இருள் குடிக்காட்டுச் சேரிக்குடிசைகளை மெல்ல மெல்ல விழுங்கிக் கொண்டிருந்தது.

சேரியின் கிழக்கே, பாடுதோப்பின் களத்து மேட்டில் பூதமாய்க் கிளை சிலிர்த்து மிரட்டிக்கொண்டிருந்த ஈச்ச மரத்துப் பறவைகளின் பேரிரைச்சல் மெல்ல மெல்ல அடங்கிக் கொண்டிருந்தது. குறுக்கும் நெடுக்குமாய் ஓடிய, உவர்மண் புழுதி நிறைந்து மேவிய பாதையின் இருபுறமும் சிதறிக் கிடந்த குடிசைகளில் சிம்னிகள் எரிந்துகொண்டிருந்தன. ஊர்காலன் கோயிலுக்குச் செல்லும் மாட்டு வண்டிப் பாதையும், தெற்கே மந்தை மேட்டிற்குப் போகும் ஒற்றையடிப்பாதையும் சந்திக்கும் முச்சந்தியில் நடப்பட்டிருந்த கல்தூணின் மேல் நிற்கும் லாந்தர் விளக்குதான், இரவு நேரங்களில் சேரிக்கான அடையாளமாக இருந்தது.

லாந்தர் விளக்குகூட ஞாயிற்றுக்கிழமைகளில்தான் எரியும். பஞ்சாயத்துப் போர்டு ஆள் வாரத்திற்கு ஒரு நாள் லாந்தரில் சீமைத்தண்ணீர் ஊற்றிவிட்டுப் போவான். அவன் வரவில்லையானால் மாதக் கணக்கில் லாந்தர் எரியாமல் கிடக்கும். இருள் விழுங்கிய சேரிக்குள் இரவெல்லாம் குப்பைக் கூளங்களை எரித்து வெளிச்சமேற்றி புறணிபேசிக் களைப்பார்கள் குடிக்காட்டுச் சேரியின் பெருசுகள்.

முகம் மறைக்கும் இருள் நேரங்களில் தெருக்களில் ஆள் நடமாட்டம் இருக்காது. இங்கொன்றும் அங்கொன்றுமாய் நாற்பது அய்ம்பது குடிசைகள்தானிருக்கும். குடிசையைச் சுற்றிலும் முற்றத்திலும்கூட உயிர்வலி முட்புதர்கள் மண்டிக் கிடக்கும். வத்திராங்குளத்துக் கரையடியில் பள்ளமும் மேடுமாய் பெரும் புதராய்க் கிடந்த புறம்போக்கு அது. சேரி முளைத்த காலம் எதுவெனக் கணக்கில்லை. ஒன்று ரெண்டாகி, அய்ந்து பத்தாகி இப்போது சுற்று வட்டாரத்திற்கெல்லாம் தெரியுமளவிற்கு குடிக்காட்டுச் சேரி வளர்ந்துவிட்டது. ஆனாலும் சுத்த பத்தம் இல்லை. நாகமும் சாரையும் புனசலாடும் கண்ணுப் பிள்ளைச் செடி மேட்டிலும்கூட குடிசைகள் முளைத்திருந்தன. வடுக நாயக்கர் தெருக்களில் சாணி சகதி அள்ளி, பழிஞ்சி மாடு மேய்த்து, மலையேறி விறகெடுத்து, விற்றுப் பிழைத்து வந்தது சேரி.

அநேகமாக குடிக்காட்டுச் சேரியிலிருந்து வேலை வெட்டிக்குப் போன ஆண்பெண் அனைவரும் சேரிக்குத் திரும்பிவிட்டனர். அத்திக் காட்டில் ஓடை உடைப்பிற்கு மண்ணள்ளிப் போடப்போன கரிக்காலி, எதிரே வரும் ஆளை மறைக்கும் கும்மிருட்டில், பெரியோடை மணலில், காலை பரசி பரசி நடந்துகொண்டிருந்தாள். அத்திக்காட்டிலிருந்து பேச்சுத் துணைக்கு வந்து கொண்டிருந்த செல்லம்மாகூட அர்ச்சுனன் பொய்கைக்குச் செல்லும் பாதையில் திரும்பிவிட்டாள். குடிக்காட்டு சேரிக்குச் செல்ல இன்னும் இரண்டு மூன்று மைலாவது நடக்க வேண்டும்.

கரிக்காலிக்கு பயம் எதுவுமில்லை. சிறுபிள்ளையிலிருந்தே அம்மாவின் முந்தானையைப் பிடித்துக்கொண்டு பாதை தெரியாத இருட்டிலும் நடக்கக் கற்றுக்கொண்டவள் அவள். அம்மாவோடு சேர்ந்து இருட்டிய பிறகும் தேட்டுக்காக அலைந்து திரிவாள். சாமம் ஆனாலும் தாயும் மகளும் கதை பேசிக்கொண்டே எந்த இருட்டிலும் வீடுவந்து சேர்ந்து விடுவார்கள்.

அம்மா இறந்த பின்பும், கருக்கலில் காடுகரைகளில் அலையும் போக்கு கரிக்காலியிடமிருந்து விலகவில்லை.எந்த இருட்டிலும் பயம் இல்லாமல் நடமாடி வந்தாள். தீட்டுக் காலத்திலும்கூட முனிப்பாறை, அய்யனார் கோயில், எசக்கி பனை என்று பேய் புழங்கும் இடங்களில் சாதாரணமாய்ப் போய் வருவாள் கரிக்காலி.

ஊரடங்கிய பின்னும்கூட, ஊர்காலன் கோயில் கிணற்றில் குளித்துவிட்டு ஈரச் சேலையோடு தண்ணீர் எடுத்து வரும் தைரியம் கரிக்காலிக்குதான் இருந்தது. தன்னை பாம்பு, பல்லியிடமிருந்தும் பூச்சி பொட்டையிடமிருந்தும் மறைத்து, காப்பாற்றி வருவது இருள்தான் என்று கரிக்காலி நம்பினாள்.

