவனைப் பார்த்தவுடன், "இவன் தான் ....இவன் தான்... இவன் தான்....." என்ற கூச்சல் அரசரின் காதை கிழித்தது. 

அரசர், " அமைதி.. அமைதி ...நான் விசாரிக்கிறேன், தம்பி ! உன் பெயர் என்ன?" 

கண்கலங்கிய நிலையில், " அரசே! இந்த வருஷம்..." 

இந்த வருஷம் என்று சொன்னவுடனே, 

அரசர்,"என்னது இந்த வருஷமா?" என்று ஆச்சரியப்பட 

"அரசே! என்ன காரணத்துக்காக என்னை அழைத்து வந்தீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?" 

பொய் சொல்லுகிறான் என சுதாரித்துக்கொண்ட அரசர், 

" இவர்களை யாரு என்று தெரிகிறதா" 

"இவர்கள் யார்? இப்போது தான் இவர்களை நான் பார்க்கிறேன்" 

அந்த மூன்று பேரும் "பொய் .........பொய்.......பொய்..." என்று சத்தம் போட்டனர். 

"அமைதி...அமைதி...இவர்கள் மூன்று பேரும் உன் மேல் குற்றம் சுமத்தியிருக்கிறார்கள். அந்தக் கடவுள் மேல் சாட்சியாக, நீ போன வருஷம் என்று பெயர் வைத்து அந்தப் பெண்ணை  ஏமாற்றவில்லையென்று சொல் பார்ப்போம்" 

" ஓ! போன வருஷமா! இப்ப தான் புரிகிறது. அது என் அண்ணின் பெயர் அரசே!. இது எங்கள் குடும்பப் பெயர். நாங்கள் இரண்டு பேரும் இரட்டைக் குழந்தைகள். அவன் வீட்டை விட்டு ஓடி நான்கு மாதங்கள் ஆகிவிட்டது. சந்தேகம் இருந்தால் எங்கள் வீட்டில் வந்து கேளுங்கள்" என்று சொன்னான். இவன் பேசிய பேச்சில் ஒரு உண்மை இருக்கிறது என்பதை உணர்ந்தார்  அரசர். 

அரசர்  நீதியை வழங்கினார். அதன் படி ‘இந்த வருஷத்தை’ இந்த வழக்கில் இருந்து விடுவித்தார். மூன்று வீரர்களை ‘இந்தவருஷத்துடன்’ அனுப்பி ‘போனவருஷத்தைப்’ பற்றிய உண்மையை அறிந்துவரச் சொன்னார். இவர்கள் அனைவரும் அந்த மூன்று வீரர்களுக்காகக் காத்திருந்தனர். 

வெளியூர் பயணம் போயிட்டு அரண்மனைக்குத் திரும்பிக்கொண்டிருந்த மந்திரி, மரநிழலில் இளைப்பாறுவதற்காக ஒரு மரநிழலில் குதிரைவண்டியை நிறுத்தினார். அப்போது மரத்திற்குப் பின்னால் சின்னப் புதரில் யாரோ முனங்கும் சத்தம் கேட்டது. போய்ப் பார்த்தார் மந்திரி. மூன்று வீரர்கள் அடிப்பட்ட காயத்துடன் படுத்துக்கிடந்தனர்.

Pin It