divya-ilavarsan

பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினரின் மீது, நாடெங்கிலும் மிக நீண்டகாலமாக நடத்தப்பட்டு வரும் வன்கொடுமைத் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, 1989-இல் ஏற்படுத்தப்பட்ட வன்கொடுமைத் தடுப்புச்சட்டம், சமூக நீதிக்கும் பகுத்தறி வுக்கும் பெயர் பெற்ற தமிழ்நாட்டில், பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, தமிழ்நாட்டில்தான் அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்படு கின்றன. வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை ஒழித்துக்கட்டுவதை, பாட்டாளி மக்கள் கட்சி தனது முதன்மையான செயல்திட் டங்களில் ஒன்றாக அறிவித்து தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரங்களை மேற்கொண் டது. தலித் மக்களுக்கு எதிரான சமூகப் பதற்றத்தைத் திட்டமிட்டு அக்கட்சி உருவாக்கியது. தலித் மக்களுக்கு எதிராக இடைநிலைச் சாதியவாதச் சக்திகளை மீண்டும் உயிர்ப்பித்தது. அத்தகைய நடவடிக்கைகள் வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றச்செயல்கள் என்ற போதிலும், அக்கட்சியின் மீது தமிழ்நாடு அரசு வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை; எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தலித் மக்களுக்கு எதிரான உணர்வுகளைத் தொடர்ந்து தூண்டி விட்டு, கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பா.ம.க.வுக்குத் தருமபுரியில் வெற்றி கிட்டியிருப்பதால், அதையே இனிவரும் தேர்தல்களில் தனது தேர்தல் உத்தியாக்கிக்கொள்ளப்போகிறது என்பதில் சந்தேகமில்லை. அதை உறுதிப் படுத்தும் வகையில்தான், வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை ரத்துசெய்யக் கோரி பா.ம.க. உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளது. பல்வேறு மாநில நீதிமன்றங்களில் இதே போன்ற வழக்குகள் தொடுக்கப்பட்டு அவை தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட போதிலும், இந்திய நாட்டின் தலைமை நீதிமன்றம் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் இந்திய அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை விதிகளை மீறவில்லை என்று அறிவித்து, அச்சட்டத்திற்குத் தனது ஒப்புதலை வழங்கிவிட்ட போதிலும், தமிழ்நாட்டு உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் பாலு தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

அடிப்படையில் வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் தீண்டாமைக் கொடுமை களை ஒழிப்பதற்காகவும், தீண்டாமை யினாலும், வன்கொடுமைகளாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காகவும் உருவாக்கப்பட் டதாகும். கடுமையான சட்டங்கள் மூலமே இந்தியாவில் நீண்டகாலமாக நீடித்து வந்த பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான சமூகக் கொடுமைகள் ஒழிக்கப்பட்டு வருகின்றன. தீண்டாமை யும் கொடிய குற்றமே. ஆனால், மனித உரிமைகள், குடியுரிமைகள் ஆகியவற்றை அனைத்து இந்தியர்களுக்கும் வழங்கி, ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்று அறிவிக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தை நாம் ஏற்றுக்கொண்டு 60 ஆண்டுகள் ஆகியும் கூட தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள், தீண்டாமைக் கொடுமைகள் குறைய வில்லை. தீண்டாமைக் கருத்தியலை இந்தியச் சமூகம் இன்றுவரை கைவிட வில்லை. தீண்டாமை எண்ணத்தோடு செய்யப்படும் எந்தவொரு செயலும் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. ஆனாலும், பெரும்பாலான இந்தியர் களின் உள்ளங்களில் தீண்டாமைக் குற்ற உளவியல் தேங்கி நிற்கிறது. அதேபோல் அமைச்சர்கள், நீதிபதிகள், காவல்துறை யினர், நிர்வாக உயர்அதிகாரிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள் என அனைவரும் அன்றாடம் தீண்டாமைக் குற்றங்களைச் செய்து வருகிறார்கள். அக்குற்றத்திற்காக அவர்களில் எவரும் தண்டிக்கப்படு வதில்லை. எனவே, தீண்டாமைக் குற்றங்களுக்கு எதிரான சட்டங்கள் முடங்கிக் கிடக்கின்றன என்று சொல்லலாம். இப்படிச் சொல்வதன் மூலம், தீண்டாமைக் குற்றங்களிலும் வன்கொடுமைகளிலும் ஈடுபடுவோரைத் தண்டிக்கும் சக்தியை அரசமைப்புச் சட்டம் இழந்து நிற்கிறது என்றாகிவிடாது. மாறாக, தீண்டாமைக் கொள்கையை தங்களின் வாழ்க்கை நெறிமுறையாக ஏற்று அன்றாடம் தீண்டாமைக் குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் கட்டுப்பாட்டில், அரசமைப்புச் சட்டம் சிறைவைக்கப்பட்டுள்ளது என்று தான் கூறவேண்டும்.