அம்மா இறந்த போன பிறகு இருள்தான் அவளது பேச்சுத் துணையாக இருந்து வந்தது. சாமத்தில் தூக்கம் கொள்ளாமல் குடிசைக்குள் அடர்ந்து பரவி நிற்கும் இருளோடு, உரையாடுவது கரிக்காலிக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்போதெல்லாம் அம்மாவும் உடனிருப்பாள். தலையை வருடிக்கொடுப்பாள். களைப்பாகி அம்மா மடியிலேயே படுத்துறங்குவாள். இருளும் அவளோடு சேர்ந்து உறங்கும்.

இருட்டு வேளைகளில் பயமின்றி நடமாடும் கரிக்காலியைப் பார்த்து சேரிக் கிழவிகள் கூட ஆச்சரியப்பட்டு நின்றார்கள். அவளுக்குப் பேய் பிடித்துவிட்டதாகவே சேரிக்குள் பேச்சிருந்தது. இருளைப் பார்த்து பயப்படும் சின்னவன் தாத்தாகூட, கரிக்காலியை கருப்படிச்சிருச்சு என்றும் அதனால்தான் அவளால் இருட்டுக்குள் அவ்வளவு தைரியமாகப் போக முடிகிறது என்றும் கதைவிட்டுக் கொண்டிருந்தார்.

ஆனாலும் இன்று கருக்கிய பிறகுதான் கடைசியாக இருந்த ஒரு சிறு உடைப்பை மண்ணள்ளிப்போட்டு மூடி விட்டு வீட்டுக்குத் திரும்பினாள். என்னவோ, படபடப்புடன் நடந்து கொண்டிருந்தாள். நடையும்கூட அவசரம் காட்டியது. பொழுதடையும் முன்பே குடிசைக்குப் போயிருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள்.

பெரியோடைக்கரை இறங்கி நல்ல தங்காள் கோயில் கடந்து, பாரஸ்ட் பங்களாவிற்குப் போய்விட்டால் ஆள் நடமாட்டம் இருக்கும். வடுகத் தெருக்களில் எரிந்து கொண்டிருக்கும் கரண்ட் பல்புகளைத் துணையாக்கி பனையடிப் பாதை தாண்டினால் உடையார்பட்டி, கூனக்கோயிந்தன் கடை தாண்டி மந்தைமேடு, பிறகு நாலெட்டில் வீடு வந்து விடும்.

நடக்க வேண்டிய தொலைவைக் கணக்கிட்டபடியே, நடையில் ஓட்டம் காட்டினாள். வழக்கமாய் வீடு வரும்வரை கரிக்காலியோடு உரசிக் கொண்டே, உரையாடிக்கொண்ட்டே வரும் இருள், இன்று வெகுதொலைவுக்கு முன்னே செல்வது போல் உணர்வு. வேண்டாத பொருளாய் விழுந்து தரை காட்டிக் கொண்டிருந்தது நிலவொளி.

பெரியோடைக் கரையிறங்கினாள். கரையடியில் பிணம் தூக்கிக் கம்புகள் சிதறிக் கிடந்தன. பூசணக் கம்புகள்தான். அடுப்பில் வைத்தால் பொசு பொசுவென்று போகும். நெருப்புக் காயாது. ஆனாலும், நெல் அவிக்கப் போதுமே என்று எண்ணியவள் சற்று நின்று யோசித்தாள். சிதறிக் கிடந்தவைகளை எண்ணி அளவிட்டாள். ஒரு சுமைக்கு வரும் போலிருந்தது. குனிந்து பொறுக்க ஆரம்பித்தாள்.

இடுப்பில் சொறுகியிருந்த சவுரிக்கயிறை அவிழ்த்து விரித்து, கம்புகளை அடுக்கித் தலைக்கட்டுப் போட்டு, கால் கட்டை இறுக்கினாள். நெஞ்சுக்கட்டை பலம் கூட்டி இறுக்கிக் கட்டி, தூக்கி நிமிர்த்தினாள். காற்றுப் போலிருந்தது. தாவணியைச் சுருட்டி, தலைச் சுமைமேடு வைத்து இடது கையால் எம்பி, கட்டைத் தலையில் தூக்கி பொதுமலாக வைத்தாள். முன்னும் பின்னுமாய் தலையசைத்து இன்னும் பொதுமலாக்கிக் கொண்டே நடை கூட்டினாள்.

இருள் இன்னும் தொலைவாய்ப் போய்க் கொண்டிருந்தது. இரண்டு கைகளையும் வீசி ஓட்டமும் நடையுமாக மாறினாள் கரிக்காலி. வியப்பாக இருந்தது. கரும்புமேடாய் சிறுத்துக் கிடந்த யானைக் குட்டத்தைக் கடந்து போய்க் கொண்டிருந்தது இருள். சில்வண்டுகள் முகத்திலும் விசிறும் கைகளிலும் வந்து மோதின. மலைவிட்டிகள் பெருங் குரலெடுத்துக் கத்திக்கொண்டிருந்தன.

எதன் மீதும் கரிக்காலிக்கு கவனமில்லை. தொலைவாய்ச் செல்லும் இருளின் மீதே பார்வை பதிந்திருந்தது. ‘எங்கே போயிருவ' எனக் கேட்டு இருளை வன்மம் செய்தாள். ‘உன்னைப் பிடிக்காமல் விடமாட்டேன்' என்று கறுவிக் கொண்டாள். பேரண்டமாய் விரிந்து படர்ந்த இருள், கரிக்காலியைப் பார்த்துச் சிரித்தபடி தொலைவாய் நகர்ந்து கொண்டிருந்தது.

யானைக் குட்டம் கடந்ததும், நல்ல தங்காள் கோயிலில் மின்னிய தீபம்தான் கரிக்காலியை நினைவடையச் செய்தது. பேரிருட்டில் கரைந்து கொண்டிருந்த சிறு புள்ளியாய் தெரிந்த தீபத்தில் நிலை குத்தினாள் கரிக்காலி. மெல்ல மெல்ல அருகில் வந்து கொண்டிருந்த தீபத்தின் மீது கண் விலக்காமல் ஓடிக் கொண்டிருந்தது கற்காலியின் உடல். நாக்கு வறளத் தொடங்கியது. வியர்த்து ஊற்றி மூச்சு வாங்க நடை ஓட்டத்தை நிறுத்தவில்லை.

