வெந்தத தின்னுட்டுOld man

விதி வந்தா சாவோம்னு

நொந்தவங்க கும்பல்ல

நானும் ஒருத்தன்

 

சொந்தம்னு சொல்லிக்கிட்டு

பொங்கலுக்கு வரும்

மவவயுத்து பேத்திக்கு

வெத்தலப் பொட்டில

சில்லற பொறுக்கும்

வெத்துத் தாத்தன்

 

மவ ஊருக்கு வரும்போதும்

தை மூணும்

ஆடு வெட்டி

ஆர்ப்பரித்து

அன்றே கடன் வாங்கும் பித்தன்

 

பஞ்சாயத்து ஏதும் வந்தா

பெருசக் கூப்பிடுனு ஊர் சொல்ல

பேர் வாங்கி என்ன செய்ய?

 

காச்சல்னு வந்தா

கம்பௌண்டர்ட்ட போக

காசு பார்த்ததில்ல...

 

பக்கத்து வீட்டு

பெரியாயி போட்டு தரும்

கசாயத்துல காச்சல் தீர - அப்பப்போ

எண்ணையோ பருப்போ நூறு வாங்க

கடைக்குப் போக அவ சொல்ல

முடியாதுன்னு சொல்லமுடியா ஓடுபையன்!

 

நெல் மூட்டை

வீட்டை அடைத்து

வாழ்ந்ததெல்லாம்

அப்பன் காலம்;

வெயில் எல்லாம் உள் நுகர்ந்து

வியக்குறு பவ்டெரில் இன்று

வயக்காசு முடிந்துபோகும்!

 

இருபத்தஞ்சு காசு

திருப்பிக் கேட்க

முறைச்சு பார்க்கும்

கண்டக்டர் முதல்

ராசா மிராசுதார் மருத்துவமனை

கௌண்டரில் சிடு சிடுக்கும்

மாத்திரை தருபவன் வரை

யாரையும் கோவிக்க முடியா

என் மனம்...

 

'வறுமைக்கு பிறந்தக் கூட்டம்

வையத்தை ஆளட்டும்னு'

பாட்டு கேக்கையிலே

சற்றே நகைத்து இளைப்பாறும்...

கையோடு

ரேசன் சர்க்கரையும்

வாங்கிக்கொண்டு வீடு போகும்

 

வெந்தத தின்னுட்டு

விதி வந்தா சாவோம்னு

நொந்தவங்க கும்பல்ல

நானும் ஒருத்தன்!

- செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி

Pin It