தீண்டாமைக் குற்றங்களுக்கு எனத் தனியாக இயற்றப்பட்ட குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டம் - 1995, தாழ்த்தப் பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் - 1989 ஆகிய இரு சட்டங்கள்தான், தலித் மக்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்கும் சட்டங்களாகும். அவ்விரு சட்டங்களும் திட்டமிட்டு முடக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு மூலகாரணமாய் இருப்பவர்கள், இந்தியா முழுவதும் அந்தந்த மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் காவல் துறை அதிகாரிகள்தான். அவர்களின் தலித் விரோத மனநிலைதான் அவர் களைச் சட்டவிரோதமாக இயங்கச் செய்கிறது. தீண்டாமைக் குற்றங்கள், வன்கொடுமைகள் நடக்கும் போது வழக்குப் பதிவு செய்யும் காவல்துறை யினர் குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்வதில்லை.

குறிப்பாக, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் இந்த இரண்டு சட்டங் களும் தமிழ்நாட்டில் திட்டமிட்டு முடக்கி வைக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. தமிழ்நாட்டில் உள்ள 1,430 காவல்நிலையங்களில் ஓர் ஆண்டுக்கு நேரடியாகவும் மறைமுகமா கவும் 7 லட்சம் வழக்குகள் பதிவாகின் றன. இதில் தலித் மக்கள் மீது மட்டும் நடைபெறும் வன்கொடுமைத் தாக்குதல் தொடர்பாக ஒரு விழுக்காடு பதிவானா லும், ஆண்டுக்கு 7,000 வழக்குகள் பதிவாகி இருக்க வேண்டும். வன்கொடு மைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 6,00 வழக்குகளே பதிவாகின்றன. அது 0.025 சதவிகிதம் மட்டுமே. வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கண்காணிக்க மாநில முதல்வர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மாநில கண்காணிப்புக்குழு கடந்த 11 ஆண்டுகளில் ஒருமுறைகூடக் கூட்டப்படவில்லை.

untouchabilityமாவட்ட கண்காணிப்புக் குழு உறுப்பினர்களோ பதிவான வழக்குகளில் கட்டப் பஞ்சாயத்து செய்து வருகிறார் கள்.  உண்மைநிலை இவ்வாறிருக்க, தமிழ் நாட்டில் வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று பொய்யான பிரச்சாரம் முன்னெடுக்கப் பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் மட்டுமில்லை, இந்தியா முழுவதிலும், நெஞ்சைப் பிழியும் தீண்டாமைக் குற்றச் செயல்களைக்கூட மிகச் சாதாரணமான குற்றப்பிரிவுகளில் காவல்துறையினர் பதிவு செய்கிறார்கள். வழக்கை விசாரிக்கும் கீழமை நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள் செய்துவரும் அப்பெரும் தவற்றினைக் கண்டு கொள்வதுமில்லை; கண்டிப்பதுமில்லை; தண்டிப்பதுமில்லை. எனவே தீண்டா மைக் குற்றங்களைப் பொறுத்தவரை நீதிபதிகளும் சட்ட விரோதமாகவே நடந்து கொள்கிறார்கள்.