நாலே எட்டில் வந்துவிட்டாற் போலிருந்தது. நல்ல தங்காள் கோயில் புளிய மரத்தில் கட்டை ஊன்றிச் சாய்த்து கழுத்தாற்ற நினைத்தாள். கோயில் முன் நின்று தீபத்தைத் திரும்பி பார்த்தாள். சுப்பையாக் கோனார் பிஞ்சைக் கரையில் வேலி முள்ளும் கத்தாழையும் புதர் மண்டிக் கிடந்த மண் திட்டின் மீது ஊன்றப்பட்டிருந்த நடுகல்லில் திரி எரிந்து கொண்டிருந்தது.

நடுகல்லின் இடதுபுறத்தில் முள்ளால் மூடப்பட்டுக் கிடந்தது நல்லதங்காள் செத்துப்போன வெறுங்கிணறு. கோடையில் தேட்டுக் கிடைக்காத மதியப் பொழுதுகளை, அம்மாவோடு படுத்துக் கழித்த புளிய மரத்தடியில் நின்று உடல் ஆற்றினாள். அம்மாவின் நினைவு பெருகியது. கட்டை இறக்கி, புளிய மரத்தில் சாய்த்து நிறுத்தி, தீபத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

பெரியோடைக் காட்டிற்கு வேலைக்கு வரும் போதெல்லாம் நல்ல தங்காள் கோயில் முன் பாத மண்ணெடுத்து நெற்றியில் பூசி விடுவாள் அம்மா. எத்தனையோ மதியப் பொழுதுகளில் நல்ல தங்காள் கோயில் மரத்தடியில் அமர்ந்து பேன் பார்த்துக்கொண்டே அம்மா கதை சொல்லி பொழுது இருட்டியிருக்கிறது.

"அர்ச்சுனன் பொய்கையை ஆண்ட நல்ல தம்பி ஜமீனுக்கு ஒரே தங்கச்சி. அவதான் நல்லதங்காள். எல்லாச் சீரும் செனத்தியோட மானா மதுரைக்கு வாக்கப்பட்டுப் போன நல்லதங்காளுக்கு வதவதன்னு ஏழு பிள்ளைக. அப்போ திடீர்னு பஞ்சம். வருசக்கணக்கில மழையில்ல, தண்ணியில்ல. ஆலாப் பறக்கிற பிள்ளைகளை வச்சுக்கிட்டு, நல்லதங்காள் பிழைக்க முடியாம அண்ணன் வீட்டுக்கு பிள்ளைகளோட திரும்பி வந்தாள்.

அவ வந்த நேரம் அண்ணங்காரன் வேட்டைக்குப் போயிட்டான்.மதினிக்காரி, காணக் கதவடைச்சிட்டா. அக்கம் பக்கத்துல இருந்தவக கொடுத்த கேப்பையத் திரிச்சு கூழ் காய்ச்சி பிள்ளைகளுக்கு பரிமாறினா. அதைப் பொறுக்காத மதினி முளியலங்காரி பானையோட ஒடச்சுத் தள்ளிட்டா, எல்லாம் தரையில சிந்திப்போச்சு.

பசி தாங்காத பிள்ளைக, தரையில சிந்திக் கிடந்த கூழை நக்குச்சுக. அந்தக் கொடுமையைப் பார்க்கச் சகிக்காத நல்ல தங்காள், அர்ச்சுணன் பொய்கைக்கு மேற்கே இருந்த கெணத்துல ஏழு பிள்ளைகளையும் தூக்கிப் போட்டுக் கொண்ணுட்டு தானும் விழுந்து செத்துப்போனா.”

நல்லதங்காள் கதையைச் சொல்லத் தொடங்கி விட்டாலே துக்கம் தாளாமல் கண்ணீர் பெருகும், நாவு உள்ளிழுக்கும். ம்....கொட்டவில்லையென்றாலும் அம்மா மனதுருகிச் சொல்லிக் கொண்டிருப்பாள்.

எண்ணெய் தீர்ந்து தீபம் உயிரிழந்து அடங்கியது. நினைவிலிருந்து மீண்டவளாய், நிலவொளியில் கருமையாய் மிளிர்ந்த புளிய மரத்தைத் தடவியபடி கட்டை நிமிர்த்தினாள். இடுப்பில் சொருகியிருந்த பண்ணையறுவாளை வலதுகை தடவிப் பார்த்துக்கொண்டது. சேத்தூரிலிருந்து பண்ணையறுவாள் விற்க வந்த முத்தாசாரியிடம் நேற்றுதான் வாங்கியது. பதம் குறையாத கருக்கு. கட்டைத் தூக்கித் தலைச்சுமைமேட்டில் வைத்தபடி ஓட்டமும் நடையுமாக பாய்ச்சலிட்டு ஓடினாள் கரிக்காலி.

ஊருக்குள் ஒரு சனம் நடமாடவில்லை. முதற் சாமம் தொடங்கிவிட்டிருந்தது. மந்தை மேடேறி, குடிக்காட்டுச் சேரிக்குள் நுழைந்து குடிசையைத் தொடும் வரை எதிரில் யாரும் தென்படவில்லை. ஆள் அரவமும் ஓய்ந்திருந்தது. தலையெம்பி குடிசை வாசலில் விறகுக் கட்டைத் தூக்கி யெறிந்தாள். கழுத்தை மேலும் கீழுமாய் வலதும் இடமுமாய்த் திருப்பி சுளுக்கெடுத்தாள். தாவணித் தலைப்பை யெடுத்து முகத்தைத் துடைத்தபடி லாந்தர் கல் முச்சந்தியைப் பார்த்தாள். இரண்டு மூன்று பேர் குளிர் காய்ந்து கொண்டிருந்தனர். இன்னார் என அடையாளம் பிடிபடவில்லை. திண்ணையிலிருந்த காதுடைந்த மண்பானையைத் தலைக்கு மேலே தூக்கி வயிறு முட்ட தண்ணீரைக் குடித்துவிட்டு திண்ணையிலமர்ந்து கழுத்தாற்றினாள்.

கதவாகத் தொங்கிக் கொண்டிருந்த உப்புச் சாக்கை விலக்கிவிட்டு குடிசைக்குள் எட்டிப் பார்த்தாள். பெரியோடைக்கரையில் தொலைவாய் முன்சென்று அச்சமூட்டிய இருள், வீட்டிற்குள் வந்தமர்ந்து விளையாடிக்கொண்டிருந்தது.

“ஏ... கரிக்காலி... வீட்டுல வெளக்குப் பத்தவக்காமக்கூட இந்த பிள்ள எங்கே போயிருச்சு...”

“யாரு.. சுந்தரம் கெழவியா...? ஏ கெழவி திண்ணையிலே தான ஒக்காந்திருக்கேன்... கண்ணு தெரியலயா...”

“கண்ணு எழவுதான் ஓம்முடிஞ்சு போச்சே... இந்தக் கும்மிருட்டுலதான் மொகந் தெரியுதாக்கும். அட ஏன்டி..வெளக்கு ஏத்தாமக்கூட முனி மாதிரி இருட்டுல ஒக்காந்திருக்கே...”

“அத்திக்கு ஒடப்படைக்கப் போனேன் கெழவி. இப்பதான் வந்து செத்த நேரம் ஒக்காந்தேன்...!”

“இனிமே கஞ்சி தண்ணி காய்ச்சிக் குடிச்சிட்டு எப்போ படுத்து எப்போ எந்திரிக்கப் போறே....! பாதகத்தி பரிதவிக்க விட்டுட்டுப் போயிட்டாளே! எவனொருத்தன் கையிலயாவது ஒன்னப் பிடிச்சுக் குடுத்துட்டுப் போயிருந்தான்னா, அவ கெட்டிக்காரியா இருந்திருப்பா. குஞ்சுக் குமரிய நடுவழில விட்டுட்டுப் போயிட்டாளே...!”

சுந்தரம் கிழவி பேசிக்கொண்டே நடந்தாள். அம்மாவைத் தான் கிழவி பேசினாள் என்று கரிக்காலிக்குத் தெரியாமலில்லை. அந்தக் குடிசைக்குள் தன்னந்தனியாய் எத்தனை இரவுகள் அம்மாவின் நினைவுகளோடு படுத்துப் புரண்டிருப்பாள் கரிக்காலி. அம்மாவின் சாவுக்குப் பிறகு அம்மாவை நினைத்துக் கண்ணீர்விட்டவளில்லை.

அம்மா உடுத்திக் கிழிந்த சேலைக்குள் முகம் புதைத்துப் புரண்டாலும், ஏக்கத்தில் பெருகிய மூச்சு நெஞ்சுக்குழியை உதைத்தாலும், கண்ணீர் மட்டும் வந்ததில்லை. தினமும் அம்மாவின் நினைவில்லாமல் உறங்கியதில்லை. ஊர் எண்ணுவதைப் போல் அம்மா தவிக்கவிட்டுப் போய்விட்டதாகக் கரிக்காலி நினைக்கவில்லை.

அம்மா எல்லாவற்றையும் சொல்லித் தந்திருந்தாள். களையெடுக்க, தொழி மிதிக்க, நாற்றுப் பாவ, நட அறுக்க, சுமக்க, மலையேற இன்னும் எல்லாவற்றையும் அம்மா சொல்லிக் கொடுத்தாள். வடுகத் தெருவில் சாணி சகதி அள்ளிக் கஞ்சி குடிக்கும் நிலைக்கு மகள் போய்விடக்கூடாது என்ற வைராக்கியம் அம்மாவுக்கு. உயிரிருக்கும் வரை மலையேறி விறகெடுத்தாவது கொலையை நனைத்துக்கொள். வடுகத் தெருவுக்கு மட்டும் சட்டி தூக்கிப் போகாதே என்று அம்மா விரித்த கண்களோடு பேசுவதை பலமுறை கேட்டிருக்கிறாள்.

போன முப்புடாரியம்மன் பொங்கலுக்கு முந்தைய செவ்வாய் விடிந்தபோது வெளித் திண்ணையில் அம்மா இறந்து கிடந்தாள். நோய் முற்றி விலா எலும்புகளை சளி அரித்துத் துளைத்துவிட்டதாகத் திருப்பாச்சூர் ஆஸ்பத்திரியில் சொல்லிவிட்டார்கள். இனிமேல் காப்பாற்றுவதற்கு முடியாது என்று ஆஸ்பத்திரியிலிருந்து விரட்டப்பட்டு வீடு திரும்பியதிலிருந்து சாவு மட்டும் வெளித் திண்ணையில்தான் அம்மா கிடந்தாள். இரவெல்லாம் அவளின் இருமல் குடிக்காட்டுச் சேரியையே உலுக்கும். வாய் நிரப்பி ஒழுகும் எச்சில் கலந்த சளி, தலையணையாய்க் கிடந்த பழைய துணி மூட்டையை நனைத்து பிசுபிசுக்க வைக்கும். எம்பி எம்பி இருமும் அவளது உடல், உருகி ஓடாய்த் தேய்ந்திருந்தது.

அம்மா கொஞ்ச வயதிலேயே புருசனைப் பறி கொடுத்தவள். கைப் பிள்ளையாய் இருந்த கரிக்காலியைத் தூக்கிக் கொண்டு புருசனோடு திருப்பாச்சூருக்கு சர்க்கஸ் பார்க்கப் போனதுதான் அம்மா செய்த பெரும் பிழை. அறுபது நாள் நடந்த சர்க்கசுக்கு, தினமும் போன புருசனைத் தட்டிக் கேட்டும் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஊர் நாட்டாமையிடம் சொல்லிக் கண்டித்தும்கூட கேட்டானில்லை.

சர்க்கஸ் கம்பெனியில் சமைக்கும் மலையாளப் பொண்ணுக்கும் அவனுக்கும் பழக்கம் என்று சேரியில் பேசிக் கொண் டார்கள். கடைசி நாளன்று, கடைசியா ஒருமுறை பார்த்து விட்டு வந்துவிடுகிறேன் என்று சொல்லி விட்டுப் போனவன், திரும்பவேயில்லை. நடுச்சாமம் ஆகியும் வீடு திரும்பாதவனைத் தேடி, லாந்தர் கல்லில் தவிப் போடு உட்கார்ந்திருந்த அம்மாவுக்கு இடி இறங்கியது.