பேரதிர்ச்சியளிக்கும் படுகொலைக் குற்றங்களைக்கூடத் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ்ப் பதிவு செய்யக் காவல்துறை அதிகாரிகள் பிடிவாதமாக மறுப்பதுதான் கொடுமையினும் கொடுமை. பாதிக்கப்பட்டவர்கள் மிகப் பெரும் போராட்டங்களை நடத்திய பிறகே வழக்கை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ்ப் பதிவு செய்கின்றனர். அப்படியே பதிவு செய்தாலும் தீவிர விசாரணை செய்து சாட்சியங்களைக் கண்டறிந்து காப்பாற்றுவதில்லை. பாதிக்கப்பட் டோருக்கும், சட்டத்தின்படி கிடைக்க வேண்டிய இழப்பீடுகளைப் பெற்றுத் தர முயற்சிப்பதில்லை. வழக்கு விசாரணைக்கு அக்கறையோடு ஒத்துழைப்பதில்லை. விசாரணை அறிக்கையைக் காலவரையறைக்குள் சமர்ப்பிப்பதில்லை. சாட்சிகளைக் கலைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்ப தில்லை. தீண்டாமைப் படுகொலைகளைச் செய்த குற்றவாளிக்கு ஆதரவாக காவல்துறையினர் வெளிப்படையாகவே செயல்பட்டு வருகின்றனர்.

வழக்கைப் பலவீனப்படுத்திக் குற்றவாளிகளைத் தப்பிக்கச் செய்ய அனைத்து முயற்சிகளையும் காவல்துறை விசாரணை அதிகாரிகள் மேற்கொள்கின்றனர். சட்டத்தைப் புரிந்துகொண்டு வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் சிலர், காவல்துறையினரின் அடாவடித்தமான சட்டவிரோதச் செயல்களுக்காக அவர்களைக் கடிந்துகொள்கிறார்களே தவிர தண்டிப்பதில்லை. அதனால், வன்கொடுமை வழக்குகளில் காவல்துறை அதிகாரிகள் அட்டகாசம் செய்து வருகிறார்கள் என்றே கூற வேண்டும். முறையான வழக்கு விசாரணையை உறுதி செய்வதற்கும் குற்றவாளிகளுக்குத் தண்டனையைப் பெற்றுத் தருவதற்கும், பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் ஏழ்மை நிலையிலும் பெரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே, மிகத்தீவிரமான வன்கொடுமை வழக்குகளில், புலன்விசாரணை அதிகாரியை மாற்ற வேண்டும் என்றும், சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்றும், நீதிமன்றத்தை மாற்ற வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட தலித் மக்கள் உயர்நீதி மன்றங்களிடம் வழக்குப்பதிவு செய்து போராட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அதனால், வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாக மிக நீண்ட காலதாமதம் ஆகிறது. இவ்வாறாக, சட்டத்தையே சாகடித் துக் கொண்டிருக்கிறார்கள்.

பல்வேறு நவீன வடிவங்களில் தீண்டாமை வெளிப்படுகிறது. வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின்படி கொடுக்கப்படும் இழப்பீடுகளோ போதுமானவைகளாக இருப்பதில்லை. இதுபோன்ற சட்டத்தில் இருக்கும் பல சிக்கல்களுக்குத் தீர்வுகாணவும் சட்டத்தை இன்னும் வலிமையாக்கவும் வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவும் வேண்டும் எனக் கடந்த பத்தாண்டுகளாகப் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் முயற்சித்து வந்தன. அதன் விளைவாக, மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு, கடந்த நாடளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியான முந்தைய நாளில் நள்ளிரவில் வன்கொடுமைத் தடுப்புச்சட்டத் திருத்தத்தை அவசரச் சட்டமாக அறிவித்தது. அச்சட்டம் வரும் சூலை 23 அன்று மதிப்பற்றதாகப் போகிறது. அதற்குள் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு நாடாளுமன்றத்தில் வன்கொடுமைத் தடுப்புச்சட்டத் திருத்த அவசரச் சட்டத்தைச் சட்டமாக்கவேண்டும். ஆனால் அதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.

தீண்டாமைக் குற்றங்களுக்கு எதிராகப் போராடும் சக்திகள் ஒன்றுதிரளவேண்டிய நேரமிது. பாபாசாகேப் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்ற மாமனிதர்கள் போற்றி வளர்த்த சமூக, சமத்துவக் கோட்பாடுகளுக்கு சாதியச் சக்திகள் பெரும் சவால்விடுத்துள்ளன. சாதிய வாதத்திற்குத் தமிழக மண்ணில் இடமில்லை என்பதை சாதியவாதிகள் புரிந்து கொள்ளவேண்டும்.

Pin It