சர்க்கஸ் லாரியில் ஏறிப்போனதாக புருசனோடு சர்க்கஸ் பார்க்கப்போன முனியாண்டி சொன்னான். ஒருவாரம் ஆகியும் ஆள் வீடு திரும்பவில்லை. கைப்பிள்ளையைத் தூக்கிக் கொண்டு சர்க்கஸ் நடக்கும் ஊருக்கெல்லாம் அலைந்தாள் அம்மா. புருசனைக் கண்டபாடில்லை. கண்ணெதிரே புருசனைப் பறிகொடுத்தவள் என்று அம்மாவைக் கேலி சொன்னது குடிக்காட்டுச்சேரி. புருசனில்லாதவள் என்று ஏளனம் பேசிய சேரியில் வாழ்ந்து காட்டினாள் அம்மா. கரிக்காலியை தூக்கிக் கொண்டே காடு மேடு சுற்றி தேட்டுக் கொண்டு வந்தாள்.

அப்போது கரிக்காலி நெஞ்சுக்கு வளர்ந்து நின்றாள். கேரளாவில் இருப்பதாகக் கடிதம் எழுதியிருந்த புருசனைத் தேடி, கையிலிருந்த தேட்டையெல்லாம் விற்று எடுத்துக் கொண்டு கிளம்பினாள் அம்மா. கரிக்காலியையும் இழுத்துக் கொண்டு கடிதத்தில் இருந்த அரைகுறை முகவரியோடு தென்காசிவரை போய் திக்குத் தெரியாமல் திரும்பினாள்.

அதற்குப் பிறகு, தலைக்கு எண்ணெய்கூட வைப்பதில்லை. ரவிக்கையைக்கூட கழற்றி வீசினாள். சடை போடத் தொடங்கிய முடிமயிரை அள்ளி முடிவதோடு சரி. வீட்டிலிருந்த சவரக் கண்ணாடியில் லட்சணம் பார்த்து வெகுநாளாகிவிட்டது. நெடு நெடுவென வளர்ந்து நின்ற கரிக்காலியைப் பற்றிய எண்ணம் அம்மாவை விழுங்கத் தொடங்கியிருந்தது.

நாலு காசு பணம் சேர்த்து வைக்க வேண்டுமே என்று குடித்தும் குடிக்காமலும் அயர்ந்தும் அயராமலும் கரிக்காலியை இழுத்துக்கொண்டு காடுகரைகளில் அலைந்தாள் அம்மா. தனக்குப் பிறகு கரிக்காலியை வைத்துப் பிழைப்பவனைத் தேடியே அம்மாவின் காலம் கரைந்து கொண்டிருந்தது.

முடியாத காலத்திலும் இறுமிக்கொண்டே இரண்டு சுள்ளியாவது பொறுக்கி வருவாள். ஆனாலும் காதுக்கு குண்டுமணி காலுக்கு வெள்ளிக் கொலுசு, காதுக்கு இரண்டு தொங்கட்டான் தவிர மகளுக்கென வேறு எதையும் சேர்த்து வைக்க முடியவில்லை.

சீவனம் கழிக்கும் பொத்தல் குடிசையும் மேலக் காட்டில் இருக்கும் கையகல நஞ்சையும் மிச்சம். கரிக்காலிக்கு கல்யாணம் காய்ச்சியென்று வரும்போது அந்த கையகல நஞ்சையை விற்றுவிடலாம் என்பதுதான் அம்மாவின் திட்டம்.

பிறகு மகளின் நிழலில் அரைவயிற்றுக் கஞ்சியாவது கிடைத்து விடாதா?

எல்லாம் கனவாகவே போய்விட்டது. அம்மா கண்ணு மறையுமட்டும் கரிக்காலியைப் பேசிமுடிக்க யாரும் வரவில்லை. வீராம்பட்டிணத்திலிருக்கும் ஒன்றுவிட்ட தம்பிக்குக்கூட இரண்டும் பெண் பிள்ளைகள்தான். வேறு ஒட்டே உறவோ இல்லை. கரிக்காலிக்கு மாப்பிள்ளை பார்க்கும்படி இரண்டு மூன்று தடவையாவது தம்பியிடம் போய் பேசிவிட்டு வந்தாள் அம்மா. என்ன பயன்?

இப்போது வயது முற்றி சுருக்கம் தட்டிப் போயாகி விட்டது. இனிமேல்கல்யாணம் காய்ச்சியெல்லாம் நடக்கிற காரியமா. இழப்பு நோயில் படுத்துக் கிடந்தாலும், அம்மா என்று ஒரு உயிர் இருந்தபோதே பொருத்தம் பார்க்க ஒரு பய வரவில்லை. தாய் தகப்பன் இல்லாத இந்த மூப்பை கட்டிக்கவா எவனும் வந்துவிடப் போகிறான்.

பின்புறத்தைத் தூக்கிக்காட்டி, அகண்டு தரை தேய்த்தபடி நடந்து செல்லும் கால்கள், வாய்க்குள் மறுகாமல், உதட்டைப் பிளந்தபடி கோரமாய்த் தெரியும் முன்பற்கள்; வீம்பின பனங்கொட்டைபோல் தலைமயிர்; ஊசி மண்டையுடன் நீளவாட்டில் அமைந்துவிட்ட முகம் இவைதான் கல்யாணம் ஆகாமல் போனதற்கு காரணம் என்று கரிக்காலி நம்பிக் கொண்டிருந்தாள். அவள், பெரியவள் ஆகவில்லை என்றுகூட குடிக்காட்டுச் சேரி பேசிக்கொண்டது.

ஆம்பளை இல்லாத வீட்டில் கை நனைக்க எவன் வருவான்; தகப்பன் இல்லாத குடும்பம் எதுக்காகும்; பொத்தல் குடிசையைவிட்டால் என்ன மிஞ்சும் என்றெல்லாம் குடிக் காட்டுச் சேரிக் கிழவிகள் பேசிய புறணி, கரிக்காலியைத் தனி மரமாக்கிவிட்டது.

சாக்கைத் தூக்கி தாழ்வாரக் கம்பில் கட்டிவிட்டு இருட்டில் சிம்னியைத் துழாவினாள் கரிக்காலி. தட்டுப்படவில்லை. அடுப்படியில்தானே இருந்தது. அடுப்படியை காலால் தடவி, கண்டுபிடித்து, குனிந்து, இடது கையால் பரசினாள். விரல் தட்டிய சிம்னி அடுப்படியிலிருந்து கீழே விழுந்து சிந்தியது. “சனியன் கையில சிக்குதான்னு பாரு” கொஞ்ச நஞ்சமிருந்த மண்ணெண்ணையும் சிந்திவிட்டதால், ஆத்திரமானாள். சிம்னியை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தாள். குலுக்கிப் பார்த்தாள் சிம்னியில் எண்ணெய் இல்லை.

கூனக் கோயிந்தன் கடை சாத்தும் முன் போக வேண்டுமே! குடிக்காட்டுச் சேரி முழுவதும் கோயிந்தன் கடையில் தான் சரக்கு வாங்கிக் கொள்ளும். பாக்கி சாக்கி வைத்துக் கொண்டாலும் கோயிந்தன் முன்னப் பின்ன பார்க்காமல் வாங்கிக் கொள்வார். எல்லாம் வாய்க் கணக்குதான். ஒரு பைசா கூட்டிச் சொல்லி வாங்கும் பழக்கம் கோயிந்தனிடம் இல்லை.

பக்கத்து ஊரான சோமியாபுரத்திலிருந்து வந்து அந்த மந்தையில் கடைபோட்டு இருபத்தைந்து வருடமாகிவிட்டது. குடிக்காட்டில் தள்ளிக்கோ என்று யாரும் சொல்லாதபடி கடை நடத்தினார் கோயிந்தன். சேரியில உள்ள பொண்டு பொடுசுகள், கையில் மிஞ்சும் காசை கொடுத்துவைத்து வாங்கிக் கொள்ளும் அளவிற்கு நம்பிக்கையான பிழைப்பு நடத்தினார் கோயிந்தன்.

கோயிந்தன் கடை சாத்தும் முன் போகவேண்டுமே! பரபரத்தாள் கரிக்காலி. கூரைக் கம்பில் சொறுகியிருந்த சாக்கை இழுத்துவிட்டு வீட்டைச் சாத்திவிட்டு, முத்திருளன் வீட்டுச் சந்தில் இறங்கி வேகமாக நடந்தாள். குடிசைகளில் சிம்னி உயிர் தந்து கொண்டிருந்தது. சந்து திரும்பியதும் மந்தை மேடேறி நடந்தாள். வடுக நாயுடுகளின் மந்தைமேடு அது. ஆடு மாடுகளுக்குத் தீவனம் சேர்த்து வைத்துக் கொள்ளும் இடம்.

குட்டிப் பாறைகள் போல் இருபுறமும் போர்கள் நின்றிருந்தன. இடது காலைப் பரசிப் பரசி நடந்தாள். தாவணி முடிச்சில் இருந்த சில்லறைக் காசை எடுத்துக்கொண்டாள். தொலைவில் எரிந்து கொண்டிருக்கும் மின் விளக்குக் கம்பத்தின் அடியில்தான் கோயிந்தன் கடை இருக்கிறது.

இருட்டில், மந்தைப் பாதையின் பள்ளம் மேடு அறிந்து கால்கள் நடந்துகொண்டிருந்தன. பாதையில் ஆள் அரவமே இல்லாமலிருந்தது. மந்தைப் பாதையிலிருந்து இறங்கி வலதுபக்கம் திரும்பினாள். கோயிந்தன் கடை தெரிந்தது. கடையில் ஒரு ஆள் மட்டும் நிற்பது தெரிந்தது.

தலை பரட்டையாக இருக்குமோ என்று எண்ணியவள், சிம்னியின் கைப்பிடியை வாயால் கவ்விக்கொண்டு, முடியை அவிழ்த்து இரண்டு கைகளாலும் சீவியடித்துக் குருவிக் கொண்டை முடிந்தாள். இடுப்பில் உறுத்திக் கொண்டிருப்பது என்ன என்பதைத் தடவிப் பார்த்தாள். பண்ணையரிவாள். உருவி எடுத்து உறுத்தாதபடி சொறுகிக்கொண்டாள்.

கோயிந்தன் கடையில் நின்று பேசிக் கொண்டிருந்த ஆள் அவளையே பார்த்துக்கொண்டு நிற்பது தெரிந்தது. வெளிச்சத்தை நெருங்க நெருங்க அந்த ஆள் எதிர்த்திசையில் நடந்து மறைவதை கவனித்தாள். யாரென யூகிக்க முடியவில்லை.

சேரி ஆண்கள் இந்த இருட்டு நேரத்தில் கடைப் பக்கம் வரமுடியுமா? மந்தைமேடு பக்கம் பகல் நேரத்தில் வந்து போனால் கூட வடுக நாயுடுகள் என்னடா ஏதுடா என்று மிரட்டுவார்கள். இனிமேல் இந்தப் பக்கம் பார்த்தால் நடக்கிறதே வேற என்று வன்மம் உறுத்துவார்கள்.

இரண்டு பரு எட்டுப்போட்டு கோயிந்தன் கடைக்கு வந்து நின்றாள் கரிக்காலி.

“யாரு கரிக்காலியா! என்னத்தா இந்த நேரத்துல!”

“அத்திக்கு ஒடப்படைக்கப் போனேன் அய்யா. அங்கேயே கருக்க ஆரம்பிச்சிருச்சு. வீட்டுக்கு வந்து பாத்தா சீமைத் தண்ணீகூட இல்ல”

“கூடக் கொறைய வாங்கி வச்சுக்க கரிக்காலி, செல நேரம் இருக்கும், இல்லாமக்கூடப் போகும்.”

“சரி எவ்வளவுக்கு ஊத்தட்டும்”

சிம்னியை வாங்கி வாயைத் திறந்துகொண்டே கேட்டார்.

“அம்பது காசுக்குப் போதும்”

மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டே விசாரித்தார்.

“ஒங்க மாமன் இருக்கானே! உங்காத்தா செத்தப் பிறகு எப்பையாவது வந்து பார்த்தானா”

“அப்படி யாரு வருவா.”

“கல்லு மனசுக்காரப் பய. எனக்குத் தெரியும்தா. உங்காத்தாக்காரி கிட்ட வந்து வந்து, அவ மடியில இருக்கிறத வாங்கிட்டுப் போவான் படுவா. எத்தன முறை எங்கிட்டக் கொடுத்து வச்சிருந்ததை வாங்கிக் கொடுத்திருப்பா. இப்போது, அவ கண்ணு மறைஞ்சதும் அவன் தான ஒன்னைத் தாங்கனும். நல்லா இருப்பானா அவன்”

எப்போதாவது இப்படி இரண்டு வார்த்தை ஆசாபாசமா பேசுவார் கோயிந்தன். அதற்கும்கூட கடையில் கூட்டமில்லாத நேரமாகப் பார்த்து வரவேண்டும். தகப்பனில்லாத பிள்ளை என்று வாய்க்குள்ளேயே முணுமுணுத்துக் கொள்வார். நன்றாகப் பிழைக்க வேண்டும் என்று நல்ல வார்த்தை சொல்லுவார்.

நோய் நொடி வந்து வேலை வெட்டிக்குப் போக முடியவில்லையென்றால், கோயிந்தனிடம்தான் அஞ்சு பத்து கடன் வாங்கிக் கொள்வாள் கரிக்காலி

“ஒரு அம்பது காசுக்கு நிலக்கடை குடுங்கய்யா”

கொஞ்சம் தாராளமா அளந்து கரிக்காலியின் உள்ளங்கையில் கொட்டினார்.

பாகனூர் பஞ்சு மில் சங்கு ஊதுற சத்தம் கேட்டது. இரவு பதினோரு மணிக்கு வேலை முடிஞ்சு ஆட்கள் வெளியேற சங்கு ஊதும். சுற்றுப்பட்டிகளுக்கெல்லாம் இரவுநேரம் காட்டியாக இருப்பது அந்த சங்கு சத்தம்தான்.

“அட பதினோரு மணியாச்சா! சரி.. சரி.. சீக்கிரம் வீட்டுக்குப் போ கரிக்காலி” கோயிந்தன் அவசரப்படுத்தினார்.

கரிக்காலிக்கு உடல் சுருக்கடித்துத் திரும்பியது. நேரம் தெரியாமல் வந்துவிட்டதை உணர்ந்தாள். சிம்னியைப் பற்ற வைத்தாள். திரி எரிந்து கருகி, பிறகு மெல்ல மெல்ல வெளிச்சம் காட்டியது.

“ஆமா.. கரிக்காலி.. காலடி பாத்தே வீடு போய்ச் சேரு. பூச்சி பொட்டை எதாவது திரியும். பாத்துப்போ!”

தலையாட்டிவிட்டு மந்தை மேட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். சிம்னி கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. சிம்னித் திரியை இறக்கி சன்னமாக்கிவிட்டு நடந்தாள். பாவாடைக் காற்றில் அலைந்து அலைந்து எரிந்து கொண்டிருந்தது சிம்னி. கடலையைக் கொறித்துக்கொண்டே பாதையடி பார்த்து நடந்தாள். காலடி விளக்கொளியில் அவளது நிழல் பூதமாய் வளர்ந்து அவளோடு சேர்ந்து நடந்தது. தெரு கடந்து மந்தை மேட்டில் ஏறி நடந்தாள். வலது பக்கமிருந்த வைக்கோல் படப்புகளின் மேல் ஏறி, ஏறி நடந்து வந்தது நிழல்.

மந்தைப் பாதையின் மத்திக்கு வந்ததும் நின்று திரும்பிப் பார்த்தாள் கரிக்காலி. கடையைச் சுற்றிவிட்டு கைப்பையைத் தோளில் போட்டபடி நடந்து போய்க்கொண்டிருந்தார் கோயிந்தன். கடைசியாகக் கடையில் நின்று பேசிக்கொண்டிருந்தது யார் என்பதைக் கேட்க மறந்துபோனதை உணர்ந்தாள்.

மறுபடியும் திரும்பி, காலடி பார்த்து ஒரு அடி வைத்திருப்பாள். வைக்கோல் படப்புகளில் சலசலவென சத்தம். சத்தம் வந்த திசையில், படப்புகளைப் பார்த்துக்கொண்டே நாலெட்டு வைத்திருப்பாள். மந்தைப் பாதையின் குறுக்கே ஒரு உருவம் ஓடி ஒளிவதைக் கவனித்தாள்.

திடுக்கிட்டு நின்றவள், சிம்னியை உயரே தூக்கி வைக்கோல் போர்களைப் பார்த்தாள். ஒளிந்திருப்பது யார் என்று தெரியவில்லை.

“யாரு ஓடி ஒளியிறது”

குரலைத் தூக்கிக் கேட்டுப் பார்த்தாள். பதில் இல்லை. சிம்னி வெளிச்சம் முன்னால் செல்லச் செல்ல, பின்னாலிருக்கும் படப்புகளில் வைக்கோல் உராயும் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தாள் யாரும் தெரியவில்லை.

சிம்னியைத் தூக்கி வைக்கோல் உராயும் படப்புகளைப் பார்த்தாள். இப்போது சத்தம் வரவில்லை. ஆனால், யாரோ ஒளிந்து நிற்கிறார்கள் என்பதை மட்டும் உணர்ந்து கொண்டாள். நடையில் வேகம் காட்டினாள். சீக்கிரம் சேரிக்குள் நுழைந்துவிட வேண்டும் என்று சல்லி ஓட்டம் எடுத்தாள். சிம்னி அணைந்து, இருள் சூழ்ந்து நின்றது. இன்னும் பதற்றமடைந்தாள் கரிக்காலி. ஓட்டத்தைக் கூட்டினாள்.

பின்னாலிருந்து ஒரு உருவம் ஓடிவரும் காலடியோசை கேட்டது. இரண்டு அடி வைத்திருப்பாள். உடம்போடு மோதிய உருவம், இடது கையால் கரிக்காலியின் வாயைப் பொத்திக் கொண்டு, உடலை செந்தூக்காகத் தூக்கியது. சிம்னியைப் போட்டுவிட்டு, வாயைப் பொத்தியிருக்கும் கையை கீழ் இழுத்துத் தள்ள முயற்சித்தாள். கால்களை உதைத்தாள். தடிமனான ஒரு ஆண் முண்டம் போலிருந்த அந்த உருவம் கரிக்காலியின் உடலைத் தூக்கிக்கொண்டு மந்தைப் பாதையிறங்கி, வைக்கோல் படப்பு ஒன்றின்மேல் சாத்தியது.

வாயைப் பொத்தியிருந்த கையை எடுக்காமலேயே கரிக்காலியின் தாவணியை உருவி எறிந்தது அந்த ஆண் உருவம். நாற்பது வயதுக்கு மேலிருக்கும் அந்த உருவத்திற்கு. பலமான ஒரு ஆண், தடிமனான ஒரு மரம்போல் நின்று கொண்டிருந்தான். இருட்டில் முகச் சாடையைக்கூட அனுமானிக்க முடியவில்லை. குடிக்காட்டுச் சேரி ஆண்கள் யாரும் இவ்வளவு உயரமாக, அகலமாக இருக்கவில்லை. எவனோ ஒரு வடுகப்பயதான் என்று தீர்மானித்துக் கொண்டாள்.

கை இரண்டையும் உயரே தூக்கி முகத்தைப் பிராண்டி னாள். பந்தாய் எம்பித் திமிற முயன்றாள். அவனோ, ஒரே பிடியில் ரவிக்கையைப் பிடித்துக் கிழித்தான்; எறிந்தான். இரண்டு கைகளாலும் மார்பை மறைக்க முயன்று தோற்றாள். அவளது இரண்டு கால்களையும், மேலே தூக்கி விரித்து இரண்டு கால் முட்டுக்களாலும் அழுத்திக்கொண்டான்.

உடம்பை வளைத்து, நிமிர்த்தி, குறுக்கி, விலக்கி எப்படிப் பார்த்தாலும் அவனது பிடியை விலக்க முடியவில்லை. வலி உயிரைச் சுண்டியது. கழுத்தையோ தலையையோ எழுப்ப முடியவில்லை. வைக்கோல் படப்பில் தலை புதைந்து போகும் படி வாயைப் பொத்தியிருந்தான்.

பாவாடை மேலேறி இடுப்பில் திரண்டு கிடந்தது. மூடி மறைக்க முயன்றாள்.

விம்மலோடு கண்ணில் நீர் பெருகியது. அம்மா நினைவில் பெருகி கரைந்தாள். அவமானம் உடலை பலவீனமாக்கியது.

“விடுறா”

“விடுறா”

பொத்தப்பட்ட வாயிலிருந்து வந்த வார்த்தைகள் தெளிவற்ற ஒலிகளாகின. உடம்பை எம்பித்தள்ள முயற்சித்து அடங்கினாள். மார்பைப் பிசையும் அவனது முரட்டுக் கையை விலக்க முடியவில்லை. கோழி அமுக்காக அமுக்கப்பட்டு கிடந்தாள். அவமானம் உடலை பலவீனப்படுத்தியது.

இருளிலிருந்து முளைத்து வந்த மிருகம் போல் அவன் இயங்கிக் கொண்டிருந்தான். கரிக்காலியின் ஒல்லியான உடம்பின் மீது மலையாய் சரிந்து அழுத்தினான். மரக்கட்டையொன்று உடம்புக்கூட்டுக்குள் சொறுகி இறங்கியது. உடம்புக்குள்ளிருந்த காற்று வாய் வழியே மூக்கு வழியே வெளியேறி முட்டியது. எலும்புகள் நொறுங்கிக் கொண் டிருந்தன.

பின் இடுப்பில் ஏதோ அறுப்பது போன்ற உணர்வு. கரிக்காலிக்குப் பொறிதட்டியது. உடம்பு இறுகி ஆவேசமானாள்.

“இன்னக்கிச் செத்தடா நாயே”

வைக்கோலைத் துளைத்து, பின் இடுப்பில் சொறுகியிருந்த பண்ணையரிவாளை உருவின வேகத்தில், அவன் முதுகில் முனையால் அறுத்தாள். நெடு முதுகில் நீண்ட கோடு கிழித்து வயிற்றுப் பக்கம் இறங்கியது அரிவாள்.

அலறிக்கொண்டு எழுந்தான் அவன். பிடி விலகியதும் கொத்தும் நாகமாய் எழும்பி மண்டியிட்டுக் கொண்டே அவன் கழுத்தைப் பிடித்தாள் கரிக்காலி. சுதாரித்து நிமிர்ந்து விலக்கினான். உடம்பு வழியே வழுக்கிய கையில் விரைத்து நின்ற குறி சிக்கியது.கோர்த்து அறுத்தாள்.

அறுபட்ட குறி வழுக்கிக் கொண்டு விழுந்து தொலைந்தது. துள்ளி விழுந்து பெருங்குரலெடுத்து அலறினான் அவன். இருளைக் கிழித்துக்கொண்டு பரவியது அவனது அலறல்.

வைக்கோல் படப்பில் தடவித் தடவித் தாவணியைத் தேடி எடுத்தாள். மார்பில் போட்டுக்கொண்டு பாதையடி ஏறி மந்தைப் பாதைக்கு வந்தாள். சிம்னியைத் தூக்கிக்கொண்டு பலம் கொண்ட மட்டும் வேகமாக ஓடினாள்.

இரண்டு பக்கமும் சுவர்போல் விலகி நின்று வழிவிட்டது இருள். ஓங்காரமாய் அலறிக் கொண்டிருக்கும் அவன் சத்தம் கரிக்காலியை விரட்டியது. அப்படியொரு மனித அலறலை அந்தக் குடிக்காடே கேட்டிருக்கவில்லை.

உப்புச் சாக்கை விலக்கி குடிசைக்குள் நுழைந்து, சிம்னியை அடுப்படியில் போட்டுவிட்டு, குடிசையின் மூலையில் தாவணியால் வெற்றுடம்பை மூடிக்கொண்டு இருளோடு இருளாய் குத்துக்காலிட்டு அமர்ந்தாள். நெஞ்சு திகிலடித்தது.

வைக்கோல் படப்பில் விழுந்து புரண்டு, எம்பிக் குதித்து, உருண்டு புரண்டு அவன் எழும்பிய பேரழுகை மெல்ல மெல்ல அடங்கிக்கொண்டிருந்தது. அம்மா நினைவில் வந்தாள். இறுமிக் கொண்டே அழுது புலம்பினாள். பின் நினைவகன்றாள். கரிக்காலி இருளை வெறித்தபடி நிலைகுத்தினாள்.

முதன் முதலாக அந்தக் குடிசையில் இருள் மிரண்டு போய் நின்றது.

- யாக்கன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It